பகுதி 13 – பரஸ்பர ஒத்துழைப்பிற்கான வேண்டுகோள்
அ) தனது நாட்டை நேசிக்கும் எந்த இந்தியனும் தற்போதைய நிலையை வலியுடனும் மோசமான வேதனையுடனுமே பார்க்க முடியும். தாங்கள் இறப்பதற்கு முன் தங்களுடைய அன்பான பூர்வீக நிலத்தின் மீது சுதந்தர தேவி ஆட்சி செய்வதைக் காணலாம் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் தியாகம் செய்திருக்கும் பலர் பொது வாழ்க்கையில் உள்ளனர்.
அவர்கள் எல்லா வகையான அவமானங்களையும், துன்பங்களையும், இழப்புகளையும் தாங்கி, சுகங்களையும் வசதியையும் தியாகம் செய்திருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைக் கூடப் புறக்கணித்து, சுதந்திரத்தை அடைவதை வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய இந்த விருப்பத்தின் காரணமாக வெளிநாட்டிலிருந்து வந்த ஆட்சியாளர்களாலும் ஏன் சில உள்நாட்டவராலும் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட எல்லா விதமான வசவுகளையும், அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் சகித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். மேலும் சிலர் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள், தங்களை விட முன்னேறி பெரும் பதவிகளைப் பெறுவதைக் கண்டிருக்கிறார்கள். அவர்களின் காலணிகளின் கயிறுகளை அவிழ்க்கக் கூடத் தகுதியற்ற மனிதர்களின் கைகளில் அவமானங்களையும் கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார்கள். குற்றவாளிகளைப் போலவே பின்தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பொதுவான குற்றவாளிகளைப் போல வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.
ஆ) இவை அனைத்திற்கும் பிறகு, இந்துக்களாலும் முசல்மன்களாலும் இந்து-முஸ்லிம் ஒற்றுமை சாத்தியமற்றது, அதாவது சுயராஜ்யம் சாத்தியமற்றது என்று கூறப்படுவதைக் கேட்கிறார்கள். வேறுவிதமாகக் கூறினால், அவர்கள் இதுவரை ஒரு நிழலான, கானல் நீரைப் போன்ற நோக்கத்தைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள், ஒரு மூடர்களின் உலகில் வாழ்ந்து தங்கள் வாழ்வை வீணடித்துக்கொண்டிருந்தார்கள்.
இ) ஓ! இது எவ்வளவு வேதனையான விஷயம். ஆனால் நடப்பதைக் கவனித்தால் இது எவ்வளவு சாத்தியமில்லாதது, பதிலளிக்க இயலாதது என்று தெரியவரும். ஒற்றுமை சாத்தியமற்றது என்று கருதுபவர்களில், ஒளிபொருந்திய முன்னணி மனிதர்கள், கல்வியாளர்கள், புலமைத்திறம் உள்ளவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், பெரும் பதவியில் உள்ளவர்கள், அரசியல் தவிர வேறு துறைகளில் பெரும் சேவை செய்தவர்கள், தியாகத்தின் சாதனையைப் பெற்ற மனிதர்கள் என்று பலதரப்பட்டவர்கள் உள்ளனர். மறுபுறம், இதுவும் கடந்து போகும் என்று சொல்லக்கூடியவர்கள், இந்துக்களும் முஸல்மான்களும் முல்தான், சஹரன்பூர், டெல்லி, அலகாபாத், லக்னோ, ஷாஜகான்பூர், லாகூர், அம்ரித்ஸர், அமேதி, சம்பல், குல்பர்கா, கோஹட் போன்ற இடங்களில் நடைபெற்றவற்றை மறந்து ஒருவரோடொருவர் கைகுலுக்கி, பிரிட்டிஷர் வெளியேறியவுடன் அன்போடும் ஆதரவோடும் ஒன்றுபடுவார்கள் என்று சொல்பவர்கள் உள்ளனர். அவர்களைப் பொருத்தவரை தற்போது தேவைப்படுவது இரு தரப்பிற்கும் இடையேயான வெளிநாட்டவரை வெளியேற்றக்கூடிய ஒருவித ஒற்றுமை. அவநம்பிக்கையை நிறைந்துள்ள தற்போதைய நிலையில், இந்த ஒற்றுமை எப்படி சாத்தியப்படும், வெளிநாட்டவர் எப்படி வெளியேறுவார்கள், அப்படியே வெளியேறினாலும், அது எப்படி இந்து முஸ்லிம் வேறுபாடுகளைக் களையும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் சொல்வதில்லை. கோவில்களையும் மசூதிகளையும் சூறையாடி அவமதிப்பது வெளிநாட்டவரா? மக்களைக் கொன்று சொத்துக்களை எரிப்பவர் அவர்களா? குழந்தைகளையும் பெண்களையும் தாக்குவதும் அவமதிப்பதும் அவர்களது கைவரிசையா? இல்லை. அந்தக் கைகள் இந்தியர்களுடையவை, ஆனால் மூளை வெளிநாட்டினவருடையது.
