Posted on Leave a comment

நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்

‘கொரோனா’ என்ற வார்த்தையுடன் அரசியல்வாதியின் துண்டுபோல அதனுடன் ‘நாவல்’ என்ற ஒன்று கூடவே இருப்பதையும் கவனித்திருப்பீர்கள். ‘நாவல்’ – புதிது என்பதைக் குறிக்கிறது. புதுவிதமான வைரஸ்!

நாவல், நவீனம் என்ற சொற்கள் புதுமையைக் குறிக்கின்றன. நவீன மருத்துவமனை, நவீன மருத்துவர்கள், நவீன ஆயுதங்கள், நவீன தகவல்தொடர்புகள், நவீன காலத்திற்கு ஏற்ற நவீனமயமாக்கல் என்று இந்த நவீன உலகத்தில் எல்லாம் நவீனமாகிறது. நவீனம் – ‘பழமையிலிருந்து மாறுபட்டு’ என்கிறது அகராதி. பழமையிலிருந்து மாறாதவர்களை ‘பழமை பேசும் கிழம்’ என்று நக்கல் அடிக்கிறோம். கை கூப்பி வணக்கம் சொல்லும் மரபுள்ள இந்தியாவை ‘நீங்க எல்லாம் எப்ப மாறப் போறீங்க?’ என்று கிண்டல் செய்வதைக் கேட்கிறோம்.

ஆனால் ‘உயிர் பயம்’ என்று ஒன்று வந்துவிட்டால் இந்த நவீனம் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடுகிறது. நவீன கைகுலுக்கலிருந்து ‘பழமையான வணக்கத்துக்கு ஓவர் நைட்டில்’ஸ்விச் போட்டது போல் மாறிவிட்டோம். இந்தியா போன்ற ‘பழமையான’ தேசத்தில் பழமை என்பது நம் பாரம்பரியம். அதுவே நம் தர்மமாக இருக்கிறது.

சூரியன் நம் பூமியைச் சுற்றுவது அதனுடைய தர்மம். மல்லிகைப்பூ வாசனையாக இருப்பது பூவின் தர்மம். மாடுகள் புல்லைத் தின்பது அதனுடைய தர்மம். ‘பசித்தாலும் புல்லைத் திங்காதது’ புலிகளின் தர்மம். தர்மம் என்பது சுபாவம். சுபாவம் மாறும்போது தர்மம் அதர்மமாகிறது. நம் இதிகாசங்களும், புராணங்களும் அந்தத் தர்மத்தைத்தான் சொல்லுகின்றன. இதுவே சனாதன தர்மம்.

ஒரு நாள் பூமி சுற்றவில்லை என்றால் என்ன ஆகும்? 24மணி நேரத்துக்குப் பதில் 48 மணி நேரம் என்று கொஞ்சம் தாமதமாகச் சுற்றினால் என்ன நடக்கும்?திருநெல்வேலியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பசு, அருகில் வந்த ஒரு பூனையைச் சாப்பிட்டு விட்டால் என்ன நடக்கும்? இது எதுவும் நடக்காது என்று உத்திரவாதம் கொடுக்க முடியும். ஆனால் மனிதன்? முடியாது!

தென்னை மர ஓலையை இரண்டாகப் பிரிப்பது மாதிரி டி.என்.ஏ-வைப் பிரித்துவிட்டான். மிக நுட்பமான மைக்ராஸ்கோப் மூலமும், மைக்ராஸ்கோப் சர்ஜிக்கல் கருவி கொண்டும், ஜீன்களை இரண்டாக வெட்டி, இன்னொரு ஜீனுடன் சேர்க்கிறார்கள். இதைத் ஜெனட்டிக் எஞ்சினியரிங் என்று படிக்கிறார்கள். ஒரு எலியின் சுபாவத்தையோ அல்லது ஒரு பன்றியின் சுபாவத்தையோ மாற்ற முயற்சிக்கிறார்கள். சுபாவத்தை மாற்றும்பொழுது அதர்மமாகி அணுகுண்டாகவோ அல்லது கொரோனாவாகவோ மாறுகிறது.

