Posted on Leave a comment

புதிய தொடர்: இந்தியா புத்தகங்கள் (பகுதி 1) | முனைவர் வ.வே.சு

Girish Chandra Ghosh – A bohemian devotee of Sri Ramakirishna – Swami Chetanananda

ஒரு சமயம் ஓர் எழுத்தாளர் ஐயா! தங்களுடைய வாழ்க்கை வரலாற்றை நான் எழுதலாமா? என்று தயங்கிக் கொண்டே கேட்டார். “நான் எப்படி உள்ளேனோ அப்படியே என்னை வடியுங்கள் என்று புன்னகையோடு உரைத்தார் கிரீஷ் சந்திர கோஷ். எழுத்தாளரின் தயக்கத்திற்கும் அவர் பெற்ற பதிலுக்கும் பின்னணியில் ஓர் அற்புதமான வாழ்க்கை வரலாறு படர்ந்து கிடக்கிறது. 

ஆடம்பர வாழ்க்கை, மதுப் பழக்கம், விலைமாதர்களோடு தொடர்பு, தன்னிச்சையாகச் செயல்படுதல், முரண்டு பிடிக்கும் குணம், முன்கோபம் என்று பல தீய பழக்கங்களையும், தீய குணங்களையும் கொண்டிருந்தவர் கிரீஷ். 

ஆனால் இரக்க குணம், மனித நேயம், கற்பனை கலந்த நவீன படைப்பாற்றல், எழுத்தாற்றல், பேச்சாற்றல், மேடைநடிப்புத் திறம், மேலாண்மைத் திறம் என்று பல ‘பாஸிடிவ் குணங்களும் கொண்டவர் கிரீஷ். இவ்வளவும் இவரது வாழ்க்கையின் ஒருபாதி. 

இன்னொரு பாதி மிகவும் வித்தியாசமானது. மரபுகளை ஒத்துக் கொள்ளாத புதுமைவிரும்பி, ஒர் எளிய காளி பூசாரியின் சீடனாக மாறிய விந்தை வரலாற்றை முழுதும் சொல்ல முடியாமல் 500 பக்கங்களுக்குள் சுருக்கித் தந்திருக்கும் நூல்தான் இது.

இந்நூலின் நாயகர் கிரீஷ் குமார் கோஷ். மரபு, சமுதாய ஒழுக்கங்கள் எதற்கும் இணங்காமல் தன்னிச்சையாகத் திரிந்தவர்; வங்காள நாடக மேடையின் வெகு வசீகரமான ஆளுமை. நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என்று பன்முகம் கொண்ட மேதை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வங்காள மேடை நாடகத் துறைக்குப் புத்துயிர் கொடுத்தவர். வெள்ளை ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் மேடைக் காவியங்களைப் படைத்தவர்; பாரதப் பண்பாடுகளை விளக்கும் இந்திய இலக்கியங்களை மேடை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்; நலிந்த, ஏழை எளிய நாடக நடிகர்களுக்கு நம்பகத் தன்மையையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தந்தவர். எனவேதான் ‘வங்காள நாட்டுப்புற மேடைக் கலையின் தந்தை (Father of the native stage) என்று அழைக்கப்பட்டார்.

இருபத்துமூன்றாம் வயதில் நடிக்க ஆரம்பித்தார்; முப்பத்திரண்டாம் வயதில் நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். 1912ம் ஆண்டு அறுபத்தெட்டு வயதில் இறக்கும் வரை எழுதிக்கொண்டும் நடித்துக் கொண்டும் இருந்தார். 90 நாடகங்கள் எழுதியுள்ளார். 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

தானே பாடல்கள் எழுதத் தொடங்கி வழக்குமொழியில் பல பாடல்கள் எழுதினார். இவை எந்த இலக்கணத்திற்கும் அடங்கவில்லை. ஆனால் புகழ் பெற்று விளங்கின. எனவே இலக்கிய உலகம் இவற்றை ‘கிரீஷ் சந்தம் என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கியது. ஆம்! கவிஞர் கவிதை இரண்டுமே புதிய மரபைத் தோற்றுவித்தன.

கடவுள் நம்பிக்கையோ ஆன்மிக உணர்வோ இல்லாது தன்னிச்சைப்படி வாழ்ந்து கொண்டிருந்த கிரீஷ் ஒருநாள் தன் வீட்டுக்கு அருகில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் வருவதைக் காண்கிறார். அவரைப் பற்றி ஒன்றும் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அவரை மறுபடிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது.