ஈ) சரி, அப்படியே நடக்கவேண்டும் என்று விரும்பினாலும், அதற்கேற்ப நம்முடைய மூளைகளை எப்படிச் செயல்படுத்துவது. கிட்டத்தட்ட எல்லா வகையிலும் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமே இது சாத்தியம் என்பதே இதன் பதிலாக இருக்க முடியும். மகாத்மாஜியே சராசரி முசல்மான் ஒரு முரட்டு ஆசாமி என்றும், சராசரி இந்து ஒரு கோழை என்றும், கோழைத்தனம் மரணத்தை விட மோசமானது என்றும் கூறினார்; ஆயினும் அவர் பரிந்துரைத்த தீர்வு என்னவென்றால், இந்துக்கள் அரசியல் துறையில் முசல்மான்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் கோரிய அனைத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது. அந்த விதியை பஞ்சாபிற்குப் பயன்படுத்தினால், முஸ்லிம்கள் 55, சீக்கியர்கள் 33, முஸ்லிமல்லாதவர்கள் – சீக்கியரல்லாதவர்கள் 12 என்ற விகிதத்தில் பிரதிநிதித்துவம் பெறுவார்கள். அதுதான் தீர்வா? இல்லை என்கிறார்கள் முஸ்லிம்கள். நாங்கள் சலுகைகளை விரும்பவில்லை, எங்கள் உரிமைகளை நாங்கள் விரும்புகிறோம் என்கிறார்கள்; உரிமைகள், அவர்கள் பார்வையில் மேலே கூறப்பட்டவையே.
அவர்களின் சார்பாகப் பேசும் பலர் கூறுகிறார்கள்: “நீங்கள் இப்போது அவ்வாறு செய்யாவிட்டால், உங்களிடம் சுயராஜ்யம் இருக்காது.” இன்னொருவர் கூறுகிறார்: “நீங்கள் இப்போது அவ்வாறு செய்யாவிட்டால், சுதந்திரத்தை நீங்கள் பெற்றவுடன் நாங்கள் உங்களுக்கு எதிராக ஜிஹாத்தை அறிவிப்போம்.” இங்கே அனைத்து நிறுவனங்களிலும் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தையும், அரசாங்க சேவைகளின் ஒரு நிலையான விகிதத்தையும் ஆதரிக்கும் தேசியவாத முஸ்லிம் தலைவர்கள், “ஜியாவுதீன்களையும் ஃபஸ்ல்-இ-ஹுசைன்களையும் பொருட்படுத்தவேண்டாம், அவர்கள் யாருக்கும் பிரதிநிதிகளல்ல, மாறாக வெளிநாட்டினரிடம் கூட்டணி வைத்திருக்கிறார்கள்” என்கின்றனர்.
ஆனால், தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஜியாவுதீன், பாஸ்ல்-இ-ஹுசைன் போன்றவர்களின் கோரிக்கைகள்தான் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள், இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஒருவர் எம். ஏ. ஜின்னா, எஸ்குவேர் என்றும், மற்றவர் டாக்டர் ஜியாவுதீன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்துக்களிடையேயும் அதிகமான ஜியாவுதின்கள் மற்றும் ஃபஸ்ல்-இ-ஹுசைன்கள் இருப்பதை நம் நண்பர்கள் மறந்து விடுகிறார்கள், இந்து தேசியவாதிகள் அவர்களுக்குச் செவிசாய்த்திருந்தால், அரசியல் சுதந்திரத்திற்கான எந்த இயக்கமும் இருந்திருக்காது. அந்த இயக்கம் இல்லாமல் இந்திய அரசாங்கத்தில் ஷாஃபிகள், சர்மாக்கள் மற்றும் சப்ருக்கள் இருந்திருக்க மாட்டார்கள்; மாகாண அரசாங்கங்களில் ஃபஸ்ல்-இ-ஹுசைன்கள் மற்றும் மஹ்முதாபாத்ஸ் இருந்திருக்க மாட்டார்கள்.
