Posted on Leave a comment

மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

விலக்கப்பட்ட வேள்வி

மே மாத இதழில் நம்முடைய ஐந்தாவது கேள்வியாகப் பின் வருவதை எழுப்பியிருந்தோம்: ‘பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில்—அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், கர்ணன் எத்தனையோ ஆறுதல் மொழிகளைச் சொல்லி—களத்தையும் துரியோதனனையும் ஒன்றாகக் கைவிட்டு முதலில் ஓடியவன் இவன்தான்—துரியோதனன் மேற்கொண்ட பிரயோபவேச (தற்கொலை) முயற்சியைக் கைவிடச் செய்தாலும், அந்தச் சமயத்தில் ‘நாம் ஒரு ராஜசூய யாகம் செய்யலாமா’ என்று கேட்ட துரியோதனைக் கர்ணன் ‘உன்னால் அந்த யாகத்தைச் செய்ய முடியாது’ என்று சொல்லி, அதற்கு மாறாக வைஷ்ணவப் பெருவேள்வியைச் செய்யலாம் என்று ஏன் ஆலோசனை கூறினான்? துரியோதன் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாது என்று கர்ணனே சொல்லித் தடுத்த அந்தக் காரணங்கள் யாவை? இதை என் ஐந்தாவது கேள்வியாக வைத்துக் கொள்ளுங்கள்.’ இந்தக் கேள்வியில் ஒரு சிறிய திருத்தம். துரியோதனனால் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாது என்று கர்ணன் சொல்லவில்லை. கர்ணனிடம், அந்தணர்கள் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் காரணங்களில் என்னவோ எந்த மாற்றமும் இல்லை. துரியோதனன் அரசனாக இருந்ததில்லை என்ற நம் முடிவுக்கு வலுவான சான்று கிடைக்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

இந்தச் சம்பவம் பாண்டவர்களுடைய வனவாச சமயத்தின் பன்னிரண்டாம் ஆண்டில் நடந்தது. மாடுகளைக் கணக்கெடுக்கிறோம் என்ற பெயரில் வனத்துக்குச் சென்ற துரியோதனன், கர்ணன் முதலானோர் பெரும் படையுடன் பாண்டவர்கள் வனவாசத்தில் கழிக்கும் இடத்துக்கு அருகில் தங்கி, அவர்களுக்குத் தம் செல்வச் செழிப்பையும் அவர்களுடைய தற்போதைய நிலையையும் பரிகசிப்பதற்காகச் செய்த முயற்சி இது. கோஷ யாத்ரா பர்வத்தில் இடம் பெறும் சம்பவம். கோஷ யாத்திரை என்பது மாடுகளைக் கணக்கெடுக்கச் செல்வதைக் குறிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததன் சுருக்கம், நம்முடைய கேள்வியிலேயே இருக்கிறது, இப்படி துரியோதனனுக்கு ஆறுதல் சொன்ன பிறகு, பீஷ்மர் இடையிட்டு, கர்ணனுடைய பேச்சுகளுக்கு மறுப்பு தெரிவிக்கையில் (துரியோதனனிடத்தில்) “வீரனே! நீ பகைவர்களால் வலிந்து பிடிக்கப் பட்டாய். தர்மங்களை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டவனாக இருக்கிறாய். உனக்கு வெட்கமில்லையா? பிரஜைகளுக்கு ரக்ஷகனே! காந்தாரீநந்தன! அப்பொழுது கர்ணன், போர் வீரர்களுடன் கூடின நீ பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கந்தர்வர்களிடம் பயந்தவனாக யுத்தத்திலிருந்து ஓடினான். ராஜஸ்ரேஷ்டனே! ஸைனிகர்களுடன் (சேனை வீரர்களோடு) கூடின நீ அலறி அழைக்கும் பொழுது, பின்புறத்தில் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டு, அந்த யுத்தத்தினின்று கர்ணன் ஓடினான். … தனுர் வேதத்திலும் சௌர்யத்திலும் கர்ணன், மகாத்மாக்களான பாண்டவர்களுடைய நாலில் ஒரு பாகத்துக்கும் ஒப்பாகான்” என்று துரியோதனைப் பார்த்து சொல்கிறார். (கும்பகோணம் பதிப்பு, தொகுதி 3, வனபர்வம் பாகம் 2, 254ம் அத்தியாயம், கோஷயாத்ரா பர்வம், பக்கம் 946.)

