Posted on Leave a comment

விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்

1918ல் வெளியான கீசக
வதம்
தான் தமிழின் முதல் சலனத் திரைப்படம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முன்னோடியான அந்த முதல் முயற்சியைச் செய்தவர் ஆர். நடராஜ
முதலியார். அதனைத் தொடர்ந்து
திரௌபதி வஸ்திராபரணம்,மஹிராவணன்,
மார்க்கண்டேயன்
போன்ற பல பேசாப் பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்றாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
தடையாலும் கட்டுப்பாட்டாலும் அவை மட்டுப்படுத்தப்பட்டன. 1931ல் வெளியான
காளிதாஸ்
தமிழின் முதல் பேசும் படமாகக் கருதப்படுகிறது. அதற்கு முன்பே அதே ஆண்டில்,
குறத்திப்
பாட்டும், டான்ஸூம்
என்ற சிறு படம் (குறும்படம்) வெளியாகியிருக்கிறது.
மொத்தம் நான்கே ரீல்கள் கொண்ட அப்படமே தமிழின் முதல் பேசும்படம் (அ) குறும்படம் என்று
கருதத்தக்கது. அதனைத் தொடர்ந்து புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு
ராமாயணம்,காலவா,சத்தியவான்
சாவித்திரி
, கிருஷ்ண லீலா
போன்ற படங்கள் வெளியாகின. கூடவே அக்காலத்தின் புகழ்பெற்ற நாடகங்களான
வள்ளி
திருமணம்
,ஹரிச்சந்திரா,
பிரகலாதா, நந்தனார்,
கோவலன் போன்றவையும் திரைப்படங்களாகி
வெற்றிபெற்றன.

இவ்வாறாக, நாடு விடுதலையும்
ஆகஸ்ட் 1947க்கு முன்பாகவே சுமார் 400 படங்கள் வரை வெளியாகியிருக்கின்றன. அவற்றில்
அரிய செய்திகளைக் கொண்ட சில படங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சீதா கல்யாணம் (1934)

தமிழின் ஆரம்ப காலத்தில்
புராண, வரலாற்றுக் கதைகளை மையமாக வைத்தே திரைப்படங்கள் வெளியாகின. அந்த வகையில்
1933ல் தொடங்கப்பட்டு 1934ல் வெளியான படம் சீதா கல்யாணம். பிரபல ஹிந்திப் பட இயக்குநர்
வி.சாந்தாராமின் முயற்சியில் உருவான இப்படத்தின் கதையை அக்காலத்தின் பிரபல எழுத்தாளரான
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் எழுதியிருந்தார். பாபுராவ் பண்டேர்கர் இயக்கியிருந்தார்.
சீதையின் திருமணத்தைப் பற்றிய இந்தக் கதையில் கதாநாயகன் ராமனாக நடித்தது பிற்காலத்தில்
இசை மற்றும் ஓவிய மேதையாக அறியப்பட்ட எஸ். ராஜம். கதாநாயகி சீதையாக நடித்தது எஸ்.ஜெயக்ஷ்மி.
இவர் ராமனாக நடித்த எஸ்.ராஜத்தின் சகோதரி. மற்றொரு சகோதரி சரஸ்வதி ஊர்மிளையாக நடிக்க,
சகோதரரான பாலசந்தர் ராவண தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவராக நடித்திருந்தார். இவரே பிற்காலத்தில்
நடிகரும் சிறந்த இயக்குநருமாக உருவாகி, இசை மேதையாகவும் திகழ்ந்த வீணை எஸ்.பாலசந்தர்.
இவர்களது தந்தையான சுந்தரம் ஐயர், ஜனக மகாராஜாவாக நடித்திருந்தார். இவர், அக்காலத்தின்
பிரபல வழக்குரைஞர்களுள் ஒருவர்.

அதுவரை கர்நாடக இசை வல்லுநராகத்
திகழ்ந்து பாடல்கள் எழுதி வந்த பாபநாசன் சிவன், இப்படத்தின் மூலம் பாடலாசிரியராகத்
திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். படத்திற்கு ஏ.என். கல்யாணசுந்தரத்துடன் இணைந்து இசையமைத்திருந்தவரும்
சிவன்தான். இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றாலும், அண்ணனும் தங்கையுமே நாயக,
நாயகியாக நடித்ததால் சர்ச்சையையும் தோற்றுவித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து
பின்னர், எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைந்து சிவகவியிலும், ராதா கல்யாணம், ருக்மணி
கல்யாணம் போன்ற படங்களிலும் நடித்த எஸ்.ராஜம், பின்னர் நடிப்பிலிருந்து விலகி இசை மற்றும்
ஓவியத்தில் தனது கவனத்தைச் செலுத்தி ஓவிய மேதையானார். எஸ்.ஜெயக்ஷ்மியும் சில படங்களில்
கதாநாயகியாக நடித்துப் பின் இல்லற வாழ்வில் ஈடுபட்டார். எஸ்.பாலசந்தரும் சில படங்களில்
நடித்தார்.
பொம்மை, அந்த நாள் போன்ற சில படங்களை இயக்கினார்.
சில படங்களைத் தயாரித்தார். பின் முழுக்க இசைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பிரபாத் டாக்கிஸின் முதல்
படமான சீதா கல்யாணம், 1934ல் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் பாபுராவ்
பண்டேர்கருக்கு உதவியாளராகப் பணியாற்றிய முருகதாசா (முத்துசாமி ஐயர்), இதே படத்தில்
ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.ராம்நாத்துடனும், எடிட்டர் ஏ.கே சேகருடனும் இணைந்து
பிற்காலத்தில்
வேல் பிக்சர்ஸ்
என்ற நிறுவனத்தை உருவாக்கினார். பல வெற்றிப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்தது.

