தண்ணீர்ப் பற்றாக்குறையின் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இருபத்தேழு கிணறுகள் தோண்டப்படுகின்றன. தோண்டிய பிறகு ‘வார, திதி, நட்சத்திர, யோக, கரணம் பார்த்து சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு துரவு கண்டு புண்யாஹவாசனம் பண்ணுவித்தேன்’ என்று ஹிந்து சம்பிரதாயப் படி திறப்பு விழா நடத்தி அதைக் கல்வெட்டில் சாசனமாகப் பொறித்து வைக்கின்றார் ஒரு நபர்.
அந்த நபர் அனேகமாகச் சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையும் ஆட்சி செய்த ஹிந்து மன்னராகவோ அல்லது குறு நிலப் பாளையக்காரராகவோ இப்பார் என்றுதான் இயல்பாக யூகிக்கத் தோன்றும். ஆனால் அவர் பிறப்பால் கிறிஸ்தவராகப் பிறந்த ஓர் ஆங்கிலேய அதிகாரி.
ஆங்கிலேயக் கிழக்கிந்திய ஆளுகையின்போது சென்னை ஆட்சியராக இருந்த ஃபிரான்ஸிஸ் ஓயிட் எல்லிஸ் என்பவர்தான் அந்த அதிகாரி. 1818ல் இக்கிணறுகள் தோண்டப்பட்டு தண்ணீர் தருமம் அவரால் மேற்கொள்ளப்பட்டது. இவரைத் தமிழக மக்கள் ‘எல்லீசன்’ என அன்புடன் அழைத்தனராம். ‘நடேசன்’, ‘காமேசன்’, ‘முருகேசன்’ போன்ற பெயர்களின் தொனியில் இவரின் பெயர் உச்சரிக்கப்படக் காரணம் இல்லாமல் இல்லை.
‘நமச்சிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்துக்கு ஒரு செய்யுள் வீதம் ஐந்து செய்யுள்கள் இயற்றியவர், நாணயம் அடிக்கும் அதிகாரம் உள்ள பண்டாரகராக இருந்தவர். ஆதலால் திருக்குறள் மீது தனக்கிருந்த ஈடுபாட்டைத் தெரிவிக்கும் விதமாக திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் தங்க நாணயத்தைச் சென்னை தங்கசாலையில் வெளியிட்டவர், பல்வேறு தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர், 1812ல் புனித ஜார்ஜ் கோட்டையில் தென்மொழிகள் கற்பதற்கான கல்லூரியைத் தொடங்கியவர், அதில் ஸம்ஸ்க்ருத கல்விக்கு இடமளித்தவர் எனப் பல்வேறு இந்தியக் கலை இலக்கிய வாழ்வியல் மரபுகளுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொண்ட ஒருவரை இந்தியத்துவம் தொனிக்கும் ‘எல்லீசன்’ என்ற பெயரால் மக்கள் அழைத்திருப்பது நியாயமே.
மேலே கண்ட யாவற்றையும் விட எல்லீஸின் மொழியில் துறைப் பங்களிப்பு அழுத்தமானது. குறிப்பாக ஸம்ஸ்க்ருதத் தாக்கம் பெரிதளவில் இல்லாத தென்னிந்திய மொழிகள் தனித்துவம் வாய்ந்த மொழிக்குடும்ப அமைப்பு கொண்டது என ஆய்வு செய்து வெளியிட்ட முன்னோடி எல்லீஸ்.
தென்னிந்திய மொழியியல் ஆய்வு என்றாலே ராபர்ட் கால்டுவெல்லின் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்’ (A comparative Grammer of the Dravitian or South Indian Family of Languages) என்ற நூல்தானே முதன்மையானதாகவும் ஏறத்தாழ அதிகாரபூர்வமானதாகவும் பேசப்படுகிறது? எல்லீஸ் குறித்தோ அல்லது ஆய்வுகள் குறித்தோ அறியக் கிடைக்கவில்லையே? ஏன்? இந்த வினாவிற்கு திராவிட அரசியல் செய்தோரின் சூது என விடை தருகிறது மலர்மன்னன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்’ என்னும் நூல்.
திராவிட மொழிக் குடும்பம் குறித்து கால்டுவெல் பேசுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய எல்லீஸ் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார். இந்த இருட்டடிப்பைக் கால்டுவெல்லே தொடங்கிவிட்டார் என்பதை அமெரிக்காவில் உள்ள மிஷிகன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல், வரலாறு ஆகியவற்றைக் கற்பிக்கும் பேராசிரியர் தாமஸ் டிரவுட் மன் (Thomas R.Trautman) எழுதிய ‘Languages and Nations: The Dravidian Proof in colonial Madras’ (தமிழில் ‘திராவிடச் சான்று: எல்லீஸும் திராவிட மொழிகளும்’ – தமிழாக்கம் இராம.சுந்தரம், வெளியீடு காலச்சுவடு பதிப்பகம்) என்னும் ஆய்வு நூலின் சான்றுகள் வழி நிறுவுகிறார் மலர் மன்னன்.
இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமாக ஆள்வதே ஆங்கிலேயர் திட்டம். அத்திட்டத்திற்குத் தோதாக ஆரிய திராவிடப் பிரிவினைவாதத்தை மையப்படுத்தி எழுதி வேற்றுமையை வளர்த்து கிறிஸ்தவம் பரப்புவதே கால்டுவெல் எண்ணம்.
ஆனால் இந்தியா மொழியியல் ரீதியான பிரிவுகள் கொண்டிருந்த போதும் அது பண்பாட்டால் ஒரே நாடு என நம்பிய எல்லீஸை விடத் தங்கள் பிரிவினைவாதக் கோட்பாட்டின் வழி ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள கால்டுவெல்லின் ஆய்வே துணை செய்யும் ஆதலால், திட்டமிட்ட முறையில் எல்லீஸ் திராவிட இயக்கத்தவர்களால் மூடி மறைக்கப்பட்டார் என்பது நூலாசிரியரின் கருத்து.
இவ்வாறு திராவிட இயக்கங்கள் உருவாக்கிய பல்வேறு மாயப் புனைவுகளின் அடித்தளத்தை வெவ்வேறு வரலாற்றுச் சான்றுகளின் மூலம் தகர்த்து உண்மையைப் பேசும் விதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
2012ல் திராவிட இயக்கத்திற்கு நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த நூற்றாண்டின் காலக்கணக்கீடு சரியா என்ற வினாவிற்கு விடை தேடும் முகமாக திராவிடம் என்ற சொற்பொருள், அச்சொல்லை இலக்கியங்கள் ஆண்டவிதம், திராவிட என்ற சொல்லை அரசியல் தளத்தில் பயன்படுத்திய முன்னோடிகள், அவர்கள் பயன்படுத்த வேண்டிய சூழலின் பின்புலம், நீதிக்கட்சி, அதன் ஆளுமைகள், நீதிக்கட்சியின் வீழ்ச்சி, ஈ.வெ.ரா.எழுச்சி, அவரின் கொள்கை முரண்கள் எனப் பல்வேறு செய்திகளை வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் விவாதிக்கிறது.
மிக முக்கியமாக பிராமணர் – பிராமணர் அல்லாதோர் முரண், பிராமணர் அல்லாதார் பட்டியல் பிரிவினர் முரண் குறித்த புத்தகத்தின் விவரிப்புகள் தமிழ்ச் சமூகத்தில் சாதி என்ற சிந்தனையின் புழங்கு வெளியை வரையறுத்துக் காட்டுகிறது. இந்த முரண்களே திராவிட இயக்க அரசியல் எழுவதற்கு வலுவான அடித்தளமிட்டுள்ளன என்பதைச் சமூகவியல் கண்ணோட்டத்தில் நூலாசிரியர் விளக்குகிறார்.
திராவிட என்ற சொல்லைப் பட்டியலின முன்னேற்ற முன்னோடியான அயோத்திதாசர் பொருள் கொண்ட விதமும் வேளாளர் சமூகப் பிரதிநியான மறைமலையடிகள் பொருள்கொண்ட விதமும் இவ்விருவரின் வரையறைகளுக்கு மாறுபட்டு திராவிட இயக்கம் அச்சொல்லுக்குப் பொருள் கொண்ட விதமும் ஒன்றுக்கொன்று முரணானவை என நூல் எடுத்துரைக்கிறது.
ஈ.வெ.ரா. தனி இயக்கம் ஆரம்பித்த பின்புலம், அவரின் முன்னோடிகளான நீதிக்கட்சி பிரமுகர்களுடனான அவரின் முரண்பாடு, நீதிக்கட்சியை ஏறத்தாழ அழித்து திராவிடர் கழகம் தோன்றிய வரலாறு, ஆரம்பத்தில் ஈ.வெ.ரா. ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாத்துரை பெயரளவில் பெரியாரை ஏற்றிருந்தாலும் மறைமுகமாக அவரை எதிர்த்தது எனப் பல சம்பவங்கள் நூல்களின் ஆதாரங்கள் வழியும் பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் எனப் பல சான்றுகள் வழியும் நூலாசிரியரால் காட்டப்பட்டுள்ளன.
1882, 1891 ஆகிய ஆண்டுகளில் திராவிட என்ற அடைமொழியுடன் அயோத்திதாச பண்டிதர் தொடங்கிய சங்கங்களை ஏன் திராவிட இயக்கங்கள் முன்னோடி அமைப்பாகக் காட்டவில்லை என்றும், 1982, 1991ல் ஏன் திராவிடத்தின் நூற்றாண்டுகள் கொண்டாடப்படவில்லை என்றும் வலுவான வினாக்களை நூல் தொடுக்கிறது.
டாக்டர் நடேசன் முதல் பிட்டி தியாகராச செட்டி, டி.எம்.நாயர், அயோத்தி தாசர், எம்.சி,ராஜா போன்றோரின் அரசியல் முக்கியத்துவமும் அவை காணாமல் ஆக்கப்பட்டு திராவிட அரசியல் எழுந்ததும் ஓர் நேர்மையான இயக்கச் செயல்பாடல்ல என்பதே நூலாசிரியரின் தீர்மானம்.