Posted on Leave a comment

எஸ் வங்கி பிரச்சினை | ஜெயராமன் ரகுநாதன்

 

கடந்த ஒரு வருடத்தில்
நாம் இரண்டு பெரிய நிதித்துறை அதிர்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. முதலில்
பஞ்சாப் மஹாராஷ்டிரா கோ-ஆப்பரேடிவ் வங்கியின் திவால். அதன் தாக்கம் முழுமையாகச் சரி
செய்யப்படுவதற்குள் இப்போது எஸ் வங்கியின் (
Yes
Bank)
வீழ்ச்சி. இந்த வீழ்ச்சி வெகு ஆழமான காரணங்களுக்கு உட்பட்டது என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. பதிலில்லாத பல
கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஒரு சராசரி இந்தியனின் மனக்குமுறலை அதிகரிக்கும் வண்ணம்
சிக்கல்களை இந்த வங்கியின் வீழ்ச்சி உள்ளடக்கியிருக்கிறது.


அக்டோபர்
2019 தொடங்கி டிசம்பர் 2019 வரையிலான மூன்று மாதங்களில் எஸ் வங்கி அடைந்திருக்கும்
நஷ்டம் ரூ
பாய் 18,564 கோடி. ஒரு வருடம் முன்பு, அதாவது
அக்டோபர் 2018 தொடங்கி டிசம்பர் 2018 வரையிலான மூன்று மாதங்களில் எஸ் வங்கியின் லாபம்
ரூ 1000 கோடி என்று அறிக்கை சொல்லியிருக்கிறது. இந்த மாதிரியான அதலபாதாள வீழ்ச்சி ஒரே
வருடத்தில் சாத்தியமா? அப்படியானால் இதுநாள் வரையிலான அறிக்கைகளும் தணிக்கை செய்யப்பட்ட
கணக்குகளும் சொல்லியவை எல்லாம் பொய்தானா? இந்த அளவுக்கா அடிப்படை முறைமைகளே கேள்விக்குள்ளாகும்?
இது நமது நாட்டின் நிதித்துறையின் சட்டதிட்டங்களையே கேலிக்குள்ளாக்கும் அவலமில்லையா?


உடனடி முடிவாக
ரிசர்வ் வங்கி எஸ் வங்கியில் பணம் திரும்பப்பெறும் (M
oratorium) அளவை ரூ
50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டது இந்தக் கட்டுப்பாடு மர்ச் 18ம் தேதி வரை மட்டுமே.
இந்த முடிவுமே கேள்விக்குரியதாக ஆகியிருக்கும் நிலையில் இதைக் கொஞ்சம் விவரமாக அலசுவது
அவசியம். ஆனால் அதற்கு முன்னால் இந்த எஸ் வங்கியில் நடந்த நிகழ்ச்சிகளை
த் தேதி வாரியாகப் பார்க்கலாம்:

செப்டம்பர்
19, 2018 
வங்கியின் தலைப்பொறுப்பில்
இருந்த ரானா கபூருக்கு அந்தப் பதவியில் தொடருவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி மறுத்து,
அவர் ஜனவரி 2019ல் பதவி விலகவேண்டும் என்று கட்டளை இடுகிறது.


நவம்பர் 27,
2018
நிதித் தரத்தை
நிர்ணயிக்கும் மூடி (Moody) என்னும் சர்வதேச நிறுவனம் எஸ் வங்கியின் அந்நியச் செலாவணி
அளிக்கும் நிறுவனத் தரத்தை சந்தேகத்துக்குரியது என்று நிர்ணயித்தல்.


ஃபிப்ரவரி
13, 2019
எங்களின் சொத்து மற்றும் வாராக்கடன் பற்றின ஒதுக்கீட்டில்
எந்த முறைகேடும் இல்லை என ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது
என்று எஸ் வங்கி
அறிவிப்பு


ஏப்ரல் 8,
2019
முதலீட்டுத்
தேவையை மனதில் கொண்டு எஸ் வங்கி நாங்கள் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் மூலம் இன்னும்
முதலீட்டைப்பெருக்குவோம் என்ற அறிவிப்பு


ஏப்ரல், 26,
2019
முதன் முறையாக,
கடந்த மூன்று மாதத்திய (ஜனவரி – மார்ச் 2019) வருவாயில் இழப்பு என்று எஸ் வங்கி அறிவிக்க,
எஸ் வங்கியின் பங்கு அடுத்த நாள் சந்தையில் 30% வீழ்ச்சி.


