கடந்த காலத் தவறுகள் எரிந்து போகட்டும் – இதுதான் தன் ஆய்வறை எரிந்தபோது எடிசன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகள். இப்போது பற்றி எரியும் கொரொனா தீயில் நாம் எரிக்க வேண்டிய கடந்தகாலத் தவறுகள் கம்யூனிசமும் சோசியலிசமும்தான். நலத்திட்டங்கள், சமத்துவம் பேசும் சோசியலிசத்தை விடுத்து, நம்மைச் சுரண்டி ஏய்க்கும் முதலாளித்துவத்திற்கு வழிவகை செய்வதா எனக் கேட்கத் தோன்றலாம்.
ஒருவன் ‘நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன், அமர்ந்த நிலையில்தான் இருப்பேன். அதனால் நான் உண்பதற்கு அவசியம் இல்லை’ என்று சொன்னால், ‘ஆஹா சரியான தர்க்கம்’ என்று யாரும் பாராட்ட மாட்டார்கள். ஏனென்றால் உயிரோடு இருப்பதற்கே சக்தி தேவைப்படுகிறது. அதை ஈடு செய்யவாவது உணவு உட்கொண்டாக வேண்டும் என்பது எல்லாருக்கும் புரியும். அதேபோலவே ஒரு அரசாங்கம் பொதுடைமை சித்தாந்தத்தைச் செயல்படுத்தினாலும், அந்நலத்திட்டங்களை நாட்டின் மூலைமுடுக்குகளுக்கும் கொண்டு சேர்க்கும் வாகனங்களுக்கு எரிபொருளை எண்ணெய்வள நாடுகளிடமிருந்து வாங்குவதற்காவது வருவாய் என்ற ஒன்றைப் பார்த்தாக வேண்டும்.
விழப்போகும் கோடி ரூபாய் பரிசுத்தொகைக்குத் திட்டங்கள் வைத்திருப்பவனிடம், பரிசு இருக்கட்டும், பரிசுச் சீட்டு வாங்கப் பணம் இருக்கிறதா என்று கேட்பதுதானே அடிப்படை? அப்படி இந்தச் செலவினங்களை ஈடுசெய்ய அரசு எப்படி வருவாய் ஈட்டும் என்பதை எந்த கம்யூனிஸ்ட்டும் பேச மாட்டார்கள். ஏன், ஆகாயக் கோட்டைகள் கட்டும் எவரும் பேச மாட்டார்கள்.
பொதுவாக இடதுசாரிகளைப் பொருத்தவரை அளவற்ற செல்வம் சமமற்றுப் பரவியிருப்பதே எல்லா இடர்ப்பாடுகளுக்கும் காரணம் என்று எண்ணுகின்றனர். செல்வந்தர்கள் பற்பல வசதிகளை அனுபவிக்கும்போது ஏழைகள் மேன்மேலும் துன்புறுகின்றனர் என்று குற்றம்சாட்டி, தாராளமயத்தை ஒழித்து சோசலிசத்தைக் கொண்டுவருவதே இதற்கெல்லாம் தீர்வு என்று வாதிடுகின்றனர். வலதுசாரி ஆதரவாளர்களோ ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்தவை இன்று அடிப்படைப் பொருட்களாகிவிட்டதை தனியார்மயம், தாராளமயத்தின் சாதனையாகச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்தக் கூற்றை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது.
பத்து வருடங்களுக்குமுன் கேமரா கூட இல்லாத செல்போனின் விலையில் இன்று தொடுதிரையுடன் கூடிய 4G மொபைலை வாங்க முடியும், அதுவும் பணவீக்கத்தைப் பொருட்படுத்தாமல். முதலில் செல்வந்தர்களின் பயன்பாட்டிற்கு வரும் அப்பொருட்கள், பின்னர் நடுத்தர வர்க்கத்திற்கும் பின் ஏழை வர்க்கத்திற்கும் பயன்பாடாக வருகிறது. இது ஒரு சமத்துவமற்ற நிலை என்பது போல் தோன்றலாம். நுணுக்கமான ஆய்விற்கு உட்படுத்தினால் முதலில் நுகர்பவர்கள் கொடுக்கும் அதிக விலையினை விட, காத்திருப்பவர்கள் மிகக்குறைவாகவே தருவதால் இதுவும் பொருளாதார சமத்துவமே.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது சோசியலிசக் கருத்துகளால் உந்தப்பட்ட நேரு அதை காங்கிரசில் வலியுறுத்தியபோது காந்தியும் அவர் சகாக்களும் அதைப் பொருட்படுத்தியதே இல்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் முக்கியத் தலைவர்கள் சிலர் இறந்து விட்டதாலும் மீதமிருந்தவர்களால் நேரு பிரபலத்திற்கு ஈடுகொடுக்க முடியாததாலும் நேருவால் சோசியலிசத்தை தடையின்றிச் செயல்படுத்த முடிந்தது.