பாமா விஜயம் (1934)

பிரபல கர்நாடக சங்கீத
வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் அறிமுகமான படம் இது. மகாராஜபுரம் விஸ்வநாத
ஐயரின் சகோதரர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கதாநாயகன் கிருஷ்ணனாக நடித்திருந்தார். ஜி.என்.பி.க்கு.
நாரதர் வேடம் பி.எஸ்.ரத்னா பாய் மற்றும் பி.எஸ். சரஸ்வதி பாய், பாமா, ருக்மணி ஆக நடித்திருந்தனர்.
துவாபரயுகத்துக் கிருஷ்ணன், கலியுகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய தியாகராஜ
சுவாமிகளின் கீர்த்தனையைப் பாடுவதாக ஒரு காட்சி. இது ஒரு முரண் என்றால் படத்தின் இறுதிக்
காட்சியில் கிருஷ்ணன், பாமா, ருக்மணி, நாரதர் எல்லாரும்
ஜன
கண மன
பாடலைப் பாடுகிறார்கள். அந்த வகையில் தேசியகீதம்
முதன் முதல் ஒலித்த தமிழ்ப்படமும் பாமா விஜயம்தான்.

எம்.கே. தியாகராஜ பாகவதர்
என்று அழைக்கப்படும் (நடிகர் தியாகராஜ பாகவதர் அல்ல) எம்.கே. தியாகராஜ தேசிகர் இப்படத்திற்கு
இசையமைத்திருந்தார். (ஒரே பெயரில் இருவர், ஒரே துறையில், ஒரே காலத்தில் அப்போது இருந்திருக்கிறார்கள்!)
மாயவரம் கந்தசாமி தியாகராஜ பாகவதர் என்பது இவரது முழுப்பெயர்.
ரஞ்சித
மோகன கவி
’, பாகவதர்
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், இசை ஆசிரியர்
என்று பல்வேறு திறமைகளுடன் இயங்கிய இவர்,
தியாகராஜ தீக்ஷிதர்
என்றும்,
தியாகராஜ தேசிகர்
என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். தருமபுருர ஆதினத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை
கந்தசாமி தேசிகர் அக்காலத்தின் சிறந்த தமிழ் வித்வான்களுள் ஒருவர்.
சித்தாந்த
ரத்நாகரம்
என்று போற்றப்பட்டவர்.

தியாகராஜ தேசிகர் அல்லிவிஜயம்,
பக்த துளசிததாஸ் (1937), மாணிக்கவாசகர்
போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
சாம்பான்வரலாற்றை எழுதியிருக்கிறார். தக்ஷிணாமூர்த்தி மீதும் ஒரு செய்யுள்
நூலை இயற்றியுள்ளார்.

பவளக்கொடி (1935)

எம்.கே.தியாகராஜ பாகவதர்
கதாநாயகனாக முதன் முதலில் அறிமுகமான படம் இது. கதாநாயகியாக நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமிக்கும்
அதுவே முதல் படம். இருவரும் ஏற்கெனவே
வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா உட்பட பல நாடகங்களில்
இணைந்து நடித்த இணையர். இதனால் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில்
தியாகராஜ பாகவதர் அர்ஜூனன் ஆக நடித்திருந்தார். அக்காலத்தின் புகழ்பெற்ற நாடக நடிகரான
எஸ்.எஸ். மணி பாகவதர், கிருஷ்ணனாக நடித்திருந்தார். எஸ்.டி. சுப்புலட்சுமி பவளக்கொடியாக
நடித்திருந்தார். இப்படத்தில் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எழுதியவர் பாபநாசம்
சிவன். அற்புதமான வர்ண மெட்டுக்களையும் அவர் அமைத்திருந்தார்.

நாட்டு வழக்கில் இருக்கும்
மகாபாரதத்தின் கிளைக்கதையான அல்லி கதையை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதை இது.
சகுந்தலா
என்ற அக்காலத்து நாடகத்தால் புகழ்பெற்ற
சாந்தா தேவியும்
இப்படத்தில் நடித்திருந்தார். அவரது நாட்டியமும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. திரைப்பட
விளம்பரத்தில் அது குறித்த செய்தியும் இடம் பெற்றிருக்கிறது. தியாகராஜ பாகவதரைத் தமிழ்நாடெங்கும்
கொண்டு சேர்த்த முதல் படம் இதுதான். இப்படம் ஒன்பது மாதங்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
(கே.சுப்பிரமணியம் –
எஸ்.டி. சுப்புலட்சுமி)
மீனாக்ஷி சினிடோன் தயாரித்திருந்த
இப்படத்தின் இயக்குநர் அக்கால ஜாம்பவான்களுள் ஒருவரான கே.சுப்பிரமணியம். மீனாக்ஷி என்பது
அவரது முதல் மனைவியின் பெயர்; பிற்காலத்தில் இப்படத்தில் நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமியை
இவர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இருவருமாக இணைந்து
யுனைடெட்
ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன்
என்ற நிறுவனத்தை உருவாக்கினர். அதன் மூலம்
நவீன சதாரம், பாலயோகினி,
பக்த குசேலா, மிஸ்டர்
அம்மாஞ்சி
, கௌசல்யா கல்யாணம்,
சேவாசதனம், தியாகபூமி,
இன்பசாகரன் போன்ற பல படங்களைத்
தயாரித்து இயக்கினார்.

