Posted on Leave a comment

ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு

1953 மார்ச் மாதம் 4ம் தேதி இரவு ரேடியோ மாஸ்கோவில் ஒரு பியானோ இசை நிகழ்ச்சி நடந்தது. அது முடியும் நேரம் ரேடியோ மாஸ்கோ இயக்குநரை அழைத்து அந்த நிகழ்ச்சியின் இசைப்பதிவு வேண்டும் என்கிறார் ஸ்டாலின். நிகழ்ச்சியை மீண்டும் நடத்திப் பதிவு செய்து அனுப்புகிறார் இயக்குநர். அதில் பியானோ வாசிக்கும் மரியா யுடினா என்கிற பெண்மணி ஒரு குறிப்பை எழுதி அனுப்புகிறார். தன் மாளிகையில் அதைப் படிக்கும் ஸ்டாலின் மூச்சடைத்து விழுகிறார். கை கால் இழுத்துக் கொள்கிறது. ரஷ்யாவின் மத்திய ஆட்சிக் குழு மொத்தத்திற்கும் தகவல் போகிறது. முதலில் வரும் உள்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு (NKVD) தலைவர் பெரியா, யுடினாவின் குறிப்பைக் கண்டு அதைப் பத்திரப்படுத்துகிறார். கமிட்டியின் துணைத்தலைவர் மாலங்கோவ் ஸ்டாலினின் நிலை கண்டு பதறுகிறார். பெரியா அவரை சமாதானப்படுத்தி “நீங்கள் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள் தோழர். மற்ற எல்லாம் என் பொறுப்பு என்கிறார்.

மாஸ்க்கோ நகர கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருஷ்சேவ் வருகிறார். மற்ற உறுப்பினர்கள் வருகிறார்கள். வெளியுறவு அமைச்சர் மோலோடோவ் மட்டும் வரவில்லை. விசாரிக்கும்போது அவரை எதிரி என்று சொல்லித் தீர்த்துக் கட்ட ஸ்டாலின் உத்தரவிட்டதாக பெரியா சொல்கிறார். உடனடியாக மாஸ்கோ நகரை இழுத்து மூடச் சொல்கிறார் பெரியா. தன் உளவுப் படைகளிடம் (NKVD) நகரப் பாதுகாப்பை ஏற்கச் சொல்கிறார். ஸ்டாலின் கொடுத்த எதிரிப் பட்டியலை மாற்றி, தனக்கு வேண்டாத ஆட்களைத் தீர்த்துக் கட்ட உத்தரவுகள் தருகிறார் பெரியா. இதில் மோலோடோவ் தப்பிக்கிறார். பெரியாவும் குருஷ்சேவும் பல விஷயங்களில் போட்டி போடுகிறார்கள். ஸ்டாலினின் மகளையும், அரைவேக்காட்டு மகன் வசிலியையும் வளைக்க இருவரும் அடித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் ஸ்டாலின் கண் விழித்துப் பார்க்கிறார். ஆனால் எந்த ஒரு பேச்சும் இல்லை. மீண்டும் மயங்கிவிடுகிறார். டாக்டர்கள் குழு மருத்துவம் பார்க்கிறது. ஆனாலும் மூளையில் வெடிப்புகள் ஏற்பட்டு ஸ்டாலின் உயிர் போகிறது. மோலோடோவை சந்தித்து ஆதரவு கேட்கிறார் குருஷ்சேவ். அவரோ “கம்யூனிஸ்ட் கட்சியில் கோஷ்டிப் பூசலா? இது ஸ்டாலினுக்கே அடுக்காது என்கிறார். அங்கே வரும் பெரியா, ஸ்டாலின் எதிரி என்ற பட்டம் கட்டி கொல்ல உத்தரவிட்டிருந்த மோலோடோவின் மனைவியை விடுவித்து அவரது ஆதரவைத் தட்டிச்செல்கிறார். மாலங்கோவை பிரதமராக கமிட்டி தேர்வு செய்கிறது. பெரியா அதிக அதிகாரங்கள் பெறுகிறார். குருஷ்சேவை ஸ்டாலினின் ஈமக்கிரியைகளை நடத்தும் பொறுப்புக்கு மாற்றுகிறார் பெரியா. குருஷ்சேவ் திட்டமிட்டிருந்த பல சீர்திருத்தங்களை தன்னுடையதாக அறிவிக்கிறார். ரஷ்ய கிறிஸ்தவ தேவாலயங்கள் சுதந்திரம் பெறுகின்றன. மக்கள் அதை ஆதரிக்கிறார்கள்.