சுஜாதா ‘கரைகண்ட ராமன்’ என்ற சிறுகதையை நாற்பது வருடங்களுக்கு முன் எழுதினார். கோயில் அர்ச்சகரை அடித்துவிட்டு, சிலையைச் சிலர் திருடுவார்கள். சிலை திருடியவன் அர்ச்சகருடன் போராடும்போது வௌவால் ஒன்று முகத்தில் கடித்துவிடும். கன்னத்தில் சின்ன காயம் ஏற்பட்டுக் கன்னிப் போயிருக்கும்.

“வௌவால்களுக்கும் ரேபிஸ் (Rabies) உண்டாம். அப்போது அவை கடிக்குமாம்.கடித்து ஹைட்ரோஃபோபியா (hydrophobia) வந்து பலர் செத்துப்போயிருக்கிறார்கள்” என்று கதை முடியும். இதை ஒருவிதமான Poetic justice எனலாம்.

சீனாவில் வௌவால் இறைச்சியை உட்கொண்டதால் இந்தக் கொடூரத் தொற்று வியாதி பரவியது என்றார்கள். இதை நிராகரிக்க முடியாது. இதற்குமுன் சார்ஸ் தலைப்புச் செய்தியாக வந்தபோது அதுவும் வௌவால்களில் இருந்து புனுகுப் பூனைக்கும் அவற்றில் இருந்து மனிதனுக்கும் வந்திருக்கலாம் என்கிறது உலகச் சுகாதார அமைப்பு.

பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று எல்லாம் மிருகங்களின் பெயர்களாக இருப்பதற்கு மனிதனே காரணம். கொரோனா பரவியவுடன் சீனாவில் வூஹானிலும் மற்ற இடங்களிலும் இறைச்சிக் கடைகள் உடனே மூடப்பட்டன. சீனாவில் வூஹான் நகரில்தான் கொரோனா தோன்றியது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. லீ வென்லியாங் என்ற கண் மருத்துவர் முதலில் கண்டுபிடித்து,அதைசெஞ்சீனா மூடி மறைத்து, சீனப் பொருட்களைப் போலப் பரவவிட்டு, இன்று உலகமே முடங்கிப் போய் உள்ளது.

வௌவால் மூலமாகவா அல்லது சீனா செய்த வைரஸ் சோதனைகளில் தவறு நடந்ததாலா அல்லது வேண்டுமென்றே சீனாவால் வைரஸ் பரப்பப்பட்டதா (பயோ-வெப்பன்) என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போவதில்லை.

சமீப காலங்களில் அமெரிக்க – சீனா வர்த்தகத்தில் வெளிப்படையான விரோதத்தைப் பார்க்க முடிந்தது. பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவால் உந்தப்பட்டு மறைமுகக் கட்டுப்பாடுகளை விதித்தன. கொரோனாவிற்குப் பிறகு இந்த வர்த்த யுத்தம் பெரிய அளவில் இருக்கும். சீனாவிடம் ‘உன் சகவாசமே வேண்டாம்’ என்று தீண்டதகாத நாடாக சீனாவைப் பல உலக நாடுகள் அறிவிக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சீற்றத்தால் சீனா அடுத்து என்ன செய்யும் என்று தெரியாது.

இன்றைய நிலைமை இந்தியாவிற்குச் சாதகமாகவே இருக்கிறது. இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வல்லரசு நாடுகளே பாராட்டும் விதமாகவே (இதுவரை) அமைந்துள்ளன. பிற்காலத்தில் இது ஒரு ‘கேஸ் ஸ்டடி’யாக நிச்சயம் இருக்கும். இதைத் தவிர ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்து மற்ற நாடுகளிடம், குறிப்பாக அமெரிக்காவிடம், ஏற்பட்டிருக்கும் ‘நம்ம நண்பன்’ என்ற உணர்வு நிச்சயம் நமக்கு உதவும்.

கொரோனா அரசியலை ஒதுக்கிவிட்டு அதனுள் இருக்கும் அறிவியலைக் கொஞ்சம் ஆராயலாம். ஏழாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இருக்கும் வைரஸ், பாக்டீரியா இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

பாக்டீரியா, வைரஸ் இரண்டும் நுண்ணுயிரிகள். பாக்டீரியாவை மைக்ரோஸ்கோப் மூலம்தான் பார்க்க முடியும். நம் கையில், நம் மேஜையில், காற்றில், தண்ணீரில், நம் வயிற்றில் பாக்டீரியா இருக்கிறது. பாக்டீரியாக்கள் பிளவுமூலம் இனப்பெருக்கம் செய்துகொள்கிறது (Bacterial Cell Division).

