Posted on Leave a comment

கோவிட் 19 – உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைக்க தவறியதா? | பா.சந்திரசேகரன்

கடந்த ஐந்து மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ், யானையின் காதில் சித்தெறும்பு புகுந்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி இருக்கிறது. இந்த நிலையில்தான் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் இருக்கிறார்கள். எத்தனை கொடிய ஒரு நோயைக் காட்டிலும் இந்த கொரோனா வைரஸைக் கண்டு அச்சப்படுகிறோம். ஏனென்றால், இந்த வைரஸ் மனிதர்களிடையே ஒரு நொடியிலே பரவும் தன்மை உள்ளதால்தான்.

கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே (196-க்கும் மேல்), இந்த நோய்க்கு எதிராகத் தனிமைப்படுத்திக் கொள்ளும் போரை அறிவித்துப் போராடி வருகின்றன. இந்த கோவிட்-19 அச்சத்தை உண்டாக்கி உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையான 702.4 கோடிப் பேரையும் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதித்து இருக்கிறது. இந்த அதிநவீன அறிவியல் வளர்ச்சியில் இந்த நோயின் தாக்கம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதில் கிட்டத்தட்ட இருபது சதவீதம் மக்கள் இந்தியாவில் உள்ளனர். இப்படிப்பட்ட உலகை உலுக்கிய அசாத்திய சூழுல் நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் நடந்திருக்கிறது.

ஆம், 1918ம் ஆண்டு முதல் உலகப்போர் நடக்கும்போதே ஒரு கொடூரத் தொற்றுநோய் வைரஸ் பரவி உலகையே உலுக்கியது. இன்று சீனா நடந்துகொண்டது போல் அன்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை சில மாதங்களுக்குப் பத்திரிகைகளுக்கு எட்டாமல் செய்தியை முடக்கின. இந்தக் கொடிய தொற்றுநோய் பற்றி முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில்தான் பத்திரிகையில் தகவல் வெளியிடப்பட்டது. இது ‘ஸ்பானீஷ் ஃப்ளு’ என்று அழைக்கப்படுகிறது. பலரும் இதை ஸ்பெயினில் தோன்றியதாக தவறாக நினைத்துவிடுகின்றனர். இந்தத் தொற்றுநோயால் இன்றைய அமெரிக்க அதிபரின் தாத்தா இறந்துபோனாராம். அன்று எந்த ஒரு சர்வதேச சுகாதார அமைப்போ அல்லது பன்னாட்டுக் கூட்டமைப்போ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவது, உலக முழுவதும் ‘ஸ்பானீஷ் ஃப்ளூ’ தொற்றுநோயால் உயிர் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பது மில்லியன் முதல் நூறு மில்லியன் வரை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். ஆனால் சித்தார்த் சந்திரா மற்றும் ஏவா காசென்ஸ் நூர் அவர்களின் 2014ம் ஆண்டு மேற்கொண்ட ‘இந்தியாவில் 1918ம் ஆண்டு படிப்படியான தொற்றுநோய் உலகளவில் பரவியது எப்படி மற்றும் இந்தியாவின் ஆதாரங்கள்’ என்ற ஆய்வின்படி இந்த வைரசால் உலகில் உயிர் இறந்தவர்கள் மொத்தம் இருபது முதல் ஐம்பது மில்லியன் வரை என்று தெரிவித்துள்ளார்கள்.

அன்றைக்கு இந்தியாவில் இருந்த ஒன்பது மாகாணங்களில் 213 மாவட்டங்கள் இருந்தன. ஐந்து ஆண்டுகள், 1916ம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரை மாகாணங்கள் மற்றும் மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்தியாவில் உயிர் இறந்தவர்கள் ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி வகித்த பகுதியில் மட்டும் 13.8 மில்லியன் மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். இந்தத் தொற்று நோய் இந்தியாவில் முதன்முதலில் பம்பாயில்தான் பரவியது, பிறகு மற்ற மாகாணமான கல்கத்தா, மதராஸ் போன்ற பகுதிகளில் பரவியது. மழைக்காலத்தில்தான் இந்த நோய் பரவியது. அந்தச் சமயத்தில் இரண்டாம் கட்டப் பரவலில்தான் இந்த தொற்று நோயால் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டது.

சித்தார்த் சந்திரா மற்றும் ஏவா காசென்ஸ் நூர் அவர்களின் ஆய்வு முடிவுகள்: முதல்முதலில் எல்லோரையும் தாக்குகின்ற தொற்று நோய், எங்கு பரவும் என்று அறிகுறி தெரிகிறதோ, அங்கு, குறுகிய காலத்தில் அதைக் கையாளப் போதிய போர்க்கால அடிப்படை மருத்துவ மேலாண்மை வேண்டும். அப்போதுதான் அதற்குப் பிறகு மற்ற பகுதிகளில் பரவும்போது மேலும் விழிப்புணர்வோடு அதை எதிர்கொண்டு கட்டுப்படுத்தலாம்.

