வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில், குறிப்பாகக் கடந்த இருபது ஆண்டுகளில்தான் உலகில் அதிகமான நாடுகள் தங்களை ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டுள்ளன. இப்போது உலகில் பாதிக்கும் அதிகமான மக்கள் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழுகின்றார்கள். இந்த மாற்றம் ஏனென்றால் பெருவாரியான மக்கள் ஜனநாயக முறையில் தங்களுக்கான ஒரு அரசை உண்டாக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.
அந்த நம்பிக்கையை அதே மக்கள் நிலை நாட்டுகிறார்களா? ஜனநாயகத்தில் அனைவருக்கும் சமமான மேம்பாட்டை அடைய முடியும் என்பது ஒரு சவாலான ஒன்றுதான் என்பதை முதிர்ச்சி அடைந்த சில ஜனநாயக நாடான பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மற்ற முறைகளை விட ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் ஏற்றத்தாழ்வு இல்லாத சமமான மேம்பாட்டை அனைவரும் அடைய முடியும் என்பதுதான் கடந்த நூற்றாண்டில் மாபெரும் புரட்சியாக இருந்தது. ஏனென்றால் ஜனநாயக முறையில் நம்மில் சிலர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையைப் பின்பற்றி மக்களை வழி நடத்த அதாவது ஜனநாயகக் கடமையாற்ற பிரதிநிதிகளாக வருகின்றனர். மேலும் ஜனநாயக அரசு முறை மூலம் இன்னும் பலர் ஜனநாயகக் கடமையாற்ற வருகின்றனர். இவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது அரசுக் கட்டமைப்பின் முக்கியச் செயலாக்கத்திற்குத் தூண்களாக, மக்களுக்காகப் பணியாற்றுபவர்கள்.
ஆனால் இந்த இரண்டு குழுக்கள் (மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள்) நடைமுறையில் ஜனநாயகத்தின் கடைமையை முழுமையாகச் செவ்வனே செய்கின்றனவா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான். இது இந்தியாவுக்கும் பொருந்தும். மக்கள் தங்களுக்காக இயற்றிய அரசியல் சாசனம் பிற்காலத்தில் அவர்களுக்கு எதிராகவே செயல்படத் துவங்கியதுதான் நாம் கூர்ந்து நோக்கவேண்டிய ஒன்று. நம் நாட்டின் அரசியல் சாசனமுறையின் அடிப்படைக் கொள்கைகள் என்னவென்றால் அரசு தனது மக்களுக்காகச் செய்யும் அனைத்துச் செயல்பாடுகளின் தகவல்களை, முக்கியப் பாதுகாப்பு சம்பந்தமான சிலவற்றைத் தவிர, வெளிப்படையாக அளிக்க வேண்டும் என்பதுதான். இது மக்களின் அடிப்படைத் தார்மிக உரிமை. அப்படி குறைந்தபட்ச தகவல் கூடத் தெரிவிக்கப்படவில்லை என்றால் அந்த அரசு தனது மக்களுக்கு அளித்த குறைந்தபட்ச ஜனநாயக கடமையைக் கூடச் செய்யவில்லை என்றுதான் பொருள். ஆனால் நடைமுறையில் அந்த ஜனநாயகக் கடமையாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டு சென்ற பலர் அதை மறந்து விடுகின்றனர். இது அதிகார மற்றும் ஜனநாயக துஷ்பிரயோகம்.
இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நடக்கும் செயல்களைத் தடுத்து முறையாக நெறிப்படுத்தவே நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று ஜனநாயகத்திற்கு முக்கிய தூண்களாக இருக்கும் அரசு இயந்திரத்தின் பல்வேறு பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கிடையே வழக்குகள் போட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்! இதுவே ஜனநாயகத்தின் முதல் முரண்பாடு. இவர்களின் நடைமுறைச் சிக்கலுக்கு மக்கள்தான் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
இன்று நாட்டின் அடிப்படை மூலக்கூறுகளில் நிலம், மனிதவளம், மூலதனம் என்பதோடு, சரியாக சேகரிக்கப்பட்ட தகவலும் ஒரு முக்கிய மூலக்கூறாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்தத் தகவல் மூலக்கூறுதான் மற்றவற்றுக்கு முதன்மையாக விளங்குகிறது. ஆகவே தகவல் பரிமாற்றத்தை இனிமேலும் அரசு மற்றும் அதிகார வர்க்கத்தினரால் புறம்தள்ள முடியாது. நிலம், மனிதவளம் மற்றும் மூலதனம் பற்றி சரியான தகவல்கள் அரசு மற்றும் மக்களிடையே ஒருசேர இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சித் திட்டத்தின் முடிவுகளை ஜனநாயக முறைப்படி எடுக்க முடியும்.
ஒரு சில மாநில அரசுகள் ஏற்கெனவே தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றியிருந்தாலும் 2005ல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், அரசு அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்களிடமிருந்து மக்கள் தங்களது விண்ணப்பம் மூலம் தகவலைப் பெற முடியும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்து இன்று 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் சில அடிப்படைத் தகவலைக் கூட சாதாரணமாக மக்கள் இன்றும் பெற முடிவதில்லை. அப்படி என்றால் இந்தச் சட்டத்தில் எதோ குறை இருக்கிறது; அல்லது நாம் பின்பற்றும் ஜனநாயக முறையில் மக்களுடன் இணைந்து செயல்படுவதில் அரசுகளுக்கு சிக்கல் இருக்கிறது; அல்லது அரசுகள் ஒளிவு மறைவற்ற நிலை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்காக எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை; அல்லது அரசின் கொள்கைகளில் தெளிவு இல்லை மற்றும் ஒரு நிலையான முறையைச் செயல்படுத்த விரும்பவில்லை என்பதுதான் உண்மை. மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு அரசுக்கு வரியைச் செலுத்திவிட்டால் தங்களது கடமை முடிந்தது என்றுதான் இன்றும் எண்ணுகிறார்கள் பெருவாரியான பொதுமக்கள். இந்த நிலை எப்போது மாறுகிறதோ அன்றுதான் உண்மையான ஜனநாயக ஆட்சி முறை துவங்கும்.
இப்போது மற்றோரு கேள்வி எழுப்பப்படுகிறது. மக்கள் விண்ணப்பம் அளிக்காமல் ஏன் அரசு தாமாகவே முன்வந்து குறைந்தபட்ச தகவலைத் தெரிவிக்கக்கூடாது?
2005ல் தகவல் பெறும் உரிமை மசோதா பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டபோது மாற்றுச் சிந்தனையாளர்களும் அமைப்புகளும் சில அவசியமான கருத்துக்களை முன்வைத்தார்கள். அதாவது இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 4வது பிரிவின்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒவ்வொரு திட்டம் குறித்தும் தகவல்களைத் தாமாகவே முன்வந்து (suo moto) தொடர்ந்து வெளியிட வேண்டும் (Duty to Publish Act- DTP) என்று. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாற்றுக் கருத்துக்கள் அன்று பரவலாக விவாதிக்கப்படவில்லை.
மேலும் 2005ல் மாற்றுச் சிந்தனையாளர்கள் அமைப்புகள் தெரிவித்தது என்னவென்றால், 4வது பிரிவை விரிவாக ஒரு சட்டமாக கொண்டுவந்தால் அரசுகள் மக்களுக்குத் தகவல்களை அளிக்கச் சுலபமாக இருக்கும். அதாவது அரசுகள் எப்படி ஒவ்வொரு தனிமனிதனிடம் வரியை வசூலிக்கின்றனவோ அதுபோலவே அரசுகள் மக்களுக்குத் தங்கள் செயல்பாடுகளைக் குறைந்தபட்சமாகத் தானாகவே முன்வந்து தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முறையில், குறைந்தபட்ச தகவலுக்காக மக்கள் விண்ணப்பம் அளித்து தகவல் பெறுவது என்பதைவிட, தாமாகவே அரசு தகவல்களை வெளியிடுவது மேலான ஜனநாயக முறையாகவே இருக்கும். இன்றைய அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் உடனுக்குடன் தகவல்களைப் பொது மக்களுக்கு எளிதில் தெரிவிக்க முடியும். இப்படி ஒரு அரசு நினைக்குமானால் அது முதலில் செய்ய வேண்டியது, இதுவரை அரசியல் சாசனத்தில் திருத்தங்களால் கொண்டுவந்திருக்கும் அதிகாரப் பகிர்ந்தளித்தலை அனைத்து நிலைகளிலும் முறைப்படுத்துவதுதான்.
ஜனநாயக வெற்றியாளர்களால் தற்போது இருக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டால்தான் அரசுகள் தாமாகவே முன் வந்து தகவல்களை அளிக்க முடியும். 2005ல் இயற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள 4வது பிரிவை மேலும் விரிவாகத் திருத்தும் செய்து அரசின் அடிப்படைச் செயல் முறையில் ஒரு அங்கமாக இருக்கும்படி மாற்றம் கொண்டு வர வேண்டும்.
தற்போது உள்ள நடைமுறையைவிட அரசுகள் தாமாக முன்வந்து தகவல்களைப் பொது மக்களுக்கு அளிக்க ஆகும் செலவு ஒப்பீட்டளவில் குறைவே. வரியைச் செலுத்தும் மக்கள் தங்களுக்குத் தேவையான தகவலுக்கு விண்ணப்பம் அளித்து பணமும் செலுத்தித் தகவலைப் பெறுவது என்பதைவிட, பொதுவான மக்களுக்குத் தேவையான தகவல்களை அரசே தாமாக முன்வந்து வெளியிடுவதே மேம்பட்ட ஜனநாயகத் தன்மையாக இருக்கமுடியும். இப்படித் தகவல்களை வெளியிடுவது அரசுகளின் ஜனநாயகக் கடமை என்பதோடு, சரியான தார்மிகமான செயல்பாடாகவும் இருக்கும்.