Posted on Leave a comment

அமைதி வழியில் அரசியல் புரிந்த மாமேதை பி.எஸ்.சிவசாமி அய்யர் (1864-1946) | பா.சந்திரசேகரன்

முத்திரை பதித்த பல அரசியல்
தலைவர்களை இந்திய சுதந்திரப் போராட்டம் உருவாக்கியது. அவர்களுக்கு உந்துகோலாக இருந்தது
முழு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தேசப்பற்றுதான். இந்தியர் என்கிற ஒற்றுமைதான்.
அன்றி, எந்த ஒரு இனமோ, மதமோ, சாதியோ அல்ல. சுதந்திரப் போராட்ட அரசியல் தலைவர்கள் சிலர்
ஆங்கிலேய அரசை எதிர்த்து நேரடியாகக் கிளர்ச்சி செய்து பல்வேறு மாற்று முயற்சிகளைச்
செய்து வந்தார்கள். அதே சமயம் சில அரசியல் தலைவர்கள் ஆங்கிலேய அரசின் ஆதிக்க ஆட்சிமுறையை மாற்ற அரசின் பணிகளை ஏற்று உள்ளிருந்து
பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார்கள்.

இந்த இரண்டாவது ரக அரசியல்
தலைவர்கள் அப்பொழுது மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் அரசுக்கு எதிராகக்
குரல் கொடுப்பவர்கள், ஆனால் நேரடியாகப் போராட்டத்தின் மூலம் செயல்பட விரும்பாதவர்கள்.
இவர்கள் கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசியல் சாசன முறையில் சுதந்திரம் பெறவேண்டும்
என்று எண்ணினார்கள். இவர்கள் ஆங்கிலேய அரசின் கொடுங்கோல் ஆட்சியை எழுத்துப்பூர்வமாக
எதிர்க்க வேண்டும்; எவ்விதத்திலும் வன்முறையோ உயிர்ச் சேதமோ ஏற்படாமல் போராட வேண்டும்
என்று வலியுறுத்தினார்கள். ஆங்கிலேய அரசுக்கு எதிராக நேரடியாகக் கிளர்ச்சி மற்றும்
போராட்டத்தின் மூலம் முத்திரை பதித்த அரசியல் தலைவர்களுக்கு சற்றும் குறையாத வகையில்
பல மிதவாத அரசியல் தலைவர்கள் அரசியல் சாசனம் மூலமாக ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்துள்ளதை
வரலாற்று ஆய்வில் நாம் காணமுடிகிறது. அப்படிப்பட்ட சில தலைவர்கள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில்
கொடிகட்டிப் பறந்துள்ளார்கள்.

அந்த வகையில் பழமானேரி
சுந்தரம் சிவசாமி அய்யர் முற்போக்கான கொள்கைகளை ஆதரித்த ஒரு முக்கியத் தலைவர். பெரும்பாலும்
அவர் பி.எஸ்.சிவசாமி அய்யர் என்று அழைக்கப்பட்டார். மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர்
காலத்துக்கு முன்னர் மிதவாத காங்கிரஸ் வாதியாகவும், நல்ல தேசிய வாதியாகவும் திகழ்ந்தவர்
சிவசாமி அய்யர். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு சிவசாமி அய்யர் ஆற்றிய பங்களிப்பு
ஆக்கபூர்வமானது. அவர் பொதுவாழ்வில் ஆற்றிய மகத்தான பணிகள் எண்ணற்றவை. அன்றைய இந்தியாவின்
புகழ்பெற்ற சட்ட அறிஞராக அவர் விளங்கினார். கல்வித் துறையிலும் இந்தியப் பாதுகாப்புத்
துறையிலும் பல்வேறு தளத்தில் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். ஒரு ஸ்டேட்ஸ்மென் என்று
அனைவராலும் பாராட்டப்பட்டவர் அவர்.

சிவசாமி அய்யர் மகாத்மா
காந்தி பிறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இன்றைய தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமானேரி கிராமத்தில் பிப்ரவரி 7ம் தேதி 1864ல் மூத்த
மகனாகப் பிறந்தார். அவருக்கு மூன்று இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். சிவசாமி
அய்யர் தனது ஆரம்பக் கல்வியை எஸ்.பி.ஜி கோட்டை பள்ளியிலும் உயர்நிலை பள்ளிக் கல்வியை
மானம்புசாவடி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று 1877ல் மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், மெட்ராஸ்
மாநிலக் கல்லூரியிலும் இளங்கலைக் கல்வியை 1882ல் முடித்தார்.