உ) குறைந்த பட்சம் இந்து தேசியவாதிகளுக்கு இந்த நற்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்: அவர்களின் முயற்சிகள் நாட்டை ஸ்வராஜ்யத்திற்கு அருகில் கொண்டுவருவதில் முக்கியமான கருவியாக இருந்தன, கற்றறிந்த முஸ்லிம் சமூகம், ஒரு சில கெளரவமான விதிவிலக்குகளுடன், கடந்த காலத்திலும், சிறிது காலத்திற்கு முன்பு வரையிலும் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இந்துக்கள் எந்த சிறப்பு உதவிகளையும் விரும்பவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் நீதி மற்றும் பாரபட்சமற்ற தன்மை. தற்போதைய நிலைமை எந்த வகையிலும் முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமற்றதாக இருந்தால், ஒரு நிபந்தனைக்கு உட்பட்டு முஸ்லிம்கள் விரும்பும் எந்த மாற்றங்களுக்கும் அவர்கள் உடன்படத் தயாராக இருப்பார்கள். உண்மையான, நீடித்த ஒற்றுமையை சாத்தியமற்றதாக்கும் எந்தவொரு சமரசத்திற்கும் அல்லது ஏற்பாட்டிற்கும் அவர்கள் ஒத்துழைத்திருக்கவும் மாட்டார்கள்.
கடவுளின் பொருட்டு, எங்களை ஜிஹாத்தை வைத்து அச்சுறுத்த வேண்டாம். நாங்கள் பல ஜிஹாத்களைப் பார்த்திருக்கிறோம்! கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக, நமது தேசிய வாழ்வின் ஒவ்வொரு நாளும் அந்த அறைகூவலை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆயினும்கூட, ஜிஹாதிக்கள் நம்மை அழிப்பதில் வெற்றியடையவில்லை, கடவுள் விரும்பினால், ஜிஹாத்தின் எந்த அச்சுறுத்தலும், தொடர்ந்து வாழ வேண்டும் என்ற நம்முடைய உறுதியின் காரணமாக, ஒரு ரோம அளவிற்குக் கூட நம்மை பாதிக்காது. நமது இனவாத வாழ்க்கையை தேசிய வாழ்க்கைக்கு அடிபணிய வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒன்றுபட்ட தேசிய இருப்புக்காக, நாங்கள் எதையும் செய்வோம், ஆனால் அச்சுறுத்தல்கள் அல்லது வற்புறுத்தலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். இந்துக்கள் மீதான முஸ்லிம்களின் அவநம்பிக்கை ஸ்வராஜ்யத்தின் வழிகளை வெற்றிகரமாகத் தடுக்க முடியும் என்பது உண்மைதான், ஆனால் சகோதர முஸ்லிம்களே! இதேபோன்று இந்து விரோதம் இஸ்லாமிய உலகிற்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். ஆகவே இந்த அச்சுறுத்தல்கள், அவநம்பிக்கைகளைத் தவிர்த்து. சுதந்திரம் பெறுவதற்காக வாழ்வோம், போராடுவோம். ஒருவர் மற்றவருக்காக வாழ்வோம், இறப்போம், இதனால் இந்தியா ஒரு தேசமாக வாழவும் வளரவும் முடியும். இந்தியா இந்துக்களுக்காக மட்டுமோ முஸ்லிம்களுக்காக மட்டுமோ அல்ல. அது ஒன்றே. அது இந்தியா.
