திருதராஷ்டிரன் பார்வையற்றவனாக இருந்த காரணத்தால் மட்டுமே அரசு பாண்டுவின்வசம் ஒப்புவிக்கப்பட்டது என்றல் அது ஒரு Care taker அரசுதானே? அப்படியானால், பாண்டவர்களுக்கு ஆட்சியில் எப்படி உரிமை வந்தது? அவர்கள் எப்படி அரசுரிமை பெறுகிறார்கள்?
மக்களாட்சி மலர்ந்துவிட்ட காலத்தில் வசிக்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்—அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலைமைகள் — மிகவும் மசங்கலாகவே தெரிவிக்கப்பட்டும் புரிந்துகொள்ளப்பட்டும் இருக்கின்றன. இராமாயண பாரத இதிகாசங்களையும் பாகவதம் முதலான புராணங்களையும் ஆழ்ந்து படிக்கும்போது ஒரு பேருண்மை புலப்படுகிறது. மக்களாட்சிக் காலத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மன்னராட்சிக் காலத்தில், மன்னர்கள், மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்திருக்கின்றனர்; மக்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்திருக்கின்றனர். சொல்லப் போனால், ஒரு நாட்டில், மன்னனுக்கு உரிய இடம் என்ன என்பது காலந்தோறும் காலந்தோறும் மாறிக் கூட வந்திருக்கிறது. “நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று புறநானூறு பாடியது. ஒரு நாட்டுக்கு நெல்லோ, நீரோ உயிரன்று. மன்னன்தான் நாட்டின் உயிர் என்றொரு கருதுகோள் சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவி வந்திருக்கிறது. அதாவது, நாடு உடல் என்றால், மன்னன் அந்த உடலுக்கமைந்த உயிர் என்று பொருள்படும். கம்பன் இதைத் தலைகுப்புறக் கவிழ்த்துப் போட்டான். பால காண்டத்தில், தசரதன் அரசாண்ட முறையை வருணிக்கும்போது,
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.
என்று தசரதன் அரசாண்ட தன்மையைச் சொல்கிறான். ‘வச்சிரத்தால் இயன்ற சிறந்த ஆபரணங்களை அணிந்தவனும், சிங்கம் போன்ற வலிமை கொண்டவனுமான தசரதன், குற்றமற்ற இவ்வுலகிலே பொருந்தியுள்ள அத்தனை உயிர்களும் ஒன்றாகத் தங்கி நிலைபெறுவதற்குரிய உடலாக நின்று மக்களைக் காத்தான்’ என்று கம்பன் பேசும்போது, ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்ற கருத்தாக்கம் முற்றிலுமாக அடிபட்டுப்போய், மக்கள்தான் உயிர். மன்னன், மக்களாகிய உயிர் தங்குவதற்கான உடல்தான் என்ற புதுக் கருத்து உயிர் பெறுகிறது. இதில் இன்னொரு கருத்தும் பொதிந்திருக்கிறது. நிலைபெற்று நிற்பது மக்கள்தாம். மன்னர்கள் காலந்தோறும் மாறக் கூடியவர்கள். உயிரானது ஒரு உடலை நீத்து இன்னொரு உடலாகப் பலவேறு உடல்களை, பற்பல பிறவிகளில் அடையக்கூடியது. எனவே, மன்னன், மன்னனுக்கு அடுத்த மன்னன், அவனுக்கு அடுத்த மன்னன் என்று மாறிமாறி வரக்கூடிய மன்னர்கள் உடல்களே; மக்களே உயிர் என்று மக்களாட்சித் தத்துவத்தின் வித்தை ஆழ ஊன்றினான் கம்பன்.
ஆனால், கம்பனுடைய பாடல்களில், அயோத்தியா காண்டத்தில்
வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? – தீயோய்!
