Posted on 1 Comment

இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

(Lectures on Ramayana by Rt. Hon’ble V. S. Srinivasa Sastri; Raamaayana Peruraigal, (Tamil translation by Smt. K. Savithri Ammal Both pub. By The Samskrita Academy, 84, Thiru Vi Ka Road, Mylapore, Chennai-600004)

சென்ற ஆண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் எனது சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்தது. பேசி முடித்த பிறகு உரையாடிக் கொண்டே நண்பர்களோடு அரங்கத்தை விட்டு வெளியே வந்தோம். வளாக வெளிப்பரப்பில் கிளைபரப்பி ஒரு பெரிய மாமரம் இருந்தது.

“சார்! ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் இங்கே பேசியுள்ளார்” என்றார் நண்பர்..

“அடே அப்பவே இந்த ஹால் கட்டியாகிவிட்டதா?”

“இல்லையில்ல.. இதோ இந்த மாமரத்தின் கீழ்தான் அவருடைய மிகப் பிரபலமான ‘இராமாயண ஆங்கிலப் பேருரை’ நிகழ்ந்ததாம்.. மாலை நிகழ்ச்சிக்குப் பெரிய கூட்டம் தரையில் அமர்ந்து கேட்குமாம். இத்தொடர் நிகழ்ச்சி எட்டு மாதங்கள் நடந்ததாம்.”

“அதே மாமரமா இது?”

“இடம் அதுதான்.. மரமும் மாமரம்தான்.. ஆனால் அதே மரமா? இல்லை அதன் வாரிசா .தெரியலை.”

என் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. என் நூலகத்தில் நான் இன்னும் முழுமையாகப் படிக்காத சாஸ்திரியாரின் ‘Lectures on the Ramayana’ நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீடு திரும்பினேன்.

“ரைட் ஆனரபிள் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி வலங்கைமான் என்ற சிறு கிராமத்தில் 1896ல் பிறந்து, சென்னை மயிலையில் 1946ல் தனது 76வது வயதில் மறைந்தவர். பள்ளித் தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார்; பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் பணியாற்றி உள்ளார். மகாத்மா இவரை அண்ணனாகவே எண்ணிப் பழகியவர்; கோபாலகிருஷ்ண கோகலேயின் நண்பர், லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் காந்தியோடு கலந்து கொண்டவர். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்படும் உரைகளில் ஒன்று. மத அடிப்படையில் நடந்த இந்தியாவின் பிரிவினையை எதிர்த்தவர்.

”மகாத்மா காந்தி மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிடலில் சாஸ்திரியாரை சந்தித்த போது இராமாயணம் பற்றிய அவரது கருத்துகளை நூல் வடிவில் கொண்டு வந்தால் அது மக்களுக்கெல்லாம் பயனுள்ளதாக அமையும் என்று வலியுறுத்தினார். காந்திஜி இருந்திருந்தால் அவர்தான் இந்நூலுக்கு முன்னுரை தந்திருப்பார். ஆனால் நூலாசிரியரும், நூல் வெளிவரவேண்டும் என சொன்னவரும் இன்று நம்மிடையே இல்லை. எனவே முன்னுரையை நான் எழுதியுள்ளேன்” என்று மெட்ராஸ் ராஜதானியின் அட்வகேட் ஜெனரலாக இருந்த டி.வி.ஆர். சாஸ்திரி எழுதியுள்ளார். இந்நூல் தமிழிலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘வெள்ளி நாக்கு சாஸ்திரி’ ( Siver tounge Sastri) என்று அழைக்கப்பட்ட சீனிவாச சாஸ்திரியாரை, பிரிடிஷ் இந்தியாவின் ‘இராஜாஜி’ எனவும் குறிப்பிடுவார்கள். இருவருக்கும் உள்ள ஒற்றுமை இராமாயணத்தில் கொண்ட புலமையும் ஆர்வமும் ஆகும். இராஜாஜி ‘சக்ரவர்த்தித். திருமகன்’ என்று கல்கி இதழில் எழுதினார்; பிறகு அது நூலானது. பேச்சாற்றலில் சிறந்த சாஸ்திரியாரின் வால்மீகி இராமாயணத்தைப் பற்றிய ஆங்கில உரை ‘The lectures on the Ramayana’ என்ற நூலாக வடிவம் கொண்டது. வடமொழிக் காவியத்தை, தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசிய இந்நிகழ்வு ஒரு திரிவேணி சங்கமம்.