வைரஸும் நுண்ணுயிர்தான், ஆனால் பாக்டீரியாவை விட மிகமிகச் சிறியது. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் உதவியுடன்தான் இதைப் பார்க்க முடியும். மீன் எப்படி தண்ணீரில் மட்டுமே வாழமுடியுமோ அதுபோல வைரஸ் வாழ்வதற்கு ஒரு செல் வேண்டும். இல்லையென்றால் பிழைக்காது. அதனால் தாவரம், விலங்கு அல்லது மனித செல்களில் இவை வாழ்கின்றன. ஒரு செல்லுக்குள் செல்லும் வைரஸ் அடுத்த செல்லுக்குப் பரவி இனப்பெருக்கம் செய்துகொள்கிறது.

தாவரத்தைத் தாக்கக்கூடிய வைரஸ் ஒரு தாவரத்திலிருந்து அடுத்த தாவரத்துக்குப் பூச்சிகளால் பரவுகிறது. மிருகங்களைத் தாக்கக்கூடிய வைரஸ் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள்மூலம் பரவுகின்றன. இருமல் அல்லது தும்மினாலே கொரோனா பரவுகிறது.

இதைப் புரிந்துகொண்டால், ஆர்.என்.ஏ கிட், கூட்டம் கூடாதீர்கள், சமூக விலகல், முகக் கவசம் என்று அரசாங்கம் புலம்புவதைப் புரிந்துகொண்டு அவர்கள் சொல்லுவதைச் சரியாகக் கடைப்பிடிக்கத் தோன்றும்.

அம்மை நோய் வைரஸ் கிருமிகளால் வருவது, வீட்டில் யாருக்கேனும் இந்த நோய் வந்தால் உடனே வெளியே வேப்பிலைக் கொத்தைத் தொங்க விட்டு, வீட்டுக்குள் யாரும் வரக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். நோய் வந்தவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். மஞ்சள் நீரில் குளிப்பாட்டுவார்கள். இதை மூடநம்பிக்கை என்று பேசினார்கள். ஆனால் இன்று மனிதகுலமே இதைப் பற்றி யோசிக்கத் தொடங்கி இருக்கிறது.

கொரோனா என்பதும் ஒரு வித வைரஸ். முன்பே பார்த்த மாதிரி வைரஸ் உயிர் வாழ அதற்குச் செல்கள் வேண்டும். செல் இல்லை என்றால் தண்ணீர்த் தொட்டியிலிருந்து வெளியே எடுத்துப் போட்ட மீன் மாதிரி செத்துவிடும்.

அடுத்து இந்த வைரஸ் செய்யும் அட்டூழியத்தைத் தெரிந்துகொள்ள நாம் அடிக்கடி கேள்விப்படும் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்ற சில வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்.

பாக்டீரியாவில் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ என இரண்டும் இருக்கின்றன. ஆனால் வைரஸில் டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ ஏதாவது ஒன்று மட்டும்தான் இருக்கும். கொரோனாவில் ஆர்.என்.ஏ மட்டும் தான். அதனால் இதை ஆர்.என்.ஏ வைரஸ் என்பார்கள்.

நம் உடலில் 10 டிரில்லியன் செல்கள் அதாவது உயிரணுக்கள் இருக்கின்றன. உங்கள் தோல், முடி, ஈரல், நகம், பல் எனாமல், குடல், இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டு இருந்தால் உங்கள் கண் லென்ஸ் கூட ஒரு வகை உயிரணுதான்.

உயிரணுக்கள் தன்னைத் தானே ரிப்பேர் செய்துகொள்ளுவதால்தான், கொசு கடித்து சொறியும்போது நமக்கு வரும் நகக் கீறல் ஆறுகிறது. எலும்பு முறிந்து சரியாவது எல்லாம் இந்த மாயம்தான். நம் ஒற்றைத் தலைமயிரின் விட்டத்தில் (diameter) பத்தில் ஒரு பாகம்தான் செல்லின் அளவு! உங்கள் விரல் நுனியில் 2-3 பில்லியன் செல்கள் இருக்கும்!