மே 14, 2019
இதுவரை காணாத
வகையில் ரிசர்வ் வங்கி ஆர். காந்தி என்னும் ஓய்வுபெற்ற உதவி கவர்னரை தன் சார்பில் எஸ்
வங்கியில் கூடுதல் நிர்வாக இயக்குநராகப் புகுத்தியது.


ஜூலை 17,
2019
முதல் மூன்று
மாதங்களுக்கான (ஏப்ரல் – ஜூன் 2019) லாபம் 91% குறைவு என்றும், வாராக்கடன் தொகை விகிதம்
5.01%க்கு உயர்ந்து விட்டது என்றும் எஸ் வங்கி அறிவிப்பு.


செப்டம்பர்
10, 2019
எஸ் வங்கியின்
தலைவர் ரன்வீட் கில் (Ranveet Gill), சர்வதேச தொழில்நுட்ப கம்பெனி ஒன்று எஸ் வங்கியின்
பங்குகளை வாங்கி முதலீடு செய்வதற்குச் சம்மதித்திருப்பதாக அறிவிப்பு.


அக்டோபர் 3,
2019
மேலும் பல முதலீட்டாளர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தி அதிக முதலீடு பெறப்படும் என்று மறுபடி கில் அறிவிப்பு.


அக்டோபர்
31, 2019
ஒரு சர்வதேச
முதலீட்டாளர் எஸ் வங்கிக்கு 1.2 பில்லியன் டாலர் (ரூ. 8,400 கோடி) முதலீடு அளிக்க வாக்குக்
கொடுத்திருப்பதாக அறிவிப்பு. இந்தச் செய்தி வந்தவுடன் எஸ் வங்கியின் பங்குகள் 39% விலை
உயர்வு.


நவம்பர் 1,
2019
அடுத்த மூன்று
மாதங்களுக்கான (ஜூலை – செப்டம்பர் 2019) வரவு செலவு கணக்கில் மிகப்பெரிய இழப்பும் வாராக்கடன்
விகிதம் 7.39% உயர்வும் மற்றும் வாராக்கடன் ஒதுக்கீடு 133.6 கோடி ரூபாய் எனவும் எஸ்
வங்கி அறிவிப்பு.


நவம்பர் 26,
2019
2 பில்லியன்
டாலருக்கு (ரூ 14,000 கோடி) முதலீடு பெறுவதற்கான முயற்சிகளை எஸ் வங்கி எடுத்திருப்பதாக
அறிவிப்பு. அதில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர் (ரூ 8,400 கோடி) எர்வின் சிங் பிரெய்ச்
என்னும் கனடா தொழிலதிபருக்குச் சொந்தமான, ஹாங்காங்கைச் சேர்ந்த எஸ் பி ஜி பி ஹோல்டிங்ஸ்
என்னும் கம்பெனி (
Erwin Singh Braich and Hong Kong-based SPGP Holdings) அளிக்கவிருப்பதாகவும்
அறிவிப்பு.


ஜனவரி 10,
2020
எர்வின் சிங்
பிரெய்ச்சின் திட்டத்தை எஸ் வங்கி நிராகரித்து விட்டதாகவும் வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும்
அறிவிப்பு.


ஃபிப்ரவரி
12, 2020
அக்டோபர் முதல்
டிசம்பர் வரையிலான வருமான விவரங்களை அளிக்க இன்னும் அவகாசம் தேவைப்படுவதாகவும் தாம்
இன்னும் முதலீட்டைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிப்பு. JC
Flowers, Tilden Park Capital Management, OHA (UK) and Silver Point Capital போன்ற
கம்பெனிகளிடமிருந்து முதலீட்டை அளிப்பதற்கான விருப்பம் வந்திருப்பதாக அறிவிப்பு.


