மூலம் : கௌதம்
தேசிராஜூ, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ், பெங்களூரு
தமிழில்: ஜனனி ரமேஷ்
ஸ்டெர்லைட்
ஆலையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்பட்ட நீண்ட காலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 2018ல் அரசும் நீதிமன்றமும் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டன. இதன் பிறகே இந்தியாவிலுள்ள பெரும்பான்மையோர் தாமிரம் பற்றிய செய்தியைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பொது சுகாதாரம் குறித்த அச்சம் ஆகியவை
வேதியல் துறையைப் போலவே பழமையானது. அரசாங்கங்கள் மற்றும் நீதித் துறை அமைப்புகளுக்கு இடையே எப்போதுமே ஒரு நிச்சயமற்ற உறவுதான். தொழிற்துறையைப் பொருத்தவரையோ இந்த உறவு, வாழ்க்கைத் தரம் மற்றும் இலாப அளவு ஆகிய இரண்டுக்கும் இடையே, சாதக பாதகமின்றி நடுத்தரமாக எச்சரிக்கை உணர்வுடன் கத்திமேல் நடப்பது போலத்தான். இருப்பினும் இதற்கான தீர்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஓரளவுக்குக் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு, செர்னோபில், லவ் கனால், போபால் விஷ வாயுக் கசிவுபோல் மிகப் பெரிய பேரழிவுகள் தற்போதெல்லாம் நடைபெறுவதில்லை.
ஸ்டெர்லைட் எப்படி வேறுபடுகிறது? அது ஏன் மூடப்பட்டது? இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஏன் இன்னும் மூடியே இருக்கிறது? மாசு, தொழிற்சாலை மூடப்படுவது மற்றும் மீண்டும் திறக்க இயலாதது ஆகியவற்றுக்கு யார் காரணம்? அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களே காரணமா அல்லது வேறு யாரேனுமா? இவைபோன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன.
அடிப்படை அறிவியலிலிருந்து புவி அரசியல் தொடங்குவதால் முதலில் வேதியலுக்குச் செல்வோம். 90க்கும் அதிகமான இயற்கைத் தனிமங்களில் தாமிரம் முதன்மையானதாகும். 5000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் சுத்தமாகத் தனிமைப்படுத்தப்பட்ட இந்த உலோகம் ஏனைய தனிமங்களைப் போலவே வித்தியாசமானதாகும். வேதியலாளர்கள் சேர்மங்களை உருவாக்குவது போலத் தனிமங்களை உருவாக்க முடியாது. பூமியின் மேலடுக்கிலுள்ள தனிமமும், வளிமண்டலமும் மட்டுமே நமக்கு உள்ளன. ஆக்ஸிஜன், சிலிகான், இரும்பு ஆகியவை ஏராளமாக இருக்கின்றன. தாமிரம் போன்றவை மிக அரிதாகக் கிடைக்கின்றன. அவையும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இயற்கையாக தாமிரமாகக் கிடைக்காத இந்த உலோகத்தின் தாது, சிலி, பெரு, அமெரிக்கா, இந்தோனீஷியா, ஜாம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் ஃபிலிபைன்ஸ் ஆகிய சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. அங்கும் இங்குமாகச் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது சரிதானே?
பிரச்சினையின் மையப் புள்ளியே இதுதான். அதிக அளவு மின் கடத்துத் திறன், அதிக வெப்பக் கடத்துத் திறன், அதிக வளை மற்றும் வடமாக நீளும் திறன், நடுத்தர விலை (வெள்ளியின் பண்புகள் தாமிரத்தைப் போலவே நல்லதுதான் என்றாலும் அதன் விலை பொதுவான பயன்பாட்டுக்குத் தடையாக உள்ளது) ஆகியவை தாமிரத்தின் சிறப்பியல்புகள். இந்தப் பண்புகள் காரணமாக அதிக அளவிலான மின் பகிர்மானத்துக்குத் தேவையான கம்பி வடங்கள் மற்றும் மின் முனைகள் தயாரிப்பில் தாமிரம் மிக அத்தியாவசியமான உலோகமாகிறது. எளிதாகச் சொல்வதெனில் உலகளவில் தாமிரம் உடனடியாக எளிதாகக் கிடைக்காவிட்டால் இன்றைய நவீன வாழ்க்கை சாத்தியமில்லை.
