Posted on Leave a comment

அந்தக் கால சமையல் புத்தகங்கள் | அரவிந்த் சுவாமிநாதன்

(மீனாட்சி அம்மாள்)

இந்த கோவிட்-19 வீட்டு முடக்க நாட்களில், குழந்தைகளுக்கும், மனைவிக்கும் சுவையாக ஏதாவது தின்பண்டங்கள் செய்து அசத்தலாமே என்று இணையத்தில் தேடினேன். அறிந்ததும் அறியாததுமாய்ப் பல்வேறு தின்பண்டங்கள் செய்யும் வழிமுறைகள் காணக் கிடைத்தன. கூடவே கிடைத்தது ‘மீனாட்சி அம்மாள்’ என்பவர் எழுதிய ‘சமைத்துப் பார்’ என்ற புத்தகம் பற்றிய செய்திகள். ‘மீனாட்சி அம்மாள்’ அந்தக் காலத்து மனுஷி ஆயிற்றே, அவர் எழுதிய புத்தகம் இன்னுமா கிடைக்கிறது என்று ஆச்சர்யத்துடன் தேடிப் பார்த்தால்.. ஆம். அவர் எழுதிய புத்தகமேதான். அவருடைய பேத்தி ப்ரியா ராம்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் வழக்கில் இருந்த சொற்களை மாற்றி, தற்காலத்து மக்களுக்கும் புரியும்படி நூலைக் கொண்டு வந்திருக்கிறார் ப்ரியா. அமேசானிலும் கிடைக்கிறது.

மீனாட்சி அம்மாளின் ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது 1951ம் ஆண்டு. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகம். இப்புத்தகம் இன்றைக்கும் விற்பனையில் இருக்கிறது என்பதும், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது என்பதும் சமையற்கலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும், வரவேற்பையும் காட்டுகிறது. அதனால்தான் இன்றைக்கும் செட்டிநாட்டுச் சமையல், கொங்கு நாட்டுச் சமையல், சிறு தானியச் சமையல், அசைவச் சமையல், சைவச் சமையல், கிராமத்துச் சமையல், மண்பானைச் சமையல், மூலிகைச் சமையல் என்றெல்லாம் புதிது புதிதாகப் புத்தகங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வந்து கொண்டிருக்கின்றன.

The Best Of Samaithu Paar’ என்ற தலைப்பில், பெங்குவின் வெளியீடாக மீனாட்சி அம்மாளின் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது. அதனை வாசித்துக் கொண்டிருக்கையில் தமிழில் சமையற்கலை பற்றி வெளியான முதல் புத்தகம் எதுவாக இருக்கும் என்ற சிந்தனை தோன்றியது.

முதல் தேடல் என்னிடம் இருக்கும் பழைய சுவடி விளக்கக் குறிப்பு நூல்களில் இருந்துதான். அகத்தியர் அகராதி நிகண்டு, அகத்தியர் 1200, அகத்தியர் எண்பது, அகத்தியர் கர்ம காண்ட சூத்திரம், அகத்தியர் புனை சுருட்டு, அகத்தியர் பெரு நூல், அகத்தியர் வைத்திய சூத்திரம், அகத்தியர் ஜாலம், அகத்தியர் ஜாலத் திரட்டு, கர்ப்ப சிந்தாமணி, கர்ப்பக் கோள், கயிற்றுக் கோள் பாட்டு என்றெல்லாம் ரசவாதம், மருத்துவம், வேதாந்தம், ஜோதிடம், மந்திர சித்திகள், மாந்த்ரீகம் சார்ந்து பல சுவடிகள் இருக்கின்றன. ஆனால், ‘சமையற்கலை’ சார்ந்த பழஞ்சுவடிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் மூலம், சமையல் குறிப்புகளை சுவடியில் எழுதும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை அல்லது அவை எழுதப்பட்டு யார் கண்ணிலும் படாமல் மறைந்து போயிருக்கலாம் என்ற முடிவிற்குத்தான் வரவேண்டியிருக்கிறது.

ஆக, ஓலைச்சுவடி காலத்திற்குப் பின்பு, அச்சு நூல்கள் வெளிவந்த காலத்தில்தான் இவை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து தேடோ தேடென்று இணைய நூலகங்களில் தேடியதில் மூன்று பொக்கிஷங்கள் வாசிக்கக் கிடைத்தன. முதலில் கிடைத்தது ‘இந்து பாக சாஸ்திரம்’ என்னும் நூல்

1) இந்து பாக சாஸ்திரம்

நூலின் முழுத் தலைப்பு ‘மஹாராஷ்டிர, கர்நாடக, ஆந்திர மற்றும் திராவிட இந்து பாக சாஸ்திரம்’ (இங்கே ‘திராவிட’ என்பது மொழியையோ, இனத்தையோ குறிக்கவில்லை. நிலப்பரப்பைக் குறிக்கிறது.) எழுதியவர் சேலத்தைச் சேர்ந்த தொ.கி. ராமச்சந்திர ராயர். ஆம். சமையற்கலை பற்றிய நூலை முதன்முதலில் தமிழில் எழுதியவர் ஓர் ஆண்தான். ஏற்கெனவே நளன், பீமன் என்று இரு சமையற்கலை முன்னோடிகளைக் கொண்டவர்கள் தானே நாம். இந்த நூல் இரண்டாம் பதிப்பாக, 1900த்தில் வெளிவந்திருக்கிறது. முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1891.

ஆக, தமிழின் முதல் சிறுகதையும் முதல் நாவலும் தோன்றுவதற்கு முன்பே, சமையற்கலை பற்றிய முதல் நூல் வெளி வந்து விட்டது. ஆகவே, புத்தகச் சந்தைகளில் சிறுகதை நூல்களை விட சமையற் கலை சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையாவது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவைதான் முன்னோடி!