மார்ச் 5,
2020
ரிசர்வ் வங்கி
எஸ் வங்கியில் பணம் திரும்பப்பெறுதல் அளவை ரூ 50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டது.
அதோடு எஸ் வங்கியின் நிர்வாகத்தை அடுத்த முப்பது நாட்களுக்கு ரிசர்வ் வங்கியே எடுத்துக்கொண்டு
விட்டதாகவும் அறிவிப்பு.
ஏதோ ஒரு மர்மக்கதை போல நடந்த அறிவிப்புக்களைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி தன்
பொறுமையை இழந்து செயல்பாட்டில் இறங்கியதைப் பார்த்தோம்.
2004ல் தொடங்கப்பட்ட இந்த எஸ் வங்கி மிக ஆக்ரோஷமாகத்தான் செயல்பட ஆரம்பித்தது.
பதினைந்தே வருடங்களில் இந்த வங்கியின் சொத்து மதிப்பு ரூ நான்கு லட்சம் கோடியை எட்டியது.
இந்த வங்கியின் வெற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
‘‘இப்படி அல்லவா
இருக்க வேண்டும் தனியார் வங்கி
’’ என்று சொல்லும்படி அதன் செயல்பாடுகள்
இருப்பதாக வங்கியின் அதிகாரிகள் டீவியிலும் பத்திரிகைகளிலும் பேட்டி அளித்தனர். போன
வருடம் கூட வங்கியின் தலைவர் எஸ்
வங்கியின் வளர்ச்சி அபாரமாக
25% வரை இருக்கக்கூடும் என்று அறிவித்திருந்தார். பங்குச் சந்தையில் எஸ் வங்கியின்
பங்குகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கி விற்கப்பட்டன. வங்கியின் வருடாந்திர அறிக்கையில்
காணப்பட்ட வாக்கியம் “எதிர்காலம் இன்றே“!
எந்த ஒரு பொருளுமே ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பாய முடியாது. அப்படிப் பாயுமானால்
இன்று மட்டுமல்ல நாளையும் கூட நேற்றாகிவிடும் என்பார் ஐன்ஸ்டீன்! எஸ் வங்கியின் முன்னேற்ற
வேகம் அப்படித்தான் இருந்தது.
இதுநாள் வரையிலான எஸ் வங்கியின் செயல்பாடுகளில் ஒரு சர்ரியலிஸம் இருப்பதை உணரலாம்.
போதுமான மூலதனம் (capital adeqacy – 16.5%),
குறைவான
வாராக்கடன் (3.5%)
என்று கடந்த மார்ச் 31 2019 வரை அபார வளர்ச்சியுடன் விளங்கியதாக
அறிக்கையில் சொல்லப்பட்ட வங்கி, எப்படி பன்னிரண்டே மாதங்களில் இப்படிச்
சரிய முடியும்? அப்போது இது நாள் வரை அறிக்கையில் வந்தவை, அதிகாரிகள் பேட்டியில் தெரிவித்தவை,
மேலே நாம் பார்த்த அறிவிப்புக்கள் எல்லாம் மேலும் மேலும் மூலதனம் வாங்குவதற்காகச் சொல்லப்பட்ட
வெற்று வார்த்தைகள்தானா? ரிசர்வ் வங்கி ஆடிட்டர்கள், அரசாங்கம், மக்கள் என எல்லாரையும்
ஒரு சேர ஏய்க்க முடியுமா அல்லது இது திட்டமிடப்பட்ட அரசியல் குறுக்கீடுகள் கொண்ட இன்னொரு
குளறுபடியா என்னும் கேள்வி எழாமலில்லை.
கடந்த சில வருடங்களாகவே நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பல வீழ்ச்சிகளில் –
ஐ டி பி ஐ வங்கி, ஐ எல் எஃப் எஸ், டி ஹெச் எஃப் எல், பி எம் சி கோஆப் வங்கி, ஆல்டிகோ
காபிடல் போன்ற அதிர்ச்சிகளை ஒட்டியே இப்போது எஸ் வங்கியும் கவிழ்ந்திருப்பது நமது நிதித்துறை
எத்தனை அபாயகரமான பாதுகாப்பின்மையுடன் இயங்குகிறது என்பதைப் பறைசாற்றவில்லையா?
அப்படி எஸ் வங்கியில் எதில்தான் தவறு நிகழ்ந்தது?
இதற்குப்பதில் மிகச்சுலபம்! எல்லாவற்றிலும்தான்!
(ரானா கபூர்)
ராணா கபூருக்கும் அவரின் மைத்துனி மது கபூருக்கும் வங்கியின் பொறுப்பில் யாருக்கு
முக்கியத்துவம் என்னும் தகராறு வெளிப்படையாகவே அரங்கேறியது. கடந்த செப்டம்பர் மாதம்
ரிசர்வ் வங்கி ரானா கபூர் பதவிக்காலம் முடிவடையும்போது வெளியேறி விட வேண்டும் என்று
சொல்லி, அவர் வங்கியில் தொடருவதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டது. நிர்வாகச் சீர்கேடு
