Posted on Leave a comment

மகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

(பொறுப்புத் துறப்பு: இந்த விஷயத்தில் பல்வேறு இடங்களில் கேள்விப்பட்ட, படித்த, பார்த்து அனுபவித்த விஷயங்களை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி நான் ஒன்றும் ஒரு தில்லாலங்கடி எழுத்தாளர் இல்லை. இன்னும் ஆகவில்லை என்று தன்னாகத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.)

அனுதாபம் / பரிவு என்பது ஒரு வினோதமான விஷயம்; நீங்கள் இதைத் தேடி நாடும் பட்சத்தில், உங்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும், உங்கள் மரியாதையையும் இழப்பீர்கள். ஆனால், வேறு மூன்றாம் நபருக்காக நீங்கள் இதைப் பெற முயலும்போது நீங்கள் புகழ் பெற்றவராக / செல்வந்தராக வாய்ப்புண்டு.

வெற்றிகரமான கதைசொல்லிகள் (திரைப்படத் துறை / எழுத்துத் துறையில் இருப்பவர்கள்) இதை அறிவார்கள். அதனால்தான் உலகம் முழுவதுமே வெற்றி பெறும் / பெற்ற படைப்புகள் (கிட்டத்தட்ட) எல்லாமே அனுதாபம் / பரிவு போன்ற உணர்வுகளை அதனுடைய மையக்கருவாகக் கொண்டிருக்கும்.

மஹாபாரதம் / ராமாயணம் இரண்டுமே இத்தகைய உணர்வுகளை மையக்கருவாகக் கொண்டவைதாம்.

படைப்பின் ஒவ்வொரு முக்கியத் திருப்பத்திலும், இந்த படைப்புக் கர்த்தாக்கள் உங்களை ஏதாவது ஒரு பக்கம் அனுதாபம் கொள்ள வைத்துவிடுவார்கள். இதற்கு ஒரு சமீபகால உதாரணம், ஹாரி பாட்டர் கதைகள்.

ஹாலிவுட்டில், கடந்த 2019ம் வருடத்தில், மாபெரும் வெற்றி பெற்ற 20 ஹாலிவுட் படங்களில் 16 படங்கள் இவ்வகையைச் சார்ந்தது என்கிறார் மன்வீர் சிங் என்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்.

சரி, நீங்கள் ஒரு பெரும் வெற்றிகரமான படைப்பை உருவாக்க விரும்பினால், இந்தக் குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கலாம். வெற்றி நிச்சயம்!

ஒரு அட்டகாசமான வில்லன்

கதையின் நாயகன் / நாயகி மீது வாசகர்களுக்கு அனுதாபம் / பரிவு வரவழைக்க விரும்பினால், கதாநாயகனுக்கு எதிராக இருக்கும் வில்லன் சோடை போகக் கூடாது. அதற்காக, கதாநாயகனை தெனாலி பட கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்பட வேண்டிய கதாபாத்திரமாகப் படைக்க வேண்டாம்.

கதாநாயகனோ / நாயகியோ, அவர்களது கதாபாத்திரம் படிப்பவர்களைக் கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.

கிரேக்க வீரன் அக்கிலஸ், ஹாரி பாட்டர், மஹாபாரத அர்ஜுனன், கர்ணன், திரௌபதி, டேவிட் காப்பர்ஃபீல்ட், டார்ஸான், சுஜாதாவின் கணேஷ் / வசந்த் – இவர்கள் எல்லோருமே வாசகர்களால் எப்போதும் பெரிதும் விரும்பப்படுபவர்கள். யோசித்துப் பாருங்கள், இவர்கள் எப்போதுமே வெற்றி மேல் வெற்றி எனக் குவித்துக் கொண்டே போகமாட்டார்கள். அங்கங்கே தடுக்கும், தோல்வி வரும், வில்லன் அசகாய சூரனாக  இருப்பான். ஆனால், இதையெல்லாம் மீறித் துவண்டுவிடாமல் போராடிக் கடைசியில் வெல்வார்கள்.

