Posted on Leave a comment

மாவோவின் கடைசி நடனக் கலைஞன்: Mao’s Last Dancer | அருண் பிரபு

சீனாவின் கம்யூனிஸ காலத்தையும் அதன் மாற்றத்தையும் சொல்லுகிறது இந்தப் படம். 1970களில் மாவோவின் காலத்தில் படம் தொடங்குகிறது. ஷாண்டாங் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 9 குழந்தைகளில் ஆறாவதாகப் பிறந்தவன் லீ குங்க்சின். அந்தக் கிராமத்துக்கு அதிகாரிகள் வருகிறார்கள். லீயின் பள்ளிக்கு வரும் அதிகாரிகள் அங்கே மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பீஜிங்கில் நடக்கும் நாட்டியப் பயிற்சிக்கு அனுப்பவிருப்பதாகச் சொல்கிறார்கள். லீயின் வகுப்பில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் போகிறார்கள் அதிகாரிகள். லீயின் வகுப்பாசிரியர் மிகவும் கெஞ்சிக் கேட்டு அவனைச் சேர்த்துவிடுகிறார். லீ பீஜிங் போவதை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் பக்கத்து குவிங்டாவ் நகரத்தில் தேர்வுக்கு வரச்சொல்கிறார்கள். அங்கே சைக்கிளில் அழைத்துப் போகிறார் லீயின் தந்தை. லீயிடம் நடனத்துக்குத் தேவையான ஒரு நளினம் உள்ளது என்று மாநில நாட்டிய மாஸ்டர் அவனைத் தேர்வு செய்கிறார்.

அங்கிருந்து பீஜிங் போகும் லீ மற்ற பிள்ளைகளுடன் ஒரு ஹாஸ்டலில் தங்க வைக்கப்படுகிறான். இரவில் சில பிள்ளைகள் வீட்டை எண்ணி அழுகிறார்கள். அங்கே வரும் காமிசார் (கட்சி அதிகாரி) அழுவது பலவீனத்தின் அறிகுறி, அழுதால் அடி பின்னிவிடுவேன் என்று மிரட்டிவிட்டுப் போகிறார். அழாத பிள்ளைகள் சேர்ந்துகொண்டு அழும் பிள்ளைகளை வேடிக்கை காட்டிச் சிரிக்க வைக்கிறார்கள்.

மேடம் மாவோ என்று அழைக்கப்படும் மாவோவின் நாலாவது மனைவியும் பிரபல சீன நடிகையும் நடன மங்கையுமான ஜியாங் குவிங் நடத்தும் நாட்டியப் பள்ளியில் இந்த மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களை அங்கே பயிற்றுவிக்கும் சான் என்கிற மாஸ்டர் நளினம் தேவை என்கிறார். இன்னொரு கட்சி நியமித்த கலைத்துறை அதிகாரி நளினம் பலவீனம்; பலசாலிகள் நடனம் ஆடவேண்டும் என்கிறார். இதனால் லீ அதிகாரியால் அவமானப்படுத்தப்பட்டு உடற்பயிற்சி செய்ய அனுப்பப்படுகிறான். உடற்பயிற்சி நடனம் என்று பிழிந்து எடுப்பதில் லீ வெறுத்துப் போய் ஊருக்குப் போவதாகச் சொல்கிறான். மாஸ்டர் சான் அவனைத் தேற்றி அவனுக்கு நடனத்தில் சிறந்த எதிர்காலம் இருப்பதைச் சொல்கிறார்.

பயிற்சியைப் பார்வையிட வருகிறார் மேடம் மாவோ என்று அதகளப்படுகிறது பள்ளி. ஒரு நாட்டிய நாடகம் நடத்துகிறார்கள். அதைப் பார்த்துக் கோபம் கொண்டு திட்டுகிறார் மேடம் மாவோ. “இப்படி நளினமாக நடமாடி மக்களிடம் என்ன செய்தி கொண்டு செல்வீர்கள்? புரட்சிக்கு ஏற்ற ஒரு நாட்டிய நாடகம் போடுங்கள் என்று சொல்கிறார்.

