Posted on Leave a comment

20 லட்சம் கோடி – பொருளாதார மாற்றக் கணம் | ஜெயராமன் ரகுநாதன்

கொரோனாவின் பாதிப்பால் அடி வாங்கிய இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக மோடி அரசாங்கம் அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி ஊக்கத் திட்டங்களைப் புரிந்தும் புரியாமலும் புகழும் அல்லது விமர்சிக்கும் கோஷ்டிகளுக்கு 20 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியாது என்பதுதான் உண்மை!

பிரதமரின் மே 12ம் தேதி உரையில் தெரிவிக்கப்பட்ட ஐந்து அம்சங்களையும் உள்ளடக்கிய திட்டங்களாக நமது நிதி அமைச்சர் ஐந்து நாட்களில் திட்டங்களை அறிவித்தார்.

“இந்தத்திட்டங்களில் ஒன்றுமே இல்லை. வேறு புதிய திட்டங்கள் அறிவித்தாகவேண்டும் என்று முழக்கமிடும் ப. சிதம்பரத்தின் குரலுக்கும்,  “இது போன்ற நாடு தழுவிய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் உலகத்திலேயே எந்த நாட்டிலும் அறிவிக்கப் படவில்லை என்று எதிர்க்குரல் எழுப்பும் பாஜக புள்ளிகளின் பிரதிவாத்திற்கு நடுவேதான் உண்மை நிலைமை இருக்கிறது.

பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் அபியான் என்னும் சிக்கலான பெயர் கொண்ட, கோவிட் – 19 தாக்கத்தின் பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருப்பதைக் கவனிக்கலாம்:

  • மே 12ம் தேதி பிரதமரின் உரைக்கு முன்பே அறிவிக்கப்பட்ட முயற்சிகள்.

 

  • கடந்த இரண்டு மாதங்களாக ரிசர்வ் வங்கி அறிவித்து வரும் Liquidity (நிதி இளக்க என்றால் ஏதோ பிரம்மசவச மாத்திரை விளம்பரம் போல இருப்பதால் இனி Liquidity என்றே சொல்வோம்) அறிவிப்புகள்.

 

மற்றும்

 

  • நிதி அமைச்சர் அறிவித்த ஐந்து பகுதி திட்ட அறிவிப்புகள்.

அரசின் கணக்குப்படி இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 20.97 லட்சம் கோடிகள் (கீழே காண்க)

 

பொருளாதாரத்திட்டம் மதிப்பு ரூ கோடி
மே 12க்கு முன் அறிவித்த திட்டங்கள் 1, 92, 800
ரிசர்வ் வங்கி அறிவித்தவை 8, 01, 603
நிதி மந்திரி அறிவித்தவை – 1 (MSME + NBFC + Power) 5, 94, 550
நிதி மந்திரி அறிவித்தவை – 2 (Migrants, KCC, Nabard, MUDRA etc) 3, 10, 000
நிதி மந்திரி அறிவித்தவை – 3 (Agriculture) 1, 50, 000
நிதி மந்திரி அறிவித்தவை – 4, 5 48, 100
மொத்த மதிப்பு 20, 97, 053

பட விளக்கமாகப் பார்த்தால் இப்படி இருக்கிறது.

இவ்வளவு பணத்துக்கு இந்திய அரசு எங்கே போகும்? பல திட்டங்கள் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் என்றால் வங்கிகள் கடனாகக் கொடுப்பது என்னுடைய டெபாசிட் பணத்தையா? என்றெல்லாம் கவலையோடு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உள்ளூர்ப் பொருளாதார மேதைகள் 20 லட்சம் கோடிகள நிறைந்த சூட்கேஸைக் காண்பித்தால்தான் நம்புவோம் என்னும் ரீதியில் இத்திட்டங்களை விமரிசித்து வருகின்றனர்.