இந்த நூலின் முன்னுரையில் ஆசிரியர், “இப்புத்தகம் 1891ம் வருஷத்தில் முதல் முதல் வெளியிடப்பட்டது. அப்போது அச்சிட்ட இரண்டாயிரம் பிரதிகளும் வெகு சீக்கிரத்திலேயே விற்பனையாய் விட்டன” என்கிறார். அந்தக் காலத்திலேயே இரண்டாயிரம் பிரதிகள் விற்பனை என்பதை இப்போதுள்ள புத்தக விற்பனை நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனச்சோர்வுதான் மிஞ்சும். பிரதிகளுக்குத் தொடர்ந்து வரவேற்பு இருந்ததால், பலரும் மீண்டும் அச்சிடுங்கள் என்று வலியுறுத்தியதால் 1900த்தில் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. விலை ரூ: 2.00. அந்தக் காலத்திலேயே படங்களுடன் வெளிவந்திருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு.

ஏன் இந்தப் புத்தகத்தை எழுதினேன் என்று முன்னுரையில் சொல்கிறார் ராயர். “நமது பெண்கள் பெரியவர்களாகும்போது தங்களுடைய கணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு உபயோகமான விஷயங்களில் அவர்கள் தேர்ச்சியடைவதற்கு யாதொரு முயற்சியுஞ் செய்யப்படவில்லை. அவர்களுக்குப் பாடசாலைகளில் வாசிப்பு, எழுத்து, கணிதம், சரித்திரம், பூகோளம், சுகாதார விளக்கம், தையல் வேலை முதலிய பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனாலும் பெண் பிள்ளைகளுக்கு மேற்கூறிய விஷயங்களைக் காட்டிலும் அதிக அவசியமும் முக்கியமான சமை தொழில், நாடோடி வைத்தியம் ஆகிய இவ்விஷயங்களில் தேர்ச்சியுண்டாக இதுவரையில் யாதொரு முயற்சியுஞ் செய்யப்படவில்லை…” என்று சொல்லி, “இந்து தேசத்தின் வெவ்வேறு பாகங்களில் சுமார் பத்து வருஷ காலமாக யாத்திரை செய்யும்போது கன்னடம், மஹாரஷ்டிரம் முதலிய பாஷைகளில் சமையல் சம்மந்தமாய் எழுதப்பட்டிருக்கும் அநேக கிரந்தங்களை வாசிக்கச் சமயம் ஏற்பட்டதுமில்லாமல் சமை தொழிலில் அதிக தேர்ச்சியடைந்திருந்தவர்களுடன் அவ்விஷயமாய் சம்பாஷிக்கவும் சந்தர்ப்பம் நேர்ந்தது. இவ்விதமான அநுகூலங்கள் ஏற்பட்டபடியால்தான் எனக்கு இக்கிரந்தத்தை எழுதத் துணிவுண்டாயிற்று” என்கிறார்.

அதே சமயம் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் தலைவியாக இருந்த விக்டோரியாவை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்தும், உயர்த்தியும் எழுதியிருக்கிறார் என்பது அக்காலத்திய அரசியல் சூழலைக் காட்டுகிறது. விக்டோரியா 1876 முதல் 1911 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியாக இருந்தார். (துரைத்தனத்தார் அங்கீகாரம் இல்லாமல் அப்போது புத்தகங்கள் வெளியிடுவது, விற்பனை செய்வது கடினம்.)

பூண்டி அரங்கநாத முதலியார், பாஷ்யம் ஐயங்கார், முத்துசாமி ஐயர், விஜயரங்க முதலியார் உள்ளிட்ட அக்கால கனவான்கள் பலராலும் பெரிதும் ஆதரிக்கபட்டிருக்கிறது இந்தப் புத்தகம். இந்த நூலில், அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தால், இதில் கூறப்பட்டிருக்கும் சமையல் குறிப்புகளும், வழிமுறைகளும், இன்றும் நம்மால் பின்பற்றக் கூடியனவாய் இருப்பதை முதன்மையான சிறப்பாய்ச் சொல்லலாம். எப்படிச் சமைப்பது, எந்தெந்த உணவு உடம்பிற்கு நல்லது, உணவுகளின் தன்மைகள், சமைக்கும் முன் செய்ய வேண்டியன, அடுப்புகள் எப்படி அமைக்கப்பட வேண்டும், சமையலுக்கு எந்தெந்தப் பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்துவது போன்ற விவரங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.

கடவுள் வாழ்த்தில் தொடங்கும் இந்த நூல் பீடிகா விதிகள், பலவகை போஜனப் பதார்த்தங்கள், பலவகைப் பக்ஷணங்கள் என்ற உள் தலைப்புகளில் பிரிக்கப்பட்டு, அவற்றுள் சிறு சிறு அத்தியாயங்களாகக் கிட்டத்தட்ட 50 உபதலைப்புகளைக் கொண்டு விளங்குகிறது. சுமார் 400 வகையான உணவுப் பொருள்கள் செய்யும் முறை பற்றியும், நூற்றிற்கும் மேற்பட்ட தின்பண்டங்கள் செய்யும் முறை பற்றியும் விரிவாகக் விளக்குகின்றது. அலுமினியப் பாத்திரங்களின் சிறப்பு, எப்படிப் பரிமாறுவது என்பதெல்லாம் தனித் தனி அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன.

நூலின் சில செய்திகள் வியப்பைத் தருகின்றன. அரிசி வகைகள் பட்டியலில் அக்காலத்தில் மக்கள் விளைவித்து உண்டு வந்த பச்சைஅரிசி, காரரிசி தொடங்கி வாலான், மணக்கத்தை, கருங்குறவை, குறுஞ்சம்பா, மிளகுசம்பா, காடைச் சம்பா, குன்றிமணிச் சம்பா, அன்னமழகி என 25 வகைகளைப் பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். அவற்றில் பல தற்போது விளைச்சலில் இல்லை. எந்த அரிசியை உண்டால் என்னவிதமான நன்மைகள் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். முறத்துக்கும் சுளகுக்கும் இன்றைக்கும் பல நகர்ப்புற மக்களுக்கு வேறுபாடு தெரியாது. இந்த நூலில் படத்துடன் விளக்கியிருக்கிறார்கள். இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல பாத்திரங்களைச் (குந்தாணி, கங்காளம், வெண்கலப் பானை, வெண்கலக் காதுப் பானை, ஈயக் கற்சட்டி, ஸோமாஸிச் சக்கரம், சிப்பித் தட்டு, முட்டைக் கரண்டி) சிறுவயதில், எங்கள் வீட்டில் இருந்த பெரிய பாத்திரப் பெட்டியில் பார்த்திருக்கிறேன். அவை அனைத்தும் அந்தக் காலத்தில் பாட்டிக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டவை.

இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவு வகைகளிலிருந்து சான்றுக்கு சிலவற்றைப் பார்க்கலாம்.

  1. வெல்ல இட்லி

அரிசி மா – 1/2 படி – அரிசியை நன்றாய்க் களைந்து நிழலில் உலர்த்தி நொய் போன்ற மாவாக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லம் – 15 பலம், ஏலரிசிப் பொடி (ஏலக்காய்ப் பொடி) – 1/4 பலம், தேங்காய்த்துருவல் – 6-1/2 பலம், நெய் இரண்டு பலம் – இப்பதார்த்தங்களை நொய் போன்ற மாவிற் கலந்து, அதைக் கரைப்பதற்கு வேண்டிய ஜலத்தைக் கொதிக்க விட்டு, அந்தக் கொதித்த ஜலத்தை வெல்லங் கலந்த மாவிற் கொட்டி, சாதா இட்டலிக்குக் கரைத்த திட்டமாய்க் கரைத்து, அவ்விட்டிலியை வேக வைத்தது போலவே இதையும் வேக வைக்க வேண்டியது. இலைக்குத் தடவுவது நெய்யாகவே இருக்க வேண்டும்.

அடுத்து கோதுமை நொய்ச் சாதம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் என்ற நம்பிக்கை அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. இன்றைய சர்க்கரைக் குறைபாடு அன்றைக்கு மதுமேக ரோகம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

  1. கோதுமை நொய்ச் சாதம்

இச்சாதமானது மெதுவாய்ச் சீரணமாகும் தன்ம்மையுடையது. சீத வாயுவைக் கண்டிக்கும். மிதமாய்த் தினசரி யுபயோகித்தால் உடலிற்கும் பலத்தைக் கொடுக்கும் அல்லாமலும் ஸ்தூலித்த உடலை யுடையவர்களுக்கு மதுமேக ரோகியார்க்கும் வெகு உபயோகமானது.

நல்ல ஜலம் ஒரு படி, இதை இரண்டுபடி ஜலம் கொள்ளுகிற தவலையில் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சி அது கொதிக்கத் தொடங்கினவுடனே, நெய் ஒன்றரைப் பலம் – இதைக் கொதிக்கும் ஜலத்தில் விட வேண்டும். பின்பு, கோதுமை நொய் அரைப் படி – இது அதிக சிறுமனும் பெருமனு மாயில்லாமல் அரிசிக் குறுநொய் போல இருக்கச் செய்து, கொதிக்கும் ஜலத்தில் கொட்டிக் கரண்டியினால் கிளறிக் கொடுத்து மூடி வைக்க வேண்டியது. கொஞ்ச நேரத்திற்குப் பின் மற்றொரு தடவை கிளறிக் கொடுத்து நொய் முக்காற் பாகம், வெந்த பதம் பார்த்துக் கொண்டு, அடுப்பை விட்டிறக்கி மற்றொரு தடவை கரண்டிக் காம்பினால் கிளறிக் கொடுத்து ஐந்து நிமிஷம் வரையில் புகையில்லாத தணலின் மேல் மூடி வைத்திருந்து பின்பு உபயோகிக்க வேண்டும்.

(ஜலம் = தண்ணீர்; ஒரு படி = 1.6 கிலோ; ஒரு பலம் = 40 கிராம்)

சாத வகைகளில் மாம்பழச் சாதம், மல்லிகைப் பூ சாதம் (சமேலி குஷ்கா) – இது நிஜமாகவே மல்லிகைப் பூவைக் கொண்டு செய்யப்படும் சாதம் – (எப்படிச் சாப்பிட்டிருப்பார்கள்?), மாமூலி குஷ்கா (தயிர் சாதத்தின் ஒரு வகை), கீலானி குஷ்கா (இது எலுமிச்சை கலந்த தயிர் சாதம்), மொஹஸம் கானி குஷ்கா (இது கிட்டத்தட்ட சர்க்கரைப் பொங்கல் மாதிரி. ஆனால், வெல்லத்திற்குப் பதில் கல்கண்டு அல்லது சர்க்கரை உபயோகப்படுத்திச் செய்யப்படுவது) என்று பல வகைச் சாதத் தயாரிப்புகள் பற்றி விளக்கியிருக்கிறார்.

ஸொஜ்ஜி வகைகளில் தாளித ஸொஜ்ஜி, சாதா ஸொஜ்ஜி, பயத்தம்பருப்பு ஸொஜ்ஜி, தேங்காய்ப்பால் ஸொஜ்ஜி, மஸாலா ஸொஜ்ஜி, மகாராஷ்டிர ஸொஜ்ஜி என்று பல வகை. பொங்கல்களிலோ கேட்கவே வேண்டாம். கோவில் பொங்கல், துவரம் பருப்புப் பொங்கல், பயற்றம் பருப்புப் பொங்கல், மஸாலாப் பொங்கல், கோதுமை நொய்ப் பொங்கல், மகாராஷ்டிராப் பொங்கல், குஜராத்திப் பொங்கல், ஹிம்மதகானி பொங்கல், கீரைப் பொங்கல், வெங்காயப் பொங்கல் என்று அடுக்கிக் கொண்டே போகிறார் ராயர். இவ்வாறே பல்வேறு சர்க்கரைப் பொங்கல்களின் தயாரிப்பைப் பற்றியும் வாசிக்கும்போதே வாயூறும்படி விளக்கியிருக்கிறார்.