எல்லா உயிரினத்தில் இருக்கும் செல்களிலும் டி.என்.ஏ (என்கிற டி ஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலம் deoxyribonucleic acid) செல்லின் மையப் பகுதியில் (நியூக்ளியஸ்) நூடில்ஸ் போல இருக்கிறது. அந்த நூடில்ஸை பிடித்தால் முறுக்கிவிட்ட நூலேணி போல் இருக்கும். புரோட்டீன்களை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற குறிப்பு இதில் இருக்கிறது. ‘அப்படியே அப்பாவை உரிச்சு வெச்சிருக்கான்’ போன்ற குடும்ப ரகசியங்கள் எல்லாம் இங்கேதான் இருக்கின்றன.

டி.என்.ஏ, ஆர்.என்.ஏ சுருக்கமாக: இந்தப் படத்தைப் பாருங்கள். என்ன தெரிகிறது? இரண்டு பக்கங்களிலும் ரிப்பனும் இடையில் வண்ண வண்ணப் படிகளும் தெரிகிறதா? இந்தக் கூட்டமைப்புக்குப் பெயர் ந்யுக்ளியோ-டைடுகள் (nucleotides).

படத்தை மற்றொரு முறை கவனியுங்கள். படிகளில் என்னென்ன இருக்கின்றன? வண்ணப் புகைப்படத்தில் நான்கு வண்ணங்கள் இருப்பது தெரியும். இந்த நான்கு வண்ணங்களும் நான்கு வகையானவை. அவை என்னென்ன என்பதும் படத்தில் இருக்கிறது. (A- அடினீன், T-தயோமைன், C-சைட்டோசின், G-குவானைன்) என்று பெயர்கள். வசதிக்காக, சுருக்கமாக A, T, C, G என்று வைத்துக்கொள்ளலாம். இவை ஒன்றோடு ஒன்று சேர சில விதிமுறைகள் இருக்கின்றன. A – T எப்போதும் ஒரே கூட்டணி. அதே போல C – G ஒரு கூட்டணி.

டி.என்.ஏ, ஆர்.என்.ஏ இரண்டும் நியூக்ளியக் அமிலம். டி.என்.ஏ இரண்டு கால் ஏணி என்றால் ஆர்.என்.ஏவிற்கு ஒன்றுதான். படிகளில் அடினீன், குவானைன், சைட்டோசின் மற்றும் யுரேசில் (முறையே A, G, C மற்றும் U எனச் சுருக்கமாக. இங்கே T கிடையாது) கூட்டணி அமைப்பு இப்படி இருக்கும் A-U, G-C.

டி.என்.ஏ தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் (டூப்ளிகேட் செய்துகொள்ளும்) குணம் பெற்றது. ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி… இப்படிப் பிரதியெடுக்கும். இப்போது கூட உங்கள் உடலில் அவை பிரதியெடுத்துக்கொண்டு இருக்கின்றன.

நீங்கள் இந்த உலகத்தில் முதலில் ஒரு செல்லாகத் தோன்றி, பிறகு இரட்டிப்பு முறையில் தொடர் பிரதியெடுப்பினால் இன்று மனிதனாகி இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். சரி கண், காது மூக்கு எல்லாம் எப்படி வந்தது என்று கேட்கிறீர்கள். அதற்குத்தான் ஆர்.என்.ஏ என்ற ஒன்று தேவைப்படுகிறது.

டி.என்.ஏவில் விதவிதமான புரோட்டீன்களை உண்டாக்குவது எப்படி என்ற குறிப்பு இருக்கும். வீடு கட்டுவதற்கு பிளான் போன்ற ஒன்று. கிச்சன் எங்கே வர வேண்டும், ஹால் எங்கே எவ்வளவு அடி நீளம் போன்ற தகவல். இதை டி.என்.ஏ ப்ளூ பிரிண்ட் என்பார்கள். நம் மூக்கு முகத்துக்கு நடுவில் வர வேண்டும். சப்பை மூக்கா இல்லை கிளி மூக்கா போன்ற எல்லா தகவல்களும் டி.என்.ஏவில் இருக்கும். செல் வளர, செயல்பட, நகலெடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளும் டி.என்.ஏவில் இருக்கும்.

ஆர்.என்.ஏ இந்தப் ப்ளூ பிரிண்ட்டில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி டி.என்.ஏவை நகலெடுத்து புரோட்டீன்களை உருவாக்குகிறது. உதாரணம், மூக்கு குடைமிளகாய் மாதிரி, கண் சின்னதாக, வாய் நீளமாக நகலெடுத்து அதற்குத் தேவையான ரசாயன மாற்றங்கள் செய்து புரோட்டினில் வடிவமைக்கப்படும்.