டி.ஆர்.ராஜகுமாரியை திரையுலகில்
அறிமுகம் செய்தது இவர்தான்.
கச்சதேவயானி
படத்தின் மூலம் அறிமுகமான ராஜகுமாரி, அக்காலத்து ரசிகர்களின் கனவுக் கன்னி ஆனார். தென்னிந்திய
திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பை உருவாக்கியவரும் கே.சுப்பிரமணியம்தான்.
தமிழ்த்
திரையுலகின் தந்தை
யாக இவர் மதிக்கப்படுகிறார்.
ரத்னாவளி (1935)

வடமொழியில் ஹர்ஷரால்
எழுதப்பட்ட நாடகம் ரத்னாவளி. இதனைத் தமிழில் நாடகமாக எழுதியிருந்தார் பம்மல் சம்பந்த
முதலியார். அது நாடகமாக நடத்தப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றதால் அதனைப் படமாக்க விரும்பினார்
ஏவி.மெய்யப்பச் செட்டியார். ஏற்கெனவே அவர் கிராமபோன் இசைத்தட்டுக்களுக்காக
சரஸ்வதி
ஸ்டோர்ஸ்
என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார்.
அதனை அடுத்து அவர்
சரஸ்வதி டாக்கீஸ்
என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் எடுக்கப்பட்ட படம்
தான்
ரத்னாவளி.

நாடக உலகில் வெற்றிகரமாகத்
திகழ்ந்த பி.எஸ். ரத்னா பாய், பி.எஸ். சரஸ்வதி பாய் சகோதரிகள் இந்தப் படத்தில் கதாநாயகிகளாக
நடித்தனர். தென்னிந்திய நாடக சங்கீத ராணி, ஆர்மோனியச் சக்கரவர்த்தினி, கோகில கான வாணி
என்று போற்றப்பட்டவர் ரத்னா பாய். சங்கீத திலகம் என்று போற்றப்பட்டிருக்கிறார் சரஸ்வதி
பாய். இவர்கள் இருவரும் சகோதரிகள். நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.
நிறைய கிராமபோன் தட்டுக்கள் இவர்கள் பாடி அக்காலத்தில் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் சரஸ்வதி
பாய் வாஸவதத்தை ஆகவும், ரத்னா பாய் ரத்னாவளி ஆகவும் நடித்திருந்தனர். நாயகனாக நடித்தது
எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி. இவர் அக்காலத்தின் வெற்றிப்பட நாயகர்களுள் ஒருவர். இப்படத்தில்
கதாநாயகியின் தோழி காஞ்சனமாலையாக அறிமுகமானவர்தான் டி.ஏ.மதுரம். முக்கிய வேடங்களில்
சி.பஞ்சு, ஏ.டி.கிருஷ்ண சர்மா, எம்.ஆர். சுப்பிரமணிய முதலியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

தென்னாட்டுச் சார்லி சாப்ளின்
என்று போற்றப்பட்ட சி.எஸ். சாமண்ணா இந்தப் படத்தில் நகைச்சுவை வேடமேற்றிருந்தார். உடன்
சுப்ரமணிய முதலியார், அங்கமுத்து, பபூன் ஷண்முகம், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் நகைச்சுவை
வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார். பிரஃபுல்லா
கோஸ் இயக்கியிருந்தார். 

ஒரே அரசனை ஒன்று விட்ட
சகோதரிகளான இருவர் மணக்கும் கதை இது. கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய
வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் அக்காலத்தில் நகைச்சுவைக் காட்சிகளுக்காக பரவலான ரசிக
வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பி.எஸ்.ரத்னாபாய், பி.எஸ்.சரஸ்வதிபாய் பிற்காலத்தில் என்ன
ஆனார்கள் என்று குறிப்புகள் ஏதும் தற்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தின் பிரதியும்
கைவசம் இருப்பதாகத் தெரியவில்லை.

மிஸ். கமலா (1936)
(T.P. ராஜலட்சுமி)
தென்னிந்தியாவின் முதல்
பேசும் படமான
காளிதாஸ்
படத்தின் நாயகி டி.பி. ராஜலட்சுமி. இவர் அடுத்துக் கதாநாயகியாக நடித்த படம் மிஸ்.கமலா.
படத்திற்குக் கதை, வசனம் எழுதி இயக்கியவரும் இவரே! தயாரிப்பாளரும் இவர்தான். முதல்
பெண் திரைப்படத் தயாரிப்பாளர், முதல் பெண் திரைப்படக் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர்
என்று பல்வேறு பெருமைகளை அவருக்கு பெற்றுத் தந்த படம் இது.