என்று மந்தரையைப் பார்த்து கைகேயி பேசுவதாக வரும் பாடலின் நுண்பொருளை மிகப் பல அறிஞர்கள் ஆழ ஊன்றிப் பாராதது துரதிர்ஷ்டமே. இந்தப் பாடலின் மேற்போக்கான பொருளை நோக்கும் போது — அதாவது, தற்காலங்களில் அறிஞர் பெருமக்கள் உரைத்து வரும் உரைகளின் அடிப்படையில் பார்க்கும் போது — ஒரு மன்னனுடைய மூத்த மகனுக்கே அரசுரிமை என்பது ஒருவித தானியங்கு உரிமை — automatic right — என்ற அபிப்பிராயமே இப்போது நம்மிடையே நிலவி வருகிறது. கம்பராமாயணத்தில் வரும் இந்தப் பாடலுக்கு உரிய இடம் பொருள் ஏவலுடனான ஆழ்பொருளை நாம் கவனிக்கத் தவறுகிறோம். அது மட்டுமேயல்லாமல், இக்ஷ்வாகு வம்சத்திலும் சரி, குரு வம்சத்திலும் சரி, மூத்த பிள்ளைகள் மோசமான பிள்ளைகளாக இருந்தார்களேயானால் அவர்களை நாட்டை விட்டே துரத்தி, காட்டுக்கு அனுப்பிவிடுவதும் நிகழ்ந்திருக்கிறது. அப்படிக் காட்டுக்கு அனுப்பப்பட்ட பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடைத்ததா என்றால், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த அசமஞ்சன் என்ற அயோக்கிய சிகாமணியின் மகனுக்கு மட்டுமே அரசு கிடைத்திருக்கிறது; ‘முன்னமொரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ? நல்லோர் தமதுள்ளம் நையச் செயல் செய்தான், பொல்லாத வேனன் புழுவைப்போல் மாய்ந்திட்டான்’ என்று பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில் சொல்லும் வேனன் கதை, பாரதத்தின் சாந்தி பர்வத்தில் வருகிறது. மிகவும் பொல்லாதவனாக இருந்த இந்த வேனனை அந்தணர்கள் சூழ்ந்துகொண்டு தர்ப்பைக் கட்டால் அடித்துக் கொன்றனர். (பாரதி பாஞ்சாலி சபதம் எழுதுவதற்கு முன்னால் 7.8.1909 தேதியிட்ட இந்தியா பத்திரிகையில் இந்த வேனன் கதையைச் சற்று விரிவாக எழுதியிருக்கிறான்.) ‘அப்படிக் கொல்லப்பட்ட வேனனுடைய தொடையைக் கடைந்து ஒரு மகனை உண்டாக்கி அவனுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தார்கள்’ என்று பீஷ்மர் சாந்தி பர்வத்தில் சொல்கிறார். இந்த இருவரைத் தவிர்த்த மற்றவர்கள் விஷயத்தில் அவ்வாறு நடைபெறவில்லை என்பது நோக்கத் தக்கது. அது மட்டுமேயல்லாமல், ஐந்தாவது மகனும், மூன்றாவது மகனும் அரசனாகப் பொறுப்பேற்றதும் நடைபெற்றிருக்கிறது. யயாதியின் ஐந்தாவது மகனான பூருதான் அரசேற்றான். அவன் வம்சம்தான் பௌரவ வம்சமாகி, பின்னாளில் அந்த வம்சத்திலுதித்த குருவின் பெயரால் கௌரவ வம்சமானது. பீஷ்மரின் தந்தையான சந்தனு மகராஜா, அவருடைய தந்தையான பிரதீபனுக்கு மூன்றாவது மகன். சந்தனுவுக்கு தேவாபி, வாலிகன் என்று இரண்டு அண்ணன்கள் இருந்தனர்.