சுருக்கமாக டின்.என்.ஏ, ஆர்.என்.ஏவை உருவாக்கும். ஆர்.என்.ஏ புரோட்டீன்களை உருவாக்குகிறது.

விதவிதமான ஆர்.என்.ஏக்கள் இருக்கின்றன. செய்தி அனுப்ப(mRNA), தகவலை எடுத்துக்கொண்டு போக(tRNA) என்று பல விதங்கள். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது டிஎன்ஏ மற்றும் புரதத்திற்கும் இடையே ஓர் பாலமாக ஆர்.என்.ஏ உள்ளது என்பது.

உலகிலேயே உயிரணுதான் மிகச் சிறிய உயிர். அதில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏவும் இருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸில் ஆர்.என்.ஏ மட்டும்தான். அதனால் அதை ஆர்.என்.ஏ வைரஸ் என்கிறார்கள். அதாவது ஒரு மிகமிகச் சிறிய புரதத்துக்குள் இருக்கும் ஒரு சின்னப் பிட் ஆர்.என்.ஏதான் வைரஸ். செல்களுக்குள் செல்லும்போது அது செல்களைப் பாழ்படுத்தி வாழ ஆரம்பிக்கிறது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறது. எப்படிப் பரவுகிறது என்று பார்க்கலாம்.

இந்த வைரஸ் வௌவால்களிடமிருந்து ஒரு மிருகத்துக்குச் சென்றது. பிறகு ‘எப்படியோ’ அது மனித செல் ஒன்றுக்குச் சென்றுவிட்டது. இங்கே ‘எப்படியோ’ என்பதில்தான் இந்த வைரஸின் பரிணாம வளர்ச்சி(evolution) அடங்கி உள்ளது.

இந்த வைரஸின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தார்கள். அதன் ஆர்.என்.ஏ இழையை ஆராய்ந்தபோது சுமார் 26,000 முதல் 32,000 (படத்தில் உள்ளது போன்ற) எழுத்துக்கள் இருக்கும். இதைத்தான் ஜினோம் என்பார்கள். (மனிதனின் ஜினோமை பிரித்துப் பார்த்தால் 3.1 பில்லியன் எழுத்துக்கள் இருக்கும்.) சீனா வைரஸின் ஜினோமை மேலே இருக்கும் படத்தில் பார்க்கலாம்.

நம் மூக்குக்கு உள்ளே முடி இருக்கும். கொஞ்சம் ஈரமாகவும் இருக்கும். அதற்குக் கீழே செல்களில் சிலியா இருக்கிறது. கொரோனா தொற்று உள்ளவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ காற்றில் நம் கண்களுக்குத் தெரியாத ஆர்.என்.ஏ உடன் கூடிய வைரஸ் காற்றில் பரவும். சுவாசிக்கும்போது இந்த வைரஸ் நம் மூக்கு உள்ளே சென்று உள்ளே இருக்கும் சிலியா செல்களுடன் ஜிக்சா பசில் மாதிரி ஒட்டிக்கொள்ளும்.

ஒட்டிக்கொண்ட செல்லை கிட்நாப் செய்து ‘இனிமே நான் சொல்லுவதுதான் சட்டம்’ என்று தன் வேலையை ஆரம்பிக்கும். நம் உடலில் இருக்கும் புரதத்தை வைத்து வைரஸ் உற்பத்தியை ஆரம்பித்து நமக்கே ஆப்பு வைக்கும். அது பரவ ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நம் உடல் ஸ்தம்பித்துவிடும். சளி, இருமல், ஜுரம் எல்லாம் வந்து சேரும். நம் உடல் ஏதோ ஆபத்து என்று நோய் எதிர்ப்புச் சக்தி ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யும். வைரஸ் அதனுடன் ‘நீயா நானா?’ என்று போராடி வைரஸ் வெற்றி பெற்றால் நாம் செத்தோம்.