என்று காரணம் சொல்லி வங்கியின் தனி இயக்குநர் (independent Director) உத்தம் பிரகாஷ்
அகர்வால் ஜனவரி மாதம் ராஜினாமா செய்துவிட்டார்.
தேசலான நிர்வாகம், செயல்பாடில்லாத நிர்வாகக்குழு, குளறுபடிகளுடன் கூடிய தணிக்கை
முறைகள், உடைபட்ட நிதிச்சந்தை சட்டங்கள், துணிவில்லாத மேலாண்மை, இவையெல்லாம் தவிர,
அரசியல் மூக்கு நுழைப்பை உறுதியாகக் கையாளாததால் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
அத்துடன், பல வருட நேர்மையற்ற உள் விவகாரங்கள், எஸ் வங்கியின் முதலாளிகளுக்கும் நிர்வாகிகளுக்கும்
அரசியல் தலையீட்டுக்கும் இருந்த சங்கிலித்தொடர்புகள் எல்லாமாகச் சேர்ந்துதான் இந்த
நிலைமை உண்டாகி விட்டிருக்கிறது.
அதுவும் இந்த எஸ் வங்கி வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணம் ஒரு மிக மோசமான
தருணமாகிவிட்டது. ஏற்கெனவே பொருளாதாரம் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்
வேளையில் இப்படி ஒரு தனியார் வங்கி வீழ்ந்தது இன்றைய வங்கித் துறையின் மீதான பொது மக்களின்
நம்பிக்கைக்கு பலத்த அடியைச் சாத்தியிருக்கிறது.
நிகழ்ந்த அவலங்களை மட்டும் பேசுவது எவ்விதத்திலும் நன்மை தரப்போவதில்லை. ஆனாலும்
இதைச் சரி செய்ய வேண்டிய அரசாங்கத்தின் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாகத்திறமை
மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை மறுக்க இயலாது. மக்களின் மத்தியில், முக்கியமாக முதலீட்டாளர்களின்
மத்தியில் ஒரு இயலாமை, வருத்தம் ஏன் கொஞ்சம் கோபம் கூட உண்டாகியிருக்கிறது. இந்தச்
சந்தேகம் சில அரசியல் மற்றும் நிதித்துறைப் பலிகளை வாங்கப்போகிறது என்பது நிச்சயம்.
நிதித்துறை எந்த நாட்டிலுமே கொஞ்சம் மென்மையானது. சீர்கேடுகளுக்குள் சுலபத்தில்
மாட்டிக்கொண்டுவிடும் அபாயம் இருக்கிறது. இத்துறையின் ஏதோ ஒரு பகுதி எல்லை மீறினாலும்
மொத்த நிதித்துறையும் அதற்கான விலையைத்தர வேண்டியிருக்கும் என்பதுதான் சரித்திரம் நமக்கு
மீண்டும் மீண்டும் உணர்த்தும் பாடம். இந்தியாவின் இன்றைய நிதித்துறைச் சட்ட திட்டங்களும்
கட்டுப்பாடுகளும் சர்வதேசத்தரம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவற்றை நிர்வகிக்கும்
திறமை ரிசர்வ் வங்கிக்கு போதுமான அளவில் இருக்கிறதா என்பதற்கான பதிலைத்தான் தேட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1969 வரை 559 தனியார் வங்கிகள் திவாலாகியிருக்கின்றன.
1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டுவிட்டதால் திவால் நிலைமை ஏற்படவில்லை. ஆனால் மீண்டும்
வங்கித்துறை தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின்னர் 36 வங்கிகள் வீழ்ச்சியடைந்து அவை
வேறு பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டன. கடந்த ஐந்து வருடங்களில் 26 பொதுத்துறை
வங்கிகளின் 3400 கிளைகள் மூடப்பட்டோ அல்லது வேறொரு வங்கிக் கிளையுடனோ ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த எண்ணிக்கையில் 75% கிளைகள் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகள் என்பதில் சப் டெக்ஸ்ட்
இருப்பதாகக் கருதலாம்! தவிர இப்போது இன்னும் பத்து பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு
நான்கு பொதுத்துறை வங்கிகளாக்கப்படும் என்னும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
(திவால் அல்லது இணைக்கப்பட்ட தனியார் வங்கிகளின் பட்டியலைப் பெட்டிச் செய்தியில்