ஸ்டாலினுக்கு குறிப்பெழுதிய யுடினாவும் குருஷ்சேவும் அறிமுகமானவர்கள் என்று தெரிந்து கொள்ளும் பெரியா இருவரையும் மிரட்டுகிறார். அங்கே வரும் ராணுவத் தலைமைத் தளபதி மார்ஷல் ஜூகோவ் ராணுவத்தை அனுப்பிவிட்டு, ஏன் உளவுத்துறை மாஸ்க்கோ நகரப் பாதுகாப்பை ஏற்றது என்று கேட்கிறார். அவரிடம் பெரியாவின் திட்டங்களைச் சொல்லி தனக்கு ஆதரவு கேட்கிறார் குருஷ்சேவ். கமிட்டியார் மொத்தமும் ஒப்புக்கொண்டால் பெரியாவைத் தூக்கிவிட ஒப்புக்கொள்கிறார் ஜூகோவ். ஆதரவை எப்படியும் பெறுவது என்று முடிவு செய்து குருஷ்சேவ் வேலையைத் தொடங்குகிறார்.

மாஸ்கோ நகருக்கு நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்தைத் தொடங்க உத்தரவிடுகிறார் குருஷ்சேவ். கூட்டம் கூட்டமாக மக்கள் மாஸ்கோ வந்து சேர, வரக்கூடாது என்று தடுக்கிறது பெரியாவின் உளவுப்படை. துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு கொடுக்கிறார் ஒரு NKVD அதிகாரி. 1500 பேர் இறந்து போகிறார்கள். கமிட்டியார் கூடி யாராவது ஒரு சின்ன அதிகாரியை பலிகடா ஆக்கிவிடலாம் என்று சொல்கிறார்கள். பெரியா கோபம் கொண்டு “NKVD மீது துரும்பு பட்டாலும் என் மீது பழி வருவதற்குச் சமம். அப்படி வந்தால் உங்கள் அனைவரையும் தூக்கி உள்ளே வைப்பேன். ஒவ்வொருவர் பற்றியும் ஃபைல் வைத்திருக்கிறேன் என்கிறார். கமிட்டியார் கோபம் கொண்டாலும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனைவரின் ஒருமித்த ஒப்புதல் தேவை என்று காத்திருக்கிறார்கள்.

(நிஜ மாலங்கோவ் மற்றும் நிஜ பெரியா) 

மாலங்கோவ் உள்பட அனைவரும் ஆதரித்தால் பெரியாவைத்த தூக்கிவிட தானும் உடன்படுவதாக மோலோடோவ் ரகசியமாக குருஷ்சேவிடம் சொல்கிறார். குருஷ்சேவ் உடனே ஜுக்கோவிடம் மாலங்கோவ் உள்ளிட்ட மற்ற கமிட்டியார் பெரியாவை கமிட்டியிலிருந்து தூக்க ஆதரிக்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறார். ஸ்டாலின் அடக்கம் செய்யப்படும் வரை காத்திருக்கிறார்கள். அடக்கம் முடிந்ததும் மார்ஷல் ஜூகோவ் அதிரடியாக அரசியல் கமிட்டி கூட்டத்துக்கு வருகிறார். ராணுவம் உள்ளே புகுந்து NKVDயை ஓரங்கட்டி முழுக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறது.