மாஸ்டர் சான் “நளினம் நடனத்தின் பிரிக்க முடியாத பகுதி” என்றும் “ரஷ்யர்கள் நளினமாக நடனமாடுகிறார்கள், ஆனால் புரட்சியை விட்டுவிடுவதில்லை” என்று சொல்கிறார்.

“மேடம் மாவோவை விட நீங்கள் நடனம் பற்றி அதிகம் தெரிந்தவரோ? என்கிறார் கலைத்துறை அதிகாரி.

மேடம் மாவோவுடன் வந்த மற்ற அதிகாரிகள் நோட்டுப் புத்தகம் எடுத்துக் குறிப்பு எடுக்கிறார்கள்.

“இல்லை. சத்தியமாக இல்லை. எனக்குத் தோன்றியது, நான் கற்றுக் கொண்டதை மட்டும் சொன்னேன். மற்றபடி கட்சியையோ தலைமையையோ எதிர்த்துப் பேசுவது என் எண்ணமில்லை என்று சொல்கிறார் மாஸ்டர் சான். அவரை மன்னிப்புக் கேட்கச் செய்கிறார்கள்.

உடனே வேறு ஒரு நாடகம் ஏற்பாடு செய்கிறார் மாஸ்டர் சான். அதில் முக்கியப் பாத்திரம் லீக்குத் தரப்படுகிறது. அவனை லாயக்கில்லை என்று அத்தனை அதிகாரிகள் முன்னிலையில் கட்சியின் கலைத்துறை அதிகாரி சொல்கிறார். அதிகாரிகள் மாஸ்டர் சானுக்கு இது கடைசி வாய்ப்பு. சொதப்பினால் பார்க்கலாம் என்கிறார்கள். மாஸ்டர் சான் லீயிடம் ஊர் பெயரைக் காப்பாற்று என்று சொல்கிறார். (இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்.)

லீ எதிர்பார்த்ததை விட அற்புதமாக நடனமாடுகிறான். நளினமும் கம்பீரமும் ஒருசேரக் காட்டி அசத்துகிறான். மேடம் மாவோ கைதட்டிப் பாராட்டுகிறார். இந்த நாடகம் நாடு முழுக்க நடத்தப்படும் என்கிறார். இதே ஆள்கள் கட்சிப் பொதுக்குழு கலைநிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுப் போகிறார்.

ஆனால் மாஸ்டர் சான் துரோகம் செய்ததாகச் சொல்லி அவரைக் கைது செய்கிறார்கள் அதிகாரிகள். எப்படி கம்பீரம் காட்டும் நாடகத்தில் நளினம் வரலாம் என்று கேட்கிறார்கள். நளினம் வராமல் நடனம் ஆடினால் உடற்பயிற்சி போல இருக்கும் என்கிறார் மாஸ்டர் சான். அவரைச் சிறைக்கு அனுப்ப பயிற்சிப் பள்ளியின் காமிசார் உத்தரவு போடுகிறார்.

இந்நிலையில் அமெரிக்க நாட்டியக் குழு ஒன்று பிரபல நடன இயக்குநர் பென் ஸ்டீவென்சன் தலைமையில் நல்லெண்ண அடிப்படையில் சீனா வருகிறது. அவர்கள் பார்க்கும் நாட்டியக் குழுக்கள் அனைவரும் கட்சி கற்றுத்தந்த நடனம் ஆடுபவர்கள். ‘இவர்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள், நடனம் எங்கே ஆடுகிறார்கள்?’ என்று தங்களுக்குள் கிண்டல் செய்கிறார்கள் அமெரிக்கர்கள். வெளிப்படையாகச் சொல்லாமல் வேறு மாதிரியான நடனம் ஆடுவீர்களா என்று கேட்க, லீயின் குழு ஆடும் நிகழ்ச்சிக்கு அவர்களை அழைத்து வருகிறார்கள் கட்சி அதிகாரிகள். லீயின் நடனம் அவர்களை ஈர்த்துவிட அவனைக் கலாசாரப் பரிமாற்ற அடிப்படையில் அமெரிக்கா அழைத்துப் போகிறார்கள்.

