Posted on Leave a comment

சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

அந்த அமெரிக்க ஆராய்ச்சியாள தம்பதிகள் நாட்டுப்புறத் திருவிழாவைக் காண அந்த கிராமத்துக்கு வந்திருந்தனர். நகர்ப்புறங்களிலிருந்து மிகவும் விலகி இருந்த கிராமம் அது. அந்தத் தம்பதிகளுக்கு வழிகாட்டியாக ஒரு பதினேழு வயது இருக்கும் கிராமப்பெண் கிடைத்தாள். கெட்டிக்கார பெண். தன் பணியைச் செவ்வனே செய்தாள். கிராமத்திலிருந்த மிருக ஆஸ்பத்திரி அந்தத் தம்பதிகளின் கவனத்தை ஈர்த்தது. அங்கே சென்று பார்க்கலாமா? ஓ சரி என்றாள் அந்த வழிகாட்டிப் பெண்.

நகரத்திலிருந்து வந்திருக்கிற பெரிய அதிகாரி இருப்பார். அவரும் பெண்தான். அவர்கள் உள்ளே நுழைந்தனர். இருக்கையில் அமர்ந்த அந்த அமெரிக்கத் தம்பதிகள் அந்த பெண்ணையும் அமரும்படி கூறினர். தயங்கியபடி அமர்ந்தார் அந்தப் பெண். அடுத்த கணம் தம்பதிகளிடம் பேசிக்கொண்டிருந்த அந்த மேலதிகாரி எழுந்தார். பேச்சில் எவ்விதத் தடையும் இல்லாமல் அந்தப் பெண்ணைப் பிடித்துத் தூக்கினார். எறியாத குறையாக நிற்க வைத்தார். உரையாடல் தொடர்ந்தது. வெளியே வந்த அமெரிக்கத் தம்பதிகளிடம் அந்தப் பெண் அந்த விஷயத்தைக் குறித்துப் பேச விரும்பவில்லை. ஆனால் தொடர்ந்து கேட்ட பிறகு அந்த பெண் சொன்னார்: ‘எங்க சாதிக்காரங்களுக்கு இதெல்லாம் சகஜங்க. 

இந்த சம்பவம் எங்கே நடந்தது என்று கேட்டால் தயக்கமில்லாமல் சொல்லிவிடுவீர்கள் – ‘இந்தியா’. ‘நிச்சயம் இந்தியா! என்னதான் படித்திருந்தாலும் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் பிறப்பின் அடிப்படையில் ஒருவர் அவமானப்படுத்தப்படும் நாடு இந்தியாதான். காரணம் பாழாய்ப் போன சாதி முறை. இதுதாங்க சொல்றது, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தேவை அதிகாரம். இன்னும் நூறு இருநூறு நாற்காலிகள் வேணும். யாரும் எழும்ப வைக்க முடியாத மாதிரி…’

உணர்ச்சி வசப்படுவதற்கு முன்னால் ஒரு சின்ன விஷயம். 

இது நடந்தது இந்தியாவில் இல்லை. 

ஜான் ஃப்ளவர் என்கிற அமெரிக்க ஆராய்ச்சியாளருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட இந்த அனுபவம் யான் என்கிற சிறிய ஊரில் சிக்குவான் என்கிற மாகாணத்தில் சீனாவில் நடந்தது. இது நடந்த ஆண்டு 1992. அந்தப் பெண்ணின் பெயர் யாவோ சுகாய், அவள் முணுமுணுத்த வார்த்தைகள் ‘எங்களைப் போன்ற ‘நாங்க்மின்களுக்கு இதெல்லாம் பழகிப் போச்சுங்க. நாங்க்மின் என்றால் கிராமப்புற விவசாயக் கூலிகள். 

‘என்னப்பா கதை விடுகிறாய்! விவசாயத் தொழிலாளராக இருந்தால் மாவோயிஸ மார்க்ஸிய சோஷலிச நாட்டில் அவமானப்படுத்தப் படுவார்களா? சரி அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கலாம். ஆனால் இந்தியாவில் இருப்பது போல பிறப்படிப்படையிலான சாதியா அது? வேண்டுமென்றே திரிக்கிறாயே!’ என்கிற சோஷலிஸ இடதுநேசரா நீங்கள்? மேலே படியுங்கள். 