பெரியாவைக் கைது செய்கிறார்கள். மாலங்கோவை மிரட்டி பெரியாவின் மீதான விசாரணை அறிக்கையில் கையெழுத்து வாங்குகிறார் குருஷ்சேவ். அங்கேயே ஒரு சின்ன அறையில் விசாரணை என்ற பெயரில் தேசத்துரோகம், பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி பெரியாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறார்கள். ராணுவ வீரர் ஒருவர் பெரியாவைச் சுட்டுக் கொல்கிறார். அங்கேயே ஒரு ராணுவ வண்டியில் இருந்து பெட்ரோல் எடுத்து ஊற்றி பெரியாவின் உடலை எரித்துவிடுகிறார்கள். மாலங்கோவ் தலைவர் என்று தொடர்ந்த போதும் குருஷ்சேவ் முழுக்கட்டுப்பாட்டைத் தன் வசம் எடுத்துக் கொள்கிறார். ஸ்டாலினின் மகள் வியன்னாவுக்கு அனுப்பப்படுகிறார். வசிலியை (ஸ்டாலின் மகன்) தான் பார்த்துக் கொள்வதாக குருஷ்சேவ் சொல்கிறார்.

சில வருடங்களில் தன் கூட்டாளிகளை ஒவ்வொருவராக நீக்கிவிட்டுத் தன்னிகரற்ற தலைவர் என்றாகும் குருஷ்சேவ், ஒரு இசைக் கச்சேரி கேட்கிறார். அங்கே அவருக்கு அடுத்த வரிசையில் இருக்கும் பிரஷ்னேவ் (குருஷ்சேவைத் தூக்கிவிட்டுப் பதவிக்கு வரும் அடுத்த தலைவர்) குருஷ்சேவை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதோடு படம் முடிகிறது.

*

லெனின் மறைந்த பிறகு கம்யூனிச உலகத்தின் ரட்சகராக வலம் வந்தவர் ஸ்டாலின். இரண்டாவது உலகப் போர் வெற்றி, கிழக்கு ஐரோப்பிய ஆதிக்கம், உலகளாவிய கம்யூனிச ஆதிக்கம் என்று அதிகாரத்தின் உச்சியில் இருந்த ஸ்டாலின் சக தலைவர்கள் என்பவர்களைக் கூட அடிமைகள் போல நடத்தி சர்வாதிகாரியாக விளங்கிய காலம். அவர் சொல்லுக்கு மறுசொல் என்ற எண்ணம் வந்தாலே சைபீரிய சிறை அல்லது உளவுத்துறையின் சித்திரவதைக் கூடம் என்பது நடைமுறையாக இருந்தது. ஸ்டாலினின் அமைச்சரவை சகாக்கள் அவரைக் கண்டு அஞ்சி நடுங்குவதே எதார்த்தம். அவருக்கு யார் மீதாவது சந்தேகம் வந்தால் பெரிய பொறுப்பில் இருந்தாலும் தீர்த்துக்கட்டி விடுவார் என்ற நிலை. சீன எல்லையில் தொடங்கி ஐரோப்பாவில் பாதியை அப்படி அச்சத்தில் வைத்திருந்த மனிதன் நெஞ்சடைத்து மூளை குழம்பிச் சாவதும், அந்தச் சாவுக்குப் பிறகான அடுத்தகட்டத் தலைவர்களின் அட்டகாசங்களுமே The death of Stalin படத்தின் கதை.

ஸ்டாலின் சோவியத் தலைவராகக் கோலோச்சிய காலத்தில் அவரது அட்டகாசங்களை லேசாகத் தொட்டுச் செல்கிறது படம். நக்கல், நையாண்டி, எள்ளல், எகத்தாளம் இவற்றைக் கலந்து கட்டி சோவியத் என்று கம்யூனிஸ்ட்டுகள் கட்டமைத்த பிம்பத்தை நொறுக்கிவிட்டார்கள். 