இவர்கள் பார்ப்பதற்கு மட்டும் நல்ல தோற்றத்தோடு இல்லாமல், புத்திசாலிகளாகவும், ஏதேனும் / தனித்துவமான சிறப்பான திறமைகளைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இது மட்டுமல்லாமல் நியாயத்தின் பக்கம் நின்று போராடுபவர்களாக (பெரும்பாலும்) இருப்பார்கள்.

கதாநாயகன் / நாயகிக்கு அதிர்ஷ்டம் அதிகம் இருக்கக் கூடாது

கதையின் நாயகன் / நாயகி கதாபாத்திரத்தின் மீது படிப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்பட அவர்களது பெற்றோர்கள் இருவரையுமோ அல்லது குறைந்தபட்சம் ஒருவரையோ கதையின் ஆரம்பத்திலேயே போட்டுத் தள்ளிவிடவேண்டும். அல்லது அவர்களுக்கு உறவினர் என்று யாருமே இல்லை என்பதை முதலிலேயே நிலைநிறுத்த வேண்டும்.

யோசித்துப்பாருங்கள்:

~ ஹாரி பாட்டருக்குப் பெற்றோர் கிடையாது.

~ ஸ்பைடர் மேன் அதே போலத்தான்.

~ கணேஷின் பெற்றோர் / உடன்பிறந்தோர் / உறவினர் யாரென்றே சுஜாதா சொல்லமாட்டார்.

~ வசந்த் எவ்வளவு ஸ்மார்ட் என்றாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக அவனுடைய காதலி, குறிப்பிட்ட கதையின் இறுதியில் அவனை உதறிவிட்டுப் போய்விடுவாள். வசந்த் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளம் போல உடனே மீண்டும் மரமேறிவிடுவான். அடுத்த காதலியைத் தேட ஆரம்பித்துவிடுவான்.

~ அர்ஜுனன் தேர்ந்த வில்லாளி என்றாலும் கௌரவர்கள் விரிக்கும் சதிவலையில், அண்ணன் தருமன் பேச்சைக் கேட்பதால், மாட்டிக்கொள்வான்.

~ ஆலிவர் ட்விஸ்ட் ஒரு தெருவில் கிடந்து எடுக்கப்படும் அனாதை,

~ அயர்ன் மேன் பெரிய கோடீஸ்வரன், திறமைசாலி என்றாலும், கூடப் பிறந்தவர்கள் / பெற்றோர் என்று யாருமே கிடையாது.

இப்படி நிறைய உதாரணங்கள்!

கதாநாயகன் / நாயகி வாழ்க்கையில் நிறைய தடங்கல்களை உருவாக்குங்கள்

ஸ்பைடர் மேன் ஒரு சூப்பர் ஹீரோதான். ஆனால், அவனுக்கு ஏராளமான தடைகள், வில்லன்கள், கல்லூரியில் படிக்கும்போதே இடைஞ்சல் செய்ய நண்பர்கள்; இதுபோல, புகழ்பெற்ற நாயகர்கள் கதை எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.

இந்தக் கதைமாந்தர்கள் வாழ்வில் சிக்கல்கள் இருந்தால்தான், படிப்பவர்கள் பரிதாபப்பட்டுக் கதையுடன் ஒன்றிப் போவார்கள். இதுபோன்ற சிக்கல்களை இவர்கள் எவ்வாறு விடுவித்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள படிப்பவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள்.

விவேகம் முக்கியம்

நீங்கள் எழுதும் கதையின் நாயகன் / நாயகிதான் கதையை ஒட்டிப்பிடிக்கும் பசை போன்றவர்கள். அவர்கள் துன்பப் படட்டும். தீமைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஓடட்டும்.

படிப்பவர்கள் பார்வையில் கதைமாந்தர்கள் கடைசியில் அடையும் வெற்றி, அவர்கள் அதுவரை பட்ட துன்பங்களை எல்லாம் தூர எறிந்துவிடும். இருந்தாலும், சபரிமலை பக்தர்கள் சொல்வது போல ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்பதை மறக்கக்கூடாது.

