Posted on Leave a comment

ஒற்றைக் குழந்தை நாடு (One Child Nation) | அருண் பிரபு

வாங் கிராமம், ஜியாங்சி மாகாணம் சீனாவில் பிறந்தவர் நான்ஃபு வாங். இவர் 1985ல் சீனாவின் ஒரு பிள்ளைக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். இவர் பெற்றோர் பையன் பிறப்பான் என்ற எதிர்பார்ப்பில் ஆண் தூண் என்று பொருள்பட நான்ஃபு என்று இவருக்குப் பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். ஆனால் பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியும் அதே பெயரை வைத்தனர். இவருக்குப் பிறகு ஒரு தம்பி உண்டு. ஒரு பிள்ளைக்கும் இன்னொரு பிள்ளைக்கும் இடையே 5 ஆண்டுகள் இடைவெளி இருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு அனுமதி உண்டு என்ற சட்டத்தின் படி இவர் பெற்றோர் இரண்டாவது பிள்ளை பெற்றுக் கொண்டாலும், ஊரில், பொது இடங்களில் அவர்கள் ஏதோ தவறு செய்தவர்கள் போலவே பார்க்கப்பட்டனர். பள்ளிக்கூடத்தில் நான்ஃபுவை தோழிகள் தம்பி இருப்பது பற்றிக் கேலி செய்தனர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாதவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. நான்ஃபுவின் தம்பி பிறக்கவுள்ள சமயம் அவரது பாட்டி ‘இது பெண்ணாக இருந்தால் ஒரு கூடையில் வைத்து தெருவில் வைப்போம்’ என்றாராம். அப்போது குழந்தையின் பாலினத்தை அறியும் சோதனை அங்கே வரவில்லை. பையன் என்றதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

2012ல் தன் மகன் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் நான்ஃபு அமெரிக்கா சென்றார். குழந்தையை சீனா கொண்டுவரும் போது, சீனாவில் குழந்தை பெறுவது எவ்வளவு துன்பங்கள் நிறைந்த விஷயம் என்று அவருக்குத் தெரிந்தது. தன் தாய் கற்பிக்கும் பள்ளிக்குப் போய்ப் பார்க்கிறார். அங்கே அவருக்கு ஒண்ணாங் கிளாஸில், ஒரு குழந்தைக் கொள்கை பற்றிப் பாடிய பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. அவர் குழந்தையாக இருந்த காலகட்டத்தில் கிராம அதிகாரி, கட்சிச் செயலாளர் என்று பொறுப்பு வகித்த துண்டே வாங் என்பவரைச் சந்தித்துப் பேசுகிறார். அரசாங்கம் கொள்கை வகுத்தாலும் மக்களை மாற்றுவது கடினமானதாக இருந்தது என்கிறார் அவர். எப்படி ஒரு பிள்ளைக்கு ஒப்புக் கொள்ள வைத்தீர்கள் என்று கேட்க, நாடகம், பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம், நாட்டுப்புறக் கலைகள் இவற்றின் மூலம் ஒரு பிள்ளைக் கொள்கையை மக்களிடையே எடுத்துச் சென்றோம் என்று பழைய பிரசாரக் கருவிகளைக் காட்டுகிறார்.

தொலைக்காட்சியில் ஒரு பிள்ளை உள்ள குடும்பமே சிறந்தது என்றும், இரண்டாவது பிள்ளை இருந்தால் அது சட்ட விரோதம் என்றும், முதல் குழந்தைக்குத் துரோகம் என்றும் குழந்தைகளை வைத்து ஆடிப் பாடினார்கள். இரண்டாவது பிள்ளைக்கு 5 ஆண்டு காத்திருப்போம் என்றவர்களுக்கு அதிக வரி விதிப்பு இருந்தது. அதிக நேரம் வேலை செய்ய உத்தரவு வந்தது. இரண்டு பிள்ளைக்குப் பிறகு குடும்பக்கட்டுப்பாடு செய்ய மறுத்தால் வீடு இடிக்கப்பட்டு அவர்களுடைய பொருட்களை கட்சி எடுத்துக் கொள்ளும். கடினமான வேலைதான். ஆனால் அரசு உத்தரவை நிறைவேற்ற வேண்டும். வீட்டை இடிப்பது கொடுமை இல்லை, கொள்கை என்கிறார் அந்த முன்னாள் ஊர்த் தலைவர். இப்படி எல்லாம் ஏன் நடக்க வேண்டும்? பேசாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டியதுதானே என்கிறார்.

