நம்முடைய பண்டைய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருமளவு உதவுகின்றன. இந்த அரசன் அந்த நாட்டிற்குப் படையெடுத்துச் சென்றான், அந்த அரசனை வென்று அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் போன்ற செய்திகளைத் தவிர, அக்கால நிர்வாகம், நிதி மேலாண்மை, சமூக வாழ்வு போன்றவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த சாசனங்கள் உதவுகின்றன. அப்படிப்பட்ட பல செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகளில் ஒன்றுதான் பொயு 1063 – 1070க்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழரின் திருமுக்கூடல் கல்வெட்டு.
திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோவில் மிகப் பழமையானது. திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்கே வந்து தங்கள் பிரார்த்தைனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பெருமை உடையது இந்தத் தலம். இக் கோவிலைப் பற்றிப் பல புராணக் கதைகள் உண்டு. பாலாற்றோடு வேகவதி ஆறும் செய்யாறும் கலந்து மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பதால் புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள பழைய சீவரத்திலிருந்து ஆற்றைக் கடந்தால் இந்த ஊரை அடைந்துவிடலாம். பல்லவர்களால் இந்தப் பெருமாள் வழிபடப்பட்டதற்கு ஆதாரமாக பல்லவன் நிருபதுங்க விக்கிரம வர்மனின் இருபத்து நாலாவது ஆண்டுக் கல்வெட்டு இங்கே உள்ளது. அந்தக் கல்வெட்டு பெருமாளை ‘விஷ்ணு படாரர்’ என்று அழைக்கிறது.
கோ விசய நிருபதுங்க பல்லவ விக்கிரம வருமக்கு யாண்டு இருபத்து நாலாவது
காடுபட்டிமுத்தரையர் மகனார் அரிகண்டப்பெருமானாருக்கு
ஊற்றுக்காட்டுக்கோட்டத்து சீயபுரத்து சபையோமொட்டிக்கொடுத்த
பரிசாவது திருமுக்குடல் விஷ்ணுபடாரர்க்கு நுந்தாவிளக்கெரிப்பதற்க்கு
இப்படிப் பொயு 9ம் நூற்றாண்டிலிருந்தே பல திருப்பணிகள் இந்தக் கோவிலில் நடைபெற்று வந்திருக்கின்றன. ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற பிற்காலச் சோழ மன்னர்களும் இந்தக் கோவிலுக்குப் பல்வேறு நிவந்தங்களை அளித்து அவற்றைக் கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கின்றனர். அந்த மரபைத் தொடர்ந்தே முதலாம் ராஜேந்திர சோழரின் மகனான வீர ராஜேந்திரரும் இந்தக் கோவிலுக்கு நிவந்தம் ஒன்றை அளித்து அதை ஒரு நீண்ட கல்வெட்டில் (சுமார் 55 வரிகள் கொண்டது) பொறித்து வைத்துள்ளார். இந்தக் கல்வெட்டு விவரங்களை ‘Epigraphia Indica’ தொகுதியில் கே.வி.சுப்பிரமணிய ஐயர் தொகுத்துள்ளார். அதுகுறித்த அறிமுக உரையில் தொல்லியல் துறை பிரதி எடுத்துள்ள மிகப்பெரிய கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வீரராஜேந்திரரின் ஆறாம் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கல்வெட்டு, வழக்கமான சோழர் பாணியில் “திருவளர் திருபுயத் திருநில வலயந்’ என்ற வீரராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியோடு துவங்குகிறது. சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனின் புதல்வனான விக்கிரமாதித்தனையும் அவனுடைய மா சாமந்தர்களையும் கங்கபாடியில் முறியடித்து அவர்களைத் துங்கபத்திரைக்கு அப்பால் துரத்திய வீரச்செயலிலிருந்து துவங்கி வீரராஜேந்திரன் அடைந்த வெற்றிகளைப் பட்டியிலிடுகிறது இந்த மெய்க்கீர்த்தி. பாண்டியன் ஸ்ரீவல்லபனைத் தோற்கடித்தது, சோழர்களுக்கு இணக்கமாக இருந்த கீழைச்சாளுக்கியர்களிடமிருந்து வேங்கியைக் கைப்பற்ற முயன்ற மேலைச்சாளுக்கியர்களை வீழ்த்தியது, ஈழத்தின் மேல் படையெடுத்து விஜயபாகுவை வென்றது ஆகியவை இதனுள் அடங்கும்.
