Posted on Leave a comment

வலையில் சிக்காத தீவிரவாத யானை | ராம் ஸ்ரீதர்

பனிக் குல்லா போட்டுக் கொண்ட மலைச்சிகரங்கள், மரகதப் பச்சையில் கம்பளம் விரித்த பள்ளத்தாக்குகள், ஆப்பிள் தோட்டங்கள், குங்குமப்பூ நிறைந்த நிலங்கள்…. இந்த அழகான, கவித்துவமான சூழ்நிலையைப் பார்க்கும்போது காஷ்மீர்ப் பள்ளத்தாக்கை யாரும் தீவிரவாதிகள் நிறைந்த இடம் என்று சொல்ல மாட்டார்கள்.

ஆனால், பல ஆண்டுகளாக இந்த இடம் அமைதியின்றித் தத்தளித்துக் கொண்டுள்ளது. நமக்குச் சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் மேலாகியும், இந்தப் பூவுலகச் சொர்க்கத்தின் மீது பாகிஸ்தான் கொண்ட வெறி கொஞ்சமும் குறையவில்லை. ஆம், அதை வெறி என்றுதான் சொல்லவேண்டும். ஆசை, காதல் போன்றவை மென்மையான வார்த்தைகள். அவை பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் மீது இருக்கும் அதீத வெறியை வர்ணிக்கப் போதாது.

31 அக்டோபர் 2019 முதல் இத்தனை வருடங்களாக ஜம்மு/காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சியைத் திரும்பப்பெற்று, லடாக் பகுதி மற்றும் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது இந்திய அரசு.

பெரும்பான்மை ஹிந்துக்கள் இருக்கும் ஜம்முவில் இதற்குப் பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லாத நிலையில், பெரும்பான்மையாக முஸ்லிம்களும், முஸ்லிம் தீவிரவாதிகளும் நிறைந்த காஷ்மீரில் எதிர்பார்த்தது போலவே தீவிர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுபோன்ற காங்கிரஸ் ஆதரவு மற்றும் தீவிரவாதப் பின்னணி நிறைந்த எதிர்ப்பு வரும் என்பதை எதிர்பார்த்த மத்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல அரசியல் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் ஆகியோரைக் கைது செய்து, யாரும் அறியாத ஒரு இடத்தில் கொண்டு வைத்ததோடு நில்லாமல், தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு ஆகியவற்றை முடக்கியது.

வருடம் முழுவதும், உலக நாடுகள் விவகாரத்தில் அநாவசியமாகத் தலையிடும் அமெரிக்கா இந்த விஷயத்திலும் தலையிட்டு, தன்னை அறிவிக்கப்படாத பெரியண்ணனாக நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்தது. இதற்கெல்லாம் மசியாமல் நமது அரசு 2020ம் ஆண்டு, பிப்ரவரி மாதம்தான் தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு ஆகியவற்றின் மீது இருந்த தடையை நீக்கியது.

பொது மக்கள் எந்தவிதச் சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல், அவர்களுக்கு அமைதியான சூழல் நிலவவே இந்தக் கட்டுப்பாடுகள் என்று இந்திய அரசு வலியுறுத்தினாலும், காதில் போட்டுக்கொள்ள விரும்பாத பாகிஸ்தான், தன்னுடைய வழக்கமான வழியில் காஷ்மீர் மக்கள் மனதில் வில்லங்க விதையை விதைத்துக் கொண்டிருந்தது.

பாகிஸ்தான் தன்னுடைய விஷக்கரங்கள் கொண்டு காஷ்மீர் மீது காலகாலமாகத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியை முறியடிக்கவே இந்த ஏற்பாடு என்று இந்தியா தீர்மானமாக இருந்தது. பாகிஸ்தானில் தஞ்சம் பெற்றுள்ள பல தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட வண்ணமே உள்ளன. கடந்த ஆண்டில் கூட மஸூத் அஸார் தலைமையிலான ஜெய்ஷ் – இ – முகம்மது என்ற தீவிரவாத இயக்கம் புல்வாமா என்ற இடத்தில் இந்திய ராணுவப் படையினர் மீது கார் வெடித்தாக்குதல் ஒன்றை நடத்தி ஸ்ரீநகர் அருகே மத்திய ரிஸர்வ் போலிஸ் படையைச் சேர்ந்த சுமார் 40 வீரர்களைத் தாக்கிக் கொன்றது.