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், கதையின் ஆரம்பம் முதலே கதாநாயகன் / நாயகி நிறைய இடர்களைச் சந்தித்து, அவற்றைத் திறமையாகச் சமாளித்துக் கடைசியில் வெற்றி பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த வெற்றியைப் படிப்பவர்கள் ருசிப்பார்கள்.

உலகெங்கிலும் பலவிதமான கதாநாயகர்களை எடை போட்டு அலசிப் பார்த்தோம் என்றால், பெரும்பாலானவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கல் இருக்கும். போராடி அதைத் தீர்ப்பார்கள்.

இந்தக் கதைநாயகர்களின் நோக்கம் பெரும்பாலும் என்னவாக இருக்கும்? யாராவது ஒரு சக்தி மிக்க வில்லனைப் போட்டுத் தள்ளி நீதியை, தருமத்தை, நியாயத்தை நிலைநாட்டவேண்டும் அல்லது கொடூர விலங்குகளுடன் போராடி அதைச் சாதிக்க வேண்டும்.

இத்தோடு நில்லாமல் கதையின் நாயகன் / நாயகி பார்ப்பதற்கு அழகாகக் கண்ணைக் கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.

இதை ஜோனாதன் காட்ஸ்சல் (Jonathan Gottschall) என்பவர் ஆய்வு செய்து கிட்டத்தட்ட இது உண்மை என்று ஊர்ஜிதம் செய்கிறார்.

அவர் மேலும் சொல்கிறார்: “பார்ப்பதற்குக் கண்கவரும் தோற்றம் தவிர இந்தக் கதை மாந்தருக்கு (குறிப்பாக கதாநாயன் / நாயகிக்கு) நிறைய நகைச்சுவை உணர்வு, சுறுசுறுப்பு, தாராள மனம் போன்ற நற்குணங்கள் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் எப்பேர்ப்பட்ட பயங்கர ஆயுதத்தையும் (பழக்கமில்லாவிட்டால் கூட) கையாளத் தெரிந்திருக்க வேண்டடும்” என்கிறார்.

கதைமாந்தரின் ஆரம்ப வாழ்வு சற்று சோகம் நிறைந்ததாக இருத்தல் அவசியம். உதாரணம், ஹாரி பாட்டர், ஸ்பைடர் மேன் போன்றோர். இவர்களின் கூடப் பிறந்தோரே (அண்ணன், அக்கா, தங்கை போன்றோர்) இவர்களைக் கிண்டல் செய்துகொண்டே (வளரும் வயதில்) இருக்க வேண்டும்.

இந்தக் கதைமாந்தரின் எதிராளிகளுமே (சிறுவயது முதலே) கெட்டிக்காரர்களாக, இவர்களைவிட பல விஷயங்களில் மேலானவராக இருப்பது முக்கியம். பள்ளியில் ஆசிரியர்கள் இந்தக் கதைமாந்தர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டம்தட்டுத்துதல் அவசியம்.

கதைமாந்தர்கள் சாகஸ விரும்பிகளாக இருப்பார்கள். ‘என்னதான் ஆகிறது பார்ப்போமே’ என்ற சவால்விடும் குணம் அவர்கள் ரத்தத்தில் இருக்கும்.

சுஜாதா அடிக்கடி அவருடைய கட்டுரைகளில் உலகிலேயே ஏழு வகையான கதைக்களங்கள் (Plots) மட்டுமே உள்ளன என்பார். அவை பின் வருமாறு:

