Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 2) | முனைவர் வ.வே.சு.

Annie Besant – An Autobiography. (அன்னி பெஸெண்ட் – ஒரு சுயசரிதை)

இங்கிலாந்து சர்ச் ஒன்றின் பாதிரியான டாக்டர் ப்யூசேவிடம், 20 வயதான அப்பெண் கூறுகிறாள்:

“ஃபாதர் எனக்கு ஜீஸஸ் மீதோ அவர் கூறியுள்ள வார்த்தைகள் மீதோ நம்பிக்கை இல்லை. என் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நீங்கள் விளக்க வேண்டும்.”

“பெண்ணே! நீயே ஒரு தேவாலய ஊழியரான பாதிரியின் மனைவி. நீ இப்படிச் சொல்வது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது. நீ செய்வது இறை நிந்தனை.”

“கிறித்துவ மதத்தில் எனக்குள்ள சந்தேகங்களைத்தானே கேட்கிறேன்!”

“கிறித்துவம் பாவிகளை இரட்சிக்கும்; ஆனால் சந்தேகப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாது.”

“அப்படியென்றால் அந்த மதம் எனக்குத் தேவையில்லை” என்று வெளியேறுகிறாள் அப்பெண்.

ஆம்! தனக்குச் சரி என்று படாததையும், தான் நம்பாதவற்றையும் தன் வாழ்நாளில் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாத பெண்மணியாகத் திகழ்ந்தவர். அதனால் அவர் பெற்ற துன்பங்களும், சந்தித்த சோதனைகளும் அளவிறந்தவை.

அவர்தான் அன்னி பெஸண்ட் என்று பின்னாளிலே இங்கிலாந்து, இந்தியா முதல் உலகெங்கும் அறியப்பட்ட பெண்மணி. பிரிடிஷ் சமூக சீர்திருத்தவாதி, தியசோபிகல் அமைப்பின் தலைவர், பெண் விடுதலை இயக்கவாதி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்களித்தவர், முந்நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும், கட்டுரைகளையும் படைத்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டு பல பணிகளைச் செய்து பாராட்டுப் பெற்றவர்.

‘அன்னிபெசண்ட் – ஒரு சுயசரிதை’ என்று இந்நூல் மிக சுவாரசியமானது. எண்பத்தைந்து வயது வாழ்ந்து இறுதிவரை அயராது சமூகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர், தனது வாழ்க்கையின் முதல் நாற்பத்திரண்டு ஆண்டுகளைப் பற்றி எழுதிய சரிதை. வாழ்வின் பின்பாதியிலே உலகப் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தாலும், தான் இளவயதில் எதிர்கொண்ட சோதனைகளையும், துன்பங்களையும், நம்பிக்கை ஊட்டிய சில வெற்றிகளையும் மனம் திறந்து எழுதியுள்ளார்.

“சோகங்கள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் ஆசைகள் இவற்றில் மனிதர்களுக்கிடையே ஒற்றுமை இருக்கின்றன; பல சோதனைகளுக்கும் முயற்சிகளுக்கும் பிறகு, வாழ்க்கைப் புயல்களிலிருந்து ஒருவர் கண்ட அமைதியையும், இருண்ட குகையின் மற்றொரு புறத்தில் தென்பட்ட ஒளியையும் பற்றி எழுதப்பட்ட அனுபவங்கள், பலருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையால் இந்த சுயசரிதையை எழுதுகிறேன்” என்கிறார் அன்னி பெசண்ட்.

அக்டோபர் 1ம் தேதி லண்டனில் ஒரு மத்தியத் தரக் குடும்பத்தில் பிறந்த அன்னி சிறுவயதில் இருந்தே மிக ஆழ்ந்த நம்பிக்கையுள்ள கிறிஸ்துவப் பெண்ணாக வளர்க்கப்பட்டாள். தேவாலயம், பைபிள், பழைய ஆங்கில இலக்கியம் இவை தவிர வேறேதும் தெரியாமல் வளர்க்கப்பட்டாள். ஆனால் அவளுள் மிகப் பெரிய தேடலும், துணிவும், இணைந்து இருந்தன.

வீட்டுக்கு அருகிலிருந்த சோலை மரங்களில் எல்லோரையும் விட அதிவிரைவாக ஏறுவாள். அவள் ஏறாத மரமே அச்சோலையில் இல்லை. எட்டு வயதில் பெரிய கிளைகள் கொண்ட மரத்தில் தனக்கென வீட்டை (Tree House) அமைத்துக் கொண்டு அங்கேயே பலமணி நேரங்கள் படித்துக் கொண்டிருப்பாள். மில்டனின் பாரடைஸ் லாஸ்ட்-ஐ மனப்பாடமாகச் சொல்லிக் கொண்டிருப்பாள். இதற்கிடையில் வில்வித்தையும் (Archery) கற்றுத் தேர்ந்தாள்.

தீவிர மத ஈடுபாடு கொண்ட அன்னி, ஒரு கன்னிகாஸ்த்ரீ ஆக ஆசைப்பட்டாள். அவள் மிகவும் நேசிக்கும் அன்னை, இவள் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி, அன்னியின் எண்ணப்போக்குக்கு சிறிதும் ஒத்து வராத பாதிரியார் ரெவெரண்ட் ஃப்ரான்க் பெசண்ட் என்பவரோடு மணம் செய்வித்தார். ஐந்து வருட அடிமை வாழ்க்கை; இரண்டு குழந்தைகள்.