1936ல் தனது ராஜம்
டாக்கீஸ்
மூலம் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்
ராஜலட்சுமி. தனது முதல் நாவலான
கமலவல்லி அல்லது டாக்டர்
சந்திரசேகரன்
என்ற படைப்பையே திரைப்படமாக எடுத்திருந்தார்.
இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் என்ற சிறப்பும் இவருக்குக் கிடைத்தது. (இந்தியாவின்
முதல் பெண் ஃபாத்திமா பேகம்.)

ஒரு பெண் எழுத்தாளரின்
நாவல் முதன்முதலில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்றால் அது
மிஸ்.கமலாதான்.
அதுபோல திரைப்படமாகத் தயாரான இரண்டாவது நாவல் இதுதான். (முதல் நாவல்/படம் வடுவூர் துரைசாமி
ஐயங்காரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட
மேனகா’.) இப்படத்தில் ராஜலட்சுமியுடன் டி.வி.சுந்தரம்,
டி.பி.ராஜகோபால், வி.எஸ்.மணி, ஸ்டண்ட் ராஜூ, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்குப்
பாடல்களை எழுதி, இசையும், படத்தொகுப்பையும் கூட ராஜலட்சுமியே செய்திருந்தார்.

இது ஒரு வித்தியாசமான
காதல் கதை. புரட்சி அம்சம் கொண்ட கதை என்றும் சொல்லலாம். கதாநாயகி கமலவல்லி (டி.பி.ராஜலட்சுமி)
கண்ணப்பன் என்பவனைக் காதலிக்கிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் டாக்டர் சந்திரசேகரனுடன்
திருமணம் நடக்கிறது. சந்திரசேகரனிடம் தன் காதல் பற்றிச் சொல்கிறாள் கமலவல்லி. பல்வேறு
பிரச்சினைகளுக்கிடையே அவன் அந்தக் காதலனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுக்கே அவளை மீண்டும்
ஊரறியத் திருமணம் செய்து வைக்கிறான் – இதுதான் நாவலின் கதை. விருப்பமின்றி வேறு ஒருவருடன்
திருமணம் நிகழ்ந்தாலும், அவருடன் சேர்ந்து வாழாது பண்பாடு, கலாசாரம் போன்ற மரபுகளை
மீறி ஒரு பெண் தன் காதலனையே மீண்டும் திருமணம் செய்து கொள்வதைக் காட்டும் படம். அது
அக்காலத்தில் மட்டுமல்லாது இக்காலத்திலும் புரட்சிதான். தமிழில் இம்மாதிரியான முற்போக்குச்
சிந்தனைகளுடன் வெளியான முதல் படம் அதுதான்.

படத்தின் புரட்சிகரமான
முடிவைக் கண்டு பலர் கொதித்தனர். திரையரங்குகள் முன் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆனாலும்
படம் வெற்றி பெற்றது. இப்படத்தின் சிறப்பாக, பாடல் காட்சி ஒன்றில் டி. என். ராஜரத்தினம்
பிள்ளையின் நாதஸ்வரம் இடம் பெற்றதைச் சொல்லலாம். (இந்தக் கதை பிற்காலத்தில் பிரபல நகைச்சுவை
ஒருவரின் வாழ்க்கையிலும் உண்மையாக நடந்தது. அதை மையமாக வைத்து பிற்காலத்தில் திரைப்படம்
ஒன்றும் உருவானது.)

சினிமா
ராணி
என்று போற்றப்பட்ட ராஜலட்சுமி, உடன் நடித்த நடிகர்
டி.வி.சுந்தரத்தைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தனக்குப் பிறந்த மகளுக்கு
தனது படம் மற்றும் கதாநாயகியின் நினைவாக
கமலா
என்று பெயர் சூட்டினார்.
பக்த குமணன் அல்லது ராஜயோகி, மதுரை வீரன் (1938), வீர அபிமன்யு, சாவித்ரி, திரௌபதி வஸ்திரா பரிணயம், குலேபகாவலி, ஹரிச்சந்திரா, நந்தகுமார், ஜீவஜோதி, இதயகீதம் போன்ற படங்களில் நடித்த
ராஜலட்சுமி, 1964ல் காலமானார். படத்தின் பிரதி தற்போது கிடைக்கவில்லை

சத்யசீலன் (1936)

1936ம் ஆண்டில் தமிழில்
வெளியான முக்கியமான படங்களுள் இதுவும் ஒன்று. கதாநாயகனாக நடித்தவர் எம்.கே. தியாகராஜ
பாகவதர். அவர் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான திருச்சி தியாகராஜா ஃபிலிம்ஸை ஆரம்பித்துத்
தயாரித்த முதல் படம் இதுதான். எம்.எஸ்.தேவசேனா கதாநாயகியாக நடித்திருந்தார். இவரது
இயற்பெயர் கிருஷ்ணவேணி. இப்படத்தில் நடிப்பதற்காக பாகவதர்
தேவசேனா
என்று பெயரை மாற்றி விட்டார். டைகர் வரதாச்சாரியிரன் சகோதரரிடம் இசை பயின்றவர் தேவசேனா.
நாட்டியமும் அறிந்தவர். படத்தை இயக்கியிருந்தவர் பி.சம்பத்குமார். தன் நண்பரும், தனது
நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவருமான ஜி. ராமநாதனை இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக்கினார்
பாகவதர். பாடல்களை ஜனகை கவி குஞ்சரம் என்பவர் எழுதியிருந்தார்.