பாண்டு நாட்டை யாரிடம் ஒப்படைத்தான் என்ற விவரம் ஆதிபர்வத்தில், ஒப்படைக்கும் சமயத்தில் இல்லை. பின்னால் உத்தியோக பர்வத்தி்ல் இந்த உண்மைகளையெல்லாம் துரியோதனிடத்தில் திருதராஷ்டிரனும், துரோணரும் சொல்கிறார்கள். இதுவரையில் நான் படித்த எந்தப் பதிப்பிலும் ஆய்விலும் இல்லாத செய்தி இது. ‘பட்டம் சூட்டப்பட்டவன் பாண்டுவே. ஆகவே, அவனுடைய மக்களே இயற்கையான வாரிசுகள். அரசில் எனக்கே உரிமை இல்லை என்னும்போது, உனக்கு எங்கிருந்து உரிமை வந்தது’ என்று திருதராஷ்டிரன் கேட்கிறான். (உரிய மேற்கோள்களைச் சற்றுப் பொறுத்துத் தருகிறேன்.) அதைத் தொடர்ந்து துரோணர் ராஜ்யத்தைப் பாண்டு எப்படி, யார்யாரிடம் ஒப்படைத்தான், எப்படி விதுரர் நிதிக்குப் பொறுப்பேற்றார், எப்படி பீஷ்மர் ராணுவத்துக்குத் தலைமையேற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானர் என்பதையெல்லாம் சொல்கிறார்.
குடியாட்சியில் மக்களுக்கு அஞ்சுவதைக் காட்டிலும் முடியாட்சியில், அதாவது இந்திய, இதிகாச முடியாட்சியில் மக்கள் கருத்துக்குப் பெரிதும் அஞ்சியிருக்கிறார்கள். இதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஒவ்வொரு கட்டத்திலும் திருதராஷ்டிரனும், துரியோதனனுமே ‘மக்கள் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள்’ என்று தயங்கி இருக்கிறார்கள். பிரமாணகோடியில் பீமனுக்கு நஞ்சு வைத்ததும், அரக்கு மாளிகையும், மக்களுக்குத் தெரியாமல் மூடி மறைக்கப்படவேண்டிய அவசியம் என்ன? அரசனை யார் கேள்விகேட்க முடியும்?
ஆகவே, மூத்த பிள்ளை அரசேற்பது என்பது ஒரு உரிமை (ஆடோமேடிக் ரைட்) இல்லை என்பது தெளிவாகிறது. அரசுரிமையை வழங்குவதற்கும் பெறுவதற்கும் நான்கு நடைமுறைகள் இருந்திருப்பதை, பாரத, ராமாயணங்களிலும் மற்ற புராணங்களிலும் சொல்லப்படும் அரசேற்கை நிகழ்வுகளை ஊன்றி ஆயும்போது புலனாகிறது. இந்த நான்கு நடைமுறைகள் யாவை என்றால்,
1. தற்போது அரசனாக இருப்பவன் யாருக்குத் தன் அரசை வழங்க நினைக்கிறானோ அவன் உடலாலும், மனத்தாலும், நடத்தையாலும் தகுதி பெற்றவனாக இருக்க வேண்டும். மூத்த மகன் என்பதற்காக மன வளர்ச்சி குன்றியவனுக்கு அரசைக் கொடுத்துவிட முடியாது; முரடனுக்குக் கொடுத்துவிட முடியாது; உடற்குறை உள்ளவனுக்கும் கொடுக்க முடியாது. (இந்தக் கடைசி அம்சத்தைப் பற்றி, பிற்பாடு இன்னும் சற்று விரிவாகப் பேசுவோம்.)
2. அரசன், அரசை இன்னாருக்குக் கொடுப்பது என்று யாரைத் தீர்மானிக்கிறானோ, அவனுக்கு அரசை வழங்கத் தயாராக இருக்க வேண்டும். தயாராக இருப்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
3. அவ்வாறு அரசன் கொடுக்கும் அரசைப் பெற்றுக் கொள்கிறேன் என்று, அரசன் தீர்மானித்த அந்த மகன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இப்படி அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுத்த மகன்கள் உண்டா என்றால், விதுரன் முதல் பரதன் வரை பலரைக் காட்ட முடியும். இவற்றைப் பிறகு விரிப்போம்.