(நேரு – மஹலானோபிஸ்)
நேரு சோவியத் பாணியிலான ஐந்தாண்டு திட்டங்களுக்கான திட்டத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது, மஹலானோபிஸ் எனும் மற்றொரு கேம்பிரிட்ஜ் பல்கலைkகழக மாணவரை. நேரு எப்படி மஹலானோபிஸை நியமித்துப் புளாங்கிதமடைந்தரோ, மஹலானோபிஸ் குழுவில் இடதுசாரி, கம்யூனிச மற்றும் சோசலிச சித்தாந்த அறிஞர்களே இடம்பெற்று மஹலானோபிசைப் புளாங்கிதப்படுத்தினர். எல்லாவற்றிலும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்களுக்கு அரசால் தர இயலும் என்ற காலத்துக்கு ஒவ்வாத கருத்தே தேசிய ஐந்தாண்டு திட்டங்களாக வடிவெடுத்தன. நேரு மற்றும் மஹலானோபிஸின் இந்த முட்டாள்தனத்தை அடுத்த தளங்களுக்கு இந்திரா காந்தி எடுத்துச் சென்றார். முதல் காங்கிரஸ் அல்லாத அரசான ஜனதா ஆட்சியாளர்களும் இதில் விலக்கல்ல.
உண்மையைச் சொல்லப்போனால் வலதுசாரிய பொருளாதாரம் பேசும் பலரே கூட, ‘இந்திய அரசு விடுதலையை ஒட்டிய ஆரம்பக் கால கட்டங்களில் எல்லாருக்குமான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தனியார் துறைகளால் இயலாமல் இருந்தது, அதனாலேயே பொதுத் துறை நிறுவனங்கள் அவசியமானது’ என்று தவறான புரிதல் கொண்டுள்ளனர். சுல்தானிய, முகலாய ஆட்சிகளின் போது உண்டான மக்கள் எழுச்சி, பக்தி இயக்கங்களாய் மட்டுமே மாறியபோது ஏன் விடுதலை போராட்டமாக ஆங்கிலேய ஆட்சியின்போது மட்டும் மாறியது என்ற கேள்விக்கான பதிலே இந்த புரிதலை சரிப்படுத்த முடியும்.
சுல்தானிய மற்றும் முகலாய ஆட்சியில் பிற மதத்தினர் கலாசார ரீதியாகத் தாக்கப்பட்டனர். வற்புறுத்தல்களால் இஸ்லாத்தைத் தழுவும்படி செய்யப்பட்டனர். அவ்வாறு தழுவாதவர்கள் தம் மதவழிபாடுகளைச் செய்ய ஜிஸியா என்ற வரியைத் தர வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் கலை மற்றும் இலக்கியங்களை வளர்க்காவண்ணம் கட்டுப்பாட்டிற்கு உள்ளானார்கள். ஆங்கிலேய ஆட்சியின் போதும் இத்தகைய கலாசாரத் தாக்குதல்கள் நிகழ்ந்தாலும் அவர்கள் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கங்களாலே விடுதலைப் போர் என்ற ஒன்று உருவானது.
முகலாய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் நிலைத்தன்மைக்காக பாரதத்தைப் பொருளாதார ரீதியாக அதிக சுரண்டல்களுக்கு உட்படுத்தியதில்லை. ஆனால் ஆங்கிலேய ஆட்சியின் போது நம் நாட்டின் வளம் சுரண்டப்பட்டு அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நம் ஊர் உயர்தரப் பஞ்சு இங்கிலாந்தில் ஆடையாக நெய்யப்பட்டு இங்கு கொள்ளை விலைக்கு விற்கப்பட்டது. அந்தக் கொள்ளை விலை மலிவாகத் தெரிய சுதேசி பொருட்கள் மீது வரிகள் மேல் வரிகள் அடுக்கப்பட்டன. இதைப் போலவே எல்லா லாபகரத் தொழில்கள் மீதும் வரிகள் குவிக்கப்பட்டு இந்திய வணிகர்கள் தம்முடன் போட்டி போடுவதைத் தடுக்க ஆங்கிலேயே அரசு முயற்சித்தது.