பேசியவற்றை அப்படியே பதிப்பித்துள்ளதால், ஆழ்ந்து படிக்கும் போது, கற்பனை செய்து கொண்டால், சாஸ்திரியார் பேசுவதை நேரில் கேட்பது போன்ற உணர்வை எட்ட இயலும். படிக்கப் படிக்க அவரது ஆங்கிலப் புலமையை நாமும் மெச்சத் தொடங்கி விடுவோம்.

ஆற்றொழுக்கான பேச்சு; ஆடம்பரச் சொற்களைப் (Bombastic words) பயன்படுத்தாமல், எளிய சொற்களைக் கொண்டே நகரும் கம்பீர நடை; அப்படிச் சொன்னால் போதுமா? ஒரு துளி அமுதமேனும் சுவைக்க வேண்டாமா? இதோ விபீஷண சரணாகதி பற்றி சாஸ்திரியார் எழுதுவது:

“In spite of the advice of everybody, rejecting it all beneath him, Rama rose to his own topmost level and said the famous words: ‘No man shall seek my protection in vain. He may be wicked, he may be undeserving, and he may even be my bitterest enemy, Ravana himself. But if he comes to me in a friendly and submissive spirit, I will not turn him back.’ Fancy ladies and gentlemen, what a tremendous consciousness of his own moral power he must have had when he announced these great sentiments and carried them out without any qualification or reservation”

கதைப் பாத்திரங்களின் சூழலையும், அவர்களை அடித்துச் செல்லும் உணர்ச்சி வெள்ளங்களையும், மனப் போக்குகளையும், மனித இயல்பின் கட்டவிழ்ந்த செயல்களையும் எந்தத் தயக்கமும் இன்றி விளக்கி, விவாதிக்கும் இது போன்ற சொற்பொழிவை வெகு சிலரே தர இயலும். கம்பனை மட்டுமே அறிந்து, அதுதான் வால்மீகி இராமாயணமென எண்ணுவோர்க்கு இவரது உரை சில அதிர்ச்சிகளைக் கொடுப்பது நிச்சயம்.

எனினும் 05/04/1944 முதல்நாள் தொடக்க உரையில் அவரது முதல் வாக்கியம்: “நான் பேசுவதற்கு முன் இதுபோல் என் வாழ்வில் என்றும் பயந்தது கிடையாது.”

மூன்று காரணங்களை முன் வைக்கிறார். முதல் காரணம், எடுத்துக் கொண்டுள்ள பணிச்சுமையைப் பற்றிய அச்ச உணர்வு; இரண்டாவது, கூடியுள்ள அவையினரின் தகுதி; மூன்றாவது, எவ்வளவு படித்தவராலும் எதையும் புதியதாகச் சிந்தித்துச் சொல்ல இயலாத பேசுபொருள்”. ஆனால் எட்டு மாதங்களில் அவர் கொடுத்த முப்பது சொற்பொழிவுகளும், இம்மூன்று காரணங்களையும் பொருளற்றவையாக ஆக்கிவிடுகின்றன.

”இராமனை மனிதனாகப் பாருங்கள்” என்பதுதான் தொடக்கத்திலேயே சாஸ்திரியார் வலியுறுத்திச் சொல்வதும், தொடரும் சொற்பொழிவுகளில் மறக்காமல் சுட்டிக் காட்டுவதுமான முக்கியக் கருத்து. எனினும் இராமன் கடவுள் என்ற பக்தியுணர்வில் கொஞ்சமும் குறையாதவர் சாஸ்திரியார். சொற்பொழிவுகளின் இடையிடையே அவர் கண்கள் கலங்கி குரல் தழுதழுக்க நின்ற சமயங்கள் உண்டு.

“இராமனைக் கடவுள் என்று சொல்லி ஒதுக்கிவிடாதீர்கள். அவன் நம்மைப் போன்ற மனிதன் எனும் நினைப்பிருந்தால்தான், அவனுடைய உயர்ந்த குணநலங்களை நாமும் பின்பற்ற முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் எழும்; சீதை ஒரு மனிதப் பெண் என்று நம்பினால்தான், அவளுடைய நற்குணங்களை நமது மாதர்கள் பின்பற்ற வாய்ப்புண்டு. அவர்கள் ‘அவதாரங்கள்’ என்பது உண்மையாயினும், அதனை மறந்து அவர்கள் சாதாரண மனிதர்கள் என எண்ணுவதே உய்வதற்கான வழிமுறை. இந்த அடிப்படையில்தான் நமது புராணங்கள் எழுந்தன. அப்படி எண்ணினால்தான் இராமன் என்ற நிறைமனிதனின் உறவுகள் நாம் என்று உயர்வோம். (We raise ourselves to kinship with him)” என்கிறார் சாஸ்திரியார். விமரிசனங்களுக்கு ஆளான அவரது கருத்துகளில் இதுவும் ஒன்று.