4. இறுதியானதும் முக்கியமானதும் எதுவென்றால், உடல், மன, நடத்தைத் தகுதியுள்ள, அரசன் தன் அரசை வழங்கத் தீர்மானித்த, அரசை ஏற்றுக் கொள்கிறேன் என்று சம்மதித்த அந்த வருங்கால அரசனை, மக்கள், தங்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வேண்டும்.
இந்த நான்கு காரியங்களும் இராமனுக்கு முடிசூட்ட தசரதன் நினைத்தபோது நடந்ததைப் பார்க்கலாம். இராமன் எல்லா வகையிலும் பொருத்தமானவனாக இருந்தான் — மூத்தவனாகவும் இருந்தான் என்பது கூடுதல் தகுதி; முதல் தகுதியன்று. தசரதன் இராமனுக்கு அரசை வழங்க நினைத்தான்; இராமனை அரசேற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். சொல்லப் போனால், கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். இராமன் அரசேற்க சம்மதித்தான். தசரதன் மக்கள் அவையைக் கூட்டி அவர்களிடம் ஒருமுறைக்கு இருமுறையாக சம்மதம் கேட்டு, ‘இதை எனக்காகச் சொல்கிறீர்களா அல்லது உங்களுக்கு இராமன் அரசேற்பதில் உள்ளபடியே சம்மதமிருக்கிறதா’ என்று கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே இராமனுக்கு முடிசூட்டும் தீர்மானம் எடுக்கப்படுகிறது. இப்போது, மஹாபாரதத்தில் உள்ள மூத்த பிள்ளைச் சிக்கலுக்கு மீள்வோம்.
மஹாபாரதத்தில் அப்படியென்ன மூத்த பிள்ளைச் சிக்கல் என்று ஒருவேளை கேட்கத் தோன்றலாம். நம்மில் மிகப் பலருக்கு, மிகப் பொதுவாக நிலவி வரும் அபிப்பிராயம் ஒன்று உண்டு. திருதராஷ்டிரன், பிறவியிலேயே கண் தெரியாதவனாகப் பிறந்துவிட்ட காரணத்தால், அரசு பாண்டுவிடம் தரப்பட்டது. பாண்டு ஒரு நாள் காட்டில் வேட்டையாடச் செல்லும் போது, தவறுதலாக, புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த மான்களில் ஆண் மானைக் கொன்றுவிட்டான். உண்மையில் அந்த மான் ஒரு ரிஷி என்பது அவனுக்குத் தெரியாது. இறக்கும் போது அந்த முனிவர், ‘நாங்கள் இருந்த நிலையில் நீயும் உன் மனைவியும் இருக்க நேர்ந்தால், அக்கணமே நீ இறப்பாய்’ என்று சபித்துவிட்டு இறந்து விட்டதால், பாண்டு அரசைத் துறந்து காட்டுக்குத் தன் மனைவியரான குந்தியுடனும் மாத்ரியுடனும் சென்றான். சென்றபோது அரசை திருதராஷ்டிரன் பெற்றான். எனவே, அரசு மீண்டும் மூத்த பிள்ளையின் வசம் வந்துவிட்டது. இப்போது, இளைய மகனான பாண்டுவின் புத்திரர்களுக்கு எவ்வாறு அரசில் உரிமை கிடைக்கும்? அவர்களுக்கு அரசுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லையே! அதுதான் அரசு மீண்டும் திருதராஷ்டிரனிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டதே! இனிமேல் அவனுடைய வாரிசுக்குத்தானே அரசுரிமை வந்தாக வேண்டும்? இதில் எங்கிருந்து தருமபுத்திரனுக்குப் பாதி அரசு என்ற பேச்சு எழுந்தது? ஒருவேளை, திருதராஷ்டிரன் மக்களுடைய கருத்துக்கு பயந்து கொண்டு தருமனுக்குப் பாதி அரசைக் கொடுத்திருப்பானோ? அதையுந்தான் இவன் சூதாடித் தோற்றுவிட்டானே! “சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால் மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்” என்றுதானே பாரதிகூட, பாஞ்சாலி சபதத்தில் எழுதுகிறான்! அப்படியிருக்கும் போது, மூத்த மகனான திருதராஷ்டிரனுக்கு மூத்த மகன் என்ற முறையிலும், சூதிலே வென்றவன் என்ற முறையிலும், இரண்டு விதங்களிலும் துரியோதனனுக்குத்தானே அரசுரிமை? இதில் தர்மபுத்திரனுக்கு உரிமை என்ற பேச்சே எழ இடமில்லையே!