காண்க.)
எஸ் வங்கி விவகாரத்திலேயே சென்ற வருடம் அறிவிக்கப்பட்ட வாராக்கடன்களின் மொத்த
மதிப்பு கிட்டத்தட்ட ரூ 3277 கோடி வரை குறைத்துச் சொல்லப்பட்டதாக (under
reporting) அன்றைய தணிக்கை சொல்லுகிறது. ஆனால் இந்தத் தொகையே மிக்குறைவு. அதாவது மறைக்கப்பட்ட
வாராக்கடன் இதை விட மிக மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏன் என்றால் இந்த மார்ச்
மாதம் 6ம் தேதி ரிசர்வ் வங்கி எஸ் வங்கியின் பணம் திரும்பப்பெறுதல் அளவை ரூ 50,000க்கு
என்று கட்டுப்படுத்திவிட்டபோதே (Moratorium), வங்கியின் முதலீடான ரூ 26,904 கோடியில்
பாதிக்கு மேல் இழக்கப்பட்டு விட்டது (Eroded) என்பது புரியத்
தொடங்கியது.
கடந்த சில வருடங்களாகவே தனியார் வங்கிகளின் வருடாந்திரக் கணக்கு வழக்குகளைப்
பார்க்கும்போது ஒரு சில விஷயங்களில் சந்தேகம் வருகிறார் போல இருப்பதாக வல்லுநர்கள்
சொல்லி இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் தனியார்மயக்
கொள்கைக்கு எதிரானவர்கள், அப்படித்தான் பேசுவார்கள்
என்று அசட்டை செய்து விட்டோமோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. எஸ் வங்கியிலேயே
2016-17ல் அளித்த கடன்கள் ஆண்டுக்கு 35% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த வருடத்தில்
கடன் 54% உயர்ந்திருக்கிறது. இதே வருடங்களில் வட்டியில்லா வருமானமும் மிக அதிகமான விகிதத்தில்
மேலே போயிருக்கிறது. ஒரு தனியார் வங்கி தன் வருடாந்திரக் கணக்கில் அசாதாரணமான தொகைகளை
வட்டியில்லா வருமானமாகக் காண்பிக்கும்போது நம் சந்தேக ஆண்டென்னாக்கள் விடைத்து எழுந்திருக்க
வேண்டும் என்று இப்போது புரிகிறது. இந்த வட்டியில்லா வருமானமானது சந்தேகோபாஸ்தமான வழிகளில்
ஈட்டப்படுகிறது என்பதும் அதற்கான திரை மறைவு நன்மைகள் யார் யாருக்கோ போய்ச்சேருகின்றன
என்பதும், நிரூபிக்க முடியாவிட்டாலும் விஷயமறிந்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிற சமாச்சாரம்தான்.
ஆகவே ரிசர்வ் வங்கி இந்த எஸ் வங்கி விவகாரத்தில் சென்ற வருடம் முதல் நடந்த சில தணிக்கைகளில்
கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களை
த் தெரிவிக்க வேண்டும்.
பொறுப்பேற்க வேண்டியவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும்.
முக்கியமாக வல்லுநர்கள் சொல்லுவது ரிசர்வ் வங்கி இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்
என்பதே. திசை திருப்புதல், முழுமையான வெளிப்படுத்துதல் (Disclosure) இல்லாத தகவல்கள்,
ஏறிக்கொண்டிருந்த வாராக்கடன்கள், அரிக்கப்பட்ட மூலதனம், மேலும் மூலதனம் திரட்டும் தகுதியின்மை
போன்ற சிக்கல்கள் எஸ் வங்கியில் தொடர்ந்திருப்பது எப்படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில்
வெளிப்படாமல் போனது என்னும் கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது. இதற்கான சீரமைப்பாக
மாரட்டோரியத்தைக் கொண்டு வந்து டெபாசிட் போட்ட வாடிக்கையாளர்களின் நிம்மதியை வேறு ரிசர்வ்
வங்கி கெடுத்துவிட்டது என்னும் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. (இந்தக் கட்டுரை அச்சேறும்
தறுவாயில் இது சரி செய்யப்பட்டுவிட்டது.) எனவே தனியார் வங்கிகள் மிகவும் திறமையானவை,
பொதுத்துறை வங்கிகளைப்போல மெத்தனமாகச் செயல்படுவதில்லை என்ற கருத்து இப்போது மரண அடி
வாங்கியிருக்கிறது.
இது ஒன்றும் புதிதும் அல்ல. குளோபல் டிரஸ்ட் வங்கி மற்றும் பஞ்சாப் மஹாராஷ்டிரா