சீனாவில் கிராமப்புற, நாட்டுப்புற வேறுபாடு படுதீர்க்கமானது. அத்துடன் அது மிகத் தெளிவாகப் பிறப்படிப்படையிலானது. ஒருவர் பிறக்கும்போதே அக்குழந்தை தாய்வழியில் கிராமமா அல்லது நகரமா என்பது தீர்மானிக்கப்பட்டுவிடும். அதிகாரபூர்வமாக. அதன் அடிப்படையில்தான் அதற்குக் கிடைக்கும் உணவிலிருந்து, வாழுமிடம், எப்படிப்பட்ட கல்வி, எதுவரைக்குமான கல்வி எப்படிப்பட்ட மருத்துவ வசதி என்பதெல்லாம் அக்குழந்தையின் வாழ்க்கையின் இறுதி வரை தீர்மானிக்கப்படும். 

இந்த அமைப்பின் பெயர் ஹுகோவ் (Hukou) என்பது. இந்த அமைப்பு தெள்ளத் தெளிவாக கிராமப்புற விவசாய மக்களுக்கு அதாவது நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கு எதிரானது. அந்த கிராமத்து விவசாயக் கூலி கடைநிலை பணியாளர்கள் தீர்மானிக்கப்படுவது பிறப்பின் அடிப்படையில். 

நாம் பார்க்கும் பகட்டான கண்ணைப்பறிக்கும் பிரகாசத்துடன் மிளிரும் சீனா நகர்ப்புற மேல்சாதியினரின் சீனா. 

ஹூகோவ் அமைப்பு பாரம்பரிய சீனாவில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது. கன்ஃபூஷியஸ் மரபு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதந்தோதுவது. மக்களை முடிந்த வரையில் எந்த அளவு கட்டுப்பாடாக வைக்க முடியுமோ அந்த அளவு கட்டுப்பாடாக அரசு வைக்க வேண்டுமென்பது அம்மரபின் அடிப்படைகளில் ஒன்று. இதனடிப்படையில் உருவாக்கப் பட்டதுதான் இந்த அமைப்பு. இயல்பிலேயே மேல் சாதியினருக்கு உதவும் வகையில் அது அமைந்திருந்தது இயற்கையே. சமுதாய படிநிலை மட்டுமல்லாமல் சமுதாய விலக்கும் இயல்பாகவே இந்தப் பாரம்பரிய அமைப்பில் இருந்தது. 

மாவோவின் செங்கலகத்துக்குப் பிறகு இந்த அமைப்பு ஒழிக்கப்பட்டிருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள். மாவோவுக்கும் சரி அவரது மார்க்ஸியத் தோழர்களுக்கும் சரி, சீனப் பண்பாட்டின் மீது கடுமையான வெறுப்பு இருந்தது உண்மைதான். கன்பூஷியஸையோ லாவோட்ஸையோ மேற்கோள் காட்டுவது மாவோவுக்குக் பிடிக்காது. அப்படிப்பட்ட போக்குகளை அவர் கடுமையாகக் கண்டித்திருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் ஹூகோவ் அமைப்பைப் பொருத்த வரையில் அது ஒரு விதி விலக்கு என்றே சொல்ல வேண்டும். 

சீன செங்கலகத்தின் பின்னர் ஸ்டாலினிஸ பாணியில் மாவோவும் முழு தொழில்மயமாக்கலைத் தொடங்கியபோது, எல்லா இடங்களிலும் போல, கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு வர ஆரம்பித்தனர். எப்போதையும் மரபை வெறுக்கும் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் மரபில் இருக்கும் மக்கள் கூட்ட வெறுப்புச் சொலவடைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். ‘மக்கள் மந்தை நாட்டுப்புறங்களிலேயே வாழ்ந்தால் நல்லொழுங்கு. மக்கள் மந்தை நகரங்களுக்குள் வந்துவிட்டால் ஒழுங்கின்மை.