திடீரென ஒருநாள் இவரது நாடகத்திற்கு குருமகராஜ் வருகிறார். அப்போது கிரீஷ் அவரை வணங்க, பரமஹம்ஸர் பதிலுக்கு வணங்குகிறார். கிரீஷ் குனிந்து வணங்கினால் அவரும் குனிந்து வணங்குகிறார். ‘இதென்ன புதுமாதிரியான சன்யாசி என கிரீஷ் நினைக்கிறார். மனத்துள் ஏதோ மாற்றம் நிகழ்கிறது. மறுபடி குருமகராஜை சந்திக்கிறார்.

“நான் பாவி. பல தீய பழக்கங்களுக்கு அடிமையானவன். என்னைக் கடவுள்… அப்படி ஒருவர் இருந்தால் காப்பாற்றுவாரா? என்று பரமஹம்ஸரிடம் கேட்கிறார்.

“கடவுள் எல்லாரையும் காப்பாற்றும் அன்புள்ளம் கொண்டவர். ஆனால் அவரை அறிய வேண்டுமென்றால் ஒரு குரு தேவை. 

“இந்தப் பாவிக்கு எங்கே குரு கிடைப்பார்?

“கிடைத்தாகிவிட்டது என்றார் பரமஹம்ஸர்.

நான் என்ன செய்ய வேண்டும்?

“நீ ஒன்றும் செய்ய வேண்டாம். எப்போதும் போல உலக வாழ்க்கையிலேயே இரு. காலை எழுந்தவுடன் ஒருமுறையும் இரவு படுப்பதற்கு முன் ஒருமுறையும் இறைவனை நினை!

முடியுமா என்று தன் வாழ்க்கை முறையை யோசித்துப் பார்த்த கிரிஷ், தயங்கிக் கொண்டே “ ஐயா! அது என்னால் முடியாது என்றார்.

“சரி! காலை உணவு, இரவு உணவு சாப்பிடும் முன் இறைவனை நினைத்துக் கொள்.

குடித்துவிட்டு இரவெல்லாம் எங்கெங்கே செல்வோம், எங்கே படுப்போம், உண்போம் என்பதை எண்ணிப் பார்த்த கிரிஷ் கோஷ் மேலும் தயக்கமுடன் “ஐயா! அதுவும் இயலாது என்றார்.

“சரி! அப்படியென்றால் ஒன்று செய்! எனக்கு நீ ‘பவர் ஆப் அட்டர்னி கொடுத்துவிடு. உன் செயலுக்கெல்லாம் நானே பொறுப்பு என்றார் பரமஹம்ஸர். சரி என்று வீட்டுக்குச் சென்ற கிரீஷ் கோஷினால் அதன் பிறகு தவறே செய்ய இயலவில்லை. குடிப்பதை நிறுத்து என குருநாதன் சொல்லவில்லை. ஆனால் மதுக்குப்பியை எடுத்தாலே அதில் குருமகராஜ் உருவம்தான் கிரீஷுக்குத் தெரிந்தது. அதன் பிறகு அவர் குடிக்கவே இல்லை.

கிரீஷ் கோஷ் சுவாமி விவேகாநந்தரை விட 19 ஆண்டுகள் மூத்தவர். இவர்கள் இருவரையும் கடவுள் பற்றிய விவாதம் செய்ய வைத்துக் கேட்பதில் பரமஹம்ஸருக்குப் பெரு விருப்பம் உண்டு. “என் சீடர்களில் இந்த இருவர்தான் மெத்தப் படித்தவர்கள்; வாதத் திறமை உள்ளவர்கள் என்பாராம். இரண்டு கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டாது; எதை நம்புவது என்று ஒரு விவாதத்தில் கிரீஷ் கேட்க “ஏன்! சூரியனை நம்பு; அது எப்போதும் தவறாகாது என்றார் குரு.

இந்நூலில் பல விவாதங்களை அப்படியே ஆசிரியர் கொடுத்துள்ளது சுவையைக் கூட்டுகின்ற பக்கங்கள்.

“மாஸ்டர்! ‘பூண்டு வாசம் நீர் விட்டுக் கழுவினாலும் போகாது; அது போலத்தான் மனது என்கிறீர்கள் என்றால் கிரீஷ் சந்திர கோஷுக்கு மட்டும் பழைய குணம் எப்படிப் போகும்?” என்று ஒரு சீடர் கேட்டார்.

“பூண்டு இருந்த பாத்திரத்தை நெருப்பில் காட்டினால் பழைய வாசனை போய்விடுமே என்றார் பரமஹம்ஸர்.

ஆம்! ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அருளென்னும் புனித நெருப்பில் ‘அக்னி ப்ரவேசம் செய்து வெளி வந்தவர் கிரீஷ் சந்திர கோஷ். படிப்போர்க்குப் பயன் தரும் நூல்.

 

Leave a Reply