இதில் ஜீரணிக்க முடியாத விஷயம், இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தியது 22-வயதான ஒரு இந்தியன். இவன் சம்பவம் நடப்பதற்கு ஒரு வருடம் முன்னர் ஜெய்ஷ் தீவிரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவன். அந்தக் கொடூர தாக்குதல் நடந்தவுடன், ஜெய்ஷ் தீவிரவாத இயக்க உடையோடு, தன்னைப்போல ஆயிரக்கணக்கானோர் இந்தியப் படையைக் கொன்று குவிக்க ஆயத்தமாக இருப்பதாகக் கொக்கரித்து அவன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத் தளங்களில் உலவியது.

இவனுடைய ஊளை ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான், இது போன்ற சுதந்திரப் படைகள் (தீவிரவாத படைகளுக்கு அவர்கள் இட்டுள்ள பெயர்) இந்தியா போன்ற ஆதிக்க மனப்பான்மை கொண்ட நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் என்று வெளிப்படையாகக் கூக்குரலிட்டார்.

ஜெய்ஷ் போன்ற தீவிரவாதக் கூட்டங்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் தந்து, ஆயுதப்பயிற்சி, ஆயுதங்கள், பண உதவி ஆகியவற்றைச் செய்யக் காரணமே காஷ்மீரை எப்படியாவது இந்தியா வசமிருந்து பிரித்து விடுவதுதான்.

புல்வாமா தாக்குதல் மட்டுமின்றிப் பல்வேறு கொலைகாரத் தாக்குதல்களுக்குக் காரணமான மஸூத் அஸார், இந்தியாவால் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் தீவிரவாதி. ஒஸாமா பின் லாடன் எப்படித் தொடர்ந்து அமெரிக்காவுக்குத் தொல்லை கொடுத்து வந்தானோ அதுபோலவே இந்த மஸூத் அஸாரும் இந்திய விஷயத்தில் மிக மோசமானவன்.

கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் LoC எனப்படும் கட்டுப்பாடு எல்லைக்கோட்டைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் 50 கிலோ மீட்டர் வரை உள்ளே புகுந்து, கைபர் – பக்துன்க்வா மாகாண எல்லையில் பாலகோட் என்ற இடத்தில் ஒரு மலைமீது இருந்த ஜெய்ஷ் இயக்கத்தின் பயிற்சி முகாமைத் தாக்கி அழித்தது.

1971 இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக இந்தியா பாகிஸ்தான் வான்வெளியில் எல்லை மீறித் தாக்குதல் நடத்தியது. இது நடந்தவுடன் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தன் விமானப்படையை இந்திய எல்லையில் உள்ள முக்கிய இடங்களைத் தாக்க அனுப்பியது. இந்தத் தாக்குதலை வழியிலேயே இந்திய விமானங்கள் முறியடித்ததில், இந்திய விமானப்படை விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதுபோன்ற மோசமான தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் வெளிப்படையாகத் தானே காரணம் என ஒப்புக்கொண்டாலும், பாகிஸ்தான் எப்போதும் போல சில்லறைத்தனமாக அதை மறுத்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு போலப் பயந்து நடுங்காமல், இது போல வேறு ஏதேனும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், பாகிஸ்தானுக்குள் எல்லை மீறி நுழைந்து, தீவிரவாதத்துக்குப் பதிலடி கொடுப்போம் என இந்திய அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொஞ்சம் பின்னால் சென்று பார்ப்போம்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள தீராத பகை உலகறியும். மஸூர் அஸார் ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு பராக்கிரமசாலியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளான். ஆரம்ப காலங்களில் ஹர்கத் உல் முஜாஹிதீன் என்ற அமைப்பின் மூலம் மஸூத் அஸார் ஆப்கானிஸ்தான் சென்று தீவிரப் பயிற்சி எடுத்துக்கொண்டான்.