இந்தச் சொற்களால் பெரிதும் சீற்றமடைந்த கர்ணன், பீஷ்மரையும் பாண்டவர்களையும் வழக்கம் போல இகழ்ந்து பேசி, பாண்டவர்கள் நால்வர் திக்விஜயம் செய்து சாதித்தனவற்றைத் தான் ஒருவனாகவே நின்று சாதித்துக் காட்டப் போவதாகச் சொல்லி, தான் திக்விஜயம் செய்ய அனுமதி கேட்கிறான். பல திசைகளுக்கும் பயணித்து, எல்லா திசை மன்னர்களையும் வென்று, அவர்களைக் கப்பம் கட்ட வைப்பதே திக்விஜயம் எனப்படுகிறது. திக்விஜயத்துக்குப் புறப்பட்ட கர்ணன் வென்ற தேசங்களின் பட்டியல் ஒரு முழு சர்க்க நீளத்துக்குப் பேசப்படுகிறது. (இருந்தாலும் Critical Edition எனப்படும் செம்பதிப்பான Bhandarkar Oriental Research Institute—BORI பதிப்பில் (இடைச்செருகல் என்று காரணம் காட்டி) கர்ணனுடைய திக்விஜயம் விலக்கப்பட்டுள்ளது.) கும்பகோணம் பதிப்பு, கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு போன்ற முழு மஹாபாரதங்களின்படி, இப்படி வென்று வந்த தேசங்களை, துரியோதனனுக்குக் கப்பம் கட்டுமாறு வைத்தான் கர்ணன். இந்தப் பெருவெற்றியைத் தன் வெற்றியாகக் கொண்டாட விரும்பிய துரியோதனன் சொல்கிறான்: “புருஷஸ்ரேஷ்டனே! எவனுக்கு நீ உதவிபுரிபவனாகவும் அன்புள்ளவனாகவும் இருக்கிறாயோ, அவனுக்குக் கிடைக்க அரியது ஒன்றுமில்லை. நீ என்னுடைய க்ஷேமத்திற்காகவே நல்ல முயற்சியுள்ளவனாக இருக்கிறாய். ஆனால், எனக்கு ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அதனை உள்ளபடி கேட்பாயாக. ஸூதநந்தன! (சூதபுத்திரனே*!) அப்பொழுது பாண்டவனுடைய யாகங்களுள் சிறந்த ராஜஸூயத்தைக் கண்டு எனக்கு ஆவலுண்டாயிற்று. அந்த ஆவலை நீ நிறைவேற்றி வைப்பாயாக’ என்று சொன்னான்.” (மேற்படி, பக்கம் 951), (* கர்ணனை சூதபுத்திரன் என்று அழைப்பது ஏதோ இழிவான பேச்சன்று. அன்றாட வழக்கில், துரியதனன் உள்ளிட்ட பலரும் இவ்வாறே அழைத்திருக்கிறார்கள். எனவே, இது இழிமொழியாகக் கொள்ளக்கூடிய ஒன்றன்று என்பதை விளக்கும் இடம் இது.) இதைக் கேட்ட கர்ணன், அந்தணர்களை வரவழைத்து, ராஜசூய யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறான். அவர்கள் சொல்கிறார்கள்:

