Posted on 1 Comment

எல்.முருகன் நேர்காணல் | அபாகி

கிட்டத்தட்ட ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு பா.ஜ.க. மாநிலத் தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு உரையாட சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்றிருந்தோம். தொண்டர்கள், பிரமுகர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருந்த அவர், அதற்கு மத்தியில் ‘வலம் இதழுக்காக உரையாடினார். வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு கேள்விகளை முன்வைத்தோம்.

நாமக்கலில் தொடங்கி பா.ஜ.க. மாநிலத் தலைவர் வரை, உங்கள் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் 11ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு படிக்கும்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊருக்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரக் (முழு நேர ஊழியர்) ஸ்ரீகணேசன்ஜி வந்திருந்தார். எங்கள் பகுதி, பட்டியலின மக்கள் வசிக்கின்ற பகுதி.

ஆனால், எந்த வித்தியாசமும் பார்க்காமல் எங்களோடு பழகி எங்கள் வீட்டில் சாப்பிட்டு, ஷாகாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அது எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பரமத்தி வேலூரில் பிளஸ் 2 முடித்துவிட்டு, 1996ல் சென்னையில் சட்டக் கல்லூரியில் சேர்ந்த உடனேயே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பில் சேர்ந்தேன். முதலில் சட்டக் கல்லூரி ஏபிவிபி கிளைத் தலைவர், மாநகரத் தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர், மாநில இணைச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறேன். படித்து முடித்து வழக்கறிஞரானதும், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பட்டியலின மக்கள் மதம் மாறுவதைத் தடுக்க தர்ம ரக்‌ஷண சமிதியில் பணியாற்றினேன். 

பிறகு 2006ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, சங்ககிரி தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காகப் போட்டியிட்டேன். பிறகு, எஸ்.சி. அணியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டேன். 2009ல் எஸ்.சி. அணி மாநிலத் தலைவர். 2014 வரை அந்தப் பொறுப்பில் இருந்தேன்.

2014ல் மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்தது. மத்திய அரசு வழக்குரைஞராகவும் தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் ஃபௌண்டேஷன் உறுப்பினராகவும் பணியாற்றினேன். அப்போது எஸ்.சி. அணியின் தேசியச் செயலாளராகவும், கேரளாவுக்குப் பொறுப்பாளராகவும் இருந்தேன். 

2017 மே மாதம் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டேன். ஆணையத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 250 மாவட்டங்களின் ஆணையத்தின் பணிகளை விரிவுபடுத்தியுள்ளோம். தற்போது பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

மூத்த தலைவர்கள் மத்தியில் இளம் தலைவர். எப்படி பார்க்கிறீர்கள்?

தொண்டர்கள் மத்தியில் இருக்கும் தொண்டனாக வேலை செய்யவே எனக்கு விருப்பம். அதைப் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறேன். சாதாரண தொண்டனான எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கட்சி வழங்கியிருக்கிறது. மூத்த தலைவர்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்துப் பணியாற்றுவேன்.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மீண்டும் பாஜக உறுப்பினர்கள் என்ற விஷயத்தை நீங்கள் முன்வைத்திருக்கிறீர்கள்?

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. இடத்தைப் பெற்றிருக்கிறோம். அது தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே, மீண்டும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற விஷயத்தை நான் முன்வைத்திருக்கிறேன்.

அதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். முதலில் கட்சியை பலப்படுத்தியிருக்கிறோம். கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் முடிந்துள்ளன. பூத் கமிட்டிகளைப் பலப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அந்த வேலைகளும் தற்போது முடிந்துள்ளன. 

மக்களைத் தினந்தோறும் நாம் சந்தித்து வருகிறோம். சிஏஏ ஆதரவு பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். மத்திய அரசுத் திட்டங்களில் பயனடைந்தவர்களின் மாநாடு நடத்தியிருக்கிறோம். அது மட்டும் இல்லாமல், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு பணிகளைத் தொடங்கியுள்ளோம். அந்த இடங்களில் நம் முழு சக்தியையும் கொடுத்து, அங்கு வெற்றி பெறுவதற்கான வேலைகளை நாம் செய்வோம். 

சமீபத்தில் முரசொலி நில விவகாரம் தொடங்கி பஞ்சமி நில மீட்பு விவகாரத்தில் நீங்கள் பெரிய அளவில் பணிபுரிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளதே?

பஞ்சமி நில மீட்பைப் பொருத்தவரை, நான் கமிஷனுக்கு வருவதற்கு முன்பே பேசி வருகிறேன். 2011ம் ஆண்டு பாஜக எஸ்.சி. அணி மாநாட்டை சேலத்தில் நடத்தினோம். தற்போதைய குடியரசுத் தலைவரும் அப்போதைய எஸ்.சி. அணி தலைவருமான ராம்நாத் கோவிந்த்ஜி, தற்போதைய மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்ஜி, முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணன்ஜி போன்ற பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். அந்த மாநாட்டில் இரண்டே கோரிக்கைகளைத்தான் நாம் முன்வைத்திருக்கிறோம். ஒன்று, பஞ்சமி நில மீட்பு, இரண்டாவது ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாது என்பது. அப்போதிருந்தே பஞ்சமி நிலங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வருகிறோம். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்குச் சென்ற பிறகு இன்னும் உத்வேகம் கிடைத்தது. அது சம்பந்தமான பல்வேறு வழக்குகளை முன்னெடுத்து மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். 