ரேடியோ மாஸ்க்கோ இசை நிகழ்ச்சி ஒன்றை நேரலையாக ஸ்டாலின் கேட்கிறார். அதன் பதிவு வேண்டும் என்கிறார். ரிக்கார்ட் ஆகவில்லை. ஸ்டாலினுக்காக மீண்டும் நிகழ்ச்சியை நடத்திப் பதிவு செய்யும் போது கைதட்ட ஆட்கள் இல்லை என்று கூலித் தொழிலாளர்களை கூட்டி வந்து அமர்த்தி கைதட்ட வைக்கிறார்கள். (யார் கைதட்டுகிறார்கள் என்று இசைத்தட்டில் எப்படித் தெரியும்?) அங்கும் எலீட் சொசைட்டி உண்டு என்பதும் தொழிலாளர்கள் ஓபரா கேட்க வருவது வரப்பிரசாதம் போலவும் நிலைமை இருந்திருக்கிறது. 

மேலும் முக்கியமான பியானோ இசைக்கலைஞர் யுடினா வாசிக்க மறுக்கிறார். ஆர்க்கெஸ்டிரா கண்டக்டர் ஸ்டாலின் என்ன செய்வாரோ என்று பயத்தில் நெஞ்சடைத்துச் செத்துப் போகிறார். யுடினாவை அதிகப் பணம் கொடுப்பதாக ஆசை காட்டி ஒப்புக்கொள்ள வைக்கிறார் ரேடியோ நிலைய இயக்குநர். வேறு கண்டக்டர் வேண்டும் என்று தேடி ஒருவரை வீட்டுக்குப் போய் அழைக்கிறார்கள். அந்தக் குடியிருப்பில் பலரை உளவுத்துறை இரவில் கைது செய்கிறது. 

பயந்து போன அந்த மனிதர் தன் மனைவியிடம் சொல்லிவிட்டுக் கதவைத் திறக்கிறார். “தொந்தரவுக்கு மன்னிக்கனும் சார்! என்கிறார் வந்தவர். கைது பண்ண வந்தவன் இப்படிப் பேச மாட்டானே என்று பார்த்தால் “மாஸ்கோவில் உங்களை மாதிரி வேறு கண்டக்டர் கிடையாது. காம்ரேட் ஸ்டாலினுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை நீங்கள் நடத்த வேண்டும் என்கிறார் ரேடியோக்காரர். உடை மாற்றப் போகிறவரை நிறுத்தி நீங்கள் அப்படியே வந்தாலும் கூட ஏதுமில்லை என்று கூட்டிப் போகிறார்கள். 

ஸ்டாலினுடன் இரவு உணவு அருந்தும் கமிட்டியார் அனைவரும் அவர் குடி என்றால் குடிப்பதும், அவர் சொன்னதை உண்பதும் அவர் சொல்படி நடனம் ஆடுவதும் செய்கிறார்கள். ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு ஸ்டாலினுக்குச் சிரிப்பு மூட்டுகிறார்கள். பவ்ல்நிகோவ் பற்றிப் பேசுகிறார்கள். “அவருக்கு என்ன ஆனது? என்கிறார் மாலெங்கோவ். “அங்கே போய் தெரிந்துகொள்கிறாயா? என்கிறார் ஸ்டாலின். தலைகுனிந்து சாப்பிடத் தொடங்குகிறார் மாலெங்கோவ். வேறொருவரைப் பற்றிப் பேசி க்ருஷ்சேவை கலாய்த்து ஸ்டாலின் மனதை மாற்றுகிறார் பெரியா. 

ஸ்டாலின் இரவில் தன அறைக்குள் நெஞ்சடைத்து விழுந்து கிடக்கிறார். வெளியே காவலுக்கு நிற்பவர்களில் ஒருவர் உள்ளே போய் பார்க்கலாம் என்கிறார். ‘தலை வேணுமா வேண்டாமா? பேசாம இரு’ என்கிறார் மற்றவர். இரவு முழுவதும் அப்படியே இரவு உடையோடு சிறுநீர் போய் தரையில் கிடக்கிறார் காம்ரேட். காலையில் காபி கொடுக்கும் பெண் பார்த்துவிட்டு ஓலமிட்டவுடன் காவல் ஆட்கள் எட்டிப் பார்க்கிறார்கள். உள்ளே போகவில்லை. 