இப்படியெல்லாம் பலர் பேசி நானே கேட்டிருக்கிறேன். பலர் என்ன பலர். வெளிப்படையாகச் சொல்வதானால், தற்காலத்தில் மஹாபாரத தொலைக்காட்சி ஒளிபரப்புகளும், கதை சொல்லும் விரிவுரையாளர்களும் இப்படித்தான் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கதைத்து என்ற சொல்லைத் தமிழ்நாட்டு முறைப்படி சொல்கிறேனேயன்றி, பிற நாடுகளில், குறிப்பாக இலங்கையில், பரவலாகப் வழங்கிவரப்படும் பொருளிலன்று! அடுத்ததாக, இவர்களை, விரிவுரையாளர்கள் என்பதைக் காட்டிலும் விரைவுரையாளர்கள் என்பதே பொருந்தும். அப்படியொரு அவசரம்; அள்ளித் தெளித்த கோலம். விஷயம் என்னவென்றால், தற்காலத்தில் உபந்யாச மரபும் முறைப்படி ஓதி உணர்ந்து, மனனம் செய்து அதன் பிறகு கதை சொல்ல வரும் மரபும் அறவே அற்றுப் போய்விட்டது. ‘மஹாபாரதத்தை ஒருமுறை முழுமையாகக் கற்க வேண்டுமானால், ஏழு வருஷம் பிடிக்கும்’ என்று அறுபதுகளின் உபந்யாச சக்ரவர்த்தியான சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் சொல்லியிருப்பது, தற்போது அவருடைய மஹாபாரத உபந்யாச ஸிடி பதிவாகக் கிடைக்கிறது. ஏழு வருடங்கள் ஓதி உணர்ந்த பிறகே உபந்யாச மேடையில் ஏற முடியும். அப்படியும், தொடக்கத்தில், தனக்குக் கற்பித்தவருக்குப் பின்பாட்டுப் பாடுபவராக இருந்து பல வருடங்கள் கழிந்த பிறகே சொற்பொழிவாற்ற முடியும். தற்காலத்து நிலையை நான் எழுத வேண்டிய அவசியமே இல்லை. இங்கொன்றும் அங்கொன்றும் பார்த்ததையும் கேள்விப்பட்டதையும் கொண்டுவந்து கொட்டுகிற சண்டமாருதங்கள் அனேகர் இருப்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். பதடியிலிருந்து நெல்லைப் பிரித்து எடுப்பது பார்ப்பவன் — கேட்பவன் வேலை என்றாகி விட்டது. ஆனால், பார்ப்பவர், கேட்பவருக்கோ அதற்கான தேவையோ, உந்துதலோ, மிக முக்கியமாகப் பொழுதோ இல்லாமல் போய்விடுவதன் காரணமாக, தற்காலத்தில், கண்டது கற்றவனே பண்டிதன். கண்டது கற்கப் பண்டிதனாவான் என்று பழமொழியே இருக்கிறதே. பழமொழியின் ஒப்புதல் கிடைத்தாகி விட்டதல்லவா! மன்னிக்கவும். இவை அனைத்தையும் கண்டும் கேட்டும் மனம் பொறாமல் எழுத நேர்ந்த சொற்கள் இவை. மக்களுக்கு உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்வார் அருகிவிட்டார்களே என்ற ஆதங்க மிகுதியால் சொல்ல நேர்ந்தது. அம்மட்டே.