சமீபத்தில் திருச்சியில் கொல்லப்பட்ட விஜயரகுவின் குடும்பத்துக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மூலம் நிவாரணம் கிடைக்கச் செய்திருக்கிறீர்கள். பட்டியலின மக்கள் இதுபோல் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியுண்டு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்களா?

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2015ல் வன்கொடுமை சட்டத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறோம். அதையடுத்து, 2016ல் அந்தச் சட்டத்தின் கீழ் விதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். அதன்படி, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டால் அவரது குடும்பத்துக்கு ரூ.8.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வீடு, குடும்ப ஓய்வூதியம், இறந்தவரின் குழந்தைகளைப் படிக்க வைப்பது என்று சட்டத்தில் சேர்த்துள்ளோம். அதுபோல, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் போன்ற அம்சங்களையும் சேர்த்துள்ளோம். அதன்படி, பாதிக்கப்படும் மக்களுக்கு நாம் உதவி வருகிறோம்.

பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராக நியமித்ததன் மூலம் எங்களைப் போன்ற கட்சிகளை பாஜக நசுக்க முயலுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் கூறியுள்ளாரே?

உண்மையிலேயே யாரும் எதிர்பாராத ஒன்று தமிழகத்தில் நடந்திருக்கிறது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. முக்கியமாக, தலித் அரசியல் நடத்துகின்ற, திராவிட, இடதுசாரி எண்ணம் கொண்ட அரசியல்வாதிகள் அதிர்ந்து போயிருக்கின்றனர். ஏனென்றால், பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரானது என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக வந்ததில்லை. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவர் பதவிக்கு வர முடியும். ஆனால், தேசியமும் தெய்வீகமும் இணைந்த பாஜகவில் மட்டுமே சாமானியர்களும் தலைவர்களாக முடியும். பட்டியலினத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் ஏற்கெனவே தேசியத் தலைவராக இருந்துள்ளார்.

தலித் அரசியல் பேசும் கட்சிகள், தலித் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, மூளைs சலவை செய்து வருகின்றன. அவர்களுக்கு இந்த நியமனம் பேரிடி தான்.

உங்கள் நியமனத்துக்கு வாழ்த்து தெரிவிக்க தலித் தலைவர்கள் தொடர்பு கொண்டார்களா?

அண்ணன் ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி, செ.கு.தமிழரசன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிகண்டன் என ஏராளமான தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். தினந்தோறும் பட்டியலின மக்கள் கமலாலயத்துக்கு வந்து வாழ்த்து தெரிவித்து, தங்கள் பகுதிகளில் கொடியேற்ற வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். 

இன்றைய நிலைமையில் பா.ஜ.க.வின் அரசியல் எப்படி இருக்கப் போகிறது?

நம்மைப் பொருத்தவரை, வளர்ச்சியை நோக்கிய அரசியலை, நேர்மறையான அரசியலைத்தான் விரும்புகிறோம். மத்திய அரசுத் திட்டங்களில் அதிகப்படியான பலன்களை தமிழகம் பெற்றுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், முத்ரா கடன், பிரதமர் காப்பீட்டுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களில் பயனடைந்துள்ளார்கள். தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மாவட்டம்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியபோது, குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் பயனாளிகள் வரை மத்திய அரசுத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர். அவர்கள் மத்தியில் மாநாடுகளை நடத்துவோம்.

தமிழகத்தில் நாடார், கவுண்டர், தேவர் என ஒரு சில இடங்களில் பிரதிநிதித்துவம் பெற்ற சமுதாயத்தினர், ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னேறி வருகிறார்கள். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதிநிதித்துவம் பெற்ற சமுதாயம், பட்டியலின மக்கள். இங்கு பட்டியலினத் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்களே தவிர, சமுதாயம் முன்னேறியதாகத் தெரியவில்லையே?

நிச்சயமாக அந்தத் தலைவர்களால் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. அதற்கான விருப்பமும் அவர்களுக்கு இல்லை. பட்டியலின மக்கள் முன்னேறக் கூடாது, அவர்களை இப்படியே வைத்திருந்து, வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பல பட்டியலினத் தலைவர்களின் நோக்கமாக இருக்கிறது. அவர்களிடம் தேவையான வளங்கள் இருந்தும் ஒரு சமுதாயக் கல்லூரியையோ அல்லது சமுதாயப் பள்ளிகளையோ உருவாக்க முடியவில்லை. அப்படியென்றால் அவர்கள் வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பட்டியலின மக்களை வாக்கு வங்கியாக, தாங்கள் சொல்பவற்றை மட்டுமே செய்பவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை மாற்றும் வேலையில்தான் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களை மேம்படுத்த பாஜக பாடுபடும்.