‘இரவில் சத்தம் கேட்டதா?’ ‘கேட்டது சார்.’ ‘ஏன் உள்ளே போய் பார்க்கவில்லை?’ ‘உள்ளே போக உத்தரவு இல்லை சார்.’ ‘குட் வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம்.’ இப்படி ஒரு விசாரணை! நடத்தியவர் பெரியா. 

ஸ்டாலின் சித்திரவதை செய்யவும், கொலை செய்யவும் கொடுத்த பட்டியல், ஸ்டாலினின் ரகசிய போலீஸ் தலைவர் பெரியாவால் மாற்றப்படுகிறது. கமிட்டியார் சேர்ந்து ஸ்டாலினைத் தூக்கி கட்டிலில் போட்டு டாக்டர் எங்கே என்று தேடினால், டாக்டர்கள் யாரும் இல்லை. டாக்டர்கள் மீது சந்தேகம் ஸ்டாலினுக்கு. அதனால் மாஸ்கோவின் பல டாக்டர்களை சிறைக்கோ சைபீரியாவுக்கோ அனுப்பி வைத்தாயிற்று. நல்ல டாக்டர் ஒருவர் கூட இல்லை.

ராத்திரி முழுவதும் நெஞ்சடைத்து விழுந்து கிடந்த ஸ்டாலினுக்கு வைத்தியம் பார்க்க உடனே டாக்டர் வரவேண்டும் எனும் போது, ‘கமிட்டி குறைந்தபட்ச எண்ணிக்கையில் கூடட்டும், அப்போதுதான் முடிவு செய்ய முடியும்’ என்று காத்திருக்கிறார்கள் மாலெங்கோவும் பெரியாவும். காரணம் ஸ்டாலினுக்கு ஏதாவது ஆகிவிட்டால் டாக்டரைக் கூப்பிட்டது கமிட்டி முடிவாக இருக்கவேண்டுமாம். 

துணைத்தலைவர் என்ற முறையில் கமிட்டியைக் கூட்டுகிறேன் என்று மாலங்கோவ் சொல்ல “நீங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறீர்களா?என்கிறார் பெரியா. உடனே மறுக்கும் மாலங்கோவ் “இல்லை. தலைவர் வராதபோது கமிட்டிக்குச் செய்ய வேண்டிய கடமை என்று தலைவர் சொன்னதைச் செய்கிறேன். அவர் உடல்நலம் பெற்று எழுந்து வந்தவுடன் நமக்கு வழிகாட்டுவார். அதுவரை அவர் காட்டிய வழியில் போவோம் என்கிறார். உடனே பெரியா சிரித்துக்கொண்டே “சோதனையில் தேறிவிட்டீர்கள். தலைவர் சொன்னபடி இதை ஃபைலில் எழுதி அவர் பார்வைக்கு வைக்கிறேன் என்பார்.

(குருஷேவ், ஸ்டாலின், மாலங்கோவ், பெரியா)

கமிட்டி கூடியதும் நிலையைச் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள். எவனோ ஒரு டாக்டரை வைத்து தலைவருக்கு எப்படி வைத்தியம் பார்ப்பது? 

பெரியா சொல்கிறார், “பிழைத்துவிட்டார் என்றால் வைத்தியம் பார்த்தவன் நல்ல டாக்டர். செத்தால் கேட்க எவன் இருக்கான்? எல்லோரும் ஒப்புக்கொண்டவுடன் ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் மருத்துவமே பார்க்காதிருக்கும் ஒருவரை அழைத்துவர முடிவு செய்கிறார்கள். அவர் “நான் மட்டும் வைத்தியம் பார்க்க மாட்டேன், ஒரு ஐந்தாறு டாக்டர்களாவது இருக்கும் மெடிக்கல் கமிட்டி போடுங்கள்” என்கிறார். பிரச்சினை என்றால் கமிட்டியோடு கைலாசம், தனியாகச் சிக்கிக் கொள்ள வேண்டாமே. பிறகு டாக்டர்கள் குழு என்று போட்டு அதில் ஹவுஸ் ஸர்ஜன்கள் உள்ளிட்ட அனுபவமற்ற சிலரைச் சேர்க்கிறார்கள்.