இன்னமும் அடை வகைகள், அவலைக் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள், புளியோதரை, தேங்காய், எலுமிச்சை, மாங்காய், மாதுளம்பழம், நாரத்தம்பழம், கத்திரிப் பிஞ்சு போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் சித்திரான்னங்கள், கறி, கூட்டு, துவையல், ஊறுகாய், லட்டு, லாடு, பால்கோவா போன்ற தின்பண்டங்கள், காபி, டீ, கோகோ தயாரிப்பது என சுமார் 400 வகை உணவுப் பதார்த்தங்களின் தயாரிப்புகளைப் பற்றி மிக விரிவாக விளக்கி இந்த நூலில் எழுதியிருக்கும் ராயரின் ‘சேவை’ நிச்சயம் அந்தக் காலத்தில் வெகுவாகக் கொண்டாடப்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. 1952 வரை ஆறு பதிப்புகளுக்கு மேல் இந்த நூல் வெளிவந்திருப்பதன் மூலம், இந்த நூலுக்கு அக்காலத்தில் இருந்த வரவேற்பைப் புரிந்து கொள்ளலாம்.

*

2) நள வீம பாக சாஸ்திரம்

சமையலில் தேர்ந்தவன் நளன். அதனால் தான் ‘நள பாகம்’ என்ற பெயரே வந்தது. அது போலவே பீமனும் சிறந்த சமையற்காரன். அவர்கள் இருவரது பெயரையும் தலைப்பாகக் கொண்டு, கீழ்கட்டளை – சுரோத்திரியம் எஸ்.துரைசாமி அவர்களால், 1922ல் பதிப்பிக்க்கப்பட்டு வெளிவந்த நூல் நள வீம பாக சாஸ்திரம். (கீழ்கட்டளை சென்னை மடிப்பாக்கத்தை அடுத்து நன்மங்கலத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஊர். சுரோத்திரியம் என்பதற்கு, ‘வேதம்வல்ல பிராமணர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட மானிய நிலம்’ என்றும், ‘அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்டஇனாம்பூமி’ என்றும் சென்னைப் பல்கலைக்கழக அகராதி (University of Madras Lexicon) பொருள் கூறுகிறது)

“சர்வ ஜகத்துக்கும் இன்ப காரணமா யிரானின்ற பதார்த்த ருசிகர பாகனூலைத் தமிழினினால் சொல்லுகிறோம்”- என்று தொடங்குகிறது இந்த நள வீம பாக சாஸ்திர நூல். இதனை களத்தூர் கந்தசாமி முதலியார் என்பவர் எழுதியிருக்கிறார்.

முதலில் பாகசாலை (சமைக்கும் அறை) எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, சமைப்பவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும், எப்படிப்பட்ட ஆடைகளை உடுத்தி இருக்க வேண்டும், எந்தெந்த வகைப் பாத்திரங்களை வைத்துச் சமைத்தால் எந்தெந்த விதப் பலன்கள் ஏற்படும், எந்தெந்தப் பாத்திரங்களில் எதை எதைச் சமைக்க வேண்டும், எதை எதைச் சமைக்கக் கூடாது, அப்படி மீறிச் சமைத்தால் உண்டாகும் கேடுகள் பற்றி ஆரம்பப் பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது. சமையலுக்கு உதவும் பொருட்களைப் பற்றி, அவை ஒன்றோடு ஒன்று சேரும்பொழுது என்ன நிகழ்கின்றது என்பதையும், அச்சுவை நமது உடலில் நிகழ்த்துவது என்ன என்பதையும் இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர். அடுத்து சரக்குகளை எப்படிச் சுத்தம் செய்வது, விதம் விதமான காய்கறிகளைக் கொண்டு எப்படிச் சமைப்பது, எவை எவற்றைச் சேர்ப்பது, எவை எவற்றை விலக்குவது, அவற்றினால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் என்ன என்று விரிவாகப் பட்டியிலிட்டிருக்கிறார்

“நன்றாகப் பசி எடுத்த பின்புதான் உணவை உட்கொள்ளவேண்டும்; ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனிப் பண்புகள் உண்டு, அதற்கேற்ப அவை உண்பவரின் உடலில் செயல்படும்” என்றெல்லாம் பல செய்திகள் நூலில் காணக் கிடைக்கின்றன. அடுத்து காய்கள், பழங்கள், கீரைகள் போன்றவற்றைப் பயன்படுத்திச் சமைக்கப்படும் பண்டங்களின் செய்முறைகளும், அதனால் உடலிற்கு ஏற்படும் நன்மை, தீமைகளும் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.

சான்றாக, பூசணிக்காய் பணியாரம், மாங்காய்ச் சட்னி, கிச்சிலிக்காய் சட்னி, கிச்சிலிப் பழச் சாதம், திராட்சைப் பழச் சாதம், மாம்பழ சாதம், வாழைப்பழச் சாதம், எருக்கங்காய்க் கொழுக்கட்டை (எருக்கங்காய் பயன்படுத்திச் செய்யப்படுவதல்ல; பார்க்க பெரிய எருக்கங்காய் போலிருக்கும் என்பதால் இப்பெயர்) மகிழம் பூ பணியாரம் (மகிழம் பூவைப் பயன்படுத்தி அல்ல. பார்க்க மகிழம் பூவைப் போல் இருக்கும் அச்சைக் கொண்டு செய்யப்படுவது) என சில அரிய, தற்போது பெரும்பாலும் வழக்கில் இல்லாத சில வகைப் பதார்த்தங்களின் செய்முறைகள் சிறப்பாக விளக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றைப் பார்க்கலாம்.

  1. மாங்காய் சாதா சட்னி

பத்து மாம்பிஞ்சின் தோலைச் சீவிப்போட்டு அதைச் சிறிய துண்டுகளாக அரிந்து அவைகளை மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை இவைகளுடன் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்துக் கொண்டு, பின்பு அதைச் சலம்விட்டரைப்பது. அன்று போசனத்திற்கு மாத்திரமுதவும். சலம் விடாமலிருந்தால் இரண்டு நாளுக் கதிகப்படாமலிருக்கும்.