லீ ஊருக்கு ஃபோன் போட்டுப் பேசுகிறான். கட்சி ஆபீசில் மட்டும் ஃபோன் இருக்கிறது. தன குடும்பத்திடம் சொல்லிக் கொண்டு அமெரிக்கா போகிறான். கட்சியில் லீயை அழைத்து மூன்று நாட்கள் வகுப்பு எடுக்கிறார்கள். “அமெரிக்கர்கள் மோசமானவர்கள். இரண்டு அமெரிக்கா உண்டு. உன்னிடம் வசதி மிக்க அமெரிக்காவைக் காட்டுவார்கள். ஆனால் ஏழைகள் சோற்றுக்கு அல்லாடும் அமெரிக்காவைக் காட்ட மாட்டார்கள். உன்னை அந்த ஊர் பெண்கள் மயக்கிவிட முயற்சி செய்வார்கள். கட்சி சொல்லிக் கொடுத்ததை மறக்காதே. சந்தேகம் வந்தால் உடனே நம் தூதரை அணுகிக் கேள். அவர் நல்ல வழி காட்டுவார் என்று சொல்லி, கடைசியாக “ஊரில் உள்ள உன் தாய் தந்தையை மனதில் வைத்துக் கொண்டு அமெரிக்க போய்வா” என்று முடிக்கிறார்கள்.

அமெரிக்காவைப் பார்த்த லீ மிரண்டு போகிறான். ஏர்போர்ட்டில் இருந்தே அவனுக்கு ஆச்சரியங்கள் அணிவகுக்கின்றன. பெரிய பெரிய கட்டடங்கள், பலவகை கார்கள், விதவிதமான மனிதர்கள், அனைவரும் கட்சி முக்கியஸ்தர்கள் போல கோட் சூட் அணிந்திருப்பது என்று அனைத்தையும் ஆ என்று பார்த்துக் கொண்டு வருகிறான். தன் வீட்டுக்கு லீயை அழைத்து வருகிறார் பென் ஸ்டீவென்சன். பெரிய வீட்டைப் பார்த்து 10-15 பேர் தங்குவார்களா என்று கேட்கிறான் லீ. பென் தான் மட்டும் தங்கியிருப்பதாகச் சொல்கிறார். அரசாங்கம் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று கேட்கிறான் லீ. “கவர்மண்ட் என்ன அனுமதி கொடுப்பது. நான் சம்பாதிக்கிறேன், வீடு வாங்கினேன், வசிக்கிறேன்” என்கிறார் பென். சீனாவில் தங்கள் வீட்டில் ஒரு அறை அதிகம் கட்ட அரசு அனுமதி கேட்டு நடையாய் நடந்த தந்தையை நினைத்துப் பார்க்கிறான் லீ.

அன்று மாலை லீயை பப்புக்கு அழைத்துப் போகிறார் பென். அங்கே பென்னின் நண்பர்கள் ஜனாதிபதியை எதிர்த்துப் பேசுகிறார்கள். இந்த ஆள் சரிப்பட்டு வரமாட்டார், கொள்கை சரியில்லை என்று பேசுவதைக் கேட்டு லீ சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான். கையை உதறுகிறான். என்ன என்று கேட்ட போது காமிசார்கள் யாரும் இங்கே வரமாட்டார்களா என்று கேட்கிறான். அமெரிக்கர்களுக்கு காமிசார் என்றால் என்ன என்றே தெரியவில்லை.

மறுநாள் அவனை தனது ஹூஸ்டன் நடனக் நிறுவனத்துக்கு அழைத்துப் போகிறார் பென். அங்கே அவர்கள் ஆடும் முறைகளைப் பார்த்துக் கொண்ட லீ அவற்றை அப்படியே ஆடிக் காட்டுகிறான். அவனுக்குப் பயிற்சி அளிக்கப்படும் விவரம் வாரம் ஒரு முறை ஹூஸ்டன் சீன துணைத் தூதருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம். அங்கே போய் வாரம் ஒருநாள் ரிப்போர்ட் கொடுக்கிறான் லீ. உனக்கு முதலாளித்துவம் போதிக்கிறார்களா என்று தொடங்கி பல்வேறு கேள்விகள் கேட்கிறார்கள் காமிசார்கள். “நடனம் மட்டுமே சொல்லித்தருகிறார்கள். உடைகள் புதிது புதிதாக வாங்கித் தருகிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் புதிய உடை போட்டுக் கொள்ளச் சொல்கிறார்கள். நிறுவனத்தின் உடையைத் தந்து திருப்பி வாங்குவதில்லை என்கிறான் லீ. எல்லாவற்றையும் குறிப்பெழுதுகிறார்கள். அத்தனை உடைகளையும் திருப்பித் தர லீக்கு உத்தரவு போடுகிறார்கள். ஊருக்குப் போகும் போது தந்துவிடுவதாக லீ சொல்கிறான்.