படத்தின் கதை, வசனத்தை
எல்.ராஜமாணிக்கம் எழுதியிருந்தார். ஜோதிபுரி நாட்டின் முதன்மந்திரி திடீரென இறந்து
போகிறார். சேனாதிபதியும் தன் பதவியை ராஜினாமா செய்கிறார். இரண்டாவது மந்திரி முதன்மந்திரியாகிறார்.
சேனாதிபதி பதவி காலியாக இருக்கிறது. அந்த இடத்தைப் பிடிப்பது யார் என்ற போட்டி ஏற்படுகிறது.
மக்கள் இறந்துபோன முதல் மந்திரியின் மகனும் வீரனுமான சத்தியசீலனை (எம்.கே.டி.) ஆதரிக்கின்றனர்.
அரச குடும்பத்தினரோ மன்னரின் மருமகனான பிரதாபருத்ரனை ஆதரிக்கின்றனர். கொடியவனான அவன்
பல்வேறு சூழ்ச்சிகள் செய்து ஆட்சியைப் பிடிக்க எண்ணுகிறான். இறுதியில் சத்தியசீலன்
எப்படி வென்று ஆட்சியைப் பிடிக்கிறான், மன்னனின் மகளான பிரேமாவதியை (எம்.எஸ்.தேவசேனா)
மணக்கின்றான் என்பதே கதை.

பம்பாய் வாடியா மூவிடோனில்
தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சுதந்திரம், ஆட்சி தொடர்பான வசனங்களும், சில பாடல்களும்
இடம் பெற்றிருந்தன. பிரிட்டிஷ் அரசின் கடுமையான ஆட்சேபத்தால் அவை நீக்கப்பட்டதுடன்,
பாடல் வரிகளும் மாற்றப்பட்டன.

பாரதியாரின் பாடலான வீர
சுதந்திரம் வேண்டி நின்றார்
என்ற பாடலையும் மெட்டையும்
அப்படியே கையாண்டு வரிகளை மட்டும் மாற்றி இப்படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். படத்தில்
இடம் பெற்ற அப்பாடல் இதுதான்.
வீரர்கள் வாழ்வினை வேண்டிநின்றார் பின்னர்

வேறொன்று கொள்வாரோ
ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார்
கள்ளிர் அறிவைச் செலுத்துவாரோ
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்று
வெற்றியை அறிந்தாரேல் – மானம்
துறந்தும் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று நினைப்பாரோ..
இப்படத்தில் சொல்லு
பாப்பா..நீ சொல்லு பாப்பா சுகம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா

என்ற பாடலும் இடம் பெற்றிருக்கிறது. அது முதலில்
சுதந்திரம்பெற வழி நீ
சொல்லு பாப்பா
என்றே இடம் பெற்றிருந்தது. பிரிட்டிஷாரின் எதிர்ப்பால்
வரிகள் மாற்றப்பட்டன. மட்டுமல்லாமல் உழைப்பை வலியுறுத்தியும், குடியை எதிர்த்தும் இப்படத்தில்
பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாபநாசம் சிவன் எழுதிய, தோடி ராகத்தில் அமைந்த
தாமதமேன்
சுவாமி
என்ற பிரபல கர்நாடக இசைப் பாடலும் இப்படத்தில்
இடம் பெற்றிருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக
நடித்த தேவசேனா பிற்காலத்தில்  
நந்தனார் படத்தில் நடித்தவரும்,
பிரபல கர்நாடக இசைக்கலைஞருமான எம்.எம்.தண்டபாணி தேசிகரை மணந்து கொண்டார். படத்தின்
பிரதி இப்போது கிடைக்கவில்லை

பக்த குசேலா (1936)

பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம்,
தனது முதல் படமான
நவீன சதாரம் படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து இயக்கிய படம்
பக்த குசேலா.
பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான பாபநாசம் சிவன் நடித்த முதல் படம் இதுதான்.
அவர் குசேலன் வேடத்தில் நடித்திருந்தார். அவரது மனைவி சுசீலையாகவும், நண்பன் கிருஷ்ணனாகவும்
இரு மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் எஸ்.டி. சுப்புலட்சுமி. பிற்காலத்தின் தன் பாடல்களுக்காக
மிகவும் புகழடைந்த ஆர்.பாலசரஸ்வதி தேவி இப்படத்தின் மூலம்தான் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
பட்டு ஐயர், வித்வான் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1936ல் வெளியான
இப்படம் அக்காலத்தின் வெற்றிப்படங்களுள் ஒன்று.