  1. மாம்பழ ரசஞ் சேர்ந்த சாதம்

அரை சேர் அரிசியைச் சமைத்து ஒரு சட்டியிற் கொட்டிக் கொண்டு 20 மாம்பழத்தின் ரசத்தைப் பிழிந்து, கற்கண்டுப்பொடி கலந்து, அதைச் சாதத்தில் வார்த்துக் குலுக்கி அதிற் கொஞ்சம் கடுகு, சீரகம், மிளகாய் இவைகளை நெய்யில் தாளித்துப்போட்டு, அதன் மேற் போதுமான உப்பைத் தூவவேண்டியது.

  1. வாழைப்பழஞ் சேர்ந்த சாதம்

அரை சேர் அரிசியைச் சமைத்து, அதை ஐந்து நிமிஷம் ஆற வைத்து, 55 வாழைப்பழத்தைத் தோலையுரித்துச் சாதத்துடன் கலந்து அதனுடன் கடுகு, சீரகம், மிளகாய் முதலியவைகளைத் தாளித்துச் சேர்க்கவேண்டும். வெந்தயம் சேரவொண்ணாது.

(1 சேர் = 280 கிராம்)

சாம்பார் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தது என்ற ஒரு கருத்துண்டு. மாமன்னர் சிவாஜியின் மகனான சாம்பாஜிக்கு பிடித்த உணவான புளி சேர்த்த குழம்புதான் ‘சம்பாஜி ஆஹார்’ என வழங்கப்பட்டு நாளடைவில் ‘சாம்பார்’ என்று மருவியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

இதோ அந்தச் சாம்பாரின் செய்முறை.

  1. மகராஷ்டக சம்பா

எட்டுப் பலம் புதுப்புளியெடுத்து சலத்திற் கரைத்து ஒரு சட்டியில் வார்த்து முக்காலாழாக்குக் கடலையை சலத்தில் தனியே வேகவைத்து அத்துடன் சேர்த்து பிற்பாடு 32 பலம் கத்திரிக்காயைத் துண்டுகளாக அரிந்து அதிற்போட்டுக் கொஞ்சம் வெந்தயம், அரிசி மா, உப்பு இவைகளைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாய்க் கொதிக்க வைத்துக் கொஞ்சம் கடுகு, சீரகம், கிள்ளு மிளகாய், பெருங்காயம் இவைகளை நெய்யில் வறுத்துப் போடவேண்டும். இது நல்ல ருசியாகவிருக்கும்.

(ஒரு பலம் = 40 கிராம்; 1 ஆழாக்கு = 168 கிராம்)

தின்பண்டங்கள் என்று எடுத்துக் கொண்டால் இலட்டுப் பலகாரம் (லட்டுதான்), பனி நீர் இலட்டுகம், கோதுமை ரவை அல்வா, வாதுமை அல்வா, அக்பர் பிரியமாகத் தின்ற அல்வா, நிசிசதா அல்வா, சுரைக்காய் அல்வா, பாயச வகைகள், வடை வகைகள், சட்னி வகைகள், சர்பத் வகைகள் எனப் பலவகைப் பதார்த்த செய்முறைகள் இந்த நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு வகை நோய்கள் பற்றி, அதன் அறிகுறிகள் பற்றி, உணவுகளின் மூலம் அதனைத் தீர்க்கும் விதம் பற்றி இந்நூலில் விரிவான குறிப்புகள் உள்ளன. ‘உணவே மருந்து’ என்பதற்கான செய்திகளைக் கொண்ட நூல் இது என்றும் சொல்லலாம்.

இதன் தொடர்ச்சியாக, நூலின் இரண்டாவது பகுதியில் அசைவ உணவு வகைகள் தயாரிப்பது பற்றிய விரிவான செய்திகள் உள்ளன. (நளனும், பீமனும் அசைவ உணவுகள் தயாரிப்பதிலும் தேர்ந்தவர்களாக இருந்தார்களா என்பது தெரியவில்லை. அது பற்றி மகாபாரதத்தில் ஏதேனும் குறிப்புகளிருக்கிறதா என விற்பன்னர்கள்தான் சொல்லவேண்டும்.)

‘நள வீம பாக சாஸ்திரம்’ என்ற இதே தலைப்பில், இதே விஷயங்களைக் கொண்டு, இந்த நூல் வெளியான 1922க்கு முன்னரே 1908ல் வேறு ஒரு பதிப்பு நிறுவனம் மூலம் இதே நூல் வெளியாகியிருக்கிறது. மேலும் 1914, 1917, 1928, 1935ல் இதே தலைப்பிலான நூல் வேறு வேறு பதிப்பாளர்கள் மூலம் அச்சாகியிருக்கிறது என்பதன் மூலம் இந்த நூலுக்கு அக்காலத்தில் இருந்த வரவேற்பைப் புரிந்து கொள்ளலாம்.

*

  1. போஜன குதூகலம்

ஸ்ரீ ரகுநாத ஸூரி என்பவர் வடமொழியில் எழுதிய ‘திரவிய குணதகனம்’ என்ற நூலின் தமிழ்ப் பெயர்ப்பே இந்த நூல். இவர் காலம் பொது சகாப்தம் 1625-1675. தஞ்சாவூரில் மராட்டிய அரசு நிறுவப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். எஸ்.என்.ராகவன் அவர்களால் இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் சிறப்பு கருதி தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையம் இதனைப் பதிப்பித்து 2005ல் வெளியிட்டுள்ளது. நூலின் பதிப்புரை பின்வருவாறு நூலின் சிறப்பைச் சொல்கிறது.