பிறகு அவர் மெட்ராஸ்
மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்ட அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று
1885ல் வழக்குரைஞராக 21 வயதிலே தனது வக்கீல் பணியைத் துவங்கினார். முதலில் அவர் வழக்கறிஞர்
ஆர்.பாலாஜி ராவ் என்பவரிடம் தொழில் பழகுநராகச் சேர்ந்து பயிற்சி பெற்றார். 1893ல் தனது
தந்தை இறந்த பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதே வருடம் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில்
உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து 1899ம் ஆண்டு வரை பணியாற்றினார். பிரிட்டிஷ்
இந்தியாவின்
வெள்ளி நாக்கு (சில்வர் டங்) என்று போற்றப்படும் வி.எஸ்.ஸ்ரீனிவாச
சாஸ்திரி, சிவசாமி அய்யரிடம் சட்டம் பயின்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்குரைஞராக சிவசாமி
அய்யர் மெட்ராஸ் மாகாண உயர் நீதிமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் 1883 முதல்
1907 வரை மெட்ராஸ் சட்டச் செய்தி இதழின் (Madras Legal Journal) இணை ஆசிரியராக இருந்தார்.
அவர் 43து வயதில் 1907 முதல் 1912 வரை மெட்ராஸ் மாகாண தலைமை வழக்கறிஞர் அதாவது அட்வகேட்
ஜெனரலாகப் பணியாற்றினார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற
வழக்கறிஞர்களுக்கான சங்கத்தை சிவசாமி அய்யர் 1889ம் ஆண்டு உருவாக்கினார். பல முக்கிய
புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்றோர் சட்ட நுணுக்கங்களில்
சிவசாமி அய்யரிடம் ஆலோசனை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்துறையில் சிறந்து
விளங்கிய அவர் 1904 முதல் 1907 வரை மெட்ராஸ் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.சி)
தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு கவர்னர் நிர்வாக கவுன்சில் உறுப்பினராக 1912 முதல்
1917 வரை பதவி வகித்தார். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இந்தியத் தொண்டர் இயக்கத்தை
உருவாக்கி ஆதரவளித்தார் சிவசாமி அய்யர். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் கொள்கையான,
படிப்படியாக அரசியல் சாசனச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் திட்டத்தை ஆதரித்த இந்திய
மிதவாதிகள் கட்சியின் தலைவராக 1919ல் மற்றும் 1926ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.நா
சபைக்கு முன்பு இருந்த
லீக் ஆஃப் நேஷன்ஸ்
1922ம் ஆண்டு நடத்திய மூன்றாவது கூட்டத்தொடரில் இந்தியாவின் சார்பாக சிவசாமி அய்யர்
கலந்துகொண்டு, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின்
செனட் உறுப்பினராக 1898ல் சிவசாமி அய்யர் முதல் இந்தியராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு
பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகவும் (Fellow) இருந்தார். அவர் 1916 முதல் 1918 வரை மெட்ராஸ்
பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பிறகு 1918 முதல் 1919 வரை வாரணாசியில் உள்ள பனாரஸ்
இந்துப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றினார். வி.கிருஷ்ணசாமி அய்யர்
சென்னையில் சமஸ்கிருதக் கல்லூரியைத் துவங்கினார். அந்தக் கல்லூரியின் தலைவராக முப்பது
ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் சிவசாமி அய்யர். பள்ளியிலும் மற்றும் கல்லூரியிலும்
மாணவர்களுக்குத் தாய் மொழியில்தான் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் ஆழமாகத்
தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சாற்றல் மூலம் எடுத்துரைத்தார் சிவசாமி அய்யர். சட்டம்,
சமூகம், அரசியல், பொருளாதாரம், இராணுவம், பன்னாட்டுச் சட்டம் போன்றவை பற்றிப் பல ஆய்வுக்
கட்டுரைகளை எழுதியுள்ளார் அவர்.

அவருடைய சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளியில்
இருந்த சிறிய பள்ளி ஒன்று கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போது, 1906ம் ஆண்டு அந்தப்
பள்ளியை முழுவதுமாகத் தன் சொந்த நிதியின் மூலம் உயர்த்தினார். அந்தப் பள்ளி இன்றும்
சர்.பி.எஸ்.சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அவர்
இருக்கும் வரை அவருடைய பெயரை அந்தப் பள்ளிக்கு வைக்க அவர் அனுமதிக்கவில்லை. அன்றைக்கு
இந்தப் பள்ளிதான் சுத்தியிருக்கும்
பதினெட்டு
பட்டிக்கும் ஒரே பள்ளியாகத் திகழ்ந்தது.

பெண்கள் படிக்க வேண்டும்
என்பதைத் தீவிரமாக வலியுறுத்தியவர் சிவசாமி அய்யர். இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள
லேடி சிவசாமி அய்யர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அப்பொழுது தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளி
என்று 1930ல் இயங்கிவந்தது. இந்தப் பள்ளியின் வளர்ச்சி குன்றியபோது, சிவசாமி அய்யர்
தலைமையேற்றுப் பல ஆயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்து, அந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக
உயர்த்தினார். அவர் உயிரோடு இருக்கும் வரை அவரது மனைவியின் பெயரை அந்தப் பள்ளிக்கு
வைக்க மறுத்துவிட்டார்.

