Posted on Leave a comment

வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு

(Listopad – A Memory of the Velvet Revolution)

செக்கொஸ்லொவேகியாவில் 1989ம் ஆண்டு நடைபெற்ற மென்பட்டுப் புரட்சி என்று அறியப்படும் Velvet Revolution சமயத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் லிஸ்டொபாத். ஏறத்தாழ ஒரு மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் அதிரடிப்படைப் போலிஸின் அச்சுறுத்தல்களுக்கிடையே, அமைதிப் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி, தேசிய கீதம் பாடி, ‘ரஷ்யாவே வெளியேறு’ என்று கோஷமிட்டு, விடுதலை வேண்டிப் போராடினார்கள். அந்தச் சமயத்தில் செக்கோஸ்லோவேக்கியாவில் ஆட்சி எப்படி இருந்தது, மக்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று பேசுகிறது திரைப்படம்.

பிராக் நகரில் கம்யூனிசத்தின் கடைசிக்காலத்தில் மூன்று நண்பர்கள் நல்ல வாழ்க்கையைத் தேடுகிறார்கள். அதேநேரம், அவர்களிடத்தில் பீர் குடிப்பதும், பெண்களின் பின் அலைவதுமான செயல்களுக்கும் பஞ்சமில்லை. மேற்கத்தியப் பகுதிக்குத் தப்பவேண்டும் என்ற எண்ணத்துடன் பல முயற்சிகளையும் செய்கிறார்கள். வேலை என்று பெரிதாக ஏதுமில்லை. படிப்பு என்று சொல்லிக் கொள்ளும்படி ஏதும் கற்றுத் தரப்படுவதில்லை. எல்லாம் ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்ட காலாவதியான விஷயங்களை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இசை கேட்பது கூட ரஷ்யாவில் இருந்து வரும் பட்டியலில் உள்ள இசைக்கு மட்டுமே அனுமதி. ஐரோப்பாவில் வேறு கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளின் இசை கேட்டால் போலிஸ் இசைத் தட்டுக்களை உடைத்து, அவற்றை வைத்திருந்தவர்களையும் இசை கேட்டவர்களையும் அடித்துச் சித்திரவதை செய்யும்.

மூவரில் ஜிரி என்பவன் ஒவ்வொரு வாரமும் பனிபடர்ந்த ஊசியிலைக் காடுகளுக்குச் சென்று அங்கே மேற்கத்திய இசைத்தட்டுகளை மறைத்துக் கொண்டுவரும் நபர்களுடன் பேசி புதிய இசைத்தட்டுகள் வாங்கிவருவான். அவற்றை கேசட்டுகளில் பிரதியெடுத்து அவர்களுக்குத் தருவதும் தனக்கு ஒரு பிரதி எடுத்துக் கொள்வதும் அவனது வாடிக்கை. இந்த வேலை செய்வதால் இசைத்தட்டுக்குப் பணம் தரவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் சோவியத் இளைஞர் விழாவுக்கு இசைப்பயிற்சி என்று வயலின் உள்ளிட்ட கருவிகளுடன் பொதுவில் கம்யூனிச இசை பயில்பவர்கள்.

அடுத்த நண்பன் ஓண்ட்ரேஜ். இவன் ஒரு ஓவியக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வெறும் ஓவியம் மட்டுமின்றி காணொளிப் படங்கள், அனிமேஷன், வித்தியாசமான கோணத்தில் புகைப்படங்கள் என்று எடுக்க விழைபவன். ஆனால் இவனது தாத்தா கம்யூனிசத்தை எதிர்த்தார் என்பதால் இவனுக்கு ஓவியக்கல்லூரியிலோ கலை கற்கும் எந்த இடத்திலுமோ அனுமதி இல்லை. இவன் கேமரா வாங்க அரசு அனுமதிக்கவில்லை. அட்டையில் கேமரா போலச் செய்து அதில் காட்சிகளைப் பார்த்து அவற்றை வரைந்து இதைப் புகைப்படமோ விடியோவோ எடுத்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து வரைவான். கல்லூரியில் இவன் ஓவியம் வரைந்தால் பேராசிரியர்கள் கிழித்தெறிவார்கள். அரசு சொன்னதைப் படி என்று அறிவுறுத்தப்படுவான். அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்தினால் என்ன செய்யவேண்டும் என்று அடிக்கடி நடக்கும் ஒத்திகையிலும் இவர்கள் பங்கெடுக்காமல் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

அடுத்தவன் பெத்ரே. இவனது தந்தை இத்தாலியில் கட்டடக்கலை வடிவமைப்பு படித்த பட்டதாரி. ஆனால் கம்யூனிசம் பிடிக்காமல் இத்தாலியிலேயே இருக்க விரும்பியவரை நல்ல வார்த்தை சொல்லி நாட்டுக்கு அழைத்து, கொத்தனார் வேலைக்கு அனுப்பியது அரசாங்கம். இவனது தாயார் பிரிந்து சென்ற பிறகு பாவலும் தந்தையும் மட்டுமே வீட்டில். தந்தை, பழைய நினைவுகள், துரோகங்கள் என்று எதையும் மறக்க இயலாமல் பியர், பெண்கள் என்று திரிபவர். இவர்கள் பியர் அருந்தும் இடத்தில் கூட கட்சியின் கங்காணி ஒருவர் வந்து கண்காணிக்கிறார்.

அப்போது 17 வயது செக்கோஸ்லொவேகிய ஐஸ் ஹாக்கி விளையாட்டு வீரர் கனடா நாட்டில் தஞ்சம் கேட்ட செய்தி தெரியவருகிறது. விளையாடச் சென்ற போது போலிஸில் சரணடைந்து தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சி தருகிறது. பெத்ரே ஐஸ் ஹாக்கி அணியில் அதுவும் கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் அணியான Red Star அணியில் ஆடுபவன். அவனது பெரியப்பா அந்த ஹாக்கி குழுவின் இயக்குநர். ஆனாலும் அப்பாவைப் போல இவனும் கட்சிக்கு எதிராகப் பேசுவானோ என்று கண்காணிக்கப்படுகிறான்.

நண்பர்கள் மூவரும் தனியான ஒரு ஆற்றுப் பாலத்துக்குச் சென்று ‘கம்யூனிஸ்டு ஒழிக’ என்றும் ‘முட்டாள் கம்யூனிஸ்டுகள்’ என்றும் கூவுகிறார்கள். இந்நிலையில் மார்டினா என்ற பெண்ணை ஜிரி காதலிப்பதாகச் சொல்கிறான். ஆனால் அவளுடன் பேசத் தயங்குகிறான். ஒருநாள் அவனது மேற்கத்திய இசைப்பதிவுக் கூடத்துக்கு வருகிறாள் மார்டினா. அவன் வயலினில் வாசிக்கும் இசை நன்றாக இருப்பதாகச் சொல்கிறாள். இசைத்தட்டில் உள்ளதோடு சேர்ந்து பயில்வதாகச் சொல்கிறான் ஜிரி. அவளுக்கு ஜாஸ், மேற்கத்திய பாரம்பரிய இசை, மடோனா பாடல் என்று காட்டுகிறான். கேசட்டில் பதிந்து தருகிறான்.

சுதந்திரத்துக்கான முதல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அங்கே போகிறார்கள் நண்பர்கள். போலிஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. போராட்டத் தலைவர் வருகிறார். அருகில் உள்ள் வீடுகளில் இருந்து பலர் பார்க்கிறார்கள். சுதந்திர சமுதாயம் பற்றி உரையாற்றுகிறார். பொருளாதாரச் சிக்கல் பற்றிப் பேசுகிறார். போலிஸ் உடனடியாகக் கலைந்து போகச் சொல்கிறது. கலவரத்தை அடக்கும் அதிரடிப்படை வந்து அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அவர்கள் வெறும் கைகளோடு இருக்கிறோம் என்கிறார்கள். ஆனாலும் அவர்களை அடித்து விரட்டுகிறது. நண்பர்கள் மூவரும் வேறு சில போராட்டக்காரர்களும் அருகில் உள்ள கடையில் ஒளிந்து கொள்கிறார்கள். கடைக்காரர் சிலருக்குத் தின்பண்டங்கள் கொடுத்து எல்லோரையும் அங்கே இருக்க வைக்கிறார். போலிஸ் வருகிறது. கடைக்காரரை மிரட்டி அனைவரையும் வெளியே அனுப்புகிறது. ஒருவனைப் பிடித்துப் போலிஸ் கேப்டன் அடிக்கிறார். மற்றவர்களை எச்சரித்து அனுப்புகிறார்.

பெத்ரே தந்தையிடம் மேற்கத்திய நாடு ஒன்றுக்குக் குடியேறுவது பற்றிப் பேசுகிறான். அவன் தந்தை ‘போவதும் கடினம், அங்கே வாழ்வைத் தொடங்கி, நிரூபித்து நின்றாலும் திரும்பி சொந்த நாட்டுக்கு வரவே முடியாது’ என்கிறார். ‘கம்யூனிஸம் வெகுகாலம் தாக்குப் பிடிக்காது. பொறுமையாக இரு’ என்கிறார். ஆனால் அவரது அண்ணன் கம்யூனிஸ்டு கட்சியில் பதவியில் உள்ள ஆள். அதனால் கண்காணிப்பு அதிகம். கட்சி அவரையும் கண்காணிக்கிறது என்கிறார் பாவலின் தந்தை. ஊரில் கண்காட்சிக்குப் போகிறார்கள் நண்பர்கள். அங்கே செவ்விந்தியர்கள், எஸ்கிமோக்கள் பற்றி பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஜிரி ஓவியம் வரைய இது நல்ல இடம் என்கிறார்கள். அவனோ அனிமேஷன் படம் தயாரிக்க முனைகிறான்.

மறுநாள் பெத்ரே மார்டினாவைத் தொடர்ந்து ஒரு வீட்டுக்குப் போகிறான். அங்கே சிற்பங்கள், ஓவியங்கள் என்று பலவும் உள்ளன. அது அவர்களது குடும்பக் கலைக்கூடம் என்கிறாள் மார்டினா. மார்டினா ஓண்ட்ரேஜின் உறவுக்காரி என்று அப்போது பெத்ரே தெரிந்து கொள்கிறான். தன் தந்தைக்கு இந்தக் கலை விஷயங்கள் புரியாது, அவர் சாதாரண கொத்தனார், போதிய கற்பனை வளம் கிடையாது என்கிறான் பெத்ரே. ஓன்ட்ரேஜின் தந்தை செய்து வந்த கலைப்படைப்புகள் பிற்போக்கானவை என்று சொல்லி அவற்றை அழித்து அவரை மேற்கொண்டு கலைப்படைப்புகள் செய்யத் தடை விதித்தது கம்யூனிச அரசு. காரணம் அரசுக் கலைத்துறை உத்தரவுப்படி அவர் படைப்புகளை உருவாக்கவில்லை. சொந்தமாகக் கற்பனை செய்வது ரஷ்ய உத்தரவை மீறுவதாகும். ரஷ்ய உத்தரவை மீறினால் கம்யூனிஸ்டு சட்டம் விடுமா என்ன? அவரது குடும்பமே கலை சம்பந்தப்பட்டு எதுவும் செய்யக்கூடாது என்று தடை போட்டது அரசு. கலை சம்பந்தப்பட்ட படிப்பில் ஒண்ட்ரேஜை சேர்த்துக் கொள்ளவும் தடை போட்டது அரசு. மார்டினாவுக்கும் வேறு படிப்புத்தான். உடைக்க முடியாதபடி சிமெண்டில் சிலைகள் செய்தார் ஒண்ட்ரேஜின் தந்தை. ஒருநாள் போலிஸ் வந்து வெடிவைத்து அவற்றைத் தகர்த்துவிட்டு, இனி ஏதாவது படைப்பு வேலைகள் செய்தால் சிறை என்று எச்சரித்தனர்.

அன்று மாலை அதிருப்தியாளர் ஒருவர் விடுவிக்கப்பட்டார் என்று செய்தி வருகிறது. அவர் அரசுக்கு எதிராகச் சில கேள்விகள் கேட்டார் என்பது குற்றச்சாட்டு. ஆனால் சர்வதேச அழுத்தம் காரணமாக ரஷ்யா சொல்லி அவர் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். இதை விமர்சித்து ஒண்ட்ரேஜ் ஒரு ஓவியம் வரைந்து அதைச் சட்டம் போட்டுப் படகில் வைத்து ஆற்றில் விடுகிறான். போலிஸ் கேப்ட்ன் இந்த மூவரையும் கண்காணிக்கிறார். அப்போது மார்டினாவும் ஜிரியும் ஆற்றின் கரையில் பெஞ்சில் அமர்ந்து ஓவியங்களை ரசிக்கிறார்கள். அப்போது ஒண்ட்ரேஜ் விட்ட படகு வருகிறது. அதில் உள்ள விமர்சன ஓவியத்தைப் பார்த்த கேப்டன் ஓடிப்போய் அதைத் தண்ணீரில் தள்ள முயன்று, மரத்தில் ஏறி குச்சி வைத்து அடிக்கப் பார்த்து, முடியாமல் தண்ணீரில் விழுந்து தத்தளித்து எழுந்து கரைக்கு வருகிறார். மார்டினாவும் ஜிரியும் அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஓண்ட்ரேஜ் கிறுக்குத்தனமாக ஆபத்தான வேலை செய்தான் என்கிறான் பெத்ரே. மார்டினா அவன் அதையாவது செய்தானே என்கிறாள்.

ஜிரியும் பெத்ரேவும் கற்பனை உலகில் இசையும் விளையாட்டுமாக வாழ்வதாகச் சொல்கிறாள். திருட்டுத்தனமாக இசை கேட்டுக் கொண்டு போலிசுக்குப் பயந்து அலைவதால் விடுதலை கிடைக்காது என்கிறாள். அவர்கள் இருவரும் எல்லாவற்றைக் குறித்தும் பிராது வாசிக்கிறார்கள், ஆனால் மாற்ற எதுவும் செய்வதில்லை என்கிறாள். வாய்ச்சொல் வீரர்கள் என்று சொல்லிவிட்டு ட்ராம் ஏறிப் போகிறாள் மார்டினா.

ஓரிரு நாட்களில் பாவலின் தந்தையும் பெரியப்பாவும் பெரியப்பா வீட்டில் தர்பூசணி சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெரியப்பா பாவலின் தந்தையை ஹாக்கி விளையாடாமல் பெண்களைத் துரத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார். அவர் தனக்குப் பிடித்த வேலையைச் செய்யவிடவில்லை என்று போகிறார். தர்பூசணிகளில் வித்தியாசமாக ஏதோ தெரிகிறது என்கிறான் பெத்ரே. தர்ப்பூசணிகளில் ஓட்காவை உட்செலுத்தி வளர்ப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்று காட்டுகிறார். அப்போது அங்கே வரும் பாவலின் தந்தை போல்ஷெவிக் புரட்சி திட்டமிடப்பட்டது, தன்னால் நிகழ்ந்த நிகழ்வு அல்ல என்கிறார். பெரியப்பா யான் மறுக்கிறார். உன் ஆசிரியர் என்ன சொன்னார் என்று கேட்க யாரோ தவறான தகவல் சொன்னதாகச் சொன்னார் என்கிறான் பெத்ரே. அவனது தந்தை ட்ராட்ஸ்கியின் புத்தகத்தில் அது திட்டமிடப்பட்டது என்று எழுதியதை பல்கலைக்கழகத்தில் படித்ததாகச் சொல்கிறார். மேற்கத்திய படிப்பு அவரை பாழடித்துவிட்டதாகவும் மகனையும் அவர் கெடுப்பதாகவும் பெரியப்பா திட்டுகிறார். பாவலின் தந்தையை அடித்துவிடுகிறார். அங்கிருந்து தந்தையை மிட்டுக் கொண்டு செல்கிறான் பெத்ரே.

மறுநாள் நண்பர்களுடன் திட்டமிட்டு பெரியப்பாவைப் பழிவாங்கப் போகிறான். அவரது தர்பூசணித் தோட்டத்தில் மருந்துப் புகை போட்டு அங்கிருந்து தர்பூசணிகளைத் திருடிச் சென்று தின்றுவிடுகிறார்கள். புகையில் சிக்கிப் பெரியப்பா யான் மூச்சுத் திணறி ஓடுகிறார். அன்று மதியம் கல்லூரியில் விடுதலைப் போராட்டத்தின் பகுதியாக காய்கறிகளுக்கு விடுதலை என்ற பெயரில் இலவசமாக காய்கறிகள் தருகிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவர் குழு போலிஸ் போல வேடமிட்டு அனுமதியில்லாமல் விற்கிறீர்கள் என்று சொல்கிறது. பல்கலைக்கழகம் மொத்தத்துக்கும் இது ஒரு தொடக்கமாக ஆகிறது.

ஓண்ட்ரேஜின் வீட்டுக் கலைக்கூடத்தில் நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சர்வ்தேச மாணவர் தினத்துக்குப் பதாகை தயாரிக்க வேண்டும் என்கிறாள் மார்டினா. பாவலும் ஜிரியும் வரவில்லை என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள். ஆனால் பெத்ரே திருட்டுத்தனமாக வீட்டுக்கு மீண்டும் வருகிறான். அங்கே அவனும் மோனிகாவும் முத்தமிட்டுக் கொள்வதைப் பார்க்கிறான் ஓண்ட்ரேஜ். பின்னணியில் செய்தியில் கிழக்கு ஜெர்மனியில் மக்கள் செக் பாயிண்ட் சார்லிக்கு வந்து ஹோனிக்கர் மேற்குக்கு ‘வாசலைத் திற’ என்று கிழக்கு ஜெர்மன் அதிபருக்கு எதிராகக் கோஷமிட்ட செய்தி வருகிறது. உடனே கவனம் திரும்பிய ஓண்ட்ரேஜ் அந்தச் செய்திக்கு, சுவர் உடைந்து இசைக் குறியீடுகள் காற்றில் மிதப்பது போல ஒரு அனிமேஷன் தயாரிக்கிறான்.

பாவலின் பெரியப்பா வீட்டில் போலிஸ் கேப்டன் வந்து தர்பூசணி தோட்ட சேதாரங்களைப் பார்த்து பேரழிவு என்று வர்ணிக்கிறார். ஹிப்பிக்கள் செய்திருப்பார்கள், பிடித்து என்ன செய்கிறேன் பாருங்கள் என்கிறார். கட்சி அதிகாரி ஒருவர் தனக்கு ஆட்களைத் தெரியும் என்கிறார். யாருக்கும் தெரியாமல் ஆவணம் ஏதுமின்றி இதை முடித்து விடச் சொல்கிறார் யான். போலிஸ் படகில் வந்த ஓவியத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார்கள். உறங்கிக் கொண்டிருக்கும் ஓண்ட்ரேஜை எழுப்பி அவனது ஓவியக் கோப்பை எடுத்துக் கிழித்து எறிகிறார் போலிஸ் கேப்டன். உன் குடும்பத்தைப் பார்த்தாலே ஒரு கலை அனுபவம் வருகிறது என்று நக்கலடிக்கிறார்.

வேறொரு இடத்தில் காட்டில் ஜிரி போலிஸில் மாட்டிக் கொள்கிறான். கையில் தடை செய்யப்பட்ட இசைத் தட்டுக்களுடன். ஒவ்வொரு இசைத்தட்டையும் போலிஸ் கேப்டன் ஹிப்பி பாடல்கள் அமெரிக்க அடிமைப்பாடல் என்று சொல்லி உடைக்கிறார். சிலவற்றை கார் கதவில் நசுக்குகிறார். தரையில் தேய்க்கிறார். பாவலை ஹாக்கி அணியில் இருந்து நீக்குகிறார்கள். பாவலின் தந்தை இன்று சோஷலிஸப் பொன்னுலகில் மற்றொரு பொன்னாள் என்று கிண்டலாகச் சொல்கிறார். அப்படித்தான் செய்வார்கள், இது பற்றிக் கவலைப்பட்டால் வாழ முடியாது என்கிறார். பழைய நினைவுகளை அசை போட்டபடி தனியறையில் இருக்கிறார். அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதங்களை பெத்ரே படிக்கிறான். பெத்ரே என்று அழைத்தபடி வரும் அவனது தந்தை இதைப் பார்த்து ‘பெண்கள் பற்றிப் புகழ்ந்து கவிதை எழுதாதே. பிற்காலத்தில் அசிங்கமாகும்’ என்கிறார். அவனை சமாதானம் செய்து அனுப்புகிறார்.

பெத்ரேவை மார்டினா சமாதானப்படுத்துகிறாள். தந்தை மேற்கத்திய உலகில் படித்ததற்குத் தன்னை இங்கே பழி வாங்குகிறார்கள் என்கிறான் பெத்ரே. இங்கேயே இருந்தால் ஓண்ட்ரேஜைப் போலத் தானும் பைத்தியமாகி விடுவேன் என்கிறான். ஓண்ட்ரேஜின் ஓவியங்கள் கிழிபட்டதைச் சொல்கிறாள் மார்டினா. உடனே ஜிரியைப் பார்த்து உஷாராக இருக்கச் சொல், என் பெரியப்பாவின் வேலை, அவர் என்னையும் ஓண்ட்ரேஜையும் தொடர்ந்து வந்தார் என்கிறான் பெத்ரே. உடனே அவனும் கிளம்பிப் போகிறான். வழியில் ஒரு கடையில் பியர் வாங்குகிறான். ஆனால் வெளியே கூட்டம் செல்வதைப் பார்த்து என்ன என்று கேட்க, ஊரின் மையப் பகுதிக்கு சுதந்திர ஊர்வலம் என்கிறார்கள். தந்தைக்கு போன் போட்டு அங்கே ஊர்வலத்தில் இருப்பதைச் சொல்கிறான். அவர் போலிஸ் இருப்பதால் ஆபத்து, உடனே வீட்டுக்கு வா என்கிறார். மறுக்கிறான் பெத்ரே. அவர் மகனைத் தேடிக் கொண்டு வருகிறார்.

ஊர்வலத்தில் முதல் வரிசையில் மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டு தேசிய கீதம், நாட்டுப் புறப்பாடல்கள் (தடை செய்யபட்டவை) பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறான் பெத்ரே. ஜிரியும் மார்டினாவும் ஓண்ட்ரேஜும் வருகிறார்கள். போலிஸ் புகுந்து அடிக்கிறது. பெத்ரேவைத் தூக்கிக் கொண்டு போய் அவனது பெரியப்பாவிடம் ஒப்படைக்கிறார் போலிஸ் கேப்டன். மற்ற இருவரும் மார்டினாவைத் தப்பிக்க வைக்கிறார்கள். பெரியப்பா பெத்ரேவை அடிக்கிறார். அங்கே வரும் அவனது தந்தை பெரியப்பாவை அடித்து வீழ்த்திவிட்டு மகனை மீட்டுக் கொண்டு போகிறார். அன்றிரவு அடிபட்ட போராட்டக்காரர்கள் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

மறுநாள் நண்பர்கள் கல்லூரி மைதானத்தில் சந்திக்கிறார்கள். ஊர்வலம் மொத்தமாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுவிட்டது என்று பேசிக் கொள்கிறார்கள். இதுதான் ஆரம்பம் என்கிறான் பெத்ரே. என்ன நடந்தாலும் நாட்டை விட்டுப் போகிறேன் என்கிறான். நண்பர்கள் கால்பந்து ஆடுகிறார்கள். ஆனால் அலெக்சாந்தர் டுப்செக் என்ற போராட்டத் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கம்யூனிசம் ஒழிக, சோவியத் ராணுவமே திரும்பிப் போ, தேவாலயம் தேவை என்று பல கோஷங்களுடன் மக்கள் போராடுகிறார்கள். வால்காவ் ஹேவல் என்பவர் சட்டமாற்றம், ஆட்சி மாற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறார். இறுதியாக சுதந்திரமாகத் தேர்தல் நடத்த அரசு ஒப்புக் கொள்கிறது. மூன்று நண்பர்கள், பெத்ரேவின் தந்தை உள்ளிட்ட பலரும் கொண்டாடுகிறார்கள்.

அரசு போக்குக் காட்டுவது போலிருக்க, போராட்டம் தொடர்கிறது. அரசு பதவி விலகுகிறது. வால்காவ் ஹேவல் தலைமையில் அரசு அமைகிறது. அவர் சீர்திருத்தங்களைச் செய்கிறார். ஜிரி மார்டினாவை கல்யாணம் செய்யக் கேட்கிறான். அவள் ஒப்புக் கொள்கிறாள். பெத்ரே ரயில் ஏறி மேற்கே போகிறான். அப்போது அவனது தந்தை ‘போராட்டம் மட்டும் நடக்கவில்லை என்றால் உங்களை எல்லாம் ஃபெயிலாக்கி இருப்பார்கள். மோசமான மாணவர்கள் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்’ என்கிறார்.

இதோடு படம் முடிகிறது. ஆனாலும் மக்கள் சிலர் பற்றிய குறிப்புகள் படங்களுடன் வருகின்றன.

பெத்ரே உலகம் சுற்றிப் பார்க்கிறான். கேட்டு மட்டுமே இருந்த ஊர்களை எல்லாம் சென்று பார்க்கிறான்.

அவனது தந்தை பாவல் இத்தாலிக்குத் திரும்பிச் சென்று தன் படிப்பைக் காட்டி கட்டட வடிவமைப்பாளர் ஆகிறார். தொழில் சிறப்பாக நடக்கிறது. ஒரு பாடகியைக் காதலிக்கிறார்.

தீவிர கம்யூனிஸ்டான பெத்ரேவின் பெரியப்பா யான் கம்யூனிசம் கிடக்கட்டும் என்று தூக்கிப் போட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து முதலாளியாகிச் சம்பாதிக்கிறார்.

போலிஸ் கேப்டன் பார்தாவும் அவரது உதவியாளரும் தனியார் செக்யூரிட்டியாக சம்பாத்தியத்தில் கொழிக்கிறார்கள்.

ஜிரி அவனுக்கு மேற்கத்திய இசையை ரகசியமாக அறிமுகப்படுத்திய நண்பன் ஓட்டோவுடன் ஒரு இசைக்கூடம் அமைக்கிறான். இசைத்தட்டுகள் கேசட்டுகள் விற்கிறான். தேர்தலில் வென்று பாராளுமன்றம் போகிறான்.

மார்டினா திரைப்படம் இயக்குகிறாள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்து பெரிய திரைப்பட விற்பன்னர் ஆகிறாள். மூன்று பிள்ளைகளை வளர்க்கிறாள்.

ஓண்ட்ரேஜ் அனிமேஷன் உள்ளிட்ட திரைப்பட தொழில்நுட்பங்களில் விற்பன்னராகிறான்.

*

கம்யூனிஸத்தின் அடக்குமுறைகளை அப்படியே கண்முன் நிறுத்துகிறது இத்திரைப்படம். இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் வாழ்பவர்கள், மேலே உள்ள திரைப்படத்தைப் பார்த்தால், கம்யூனிஸம் ஆளும் நாடுகளில் உள்ள சுதந்திரம் எப்படி இருந்தது, நம் நிஜமான ஜனநாயக நாட்டில் மக்களுக்குத் தரப்படும் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பது உறுதி. இந்த வகையில் மிக முக்கியமான திரைப்படம் இது.

17 வயது விடலைகளின் பார்வையில் கதை சொல்லப்படுவதும், சிற்சில தகவல்கள் சரியில்லாமல் இருக்கின்றன என்று வந்த விமர்சனங்களும், படம் சற்றே மெதுவாக நகர்வதும், இத்திரைப்படம் பெரிய அளவில் கொண்டாடப்படாததற்குக் காரணங்களாக இருக்கலாம்.

*

கேரி க்ரிஃபின், ஜோசப் லுஸ்டிக், யான் டெஸிடல் ஆகிய மூவர் இயக்கிய படம் இது. 2014 அக்டோபர் மாதம் அமெரிக்காவில் வெளியானது இந்த செக் மொழிப்படம்.

அமேசான் பிரைமில் இந்தியாவில் காணக்கிடைக்கிறது படம். ஐரோப்பாவில் நெட்ஃப்லிக்ஸில் கிடைக்கிறது.

Leave a Reply