தாமிரத்தின்
முக்கிய தாதுப் பொருளான தாமிர பைரேட்டுகள் இந்தியாவில் அதிக அளவில் கிடைப்பதில்லை.
ராஜஸ்தானிலிருந்து ஜார்கண்ட் செல்லும் வழியில் கிடைக்கும் மிகக் குறைந்த அளவும் (உலகின்
மொத்த தாமிரத் தாதுவில் 2% மட்டுமே) தரம் குறைந்ததாகும். ஸ்டெர்லைட் போன்ற தாமிரம் பிரித்தெடுக்கும் நிறுவனங்கள்,
இந்தத் தாதுப் பொருளை மேற்கண்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, சுத்தமான உலோகத்தை
தூத்துக்குடியில் உற்பத்தி செய்கின்றன. இது மொத்தத் உள்நாட்டுத் தேவையில் சுமார்
35% ஆகும். மின்கலங்களில் பயன்படுத்தப்படும் எதிர்மின் முனைகள் (கேத்தோடுகள்) தயாரிப்புக்காகச்
சீனாவுக்குக் கணிசமான அளவில் தாமிர உலோகத்தை இந்தியா ஏற்றுமதி செய்தும் வந்தது. தாமிரத்தின்
இறக்குமதிகளைச் சீனா நம்பியிருக்க, அதை இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு
நாட்டின் முக்கிய உலோகத்தை இழக்கச் செய்வது பண்டைய போர் முறையின் ஒர் அங்கமாகும். தங்கத்துக்கும்,
வெள்ளிக்கும் போரிட்டு சாம்ராஜ்ஜியங்கள் உருவாகி உள்ளன அல்லது சரிந்துள்ளன. அறிவியல்
வளரும் போது அத்துடன் இணைந்து தொழில்நுட்பமும் வளரவே, மற்ற தனிமங்களுக்கான நமது விருப்புகளும்
அதிகரிக்கத் தொடங்கின. உதாரணத்துக்கு பிளாட்டினம், பலோடியம், குரோமியம், நியோடைமியம்,
யுரேனியம், இண்டியம் போன்ற தனிமங்களும் இன்றைய அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படுகின்றன.
மேற்கண்ட
தனிமங்களைக் கொண்ட நாடுகள் அவை இல்லாத நாடுகள் மீது தங்கள் அசாதாரணச் செல்வாக்கைப்
பயன்படுத்த முடியும். இதற்குக் காரணம், தனிமங்களை
உற்பத்தி செய்ய முடியாது, அவற்றைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கத்தான் முடியும். உதாரணத்துக்கு, தென் ஆப்பிரிக்க நிற வெறி அரசாங்கம்
நீண்ட காலம் நீடித்ததற்குக் காரணம், அமெரிக்கச் சந்தையின் மிக முக்கியப் பொருளான எஃகு
மீது பூசப்படும் குரோமியம் அதன் கைவசம் ஏராளமாக இருந்ததுதான். உயர் காந்தப் பாய்வு
அல்லது பெருக்குகளில் முக்கியப் பொருளாக விளங்கும் நியோடைமியம் என்னும்
உலோகம் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அளவுக்குச் சீனாவில் இன்றைக்குக்
குவிந்திருப்பதால் அதன் உலகச் சந்தை விலையை நினைத்தபடி சீனாவால் நிர்ணயிக்க முடியும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்…
இதனைக்
கருத்தில் கொண்டு தாமிரத் தேவைகள் தொடர்பான இந்தியாவின் இழப்பு காரணமாக எந்த நாடு அதிக
அளவில் பயனடையும் என்பதை ஆய்வு செய்வது முக்கியமாகும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தாமிரச் சுத்திகரிப்பு
ஆலைகள் உள்ளன. சில ஆலைகள் உள்ளூர்த் தாதுக்களைப் பயன்படுத்துகின்றன. சில ஆலைகள் தாதுக்களை
இறக்குமதி செய்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம்
பிரிவில் வருகிறது. மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் (தாமிர பைரேட் தாதுவின் சாம்பலாக்கல் மற்றும் உருக்கலின்
போது வெளியேறும் நச்சுப் பொருள் சல்ஃபர் டை ஆக்சைட்) நீண்ட காலமாகவே கண்டுகொள்ளப்படாமலும்,
புறக்கணிக்கப்பட்டும், மீறப்பட்டும் வந்துள்ளது. இதற்கு நீண்ட நெடிய வரலாறும் உள்ளது. இந்தப் பிரச்சினை போதாதென்று திராவிட இனவாதம், பிராமணத்
துவேஷம், கிறித்துவ மதமாற்றப் பிரசாரம், இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகியவற்றுடன் எப்போதுமே
பரபரப்புடன் கொந்தளிக்கும் அரசியல் சூழலுள்ள மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் ஸ்டெர்லைட்
ஆலை நிறுவப்பட்டுள்ளது. இவை காரணமாக அதிகார பலத்துடன் சர்வ வல்லமை படைத்தவர்களால் நினைத்த
நேரத்தில் பிரச்சினையைக் கொந்தளிக்க வைக்கவும் முடியும், உடனடியாக நிறுத்தவும் முடியும்.