மாவோ அரசு ஹூகோவ் அமைப்பில் உருவாக்கிய முக்கிய மாற்றம் அது. தந்தையிடமிருந்து வராமல் தாயிடமிருந்து மகவுக்கு வருவதாக மாற்றியது. அதற்கு முக்கியக் காரணம் இருந்தது. மற்ற எல்லா சட்ட விஷயங்களிலும் தந்தை முறை அமைப்பை ஏற்றுக்கொண்ட மாவோயிஸ்ட் அரசு ஏன் இதில் மட்டும் தாய் பிறப்பின் அடிப்படை என ஏற்றுக்கொண்டது? 

வரலாற்றாராய்ச்சியாளர் பேரா. க்ளென் பீட்டர்ஸன் (Glen Peterson) விளக்குகிறார்:

“தந்தை வழி வருவதாக இருக்கும் பட்சத்தில் அது சமுதாய மேல்நிலையாக்கத்துக்கு வழி வகுத்துவிடும். ஹுகோவ் தகுதியை சந்ததி உயர்த்திக் கொள்ள முடியும். தாய் வழி முறையில் அது தவிர்க்கப்பட்டு விடும் …பள்ளிக் கல்வி, வேலை வாய்ப்பு, உணவு, நுகர்வோர் சேவைகள், இதர சேவைகள் என அரசினால் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் பெறுவதைக் கட்டுப்படுத்தும் முக்கியக் கருவியாக ஹூகோவ் இருக்கிறது. 1959-61ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்துக்குப் பிறகு சீனத் தலைவர்கள் விவசாயக் கூலிகளை (peasants) சட்டபூர்வமாகவும் நிரந்தரமாகவும் நிலத்துடன் பிணைக்கப்பட்டவர்களாக வைத்திருப்பதே நாட்டின் மிக மோசமான உணவு நிலவரத்தைக் கட்டில் வைத்திருக்க நல்ல தீர்வு என்கிற முடிவுக்கு வந்துவிட்டிருந்தனர்.” (The Power Of Words: Literacy And Revolution In South China, 1949-95)

மாவோயிஸ சீனத்தின் பிறப்படிப்படையிலான நிலத்தடிமை முறை ஒவ்வொரு வளமும் ஒவ்வொரு சேவையும் எவருக்கு எப்படிக் கிடைக்க வேண்டும் என்பதுடன் அதன் தராதரம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 1998ல் இம்முறை தாய் வழியாக மட்டுமே சந்ததிக்கு வரும் என்பது மாற்றப்பட்டு தாய்-தந்தை இருவர் வழியாகவும் மகவுக்கு முடிவு செய்யப்படும் என மாற்றியமைக்கப்பட்டது. 

இந்த முறை இந்திய சாதி முறையுடன் கூட ஒப்பிட முடியாது. இதன் மிகச்சிறந்த ஒப்பீடு ஐரோப்பிய நிலத்தடிமை முறைதான். ஐரோப்பியப் பண்ணையடிமைகளும் பிறப்படிப்படையில் பண்ணைகளுடன் பந்தப்படுத்தப்பட்டு உழன்றவர்களே. ஆனால் அது மத்தியக் காலம். சீனாவிலோ மாவோயிஸப் பொன்னுலகம் என்பது நகரப்புற கனவான்களுக்கு மட்டுமே பிறப்படிப்படையில் அமைந்தது. கிராமப்புறங்களின் கூட்டுப் பண்ணையடிமைகள் அந்தக் குடும்பங்களில் பிறந்தார்கள் என்பதற்காகவே வாழ்நாள் முழுக்க சட்டப்பூர்வமான இரண்டாந்தர குடிமக்களாக உழல வேண்டும்.