மேற்கூறிய திட்டங்களின் மதிப்பு என்றால் இந்தத் தொகை அரசால் கொடுக்கப்படப் போகின்றது என்று அர்த்தம் செய்துகொள்வது மயில்சாமித் தனமானது, சரி, முழுக்க முழுக்கத் தவறானது. 

அரசால் நேரடியாகப் பணம் கொடுக்கப்படவேண்டிய திட்டங்கள் என்று பார்த்தால் அவை மிக மிகக் குறைவானவையே. அதே போல, இதனால் ஏற்படக்கூடிய நிதிப் பற்றாக்குறையுமே கணிசமானதல்ல. ஏன்றால் பல திட்டங்கள் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட வேண்டிய கடன் மற்றும் உத்தரவாதங்களே என்பதால், நேரடியாக அரசால் பகிரப்படவேண்டிய நிதி அல்ல. அதேபோல இன்னும் சில திட்டங்கள், முக்கியமாக விவசாயத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள், கொஞ்சம் கொஞ்சமாகப் பல காலத்திற்கு நீட்டிக்கப்படப் போகும் என்பதால், நடப்பு ஆண்டு நிதிப் பற்றாக்குறைக்கு அவை எந்த விதத்திலும் காரணமாகி விடாது. சில விற்பன்னர்களின் கணக்குப்படி அரசாங்கமே நேரடியாகச் செலவழிக்க வேண்டிய நிதி இந்த 20 லட்சம் கோடித் திட்டங்களில் மொத்தமே ரூ 2.5 லட்சம் கோடியைத் தாண்டாது என்கின்றனர். எனவே இந்த மெகா திட்டங்களின் விலையானது, இந்த வருடம் 10%க்குள்தான் இருக்கும். அதுவும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கு மிகாது என்பது அவர்களின் கணிப்பு.

20 லட்சம் கோடி திட்டங்களின் இந்த வருடச் செலவு (Fiscal impact) எப்படி இருக்கும் என்பதன் விவரங்களைக் கீழே காணலாம்.

 

திட்டங்கள் அறிவிக்கப்பட்ட மதிப்பு அரசின் நேரடி செலவு
மே 12க்கு முன் அறிவித்த திட்டங்கள் 1, 92, 800 95, 800
ரிசர்வ் வங்கி அறிவித்தவை 8, 01, 603
நிதி மந்திரி அறிவித்தவை – 1 (MSME + NBFC + Power) 5, 94, 550 55, 000
நிதி மந்திரி அறிவித்தவை – 2 (Migrants, KCC, Nabard, MUDRA etc) 3, 10, 000 14, 750
நிதி மந்திரி அறிவித்தவை – 3 (Agriculture) 1, 50, 000 30, 000
நிதி மந்திரி அறிவித்தவை – 4, 5 48, 100 48, 100
மொத்த மதிப்பு 20, 97, 053 2, 43, 650

மேலே சொன்ன செலவுத்தொகை கூட அதிகபட்ச எதிர்பார்ப்பே தவிர உண்மையில் இதற்கும் குறைவாகத்தான் இருக்கும் என்கின்றனர். பாரத வங்கியின் ஆய்வுப் பிரிவு வெளியிட்ட ஒரு கணக்கு, இந்த TDS/TCS பிடித்தங்கள் குறைப்பின் மூலம் ரூ 25,000 கோடிவரை செலவாகும் என்கிறது. நிதி அமைச்சரிடம் “இந்த மாபெரும் திட்ட ஒதுக்கீடால் நிதி ஆண்டு 2021ல் அரசாங்கத்து ஏற்படப்போகும் தாக்கம் எவ்வளவாக இருக்கும்?” என்று கேட்கப்பட்டபோது அவர் எந்த எண்ணிக்கையையும் சொல்லவில்லை. ஆனால் “எங்களுடைய அரசு மிகப் பொறுப்பாகத்தான் நிதி நிலைமையைக் கையாண்டு வருகிறது. நாங்கள் பொறுப்பின்றி நிதியை வாரி வழங்கிவிடவில்லை” என்றே பதில் அளித்திருக்கிறார்.