இவை
அனைத்துக்கும் மேலாக இடதுசாரிகளின் வலுவான தடம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின்
பிராந்திய அடிப்படையிலான போக்கு ஆகியவை இம்மாநிலத்தில் ஆழமாக வேருன்றி உள்ளன. அடிப்படைப்
பிரச்சினையைத் தூண்டிய நாட்டுக்கு,
இந்தியத் தொழிலாளர் மற்றும் தொழில்துறைத் தகராறுகள் மத்திய மாநில
அரசுகளின் பொதுப் பட்டியலில் வரும் என்ற விவரம் என்பது கண்டிப்பாகத் தெரியும். மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தில்லி அரசுடன்
மோதல் போக்கையும், மையத்திலிருந்து விலகும்
தன்மையைம் கொண்ட ஒரு மாநில அரசைக் கையாளவது வெகு சுலபம் என்பதையும் அறிந்தே இருந்தனர்.
எனவேதான் தமிழகத்திலுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தது, புவிசார் மூலஉத்தி மேதாவித்தனம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
விவரங்களைக்
கூறிவிட்டேன். இதற்கு மேலும் எதையேனும் கூறினால்
அது ஊகங்களுக்கும், அனுமானங்களுக்குமே இடமளிக்கும். எனவே நான் வைத்த புள்ளிகளைக் கோலமாக்கிப்
புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரு ஆண்டுகளுக்குள் மரியாதைக்குரிய
ஏற்றுமதியாளர் ஒருவரிடமிருந்து இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்யத் தொடங்கி இருக்கிறது
(இதன் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் ரூ 40,000 கோடிகள்). இதே காலகட்டத்தில்
சீனாவுக்கான பாகிஸ்தானின் தாமிர ஏற்றுமதிகள்
400% அதிகரித்துள்ளன (தாமிர பைரேட் தாது பலுசிஸ்தானில் ஏராளமாக உள்ளது). இதன் மூலம்
சீனாவின் தேவைகளைப் பாகிஸ்தான் தொடர்ந்து நிறைவு செய்து வருகிறது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள்
அல்லது மதக் குழுக்கள் ஆகியோருக்கு லஞ்சம் வழங்க பெரிய ஆற்றல்மிகு நாட்டை உலகின் எங்கு
வேண்டுமானாலும் தேடுங்கள், உங்களுக்கான விடை கிடைக்கும்.
எந்த
நாடாக இருப்பினும் அந்நாட்டுத் தலைவர்கள் வேதியல் தனிமம் மற்றும் அதன் சேர்மங்கள் ஆகியவற்றுக்கு
இடையேயுள்ள வேறுபாட்டைத் தங்கள் விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், ஆலோசனை
பெறுவதிலும் தவறுவதில்லை. ஆனால் இந்தியாவிலுள்ள
அறிவியல் ஆலோசகர்களால் இதனைச் செய்ய முடிவதில்லை. ஆனாலும், நிறைவாக, அரசியல், பொருளாதாரம்
மற்றும் மதத்தின் சட்டங்களை விட வேதியல் சட்டங்கள் உயர்வானவை.
ஆங்கில மூலம் இங்கே.