அங்கே நடனமாடும் எலிசபெத் மேக்கி என்ற பெண்ணுடன் நெருக்கமாகிறான் லீ. இரண்டு வாரப் பழக்கத்தில் அவர்கள் நெருக்கம் அதிகமாகி திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். பென் உள்ளிட்ட ஹூஸ்டன் பெல்லி நடன நிறுவனத்தின் அத்தனை பங்குதாரர்களும் எதிர்க்கிறார்கள். சீனா இனி அமெரிக்க கலாசார பரிவர்த்தனைக்கு ஓப்புக் கொள்ளாது என்று வாதிடுகிறார்கள். ஆனால் இருவரும் உறுதியாக இருப்பது கண்டு பென் அமெரிக்காவின் சிறந்த சர்வதேச குடியுரிமை வக்கீல் சார்லஸ் ஃபாஸ்டர் என்பவரது உதவியை நாடுகிறார். அவர் லீக்கு அமெரிக்கக் குடியுரிமை தர விண்ணப்பம் போட்டுவிட்டு, அவன் அமெரிக்காவில் தங்க விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஹூஸ்டன் சீன தூதரகத்துக்குப் போகிறார். லீயும் உடன் போகிறான்.

வக்கீல் பேசிக்கொண்டிருக்கும் போதே லீயிடம் தனியாகப் பேச தூதர் அழைத்துப் போகிறார். தனியறையில் லீயைச் சிறைவைத்துவிட்டு, வெளியே வந்து லீ திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான், சீனா திரும்ப விழைகிறான் என்று எழுதிக் கையெழுத்துப் போட்ட கடிதத்தைக் காட்டுகிறார். லீயிடம் பேசவேண்டும் என்று வக்கீல் சார்லஸ் ஃபாஸ்டர் கேட்கிறார். அவர்களை பிரச்சினை செய்யாமல் வெளியேறச் சொல்கிறார் தூதர். பிரச்சினை சர்வதேச சிக்கல் ஆகிறது. சீன அரசு தலைமைத் தூதர் வாஷிங்டனில் இருந்து வருகிறார். லீயிடம் பேசுகிறார். யாரும் கட்டாயப்படுத்தவில்லை, பெண்ணைப் பிடித்திருக்கிறது, திருமணம் செய்து கொள்கிறேன், சில ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்துவிட்டு சீனா வருகிறேன் என்கிறான் லீ.

இதனிடையே விவரம் பெய்ஜிங்குக்கு சொல்லப்பட்டு அங்கிருந்து உத்தரவு வருகிறது. அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டால் சீனக் குடியுரிமை கிடையாது, அங்கேயே இருக்க வேண்டியதுதான், ஜென்மத்துக்கு சீனா வரக்கூடாது என்கிறது அரசு உத்தரவு. லீயை அமெரிக்கர்கள் மயக்கிவிட்டார்கள், அவன் திரும்பி வந்தவுடன் கம்யூனிஸ்டு படிப்புக்கான முகாமில் இருக்கவேண்டும் என்றும் உத்தரவு சொல்கிறது. லீ மறுக்கிறான். தன சொந்த முடிவு என்றும் அமெரிக்காவில் இருந்து கொள்வதாகவும் சொல்கிறான். சீனக் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு அவனைத் திட்டி வெளியே அனுப்புகிறார்கள்.