நீங்கள் பொதுவாக இடதுசாரி, திராவிட வரலாற்றாடல்களைப் பார்த்தால் ஒரு விஷயத்தை அவதானிக்கலாம். இந்தியாவில் பிராம்மணீயம் வெகுஜனங்களுக்குக் கல்வியறிவை அளிக்கவில்லை, தடை செய்தது எனச் சொல்லப்படும். இது கடைந்தெடுத்த காலனிய பிரசார பொய் என்றாலும், தங்களை காலனியாதிக்க எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மார்க்ஸியர்களும் மாவோயிஸ்ட்களும் இதைச் சொல்ல தயங்குவதே இல்லை. இது இன்று ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றாகிவிட்டது. உண்மை என்னவென்றால் கல்வி பாரம்பரிய இந்தியாவில் அன்றைக்கு உலகின் வேறெந்த பகுதியைக் காட்டிலும் ஜனநாயகப்படுத்தப்பட்டதாகவே இருந்தது என்பதுதான். 

ஆனால் மாவோ உருவாக்கிய பிறப்படிப்படையிலான பண்ணையடிமை முறையோ மனு செய்யாமலே செய்ததாக பிரசாரம் செய்யப்படும் எந்தக் கல்வி மறுப்பைக் காட்டிலும் கொடுமையானது. கொடூரமாக அமலாக்கப்ப்ட்டது. வேறு வழியே இல்லாமல் மக்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்பதாக அமைக்கப்பட்டது. பீட்டர்ஸன் எழுதுகிறார்:

“1949க்குப் பிறகு பாரம்பரியமாக கல்வி கற்க ஒருவரை தூண்டும் விஷயங்கள் இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டன அல்லது மறைந்திருக்கும் விதமாக விரட்டி அடிக்கப்பட்டன. அந்தக் கல்வி வேட்கை நிலவுடைமை சமுதாயத் தன்மை கொண்டதென முத்திரை குத்தப்பட்டது …ஹுகோவ் அமைப்பு நகர்புறப் பள்ளிகளை (விவசாய) உற்பத்திக் குழுக்களின் குழந்தைகளுக்கு விலக்கப்பட்டதாக மாற்றியது.”

ஒரு குழந்தை கற்கவேண்டுமென்றால் மூன்று விதங்களில் மட்டுமே கல்வியைப் பெற முடியும்:

“கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாம். இரண்டாவதாக ராணுவத்தில் சேரலாம். மூன்றாவதாக அரசுப் பள்ளிகளில் சேரலாம். இவற்றில் மூன்றாவது வழிமுறை மிகவும் அரிதானது. கூட்டு-வாழ்க்கை முறையில் முன்னேற கல்வி வெகு அவசியமெனினும் அது உற்பத்திக் குழுக்களின் மிகவும் மூடிய ஒரு சிறிய வட்டத்துக்குள்ளே மட்டுமேயான கல்வியாகவே கிட்டும் எனும் விதத்தில் அமைந்தது.”

இதற்கான காரணம் உண்மையில் இன்னும் ஆழமானது. வரலாற்று பூர்வமானது. எல்லா சமுதாயங்களிலும் சில குழுக்கள் சமுதாய விலக்கம் அடைந்திருக்கும். நவீன காலத்துக்கு முற்பட்ட எல்லா சமுதாயங்களிலும் தீண்டாமை உண்டு. ஆனால் அப்படிப்பட்ட சமுதாயத் தள்ளிவைப்பு என்பது மிகப் பெரிய ஜனசமுதாயத்துக்கு இருக்காது. அன்றைய சமுதாயப் பார்வை, அரசியல் ஆகியவை சார்ந்து அவை ஒரு கிராமம் சார்ந்த சிறுக்குழுக்களுக்கு மட்டுமே இருக்கும். இந்தியக் கிராமம் ஒன்றில் தீண்டாமை என்பது அனைத்து மக்களுக்கும் எதிராக ஒரு சிறுபான்மையினரால் கடைப்பிடிக்கப்படாது. இன்னும் சொன்னால் பல பிற சமுதாயங்களைக் காட்டிலும் அந்தண சமுதாயம் சடங்காச்சார ரீதியில் மேம்பட்டதாகக் கருதப்பட்டாலும் பொருளாதார ரீதியிலும் அரசியல் அதிகார ரீதியிலும் கீழ்தங்கியே இருந்தது. பாரம்பரிய சீனாவிலும் இதே நிலைதான் இருந்தது. 

