Posted on Leave a comment

ஆத்மநிர்பர் – தன்னிறைவா? தற்கொலை முயற்சியா? | சுசீந்திரன்

‘ஆத்மநிர்பர்’ – ஆவலுடன் காத்திருந்த சதக்கோடி மக்களுக்கு நமது பிரதமர் தந்த பதில். ‘இந்த முன்வைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதும் அல்ல, தன்னம்பிக்கை ஊட்டக்கூடியதும் அல்ல. முதல் பாரதப் பிரதமர் நேரு ஆரம்பித்த இந்த லட்சிய கோஷம் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாகியும் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கிறது. நேற்றுவரை உலகமயமானதை மெச்சிய வலதுசாரிய சிந்தனையாளர்களா இன்று சுயசார்பு பாரதம், ஸ்வதேசி என்று பல்டி அடித்திருக்கிறீர்கள்’ என்ற கேலியும், ‘வளைகுடா நாடுகளில் பெட்ரோலையும், பிரான்ஸ் ஆயுதங்களையும் வாங்கிக் கொண்டு ‘கோ லோக்கல் என்று கூவுவது அபத்தமில்லையா’ என்ற கிண்டலும் காதில் விழுகிறது. 

தன்னிறைவு என்பது உலகமயமாதலின் எதிரி என்று பொருளல்ல, அது தம்மிடம் இருக்கும் வளங்களை சரியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்துவதைக் குறிக்கிறது; விதேசி பொருட்களை வெறுத்து ஒதுக்குவதை அல்ல. தற்சார்புப் பொருளாதாரவாதிகள் கூறும், தாமிருக்கும் பகுதிக்கு அருகில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் இரண்டாம் தர வளங்களை விட்டுவிட்டு, முதல்தர ஆதாரங்களைத் தேடிப் போவது நல்ல பொருளாதார முடிவல்ல என்ற வாதம் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாத ஒன்றல்ல. ஆனால் அதே சமயம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதும் அல்ல.

மனிதனின் தேவையானது தரம் விலை என்ற இரு கோட்பாடுகளுக்கு இடையே சமநிலையிலேயே தீருகிறது. குறைந்த விலையில் அதிகத் தரம் என்பதே மக்களின் விருப்பத் தேர்வாக இருந்தாலும், அவற்றின் வேறுபட்ட பண்புகளால் ஏதேனும் ஒன்றில் சமரசமடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆடம் ஸ்மித்தோ, தம்மால் சிறப்பாகச் செய்ய முடிந்தவற்றைச் செய்து விட்டு, தம்மால் சிறப்பாகச் செய்ய இயலாதவற்றை, அதைச் சிறப்பாகச் செய்யும் வேறொரு நாட்டிடம் பண்டமாற்றிக் கொள்வதே சிறந்த பொருளாதார முடிவு என்கிறார்.

ஸ்வதேசி என்பதற்காகத் தரமற்ற, விலை மிகுந்த பொருட்களையும் வாங்க வேண்டும் என்று சொல்வது நியாயமல்ல. இன்று உலகமயமாதலுக்கு எதிர்ப்பு, நாளை தேசிய உலக மயமாதலுக்கு எதிர்ப்பு, பின்னர் பிராந்திய மயமாதலுக்கு எதிர்ப்பு என்று எதிர்ப்பினை வட்டார அளவிற்குக் கொண்டு சென்று குழாயடிச் சண்டை போடுவது பொருளாதாரத்திற்குச் சரியானது அல்ல. 

தனிமனிதன் தன் நல வாழ்விற்கான பொருளாதாரத்தை, தேசிய – மாநிலம் என்றெல்லாம் எல்லைகளுக்கு உள்ளும், வகுப்புகளுக்கு உள்ளும் அடைப்பது தவறான கொள்கையாகும். நிலமிருக்கிறது, கலப்பையை அடுத்தவரிடம் வாங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால், காலமும் நிலமும் வீண். உழைத்துப் பலனைப் பகிர்வதே சரி. வளங்களைப் பெருக்கிப் பகிர்வதுதான் வளர்ச்சியே அன்றி, கனவுகளால் கிளர்ச்சி ஊட்டுவதல்ல. அப்படி என்றால், பிரதமர் சொன்ன தன்னிறைவு பாரதம் என்பது எதைக் குறிக்கிறது? 