இப்போது, நமக்குச் சொல்லப்பட்டும், காட்டப்பட்டும், மீண்டும் மீண்டும் எடுத்தோதப்பட்டும் வரும் மேற்படி முதற் பத்திச் சுருக்கவுரையில் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டுப் பார்ப்போமா? கேள்வி கேட்டால் அல்லவோ உள்ளதும் அல்லதும் சரிவரப் புலப்படும்? இப்போது, இந்தப் பொதுவான அபிப்பிராயத்தின் அடிப்படையைக் குறித்துச் சில கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம். விடை எங்கேனும் ஒரு மூலையிலாவது பளிச்சிடுகிறதா என்று தேடுவோம்.
முதல் கேள்வி. திருதராஷ்டிரன், பிறவியிலேயே கண் தெரியாதவனாக இருந்த காரணத்தால், பாண்டுவிடம் அரசு தரப்பட்டது என்றால், பாண்டுவிடம் அரசு ஒப்படைக்கப்பட்டதா அல்லது, ஒரு மாற்று அரசனாகத் தாற்காலிகப் பொறுப்பில் அவன் அரசேற்றானா அல்லது, அவன் நிலை வேறெதுவுமா? கேள்வி இரண்டு. அரியணையில் அமர்ந்த பாண்டு எப்போது வேட்டைக்குச் சென்றான்? அவன் அரசாண்டானா அல்லது வேட்டை மட்டுந்தான் ஆடினானா? ஆட்சிக்கு வந்த அவன், தன் பங்காக, நாட்டை விரிவுபடுத்த ஏதேனும் செய்தானா அல்லது சும்மா ஒப்புக்கு அரியணையில் அண்ணனுக்கு மாற்றாக அமர்ந்திருந்தானா? முனிவரால் சபிக்கப்பட்டு, கானகம் செல்வதாக முடிவெடுத்த பாண்டு, திருதராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்தான் என்று சொல்லப்படுகிறது. இப்போது கேள்வி மூன்று. தொடக்கத்தில், மூத்த பிள்ளையான திருதராஷ்டிரன் அரசனாகப் பதவியேற்க முடியாமற் போனது அவன் பிறவியிலேயே பார்வையற்றவன் என்ற காரணத்தால் என்றால், இப்போது, பாண்டுவால் எப்படி திருதராஷ்டிரனிடம் அரசை ஒப்படைக்க முடியும்? அவனுக்கு இப்போது பார்வை வந்துவிட்டதா? அல்லது வேறேதேனும் சிறப்புக் காரணம் அல்லது விதி விலக்கால் இவ்வாறு பாண்டு அவனிடம் அரசை ஒப்படைத்தான் அல்லது திரும்பக் கொடுத்தான் என்றால், அதே காரணம் அல்லது விதி விலக்கால், திருதராஷ்டிரன் தொடக்கத்திலேயே அரசேற்றிருந்திருக்க முடியுமே! Status quo ante என்று சொல்வார்களல்லவா, அந்த முன்னிலைப்பாடு இன்னமும் மாறவில்லையே! அதிலே எந்த மாற்றமுமில்லாதபோது, பாண்டுவால் எப்படி திருதராஷ்டிரனிடம் அரசை ஒப்படைக்கவோ, அரியணையில் அமர்த்தவோ முடியும்? சரி. அப்படியே இருந்தாலும், பாண்டு திருதராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்தான் என்றால் என்ன பொருள்? மகுடம் சூட்டினானா? அப்படியானால், மூத்தவனுக்கு இளையவன் திருமுடி சூட்டல் என்ற பட்டாபிஷேகத்தைச் செய்விக்க முடியுமா? திருதராஷ்டிரனுக்கு மகுடம் சூட்டப்பட்டது என்றால் எப்போது, யாரால் சூட்டப்பட்டது? பீஷ்மரோ, பிடிவாதமாக அரசேற்கவே மாட்டேன் என்று மறுத்தபடி இருக்கும் நிலையில் அவர் எப்படி இவனுக்கு முடிசூட்டியிருக்க முடியும்? அவருக்கு அடுத்த பெரியவர் என்றால், குரு என்ற நிலையில் துரோணரோ கிருபரோ செய்திருக்க முடியுமா?