ஸ்டாலின் இறந்து போனது அறிவிக்கப்பட்ட உடனே அவரது தனிப்பட்ட ஊழியர்கள் கொல்லப்படுகிறார்கள். காரணம் இந்த கமிட்டி, தாமதம் பற்றி வெளியே தெரியக்கூடாதாம்.

ஸ்டாலின் இறந்த பிறகு கூடப் பிழைத்து எழுந்துவிட்டால் என்ன செய்ய என்ற அச்சத்தில் “காம்ரேட் ஸ்டாலின் வாழ்க, “அவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், நாட்டுக்குத் தேவையானவர் என்று சொம்படிக்கும் மத்திய கமயூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் 23ஆம் புலிகேசியின் மங்குனி அமைச்சரை நினைவுபடுத்துகின்றன.

ஸ்டாலின் இறந்த பிறகு மோலோடோவின் மனைவியை பெரியா அழைத்து வரும் போது, தன் மனைவியைப் பற்றி ‘அவள் சோவியத்தின் எதிரி’ என்று திட்டிக் கொண்டிருக்கும் மோலோடோவ், மனைவியைப் பார்த்ததும் அவளை அணைத்துக் கொண்டு ‘உன்னை இத்தனை நாள் பிரிந்து வாடினேன்’ என்கிறார். உடனே மன்னிப்புக் கேட்டு ‘நான் என்றுமே ஸ்டாலினுக்கு விசுவாசமானவன், உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன்’ என்கிறார். ஸ்டாலினின் இறுதிச் சடங்கு நடக்கும் போது மனைவி சோவியத் எதிரியாக இருந்தது பற்றி வருத்தப்படுகிறாள் என்று சொல்லி பிறகு அதற்கும் மன்னிப்புக் கேட்கிறார்.

சில அரசியல் சித்து வேலைகள் நம்மூர் பாணியில் உள்ளன. ஆனால் அது நம்மாட்கள் கேஜிபியை கேட்டுச் செய்தது. ஸ்டாலின் இறுதிச் சடங்கில் அவரது மகன் வசிலி பேசும்போது வானத்தில் விமானங்கள் பறக்கின்றன. மக்கள் அதை வேடிக்கை பார்த்து வசிலி பேச்சைக் கவனிக்காது போகிறார்கள். பெரியா பேசும்போது மேடை உயரம் குறைவாக வைத்து அவரது முகத்தை மறைக்கிறார் க்ருஷ்சேவ்.

ஸ்டாலினைப் போல ஒரு குழந்தையுடன் போஸ் கொடுத்து அவரைப் போலவே நான் என்று காட்டிக்கொள்ள மாலெங்கோவ் விழைகிறார். ஆனால் ஸ்டாலினுடன் போஸ் கொடுத்த குழந்தை வளர்ந்து பெரியவளாகி விட்டிருக்க, வேறு சின்னக் குழந்தையைக் கூட்டி வருகிறார்கள். ஆனால், பால்கனியில், அந்தக் குழந்தைக்கு உயரம் போதாமல் குழந்தையின் தலைமுடி மட்டுமே தெரிகிறது. மாலெங்கோவ் உடன் இருக்கும் குழந்தையை யாருக்கும் கவனிக்கத் தோன்றவில்லை. திட்டம் தோல்வி.

பெரியா கமிட்டியாரிடம் ‘ஒவ்வொவருவர் மீதும் பைல் வைத்துள்ளேன். எல்லோரையும் உள்ளே வைத்துவிடுவேன்’ என்று மிரட்டும் போதும் சரி, கமிட்டியில் மற்றவர்களுக்கு எதிராக ஏதாவது பேசும் போதும் சரி, திடீரென்று ஒருவர் ‘நான் உண்மையான கம்யூனிஸ்ட். இதை ரிபோர்ட் செய்வேன்’ என்று சொல்லி மற்றவர்களின் முகத்தில் வரும் பயத்தைக் கண்டு சிரிக்கிறார்கள். எல்லோரும் ஒருவித அச்சத்திலேயே வாழ்கிறார்கள்.