ஆனால் சீனா இன்று அதைச் செய்யத் தவறிவிட்டது. அதைவிட உலக நாடுகளின் கூட்டமைப்பில் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பு ஆரம்பக் கட்டத்திலேயே முன்னெச்சரிக்கையாக இந்த கொரோனா தொற்றுநோயைக் கையாள முடியாமல் தவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் படிப்படியாக எப்படிப் பரவியது, அதை எப்படி உலகச் சுகாதார அமைப்பும் மற்றும் சீன அரசும் கட்டுப்படுத்தாமல் தவித்துக் கை கழுவின என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கொரோனா வைரஸ் பற்றி சீனாவின் வூகான் மாகாணத்தில் முதன்முதலாகத் தெரியவந்து உள்ளது. டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் வூகான் பகுதியில் உள்ள மருத்துவர்கள், மனிதர்களிடையே கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கண்டுபிடித்துள்ளனர். பிறகு அங்குள்ள மருத்துவர்களையும் இந்த நோய் தாக்கியது. அந்த மாகாணத்தில் டிசம்பர் இறுதியில் இந்த கொரோனா வைரஸ் பரவுவதை மருத்துவர் லி வென்லியாங்கின் கண்டுபிடித்து மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிசம்பர் 31 அன்று வூஹான் நகராட்சி சுகாதார ஆணையம் ஆய்வு செய்து ‘அப்படி எந்த ஒரு தொற்றுநோய் பரவும் அறிகுறியும் இல்லை’ என்று அறிக்கை அளித்தது. மேலும் அதே நாள் ஹூபேய் மாகாண சுகாதார ஆணையம் ஆய்வு செய்து,  ‘கொரோனா தொற்றுநோய் சம்பந்தமாக எந்தவிதமான இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளக்கூடாது’ என்று தடை விதித்து அறிக்கை வெளியிட்டது. ஜனவரி 8 மற்றும் 11ம் தேதி வரை சீன அரசு கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவும் தொற்றுநோய் இல்லை என்றே சொல்லி வந்தது.

ஜனவரி 15ம் தேதி வூகான் மாகாண சுகாதார ஆணையம் மேலும் ஒரு முறை ஆய்வு நடத்தி குறைந்தபட்ச அளவுக்குக் கூட இந்த கொரோனா வைரஸ் மக்களிடையே தொற்றுநோயாகப் பரவ வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. மேலும் ஜனவரி 19ம் தேதி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கொரோனா வைரஸை முன்னெச்சரிக்கையாகத் தடுக்கவும் கட்டுக்குள் வைக்கவும் முடியும் என்று அறிக்கை வெளியிட்டது. இதற்கு அடுத்த நாள் சீனாவின் மற்ற மாகாணத்திலும் கொரோனா வைரஸ் பரவுவது பற்றி சீனா அறிந்து கொண்டது. ஆனாலும் தான் சொன்னதைச் சாதித்தது.

ஜனவரி, 2020 முதல் வாரத்தில் கண் மருத்துவரான லீ வென்லியாங் மீது ‘பொய்யான வதந்திகளை’ பரப்பியதற்காக சீன அரசு வழக்கு தொடுத்துக் காவலில் வைத்தது. அவர் அரசு கூறியபடி மன்னிப்புக் கடிதம் கொடுத்த பிறகே வெளியே வந்தார். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட அவர் கடந்த பிப்ரவரி 7ம் தேதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தார். அவர் இறந்தபிறகு சீன அரசு அவர் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

ஜனவரி 13ம் தேதி தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் வூகானில் இருந்து வந்த பெண்மணி மூலம் பரவத்தொடங்கியது. அந்த 61 வயதுகொண்ட பெண்மணி வூகானில் உள்ள பல சிறு சந்தைகளுக்குச் சென்றுவந்ததாக தாய்லாந்து அரசு தகவல் தெரிவித்தது. ஜனவரி 15ம் தேதி ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. ஜனவரி 21ம் தேதி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. ஜனவரி 30ம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியது கண்டறியப்பட்டது. இப்படிப் பல நாடுகளில் நோய் பரவியது.

இதை எல்லாம் உலகச் சுகாதார அமைப்பு எப்படி எடுத்துக்கொண்டது என்பது ஒரு புரியாத புதிர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இப்படிபட்ட உயிரைக் கொல்லும் தொற்றுநோய் பரவுதல் பற்றி டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தனது ஆய்வைத் தொடங்கிய உலகச் சுகாதார அமைப்பு ஜனவரி 14ம் தேதி ஓர் ஆரம்பகட்ட அறிக்கையை வெளியிட்டது. அது என்னவென்றால் மனிதர்களிடையே பரவும் அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புப் பற்றி எந்த ஒரு திட்டவட்டமான தெளிவான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்பதுதான்.

ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு ஜனவரி 22ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தூதுவர் குழு வூகான் மாகாணத்தில் கள ஆய்வு செய்து ‘மனிதர்களிடையே கொரோனா வைரஸ் பரவுகிறது’ என்று சொல்லி, புதிய பரிசோதனைக்கான அறிவுரையைக் கூறித் தொற்று நோய் பரவுவதை உறுதி படுத்தியது. அப்போது கூட பிற நாடுகளுக்கு முன்னெச்சரிக்கையாக என்னென்ன வழிமுறைகளைக் கையாளவேண்டும் என்பதைப் பற்றி ஆக்கபூர்வமாகத் தெரிவித்ததா என்பது சந்தேகமே. அதனால்தான் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடித்தது ஆரம்பத்தில். இதனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. இன்று உலகமே தத்தளித்து நிற்கிறது.

உலக சுகாதார அமைப்பில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் இந்த அமைப்பு மற்றும் உலக நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் நிர்வாக முறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். ஏனென்றால் இந்த அமைப்புகளின் செயல்களில் மேற்கத்திய வளர்ந்த நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் காலனி ஆதிக்க மனநிலையில்தான் இப்போதும் செயல்படுகின்றன. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியை, வளர்ந்த நாடுகளின் சந்தைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றன. சர்வசேத அளவில் அனைத்து நிலையிலும் அதிகாரப் பங்களிப்பில் தகுந்த அளவில் வாய்ப்பளிப்பதில்லை. இந்தியா போன்ற நாடுகளுக்குப் பன்னாட்டுக் கூட்டமைப்பான ஐ.நா மற்றும் அதன் கிளை நிறுவனங்களின் நிர்வாகத்தில், தகுந்த நிர்வாகப் பொறுப்பில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்பது நிதர்சன உண்மை.

ஆராய்ச்சியாளர்களிடையே சீன அரசு, உலக சுகாதார அமைப்புக்குத் தன் உலக வர்த்தக செல்வாக்கைக் கொண்டு அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஏனென்றால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்துத்தான், அதாவது மார்ச் 11ம் தேதிதான், ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை, ஒரு பாண்டமிக் என்று சொல்லப்படும் எல்லோரையும் தாக்குகின்ற உலகம் முழுக்கப் பரவும் நோய் என்று அறிவித்தார்கள்.

ஜனவரி மாதம் முதல் மார்ச் 2020 வரை இந்தியாவில் இருந்து சர்வசேத விமானப் பயணம் செய்தொர் எண்ணிக்கை பல மில்லியன் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தத் தொற்று நோய் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று அச்சம் வலுக்கிறது. இன்று உலகெங்கிலுமான பிராந்தியங்களிலும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜூன் மாதம் வரை ஐந்து லட்சம் பேர் இறந்துள்ளார்கள். இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தக் கொடிய நோயைக் குணப்படுத்துவதற்கு அவசியமான மருத்துவ உபகரணங்கள் உலகம் முழுவதும் பெரும் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளன. குறிப்பாக மாஸ்க், வென்டிலேட்டர், கூடுதல் படுக்கை வசதிகள், உடல் முழுவதும் போர்த்தத் தேவையான பாதுகாப்பு ஆடைகள், ரத்த மாற்ற உபகரணங்கள், ரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவிகள் போன்றவை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாடு இந்தியாவில் மட்டும் அல்ல, வளர்ந்த நாடான அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயை எதிர்த்துப் போராடும் பொதுச் சுகாதார அவசரத் தருணத்தில் இந்திய மற்றும் மாநில அரசுகள் ஏன் தனியார் மருத்துவமனைகளைச் சரியானமுறையில் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. இப்போது கொஞ்சம் இதில் விழிப்புணர்வு வந்துள்ளது என்பது உண்மைதான். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கொரோன நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அளிக்கத் தகுந்த கொள்கையை உருவாக்காததால் தனியார் மருத்துவமனையைப் பல்வேறு மாநில அரசுகள் தவறாகப் பயன்படுத்துகின்றன. மருத்துவமனைகளில் உரிமையைப் பறிக்கிற செயல்களிலும் சில மாநில அரசுகள் ஈடுபடுகின்றன.

அரசு மருத்துவமனை மூலம் மட்டும் கொரோனோ நோய்க்குச் சிகிச்சை அளித்துக் கட்டுப்படுத்திவிடலாம் என்று அரசு ஒருவேளை நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறானது. இந்தத் தவறை, பொது முடக்கம் அமலில் இருக்கும்போதே திருத்திக்கொள்ளவும் துவங்கி இருக்கின்றன மாநில அரசுகள். தனியார் மருத்துவமனைகளையும் நோய் எதிர்ப்புப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும். இப்போது செய்வதை இதை இன்னும் பெரிய அளவில் செய்யவேண்டும். இல்லையென்றால் பொது முடக்கம் முடிந்த பிறகு அரசு மருத்துவமனைகளை நோக்கித் திரளாக வரும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது.

Leave a Reply