இதுபற்றி கேள்வி கேட்காதே என்று நான்ஃபு அறிவுறுத்தப்படுகிறார். அரசு பற்றியும் கொள்கை பற்றியும் பேசினால் பிரச்சினை வரும் என்று பேச மறுக்கிறார்கள் பலர். அந்தக் காலத்து அரசு மருத்துவச்சியைப் பார்த்துப் பேச முயல்கிறார் நான்ஃபு. எத்தனை பிரசவங்கள் பார்த்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு அந்த அம்மையார், ‘அது கணக்கில்லை, ஆனால் 50000 குடும்பக் கட்டுப்பாடுகள், 60000 கருக்கலைப்புகள் செய்திருப்பதாகச்’ சொல்கிறார். குற்ற உணர்ச்சி காரணமாக இவற்றைக் கணக்கு வைத்துக் கொண்டதாகவும் சொல்கிறார். ஆனால் ‘இது அரசின் கொள்கை, நான் என்ன செய்வேன்? பல நேரங்களில் கருக்கலைப்புக்கான காலம் தாண்டிவிட்டால் விட்டுவிடச் சொல்வார்கள் அதிகாரிகள். சந்தோஷப்பட ஏதுமில்லை. குழந்தை பிறந்தவுடன் ஊசி போட்டுக் கொன்று விடுவார்கள்’ என்கிறார். ஓய்வு பெற்ற பிறகு குழந்தைப் பிறப்பு சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கு மருத்துவம் சொல்வதும் வழிகாட்டுவதும் செய்கிறார் அந்த மருத்துவச்சி. கொன்ற பிள்ளைகளுக்கு பிராயசித்தம் இது என்கிறார்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு மருத்துவக் குழு இருக்கும். அவர்களது பிராந்தியத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து அவர்களுக்குப் பரிசோ, தண்டனையோ வழங்குவார்கள் அரசு அதிகாரிகள். எண்ணிக்கை குறைய குறைய பரிசு அதிகம். மக்கள் இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு மருத்துவக் குழுக்களை வெறுத்தாலும் மக்கள் இவர்களை விரும்புவதாக எழுதி வாங்கிக் கொண்டு இவர்களுக்கு ஆண்டுதோறும் விருது கொடுத்தது அரசு. வெறுப்பதாக யாராவது சொல்லிவிட்டால் தொலைந்தார்கள். பெங் வாங் என்ற ஓவியர் கருக்கலைப்பின் வலிகள் பற்றிப் படம் வரைந்து வைத்திருந்தார். மக்களுக்கு இந்த வலி தெரிய வேண்டும் என்று இன்னும் மறைத்து வைத்திருக்கிறாராம்.

சீனக் கலாசாரத்தின்படி பெண்வழிப் பேரப் பிள்ளைகள் சொந்தப் பேரன் இல்லை. அது தன் குடும்பம் இல்லை, வேறு குடும்பத்தின் வாரிசு என்கிறார்கள் வயதானவர்கள். நான்ஃபுவின் தாயார் அவரது தம்பியின் பெண் குழந்தையை மலைப்பகுதியைத் தாண்டிய ஒரு சந்தையில் கூடையில் வைத்து கொஞ்சம் பணமும் வைத்து விட்டுவிட்டு வந்தாராம். காரணம் கண்டிப்பான ஒரு பிள்ளைக் கொள்கை. 5 வருட இடைவெளிச் சட்டம் அப்போது இல்லை. ஒரு பிள்ளை மட்டுமே. இரண்டாவது என்றால் அபார்ஷன்தான். ஆகவே பெண் குழந்தைகளை இப்படி எங்காவது விட்டுவிட்டு அடுத்த குழந்தைக்கு முயன்றிருக்கிறார்கள் சீனர்கள். இது போன்ற கைவிடப்பட்ட குழந்தைகள், மனித உறுப்பு வியாபாரிகள், கடத்தல்காரர்கள் போன்றவர்களுக்கு நல்ல வேட்டையாக அமைந்தது. அரசு கண்டுகொள்ளவில்லை. காரணம் அந்தப் பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கு வராதே!