கோஆப்பரேடிவ் வங்கிகளிலும் நடந்தவைதாம் இங்கும் நடந்தேறியிருக்கின்றன.
சரி, இந்த வீழ்ச்சியைச் சரி செய்ய என்ன மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது
என்பதைப் பார்ப்போம்.
முதலாக ஸ்டேட் வங்கி முன் வந்து ரூ 2450 கோடி முதலீட்டைத் தருவதற்குச் சம்மதித்துள்ளது.
சம்மதித்ததா அல்லது நிர்பந்தப்படுத்தப்பட்டதா என்பது பதிலில்லாத கேள்வி. அந்த அளவு
மூலதனத்திற்கு ஸ்டேட் வங்கிக்கு எஸ் வங்கியின் 49% பங்குகள் கொடுக்கப்படும். ஒரு நல்ல
விஷயம் என்னவென்றால் ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்திறமையும் இது போன்ற சவால்களைச் சந்தித்த
அனுபவமும் எஸ் வங்கி விஷயத்திலும் கை கொடுக்கும். அதோடு மேலும் சில தனியார் வங்கிகளும்
மூலதனம் இட ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஹெச் டி எஃப் சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக்
வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவையும் மொத்தமாக ரூ 3,100 கோடி வரையும் ஃபெடரல் வங்கி மற்றும்
பந்தன் வங்கி ரூ 600 கோடி வரையிலும் மூலதனம் இட ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்.
மிகச்சிறந்த நிர்வாகிகளும் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் நிதித்துறையும் ஒருங்கிணைந்து
எஸ் வங்கியின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டபடியால் இச்சங்கடங்கள் தீர்க்கப்பட்டு
டெபாசிட் செலுத்திய பொது மக்களின் பணத்துக்கு பங்கம் வராமல் காப்பாற்றிவிடுவார்கள்
என்னும் நம்பிக்கை வலுக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் முன்பு போல அரசாங்கம் எஸ் வங்கியை இன்னொரு
வங்கியுடன் இணைக்கும் முடிவை எடுக்கவில்லை. இதுவும் சரியான முடிவுதான் என்று தோன்றுகிறது.
ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்னால் குளோபல் டிரஸ்ட் வங்கி வீழ்ச்சி அடைந்தபோது அதை
ஓரியண்டல் வங்கியுடன் இணைத்து விட, பின் நிகழ்ந்தவை மிகவும் மறக்க வேண்டியவையாக மாறிப்போன
சரித்திரத்தை அரசு நினைவில் கொண்டு, இணைப்பு என்னும் முறையைக் கைவிட்டிருக்கிறது. அச்சமயத்தில்
குளோபல் டிரஸ்ட் வங்கி இணைப்பால் ஓரியண்டல் வங்கி அடிபட்டுச் சாய்ந்தது. ஓரியண்டல்
வங்கியின் வீழ்ச்சிக்கு இது மட்டுமே காரணம் அல்ல. அரசியல் தலையீட்டுக் கடன், வாராக்கடன்
பெருக்கம், துணிவில்லாத வங்கிக்கொள்கை மற்றும் நிர்வாகத்திறமையின்மை என்று பல காரணங்களைச்
சொன்னாலும் ஓரியண்டல் வக்கியின் வீழ்ச்சிக்கு இந்த குளோபல் டிரஸ்ட் இணைப்பு கடைசி வைக்கோலாகிப்
போனதை மறுக்க முடியாது.
பதவியேற்ற 2014ல் நாட்டின் வங்கித்துறை எப்படி இருந்தது என்பது பற்றி வெள்ளை
அறிக்கை வெளியிடவேண்டும் என்று பல முறை கேட்டபோதும் பாஜக அரசு அதை மறுத்து விட்டது.
அப்படிப்பட்ட வெள்ளை அறிக்கை வங்கித்துறையின் மீதான பொது மக்களின் நல்லெண்ணத்தை சீர்
குலைத்துவிடும் என பாஜக அரசு தெரிவித்திருந்தது. அதனாலேயே பல சீர்திருத்தக் கொள்கை
முடிவுகள் மூலமாகவே வங்கித்துறை மாற்றங்களைக் கொண்டு வர ஆரம்பித்து. ஆனால் வெள்ளை அறிக்கை
இல்லாமையால் யார் தவறு என்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி குற்றம் சாட்டிக்
கொண்டிருந்ததே தவிர பொது வெளியில் அதற்கான தெளிவு பிறக்கவில்லை. பல கொள்கை முடிவுகள்
எடுக்கப்பட்டு வங்கித்துறைச் சீர்திருத்தங்கள் நடைபெற்ற நிலையில் இப்போதாவது பாஜக அரசு