இப்போது வைரஸ் ‘இந்த ஆசாமியின் ஆண்டிபாடி கொஞ்சம் சத்தாக இருக்கு, என்னை இப்படி போட்டுச் சாத்துகிறான்’ என்று தன்னைத் தானே மாற்றிக்கொள்ள ஆரம்பிக்கும். இதை ஆர்.என்.ஏ மியூடேஷன் என்பார்கள். நம் உடலில் இருக்கும் வைரஸ் ஒரு வித வடிவமைப்பு என்றால் உடனே அது தன் வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும். நம் பக்கத்தில் யாராவது வந்தால் நமக்கே தெரியாமல் அவருக்கு மூக்கு (அல்லது கண்) வழியாகப் பரவும். கண் மூக்கு எல்லாம் இணைக்கப்பட்டுள்ளது!உள்ளே சென்று இதே மாதிரி வேலையை ஆரம்பிக்கும்.

தற்போது பூண்டு எண்ணெய்யைப் பயன்படுத்தி கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார்கள். (நகைச்சுவை இல்லை உண்மை!) அதே போல இந்த வைரஸும் தன்னைக் காத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கிறது.

தொற்று பரவுவதைக் குறிக்க R0 என்று ஒரு குறியீடு இருக்கிறது. உதாரணத்துக்கு R0 = 1.3 என்றால் நமக்கு ஜலதோஷம் என்றால் நம்மிடமிருந்து சராசரி ஒருவருக்கு அந்த ஜலதோஷம் பரவும் வாய்ப்பு இருக்கிறது. ஓர் உதாரணம் பார்க்கலாம். ஒரு வைரல் ஜுரத்துக்கு R0 = 1.3 என்று வைத்துக் கொள்ளலாம். இன்று 1000 பேருக்கு இந்த ஜுரம் என்றால் அவர்கள் மூலமாக 1.300 பேருக்கு இந்தத் தொற்று வர வாய்ப்பு இருக்கிறது. முப்பது நாளில் 42,621 பேர் ஜுரத்துடன் இருப்பார்கள். அம்மைக்கு இந்த எண் 3.7 – 203 வரை. கொரோனாவின் நம்பர் 2-2.5 வரை. ஆனால் பரவும் வேகம் மற்ற வைரஸைவிட இது அதிகம்.

கொரோனாவிற்கு 2.5 – 3 வரை. அதாவது ஒருவரிடமிருந்து அந்தத் தொற்று சராசரியாக மூன்று பேருக்குப் பரவுகிறது. அவரிடமிருந்து இன்னொரு மூன்று பேர் இப்படி. அதனால்தான் இன்று பல இடங்களுக்குப் பரவுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இது பரவும்போது அது தன் கட்டமைப்பை மாற்றிக்கொள்கிறது!

நான் ஒருவன் வெளியே போவதால் என்ன ஆகும்?

எப்படிப் பரவுகிறது என்பதற்கு இந்த உதாரணத்தைப் பாருங்கள். ஜனவரி 20, 35 வயது பெண், வைரஸ் பிறந்த இடமான சீனாவின் வூஹானிலிருந்து கொரியா வந்தார். இவரிடம் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. சீனாவிலிருந்து வந்த மேலும் மூன்று பேர் பக்கத்து சீட்டுக்காரர்கள், குடும்பத்தினர் என்று பிப்ரவரி 16 அன்று மொத்தம் 39 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி 18 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61 வயது பெண் சர்ச் கூட்டத்துக்குச் சென்றார். பிப்ரவரி 20 (இரண்டு நாளைக்குப் பிறகு) பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 104. மார்ச் 25 அன்று பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 9,137 பேர். அதில் 5080 பேர் சர்ச்சுக்குச் சென்ற அந்த ஒருவரால் பாதிக்கப்பட்டவர்கள்.

கொரோனா வகை முதலில் ‘S’ வகையில் ஆரம்பித்தது. பிறகு அது பரிணாம வளர்ச்சி அடைந்து ‘L’ வகை என்று ஒன்று தோன்றியது. இந்த ‘L’ வகை ரொம்ப பொல்லாதது. சுலபமாக வெளியேயும், நம் உள்ளேயும் பரவி உடனே ஆளைப் போட்டுத் தள்ளும். இந்த L வகையினால்தான் சீனாவில் இவ்வளவு மரணம். 70% மரணம் ‘L’ வகையினால் ஏற்பட்டது என்கிறார்கள். ‘L’ வகை ஜனவரிக்குப் பிறகு பரவவில்லை. காரணம் அங்கே விதிக்கப்பட்ட மிகக் கடுமையான ஊரடங்கு உத்திரவு (லாக் டவுன்). இன்று வெளியே சுற்றிக்கொண்டு இருப்பது ‘S’ வகை. ‘L’ வகைபோல வீரியம் குறைந்ததாக இருந்தாலும், இதிலேயும் ஆபத்து இருக்கிறது. தற்போது ‘S’ வகை பல விதத்தில் மியூடேஷன் ஆகிக்கொண்டு இருக்கிறது.