கிட்டத்தட்ட 10,000 குழந்தைகளைக் கடத்தி விற்ற ஒருவரை பேட்டி கண்டு சேர்த்துள்ளார் நான்ஃபு. 1992ல் சீனா சர்வதேசத் தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித்தது. சீனக் குழந்தைகளை வெளிநாட்டார் தத்தெடுக்க சீன அரசு அனுமதித்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட அனாதை விடுதிகளுக்குக் குழந்தைகளைக் கொண்டு சேர்க்கும் வேலையையும் செய்து சம்பாதித்தார் அந்த நபர். அவரது குடும்பமே இந்த வேலைதான் செய்தது என்கிறார்.

பஸ் ஓட்டுநர்கள், குப்பை அள்ளுபவர்கள், கேஸ் சிலிண்டர் போடுபவர்கள், வண்டி இழுப்பவர்கள் என்று பலரும் இவர்களது ஆட்கள். இரவு பகலாகத் தெருக்களில் சுற்றி வருவார்களாம் தனியாக இருக்கும் பெண் பிள்ளைகளை நோட்டம்விட்டுக் கண்காணிப்பார்களாம். சிறிது நேரம் யாரும் பெரியவர்கள் வரவில்லை என்றால் பேச்சுக் கொடுத்து பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போவார்களாம். உறுப்பு வியாபாரமா அல்லது அனாதை இல்லமா என்பது தேவை இருப்பதைப் பொருத்து என்கிறார். இவர்களுக்குப் பிள்ளை பிடித்துக் கொடுத்தவர்கள் பிள்ளைகளைக் காப்பாற்றி அனாதை இல்லங்களில் சேர்ப்பதாக நம்ப வைக்கப்பட்டார்கள். அரசுக்குத் தகவல் போய் பிரச்சினை வரக்கூடாதே. புகார் போகாத வரை பிரச்சினை இல்லை, போனால் தொலைத்து விடுவார்கள் என்கிறார் அந்த கடத்தல்காரர். இப்போது ஒரு பிள்ளைக் கொள்கை நீக்கப்பட்ட பிறகு ஒரு நிறுவனத்தில் காவலராக வேலை பார்க்கிறார்.

இவர்களுக்கு உதவியவர்கள், இவரது குடும்பத்தினர் மீது அரசு வழக்குப் போட்டு 5 முதல் 15 வருடம் வரை சிறைத் தண்டனை கொடுத்தது. காரணம், குழந்தைகளைக் கடத்தியதாக ஒரு புகார். அரசின் அனாதை விடுதிகள் பணம் கொடுத்ததால்தானே நாங்கள் குழந்தைகளை அரசு விடுதிக்குக் கொண்டு போனோம், அப்போது அரசு விடுதி மீது யார் வழக்குப் போடுவது என்கிறார். கடத்தி வெளிநாட்டில் விற்றதற்கு வழக்கு இல்லை. அரசு அனாதை விடுதிக்குக் காசுக்கு விற்க கடத்தி வந்ததற்கு வழக்கு, தண்டனை.

அரசு ஒரு கட்டத்தில் இந்தக் கடத்தல் விஷயம் பெரிய தலைவலி என்று உணர்ந்தது. இப்படிக் கடத்தப்பட்ட குழந்தைகளை சர்வதேசத் தம்பதிகள் தத்தெடுக்க வரும்போது சர்வதேச சட்டங்கள் ஒப்புக் கொள்ளும்படியான ஆவணங்கள் அவர்களிடம் இருக்காது. இதனால் சீனர்களை உலகம் பிள்ளை பிடிப்பவர்கள் போலப் பார்க்க ஆரம்பித்தது. ஆகவே, பெண் குழந்தைகளை அரசு அனாதை விடுதிகளில் வைத்து, கொஞ்சம் பராமரித்து சட்டப்படித் தேவையான ஆவணங்களைத் தயாரித்து சர்வதேசத் தத்தெடுப்பை ஒரு தொழிலாகச் செய்தது அரசு. பிள்ளைகளைக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு 100 முதல் 250 டாலர்கள் வரை கொடுத்தது. இதை ஒருங்கிணைத்து நடத்தும் குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு, சலுகைகள் கிடைத்தன. பிள்ளைகள் 15,000 முதல் 25,000 டாலர்கள் வரை விற்கப்பட்டனர். இந்தப் பணம் அரசு ஆவணக் கட்டணம் என்று வசூலிக்கப்பட்டது.

குழந்தையைத் தெருவில் விட்டுவிட்டு வந்த தன் அத்தையிடம் பேசுகிறார் நான்ஃபு. குற்றவுணர்வே இல்லாமல் ஆமாம், கூட்டமான இடத்தில் பெண்ணை விட்டுவிட்டேன் என்கிறார் அந்த அத்தை. ஆண்பிள்ளை வேண்டும் என்று ஒரு பிள்ளைக் கொள்கையை மீற முடியாமல் விட்டதாகச் சொல்கிறார். கொள்கையை வெறுக்கிறீர்களா என்று கேட்டால், ‘கொள்கை கொள்கைதான், வெறுத்து என்ன ஆகப் போகிறது’ என்கிறார். இந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்ற கேள்விக்கு விடை தேடித் போகிறார் நான்ஃபு. அமெரிக்காவில் யூடா மாகாணத்தில் ஒரு தம்பதி இப்படித் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளை, பிறந்த குடும்பத்துடன் சேர்ப்பதைக் கட்டணச் சேவையாகச் செய்கிறார்கள்.

பிரையன் என்பவர் லோங் லேன் என்ற சீனப் பெண்ணை மணந்துகொண்டு சீனக் குழந்தைகள் மூவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். 10,000 முதல் 25,000 டாலர்கள் இருந்தால் மிகச் சரியாக சீன அரசே பிள்ளைகளை எல்லாச் சட்டச் சம்பிரதாயங்களையும் முடித்து சர்வதேச சட்டப்படி தேவையான ஆவணங்களுடன் குழந்தைகளைக் கொடுத்துவிடும். ஆகவே சீனக் குழந்தைகள் தத்தெடுக்கச் சிக்கல் இல்லாதவர்கள் என்கிறார் பிரையன். கொள்கை என்ற பெயரில் குழந்தைகளைத் தெருவில் விட ஏற்பாடும் செய்து, அப்படித் தெருவில் விடப்பட்ட குழந்தைகளை அனாதைகள் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச மக்களுக்கு நல்ல விலைக்கு விற்றும் காசு சம்பாதித்தது சீன அரசு. கடத்தி வரப்பட்ட பிள்ளைகளையும் அனாதை என்று சொல்லி வெளிநாட்டுத் தம்பதிகளுக்குத் தெளிவான ஆவணங்களுடன் விற்றுச் சம்பாதித்தது சீன அரசு.

குழந்தைகளின் பெற்றோர் என்று சிலரை சீன அரசு கையெழுத்திட வைத்தது. அவர்களைத் தொடர்பு கொண்டு உங்கள் மகள் வளர்ந்துவிட்டாள், பார்த்துப் பேசுகிறீர்களா என்று கேட்ட போது, அவர்களில் 95% பேர் ‘அந்தப் பிள்ளைகள் எங்களுடையதில்லை, அரசு என் பெயரைப் போட்டுக் கையெழுத்துப் போடச் சொன்னது, போட்டேன்’ என்றார்கள். சீன அரசு அவர்களுக்கு 50 முதல் 100 டாலர்கள் பணம் கொடுத்தது. இரட்டைக் குழந்தைகளைப் பிரித்து அமெரிக்காவில் ஒன்று ஐரோப்பாவில் ஒன்று என்று விற்பார்களாம். நர்ஸுகள், வார்டு ஆயாக்கள், குடும்பக் கட்டுப்பாடு அலுவலர்கள் என்று பலரும் இப்படிப் பிள்ளைகளின் அம்மா, அப்பா என்று காகிதங்களில் கையெழுத்துப் போட்டுள்ளனர். இதற்கு அரசு அவர்களுக்குத் தக்க பணமோ பதவி உயர்வோ கொடுத்துள்ளது.

‘சீன தேசத்தின் மீதான பற்று என்பது, கட்சி, தலைவர் ஆகியோர் மீதான பற்று’ என்று கற்றுக் கொடுக்கப்பட்டது மிகப் பெரிய புரட்டு என்கிறார் நான்ஃபு. இது பற்றி அறிக்கை எழுதிய ஒரு பத்திரிகையாளரை சந்திக்க விழைந்தார். அவரோ ஹாங்காங்கில் இருந்து கொண்டு ‘சீனாவுக்கு வர முடியாது. முகவரி சொல்லமாட்டேன். ஹாங்காங் வந்துவிட்டுச் சொல்லுங்கள், ஒரு ஓட்டலில் சந்திக்கலாம்’ என்று சொல்கிறார். அங்கே போகிறார் நான்ஃபு.