பெரியாவைக் கைது செய்து தண்டனை தரும் உத்தரவில் மாலெங்கோவை மிரட்டிக் கையெழுத்து வாங்குகிறார் க்ருஷ்சேவ். இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை கமிட்டி ஆவணங்களில் பதிவு செய்துவிட்டுக் கையெழுத்துப் போடுகிறேன் என்பார் மாலெங்கோவ். கையெழுத்துப் போடுய்யா என்று அதிரடியாக க்ருஷ்சேவ் அவரிடம் கையழுத்து வாங்கியதும் பெரியாவை சுட்டுக் கொல்கிறார்கள். அங்கே க்ருஷ்சேவ் தலைவராக உருவெடுக்கிறார். ஸ்டாலின் இருந்தால் இப்படித்தான் செய்திருப்பார் என்று மோலோடோவ் உள்ளிட்ட கமிட்டியார் புகழ்கிறார்கள்.

படத்தை பிரித்தானிய ஆங்கில மொழியில் வசனங்கள் வைத்து எடுத்துள்ளனர். ரஷ்யர்கள் அசல் பிரித்தானிய ஆங்கில வழக்கில் பேசுவது ஒரு காமெடிதான். ஜோக்குகள் கூட ஆங்கிலேய ஜோக்குகளாக இருக்கின்றன. ரஷ்ய நேட்டிவிட்டி இல்லை. மொழிபெயர்ப்பு, புரிதல் என்று பல சிக்கல்களை இதில் தவிர்த்துவிட்டார்கள் என்பது ஒரு கோணம். 

விருதுகள்-விவரங்கள்:

இந்தப் படம் அர்மான்ட்டோ ஐயான்னுச்சி என்பவரால் எழுதி இயக்கப்பட்டது. 2016ல் தொடங்கி 2017ல் வெளியிட்டார்கள். ஐரோப்பா அமேரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் ஓடி நல்ல வசூல் ஆனது. ரஷ்யாவில் இந்தப்படம் தடை செய்யப்பட்டது. கிர்கிஸ்தான், காஜாகிஸ்தான் ஆகிய நாடுகளும் படத்தைத் தடை செய்தன. ஆர்மினியா, பேலாருஸ் போன்ற நாடுகள் படத்தைத் திரையிட்டு ரஷ்யாவின் கோபத்துக்கு ஆளாகின. காஜாகிஸ்தான் கிளிக் திருவிழா எனும் கலை/கலாசார விழாவில் மட்டும் திரையிட்டது. 

முன்னாள் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா இந்தப்படம் தனக்குப் பிடித்த படங்களில் முக்கியமானது என்று பட்டியல் போட்டுள்ளார்.

2017ல் British Independent Film Awards வழங்கிய சிறந்த ஒப்பனை, சிறந்த நடிகர், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த நடிகர் நடிகை தேர்வு, சிறந்த இசை என்று பல விருதுகளையும் இந்தப்படம் பெற்றது. British Academy Film Awards 2018ல் தனிச்சிறப்பான பிரித்தானியத் திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளை வழங்கியது. Evening Standard British Film Awards 2018ல் பெரியாவாக நடித்த சைமன் ரஸ்ஸல் பீல்லுக்கு சிறந்த துணை நடிகர் விருது கொடுத்தது. European Film Awards சிறந்த நகைச்சுவைத் திரைப்படம் என்ற விருது கொடுத்தது. National Board of Review என்ற அமெரிக்க திரைப்பட ஆய்வு நிறுவனத்தால் சிறந்த 10 படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. San Diego Film Critics Society சிறந்த திரைக்கதைக்கான விருது கொடுத்தது.

Leave a Reply