இந்தத் திட்டங்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சில திட்டங்கள் கொரோனாவின் பாதிப்பை மட்டுப்படுத்தி இழந்த பொருளாதாரத்தைச் சீர் செய்யவும், வேறு பல திட்டங்கள் கொரோனாவையும் தாண்டிய காலகட்டங்களில் பொருளாதாரத்தை சீர்செய்யக்கூடிய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். 

ஆனால் திட்டங்களை உற்று நோக்கினால், இவை அறிவிக்கப்பட்ட காலகட்டத்தின் தாக்கத்தை உள்வாங்கிக்கொள்ளுபவையா என்னும் கேள்வியை சிலர் எழுப்பி உள்ளனர். கொரோனாவுக்கு முன்னரே ஒன்றிரண்டு வருடங்களாகவே இந்தியப் பொருளாதாரம் சீரான நிலைமையில் இருக்கவில்லை. முக்கியமாக நிதித்துறை பல சங்கடங்களை சந்தித்து தள்ளாடிக் கொண்டிருந்தது. இப்படி இருக்கும்போது இந்த 20 லட்சம் கோடி திட்டங்களில் பெரும்பான்மையானவை நிதித்துறையின் மூலமே செயல்படுத்தப்பட வேண்டியவையாக இருப்பது கவலை அளிக்கிறது. இதனால் சில திட்டங்களை அரசாங்கமே நேரடியாக முனைப்படுத்தியிருக்க வேண்டும் என்பது சிலரின் வாதம். உதாரணத்திற்கு, விமானப் போகுவரத்துத்துறை கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்தத் துறைக்கு அரசாங்கம் நேரடியாக உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கலாம். அது மற்ற திட்டங்களின் செயல்பாட்டுக்கும் உதவியிருக்கும். அதே போல ஏழ்மை நிலைக்குக் கீழே இருக்கும் மக்களுக்கான எல்லாத் திட்டங்களையுமே அரசு தாமாகவே செயல்படுத்தியிருக்க வேண்டும் என்பதும் ஒரு வாதம்.

Demand எனப்படும் தேவை அதிகரிக்க வேண்டியது பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. அதற்குத் தனிப்பட்ட மக்களின் செலவுத்தகுதி மிக முக்கியம். இதைச் செயல்படுத்தக்கூடிய நிலைமையில் மாநில அரசுகள் இருக்கின்றன. மாநிலங்களின் கடன் பெறும் தகுதி மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3% லிருந்து 5% ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும் சில நிதிப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களால் அதிகம் கடன் பெற முடியாது – வட்டியின் பாரம் அவர்களை அழுத்திச் சாய்த்துவிடும். அது மட்டுமல்ல. கடன் தகுதியானது 3%லிருந்து எல்லோருக்கும் 3.5% உயர்வு உண்டு. ஆனால் 3.5%லிருந்து 4.5%க்கு உயர வேண்டுமானால் சில சட்ட திட்ட மாறுதல்களை அமல்படுத்தியிருக்க வேண்டும். அதே போல 4.5%லிருந்து 5% ஆக உயர, அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் நான்கில் மூன்று மாற்றங்களையாவது செய்து முடித்திருக்க வேண்டும். அதாவது இந்தக் கடன் பெறும் தகுதி, மாநிலங்களின் செயல்பாட்டின் வெற்றியைச் சார்ந்தே இருக்கும்.

இது போல கடன் தகுதியை அதிகரிப்பதற்கு பதிலாக MGNREGA போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு மாநிலங்கள் தரவேண்டிய பங்கைக் குறைத்திருக்கலாம் என்பதும் ஒரு அபிப்பிராயம். இதேபோல வேறு சில மாற்றுக் கருத்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.