இப்படிப்பட்ட வெற்றிகளைக் குவித்த ராஜகேசரிவர்மன் வீரராஜேந்திரதேவன் தன்னுடைய ஐந்தாவது ஆட்சியாண்டில் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகேரளன் என்ற அரண்மனையில் ராஜேந்திர சோழ மாவலிவாணராஜன் என்ற அரியணையில் அமர்ந்திருந்தான். காளியூர்க் கோட்டம் பணவூர் நாட்டைச் சேர்ந்த வயலைக்காவூர், திருமுக்கூடல் மகாவிஷ்ணு கோவிலுக்கு தேவதானமாக இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் அன்னதான சாலை ஒன்றுக்கு வழங்கிவந்த 75 கழஞ்சுப் பொன்னையும், அவர்கள் சாலபோகமாக செலுத்திவந்த வரிகளையும் அந்த வருடம் முதல் திருக்கோவிலின் கணக்கில் இறையிலியாக (வரி இல்லாமல்) சேர்க்க அரசர் உத்தரவிட்டார் என்று இந்தக் கல்வெட்டு குறிக்கிறது. இந்த ஆணையை திருமந்திர ஓலையான திருப்பனங்காடுடையான் வல்லவன் வாணவரையன் எழுதியதாகவும் திருமந்திர ஓலை நாயகங்களான ராஜராஜ பிரம்மமாராயரும் வீரராஜேந்திர கங்கையரையனும் ஒப்பமிட்டதாகவும் கூறும் இந்தக் கல்வெட்டு, ஆறு உடன்கூட்டத்து அதிகாரிகளும் (அரசனின் நிர்வாக முறைகளைக் கவனிக்கும் அதிகாரிகள்) 28 விடையில் அதிகாரிகளும் (அரசிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அதிகாரிகள்) நான்கு நடுவிருக்கை அதிகாரிகளும் (மத்தியஸ்தம் செய்பவர்கள்) அதற்குச் சாட்சியாக இருந்ததையும் குறிப்பிடுகிறது. அதன்பின் புரவரித் திணைக்களம் (நிலவரி வசூலிப்போர்) உட்பட முப்பத்து இரண்டு அதிகாரிகள் இது தொடர்பான கணக்குகளை சரிபார்த்து எழுதி வைத்தனர்.