பேராசிரியர் ஃபேய்-லிங்க் வான் (Dr. Fei-Ling Wang) 2005ல் கூட இந்த ஹூகோவ் முறை குறித்து ஆராய்ச்சிகளுக்கு அனாமதேய பேட்டிகளையே எடுக்க வேண்டிய நிலையில் இம்முறை குறித்து விரிவாக ஆராய்ந்திருப்பவர். அவர் கூறுகிறார்:

“சீனப் பேரரசின் (பாரம்பரிய) ஹூகோவ் முறையில் அது ஒரு முழுமையற்ற நிறுவன ரீதியிலான சமுதாயத் தள்ளிவைப்பு. எங்கே பிறந்தார்கள் என்பது தவிர எப்படிப்பட்ட குலங்களில் பிறந்தார்கள், உயர்குல பிரபுக்களா, சாதாரண விவசாயக் குடிகளா, தீண்டத்தகாதவர்களா என்பது போல அடுக்குகள் கொண்டது. இறுதி இரண்டு அரச பரம்பரைகளில் இவை அனைத்துமாக நான்கு ஹுகோவ் பிரிவுகளாக்கப்பட்டன. ராணுவத்தினர், விவசாயக்குடிகள், வியாபாரிகள், கைத்தொழிலாளர்கள் என. இந்த நான்கு குடிகளுக்கும் ஏறத்தாழ சட்டரீதியிலான ஒரே அந்தஸ்து ஆங்காங்கே வேற்றுமைகளுடன் இருந்தது. வரிச்சுமை, அரச தேர்வுகளில் பங்கெடுக்கும் உரிமை, ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு புலம் மாறும் உரிமை ஆகியவை உண்டு. இதற்கும் கீழான குலங்கள் மேலும் விலக்கப்பட்டிருந்தன. …மாவோ சீனக்குடியரசில் இருக்கும் ஹூகோவ் போன்றில்லாமல் பாரம்பரிய ஹூகோவ் பெரும்பாலான மக்களை சமுதாய விலக்கம் செய்யவில்லை.” (Organizing Through Division And Exclusion: China’s Hukou System, Stanford University Press)

இந்த அமைப்பைப் பொருத்தவரை கல்வி ‘சாதாரண மக்களுக்கு அதாவது திராவிட கழக பாணியில் சொன்னால் ‘சூத்திர ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ‘அபிராம்மணர்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச இடம் ஒரு அலுவலர் – கட்சியின் மேலதிகாரிகளுக்குக் கட்டுப்பட்ட கண்காணி வேலை செய்யும் அதிகாரி – அவ்வளவுதான். எப்படி மெக்காலே கல்வி குமாஸ்தாக்களை உருவாக்க வடிவமைக்கப்பட்டதோ அதே போல மாவோயிஸப் பிறப்படிப்படையிலான பண்ணையடிமைக் கல்வி அதிகபட்சம் ஒரு குடியானவக் கூலியின் மகனுக்கு அளிக்கும் உரிமை – கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடிமையதிகாரி. 

மானுடவியலாளர்கள் சுலமிதி பாட்டரும் ஜாக் பாட்டரும் (Sulamith Potter & Jack Potter) சீன விவசாயக்குடிகளின் அவலநிலையின் விரிவான சித்திரத்தை தங்கள் ஆராய்ச்சியில் அளிக்கின்றனர்::