தமிழில் வெளிவந்த முதல்
இரட்டை வேடத் திரைப்படம் இதுதான் எனலாம். தமிழில் முதன்முதலில் மாறுபட்ட இரட்டை வேடங்களில்
நடித்த பெண் கதாநாயகி என்ற பெருமையும் எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இப்படம் மூலம் கிடைத்தது
(ஆண்: பி.யு.சின்னப்பா, படம்: உத்தமபுத்திரன், ஆண்டு: 1940.) பக்த குசேலா படத்தின்
பிரதி இப்போது இல்லை.

இரு சகோதரர்கள் (1936)
புராணப் படங்களே அதிகம்
வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படங்கள் சிலவும்
வந்தன. அவற்றுள் ஒன்று இது. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படம் 1936ல் வெளியானது.
சதி லீலாவதி
திரைப்படத்திற்குப் பிறகு
டங்கன் இயக்கிய இரண்டாவது படம் இது. கதாநாயகன்
கே.பி.கேசவன். நாயகி, எஸ்.என்.விஜயலட்சுமி. உடன் எம்.கே.ராதா, எஸ்.என்.கண்ணாமணி, கே.கே.பெருமாள்,
டி.எஸ்.பாலையா, கிருஷ்ணவேணி, எம்.எம்.ராதாபாய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில்
எம்.ஜி.ஆர் காவலராக தம்முடைய சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்
நடித்த இரண்டாவது படம் இது.

படத்தின் கதையை பிரபல
எழுத்தாளரும் கவிஞரும் திரைப்பட இயக்குநருமான ச.து.சு.யோகி எழுதியிருந்தார். திரைக்கதை
மற்றும் பாடல்களும் அவரே! இசை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பரூர் எஸ். அனந்தராமன்.

அண்ணன் – தம்பி இருவருக்கிடையே
எழும் பிரச்சினைகளை நாடக்குழுக்களின் பின்னணியில் இப்படத்தில் சொல்லியிருந்தார் யோகி.
அதுவரை தமிழில் முப்பது, நாற்பது, ஐம்பது எனப் பாடல் வந்து கொண்டிருந்த காலத்தில் அவற்றை
வெகுவாகக் குறைத்து உண்மையான சினிமாவைக் காட்ட விரும்பினார் டங்கன். அதனால் இதில்
13 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன. வசனங்களோடு கூடவே காட்சி அமைப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம்
கொடுத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார் டங்கன். கதைக்குத் தொடர்பில்லாத நகைச்சுவைக்
காட்சிகளே திரைப்படங்களில் அதிகம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், கதையோடு இணைந்த
நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இப்படத்தின் மேம்படுத்தப்பட்ட
வடிவமே பின்னர்
நாம் இருவர்
என்ற திரைப்படமாக வெளி வந்தது எனலாம். ச.து.சு. யோகியின் இரண்டாவது படம்
அதிர்ஷ்டம்.
வி.வி.சடகோபன், சூர்யகுமாரி, கொத்தமங்கலம் சுப்பிரமணியன், செல்லம், தமயந்தி ஆகியோர்
நடித்திருந்தனர். அதுவும் ஒரு வெற்றிப்படமே!
இரு சகோதரர்கள்
படத்தின் பிரதி இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை.

நவயுவன் (1937)
நவயுவன்
அல்லது கீதாசாரம்
என்ற தலைப்பில் 1937ல் வெளியான இப்படத்தின்
கதாநாயகன் பிரபல கர்நாடக இசைக்கலைஞரான வி.வி.சடகோபன். தமிழ்த் திரையுலகின் முதல் பட்டதாரி
நாயகன் இவர்தான். ஹாலிவுட் இயக்குநரான மிசெல் ஒமலெவ் இப்படத்தை இயக்கியிருந்தார். வெளிநாட்டில்,
குறிப்பாக லண்டனில் படம் பிடிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். சடகோபன் நடிகனாகத்
தொடங்கி, பாடகராக, இசையமைப்பாளராக, கவிஞராக, எழுத்தாளராக,, பத்திரிகாசிரியராக, இசைப்
பேராசிரியராக உயர்ந்து, பலதளங்களில் சாதனை புரிந்த கலை மேதை. இவரது இரண்டாவது படமான
மதனகாமராஜன்தான்
ஜெமினி நிறுவனத்தின் முதல்
படமாகும்.
இப்படத்தில் (மதனகாமராஜன்)
சடகோபன் கதாநாயகனாக நடிக்க, வசந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். எழுத்தாளர் பி.எஸ்.
ராமையா கதை-வசனம் எழுதியிருந்தார். பாடல்கள்: பாபநாசம் சிவன். இசை: எம்.டி.பார்த்தசாரதி,
எஸ்.ராஜேஸ்வரராவ். ஜெமினியின் முதல் வெற்றிப்படமாக இது அமைந்தது.
நவயுவன்
திரைப்பட உருவாக்கத்திற்காக முதன்முதல் லண்டன் சென்ற தமிழ் எழுத்தாளர் பி.எஸ்.ராமையாதான்.
இவர் சினிமா பற்றி எழுதியிருக்கும் நூல் குறிப்பிடத்தகுந்தது.
சிறந்த நடிகராக இருந்து,
சிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞராக உயர்ந்த வி.வி.சடகோபன், ஒரு சமயம் டெல்லியில் இருந்து
ரயில் பயணம் மேற்கொண்டார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூடூர் ரயில் நிலையத்தில் இறங்கியவர்,
அதன்பின் மர்மமான முறையில் காணாமல் போய் விட்டார். அவர் ஹிமாலயத்திற்குச் சென்று துறவு
பூண்டு விட்டார் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்.