அத்தியாவசியப் பொருட்களின் சட்டம் (Essential Commodities Act) திருத்தப்படுவதற்குப் பதிலாக ஒழித்துக் கட்டப்பட்டிருக்கலாம். பாதுகாப்புத் துறையில் வெளி நாட்டவரின் பங்களிப்பு 49%லிருந்து 74%ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், அனுமதி முடிவுகள் எடுப்பதில் இருக்கும் சிவப்பு நாடா தாமதங்களைச் சரி செய்யாமல் பயனளிக்காது.

சமீப காலங்களில் நாம் முன்பு சொன்ன liquidity சிக்கல்கள் நிறைந்திருந்ததை அறிவோம். அதற்கான முழுமுதற் காரணம், வங்கிகளின் வாராக் கடன்களின் அளவு விஷம் போல ஏறவே அவை தத்தம் கஜானாக்களைத் திண்டுக்கல் பூட்டு போட்டு மூடிக்கொண்டு விட்டதுதான். இதனால் வர்த்தகம் Liquidity இல்லாமல் தத்தளித்தது. நானும் நீங்களும் கார் லோனோ அல்லது கிரெடிட் கார்டு லோனோ வாங்க சிரமப்படுவது போலவே சிறு குறு தொழில்களும் அவரவர் லாப விகிதம் குறைந்து போனதால் கடன்களைத் திருப்புவதில் சிக்கல் ஏற்பட்டன. வங்கிகள் தம் பணப்பெட்டிகளை, குச்சியால் தொட்ட நத்தையைப் போல இன்னமும் சுருக்கிக்கொண்டு விட்டன.

இந்தத் திட்டத்தில் வங்கிகளின் கடன்களுக்கு அரசாங்கமே உத்தரவாதம் கொடுத்திருப்பது இந்தச் சிக்கலை ஓரளவுக்கு சீர் செய்யும். வங்கிகளும் ‘எனக்கென்ன போச்சு! நீ திருப்பித் தராவிட்டால் நான் அரசிடமிருந்து கறந்து கொள்கிறேன்’ என்று மேலும் கடன் தந்தால் liquidity பெருகும். ஆனால் சிறுகுறு தொழில்கள் தமது வியாபாரம் நல்ல லாபம் தருமா என்னும் சந்தேகத்தில் சிக்கிக்கொண்டு விட்டதால் கடன் வாங்க முன் வருவார்களா? தான் செலுத்தும் வட்டியைவிட தன் வியாபாரத்தில் அதிக லாபம் வரும் என்னும் நம்பிக்கை இருந்தால்தானே வியாபாரியோ தொழிலதிபரோ கடன் வாங்குவார்கள்? அந்த நம்பிக்கை தடுமாறியுள்ள இந்தக் காலகட்டத்தில் திட்டத்தின் வெற்றி சந்தேகத்துக்கு உரியதாகி விடுகிறது. ஆனாலும் இந்தத் திட்டத்தில் சாதகங்களும் இல்லாமலில்லை.

ஜனவரி 2020 வரை சிறுகுறு தொழில்கள் பெற்றுக்கொண்ட கடன் தொகை கிட்டத்தட்ட ரூ 17.75 லட்சம் கோடிகள். அதில் 12.5% வரை வாராக் கடன்களாகி விட்டன. மத்திம அளவு நிறுவனங்களின் வாராக்கடன் விகிதம் 18%. பெரிய நிறுவனங்கள் பெற்ற கடன் தொகை ரூ 46.7 லட்சம் கோடிகள், அவற்றில் வாராக்கடன் 19.7%. அதாவது நிறுவனத்தின் அளவு பெரிதாக ஆக வாராக்கடனும் அதிகமாகிறது!