ஆழ்ந்த மதப்பற்றுக் கொண்ட காரணத்தால் கிறிஸ்துவத்தை முழுதுமாகக் கற்ற அன்னி, அதே காரணத்தால் அதில் பல சந்தேகங்கள் கொள்கிறார். “கிறிஸ்துவம் அறிவை நசுக்குகிறது; ஆன்மாவுக்குத் திருப்தி அளிக்க மறுக்கிறது” என்று மதத்தைத் துறந்தார். எனவே கணவர் இவரை விலக்கி வைத்துவிட்டார். ஓராண்டுக்குள் தாயையும் இழந்தார். தன் குழந்தையைப் பார்ப்பதற்கும் நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டுத் தனிமரமாகிறார்; வறுமை ஒன்றே துணையானது. ஒரு நிலையில் தற்கொலை செய்து கொள்ளவும் முடிவெடுத்துப் பின்னர் அது கோழைத்தனம் என உணர்ந்து அதிலிருந்து மீள்கிறார்.

சமுதாயத்தில் வறியவருக்கு உதவவும், மதவாதத்தால் கொடுமை செய்யப்பட்டோருக்குத் துணைநிற்கவும், பெண்ணடிமைப் போக்கை ஒழிக்கவும் உறுதி பூணுகிறார். சுய சிந்தனையோடு, பழமையினை எதிர்க்கும் போராளிகளைச் சமுதாயம் எவ்வாறு ஒதுக்கி உதாசீனப் படுத்துகிறது என்பதை அனுபவம் மூலம் உணர்கின்றார்.

அன்னி பெசண்ட் எழுதி, பத்திரிகையில் வெளிவந்த முதல் சிறுகதைக்கு அவருக்கு முப்பது ஷில்லிங் கிடைத்தது. அதன் பிறகு எழுத்தின் மூலம் அவர் பெற்ற செல்வம் எத்தனை இருந்தாலும், இந்த முதல் முப்பது ஷில்லிங்கின் மதிப்பு இணையற்றது. “இது நானே சம்பாதித்த எனக்கே சொந்தமான பணம்” என்று மகிழ்ச்சியடைகிறார். ஆனால் அது நிலைக்கவில்லை. திருமணமான பெண் என்ன சம்பாதித்தாலும் அது அவளுடைய கணவனையே சேரும் என்பது இங்கிலாந்தில் இருந்த அன்றைய சட்டம்.

இது போன்ற பல சட்டங்கள் பெண்களைச் சமமாக நடத்தாமல் இழிவு படுத்துகின்றன என அறிந்து பெண்களுக்காகப் போராடத் தொடங்குகின்றார். பல பத்திரிகைகள் இவரைத் தாக்கியும் ஏசியும் அவதூறு கூறியும் எழுதின. ‘பாவாடை கட்டிக்கொண்ட புனித அதனாசியஸ்’ (Saint Athanasius in petticoats) என்றும் ‘பால்சொம்பு மூளை’ (Mind like a milk jug) என்றும் கேலிகள் செய்தன.

நேஷனல் செகுலார் சொஸைட்டி, நேஷனல் ரிஃபார்மர் எனும் வார இதழ் ஆகிய இரண்டிலும் பிரபல சீர்திருத்தவாதியும், இங்கிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினருமான பிராட்லாஃப் என்பவருடன் இணைந்து பல பணிகள் புரிந்தார். அக்காலத்தில் புதுமையாகவும் புரட்சியாகவும் தெரிந்த, சோஷியலிசம், தொழிற்சங்கங்கள், பெண்விடுதலை, பெண்களுக்கான ஓட்டுரிமை, தேசியக் கல்விமுறை, குடும்பக் கட்டுப்பாடு போன்ற பல கருத்துகளைத் தன் எழுத்துகள் பேச்சுகள் மூலம் நாடெங்கும் பரப்பினார். அதனால் பல வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தார். இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் படித்து எட்டு அறிவியல்துறைகளில் ஆசிரியப் பணி புரியும் தகுதியைப் பெற்றார்.

நலிந்தோர்க்குச் சேவை என்பது தவிர அவரது ஆன்மிகத் தேடல் அவரை தியோசாபிகல் அமைப்பின் தலைவரான மேடம் ப்ளவட்ஸ்கி என்ற ரஷ்யப் பெண்மணியின் சீடராக மாற்றியது. பின்னாளில் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். இந்த இடத்தில் நூல் நிறைவு பெறுகிறது.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், ‘இந்தியாவை உறக்கத்திலிருந்து எழுப்பியவர்’ என்று மகாத்மா காந்தியின் பாராட்டைப் பெற்றவராகவும், இந்தியாவின் ஆன்மிக அடிப்படையை முற்றும் உணர்ந்தவராகவும், தனது வாழ்க்கையின் கடைசி நாற்பது ஆண்டுகளை இந்தியாவிலேயே கழித்து இம்மண்ணிலேயே உயிர்நீத்த பெரும் சமூக சேவகியாகவும் விளங்கிய அன்னிபெசண்ட், இந்த அரிய வாழ்க்கைக்குத் தன்னை எவ்வாறு தகுதிபெறச் செய்து கொண்டார் என்பதை, அவரது இளமை நாட்களின் சுயசரிதை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அன்னி பெசண்ட்டின் ஆடம்பரமில்லாத அழகிய ஆங்கில நடை, மொழிநேயர்களுக்கு ஒரு நல்விருந்து.

சமூகத் தொண்டில் இவருக்கு இத்தனை சாதனைகள் எப்படி சாத்தியமாயின? “நான் ஏன் உதவவேண்டும் என்று கேட்பதை விடுத்து, நான் ஏன் உதவக்கூடாது என்று எண்ணுங்கள்” என்கிறார் அன்னி பெசண்ட்.

Leave a Reply