  1. ஒரு மிகப்பெரிய தீயசக்தியை எதிர்கொள்ளுதல் (ஆரம்பகாலங்களில் டிராகுலா, மினோட்டார் போன்ற கொடிய விலங்குகள். பின்னாளில் மாமியார், அலுவலகத்தில் பாஸ், கணவனின் சின்ன வீடு போன்ற பெருந்தொல்லைகள்.)
  2. அசதியிலிருந்து வசதி (Rags toRiches) – அற்புத விளக்கு கிடைக்கப்பெறும் அலாவுதீன் / அசிங்கமான வாத்துக் குஞ்சு (Ugly Duckling) அழகான இளவரசியாக மாறுதல்)
  3. தேடுதல் வேட்கை : உண்மையைத் தேடி சலிக்காமல்பயணம் – வர்ஜில் (Virgil) என்ற உலகப்புகழ் பெற்ற ரோமானியக் கவிஞர் லத்தீன் மொழியில் பாடல் வடிவில் எழுதிய ஈனிட் (Aeneid) என்ற மிகப்பெரிய காவியம் (Epic). ஒவ்வொரு பாடலும் கிட்டத்தட்ட 10,000 வரி இருக்குமாம். இதன் கதாநாயகன் ஈனிஸ் ஒரு சாகஸப் பயணம் மேற்கொண்டு இத்தாலியில் பல இடங்களுக்குச் சென்று பல வித சாகஸங்கள் புரிவான். சிந்துபாத் ஒரு பாரசீக வீரன். இதே போல பல சாகஸப் பயணங்கள் மேற்கொள்வான். அந்த நாளைய பாரசீகம் – பெர்ஷியா – இன்றைய ஈரான் முழுவதும் சுற்றிவந்து எண்ணற்ற காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பான். அவனது 1001 இரவுகள் இன்றளவும் புகழ்பெற்ற சாகஸக் கதைகள்.
  4. நீண்டபயணமும் / வெற்றிகரமாகத் திரும்புதலும்: ராமர் லக்ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயர் ஒரு வானர சேனையோடு இலங்கை சென்று தீயவனான ராவணனை அழித்து சீதாபிராட்டியை மீட்டு வருதல். இன்னொருபுறத்தில் முழுவதும் கற்பனை எனும்போது ஆலிஸ் ஒண்டர்லாண்ட் சென்று திரும்புதல் பற்றிச் சொல்லலாம்.
  5. சுபமானமுடிவு / காதல் கதை – ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
  6. சோக முடிவு: ரோமியோ / ஜூலியட், ஃபாஸ்ட் (Faust) போன்ற பல படைப்புகள்.
  7. மறு / புனர்ஜன்மம்: தவளை குறிப்பிட்ட இளவரசனின்தொடுகையால் அழகான இளவரசியாக மாறுவது, கணவரின் சாபத்தால் கல்லான அகலிகை ராமர் பாதம் பட்டவுடன் பழைய உருவத்துக்கு மீள்வது

மேற்குறிப்பிட்ட வகைகளில் சோக முடிவுள்ள காப்பியங்கள் மற்றும் கதைகள் தவிர மற்ற வகைகள் எல்லாமே படிப்போரின் / கேட்போரின் அனுதாபம் (sympathy) பெறக் கூடியவகையாக அமைந்து விடுகின்றன. இந்த வகைப் படைப்புகளில் எல்லாமே, கதைமாந்தர் ஒரு குறிக்கோளுடன் எதிரியை அழித்து, நிறைய தடங்கல்களைச் சந்தித்து, நிறைய போர்களைப் புரிந்து, கடைசியில் விரும்புவதை அடைவதாக வரும்.

ஒரு புத்தகத்தை / திரைப்படத்தை பெருவெற்றி அடையச் செய்வதற்கு, மேற்குறிப்பிட்ட மன்வீர் சிங் என்ற ஹார்வார்டு பல்கலை கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மட்டும் இதுபோன்ற வழிமுறைகளைச் சொல்லவில்லை.

புகழ்பெற்ற ஆங்கில திகில் கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங் தன்னுடைய On Writing (2000) என்ற புத்தகத்தில் இதே போல நிறைய ஐடியாக்கள் தருகிறார். ஜான் யார்க் என்பவர் தன்னுடைய Into the Woods (2013) என்ற புத்தகத்திலும், ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோன் குர்விச் என்பவர் தன்னுடைய The Origins of European Individualism (1995) என்ற புத்தகத்திலும், பார்பரா தாடென் என்பவர் தன்னுடைய The Maternal Voice in Victorian Fiction (1997) என்ற புத்தகத்திலும், மேலும் பல எழுத்தாளர்கள், தங்களுடைய புத்தகங்களில் இதே விஷயங்களைச் சற்றே அங்கங்கே மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

(நன்றி: மேற்குறிப்பிட்ட நூல்கள் / எழுத்தாளர்கள் / திரைப்படங்கள்) 

Leave a Reply