கட்சியில் இருந்து ஐந்து பேர் லீ வீட்டுக்குப் போய் “உன் மகன் துரோகி, புரட்சிக்கு எதிராக அமெரிக்காவுக்கு விலை போய்விட்டான்” என்று அவர்களைத் திட்டுகிறது. லீயின் தந்தை மன்னிப்புக் கேட்டு “என் மகனிடம் நான் பேசுகிறேன். எதோ தவறு நடக்கிறது. அவன் அப்படி இல்லை” என்று கெஞ்சுகிறார். ஆனால் உள்ளூர் கட்சித் தலைவர் “நீங்கள் வளர்த்தவிதம் சரியில்லை மற்ற பிள்ளைகள் என்ன லட்சணமோ தெரியவில்லை என்று பேசுகிறார். கோபப்பட்ட லீயின் தாய் விறகுக் கட்டையை எடுத்து அவரை அடித்து “என் மகனை 7 வயதில் டான்ஸ் கற்றுத் தருகிறேன் என்று கூட்டிப் போனது கட்சி. நான் வளர்த்தவரை நல்ல பிள்ளையாகத்தான் இருந்தான். நீங்கள் என்ன செய்து வைத்தீர்கள் என் மகனை என்று விளாசுகிறார். உள்ளூர்த் தலைவரை அடித்த குற்றம் சுமத்தப்பட்டு குடும்பம் வயல்வெளிகளில் அதிகம் உழைக்க உத்தரவு வருகிறது.

லீயும் எலிசபெத்தும் புளோரிடா போய் அங்கே நடனக் கம்பெனிகளில் வேலை தேட முடிவு செய்கிறார்கள். பென் அவர்களை ஹூஸ்டனில் இருந்து தன் நிறுவனத்தில் வேலை செய்யச் சொல்கிறார். லீ டான்ஸில் பிரமாதப்படுத்துகிறான். லீ ஊருக்கு ஃபோன் செய்ய, இவன் பெயரை கேட்டதும் ‘அப்படி யாரும் இல்லை, உனக்கு இங்கே குடும்பம் இல்லை’ என்று கட்சி ஆபிசில் சொல்லிவிடுகிறார்கள். கெஞ்சினாலும் பெற்றோரிடம் பேச முடியவில்லை. தூதரகம் லீயைத் துரோகி என்று உதவ மறுக்கிறது.

எலிசபெத்துடனான கல்யாண வாழ்க்கை லீக்கு ஒத்துவரவில்லை. சண்டை போட்டுப் பிரிகிறார்கள். பென்னிடம் வருத்தப்பட்டுப் பேசுகிறான் லீ. அவரோ “இது ஒரு விஷயமா? பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போ” என்கிறார். விவாகரத்து ஆகிறது.

இந்நிலையில் சீனாவில் மாவோ இறந்து போகிறார். மேடம் மாவோ என்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த மாவோவின் நாலாவது மனைவி சிறை வைக்கப்பட்டு அவரது நடனப்பள்ளிகள் வேறு ஒருவரிடம் தரப்படுகின்றன. பல்வேறு மாற்றங்கள் வருகின்றன சீனாவில். ஹூஸ்டன் தூதரகத்தில் லீயைக் கூப்பிட்டு வாஷிங்டனில் இருந்து தலைமைத் தூதர் பேசுகிறார் என்கிறார்கள். அவர் ஏற்கெனவே ஹூஸ்டனில் துணைத் தூதராக இருந்தவர். “இப்போது நிறைய மாறியிருக்கிறது. ஊருக்குப் போன் போட்டுப் பேசு என்கிறார் லீயிடம். லீ தன் பெற்றோரிடம் பேசி மகிழ்கிறான்.

லீ ஹூஸ்டன் பாலே நடனக் கம்பெனியில் முக்கிய ஆளாகிறான். உலகம் சுற்றி ஆடுகிறான். ஐந்தாண்டுகள் போகின்றன. அங்கேயே உடன் ஆடும் மெரி மெக்கென்றி என்ற பெண்ணை மணக்கிறான். ஒரு நடன நிகழ்ச்சியில் லீ தயாராகி இருக்க, கம்பெனித் தலைவர் ‘முக்கிய விருந்தினர் வருகிறார். தொடக்கத்தைத் தாமதப்படுத்துங்கள்’ என்கிறார். போலீஸ் பாதுகாப்போடு இரண்டு கார்கள் வருகின்றன. ஒன்றில் சீனத் தூதர் வருகிறார். மற்றோன்றில் ஒரு வயதான சீனத் தம்பதி வருகிறார்கள். வெளியே குடியிருப்போரிடம் லீயின் பெற்றோர் என்றும், காம்ரேட் டெங் சியோ பிங் உத்தரவில் நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் அமெரிக்கா வந்துள்ளதாகவும் சொல்கிறார் சீனத்தூதர். பென், “நிகழ்ச்சி முடிந்து லீக்கு சொல்லலாம். இப்போது சொன்னால் உணர்ச்சிவசப்பட்டு சரியாக ஆட முடியாது” என்கிறார்.