“இதன் விளைவாக சமுதாயக் கட்டுப்படுத்துதல் என்கிற பார்வையில் மாவோயிஸ அமைப்பு ஒரு அதிகாரிகள் சார்ந்த நிலவுடைமை அமைப்பு. இங்கு விவசாயக்குடிகள் கட்சி அதிகாரிகளால் அணுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுவார்கள். விவசாயக்குடிகள் எவ்வித நடமாட்ட (புலம் பெயர்வு) சுதந்திரமும் இல்லாத குழுக்களில் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். இவ்விதம் விவசாயக் குடிகள் நகர்ப்புற மக்களிலிருந்து நிரந்தரமாக சாதி போன்ற தடையால் இருக்கும் இடத்திலிருந்து ஊரானாலும் சமூக நிலையென்றாலும் மாற்ற சுதந்திரம் ஏதுமில்லாமல் இருந்தாகவேண்டும். இதில் மாற்றம் என்பது கற்பனையிலும் இயலாத ஒன்று. மாவோயிஸ்ட் சீன அதிகாரிகள் சார்ந்த நிலவுடைமையும் ஐரோப்பிய மத்தியக் கால நிலவுடைமையின் பண்ணையடிமை முறையும் அமைப்பு ரீதியாகக் கொண்டிருக்கும் ஒற்றுமைகள் தெளிவானவை. சீன விவசாயக்குடி தன் உற்பத்திக் குழுவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் விதம் நிலவுடைமைக் கால ஐரோப்பியப் பண்ணையடிமை எஜமானனின் பண்ணை நிலத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் விதத்துக்கு ஒப்பானது. இன்னும் சொன்னால் விவசாயக்குடியை நிலத்துடன் கட்டிப்போட்டு அவர்களை குழுக்கள் மூலம் உற்பத்திக்காகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதத்தில் மாவோயிஸ்ட் அரசு உருவாக்கிய பண்ணையடிமை முறை செங்கலத்துக்கு முன்னாலிருந்த சமுதாயத்தில் நிலவிய விதத்தைக் காட்டிலும் இலக்கணச் சுத்தமான நிலவுடைமை அமைப்பு. பாரம்பரிய சீனாவில் மாவோயிஸ்ட்களுக்கு முன்னர் விவசாயக்குடிகள் தங்கள் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியும் என்பதுடன் அவர்களுக்குப் புலம்பெயரும் சுதந்திரம் இருந்தது.”

இங்கு ஒரு விஷயம் தெளிவாக வேண்டும். பாரம்பரிய சமுதாய அமைப்புகளில் நம் வர்ண-சாதி முறை உட்பட அவற்றில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன. அவை பூரண பொன்னுலக ஏற்பாடுகள் அல்ல. அப்படி எவரும் சொல்லவும் இல்லை. ஆனால் அவை பல்லாயிரம் ஆண்டுகளாகப் பரிணமித்து வந்தவை. நெகிழ்ச்சித் தன்மை கொண்டவை. ஏதோ ஒரு சதியின் அல்லது ஆதிக்கத்தின் விளைவுகள் அல்ல. அதில் ஆதிக்கங்கள் சுரண்டல்கள் உண்டு. ஆனால் அதற்காகவே அவை ஏற்படுத்தப்பட்டவை அல்ல. அதிலுள்ள பிழைகள் ஏன் ஆதாரத் தவறுகள் கூட உருவாகி வந்தவை. அவற்றை மாற்ற நம் சமுதாயம் தொடர்ந்து செயல்படுகிறது. நம் ஆன்மிகப் பண்பாட்டின் முக்கிய அம்சம் அது. 

சீனாவில் மாவோயிஸம் உருவாக்கிய அமைப்பு அப்படிக் காலத்தால் பரிணமித்த அமைப்பு அல்ல. மாறாக மாவோயிஸ அமைப்பு சுரண்டலுக்காகவே வடிவமைக்கப்பட்ட அமைப்பு. மேலிருந்து அரசு இயந்திரம் மூலம் திணிக்கப்பட்ட அமைப்பு. கட்சியின் மேலதிகார அமைப்பினர் அவர்களின் சந்ததிகளின் சுகவாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் சமுதாயத்தின் பெரும்பான்மை மக்களையும் அவர்கள் சந்ததிகளையும் கீழாக பாரபட்சத்துடன் நடத்தும் அமைப்பு. அதே நேரத்தில் தொடர்ந்து இதெல்லாம் சமத்துவம் எனச் சொல்லிக் கொண்டே இந்தச் சுரண்டலை நடத்துகிற அமைப்பு. 