இப்படிப்பட்ட நிர்வாக அடுக்குகளைக் கொண்டிருந்த சோழ ஆட்சிமுறையில், மேற்சொன்ன கணக்காளர்கள் இது தொடர்பான வரவையும் செலவுகளையும் எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதை இக்கல்வெட்டு மேலும் விளக்குகிறது. அரசன் ஆணையிட்ட 75 கழஞ்சுப் பொன்னோடு ஏற்கெனவே தேவதானமாக விடப்பட்டிருந்த 72 கழஞ்சு 9 மஞ்சாடிப் பொன்னையும் சேர்த்து கோவிலின் மொத்த வருவாய் 147 கழஞ்சு 9 மஞ்சாடியாக இருந்தது. இதிலிருந்து ராஜகேசரி என்ற அளவையால் அளக்கப்பட்டால் ஒரு கழஞ்சுக்கு 16 கலம் நெல் கிடைக்கும். இதோடு மேற்சொன்ன வரிகளையும் சேர்த்துக் கிடைத்த மொத்த வருவாய் 3243 கலம் நெல்லாகவும் 216.5 காசுகளாகவும் இருந்தது. இந்த வரவுக்கு ஈடான திருக்கோவில் தொடர்பான செலவினங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. 1) திருக்கோவில் தொடர்பான செலவுகள் 2) அங்கே செயல்பட்ட வேதபாடசாலைக்கு ஆன செலவுகள் 3) கோவில் அருகில் ஏற்படுத்தப்பட்ட ஆதுர சாலைக்கான செலவுகள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
திருக்கோவில் தொடர்பானவை
திருமுக்கூடல் ஆழ்வாரான பெருமாளுக்கு சிறுகாலைச் சந்தி நிவேனத்திற்கான செலவுகள், இரவில் பால்பாயசம் அளிப்பதற்கு, ஸ்ரீ ராகவச்சக்ரவர்த்திக்கு (ராமபிரானுக்கு) மதியத்தில் அளிக்கும் நிவேதனத்திற்கு, ஆழ்வாருக்கு சந்தனக்காப்பு அணிவிப்பதற்கு, சன்னதிகளில் விளக்கேற்றுவதற்கு ஆகும் செலவுகள் ஆகியவை விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. தவிர அழகிய மணவாளருக்கு ஐப்பசித் திருநாளில் அளிக்கும் நிவேதனம், கார்த்திகைத் திருநாளுக்கும் மாசித் திருநாளுக்கும் செய்யப்படும் நிவேதனம், வீரசோழன் நந்தவனத்தில் நடைபெறும் பாரிவேட்டையின் போது அளிக்கப்படும் நைவேத்தியங்கள், ஜயந்தாஷ்டமி (ஜன்மாஷ்டமி)யின் போது வெண்ணெய்க் கூட்டாழ்வாருக்கு (கிருஷ்ணருக்கு) அளிக்கப்படும் நிவேதனம் ஆகியவற்றின் விவரங்கள் தேவையான நெல், பருப்பு, நெய், சர்க்கரை, பழம் உட்பட பொருட்களின் அளவோடு குறிக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசர் வீரராஜேந்திரர் பிறந்த தினமான ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்றும் கோவிலின் சுற்றுச் சுவரையும் ஜனநாத மண்டபத்தையும் கட்டிக்கொடுத்த வைசிய மாதவன் தாமியனுடைய பிறந்த தினத்தன்றும் நடைபெறவேண்டிய அபிஷேக ஆராதனைகள், நைவேத்தியங்கள் ஆகியவற்றுக்கான செலவுகள், கோவிலிலுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவாய்மொழி சாதிப்பதற்காக அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதிய விவரங்கள், கோவில் திருவிழாக்களைக் குறித்துக்கொடுக்கும் ஜோசியருக்கு அளிக்கவேண்டிய ஊதியம், அமாவாசை புரட்டாசித் திருவோணம் போன்ற முக்கிய தினங்களின் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னதானம் அளிக்க ஆகும் செலவுகள் ஆகியவையும் விரிவான முறையில் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றைத் தவிர வீரசோழன் நந்தவனத்தைப் பராமரிப்போர், பஞ்சாங்கம் வாசிப்போர், வைகானச தேவகன்மி, கோவில் கணக்குகளை நிர்வகிப்போர், மடப்பள்ளிக்குப் பானைகளை வழங்கும் குயவர், கோவில் காவலைக் கவனிக்கும் திருமுக்கூடல் பேரரையன் ஆகியோருக்கு வழங்கவேண்டிய ஊதிய விவரங்களும் தரப்பட்டுள்ளன.