ஊ) இந்துக்களிடம், “இந்த நாட்டில் ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்கும் கனவு உங்களில் யாருக்காவது இருந்தால்; அதாவது முசல்மான்களை நசுக்கி இந்த நிலத்தில் மிக உயர்ந்த சக்தியாக அவர்கள் இருக்க முடியும் என்று நினைப்பவர்கள் இருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று சொல்லுங்கள், அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள், அவர்களின் பைத்தியக்காரத்தனம் அவர்களின் நாட்டோடு சேர்ந்து இந்து மதத்தையும் அழித்துவிடும் என்று சொல்லுங்கள். கடவுளின் பொருட்டு அவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள், பெற்றவர்களைக் கொல்லும் குற்றவாளியாக இருக்காதீர்கள். உங்களுக்கு உதவ இந்தியாவுக்கு வெளியே யாரும் இல்லை. நீங்கள் உலகில் ஒரு தனிமையான அனாதையைப் போன்றவர்கள், உங்கள் நிலைப்பாடு கத்திமேல் நடப்பதைப் போன்றது. விவேகமானவர்களாக இருங்கள், நீதி, நியாயமான அணுகுமுறை மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் கட்டளைகளைக் கேட்க நீங்கள் தயாராக இருங்கள். தியாகம் உங்கள் ஆர்வத்தைக் குறைக்கவோ அல்லது தேசத்திற்கான உங்கள் விருப்பத்தைக் குலைக்கவோ செய்யாது. உங்கள் தற்பெருமையை விட்டுவிட்டு, நியாயத்தையும் பொது அறிவையும் பயன்படுத்துங்கள். அதுதான் லட்சியத்தை அடைவதற்கான ஒரே வழி” என்று சொல்வேன்.
எ] மகாத்மா காந்தி போன்ற தலைவர்களிடம் நான் மிகவும் வணக்கத்துடன் கூறுவேன்: “ஐயா, வண்டியைக் குதிரையின் முன் வைக்க வேண்டாம். இல்லாத நிலைமைகள் இருப்பதாகக் கருத வேண்டாம். அனுபவத்தின், எச்சரிக்கையின் குரலைக் கேளுங்கள். எந்த நன்மையும் தராத, நாட்டைத் துண்டாடக்கூடிய அனுமானங்கள் மற்றும் ஊகங்களுடன் வேகமாகச் செல்வதை விட மெதுவாக முன்னேறுவது நல்லது. வேகம் எந்த நன்மையும் செய்யாது. தீர்மானங்கள் மற்றும் அறிவுரைகளால் மனித இயல்புகளை மாற்ற முயலாதீர்கள். தேவையான நேரத்தை அளியுங்கள்.” 1920- 1921ம் ஆண்டுகளில், மகாத்மா காந்தி நாட்டின் பொது வாழ்க்கையைப் பற்றி அதிக அனுபவமுள்ளவர்களின் குரலைக் கேட்டிருந்தால், 1923-1924ம் ஆண்டின் எதிர்வினைகள் அவ்வளவு கொடூரமாக இருந்திருக்காது என்று நான் நம்புகிறேன். ஏழு கோடி முஸ்லிம்கள் ஒத்துழையாமை ஏற்றுக்கொண்டார்கள் என்ற அனுமானம் முற்றிலும் தேவையற்றது. படித்த முஸ்லிம்கள் தாங்கள் பெறத் தொடங்கியிருந்த, இந்துக்கள் ஏற்கெனவே பெற்றிருந்த, முன்னேற்றம், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மிக அதிகம். இந்தக் கோரிக்கை தலைவர்களின் மீதான நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தியது. ‘கோரிக்கையைக் கேட்கவில்லை’ என்பதற்காக நான் அவர்களைக் குறை கூறவில்லை. வாழ்க்கையின் யதார்த்தங்கள், மனித இயற்கையின் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நமது பணியை மீண்டும் தொடங்குவோம். இந்த முயற்சிகள் பலனளிப்பதை நமது வாழ்நாளில் காணக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆமென்!
ஏ) நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் இங்கே சொல்லவில்லை. சமீபத்தில் எனது கவனத்திற்கு வந்த சில முக்கியமான, விரும்பத்தகாத உண்மைகளை நான் வேண்டுமென்றே வெளியிடவில்லை. அவற்றிற்கு விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கையில் இதைச் செய்திருக்கிறேன்.
(நிறைவு)
பாகம் 12 | பாகம் 11 | பாகம் 10 | பாகம் 9 | பாகம் 8 | பாகம் 7 | பாகம் 6 | பாகம் 5 | பாகம் 4 | பாகம் 3 | பாகம் 2 | பாகம் 1