அதே நேரத்தில் ஒரு விசித்திரத்தைப் பாருங்கள். 1980களில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டுச் செய்யப்பட்ட பல சமூகவியல் ஆராய்ச்சிகளில் இந்த அமைப்பு குறித்த பேச்சே இல்லை. இந்திய சாதி அமைப்பு குறித்தோ வழக்கமான சித்திரம் உண்டு. உதாரணமாக ராபர்ட் அர்னோவ் (Robert Arnove) என்பவர் ‘சீன, இந்தியக் கல்வி அமைப்புகள் என்றொரு ஆராய்ச்சிக் கட்டுரையை ‘Comparative Education Review எனும் இதழில் 1984 ஆகஸ்ட்டில் வெளியிட்டார். 

இந்த ஆராய்ச்சிக் கட்டுரை இந்தியச் சூழலில் சாதி குறித்து 28 முறை கூறுகிறது. ஆனால் ஹூகோவ் அமைப்புக் குறித்து ஒரு முறை கூடப் பேசவில்லை. பல்லவி ஐயர் என்கிற இதழியலாளர் சீன ஆதரவு நாளேடான ‘தி ஹிண்டு என்கிற பத்திரிகையின் சீனப் பிரிவுத் தலைமைப் பொறுப்பில் சீனாவில் ஐந்தாண்டுகள் இருந்தவர். ‘தி ஹிண்டு மவுண்ட்ரோடு மாவோ என்கிற பெயருடன் கிண்டலாக அழைக்கப்படுகிறது. பின்னர் தன் சீன அனுபவங்களையும் சீனா குறித்துமான ஒரு நூலை எழுதி வெளியிட்டார் பல்லவி ஐயர். இப்புத்தகத்திலும் ஹுகோவ் முறை குறித்து எந்தத் தரவும் துளியும் இல்லை. 

சீனாவை ஆராய்ச்சி செய்யும் சமூகவியல் / வரலாற்று / மானுடவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்து ஆவணப்படுத்தப் பட்டிருந்தாலும் கூட ஏன் இம்முறை குறித்துப் பெரிதாக எவரும் ஊடகங்களிலோ அல்லது பல்கலைகளிலோ பேசுவது இல்லை? இத்தனைக்கும் பேராசிரியர் வாங்க் கூறுவது போல மாவோயிஸ ஹூகோவ் அமைப்பென்பது ‘சீன தேசம் முழுமைக்குமாக சமூகத்திலிருந்து விலக்கி பாரபட்சம் காட்டும் விதத்தில், அதன் செயல் திறமையில், அதன் விஸ்தீரணத்தில், அதன் இறுகிய கட்டமைப்பில் உலகிலேயே தன்னிகரற்றது.’ ஆனால் இந்திய சாதி முறையில் உள்ள பாரபட்சம் அல்லது கொடுமைகளை இந்திய அரசும் சரி இந்திய சமுதாயத்தின் சீர்திருத்த அமைப்புகளும் சரி, அவற்றை சரி செய்ய வேண்டுமென்று உழைக்கின்றன. ஆனால் ஊடகச் சித்திரங்கள் ஒன்றை எதிர்மறையாகப் பிரசாரம் செய்யும் அதே வேளையில், அதைவிடப் பன்மடங்கு கொடூரமாக அரசு ஆதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கும் மற்றொன்றைக் குறித்துப் பேசுவதே இல்லை. 

காரணம் என்னவாக இருக்கலாம்?