இன்று கொரோனா உலகில் எப்படி பரவியிருக்கிறது என்று இந்தக் குழப்பமான படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். முதலில் சீனாவிலிருந்து ஆரம்பித்து எப்படி எல்லாம் பரவியிருக்கிறது என்று இந்தப் படம் சொல்லுகிறது. வரைபடத்தில் கிளை என்பது வைரஸ் தன்னை தானே கொஞ்சம் மாற்றிக்கொண்டதைக் குறிக்கிறது. டி.என்.ஏ வைரஸைவிட ஆர்.என்.ஏ வைரஸ் நூறு மடங்கு மாற்றிக்கொள்ளும் திறன் பெற்றது. அதனால்தான் பிறந்தவுடன் தடுப்பு ஊசி போட்டுக்கொள்கிறோம். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை, அதனால் இந்த வைரஸை அழிக்க ஒரே வழி சமூக விலகல் மட்டும்தான். இதனால் இரண்டு முக்கியமான விஷயம் நடக்கிறது. R0 குறைகிறது. வைரஸ் மாற்றிக்கொள்வதைத் தடுக்கிறோம்.

நீங்கள் மாஸ்க் போட்டுக்கொள்வதால் உடனே அந்த வைரஸ் உங்கள் மூக்குக்குள் நுழைய முடியாது. ஆனால் அந்த வைரஸ் உங்கள் கை அல்லது உங்கள் சட்டையில் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அதன் மீது உங்கள் கைபட்டு உங்கள் கை மூக்கு பக்கம் சென்றால்அல்லது நீங்கள் கண்ணைக் கசக்கினால் அந்த ஜிக்-சா பசில் மாதிரி ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் சோப்பு போட்டுக் கழுவச் சொல்லுகிறார்கள். வைரஸ்பற்றிப் புரிந்துகொண்டால்தான் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என முயற்சி செய்யலாம்.

மனிதன் செய்த ‘அதர்மம்’ இன்று உலகை அடியோடு மாற்றிவிட்டது. ஏழைகள் குடிசைகளிலும், மற்ற நாடுகளை மிரட்டும் அதிபர்கள் தத்தம் அரண்மனைகளிலும் பம்மிக்கொண்டு இருக்கிறார்கள். உலகமே அரண்டு போயிருக்கிறது. யாராவது தும்மல் போட்டாலே அணுகுண்டு போட்ட மாதிரி பயப்படுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத சிறியதொரு கிருமியின் முன் மனிதன் மண்டியிட்டுக் கிடக்கிறான்.

உலகில் எப்போது கொரோனா முடிவுக்கு வரும், மற்ற தேசங்களில் எப்போது முடிவுக்கு வரும் என்று தற்போது உள்ள தகவல்களின் அடிப்படையில் சிங்கப்பூர் யூனிவர்சிட்டி படம் போட்டுக் காண்பிக்கிறது.

மே 27 97% குறைந்து சோப்பு விளம்பரம் மாதிரி சில கிருமிகள் ஒட்டிக்கொண்டு இருக்கும். 100% போவதற்கு டிசம்பர் 8 என்று கணிக்கிறது. இந்தியாவில் மே-21 97% குறைந்துவிடும் என்கிறது.

கொரோனாவின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்துத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடமோ இரண்டு வருடமோ ஆகும் என்கிறார்கள். அதுவரை?

நாளும் நின்று அடும் நம் பழமை அம்  கொடுவினை உடனே
மாளும், ஓர் குறைவு இல்லை, மனன்அகம்  மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம்கழல் வணங்கி

மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு  மாள்வது வலமே.

தினமும் இடைவிடாது செய்கிற பாவங்களைப் போக்குவதற்கு ஒரே வழி தாயாருடன் இருக்கும் பெருமாளின் திருவடிகளைப் பற்றுவதுதான் என்ற இந்த நம்மாழ்வாரின் பாசுரமே சிறந்த தடுப்பு ஊசி!

Leave a Reply