நிலைமை இப்படியிருக்க வங்கிகள் கடன் தருவதற்குச் சிணுங்குவது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இப்போது ரூ 3 லட்சம் கோடிவரை சிறுகுறு தொழில்களுக்குக் கடன் வழங்கி, அவை ஒரு வேளை வாராக்கடன் ஆனாலும், அதை அரசாங்கமே திருப்பிக் கொடுத்துவிடும் என்னும் உத்தரவாதம் தரப்பட்டிருக்கிறது. வங்கிகள் வேறு வழி இல்லாமல் இந்த நிறுவனங்களுக்குப் புதிய கடன் தந்து, பழைய கடனை அடைக்கச் சொல்லிவிட்டு உட்கார்ந்துகொள்ளும். இந்தப் புதிய கடன் வராமல் போனாலும் வங்கிகளுக்குக் கவலை இல்லை. ஏனென்றால் இவைதான் அரசால் உத்தரவாதம் தரப்பட்ட கடனாயிற்றே!

‘புதிய கடன்கள் அளிக்கப்படும். அவையும் நிறுவனங்களுக்குள் சென்று மறையும். கடைசியில் முழுப்பொறுப்பும் அரசின் மீதுதான் விழும்’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது ஒருதலைப்பட்சமான வாதம். பல நிறுவனங்கள் கிடைக்கும் நிதியைக்கொண்டு தங்கள் செயல்பாட்டை உண்மையாகவே நிலைநிறுத்தி லாபம் பார்த்துக் கடனையும் திருப்பிவிடும் சாதகம் உண்டு என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், இந்தத் திட்டம் சுய லாபத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடிய அபாயங்களும் உண்டுதான். இன்றைய நிலவரப்படி அதே 12.5% வாராக்கடன் ஆனாலும் அரசு கிட்டத்தட்ட ரூ 4000 கோடிகள் வங்கிகளுக்குத் தர வேண்டியிருக்கும். அது மொத்த உள்நாட்டுத்தொழில் உற்பத்தியில் 0.02% விகிதம்தான். இதன் மூலம் பயன்பெற்று பொருளாதாரச் சுழற்சியை ஊக்குவிக்கும் கிரியாவாக இந்தத் திட்டம் செயல்படும் என்றே நம்பலாம்..

அரசாங்கம் இன்னும் வீரியமான முயற்சிகளை எடுத்திருக்கலாம் என்னும் சில கருத்துக்களும் உலவுகின்றன. இங்கே வீரியம் என்று நான் சொல்வது, பொருளாதாரச் சுழற்சியைத் தூண்டிவிடும் முயற்சிகள். உதாரணத்திற்கு அரசு பல திட்டங்களைத் தொடங்கலாம். அவற்றைச் சிறு குறு பெரிய தனியார் நிறுவனங்களுக்கு அளித்து அதன் மூலம் ஏற்படும் வேலை வாய்ப்புக்கு ஏற்ப வரிச் சலுகைகள் அளிக்கலாம். இதன் மூலம் மின்சாரம், கட்டுமானம், கரி, இரும்பு போன்ற பல தொழில்களில் விரிவாக்கம் நடந்திருக்கும். அந்த நிறுவனங்களுக்கு பணியாளர்களின் சம்பளத்தைத் தருவதற்காக அரசே நேரடி நிதி உதவி செய்திருக்கலாம். நடுத்தர வர்க்கத்திற்கு வரி விடுமுறை (ஒன்றிரண்டு ஆண்டுகள்) அறிவித்திருக்கலாம். பிரதம மந்திரியின் கிசான் திட்டங்களுக்கு இன்னும் அதிகம் ஒதுக்கியிருக்கலாம். இவையெல்லாம் கடைக்கோடி மனிதனின் கையில் பணப் புழக்கத்தை அதிகரித்து, நுகர்வோர் தேவையை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தின் சுழற்சிக்கு உதவியிருக்கும். கடைசி 25% அல்லது 30% மக்களுக்கு அளிக்கப்பட்ட நேரடிப் பண உதவியையும் அதிகமாக்கி இருக்கலாம். இச்செய்கைகளின் மூலம் வேலை வாய்ப்பு, பணப்புழக்கம், அதிகச்செலவு எனவே அதிக உற்பத்தி என்னும் பொருளாதார ஓட்டம் வேகமாகி இருக்கும்.