“தானிய வகைகள், வெந்த உணவு, காய்கறிகள், வற்றல், ஊறுகாய் மசாலாப் பொருட்கள், பிறவகையான உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் தன்மைகள் பயன்கள் ஆகியவற்றை மிகத்தெளிவாக விவரிப்பதோடு நீர் பற்றிய அரிய செய்திகள், நஞ்சுள்ள உணவின் அறிகுறிகள், பத்திய உணவுகள். உணவு உண்ணும் முறைகள், வெற்றிலை போடும் முறை, பயன்கள் எனப் பல்வேறு தகவல்களையும் கூறுகின்றது.”

தனித்தனியாக உள்ள போது வெவ்வேறு பண்பினைக் கொண்டுள்ள உணவுப் பொருட்கள், ஒன்றோடொன்று சேரும்போது ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றிக் கூறுவதும், பாத்திரங்களுக்கேற்ப உணவுப் பொருட்களின் தன்மை வேறுபடுவதைப் பற்றிக் கூறுவதும், உணவு நஞ்சாதல் பற்றிய விளக்கமும், நஞ்சுள்ள உணவினைக் கண்டு கொள்ளும் முறைகளும் இந்த நூலின் சிறப்பு என்று சொல்லலாம். மற்றுமொரு முக்கியச் சிறப்பாக உணவுக்குப் பயன்படுத்தும் நீரைப் பொருத்து, உணவின் சுவை, தன்மை வேறுபடுவதைப் பற்றி விரிவான விளக்கங்கள் கூறப்பட்டிருப்பதைச் சொல்லலாம். ஆற்று நீரைக் கொண்டு சமைத்தால் ஏற்படும் சுவை, அருவி நீர், குளத்து நீர், ஏரி நீர், கிணற்று நீர், பிளவுகளில் கிடைக்கும் நீர், உணவுக்குப் பயன்படுத்தக் கூடாத நீர், கெட்ட நீருக்கு மாற்று என்றெல்லாம் பல செய்திகளை விளக்குவதன் மூலம் எந்த அளவுக்கு முயற்சி எடுத்து இந்த நூலை, ‘ரகுநாத ஸூரி’ உருவாக்கி இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. முக்கியமாக காலை, மதியம், இரவு என வேளைகளுக்கேற்ப நீரின் தன்மை மாறி இருப்பதையும், பாத்திரங்களின் வகைகளுக்கேற்ப நீரின் தன்மை மாறுதலடைவதைக் குறிப்பிடுவதையும் சொல்லலாம்.

விடியற்காலையில் நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளாக பின்வருமாறு நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

“இரவின் முடிவில் குடிக்கப்படும் நீர், வழக்கமாகக் குடிக்கப்பட்டால் காசம், சுவாசம் அதிசாரம், காய்ச்சல், ஆண் குறியில் அடைப்பு, இடுப்புப்படை, நீரிழிவு, சிறுநீர்ச் சிக்கல் மூலம், வீக்கம், தொண்டை, தலை கழுத்து ஆகியவற்றில் தோன்றும் நோய், வாதம், பித்தம், கபம், களைப்பு ஆகியவற்றால் உண்டாகும் நோய் ஆகியவற்றைப் போக்கும். மனிதன் சூரியன் தோன்றுவதற்கு முன் பதினாறு பலம் நீர்குடிக்க வேண்டும். அங்ஙனம் குடித்தால் வாதம் பித்தம் கபம் முதலியவற்றை வென்று நூறாண்டு உறுதியுடன் வாழ்வான்.”

ஆனால், இதில் நம்மால் ஏற்க முடியாத சில வழிமுறைகளும் இருக்கின்றன. சான்றாக,

“இருண்ட இரவு முடியும் வேளையில் எழுந்து மூக்கு துவாரத்தின் வழியாக ஒரு மனிதன் தண்ணீரை உட்கொண்டால் கூரிய மதியும், கருடனுக்கு ஒப்பான வலிமை மிக்க பார்வையும், நரை திரை தொந்தி இல்லாமையும், நோயற்ற வாழ்வும் கொண்டு வாழ்வான்.”

மூக்கின் மூலமாகத் தண்ணீரைக் குடிப்பது என்பது எப்படி எனத் தெரியவில்லை. சாத்தியமில்லாதது மட்டுமல்ல; மூச்சுக் குழலில் நீர் புகுந்து விபரீத விளைவுகளையும் உண்டாக்கிவிடக் கூடும் என்பதால் இந்த வழிமுறை நம்மால் விலக்கப் பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

பால் குடிப்பது பற்றியும் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படிப் பட்ட மாடுகள், ஆடுகளின் பாலைக் குடிக்க வேண்டும், அவற்றை எந்தெந்தப் பாத்திரத்தில் வைத்துக் குடித்தால் என்னென்ன பலன் ஏற்படும், பாலுடன் உண்ணத் தகுந்தவை எவை, தகாதவை எவை என்றெல்லாம் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. பாலைத் தாமிரப் பாத்திரத்தில் வைத்தால் அது வாதத்தைப் போக்குமாம். தங்கப் பாத்திரத்தில் வைக்கப்பட்டது பித்தத்தை அகற்றுமாம். வெள்ளியிலிருப்பது சிலேட்டுமத்தை வெல்லும். பித்தளையில் வைக்கப்பட்டதோ இரத்தத்தில் தெளிவைக் கொடுக்கும். இரும்பில் வைக்கப்பட்டது கிருமிகள், பித்தம், கபம் ஆகியவற்றை அகற்றும். காந்த சாரத்தில் வைக்கப்பட்டதோ, மூன்று தோஷங்களையும் போக்க வல்லதாம். உடலுக்கு இதமானது. மிகச் சிறந்ததும் கூடவாம்.