“ராஜஸ்ரேஷ்டனே! கௌரவஸ்ரேஷ்டனே! யுதிஷ்டிரர் உயிரோடிருக்கும் போது, உன்னுடைய குலத்தில் அந்த ராஸூயமென்கிற சிறந்த யாகமானது, செய்வதற்கு சாத்தியப்படாதது. வேந்தே! உன்னுடைய பிதா நீண்ட ஆயுளுள்ளவராக ஜீவித்திருக்கிறார். அரசர்களுள் உத்தமனே! அதனாலும், இந்த யாகமானது உனக்கு விலக்கப்பட்டிருக்கிறது.” (மேற்படி, பக்கம் 952.) இவ்வாறு சொன்னவர்கள், தொடர்ந்து, ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாவிட்டாலும், அதற்கு இணையான வைஷ்ணவம் என்கிற ஒரு யாகத்தை, துரியோதனனுக்குக் கப்பம் கட்டும் மன்னர்களிடமிருந்து தேவையான பொருட்களைப் பெற்று அவன் செய்யலாம் என்று யோசனை சொல்கிறார்கள். (கர்ணனுடைய திக்விஜயத்தை ‘இடைச்செருகல்’ என்று விலக்கிய BORI பதிப்பிலும் இந்த வைஷ்ணவ வேள்வியைப் பற்றிய முழு உரையாடலும் இருக்கிறது. This sacrifice has the name of Vaishnava and is familiar to all righteous ones. No one except the ancient Vishnu has ever performed it. This great sacrifice is the equal of rajasuya, supreme among sacrifices. O descendant of the Bharata lineage! This is attractive to us and will ensure your welfare. Let it be performed without obstructions and your desires will be fruitful.” Having been thus addressed by the brahmanas, Dhritarashtra’s son, the lord of the earth, spoke to Karna, Soubala and his brothers. [Bibek Debroy. The Mahabharata (p. 454). Penguin Books Ltd. Kindle Edition.] என்பது இந்த இடத்தை பிபேக் தேப்ராய் மொழிபெயர்த்திருப்பதன் ஒரு பகுதி.)

ராஜசூயம், வைஷ்ணவப் பெருவேள்வி ஆகிய இரண்டு யாகங்களுக்குமுள்ள ஒற்றுமை என்னவென்றால், பல மன்னர்களை வென்று, அவர்களிடமிருந்து கப்பம் பெறுகின்ற சக்கரவர்த்தியே இவற்றைச் செய்ய முடியும் என்பது நமக்குக் கிடைக்கும் முக்கியமான குறிப்பு. பல மன்னர்களிடமிருந்து கப்பம் பெறும் நிலையிலிருந்தாலும், துரியோதனானால் ராஜசூயத்தைச் செய்ய முடியாது என்பது இதில் இன்னமும் முக்கியமான குறிப்பு. இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை: (1) யுதிஷ்டிரன் இன்னமும் உயிரோடிருக்கிறான். (2) திருதராஷ்டிரன் இன்னமும் உயிரோடிருக்கிறான்.

அப்படியானால், திருதராஷ்டிரன் உயிரோடு இருக்கும் நிலையில்தானே தருமபுத்திரன் ராஜசூயத்தைச் செய்தான்! எனவே, திருதராஷ்டிரன் உயிரோடு இருப்பது தருமபுத்திரனைக் கட்டுப்படுத்தவில்லை. குலமுதல்வன் என்ற நிலையிலும், பெரியப்பா என்ற நிலையிலும் தருமபுத்திரனைக் கட்டுப்படுத்தாத ஒன்று துரியோதனனைக் கட்டுப்படுத்துகிறதே! தருமனுக்குப் பெரியப்பா, துரியோதனனுக்கோ தந்தை என்ற நிலைப்பாடு இருந்த போதிலும், தருமனுக்கு இந்த வேற்றுமை, ஒரு வேற்றுமையாக எப்போதுமே இருந்ததில்லையே! ஆகவே, இந்த இரண்டு காரணங்களில், திருதராஷ்டிரன் உயிரோடு இருப்பதான காரணம் சற்றே தளர்கிறது. இப்போது எஞ்சியிருப்பது யுதிஷ்டிரன் உயிரோடிருக்கிறான் என்ற காரணம் மட்டும்தான்.