அரசு அறிவித்த சில திட்டங்கள் நீண்ட நாள் செயல்பாட்டுத் தொடர்புடையவை. அடிப்படைக் கட்டுமானத்தின் மாற்றங்களைக் கோருபவை. பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த கொள்கை, கம்பெனி சட்டங்களில் இருக்கும் குற்றம் குறித்த ஷரத்துக்களில் மாற்றம் என்று தொழில் துறையின் சட்டச் சுற்றுச்சூழல் (Business Environment) குறித்தவை.

மத்திய அரசும் பல மாநில அரசாங்கங்களும் கொரோனாவை முன்னிட்டு பலப்பல தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டனர். இவை பற்றி விளக்க தனி கட்டுரையே தேவை. இந்தத் திருத்தங்களினால் தொழில் செய்வது பல வகைகளில் சுலபமாக்கப்பட்டிருப்பது கண்கூடு. 

அதே போல மின்சாரத்திலும் மாநில அரசுகள் இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும். ஸ்மார்ட் மீட்டரிங், சலுகைகளை நேரடியாகப் பயனீட்டாளர்களுக்குச் செலுத்துவது, மின்சார விநியோகத்தில் தனியார்ப் பங்கீடு என மாறுதல்கள் வந்தாக வேண்டும்.

கொரோனா நமது தினப்படி வாழ்க்கையையே கேள்விக்குரியதாக்கி அரசாங்கங்களின் செயல்பாட்டை ஒரு உலுக்கு உலுக்கி இருக்கிறது. பரந்த பாரத தேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்னும் ஒரு குழு மிகப்பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருக்க, அவர்களின் வாழ்வாதாரத்தை முழுக்க முழுக்க கேள்விக்குரியதாக்கி விட்டது இந்த கொரோனா. ‘ஒரு தேசம் ஒரு ரேஷன் அட்டை என்பது இவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். 

எல்லாத் திட்டங்களையும் ஒரு சேரப் பார்த்தோமானால், இந்தச் சீர்திருத்தங்கள் – விவசாயம், சுரங்கம், சுலபமாக்கப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடு, பாதுகாப்புத்துறை உள்ளிட்டவற்றில் அதிக தனியார் மயமாக்கல் – எல்லாமே நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்கக்  கூடியவைதாம். ஆனால் இவை பயன் தருவதற்குச் சில காலம் ஆகும். 

இன்னொன்று என்னவென்றால், இந்த திட்டங்கள் எல்லாமே உற்பத்தியைப் பெருக்கக்கூடிய திட்டங்கள். விற்பன்னர்களின் கவலை, தேவையை அதிகரிக்கக்கூடிய திட்டங்கள் இன்னும் அதிகம் வேண்டும் என்பதே! உதாரணத்திற்கு, சிறு குறு தொழில்களுக்கான வட்டிப்பண உதவி (Interest subvebntion), கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான முதலீட்டைப் பெறுவதற்கான பொதுத்துறை கடன் பத்திரங்கள் வெளியீடு (PSU Bonds), பொதுத்துறை வங்கிகளுக்கான முதலீட்டு உதவி (Recapitalisation of PSBs), 75 பில்லியன் டாலர் வரி வெளிநாட்டுக்கடன் பெறுதல், ரிசர்வ் வங்கியின் ரிபோ விகிதக்குறைப்பு (75 bps வரை) போன்ற முயற்சிகள், தேவையைப் பெருக்கி, பணப்புழக்கத்தை அதிகரித்து, நுகர்தலை ஊக்குவிக்கும். இதுவே பொருளாதாரச் சக்கரத்தை இன்னும் வேகமாகச் சுழல வைக்கும்.