ஆடுகளில் பலரும் அறிந்தது வெள்ளாடு, செம்மறி ஆடு, மலை ஆடுதான். இந்த நூலில், புக்கம் என்ற ஆடு பற்றியும், மேஷம், பேடம், ஹுடம், மேண்ட்ரம், ஊர்னாயு, உரணம், ஏடகம், சிருங்கி என ஆடுகளின் வகைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. மாடு, ஆடு என்றில்லை; ஒட்டகப்பால், யானைப் பால் குடிப்பது பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இந்த நூலில் செய்திகள் உள்ளன. பசுவின் தயிர், எருமைத் தயிர் தவிர செம்மறியாட்டின் தயிர், கழுதைத் தயிர், குதிரைத் தயிர், ஒட்டகத்தயிர், யானைத் தயிர் போன்றவை பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன. (இவற்றையெல்லாம் குடிப்பார்களா அல்லது மருந்திற்காகப் பயன்படுத்தியிருப்பார்களா என்பது தெரியவில்லை.)

இந்த நூலில் சமையல் முறைகள் பற்றி மேலும் பல சுவையான தகவல்கள் கிடைக்கின்றன. உணவை எப்படிச் சாப்பிடுவது? எல்லாம் நம் தாத்தாக்களும் பாட்டிக்களும் நமக்குச் சிறு வயதில் சொன்னதுதான்.

“சாப்பிடும் முன் இஞ்சியையும் உப்பையும் உட்கொள்ளுவது மிகவும் நன்மை தரும். இதனால் நல்ல சுவையும் பசியும் உண்டாகும். நாக்கும் தொண்டையும் சுத்தமாகும். உப்பு கடலுப்பாக இருத்தல் வேண்டும். கடினமான உணவை நெய்யை முன்னிட்டு முதலில் உண்ணுதல் வேண்டும். பின்னர் மிருதுவான உணவை உண்ண வேண்டும். கடைசியில் திரவப்பொருள். இப்படி உண்பவன் வலிமையும் உடல் நலமும் என்றும் இழக்காமல் வாழ்வான்.

மேலும் உணவில் ஊன்றி அதே நினைவில் உண்ண வேண்டும். முதலில் இனிப்பையும் நடுவில் புளிப்பும் உப்பும் பிறகு உவர்ப்பும் கசப்பும் அழலையும் உண்ணுதல் நன்மை தரும். அறிஞர்கள் மாதுளை போன்ற பழங்களை முதலில் உண்ணுவர். வாழைப்பழம் முதலில் உண்ணுதல் ஆகாது. அதே போல் கத்தரிக் காயுமாகும். தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, கரும்பு ஆகியவற்றையும் உணவுக்கு முன்னாலேயே உட்கொள்ளுதல் வேண்டும். பிறகு ஒரு போதும் உண்ணலாகாது. சோறு இரண்டு பங்கும் நீர் ஒரு பங்கும் உண்டு, காற்று முதலியவைகளுக்காக வயிற்றில் ஒரு பங்கைக் காலியாக விடவேண்டும். சாப்பிடும் போது அதிகமாகவும் சம்மந்தமில்லாததும் ஆன பேச்சைப் பேசலாகாது. வெறுக்கத்தக்க கதைகளைப் பேசவோ கேட்கவோ கூடாது.”

வெற்றிலை போடுவது எப்படி?

சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை போடுவது ஒரு சுகமான அனுபவம். ‘வெற்றிலை’ உடம்பிற்கு நல்லது என்பது பெரியோர்களின் கருத்து. திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் தாம்பூலம் தரிப்பதை ஓர் சடங்காகவே பலர் இன்றளவும் பின்பற்றி வருகிறனர். அந்த வெற்றிலையை எப்படி உண்ண வேண்டும்? இதோ வழிகாட்டுகிறது ‘போஜன குதூகலம்’.

“கனவிலும் காணமுடியாத பதின்மூன்று நன்மைகள் தாம்பூலத்தில் ஒருங்கே அமைந்துள்ளன. இலையின் நுனிப்பகுதியில் புகழும், அடியில் பெருமையும், நடுவில் செல்வமும் அமைந்துள்ளது. ஆகையால் இதன் நுனி, நடு அடிப்பக்கங்களை உண்ணாது விடவேண்டும். இலையின் அடியில் நோயும், நுனியில் பாவமும் பொடி செய்யப்பட்ட இலையில் ஆயுளைக் குறைக்கும் தன்மையும் உள்ளது. வெற்றிலையின் சாறு முதலில் நஞ்சுக் கொப்பாகவும், இரண்டாவது வயிற்றுப்போக்கைக் கொடுப்பதாகவும், செரிமானத்தைக் குறைப்பதாகவும், மூன்றாவது பாவத்தை ஒழிப்பதாகவும் அமிர்தத்திற் கொப்பாகவும் உடலுக்கு உறுதி தருவதாகவும் அமையும். கல்வியை விரும்புவோன் இரவில் தாம்பூலம் தரித்தல் கூடாது. காயமுள்ளவன் (புண் உள்ளவன்), பித்தம், இரத்தநோய் உள்ளவன் பாலைக் குடிப்பவன், இளைத்தவன், வறட்சியுள்ளவன் கண்ணோயுள்ளவன், நஞ்சு, மயக்கம், பட்டினி, நீரிழிவு, பாண்டு, க்ஷயம், மூலம், குஷ்டம், பேய், அதிசாரம், மலச்சிக்கல், இருதய நோய் முதலிய நோய் உள்ளவன் ஆகியோர் தாம்பூலத்தை அதிகமாக உபயோகித்தல் கூடாது.

ஐந்து நிஷ்கம் பாக்கும், வெற்றிலை இரண்டு பலமும், சுண்ணாம்பு இரண்டு குந்துமணியும் தாம்பூலத்தின் சிறந்த அளவாகும். இலையும் பாக்கும் சீராக இருப்பதால் நல்ல சிவப்பு நிறம் இருக்கும். பாக்கு அதிகரித்தால் நிறம் இருக்காது. சுண்ணாம்பு அதிகரித்தால் கெட்ட நாற்றம் தோன்றும். இலை அதிகமானால் நறுமணம் இருக்கும். இரவில் இலை அதிகமாக உள்ள தாம்பூலத்தை உட்கொள்ள வேண்டும். நல்ல சுவையும் தெளிவும், நறுமணமும் வேண்டுமானால் வாயில் ஜாதிக்காய், கிராம்பு, தக்கோலம், கடுக்காய் ஆகியவற்றுடன் உண்ணுதல் வேண்டும். தாம்பூலம் அளவுக்கு மீறினால் உடல் வெளுத்தல், உடல் இளைத்தல், கண்ணோய், வலிமை குன்றுதல் ஆகியவற்றைக் கொடுக்கும்.”