மின்சாரம், நீர்ப்பாசனத் திட்டங்கள், காவிரி போன்ற நதி நீர் இணைப்புத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றைச் செயல்படுத்த உங்கள் பணிகள் எப்படி இருக்கப் போகிறது?

சில திட்டங்களை மத்திய அரசு மட்டுமே செய்ய முடியும். சில திட்டங்களை மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்த வேண்டியிருக்கும். நிலம் கையகப்படுத்துதல் போன்ற விஷயங்கள் சிறிது நேரமெடுக்கும். நாம் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பாலமாக இருந்து திட்டங்களை முடிக்கப் பாடுபடுவோம்.

நீங்கள் தலைவராக வருவதற்கு முன்னால் ஆறு மாதங்களாக கிட்டத்தட்ட 15 பேரின் பெயர்கள் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு அடிபட்டன. ஆனால், அந்தப் பட்டியலிலேயே இல்லாத நீங்கள் தலைவராக வந்திருக்கிறீர்கள்? கட்சியில் அதிருப்தி ஏற்படவில்லையா?

முற்றிலும் மாறுபட்ட விஷயங்களைத்தான் மக்கள் நினைத்திருக்கிறார்கள். பாஜக, ஒரு கட்டுப்பாடுள்ள கட்சி. இங்கு ஒரு முடிவை அனைவரும் சேர்ந்தே எடுக்கிறார்கள். அதனால், அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. 

பல்வேறு தலைவர்களுடன் நீங்கள் பழகியிருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைக் கூறுங்களேன்?

பல அனுபவங்கள் இருக்கின்றன. முக்கியமாக, பாரதிய கிசான் சங்கத்தில் இருக்கும் மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் ஸ்ரீகணேசன்ஜி. அவர் எங்கள் கிராமத்துக்கு வந்து என்னை அழைத்து வந்தபோது எனக்கு ரொம்ப சின்ன வயது. எங்கள் கிராமத்தில் ஜாதி வித்தியாசம் பார்ப்பதுண்டு. ஆனால், ஸ்ரீகணேசன்ஜி எந்த வித்தியாசமும் இல்லாமல், எங்கள் வீட்டில் தங்கி, நாங்கள் சாப்பிட்டும் சாதாரண உணவை சாப்பிட்டுப் பழகியதை இன்றும் கூட மறக்க முடியாது. இப்படிப் பல தலைவர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நான் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இருந்தபோது சடகோபன்ஜி, சுரேந்திராஜி போன்ற தலைவர்கள். கல்லூரி படித்தபோது நான் தி.நகரில் இருந்த ஏபிவிபி அலுவலகத்தில்தான் தங்கியிருந்தேன். நான் இயக்கத்துக்கு வந்து, 10 வருஷங்கள் கழித்து பாஜகவுக்கு வந்த பிறகு, மாநில எஸ்.சி. அணி பொறுப்பு ஏற்கும் வரை நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்றும் யாரும் பார்த்ததில்லை. 

தமிழக பாஜக அனைத்து மூத்த தலைவர்களுடனும் பழகியிருக்கிறேன். அனைவரும் நல்ல எண்ணம் கொண்ட தலைவர்கள்தான். அதுபோல, தேசியத் தலைவர்கள். முக்கியமாக, இன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்ஜி. என்னோடு இருசக்கர வாகனத்தில் கூடப் பயணித்திருக்கிறார். மெரீனா கடற்கரைக்கும் சென்று சுற்றிக் காண்பித்துள்ளேன். இப்படிப்பட்ட தலைவர்களுடன் பழகும் வாய்ப்பை இந்த இயக்கம்தான் எனக்குக் கொடுத்தது. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் சாதாரண தொண்டன் கூடப் பழக முடியும் என்பதுதான் நமது இயக்கத்தின் பலம்.

பாஜக என்றால் ‘வித்தியாசமான கட்சி’ (Party with difference) என்பார்கள். அதை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டங்கள் ஏதும் உள்ளதா?

என்னுடைய நியமனத்திலேயே பா.ஜ.க. வித்தியாசமான கட்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் கட்சி பாஜக மட்டுமே. இந்தக் கட்சியில் எவரும் தங்கள் கருத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். அதுபோல, சாதாரண தொண்டர்களுடன் மிகப்பெரிய தலைவர்களும் வரிசையில் நிற்பதை இங்கு மட்டும்தான் பார்க்க முடியும்.

பட்டியலின மக்களின் வளர்ச்சி திமுக போட்ட பிச்சை என்கிறாரே ஆர்.எஸ்.பாரதி?

இந்தப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதை நான் ஏற்கெனவே கண்டித்துள்ளேன். டாக்டர் அம்பேத்கர் அளித்த அரசியல் சாசன உரிமைப்படி, பட்டியலின மக்கள் கல்வி கற்று இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். கர்நாடகம், கேரளம் என மற்ற மாநிலங்களிலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். கேரளத்தில் இருந்து உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். ஆர்.எஸ்.பாரதி பேச்சு, ஒரு ஆணவப் பேச்சு.

*

மிகத் தெளிவான பார்வையுடன் உறுதியாகப் பேசினார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.

1 thought on “எல்.முருகன் நேர்காணல் | அபாகி

Leave a Reply