இந்த கொரோனா என்னும் அரக்கன் நம்மை ஒட்டுமொத்தமாக எதிர்த்து ஒரு மிகப்பெரும் சவாலை மனிகுலத்திற்கு ஏற்படுத்தி இருக்கிறான். இந்த பிரபஞ்சமே இதுநாள் வரை சவால்களை எதிர்கொண்டு மாறி மாறித்தான் முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. அதே போல கொரோனா சவாலையும் நேரெதிரே மோதி, மாற்றங்களினாலும் சமாளிப்புகளினாலும் வெற்றி கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால் கொரோனா நமக்குப் பெரிய வாய்ப்பைத் தந்திருக்கிறது. அந்த வாய்ப்பை மத்திய அரசும் சரியாகவே பயன்படுத்தி திட்டங்கள் தீட்டியிருக்கிறது. 

அடுத்த வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் 1.2% என்ற அளவில்தான் வளரும் என்று WESP ரிப்பொர்ட் சொல்லுகிறது. அமெரிக்கா மைனஸ் 4.1%, ஜப்பான் மைனஸ் 4.2%, யூ கே மைனஸ் 5.4% என்று சுருங்கப் போகும் சூழ்நிலையில் இந்தியாதான் இரண்டாவது வேகமாக வளரும் நாடாக விளங்கும். சீனா முதலிடத்தில் இருக்க, வேறெந்த நாடுமே வளராமல் சுருங்கப் போவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

உலகப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் குழுவின் தலைவர் ஹாமிட் ராஷிட், World Economic Situation and Prospect (WESP) ஆய்வறிக்கையை வெளியிடும்போது “இந்திய அரசு அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடித் திட்டங்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் முந்தைய திட்டங்களில் (பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி) அமலாக்கத்தில் சுணக்கம் ஏற்பட்டதை நாமும், ஏன் மத்திய அரசுமே நன்கு அறியும். எனவே இந்த 20 லட்சம் கோடித் திட்டங்களின் அமலாக்கத்தில்தான் இருக்கிறது, இந்தியப் பொருளாதாரத்தின் வருங்காலம். 

1991ல் அறிவிக்கப்பட்ட தாராளமயமாக்கக் கொள்கை இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு மிகப்பெரிய மாற்றக்கணம் (watershed moment) எனலாம். அதுபோல 20 லட்சம் கோடித் திட்டங்களும் மாற்றக் கணமாக இருக்குமா? தாராள மயமாக்கல் கொள்கையின் வெற்றி நாயகர்களான நரசிம்மராவ் – மன்மோகன் சிங் கூட்டணி போல, இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த உயர் நிலைக்குக் கொண்டு சென்ற வெற்றியாளர்களாக மோடியும் நிர்மலா சீதாராமனும் பேசப்படுவார்களா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

புள்ளி விவரங்களுக்கான ஆதாரங்கள்:

  1. https://timesofindia.indiatimes.com/blogs/toi-editorials/dil-maange-more-fms-reform-announcements-are-welcome-and-necessary-but-not-sufficient/
  2. https://www.businesstoday.in/current/economy-politics/infographic-atma-nirbhar-bharat-package-math/story/404186.html
  3. https://www.tribuneindia.com/news/comment/govts-stimulus-package-a-glorified-loan-mela-85435
  4. https://economictimes.indiatimes.com/news/economy/policy/nirmala-sitharaman-press-conference-live-updates-may17/liveblog/75784252.cms
  5. https://www.hindustantimes.com/business-news/stimulus-announced-by-govt-rbi-amount-to-rs-20-97-lakh-crore-nirmala-sitharaman-gives-a-break-up/story-7AG41DBEl1X3UCF2C7773J.html
  6. https://thewire.in/economy/modi-rs-20-lakh-crore-package-actual-spend
  7. https://economictimes.indiatimes.com/news/economy/policy/un-economic-experts-hail-indias-impressive-stimulus-package-to-revive-economy-hit-by-coronavirus/articleshow/75734085.cms?from=mdr
Leave a Reply