வேதபாடசாலை
இக்கோவிலை ஒட்டி ஒரு வேத பாடசாலையும் இயங்கியது. அதற்கான செலவினங்களும் விவரமாகத் தரப்பட்டுள்ளன. அங்கு ரிக் வேதம் பயில்விக்கும் ஒருவருக்கும், யஜூர் வேதம் பயில்விக்கும் ஒருவருக்கும் நாள் ஒன்றுக்கு 1 பதக்கு நெல்லும் 4 காசுகளும் வழங்கப்பட்டன. அங்கே வியாகரணத்தையும் ரூபாவதாரம் என்ற சாஸ்திரத்தையும் பயில்விக்கும் ஒரு பட்டருக்கு நாள் ஒன்றுக்கு 2 பதக்கு நெல்லும் 10 காசுகளும் வழங்கப்பட்டன. அதைத் தவிர அந்தப் பாடசாலையில் பயிலும் 60 மாணவர்களுக்கு உணவளிக்க நாள் ஒன்றுக்கு 2 கலம் 1 தூணி 1 நாழி நெல் அளிக்கப்பட்டது. இந்த 60 பேரில் ரிக் வேதம் பயில்வோர் 10 பேர், யஜுர் வேதம் பயில்வோர் 10 பேர், வ்யாகரணத்தையும் ரூபாவதாரத்தையும் பயில்வோர் 20 பேர், மகாபாஞ்சராத்திரர்கள் 10 பேர், சிவ பிராமணர்கள் 3 பேர், வைகாசனர்கள் 5 பேர் ஆகியோர் இருந்தனர். வைணவம் சார்ந்த கோவிலாக இருந்தாலும் சிவ ஆகமங்களும் இங்கு பயிற்றுவிக்கப்பட்டு சிவ பிராமணர்களும் மாணாக்கர்களாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தவிர இந்தப் பாடசாலையில் சமையல்காரர், அவருக்கு 3 உதவியாளர்கள், வயலைக்காவூரிலிருந்து பொருட்களை வாங்கிவர ஒருவர், இரண்டு பணியாளர்கள் ஆகியோரும் இருந்தனர். அவர்களுக்கான செலவினங்களும் கல்வெட்டில் தரப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் ஆண்டில் 51 சனிக்கிழமைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டியிருப்பதால் அந்த எண்ணெய்க்காகும் செலவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, சனியன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
ஆதுரசாலை
இக்கோவிலை அடுத்து ஒரு ஆதுரசாலை (மருத்துவமனை) இருந்தது. வீரசோழன் ஆதுரசாலை என்று வீரராஜேந்திரரின் மற்றொரு பெயரால் இந்த ஆதுரசாலை அழைக்கப்பட்டது. இந்த அரசரின் ஆட்சியில்தான் வீரசோழீயம் என்ற இலக்கண நூல் எழுதப்பட்டது என்பதும் இங்கு நினைவுகூரப்பட வேண்டியது. இந்த வீரசோழ ஆதுரசாலைக்கான செலவினங்களும் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளன. ஆதுரசாலையில் 15 படுக்கைகள் இருந்தன. இவற்றில் தங்கி உள் நோயாளிகளாகச் சிகிச்சை பெறும் நபர்களுக்கான செலவு, தலைமை மருத்துவர், சஸ்திர சிகிச்சை செய்யும் ஒருவர், இரு உதவியாளர்கள், மருந்துகளைத் தயாரிக்கும் இருவர், நாவிதர் ஆகியோருக்கான ஊதியம் குறிப்பிட்ட அளவு நெல் மூலமாக அளிக்கப்படவேண்டும் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, இந்த மருத்துவமனையில் பயன்படுத்தப்பட வேண்டிய மருந்துகளில் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை
- பிராஹமியம் கடும்பூரி
2. வாஸாஹரிதகி
3. கோமூத்ர ஹரிதகி
4. தஸமூல ஹரிதகி
5. பல்லாதக ஹரிதகி
6. கண்டிரம்
7. பலாகேரண்ட தைலம்
8. பஞ்சாக தைலம்
9. லசுநாகயேரண்ட தைலம்
10. உத்தம கா்ணாபி தைலம்
11. ஸுக்ல ஸகிரிதம்
12. பில்வாதி கிரிதம்
13. மண்டுகரவடிகம்
14. த்ரவத்தி
15. விமலை
16. ஸுநோரி
17. தாம்ராதி
18. வஜ்ரகல்பம்
19. கல்யாணலவனம்
20. புராணகிரிதம்