இந்த இரண்டு பள்ளிகளிலும்
அவர் நூலகத்துக்கு என்று தனிக் கவனம் செலுத்தினார். மிகச்சிறந்த பழமையான மற்றும் புதிய
நூல்களையெல்லாம் திரட்டி மாணவ மாணவிகள் சிறந்த கல்வியைப் பெறவேண்டும் என்பதில் ஆர்வமுடன்
செயல்பட்டார். இந்த இரண்டு பள்ளிகளும் இன்று வரை சிறப்பான கல்விக் கூடங்களாக விளங்குகின்றன.
1939ம் ஆண்டு அவரது மனைவி இறந்த பிறகு, தான் வசித்த மைலாப்பூர் வீட்டை விற்று, அந்தப்
பணத்தைப் பள்ளிகளுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு, வாடகை வீட்டில் குடியேறினார் சிவசாமி
அய்யர். சென்னை விவேகானந்தா கல்லூரிக்கும் மற்றும் சம்ஸ்கிருத கல்லூரிக்கும் அவர் அளித்த
நன்கொடைகள் பற்றி அவர் இறந்த பிறகுதான் பலருக்கும் தெரியவந்தது.

சிவசாமி அய்யர் 1931ல்
இந்திய ராணுவ கல்லூரிகளுக்கான குழுவில் உறுப்பினராக இருந்தார். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ்
கவுன்சில் உறுப்பினராக 6 ஆண்டுகள் (1921-1923 மற்றும் 1924-1926) இருந்தபோது 1921ல்
சிவசாமி அய்யர் பதினைந்து அம்சங்களைக் கொண்ட அத்தீர்மானத்தில், இந்தியக் கடல் வணிகத்தை
மேம்படுத்தி, கப்பல் பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் பணியிடங்களில் 25 சதவீதம் இந்தியருக்கு
வாய்ப்பளிக்க வேண்டும் குரல் எழுப்பினார். இன்றைய இந்தியக் கடல்சார் படிப்புகளுக்கு
அவர் அன்று கொண்டு வந்த தீர்மானமே மூல வித்தாக அமைந்தது. மேலும் 1912ல் கோகலே அவர்கள்
உறுப்பினராக இருந்த அன்றைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் இந்தியர்களுக்கு அனைத்துத்
துறைகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்திய ராணுவத்தைப் பற்றி
மிகுந்த அக்கறையோடு பல கேள்விகளை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் பதிய வைத்தவர்
சிவசாமி அய்யர். மேலும் இந்தியாவில் புதிய கல்வி நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும்
என வலியுறுத்தினார்.
தமிழ் – ஆங்கிலப் பேரகராதி
(Tamil Lexicon) தொகுக்கும் பணியை முன்னெடுத்த குழுவின் தலைவராக விளங்கியவர் சிவசாமி
அய்யர். அந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள்: உ.வே. சாமிநாத அய்யர், எஸ்.அனவரதவிநாயகம்
பிள்ளை, எஸ்.குப்புசாமி அய்யர், ரி.ராமகிருஷ்ண பிள்ளை மற்றும் மார்க் ஹன்டர்.

சிவசாமி அய்யர் காந்திமேல்
மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் அவர் அறிவித்த போராட்டங்களில் நடந்த
வன்முறையைக் கண்டு கடுமையாக விமர்சித்தார். மேலும், நேரு சோவியத் நாடுகள் பின்பற்றிய
கொள்கைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதையும் எதிர்த்தார்.

சிவசாமி அய்யர் அரசியலில்
மிதவாதியாக இருந்ததோடு, மக்கள் சமூக நலனிலும் அக்கறை கொண்டிருந்தார். தனிநபர் சுதந்திரத்தில்
சாதி வேற்றுமை கூடாதென்று கடுமையாக 1933ல் வாதாடியிருக்கிறார். ஆட்சி முறையைக் கட்டாயமாகப்
பரவலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசியல் சாசனத்தில் அடித்தட்டு மக்களுக்குத்
தகுந்த பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்றால் எந்த ஆட்சியானாலும் அது அநீதியும் கொடுங்கோன்மையும்
கொண்ட ஆட்சியாகத்தான் இருக்கும் என்று அழுத்தமாக 1913ல் கூறினார் சிவசாமி அய்யர்.

சிவசாமி அய்யர் சிறந்த
நூல்களையும் எழுதியுள்ளார்.
எவல்யூஷன் ஆஃப் இந்து
மாரல் ஐடியல்ஸ்
(1935) என்ற தலைப்பில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்
நிகழ்த்திய கமலா நினைவுச் சொற்பொழிவு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்
இந்திய
அரசியல் சாசன பிரச்சினைகள்
(1928) என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய வி.கிருஷ்ணசாமி
நினைவுச் சொற்பொழிவுகள் போன்றவை பிரபலமானவை.
நாடு சுதந்திரம் அடைய
பத்து மாதங்களுக்கு முன்பு அவர் தனது 82ம் வயதில் 1946 நவம்பர் 5ம் தேதி காலமானார்.
அவருடைய தள்ளாத வயதிலும், இந்தியா மத அடிப்படையில் பிளவுபட இருப்பதை அறிந்து வேதனையுற்று
இந்தியாவைத் துண்டாடுவதை எதிர்த்துக் கடைசி மூச்சுவரை குரல் கொடுத்தார் சிவசாமி அய்யர்.


Leave a Reply