இக்கருத்தை வலியுறுத்த, இராமன் தன் வாழ்வில் சாதாரண மனிதன் போல் நடந்துகொண்ட தருணங்களைச் சுவையாக சுட்டிக் காட்டுகின்றார். அச்சம், கோபம், துயரம் எல்லாம் உள்ள, எலும்பும் சதையும் கொண்ட மனிதனாக வால்மீகி காட்டியுள்ள இராமன் இவர் உரையில் எந்தத் திரையுமின்றி முகம் காட்டுகிறான்.

தன்னோடு வனத்துக்கு வராதே என இலக்குவனைத் தடுக்கும் போது, “கைகேயியை நம்பி நமது அன்னையரையும் அரசனையும் இங்கே பாதுகாப்பின்றி விட்டுச் செல்வது உசிதமில்லை. நீ இங்கேயே இரு” என்கிறான்; அரக்கனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையைத் தேடி “மரமே கண்டாயோ? மலரே கண்டாயோ?” என்று மெத்த சோகத்திலே ஆழ்ந்து துடிக்கிறான்; யுத்தத்திலே மயக்கமடைந்த இலக்குவனை மடியில் கிடத்தி அழுகிறான்; சீதையை அக்னி ப்ரவேசம் செய்ய வைக்கிறான்; ஊர் வதந்திக்காக, நிறைகர்ப்பிணியான சீதையை வனத்துக்கு அனுப்புகிறான். இப்படிப் பல இடங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

‘நடையில் நின்றுயர் நாயகன்’ எனக் கம்பன் போற்றிய இராமனை வால்மீகி யதார்த்த மனிதனாகச் சித்தரித்திருப்பதை, ஷேக்ஸ்பியர், டென்னிஸன் போன்ற உலகக் கவிஞர்களின் படைப்புகளை உதாரணம் காட்டிப் பேசுகிறார்.

மனிதனால் மட்டுமே அழிக்க முடியும் என்று வர பலத்துடன் திரியும் இராவணனை, முழு மனிதனாக மாறாமல் இராமனால் எவ்வாறு வீழ்த்தியிருக்க முடியும் என்று ஒரு ‘லாஜிக்கையும்’ வைக்கிறார்.

சீதை, இலக்குவன், பரதன், வாலி, இராவணன் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் மிகச் சுவையாக விவரித்துள்ளார்.

சமுதாயத்தில் புரிதல் இல்லாமையால் விளையும் வன்முறைகளைத் தடுக்க, இராமாயணத்திலிருந்து ஓர் அருமையான செய்தியைத் தருகிறார் சாஸ்திரியார். சிறையிருந்த சீதையை மீட்கும் அனுமன், காவலிருந்த அரக்கியரைத் தண்டிக்க முனைந்த போது, தேவி தடுத்துக் கூறுகிறாள். “இவரை நொந்து என்ன பயன்? தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாருமில்லை.” ‘ந கஸ்சின்னா அபராத்யதி” என்ற சொற்றொடரை மகாவாக்கியமாக விளக்குகிறார். இதை உணர்ந்து கொண்டால் பழிவாங்கும் உணர்ச்சி உலகத்தில் இருக்குமா?

பழைய எழுத்தாளர்களின் புதிய கதைகள் என்றுதான் பல நூல்கள் வெளிவருகின்றன. புதிய எழுத்தாளர்களின் கதைகளும் வருகின்றன. ஆனால் பழைய கதை புதிய எழுத்தாளர்கள் என்ற காம்பினேஷனை எல்லா இடங்களும் பார்க்க முடியாது. நமது புராணங்கள், இதிஹாசங்கள் பக்கம் வந்தால்தான் பார்க்கமுடியும். ஆம்! இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பலர் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார்கள். அவற்றுள் பல மிகப்பெரும் இலக்கியத் தகுதியையும் பெற்று விளங்குபவை. அவற்றில் ஒன்றுதான் இந்த நூல். ‘இராமன் தெய்வம் என்று வழிபடுதலோடு நின்றுவிடாதே! இராமன் ஓர் இலட்சிய மனிதனும் கூட. அவன் வழியைப் பின்பற்று!’ என்பதே இந்நூல் கருத்து.

1 thought on “இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

Leave a Reply