(நிஷ்கம் = 80 குன்றிமணி எடை; ஒரு பலம் = 40 கிராம்; 1 குன்றி மணி = 130 மில்லிகிராம்)

இவற்றோடு எப்படி இலை போடப்பட்ட வேண்டும்; வாழையிலை இல்லாவிட்டால் எந்தெந்த இலைகளைப் பயன்படுத்துவது, எதை எதை எப்படி எப்படிப் பரிமாற வேண்டும் என்றெல்லாம் மிக விரிவாக இந்த நூலில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

இனி, ‘லிப்சிகா’ என்ற பதார்த்தத்தின் செய்முறையைப் பார்ப்போம்.

  1. லிப்சிகா

கோதுமை மாவை நெய்யில் வறுத்துச் சர்க்கரை சேர்த்துப் பாலில் இடவேண்டும். அது இறுகியவுடன் அதில் கிராம்பு, வால்மிளகு முதலியவற்றைச் சேர்க்க வேண்டும். இதைச் சமைத்தால் அதற்கு ‘லிப்சிகா’ என்று பெயர். இதன் தன்மைகளாவன: இது பசியை அதிகரிக்கச் செய்யும். காமத்தை வளர்க்கும். வலிமை தரும். பித்தத்தையும் வாயுவையும் போக்கும். எண்ணெய்ப் பசை நிறைந்திருக்கும். சிலேட்டுமத்தை வளர்க்கும். கனமானது. சுவைமிக்கது. வயிற்றை நிரப்பித் திருப்தியைத் தரும். இதை ‘லாபசி’ என்றும் கூறுவர்.

  1. மண்டகம்

கோதுமையை வெள்ளையாகும்படிக் கழுவி, உமி நீங்க இடித்து, உலர்த்தி, பிறகு இயந்திரத்தில் இட்டு அரைத்துச் சலித்தெடுத்தால் அதைச் சமிதம் (மைதா) எனக் கூறுகிறோம். அந்த மாவைத் தண்ணீரில் விட்டு மிருதுவாக்கி நன்றாக அடித்துப் பிசைய வேண்டும். அதைக் கையால் எடுத்து உருண்டையாக்கி உருண்டையைக் கையாலேயே பெரிதாக்க வேண்டும். அவ்வாறு பெரிதாக்கிய பின் நெருப்பில் கவிழ்த்து வைக்கப்பட்ட பானையின் மீது வைத்து அதிக நெருப்பில்லாது வாட்ட வேண்டும். இதில் சமைக்கப்பட்டதை மண்டகம் என்கிறோம். இதை நெய்யும் கற்கண்டும் கூடிய பாலுடன் உண்ணவேண்டும். இதைச் சமைக்கப்பட்ட மாமிசத்தோடும் உண்ணலாம். அல்லது வடாமும் மோரும் வைத்துக்கொண்டு அத்துடன் உண்ணலாம். இது காமத்தை வளர்க்கும். பசியைக் கொடுக்கும். உடல் வலிமை தரும். அதிகச் சுவையூட்டும். சமைத்தபின் இனிப்புச் சுவையுள்ளது. பிடிப்பைக் கொடுக்கும். இலேசானது. இது மூன்று வகையான தோஷங்களையும் போக்கும்.

இறைச்சி உண்பது பற்றியும், அதனைப் பக்குவமாக்கிச் சமைப்பது பற்றியும், இறைச்சியினால் விளையும் நன்மை, தீமைகள் பற்றியும் இந்த நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நூல்கள் தவிர்த்து, ‘பாகசாஸ்திரம்’ (1867), ‘பதார்த்த ருசிகர சிந்தாமணி என்னும் நளவீம பாக சாஸ்திரம்’ (1880), ‘பதார்த்த ருசிகர சிந்தாமணி என்னும் நளவீம பெரிய பாக சாஸ்திரம்’ (1884), ‘இந்துக்களின் அனுபோக பாகமாகிய சைவ பாக சாஸ்திரம்’ (1893), ‘நள வீம பாக சாஸ்திரமென்னும் பெரிய பாக சாஸ்திரம்’ (1893), ‘மில்ட்டேரி இந்து பாக சாஸ்திரம்’ (1903), ‘சிவேந்திர பாக சாஸ்திரம்’ (1914), ‘சைவ பாக சாஸ்திரம்’ (1919), ‘அன்னிய பதார்த்த மென்னும், பெரிய மிலிடெரி பாக சாஸ்திரம்’ (1924), ‘ஹிந்துமத ஸம்பிரதாய பாக சாஸ்திரம்’ (1949), ‘சரபேந்திர பாக சாஸ்திரம்’ (1988-சரஸ்வதி மகால் நூலக வெளியீடு) போன்ற பல நூல்கள் அந்தக் காலத்தில் வெளிவந்திருக்கின்றன.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘இந்து பாக சாஸ்திரம்’, ‘நள வீம பாக சாஸ்திரம்’, ‘போஜன குதூகலம்’ போன்ற நூல்களை வாசித்து, உணவுச் செய்முறைகளைச் செய்து பார்க்க விரும்புபவர்கள், https://archive.org/ தளத்தில் இருந்து நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதெல்லாம் இருக்கட்டும், மனைவியையும், குழந்தைகளையும் தின்பண்டம் செய்து அசத்தினீர்களா என்று கேட்டால், ‘அசோகா’ செய்ய ஆரம்பித்து, சோகத்தில் முடிந்த அந்தக் கதையை, ‘சாமா பாக சாஸ்திரம்’ என்னும் எனது அடுத்த கட்டுரையில் வாசிக்கலாம்.

*

 

Leave a Reply