தருமபுத்திரன் உயிரோடு இருப்பது எப்படி துரியோதனனை, ராஜசூய யாகம் செய்ய முடியாமல் கட்டுப்படுத்தும்? இதற்கான விடையை பாரதம் நேரடியாகத் தரவில்லை. நாம் உய்த்துணர வேண்டியிருக்கிறது. அதாவது, இப்போது துரியோதனன் ஆள்வது, சூதிலே வென்றதாகிய தருமனுடைய அரசை. இதுவும்கூட, சூதாட்டத்தில் பேசப்பட்ட விதியின்படி, பன்னிரண்டு ஆண்டுகாலம் வனவாசம்; ஓராண்டு அக்ஞாத வாசம் என்று பதின்மூன்று ஆண்டுகளை அவர்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அரசு அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிலையில், கேள்விக்கு இடமில்லாத வகையில் சக்ரவர்த்தியாகத் திகழ்பவனே நடத்த வேண்டியதான ராஜசூய யாகத்தை, தருமபுத்திரன் உயிரோடு இருக்கும் வரையில் துரியோதனனால் நடத்த முடியாது. அப்படியானால், இந்த யாக நடைமுறையின்படி தற்போது அரசனாக இருப்பவன் யார்? நாடிழந்து வனவாசம் மேற்கொண்டிருக்கும் தருமபுத்திரனே அல்லவா? இல்லாவிட்டால், அவன் உயிரோடு இருப்பது எப்படி துரியோதனன் இந்த யாகத்தைச் செய்வதற்குத் தடையாக நிற்கும்? நாளைக்கு ஒருவேளை அவன் வனவாசத்தை முடித்துவிட்டு வந்தான் என்றால் — வந்தான் என்பது ஒருபுறமிருக்கட்டும் — அரசர்களுக்கு அரசனாக, சக்ரவர்த்தியாக இருப்பவன் மட்டுமே, தனக்குக் கப்பம் கட்டுபவர்கள் கொடுக்கும் பொருளை வைத்துக்கொண்டு செய்ய வேண்டியதான ராஜசூயத்தை, துரியோதனனால் எவ்வாறு செய்ய முடிந்தது என்ற கேள்வி எழும். ஆகவே, இவனால் அந்த யாகத்தைச் செய்ய முடியாது. ஆனால் அதற்கு இணையாகக் கருதப்படுவதும், அதைப் போன்றே, தனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசர்கள் தந்த பொருளால் நடத்தக் கூடியதுமான வைஷ்ணவ வேள்வியை துரியோதனனால் செய்ய முடியும் என்பது அந்தணர்கள் கூறிய முடிவின் உட்பொருள். அல்லவா?

எனவே, அரசில் முதல் உரிமை பெற்றவனும், சூதில் அரசை இழந்து வனவாசம் மேற்கொண்டிருந்தாலும், நாளை மீண்டும் அரசைப் பெறும் சாத்தியமுள்ளவனாகவும் தற்போதைய வனவாச காலத்திலும் தருமபுத்திரன் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும், திக்விஜயம் செய்து தான் வென்ற அரசுகளை எல்லாம் கர்ணன் துரியோதனனுக்கு (இடைச்செருகல் என்று கருதப்படும் பகுதியின்படி) உரிமையாக்கினாலும்கூட அவனுக்கு ராஜசூய யாகம் செய்ய இயலாத நிலை இருந்ததும் தெளிவாகின்றன. ‘இந்த யாகமானது உனக்கு விலக்கப்பட்டிருக்கிறது’ என்று அந்தணர்கள் சொல்வதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த முடிவுகள் வலுப் பெறுகின்றன.