மேற்குறிப்பிட்ட மருந்துகள் அனைத்தும் ஆயுர்வேதத்தைச் சேர்ந்தவை. சரஹ சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை போன்ற நூல்கள் இந்த மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளையும் அவற்றின் பயன்பாட்டையும் தருகின்றன. உதாரணமாக இன்று பரவலாகக் கேலிக்குள்ளாக்கப்படும் கோ மூத்திர மருந்தைப் பற்றிய குறிப்பு. ஹரிதகி என்னும் கடுக்காயை கோமியத்தில் ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் அந்தக் கடுக்காயை உண்டால் மூலம், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும் என்று சுஸ்ருத சம்ஹிதை கூறுகிறது. இந்த மருந்துகள் அனைத்தும் ஆதுரசாலையில் இருக்கவேண்டும் என்றும் அவை இன்னின்ன அளவுகளில் இருக்கவேண்டும் என்றும் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக வாஸாஹரிதகி இரண்டு படி, தஸமூல ஹரிதகி ஒரு படி மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் பல இன்றும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இவற்றைத் தவிர மருத்துவமனை தொடர்பான இதர செலவுகளைப் பற்றிய விவரங்கள் (விளக்கெரியத் தேவையான எண்ணெய் போன்ற) இங்கு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
இப்படி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு செலவினத்திற்கான அளவும் குறிக்கப்பட்டு அவை மொத்தமும் குறிப்பிடப்பட்ட வரவான 3243 கலம் 2 தூணி 1 பதக்கு 6 நாழி 1 உழக்கு 3 செவிடு நெல்லிற்கு ஈடாக கணக்கிடப் பட்டிருக்கின்றன என்பது ஆச்சரியமான விஷயம். இந்த அளவு எதனாலாவது குறைந்தால் அப்படிக் குறையும் ஒவ்வொரு காசுக்கும் ஈடாக தண்டவாணி மூலம் உரைக்கப்பட்ட பொன் வழங்கப்படவேண்டும் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
சேனாதிபதி கங்கைகொண்ட சோழ தன்மபாலன் என்ற வைசிய மாதவ தாமியனின் புதல்வனின் சார்பாக இந்தத் தர்மம் வீரராஜேந்திரரின் ஆறாம் ஆட்சியாண்டில் கோவிலில் பொறிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு நிறைவடையும் இந்தக் கல்வெட்டு, ஸ்ரீ மதுராந்த சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த மகாசபையில் பாதுகாப்பில் இருக்கும் என்று குறிக்கிறது.
இந்தக் கல்வெட்டு மூலம், மிகக் குறைந்த காலமே ஆட்சியில் இருந்த வீரராஜேந்திரரின் வெற்றிகளைக் குறித்து அறிந்துகொள்வதோடு, சோழர் ஆட்சி முறை, அதன் நிர்வாக அதிகாரிகளுடைய பதவிகள், சோழர் கணக்கியல், அளவீட்டு முறைகள், அக்காலத்தில் இருந்த வேதங்கள் தொடர்பான பாடமுறைகள், மருத்துவமனை செயல்படும் விதம், அதிலுள்ள ஊழியர்கள், மருந்துகளும் அவற்றின் பயன்களும் என்று பல தகவல்கள் அறியக் கிடைக்கின்றன. நாம் செய்யவேண்டியது எல்லாம் திருப்பணி என்ற பெயரில் இதுபோன்ற கல்வெட்டுகளை அழித்துக் கெடுக்காமல் அடுத்த தலைமுறைகளுக்கு, தமிழர்களின் பெருமையைச் சொல்லும் சின்னங்களாகக் கொண்டு செல்வதுதான்.
உசாத்துணைகள்
- Epdigraphia Indica vol 21
- பிற்காலச் சோழர் சரித்திரம் – சதாசிவப் பண்டாரத்தார்
படங்கள் நன்றி: இணையம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை.