Posted on Leave a comment

கருப்பர் கூட்டமும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் | ஓகை நடராஜன்

கருப்பர் கூட்டம் என்ற ஒரு கூட்டம், அதைக் கும்பல் என்று கூடச் சொல்லலாம், சிலகாலமாக இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதற்காக யூடியூப் காணொளி தளத்தை நடத்தி வந்திருக்கிறது. அன்மையில் கந்தசஷ்டி கவசத்தை ஏகத்துக்கும் கிண்டல் செய்து, எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டிருக்கிறது. இது இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் இதைப் பெரும்பாலான இந்துக்கள் யாரும் பார்ப்பதில்லை. இதைப் பார்ப்பவர்கள் எல்லாம் திக, திமுக, கம்யூனிஸ்ட் கும்பல்கள்தான். இதைப் பார்த்தாலும் என்னைப் போலப் பொருட்படுத்தாமலேயே மற்ற அனைவரும் சென்றுவிடுவார்கள்.

இதைப் பொருட்படுத்தி, அதற்கு விளம்பரம் கொடுப்பதைவிட, கண்டும் காணாமல் இருந்து விடுவது சாலச் சிறந்தது என்ற எண்ணம், இதற்கும் இதேபோன்ற பல தளங்களுக்கும் பொருந்தும். இவற்றின் பெயர்களைக் கூட யாரும் நினைவில் வைத்துக் கொள்வதே இல்லை. ஆனால் இப்போது மாரிதாஸ் அவர்கள் செய்த சில ஊடகங்கள் மீதான ஆய்வின்போது ‘இந்தக் காணொளியை மட்டும் இவர்கள் செய்வதோடு நிற்கவில்லை, இது தொடர்பாகப் பல வில்லங்க வேலைகளையும் செய்து வருகிறார்கள்’ என்பது புரிந்து போனது. அதனால்தான் இப்போது இவர்கள் மீது வெளிச்சம் பாய்ந்து, தொடர்பானவர்கள் கைது வரை சென்றிருக்கிறது.

ஆண்டாள் பிரச்சினைக்குப் பிறகு ஏற்பட்ட ஓர் இந்து எழுச்சியை விடவும் மிகப் பெரிய எழுச்சி, பல தரப்பான இந்துக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெரிய, நீண்டகால பலன் இந்துக்களுக்கோ அல்லது ஊடக தர்மத்துக்கோ விளையும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட, அதற்கான தொடக்கமாக இது இருக்கலாம் என்கிற நம்பிக்கையை நிச்சயம் தருகிறது. அந்த வகையில் இது மிக முதன்மையான, பேசப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.

கருப்பர் கூட்டம் தொடர்பான நிகழ்வு நமது அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பார்ப்போம்.

திமுக

இந்த நிகழ்வால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதும் பாதிக்கப்படப்போவதும் திமுகதான். திமுகவுக்கு ஒரு குறைந்தபட்ச பாதிப்பு, நீண்டகால அடிப்படையில் இருந்தே தீரும் என்ற அளவுக்கு நிகழ்வுகள் சென்றுவிட்டன. மக்கள் மத்தியில் திமுகவைப் பற்றிய எண்ணம், அதன் இறை வெறுப்பு, பிராமணக் காழ்ப்பு போன்ற கொள்கைகளால், இவர்கள் இப்படித்தான் என்ற அளவில் பதிந்து போயிருக்கிறது. அதைக் கணக்கில் வைக்காமலேயே அவர்களை ஏற்பதையோ நிராகரிப்பதையோ மக்கள் செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது இவர்கள் எப்போதுமே இப்படித்தான் என்ற நிலையிலிருந்து, இவர்கள் நாம் நினைத்ததைவிட மிக மோசம் என்ற நிலைக்குப் போவார்கள். நாங்களும் இந்துக்கள்தான், எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை – என்று திமுகவினர் கதறுவதைப் பார்த்தே இது எந்தளவு அவர்களைக் கலக்கி இருக்கிறது என்பது புரிகிறது.

ஆரம்பத்திலிருந்து மாரிதாஸ், அவர்களை நோக்கித் தன் தீர்க்கமான அம்புகளை வீசும்போது, திமுக அதை எதிர்கொண்ட விதம், சிறுபிள்ளைத்தனமாக, எந்தவித அறிவுக்கூர்மையின் சாயல்கூட இல்லாமல் இருந்திருக்கிறது. இப்போது, ஓர் அரண்டவன் தன்மையில் இருக்கிறார்கள். கருணாநிதி தன்னுடைய தீவிர அரசியல் செயல்பாட்டுக் காலகட்டத்தில் இதை எப்படி எதிர்கொண்டு இருப்பார் என்று யோசித்தால், நிச்சயமாக இப்போதைய திமுகவினர் செய்வது போல இருக்காது என யூகிக்கலாம். இது இன்னொரு விஷயத்தையும் வெளிப்படுத்துகிறது. திமுகவில் இருந்த ஒரே புத்திசாலி கருணாநிதி மட்டும்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவருடைய சாமர்த்தியத்திற்கு மற்ற திமுகவினர் அனைவரும் துணை செய்து, அந்தக் குடையின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதும் இப்போது புரிகிறது.

இப்போது சாதுரியமாக இயங்கும் தலைமையும் இல்லை, துணைவர்களும் இல்லை. இந்த நிலை, உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு ரயில் வண்டியின் எஞ்சினை நிறுத்திய பிறகும் அதன் வேகத்திலேயே ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம் நமக்கு இருக்கும் அல்லவா, அதைப் போலத்தான் திமுக இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. மாரிதாஸ் நிகழ்வால் அந்த வேகத்திற்கும் ஒரு வேகத் தடை ஏற்பட்டிருக்கிறது. திமுகவை ஒரு நாற்சந்தியில் நிறுத்தி, நிச்சயமாக இனிமேல் இந்து எதிர்ப்பு மற்றும் இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பாதையை விடுத்து, வேறு பாதையில் போக வேண்டும் என்ற அளவில் யோசிக்க வைத்திருக்கிறது. அனேகமாக அவர்கள் இந்து எதிர்ப்புப் பாதையில் இனிமேல் போவது என்பது இயலாத காரியம்.

அதிமுக

அதிமுக இதை ஒரு தொந்தரவாகத்தான் பார்க்கிறது. திமுகவைச் சாடுவதற்கான ஒரு விஷயமாகவும் அதிமுகவுக்கு இது இல்லாமல் போய்விட்டது. மேலும் சிறுபான்மையினரைக் குஷிப்படுத்தி, அவர்களை எப்படி இன்னும் தாஜா செய்வது என்கிற வழிமுறைக்கும் உதவாமல் போய்விட்டது. அதிமுக செய்வதறியாமல் நகர்கிறது. அதற்கு ஒரு பெரிய தத்துவம் இப்போது கைகொடுக்கும், அது வேறொன்றுமில்லை. ‘இதுவும் கடந்து போகும்’!

பாஜக

உண்மையில் இந்த நிகழ்வு மிகப்பெரிய அனுகூலத்தை, மிகப்பெரிய ஒரு ஆயுதத்தை பாஜகவினருக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அதன் காரணம் – பாஜக எதைச் செய்தாலும் அது தவறு, உள்நோக்கம் கொண்டது, சமுதாயத்தைப் பிரிப்பது, மத நல்லிணக்கத்தைக் கெடுப்பது, மதக் கலவரத்துக்குத் தூண்டுகோலாக இருப்பது – என்ற அளவில் ஒரு பிரசாரத்தைத் தொடர்ந்து இடைவிடாமல் திக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், தமிழ்த் தேசிய கட்சிகள், இவர்களுடன் கூட அவ்வப்போது தெரிந்தும் தெரியாமலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் செய்துகொண்டே இருக்கின்றன. இதனால் எதைச் சொன்னாலும், அதை ‘இந்தக் கண்கொண்டு மட்டுமே பார்க்கும்படிக்கு’ மக்களைப் பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பழக்கத்தின்படியே இதையும் மக்கள் பார்த்து விடுவார்களோ என்ற அச்சப்பட வேண்டிய அவசியம், பல பாஜக தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தாலும், சிலருக்காவது இருக்கிறது.

ஆகவே இப்பொழுது அதை ஓரளவுக்குச் சரியாகக் கையாள, இயற்கையான எதிர்ப்பை வரவழைத்து, அதன் பின் அந்த எதிர்ப்புக்குத் துணை போவது போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது பாஜகவுக்கு பலமும் இல்லை பயனும் இல்லை என்ற நிலையில் இப்போது இருக்கிறது. ஆனால் இதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. மிகப்பெரிய ஒரு ஆயுதமாக, மிகப்பெரிய ஒரு பலமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஒரு நிகழ்வு நடந்தாலும், அதைப் பயன்படுத்த முடியாத ஒரு துரதிர்ஷ்டவசமான நிலையில்தான், மிகுந்த தயக்கத்துடனும் வருத்தத்துடனும்தான் இதைச் சொல்கிறேன், தமிழ்நாடு பாஜக இருக்கிறது. வருங்காலங்களில் இதுபோன்ற பலன்களை ஏற்படுத்தும் நிகழ்வுகள் ஏற்பட்டாலும் அதை பாஜகவால் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்றும் தெரியவில்லை. இந்த ஓர் உருமாற்றம் வழக்கமாக நடப்பதற்கு வெகு காலம் பிடிக்கும் போல் தெரிகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியைப் பற்றி எந்த ஒரு விஷயத்திலும் சில எழுத்துக்களையாவது எழுதுவேண்டும் என்று கூட யோசிக்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி போய்விட்டது. இந்த விஷயத்திலும் சர்வ நிச்சயமாக அப்படித்தான்.

இதர கட்சிகள்

கம்யூனிஸ்டுகளுக்கு, தங்களிடமிருந்து வந்த மாரிதாஸ், தங்கள் பாணியிலேயே தங்களைத் தாக்குவதைத் தாங்க முடியவில்லை. அவர் சாதியைக் கூறி, குடும்ப விஷயங்களை வெளிப்படுத்தி, அதுவும் உப்பு சப்பில்லாமல், பொய்களின் தோரணமாக அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் தொண்டர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் இன்னும் ‘கம்யூனிஸ்டுகள் ஒரு காலத்தில் காட்டிய பொன்னுலகத்தை’ கண்ணுக்குள் வைத்து கொண்டு, வேறு எதையும் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகளும் ஆப்பசைத்த குரங்கு போல எதுவும் பேசாமல் சிலகாலம் இருந்து, இப்போது கருப்பர் கூட்டத்தை எதிர்த்து, அதே நேரத்தில் பாஜகவினரையும் எதிர்த்து, அதேநேரத்தில் திராவிடர்களையும் எதிர்த்து – ஒரு வேடிக்கை வினோத நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வருங்காலம் கஷ்ட காலம்தான்.

இந்த நிகழ்வு அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒரு தரப்பு, பொதுமக்கள் தரப்பு. ஏனென்றால் முருகன் தமிழ்நாட்டின் இஷ்டதெய்வம். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு இந்துக் கடவுள் ஒவ்வொரு விதத்தில் பிரபலமாகவும் இஷ்ட தெய்வமாகவும் இருப்பதைப்போல, தமிழ்நாட்டில் முருகன் இஷ்ட தெய்வம். அதனால், முருகன் மேலேயே கை வைத்த காரணத்தினால், சாதாரண பக்தர்கள் கூடக் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் தமிழ்பேசும் மலேசியா, இலங்கை போன்ற மற்ற நிலங்களிலும் கடும் எதிர்ப்புக்கு இந்தக் கூட்டம் உள்ளாகியிருக்கிறது. இனிமேல் இறை நிந்தனை செய்பவர்களுக்கு ஆதரவு என்பது தமிழ்நாட்டிலும் தமிழ்பேசும் நிலங்களிலும் சர்வநிச்சயமாகக் குறைந்துபோகும். அதுமட்டுமல்ல, இன்னும் இன்னும் தேய்ந்து கொண்டே இருக்கும். அந்த விதத்தில் கருப்பர் கூட்டத்திற்கும் மாரிதாஸுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது.

நாம் எத்தனையோ கொலைகாரர்களைப் பார்த்திருப்போம். பஞ்சமா பாதகங்களை ஒரேநேரத்தில் செய்யக்கூடியவர்களைப் பார்த்திருப்போம். அவர்களுக்கு இணையாக வைக்கக்கூடிய ஒரு கூட்டமாக இந்த இறைமறுப்புக் கூட்டம் இருந்திருக்கிறது என்பதை நாம் உணர்வோம். அறிவுக்கும் அன்புக்கும் பண்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத வாதங்களை, நடுத்தெருவில் ‘கழிக்கும்’ வளர்ந்த மனிதனைப்போல இவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்னவென்றால் இப்படி இவர்கள் தொடர்ந்து செய்து வந்தாலும், இவர்களையும் பொருட்படுத்தி இவர்கள் சொல்வதையும் கேட்கக்கூடிய மனநிலையில் தமிழக மக்கள் இருந்ததுதான். இதற்குக் கூறப்படும் எந்தக் காரணமும், இந்தச் செயலுக்கும் இவர்கள் நோக்கத்துக்கும் எள் முனை அளவு கூடச் சமாதானம் செய்யாது. அதனால், ஈவெரா என்ற மனிதர் பேசிய பல பேச்சுகளை, பொதுமக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டிய அளவில், முறையில் கொண்டு சென்றால், அதாவது இப்போது மாரிதாஸ் செய்வதைப்போலச் செய்துவிட்டால், ஒவ்வொரு தமிழனும் ஈவெராவின் உண்மையான நிறத்தை உணர ஆரம்பித்துவிடுவான். அதற்கான காலம் கனிந்து விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் அந்தக் காலத்தை நம் கண்ணால் காணும் நிலைக்கு இப்பொழுது வந்திருக்கிறோம்.

மாரிதாஸ் நடத்தியிருக்கும் இந்த அதிசயத் தாண்டவம் மிகவும் முக்கியமானது, பாராட்டப்படவேண்டியது. எல்லாம் நன்மைக்கே!

Leave a Reply