பிறகு தீவிரவாதத்தை வளர்க்க சவூதி அரேபியா, துபாய், ஜாம்பியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள மசூதிகளுக்கு ஒரு முல்லா (மத குரு) என்ற போர்வையில் சென்று பல நாச வேலைகளைச் செய்துள்ளான் இந்த மஸூத் அஸார்.

இவன் மிகச் சிறந்த பேச்சாளி. தன்னுடைய திறமையான பேச்சினால் நிறைய இஸ்லாம் இளைஞர்களைத் தன் வசம் இழுத்து, மூளைச் சலவை செய்து, தீவிரவாதத்துக்கு ஆட்கள் சேர்ப்பதைத் திறம்படச் செய்துள்ளான் இவன்.

நிதானமாகத் தன்னை பாகிஸ்தானின் காஷ்மீர எதிர்ப்புக்கு ஒரு சக்தி மிகுந்த ஆயுதமாக வளர்த்துக்கொண்ட மஸூத் அஸார், 1994ல் ஒரு போலி போர்த்துக்கீசிய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு, ஸ்ரீநகர் பயணித்து, அங்கு இருந்த சஜித் ஆப்கானி என்ற ஒரு பயங்கரவாத இயக்கத் தலைவனைச் சந்தித்து, அவனுடைய ஆதரவை வேண்டி உள்ளான். இவர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒரு ஆட்டோவில் இருவரும் பயணமானபோது இந்திய ராணுவத்தின் சிறப்புப் பாதுகாப்புப் படை இவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலும் மஸூத் அஸார் அவனுடைய மதப் பிரசங்க வேலைகள் மூலம் தீவிரவாதத்திற்கு ஆதரவு தேடியுள்ளான்.

முதலில் ஒருமுறை 1994ம் ஆண்டு இறுதியிலும், பின்னர் 1995ம் ஆண்டிலும், சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்து, 1995ம் ஆண்டு முயற்சியின் போது சஜித் ஆப்கானி இறந்து விடுகிறான். பிறகு, அதே ஆண்டிலேயே மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆறு சுற்றுலாப் பயணிகளை அல் ஃபரான் என்ற தீவிரவாத இயக்கம் கடத்தி, அவர்களை விடுவிக்க மஸூத் அஸாரை விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்த, அதற்கு இந்திய அரசாங்கம் மறுத்துவிடுவதால், ஆறு பேருமே கொல்லப்படுகிறார்கள்.

பிறகு, டிசம்பர் 24, 1999ம் வருடம் காத்மண்டுவிலிருந்து டெல்லி செல்லும் ஐ.சி 814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடத்தப்படுகிறது. விமானத்தின் பைலட் புத்திசாலித்தனமாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கி, எரிபொருள் நிரப்ப வேண்டுகிறார். அந்த விமான நிலையத்தில் ஏற்படும் முட்டாள்தனமான தாமதத்தால் எரிச்சலாகும் தீவிரவாதிகள், தேனிலவு சென்று மனைவியுடன் திரும்பி வரும் ரூபின் கத்யால் என்ற இளைஞனைக் குத்திவிடுகிறார்கள். வேறு வழியில்லாமல், விமானம் கிளம்பி பாகிஸ்தானிலுள்ள லாகூரில் இறங்குகிறது. கத்திக்குத்துப் பட்ட கத்யால் இதற்குள் இறந்துவிட, அவனுடன் சேர்த்து 27 பயணிகளை மட்டும் அங்கே இறக்கிவிட்டுவிட்டு, காபுல் செல்லத் திட்டமிடுகிறார்கள் தீவிரவாதிகள். அங்கு அனுமதி மறுக்கப்படவே, ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தஹார் செல்கிறார்கள். அது தாலிபான் வசம் உள்ள நகரம். எனவே பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. டிசம்பர் 30 வரை, ஆறு நாட்கள், இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியாகச் செல்கிறது.

இறுதியாக, பயணிகளை விடுவிக்க, இந்தியாவில் காவலில் இருக்கும் மூன்று தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தீவிரவாதிகள் அச்சுறுத்துகிறார்கள். அவர்கள் அஹமத் ஒமார் சயீத் ஷேக், முஷ்டாக் ஜர்கார் மற்றும் மஸூத் அஸார் ஆகியோர். காவலில் இருக்கும் தன் சகோதரன் மஸூத் அஸார் எப்படியேனும் வெளியே வந்திட அவன் சகோதரன் இப்ராஹிம் இந்தக் கடத்தலில் முக்கிய தீவிரவாதியாக ஈடுபட்டது இந்திய உளவுத் துறைக்குத் தெரிய வருகிறது.