2014க்கு முன் மற்றும் அதற்குப்பின் இன்றைய நிலை என்ன என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்
என்னும் எதிர்பார்ப்பு வல்லுநர்களிடம் இல்லாமலில்லை.
பொருளாதாரத்தில் கண்ணுக்குத் தெரிகின்ற மற்றும் தெரியாத தாக்கங்கள் என்பவை உண்டு.
இந்த எஸ் வங்கி விவகாரத்தில், அதுவும் முக்கியமாக ரிசர்வ் வங்கி ரு 50,000க்கு மிகாமல்
பணத்தை எடுக்க வேண்டும் என்னும் மாரடோரியம் கொண்டு வந்த சமாச்சாரம் நிச்சயம் இரு வகைத்
தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிப்படையான மற்றும் மறைமுகமான தாக்கங்கள்.
இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் இதரக் கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின்
வெளிப்படையான தாக்கங்கள் என்று பார்த்தால்: அவசரத்தேவைக்கு ரூ 50,000க்கு மேல் எடுக்க
முடியாதது, எஸ் வங்கியில் செக் கொடுத்தவர்களின் நிலை, இந்த பாங்கின் மூலம் மாதாந்திர
ஈ.எம்.ஐ. ஏற்பாடு செய்தவர்களின் நிலை.
ஆனால் இவற்றைவிட கண்ணுக்குத்தெரியாத மறமுகமான தாக்கங்கள் ஆழமானவை.
தனியார் வங்கிகளெல்லாம் நம்பத்தகுந்தவை அல்ல என்றும் அதனாலேயே பொதுத்துறை வங்கிகள்
மிகவும் நம்பிக்கை வாய்ந்தவை என்னும் எண்ணம் உருவாகி இருப்பது. இது நிச்சயம் ஒரு மாயத்தோற்றமே!
ரிசர்வ் வங்கி இந்த மாரட்டோரியத்தை நீக்கும்போது இருக்கிறது வேடிக்கை. வாடிக்கையாளர்கள்
வங்கிக்கு விரையப்போகிறார்கள். Run on the bank என்று சொல்லும் படையெடுப்பு நிகழவிருக்கிறது.
அதை எதிர்பார்த்து ரிசர்வ் வங்கி எஸ் வங்கிக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவ வேண்டியிருக்கும்.
எஸ் வங்கியின் நிர்வாகத்திற்காக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பிரஷாந்த்
குமார் இந்த மாரட்டோரியம் இன்னும் ஓரிரு வாரங்களில் நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லி
இருந்தார். அதே போல் நீக்கப்பட்டும் விட்டது. அப்படியானால் இதை முதலில் விதித்ததற்கான
காரணம் என்ன என்னும் கேள்வியும் எழுகிறது.
31 மார்ச் 2019க்கான ஆண்டறிக்கை எஸ் வங்கியின் நிதிநிலைமை நன்றாக இருக்கிறது
என்று சொல்லப்பட்டிருந்தும் இத்தனை குறுகிய காலத்தில் நிலைமை இவ்வளவு மோசமானது எங்ஙனம்?
ஆடிட்டர்களும் ரிசர்வ் வங்கியின் தணிக்கையும் என்ன செய்துகொண்டிருந்தனர்?
இன்னொரு பரவலான தாக்கம் பொது மக்கள் தங்கள் டெபாசிட்டுகளைத் தனியார் வங்கியிலிருந்து எடுத்துப் பொது வங்கிக்குள் செலுத்தக்கூடும். இது
நிகழ ஆரம்பித்து விட்டதை சில உதாரணங்களின் மூலம் நாமே காணலாம். 2015 முதல் 2019 வரை
பொதுத்துறை வங்கிகளின் டெபாசிட் ரூ 1,65,000 கோடியாக இருக்க
, தனியார் வங்களின் டெபாசிட் ரூ 46,680கோடிதான். ஆனால் கடந்த சில வருடங்களாக
நிலமை மாறி, பொதுத்துறை வங்கிகள் ரூ 14,60,000 கோடி டெபாசிட் திரட்ட, தனியார் வங்கிகள்
திரட்டிய டெபாசிட் தொகை ரூ 18,60,000 கோடிகள். ஆனால் எஸ் வங்கி வீழ்ச்சிக்குப்பிறகு
மீண்டும் டெபாசிட்டுகள் பொதுத்துறை வங்கிகளை நோக்கி நகரும். ஆகவே தனியார் வங்கிகள்
டெபாசிட்டை வரவேற்க அதிக வட்டி கொடுக்க வேண்டும். அப்போது தனியார் வங்கிகள் தரும் கடன்
வட்டி விகிதமும் உயரக்கூடுமல்லவா?
இது போலவே கடன் விநியோகத்திலும் தனியார் வங்கிகள், கடந்த சில வருடங்களில் பொதுத்துறை
வங்கிகளை விட மிக அதிகமான அளவில் கொடுத்தார்கள். 2019-20ல் தனியார் வங்கிகள் கொடுத்த