டான்ஸ் முடிந்து அரங்கு நிறைந்த கரகோஷம் பெற்ற பிறகு லீயிடம் “முக்கிய விருந்தினர்கள் உன்னை மேடையில் சந்திப்பார்கள்” என்கிறார் பென். எவனோ விஐபி என்று அலட்சியமாக திரும்பிப் பார்த்து அதிர்ந்து போகிறான் லீ. அங்கே நிற்பது அவனது பெற்றோர். உணர்ச்சிகரமான சந்திப்பு முடிகிறது. பெற்றோருக்கு மனைவியை அறிமுகப்படுத்தி வைக்கிறான் லீ. தலைமைத் தூதர் லீயிடம் “நீ சீனா போய் வர ஏற்பாடு நடக்கிறது என்கிறார். சில நாட்களில் சீனாவுக்கு விசா கிடைக்கிறது. லீயும் மேரியும் போகிறார்கள். தங்கள் கிராமத்துக்குச் சென்று அங்கே பலரையும் பார்த்துப் பேசி மகிழ்கிறார்கள்.

அப்போது ஒரு முதியவர் வந்து “லீ! என்று அழைக்கிறார். பார்த்தால் மாஸ்டர் சான். சிறு வயதில் லீயை நளினமாக நடனமாடுவதில் ஊக்குவித்தவர். மாவோ இறந்த பிறகு சிறையில் இருந்து விடுதலையாகி, கலைத்துறை வேலை மறுக்கப்பட்டு, கிராமத்துக்கு விவசாய வேலைக்கு வந்துவிட்டவர். லீ அவரைக் கட்டிப்பிடித்து அழுகிறான். என்னால் நீங்கள் சிறைக்குப் போனீர்கள் என்கிறான். “கட்சி ஆளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. நீ இல்லை என்றால் வேறு எதாவது சொல்லி அனுப்பியிருப்பார்கள் என்கிறார் மாஸ்டர் சான்.

லீ நடனமாடுவதைப் பார்க்கவேண்டும் என்கிறார் மாஸ்டர் சான். அங்கேயே ஊர் நடுவில் மைதானத்தில் மனைவியுடன் மனத்தில் ஒரு பாட்டை எண்ணியபடி நடனமாடிக் காட்டுகிறான் லீ. கண்ணீரோடு கைதட்டிப் பாராட்டுகிறார் மாஸ்டர் சான்.

இதோடு படம் முடிகிறது. லீக்கு சீனக் குடியுரிமை கடைசிவரை கிடைக்கவில்லை. அவர் மனைவி மேரியுடனும் மூன்று குழந்தைகளுடனும் ஆஸ்திரேலியாவில் வாழ்கிறார். எலிசபெத் மேகி நடனம் வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டு குழந்தைகளுக்கான பேச்சுக் கற்பித்தலில் பணிசெய்கிறார். 