சதி அஹல்யா (1937)

மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தாரின்
முதல் படம்
சதி அஹல்யா.
டி.ஆர்.சுந்தரம் இயக்கிய முதல் படம் இது. நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம்
முதன்முதலில் அறிமுகமான படமும் இதுதான். அவருடைய முதல் பாடல் இடம்பெற்ற படமும் இதுவே.
(தவமணி
தேவி)

ஆனால், இப்படத்தின் கதாநாயகி
தவமணி தேவி. இவர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
புராணப் படமான அகலிகையின் கதை இது. நாயகனாக எஸ்.வி.தத்தாச்சார் நடித்திருந்தார். உடன்
எஸ்.டி.சுப்பையா, டி.எம்.சங்கர், எஸ்.என்.சிவக்கொழுந்து உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாடலை மதுரை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். இசை:ஆர்.பாலுசாமி. தவமணி தேவி, முதன்முதலில்
நீச்சல் உடையில் நடித்த கதாநாயகி என்ற சிறப்பைப் பெற்றது இப்படம் மூலம் தான்.

நந்தகுமார் (1938)

டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக
முதன்முதலில் அறிமுகமான படம் நந்தகுமார். அப்போது அவருக்கு வயது 14. கிருஷ்ணனாக இப்படத்தில்
அவர் நடித்திருந்தார். அவருக்குத் தாய் யசோதாவாக டி.பி.ராஜலட்சுமி நடித்திருந்தார்.
கதாநாயகி ராதையாக டி.எஸ்.ராஜலக்ஷ்மி நடித்திருந்தார். டி.ஆர்.ராமச்சந்திரன், பிரபல
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் ஆகியோர் அறிமுகமான படம் இதுதான். தமிழில் முதல்
பின்னணிக் குரல் ஒலித்தது இப்படத்தில்தான். கிருஷ்ணரின் தாய் தேவகியாக நடித்த நடிகையின்
குரல் வளம் சரியில்லாததால் அவர் பாடலுக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகி லலிதா வெங்கட்ராமன்
பின்னணி பாடினார். ஏவி.மெய்யப்பச்செட்டியாரின் பிரகதி பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருந்தது.

ஸ்ரீராமானுஜர் (1938)
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான
சங்கு சுப்பிரமணியம் நடித்த படம்
ஸ்ரீராமானுஜர்.
இப்படத்தில் அவர் ராமானுஜராக நடித்திருந்தார். உடன் படத்தில் எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி,
கலைமகள் ந. ராமரத்னம், சீனிவாச வரதன், ஜி.ஏ.ஞானாம்பாள், கமலாம்பாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாடல்களை எழுதியவர்: பாரதிதாசன். வசனத்தை எழுதியவர் வ.ரா. இயக்கம்: ஏ.நாராயணன்.
ராஜி
என் கண்மணி
படத்திற்கு வசனம் எழுதியவரும் சங்கு சுப்பிரமணியம்தான்.

ஜலஜா (1938)

நாட்டியத்தை அடிப்படையாக
வைத்து உருவான முதல் தமிழ்ப்படம்
ஜலஜா அல்லது நாட்டிய
மகிமை
. 1938ல் இப்படம் உருவானது. படத்தின் கதாநாயகியாக
நடித்தவர் கும்பகோணம் ஸ்ரீ பானுமதி என்பவர். ஜி.கே.சேஷகிரி இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
கதை வசனத்தை எழுத்தாளர் மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன், டாக்டர் வி.ராகவன் மற்றும் ஜி.கே.சேஷகிரியுடன்
இணைந்து எழுதியிருந்தார். படத்தை ஜி.கே.சேஷகிரி மற்றும் ஆர்.ஆர்.கௌதம் இணைந்து இயக்கியிருந்தனர்.
இப்படத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார், மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன். பாடல்கள்,
இசை: ஏ.என்.கல்யாணசுந்தரம். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பரூர் எஸ்.அனந்தராமன் இசைக்குழுவின்
தலைவராகப் பணி புரிந்த படம் இது.

இன்பசாகரன் (1939)
இயக்குநர் கே. சுப்ரமணியத்தின்
தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம். கோவை அய்யாமுத்து அவர்கள் எழுதிய நாடகத்தைப்
பார்த்து வியந்த இயக்குநர் அதன் உரிமையை வாங்கிப் படமாக எடுத்தார். கதாநாயகியாக எம்.ஆர்.சந்தானலஷ்மி
நடித்திருந்தார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் தன் குழுவினருடன் இந்தப் படத்தில்
நடித்திருந்தார். நம்பியாரும் முக்கிய வேடமேற்றிருந்தார். தயாரிப்பு முடிந்து, படத்தை
வெளியிடும் முன்னர் ஸ்டூடியோ தீ விபத்தில் சிக்கியது. அனைத்துப் படச் சுருள்களும் எரிந்து
அழிந்தன. இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு சில பாடல்கள் மட்டுமே நமக்குக் காலத்தின்
சாட்சியாக இருக்கின்றன. எரிந்துபோன ஸ்டூடியோவை ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள்
வாங்கி, அங்கே ஜெமினி ஸ்டூடியோவை நிர்மானித்தார்