சரி போகட்டும். இந்தக் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நான்காவது கேள்வியை எழுப்புகிறேன். துரியோதனன் இளவரசன் என்றால், அவனுக்கு எப்போது இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது? முதலில், திருதராஷ்டிரன் அரசனாகவோ, சக்கரவர்த்தியாகவோ இருந்திருந்தால்தானே துரியோதனன் இளவரசனாவதற்கு! என்ன? அதிர்ச்சிகளை எழுப்புகிறேனோ? ஒன்றே ஒன்றை மட்டும் மிக நிச்சயமாகச் சொல்வேன். நான் எழுப்பியிருக்கிற, எழுப்பப் போகிற ஒவ்வொரு கேள்விக்கும், வியாச பாரதத்திலிருந்து உரிய மேற்கோள்களைக் காட்டி — அதாவது அவுட் ஆஃப் கான்டெக்ஸ்ட் உருவி எடுக்காமல், மிக உண்மையான, நேர்மையான மேற்கோள்களை முழுமையாகக் காட்டி — நான் அடையவிருக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் என்ன அடிப்படை என்பதைச் சொல்லுவேன். இதில் ஐயங்கொள்ளத் தேவையே இல்லை. ஆனால், கேள்விகள் அதிர்ச்சிகரமாக இருக்கலாம் — மிகப் பலருக்கு அப்படித்தான் இருக்கும். அவ்வளவு ஏன், நானே கூட இவற்றுக்கான மூலங்களைப் படிக்கும் போது அதிர்ந்துதான் போனேன். உண்மை அதிர்ச்சிகரமாக இருந்தாலும் உண்மை உண்மைதான்.
சகுனி சூதாட்டத்தில் வெற்றிபெற்று, அரசை துரியோதனனுடைய கைக்கு மாற்றித் தராத வரையில் துரியோதனன், இளவரசுப் பட்டம்கூடச் சூட்டப்படாதவன். சூதாட்ட நிகழ்வுக்குப் பிறகு கூட, முறைப்படி பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாண்டவன் அல்லன் அவன். அவன் மன்னனாக வந்தது வாரிசுரிமையாலா அல்லது வஞ்சத்தின் வெறுமையாலா? பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில் — அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், கர்ணன் எத்தனையோ ஆறுதல் மொழிகளைச் சொல்லி — களத்தையும் துரியோதனனையும் ஒன்றாகக் கைவிட்டு முதலில் ஓடியவன் இவன்தான் — துரியோதனன் மேற்கொண்ட பிரயோபவேச (தற்கொலை) முயற்சியைக் கைவிடச் செய்தாலும், அந்தச் சமயத்தில் ‘நாம் ஒரு ராஜசூய யாகம் செய்யலாமா’ என்று கேட்ட துரியோதனைக் கர்ணன் ‘உன்னால் அந்த யாகத்தைச் செய்ய முடியாது’ என்று சொல்லி, அதற்கு மாறாக வைஷ்ணவப் பெருவேள்வியைச் செய்யலாம் என்று ஆலோசனை கூறினான்? துரியோதன் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாது என்று கர்ணனே சொல்லித் தடுத்த அந்தக் காரணங்கள் யாவை? இதை என் ஐந்தாவது கேள்வியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போதுதானே கேள்விகளைத் தொடங்கியிருக்கிறேன். பொறுங்கள். தொடரலாம்.
[…] […]
[…] […]