கடன் தொகையானது அதிகரிக்க, பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன் தொகை ரூ 25,560 கோடி குறைந்திருந்தது.
இனி டெபாசிட்டுகள் பொதுத்துறை வங்கியை நோக்கிப் போனாலும் அவை கடன் கொடுக்க மெத்தனமாக
இருப்பதால் தொழில்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதும் வெளிப்படையாகத் தெரியாத இன்னொரு
தாக்கமாகும்.
இன்று நாமெல்லோரும் எஸ் வங்கியின் வீழ்ச்சி பற்றி விலாவாரியாகப் பேசி விவாதித்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் மேலே சொன்ன மறைமுகமான தாக்கங்கள் நமது நிதித்துறையில் ஏற்படக்கூடும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு எஸ் வங்கியின் மறு சீரமைப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு,
அவை திறமையாக நிர்வகிக்கப்பட்டால்தான் நிதித்துறை சந்திக்கவிருக்கும் சவால்களைச் சமாளிக்க
முடியும். முக்கியமாக எஸ் வங்கி போல வீழக் காத்திருக்கும் அடையாளங்கள் தெரியும் வங்கிகளையும்
இப்போதே அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின்
தணிக்கை முறைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டு, அளிக்கப்பட்ட கடன்கள் திரும்ப வராமல் இருக்கக்கூடிய
சமிக்ஞைகளை உடனுக்குடன் கண்டறிந்து, சம்மந்தப்பட்ட வங்கிகளின் மீது சீர் செய்யும் நடவடிக்கைகளுக்கு
வழி செய்ய வேண்டும்.
(சக்திகாந்த தாஸ்)
இந்த வருட பட்ஜெட்சமயத்தில்
நமது தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்,
‘‘பொதுத்துறைகளில் இடப்படும் ஒரு ரூபாய்
மூலதனம் அரசுக்கு 23 பைசா நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதே ஒரு ரூபாய் மூலதனம்
தனியார் வங்கிகளில் போடப்பட்டால் அது 9.6 பைசா லாபம் தருகிறது
’’ என்று சொன்னதை நினைத்துப் பார்ப்போம்.
அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையினைக் கேள்விக்குரியதாக ஆக்கிவிட்ட எஸ் வங்கி மற்றும்
இதர வீழ்ச்சிகளை எப்படி நிகழாமல் காக்கப்போகிறோம் என்பதில் முழு முனைப்போடு அரசும்
ரிசர்வ் வங்கியும் உழைக்க வேண்டும். முக்கியமாக இன்று பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியிருக்கும்
அரசு, நிதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வண்ணம் செயல்பட வேண்டியது
முக்கியம். பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர எஸ் வங்கிக்கு மூலதனம் அளிக்க முன் வந்திருக்குப்பவை
அனைத்துமே தனியார் வங்கிகள்தாம் என்பது, ரிசர்வ் வங்கி அமல்படுத்தியிருக்கும் மறு சீரமைப்புத்திட்டம்
சரியான நோக்கில் செயல்படுத்த முடியக் கூடியதுதான் என்னும் நம்பிக்கையைத் தருகிறது.
மேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்,
எந்த நிலையிலும் டெபாசிட்டர்களின் பணத்துக்கு
ஆபத்தில்லை. அதில் சிக்கல் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் ரிசர்வ் வங்கி முன் வந்து
பணத்தைத் தந்து உதவும்
என்று ஆணித்தரமாகத் தெரியப்படுத்தியிருப்பது, இந்த அரசாங்கமும்
ரிசர்வ் வங்கியும் நிதித்துறை மேலாண்மையை
ச் சரியான முறையில் நடத்திச் செல்லுகிறார்கள்
என்னும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றைக் கண்டறிந்து சரிசெய்யும்
முயற்சிகள் பாராட்டத்தக்க வகையில் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


1969ல் இருந்து மூடப்பட்ட தனியார் வங்கிகள்Leave a Reply