வரியின் கொடுமையைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஜி.டி. நாயுடு அவர்களின் முகச்சவர இயந்திரத்துக்கு 10 லட்சம் ரூபாய் பணத்தைக் காப்புரிமையாகத் தர ஒரு அமெரிக்க நிறுவனம் முன் வந்தபோது, அதில் 90% அதாவது ரூபாய் 9 லட்சத்தை வரியாகச் செலுத்த வேண்டும் என்று ஆங்கிலேய அரசு நிபந்தனையிட்டது. அளவுகடந்த வரிகள் உண்டாக்கிய வெறுப்பில் அவர் காப்புரிமையை இலவசமாகவே அந்த கம்பெனிகளுக்குத் தந்து விட்டார். நன்றாக ஓடிக்கொண்டிருந்த வ.உ.சிதம்பரனார் கப்பல்கள் வரி விதிப்பாலும், அடக்குமுறைகளாலும் கடனில் மூழ்கின. அறிவியல் மேதையாக ஜி.டி.நாயுடுவையும், தேசத் தலைவராக வ.உ.சியையும் பாராட்டுபவர்கள், அவர்களின் தொழில்முனைவுத்திறனை அதிகம் பாராட்டுவதில்லை.
ஆனால் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், இத்தனை இடர்ப்பாடுகளையும் தாண்டி வணிகத்தில் சாதித்தவர்கள், அந்த லாபத்தில் பெரும் பகுதியை நன்கொடைகளிலும் நலத்திட்டங்களிலும் செலவிட்டதுதான். அழகப்பச் செட்டியார், சேஷாயி சகோதரர்கள், பச்சையப்பன் முதலியார் எனப் பல வணிகர்கள் அளித்த நன்கொடைகள்தான் கல்லூரிகளாகவும் ஆராய்ச்சி நிலையங்களாகவும் சமூகக் கூடங்களாகவும் இன்றும் பயன்பட்டு வருகின்றன.
பெரும் இடர்ப்பாடுகளுக்கு இடையிலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தியவர்களுக்கு நம்முடைய சுதந்திர அரசு, ஊக்கமும் வரிவிலக்குகளும் அளித்திருந்தால், அந்தப் பெருவணிகர்களுக்கு வரி குறைப்பினால் உண்டாகும் பயன், மறைமுகமாக விலைக்குறைப்பாகவும் நேரடியாக நன்கொடைகளாகவும், நடுத்தர மற்றும் ஏழை மக்களைச் சென்று அடைந்திருக்கும். அந்த மிஞ்சிய லாபங்கள் புத்தாக்கங்களாக மலர்ந்திருக்கும். 2008ல் வந்த நானோ கார்கள் 1950களிலேயே ஜி.டி.நாயுடுவால் சாத்தியப்பட்டிருக்கும். விமானப் போக்குவரத்துகளும் சாதாரண பயணத் தேர்வாக மாறியிருக்கலாம்.
மாறாக நேருவோ வணிகர்கள் லாபத்தில் மட்டுமே குறிக்கோளாய் இருப்பார்கள், பொதுத்துறை நிறுவனங்களே சமத்துவத்தைத் தரும் என்று நம்பினார். நகைமுரணாக அவ்வாறு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்சியிலிருக்கும் கட்சிக்குச் சார்பானவர்களே பெருமளவில் பணியமர்த்தப்படும் நிலை உருவாகத் தொடங்கியது. அரசின் ஏகபோகத்தால் மக்கள் தரமற்ற சேவைகள், அலைக்கழிப்புகள், மரியாதைக் குறைவு போன்றவற்றால் பாதிப்படைந்தனர். அலைக்கழிப்புக்கு விரும்பாதவர்கள் லஞ்சத்தால் சாதிக்க விரும்பினர். இடைத்தரகர்கள் உருவாகத் தொடங்கினர். கட்சியிலிருப்பதே வருமானம் தரும் தொழிலாகியது. காலப்போக்கில் ஊழல்கள் மிகுந்தன.
இந்த ஊழல்களால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, அரசு ஒவ்வொரு வருடமும் அளவுக்கு அதிகமான ரூபாய் நோட்டுகளை அச்சிட்டதால் ரூபாயின் மதிப்பைக் குறைத்தது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால் அதைச் சரிசெய்ய உலக வங்கியிடம் கடனுக்குக் கைநீட்டியது. இது ஒரு நச்சுச் சுழலாகி மேன்மேலும் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாமல் 1950களில் எந்த காங்கிரஸ் கட்சி சோசியலிசமே தேசியக் கொள்கை என்று முழங்கியதோ, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முறையின்றிப் புகுத்தியதோ, அதே காங்கிரஸ் 1990களில் சோசலிசத்தை ஒதுக்கித் தாராள, தனியார், உலகமயத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்துக்குத் தள்ளப்பட்டது.
கம்யூனிசமும், சோசலிசமும் ஊழலை மட்டுமே வளர்க்கிறது; முதலீடு மற்றும் தொழில்முனைவே நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது எனப் பலமுறை வரலாற்றில் நிரூபிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் வலதுசாரி சித்தாந்தங்களை வெறுத்து இடதுசாரி சித்தாந்தங்களை ஆதரிப்பதற்கான காரணம் மக்களிடையே உள்ள பேராசையும் சூதாடும் மனநிலையுமே.