ஜியோவமிங் பாங் என்ற அந்த பத்திரிகையாளர், இப்படி பிள்ளைகள் கடத்தி விற்கப்படுவது பற்றி அறிக்கை கொடுத்துக் கட்டுரை எழுதிய வேகத்தில் வேலையை விட்டுத் தூக்கப்பட்டார். அவர் தப்பித்து ஹாங்காங் போனது பெரிய பாடு. இதுபற்றி வேறு எந்த அறிக்கையும் வரக்கூடாது என்று தடை போட்டது சீன அரசு.

பாங்கும் அவரது நண்பரும் ஹுனான் மாகாணத்துக்கு காமிராவுடன் சென்று அங்கே லங்குய் என்ற இடத்தில் வசதியற்ற சில குடும்பங்களைப் பேட்டி கண்டார்கள். குடும்பக் கட்டுப்பாடு அதிகாரிகள் பிறந்த குழந்தை முதல் மூன்று/ஆறு மாதக் குழந்தைகள் வரை தூக்கிக் கொண்டு போன செய்திகள் பதிவு செய்யப்பட்டு உலகுக்குச் சொல்லப்பட்டன. அந்தக் குடும்பங்கள் இன்றும் விறகு அடுப்பில் சமையல் செய்து வாழ்கிறார்கள். மின்சாரம், சமையல் எரிவாயு, சாலை வசதி, உள்ளிட்ட எந்த நவீன அடிப்படை வசதிகளும் இல்லாத அந்தக் கால முறையில் விவசாயம் செய்யும் பகுதிகள் இவை. டிராக்டர் போன்றவை இவர்களுக்கு என்ன என்றே தெரியாது. டிவி கிராமத்துக்கு ஒன்று இருக்கும். மொபைல் போன், இணையம் இதெல்லாம் இவர்கள் கேள்விப்படாத விஷயங்கள். (இது 2011 அறிக்கையின் படி!)

“ஒரு பிள்ளைக் கொள்கையை மீறுவோர் எல்லாவற்றையும் இழக்க வேண்டியிருக்கும்”, “அனுமதியின்றி கர்ப்பம் தரித்தால் தண்டனை”, “ஒரு பிள்ளைக்கு மேல் இருக்கும் வீடுகளை அரசுக்குச் சொல்லிப் பரிசு பெறுங்கள்”, “குடும்பக் கட்டுப்பாட்டை மறுப்போர் உடனடியாகக் கைது செய்யப்படுவர்”, “குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்காதவர்களின் மொத்தக் குடும்பமும் தண்டிக்கப்படும்” போன்ற வாசகங்களை சீனத்தில் எங்கும் காணலாம்.

இரட்டைப் பிள்ளைகள் இருந்த வீட்டில் ஒரு பிள்ளையை அரசு தூக்கிப் போகும். மேற்கத்தியர்களுக்கு விற்கும். இரட்டைப் பிள்ளைகள் பெற்றதற்குத் தண்டனையாக அந்தப் பெற்றோருக்கு அபராதம் விதித்தது அரசு. “எங்களுக்கு வேறு வழியில்லை, அரசு சொன்னால் எப்படி மீறுவாய்? கொள்கையை மீறி, இருப்பவர்களையும் இழக்கவா?” இவை பரவலாக சீனாவின் பல பகுதிகளில் ஒரு பிள்ளைக் கொள்கைக்குப் பிள்ளையை இழந்த குடும்பத்தினர் சொன்ன பதில். அதே வேளையில் அமெரிக்காவில் வாழும் பல சீன தத்துப் பிள்ளைகள் சீனாவில் தங்கள் பிறந்த குடும்பம் பற்றி அறிய ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அமெரிக்கர்களாகவே வாழப் பழகிவிட்டனர். சீனாவுக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு.

1979லிருந்து நடைமுறையில் இருந்த ஒரு பிள்ளைக் கொள்கையை சீன அரசு 2015ல் மாற்றியது. சீன நிறுவனங்கள், ராணுவம் இவற்றில் ஒரு கட்டத்துக்கு மேல் பணியாற்ற இளம் தலைமுறை வருவதில்லை. காரணத்தை ஆராய்ந்த போது அங்கே அதிக எண்ணிக்கையில் ஆண்கள், அதிக எண்ணிக்கையில் வயதானவர்கள், குறைந்த எண்ணிக்கையில் பெண்கள், குறைந்த எண்ணிக்கையில் இளைஞர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆண்-பெண் விகிதத்தைப் பாதிக்கிறது என்றும், திருமணம் செய்யப் பெண் இல்லாமல் இனப்பெருக்கம் இல்லாமல் போக வாய்ப்புள்ளதாக அரசுக்குத் தெரிவித்தது அறிக்கை.

பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் சீனர்களுக்குப் பெண் கொடுப்பதில்லை. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு இப்போது சீனா இரண்டு பிள்ளைக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது அரசு இரண்டு பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பிரசாரம் செய்கிறது.

நான்ஃபு சொல்கிறார், “ஒரு நாட்டில் அரசு பெண்களைக் கட்டாயக் கருக்கலைப்புக்கு உட்படுத்துகிறது. வேறு சில நாடுகளில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இது பெண்களின் உரிமைக்கு எதிரானது. எனக்கு இரண்டாவது பிள்ளை வேண்டும். ஆனால் எப்போது என்பதை நான் முடிவு செய்வேன். அதை அரசு தடுக்கக் கூடாது.” ஆனால் சீனாவில் அது சாத்தியமில்லை என்று அவரே சொல்கிறார்.

இளைய தலைமுறைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் ஒரு வீட்டில் பிறந்து வளர்வது பற்றிப் புரிவதில்லை. அதனால் இவர்களுக்கு கௌன்சிலிங் கொடுக்கவும் புதிய குடும்பக் கட்டுப்பாடு கொள்கையான இரண்டு பிள்ளைக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும் ஒருங்கிணைந்த மருத்துவ-குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை என்று சீனா உருவாக்கியது. ஆனாலும் பழைய ஒருபிள்ளைக் கொள்கை ஏற்படுத்திய பாதிப்பை இன்னும் பல சீனர்களால் கடந்து வர இயலவில்லை.

இனி இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசின் பிரசார நாடகத்தைக் காட்டிப் படத்தை முடிக்கிறார்கள்.

இந்தப்படம் 2019ல் அமெரிக்காவில் Sundance திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. நான்ஃபு வாங், ஜியாங்க்லிங் ஜாங் ஆகிய இருவர் இயக்கிய படம் இது. ஆவணப்படம் போலவே இருந்தாலும் அரசின் கட்டாயக் கொள்கைத் திணிப்புகள் எப்படி விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று உலகெங்கும் உள்ள சீனக் குழந்தைகளைத் தத்தெடுத்தோர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். Rotten Tomatoes 98% நேர்மறை மதிப்பை ஆதரவு விமர்சனங்கள் அடிப்படையில் கொடுத்தது. 100க்கு 85 நேர்மறை விமர்சனங்களின் அடிப்படையில் Metacritic தளம் 85% ஆதரவு மதிப்பைக் கொடுத்தது.

படமாக்க சீனாவில் பல்வேறு பகுதிகளுக்குப் போனபோது அரசு அதிகாரிகள் பல இடங்களில் கேமராவைப் பிடுங்கிக் கொண்டு, எடுத்த ஒளிப்படங்களை அழித்து, மன்னிப்பு எழுதித் தந்த பின்பே கேமராவைத் திருப்பித் தந்திருக்கின்றனர். ஆனால் தன் நண்பர்களிடம் சொல்லி வேறொரு கேமராவில் படம் பிடித்து வைத்ததால் ‘சில காட்சிகள் கோணம் சரியில்லாது போனாலும் படமாக்க முடிந்தது’ என்கிறார் நான்ஃபு. ஒருமுறை ரயிலில் பயணம் செய்த நான்ஃபு, போலிஸ்காரர் ஒருவரால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார். காரணம் அவர் ரயிலேறிய ஊரில் ஒரு பிள்ளைக் கொள்கைக்கு எதிராகக் கேள்வி கேட்டு படம் பிடித்திருந்ததுதான்.

நான்ஃபு வீட்டுக்கும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று பலரையும் போலிஸ் அழைத்துப் போய் விசாரித்து நான்ஃபு படம் எடுப்பதை நிறுத்த அழுத்தம் கொடுத்தது. ஹாங்காங்கில் இருந்து பல்வேறு படத்தொகுப்புகளை இணையத்தில் ஏற்றி அனுப்பி, தன் கேமராவில் அவற்றை அழித்து, அதனால் தப்பினார் நான்ஃபு.

அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

Leave a Reply