எனவே, இந்தத் தொடரின் மூன்றாம் பகுதியில் நாம் எழுப்பிக்கொண்ட கேள்வியான, “திருதராஷ்டிரன் பார்வையற்றவனாக இருந்த காரணத்தால் மட்டுமே அரசு பாண்டுவின்வசம் ஒப்புவிக்கப்பட்டது என்றால் அது ஒரு Care taker அரசுதானே? அப்படியானால், பாண்டவர்களுக்கு ஆட்சியில் எப்படி உரிமை வந்தது? அவர்கள் எப்படி அரசுரிமை பெறுகிறார்கள்?” என்பது முழுமையாக விடைகாண்கிறது. இதன்படி:

  1. திருதராஷ்டிரனால் இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டவனும், பிறகு காண்டவப்பிரஸ்தத்தை அழித்து இந்திரப்பிரஸ்தம் ஆக்கியதும் முறைப்படி முடிசூட்டிக்கொண்டவனும் யுதிஷ்டிரனே.
  2. திருதராஷ்டிரன் ஒருபோதும் அரசனாக இருந்ததில்லை.
  3. பாண்டு, வனம்புகுந்தபோது நாட்டை விதுரனிடத்தில் ஒப்படைத்தான். திருதராஷ்டிரன் இருக்கும்போது, தான் அரசேற்க விதுரனுக்குச் சம்மதம் இருந்திருக்கவில்லை. எனவே அண்ணனை அரியணையில் அமர்த்திவிட்டு, தான் அவனுக்குச் சாமரம் வீசுவதையும், நாட்டின் நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான். நாட்டைப் பாதுகாக்க வேறுயாரும் இல்லாததால் பீஷ்மர் ராணுவத்துக்குத் தலைமையேற்றார்.
  4. துரியோதனன் எப்போதும் ஒரு இளவரசனாகக்கூட இருந்ததில்லை.
  5. பாண்டவர்களிடம் சூதில் வசப்படுத்திய நாட்டை ஆண்டபோதுகூட, துரியோதனன் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட அரசனாக இருந்ததில்லை. பாண்டவர்களுடைய வனவாச, அக்ஞாதவாச காலங்களை அவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றும் பட்சத்தில் நாடு அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றுதான் சூதாட்டத்தின்போது வைக்கப்பட்ட பந்தயமும் சொல்கிறது.
  6. துரியோதனன், இந்திரப்பிரஸ்தத்தையும் அஸ்தினாபுரத்தையும் சேர்த்து ஆண்டுகொண்டிருந்தாலும், பாண்டவர்கள் சூதாட்ட விதியின்படி தாங்கள் இழந்த இந்திரபிரஸ்தத்தைத்தான் கேட்டார்கள். அஸ்தினாபுரத்தைக் கேட்கவில்லை. (போருக்குப் பிறகு அங்கே ஆள்வதற்கு யாரும் இல்லாத காரணத்தால், அஸ்தினாபுரம், இந்திரபிரஸ்தம் ஆகிய இரண்டும் இணைந்த அரசை தர்மபுத்திரன் ஆண்டான்.)
  7. போருக்குப் பிறகு நாடு, முழு உரிமையும் உள்ள பாண்டவர்களிடத்தில் சென்றது. இது நியாயமான ஒன்றே.

அப்படியானால், போரில் பலவிதமான ‘அநியாயங்களைச்’ செய்துதானே பாண்டவர்கள் வென்றார்கள் என்ற கேள்வி எழும். போரில் நடந்த அநியாயங்கள் இருதரப்புக்கும் பொது. யாருடைய அநியாயம் அதிகம் என்ற கேள்விதான் எஞ்சும். இது தனித்தனியாக, ஒவ்வொரு சர்ச்சையாக ஆயவேண்டிய ஒன்று. இந்தக் கேள்வியைத் தனியாகப் பார்ப்போம். இப்படி ‘அநியாயங்களாகச்’ சொல்லப்படுபவனவற்றைப் பற்றி வாசகர்கள் கேள்வி எழுப்பினால் அவற்றுக்கு விடை சொல்லவும் தயாராக இருக்கிறேன்.

(தொடரும்..)

Leave a Reply