பத்து ரூபாய் விலையில் ஒரு லட்ச ரூபாய்க்கான பரிசுச்சீட்டை வாங்குபவர்கள் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு என்பதைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. பெறப்படும் தொகையைவிட இழக்கும் தொகை மிகக் குறைவே என்ற எண்ணத்தினாலும், அதிர்ஷ்டமிருப்பின் அப்பரிசு வசமாகலாம் என்ற ஆசையினால் மேலும் மேலும் சூதாடிப் பணம் இழக்கிறார்கள். ஆனால் பரிசுச்சீட்டு விற்பவரோ அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்று யோசிக்க மாட்டார். அவர் ‘எதிர்பார்க்கப்படும் மதிப்பு’ (Expected Value) என்ற கணித சூத்திரத்தின் அடிப்படையில் தன் வியாபாரத்தைச் செய்வார். உதாரணமாக அந்த லாட்டரிச் சீட்டை வாங்குபவர்கள் எண்ணிக்கை 1 லட்சம் எனக் கொண்டால், அவர்கள் ஒவ்வொரிடமும் தலா ஒரு ரூபாய் விற்பனையாளர் தரவேண்டியிருக்கும். ஆனால் அவர் சீட்டின் விலையாகப் பத்து ரூபாய் வாங்குபவர்களிடமிருந்து பெறுவதன் மூலம் 9 ரூபாய் லாபம் ஈட்டுகிறார். இப்பிரச்சினைகளை தர்க்கரீதியாக அல்லாமல் உணர்ச்சிரீதியாக அணுகுவதால்தான் மக்கள் அரசியல்வாதி, ஊடகத்துறை, சினிமா போன்றவற்றின் கம்யூனிச வீரவசனங்களுக்குச் சிலிர்த்துப் போய் சில்லறைகள் விட்டெறிகின்றனர். தொழிலதிபர்களுக்குப் பொதுவுடைமை வகுப்பெடுக்கும் சினிமாக்களால் திரையரங்குகளில் பால்கனியைக் கூடத் தூக்க முடியாதென்பதே யதார்த்தம். இருப்பினும் பேராசையால் தள்ளப்படும் மக்கள் இப்படிச் சிந்திக்க முயலுவதே இல்லை. துரதிர்ஷ்டவசமாக, மக்களின் இந்த மனப்போக்கின் காரணமாகவே கொள்கையளவில் வலதுசாரி கட்சிகள்கூட தேர்தலின்போது இடதுசாரியாகிவிடும். விந்தையாக, ஆட்சியமைக்கும் கட்சிகள் இடதுசாரியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் வலதுசாரி நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆகிவிடும்.
கம்யூனிசத்தில் இத்தனை குறைகள் காண்பிக்கும் அளவு முதலாளித்துவம் புனிதமானதா, அதில் குறைகள் இல்லையா என்ற வினாவிற்கு பதில், நிச்சயமாக முதலாளித்துவத்திலும் குறைகள் உண்டு. உழைப்புச் சுரண்டல், வரம்பற்ற வளங்கள் பயன்பாட்டால் இயற்கையில் ஏற்படும் சமமற்றநிலை, செல்வத்தின் உதவியால் சட்டமீறல்கள் எனக் குறைகளடங்கிய நீண்ட பட்டியல் ஒன்றுள்ளது. எனினும் சுதந்திரமான நீதித்துறை மற்றும் பத்திரிகைத் துறை ஆகியவற்றால் நம்மால் பெருமளவு இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய இயலும். மாறாக, தனிமனித சுதந்திரத்தில் அரசு அதிக உரிமையெடுத்துக் கொள்ள அனுமதிப்பது வாழ்வை நாசமாக்கிவிடும். இந்த அடிப்படையை உணராமல் நாட்டுடைமை, பொதுவுடைமை என்ற பெயரில் சொல்லப்படும் ஆசை வார்த்தைகளுக்கு இரையாகி, டாடா, அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் அரசுடைமையாகும்போது கைத்தட்டி வரவேற்றால், எட்டுவழிச் சாலைக்கும், நியூட்ரினோக்கும் நிலங்கள் அரசுடைமையாகும்போது ஒப்பாரி வைப்பதில் எந்தத் தார்மீகமும் இல்லை. முன்பு சொன்னதுபோலவே முதலில் செல்வந்தர்கள் அடையும் பயன்கள் பின்னர் நடுத்தர மற்றும் ஏழை மக்களை அடையும், செல்வந்தர்கள் அடையும் பாதிப்புகளும் அவ்வாறே.