எவ்வாறு பிற நாட்டு வளங்களுக்கான நுகர்வை நாம் ஏற்படுத்தி இருக்கிறோமோ, அதே போல் நம் மூலவள ஆதாரங்களுக்கான சிறப்பான சந்தையை உருவாக்குவது, எதிர்பாரா இடர்ப்பாட்டுக் காலங்களைச் சமாளிக்க நம்மிடம் இருக்கும் இரண்டாம் தர மூலப் பொருட்களான சிறிய சந்தைக்கு வாய்ப்பளித்து உருவாக்குவது போன்றவைதான் ஒரு தன்னிறைவு பெற்ற நாட்டிற்கான அடையாளம். இந்தப் பந்தயத்தில் நுகர்வுக் கலாசாரத்தில் முன்னணியிலிருக்கும் இந்தியா, சந்தைப் பங்களிப்பில் எங்கோ மிகவும் பின்தங்கி இருப்பது என்பதுதான் நமது பிரச்சினையே. இந்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களைச் சரிப்படுத்தி, முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு, காலம் ஒரு அருமையான வாய்ப்பு அளித்திருக்கிறது. 21ம் நூற்றாண்டை பாரதத்தின் நூற்றாண்டாக மாற்றும் வாய்ப்பு நம் கைகளில் இருக்கிறது. இதையும் நாம் கனவாக மட்டுமே கடத்தி விடக்கூடாது.

உள்ளூர்த் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுங்கள் என்கிறார் பிரதமர். ஆனால் அதன் பொருள் ஆயிரக்கணக்கான மக்களைப் பெருநகரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயந்திர ஆலைகளில் சக்கையாக்குவதாக இருக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழிடங்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பைத் தரும் வகையில் சீர்திருத்தங்கள் அமைய வேண்டும். அப்படி இல்லாததன் விளைவை நாம் இப்போது கண்டோம். 

கொரொனா காலகட்டத்தில் மிகவும் பாதிப்படைந்தவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு கட்டத்திற்குப் பின்னர், நடைப்பயணமாகவாவது சொந்த ஊர் செல்ல மாட்டோமா என்று மாறிய அவர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியது. வலதுசாரிகள் என்பவர்கள் பெருமுதலாளிகளின் ஆதாரவாளர்கள், குறுதொழில் மற்றும் விவசாயத்தை எதிர்ப்பவர்கள் என்ற உண்மையல்லாத பிம்பம் இங்கு உள்ளது. உண்மையில் வலதுசாரிகள் குறுதொழில் மற்றும் விவசாயத்தை நேசிப்பவர்கள். அதில் மாற்றங்களையும், வளர்ச்சியையும் காண விரும்புபவர்கள். அதேசமயம் வாக்குவங்கிக்காக பெரு நிறுவனங்களின் சுதந்திரம் அத்துமீறப்படுவதையே எதிர்க்கிறார்கள்.

இந்தியா போன்ற மக்கட்தொகை மிகுந்த நாட்டில் சகலமும் இயந்திரமயமாதல் பொருளாதார ரீதியில் தற்கொலைக்குச் சமம். தவிர்க்க இயலாதவற்றைத் தவிர மானிட உழைப்பு அளிக்கும் வகையிலான வாய்ப்புகள் உருவாக்குவதை விட்டு, ஆலைகளை முடக்க முயற்சிப்பது எதிர்மறை விளைவையே உண்டாக்கும். மதராஸ் மாகாணப் பிரதமராக இருந்த பிரகாசம் அவர்கள், கதரியக்கத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று மில் விஸ்தீரப்பில் அதீதக் கெடுபிடிகள் விதித்தார். மில்கள் நிலைத்திருக்கின்றன, ஆனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறி ஆகியிருக்கிறது. இவ்வாறு தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் நகரங்களை நோக்கிக் குவிகின்றனர். 

உழைப்புக்கான கூலியென்பது குறைந்துவிட்ட போதிலும் இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு எனப் பெரும்விலையை நகரங்கள் தந்து கொண்டு இருக்கின்றன. மக்கள் தங்கள் வாழிடங்களிலிருந்து புலம்பெயரவேண்டிய அவசியமில்லாதவாறு வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு, கிராமங்களை நோக்கிய முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். உபரிப் பொருட்களைக் குப்பையில் கொட்டிச் செய்தியாக்குவதைவிட அதை மதிப்புகூட்டுப் பொருட்களாக்கிச் சந்தைக்குக் கொண்டுவர பழக வேண்டும். தயாரிப்புகளுக்கான விநியோகச் சங்கிலி அமைய, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும். படித்த இளைஞர்கள் சுயதொழிலில் ஈடுபட முன்வர வேண்டும். இவற்றை எல்லாம் தடுப்பது எது என்ற கேள்விக்கு பதில், அதிர்ச்சியளிக்கும்  விதமாக அரசுதான். 