*

கலை என்பது ஒருவரது மனத்தில் தன்னுணர்வாகக் கிளர்ந்து எழுவது. Inherent quality என்று ஆங்கிலத்தில் சொல்வர். ஆனால் மாவோ காலத்துச் சீனத்தில் கலை என்பது கூட கட்சிக்கும், கொள்கைக்கும், புரட்சிக்கும் ஒரு சாதனமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நடன சாலையில் பயிற்சிக்கு வந்தவர்கள் சொன்னதை மட்டுமே செய்யவேண்டும். அவர்களாக ஏதாவது யோசித்துப் புதிதாகச் செய்தால் கட்சி விரோதி, புரட்சிக்கு எதிரி என்று பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே சொல்லப்படுவதை மட்டுமே செய்யும் பயிற்சி அவர்களுகுத் தரப்படும். புதிதாக யோசிக்காமல் என்ன கலை? கற்பனை வளம் இல்லாமல் இசையோ, நடனமோ, உரைநடையோ மிளிராதே? கற்பனை, புதிய உத்தி இதையெல்லாம் கலைத்துறை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்பதே பதில். கலைஞனுக்குக் கற்பனை வளம் இல்லாமல் என்னய்யா கலைஞன்? யாரோ ஒருவர் சொன்னதை மட்டுமே செய்பவன் கலைப் பொருள் தானேயன்றி கலைஞனாக எப்படி மிளிர்வான்? இப்படிக் கேட்டால் புரட்சி விரோதி என்று விவசாயக் கூலி அல்லது தொழிற்சாலைக் கூலி என்று அனுப்பிவிடுவார்கள் மாவோவின் சீனத்தில்.

இதற்கு வாழும் உதாரணம் லீ குங்க்சின். ஜிம்முக்குப் போய் உடம்பை மல்லன் போல வைத்துக் கொள்ளவில்லை என்றால் நடனப்பள்ளிக்கு வராதே என்று ஏறத்தாழ நடனம் வராது என்று நிராகரிக்கப்பட இருந்த மனிதன். அதிர்ஷ்டவசத்தால் சீனத்தை விட்டு வெளியே வந்து அமெரிக்காவில் உள்ளார்ந்த கலையார்வம் தூண்டப்பட்டு பயிற்சி பெரிதாக இல்லாமலே பார்த்ததைக் கற்றுக் கொண்டு மேலும் மெருகேற்றி உலகப் புகழ்பெற்ற நடனக்கலைஞர் ஆனார்.

கலையில் ஆர்வமில்லை. ஆனால் கட்சி தேர்ந்தெடுத்துவிட்டது. பாடு அல்லது ஆடு. சரியாக வரவில்லை என்றால் நீ தோல்வி மனப்பான்மை கொண்டவன், புரட்சிக்கு லாயக்கில்லாதவன். “ஐயா! எனக்கு வேறு துறையில் ஈடுபாடு உள்ளதே? “கட்சியை விட உனக்குத் தெரியுமா? போ கூலி வேலைக்கு. இப்படித்தான் இருந்தது மாவோ காலத்துச் சீனம். 

*

ஆஸ்திரேலிய இயக்குநர் ப்ரூஸ் பெரேஸ்போர்ட் இயக்கிய படம். 2009ல் வெளிவந்தது. கிறிஸ்டோபார் கார்டன் என்பவர் இசை அமைத்து ஆஸ்திரேலிய படங்களுக்கான சிறந்த இசை விருது பெற்றார். இது தவிர சிறந்த இயக்குநர், கதை, நடிப்பு என்று பல்வேறு விருதுகளுக்கு பல்வேறு ஆஸ்திரேலிய ஐரோப்பியத் திரை விமர்சன அமைப்புகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

லீ குங்க்சின் ஆக சி காவ் என்பவர் நடித்துள்ளார். இவர் சீனாவில் பிறந்து பிரிட்டனில் பாலே நடனக் கலைஞராக இருப்பவர். அருமையான நடிப்பு. ப்ரூஸ் க்ரின்வுட் எனும் கனடா நாட்டு நடிகர் பென் ஸடீவென்சனாக நடித்துள்ளார். எலிசபெத் மேகியாக அமாண்டா ஷுல் என்ற ஹாலிவுட் நடிகை நடித்துள்ளார். லீயின் தாயாக ஜோன் சென் என்ற சீன அமெரிக்க நடிகை நடித்துள்ளார். பிரமாதமான நடிப்பில் அசத்தியுள்ளார் இவர். வாங் சுவாங் என்ற சீனர் லீயின் தந்தையாக நடித்துள்ளார்.

ராட்டன் டொமெட்டோஸ் தளத்தில் 6.1/10 சாதகமான விமர்சனம் பெற்ற படம். 25 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஒன்றரைக் கோடி ஆஸ்திரேலிய டாலர்கள் உலகளாவிய வசூல் பெற்றது இத்திரைப்படம்.

Leave a Reply