வாமனாவதாரம் (1940)
டி.ஆர்.மஹாலிங்கம் மாஸ்டர்
டி.ஆர்.மஹாலிங்கம்
ஆக நடித்த இரண்டாவது படம். கதையை சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
எழுதியிருந்தார். பாடல்களை எழுதியவர் சி.எஸ்.ராஜப்பா என்ற இயற்பெயர் கொண்ட கம்பதாசன்.
கம்பன்மீது கொண்ட பற்றால் கம்பதாசன் ஆன கவிஞர். இவர் ஏற்கெனவே
திரௌபதி
வஸ்திராபகரணம்
, சீனிவாச கல்யாணம்
போன்ற படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். நடிப்போடு பாடல் எழுதுவது, இசையமைப்பது,
கதை, வசனம் எழுதுவது என்று பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இவர் பாடல் எழுதிய முதல் படம்
இதுதான். இசை: என்.பி.எஸ்.மணி. இயக்கம்: பிரேம் சேத்தனா.

தொடர்ந்து மகாமாயா,
ஞானசௌந்தரி,
மங்கையர்க்கரசி,
சாலிவாகனன்,
லைலா மஜ்னு,
வனசுந்தரி,
சியாமளா,
அமரதீபம் எனப் பல படங்களில் கம்பதாசனின்
பாடல்கள் இடம்பெற்றன. பி.யு.சின்னப்பாவுக்கு இவர் எழுதிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

மஹாபலிச் சக்கரவர்த்தி
மற்றும் வாமனரின் கதைதான் இது. ஆனால், வேறு ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வாமனன் ஆக நடித்தது டி.ஆர்.மஹாலிங்கம். என்.பி.எஸ்.மணி, வி.வி.எஸ்.மணி, டி.கே.உபேந்திரநாத்,
ஆர்.பாலசுப்பிரமணியம் போன்றோர் உடன் நடித்திருந்தனர்.
*
அந்தக் காலத் திரைப்படங்கள் பற்றி மேலும் சில
சுவாரஸ்யமான செய்திகள்:
* கர்நாடக சங்கீத வித்வான்
மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஒரே படம் பக்த நந்தனார் (1935).

* பெண்களே இல்லாமல் தயாரிக்கப்பட்ட
முதல் படம்
பக்த ராமதாஸ்
(1935).

* என்.எஸ்.கிருஷ்ணன்
அறிமுகமான படம் மேனகா (1935).

* தமிழ்த் திரையுலகில்
அதிகம் பாடல்கள் இடம் பெற்ற படம் – இந்திர சபா. 79 பாடல்கள். (1936)

* தமிழின் முதல் ஆக்‌ஷன்
படம் 1936ல் வெளியான மெட்ராஸ் மெயில். சண்டைக் கலைஞரான பாட்லிங் மணி (Battling
Mani) இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

* குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து உருவாக்கப்பட்ட முதல் குழந்தைகள் படம் – பால யோகினி. (1937)

* பாரதிதாசன் முதன்முதலில்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெளியான படம் பாலாமணி அல்லது பக்காத் திருடன்.
(1937)

* சுதேசி இயக்க ஆதரவு,
தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய முதல் படம் சேவாசதனம். (1938)

* பிரபல சங்கீத வித்வான்
எஸ்.வி.சுப்பையா பாகவதர் கதாநாயகனாக நடித்த படம் கம்பர். வேல்பிக்சர்ஸ் தயாரித்திருந்த
இப்படம் 1938ல் வெளியானது. சி.எஸ்.யு. சங்கர் இயக்கியிருந்தார். எல்.நாராயண ராவ், மங்களம்
உள்ளிட்டோர் உடன் நடித்திருந்தனர்.

* முதன்முதலில் காடுகளில்
எடுக்கப்பட்ட படம் வனராஜா கார்ஸன். (1938)

* டி.ஏ.மதுரம் கதாநாயகியாய்
நடித்த முதல் படம் பாண்டுரங்கன் அல்லது ஜே ஜே விட்டல். (1939)

* தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய
முதல் படம் பக்த சேதா. (1940)

* மதுவிலக்கை வலியுறுத்தி
உருவான முதல் படம் விமோசனம். (1940)

* பிரபல நாதஸ்வர வித்வான்
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் காளமேகம். (1940)

* ஆண் வேடத்தில் நடித்த
பெண் கதாநாயகிகள்: டி.பி.ராஜலக்ஷ்மி, பி.எஸ்.ரத்தினாபாய், பி.எஸ்.சிவபாக்கியம், கே.பி.சுந்தராம்பாள்.

* பிரபல நாதஸ்வர வித்வான்
திருவெண்காடு சுப்பிரமணியம் கதாநாயகனாக நடித்த படம் காத்தவராய சாமி.
*

Leave a Reply