டெக்ஸ்டர் ராபர்ட்ஸ் அண்மையில் எழுதிய நூல் ‘The Myth of Chinese Capitalism. பெய்ஜிங்கிலேயே இருபதாண்டுகள் இருந்த ராபர்ட்ஸ் இன்றைய சீனாவின் பொருளாதார பெரும் வெற்றிக்குப் பின்னால் ஹூகோவ் அமைப்பு இருப்பதை நன்றாகவே அறிவார்:

“புலம்பெயர்ந்த உழைப்பாளர்கள் நகரங்களில் என்றென்றைக்கும் கீழ்நிலையிலே வைத்திருப்பதன் மூலம் ஹூகோவ் அமைப்பு அடிபணிந்து மிக மலினமான கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்று வற்றாதபடி பார்த்துக் கொண்டது. இவர்களுக்கு தங்கள் மிகக் குறைவான கூலியையோ அல்லது மிக மோசமான வாழ்விடங்களையோ மாற்ற சட்டரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ எந்த வழியும் கிடையாது. பல தசாம்சங்களாக சீனாவின் அதிவேக ஜிடிபி (GDP) வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் விஷயம் இது. சான் எழுதுவது போல ‘சீனாவின் இணையற்ற பொருளாதார வளர்ச்சிக்கு பின்னாலிருக்கும் அதி-ரகசியமாக வைக்கப்பட்டுள்ள விஷயம் இதுதான். இப்படி கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை பலியிட்டு அதிகமான வளங்களை தொழிற்சாலைகளுக்கும் நகர்ப்புற மேட்டுக்குடியினரின் உணவுக்கும் மடை மாற்றுவது இன்றைக்கு மற்றொரு விதத்தில் சீனாவில் செயல்படுகிறது: ஹூகோவ் அமைப்பின் கீழ் நெடு நேரம் அதிக வேலை செய்யும் தொழிலாளர்கள் சீனாவின் ஏற்றுமதி பொருளாதாரத்துக்காக உழைக்கிறார்கள்.” 

மாவோயிச ஹூகோவ் அமைப்பு உள்நாட்டில் நகரப்புற மேல்சாதியினருக்கு ஆதரவாகவும் அதிகார வர்க்க சாதியினருக்கு வாழ்க்கையை சுகபோகம் கொண்டதாகவும் ஆக்கும் அதே நேரத்தில் கிராமப்புற விவசாய சாதியினருக்கு வாழ்க்கையை பண்ணையடிமை நரக வாழ்க்கையாக மாற்றிவிட்டிருக்கிறது. 

இப்போது அதே மாவோயிஸ சாதி அமைப்பு ஐரோப்பிய அமெரிக்க பெரும் கம்பெனிகள் சீனாவில் தங்கள் உற்பத்தி கேந்திரங்களை உருவாக்கும் போது அவர்களுக்கு மலினமாக தொழிலாளர் கூலிகளை அனுப்ப பெரும் உதவியாக இருக்கிறது. எனவே இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேலதிகாரத் தட்டுகளில் இருக்கும் உயர் சாதியினருக்கும் லாபம். மேற்கத்திய முதலாளித்துவ அமைப்புகளுக்கும் லாபம். எனவே ஏன் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் வாய் திறக்கப் போகிறார்கள்? 

பாரதத்தின் சாதி முறையில் குறைகள் உண்டு. குற்றங்கள் உண்டு. தீண்டாமைக் கொடுமை உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் போக்க பாரத அரசு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. ஹிந்து சமுதாய ஆர்வலர்களும் வாழ்க்கையையே அர்ப்பணித்து சமுதாய நீதியையும் சமரசத்தையும் ஏற்படுத்த இயங்குகிறார்கள். ஆனால் ஊடகங்களில் இந்து மதம் என்றாலே சாதியம் என்றும், வேண்டுமென்றே பிராம்மணரல்லாதாரை அடிமைப்படுத்தும் சூழ்ச்சி என்றும் பிரசாரம் செய்யப்படுவதை ஊடகங்களில் காணலாம். 

ஆனால் மக்களை அடிமைகளாக்கி சமுதாயத்தின் மேல்மட்ட வர்க்கமும் அதன் சந்ததிகளும் சுக போக வாழ்க்கை வாழ்வதற்காகவே உருவாக்கப்பட்ட மாவோயிஸ சாதிய சாம்ராஜ்யத்தை சோஷலிஸப் பொன்னுலகம் எனச் சாதிப்பார்கள். 

Leave a Reply