ஒரு நாட்டின் வளம் அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ளது. அதில் முதலீடுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் ஒன்று. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கி வாராக் கடன் அளிக்கும் நிறுவனமாக்கி இருப்பது, நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் பெரும் பண்ணைகளைச் சிதைத்து ஏழை மக்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி அவர்களைக் கடனாளிகளாக ஆக்கியிருப்பது என்று இந்திய அரசின் சாதனைப் பாதை மிக மோசமாக உள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட அச்ச உணர்வே புதிய முதலீடுகளைப் பெருமளவு குறைத்தது. முதலீடுகளின்றி போதிய வேலைவாய்ப்புகள் உருவாவது நின்று போனது. இதுவே நிலையான வருமானம், வேலைப் பாதுகாப்பு என்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பணிகளை நோக்கித் தள்ள வைக்கிறது. இந்த முறை மதிப்பெண் இயந்திரங்களையும், லஞ்சத் தரகர்களையும் தந்ததைத் தவிர வேறு என்ன செய்தது?

கடந்த காலத் தவறுகள் இருக்கட்டும். நமது நிதியமைச்சர் அறிவித்த தொகுப்புகள் எந்தளவு தன்னிறைவு பாரதத்தை உருவாக்கும் என்பதே இப்போதைய கேள்வி. குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் கடன் வழங்குதலில் காட்டப்படும் சலுகைகள் வரவேற்கப்பட வேண்டியவையே. இது முடங்கிக் கிடந்த சந்தை இயல்புக்குத் திரும்ப பெரிதும் உதவும். புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. ஆயினும் குறைந்த வாடகை வீட்டுத் திட்டம் போன்றவை குறுகிய கால உதவியாக இருக்க வேண்டும். முன்பே கூறியதுபோல் வேலைவாய்ப்பிற்காக வெகுதொலைவு பெயரும் நிலையை மட்டுப்படுத்த வேண்டும். வேளாண் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு என்பது சரியான முடிவு. அதே போல தனியார்மயத்துக்கு அனுமதி அதிகரித்திருப்பதும்! நிச்சயம் இவை மட்டுமே போதுமானவையல்ல, ஆனால் துவக்கத்திற்குச் சரியான ஒன்று என்று சொல்வதில் பிழையில்லை.

விவசாயத்துறை உள்கட்டமைப்பிற்கு அதிக உள்ளீடு, பள்ளிக் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி சேனல் என்று எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும், நான் ஏமாற்றம் அடைந்திருப்பது காப்புரிமை சார்ந்து எந்த அறிவிப்பும் இல்லாததுதான். வேம்பிற்கும் மஞ்சளுக்கும் அந்நிய நாடுகள் வாங்கியிருந்த காப்புரிமையை வெற்றாக்கிவிட்டு, பழம்பெருமை பேச அமர்ந்து விடுவதில் லாபமில்லை. 

காப்புரிமை என்பது ஏனோ நம் நாட்டில் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவது இல்லை. அதைப் பற்றிப் பெரும்பாலானோருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. விளையாட்டுகளைப் பதிய இயலாது, நுண்ணுரியலை பதிய இயலாது எனச் சட்டங்களின் குழப்பங்களுக்கும் முடிவில்லை. காப்புரிமை குறித்து விவாதமோ வழக்கோ கடைசியாக எப்போது வந்தது என நினைவில்லை. தொழில்துறை வளர புத்தாக்கங்கள் வளர்வது அவசியம். ஆகவே இந்திய அரசு காப்புரிமைச் சட்டங்கள் மீது மறுபார்வை செலுத்தி, புத்தாக்கங்கள் பெருக வழிவகை செய்ய வேண்டும்.

இறுதியாக, தன்னிறைவு பாரதத்திற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் நமது அரசு, தனிமனிதச் சொத்துரிமை சார்ந்த சீரிய விவாதமொன்றை நிகழ்த்தி, அதைப் பாதுகாக்கும் வகையிலான சிறப்பான சட்டமொன்றை இயற்ற வேண்டும். அதன் மூலம் நம் பாரதம் பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

Leave a Reply