அடுத்த நாள் இந்திய வெளியுறவுத் துறை ஜஸ்வந்த் சிங், அந்த மூன்று கைதிகளுடன் காந்தஹார் பறந்து வருகிறார். விமானத்திலிருந்த தீவிரவாதிகள், விமானம் மூலம் வந்த மூன்று முக்கியத் தீவிரவாதிகளுடன் தப்பிச் செல்கிறார்கள். பாகிஸ்தானுக்குத் திரும்பிய ஒரு வாரத்திலேயே பல இடங்களில் பேசும் மஸூத் அஸார், “அந்தப் போராட்டம் காஷ்மீருக்குக் கிடைத்த வெற்றி” என்று ஊளையிடுகிறான்.

விடுதலையாகி வெளியே வந்தவுடன் முதல்வேலையாக மஸூத் அஸார் ஜெய்ஷ் – இ – முகம்மது தீவிரவாத இயக்கத்தைத் தோற்றுவித்தான். இதனுடைய அறிமுக விழா பிரமாண்டமாக பாகிஸ்தானிலுள்ள பஹ்வால்பூர் என்ற இடத்தில் நடந்தது. இதில் “காஷ்மீரத்துக்கு இந்தியாவின் பிடியிலிருந்து புனிதப் போர் (ஜிஹாத்) மூலம் விடுதலை கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை” என்று மஸூத் அஸார் அறைகூவல் விடுத்தான்.

சில நாட்களிலேயே பாதாமி பாக் என்னும் இடத்திலுள்ள இந்திய ராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினான் மஸூத் அஸார். நல்லவேளையாக, நம் தரப்பிலிருந்து இதில் எதுவும் உயிர்ப்பலி இல்லை. அக்டோபர் முதல் நாள், 2001ம் ஆண்டு, ஒரு கார் நிறைய வெடிமருந்துகளை நிரப்பி காஷ்மீரிலுள்ள காஷ்மீர் சட்டசபைக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் 38 பேர் இறக்கிறார்கள். பிறகு இதேபோல டிசம்பர் 13 அன்று (அதே 2001ம் ஆண்டு) ஐந்து தீவிரவாதிகள் துப்பாக்கி அணிந்து, புது தில்லியில் உள்ள நம் பாராளுமன்ற வளாகத்தினுள் நுழைந்து 9 பேரைக் கொன்றதை நாமறிவோம். இதையும் மஸூத் அஸார் தலைமையிலான ஜெய்ஷ் தீவிரவாத இயக்கமே செய்தது என்பதும் உறுதியானது. இதற்கு பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்ட லஷ்கர்-இ-தாய்பா என்ற இயக்கும் உதவியாக இருந்துள்ளது.

இந்தியா சர்வதேச அரங்கில் இதற்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தபடியால், பேருக்கு இந்த மஸூத் அஸார் ஒரு வருடம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான். (எப்பேர்ப்பட்ட தண்டனை!) பிறகு வெளிவந்து சுதந்திரமாக பாகிஸ்தானில் உலவுகிறான்.

2014ல் நடந்த மிகப்பெரிய பேரணியில் மஸூத் அஸார் எப்பாடுபட்டாவது இந்தியாவின் பிடியிலிருந்து காஷ்மீரை விடுவிக்கப் போவதாக சவால் விடுகிறான். ஜனவரி 1, 2016ம் வருடம் ஜெய்ஷ் தீவிரவாதிகள் பதன்கோட்டில் உள்ள நமது விமான தளத்தைத் தாக்கி அதில் நம்முடைய விமானப்படையைச் சேர்ந்த 7 வீரர்கள் இறக்கிறார்கள்.

காந்தஹார் விவகாரத்தின் போது ஒரு அதிகம் அறியப்படாது இருந்த அஜித் தோவல் தற்போது மோடியின் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Advisor) இருக்கிறார். “பல வருடங்களாக இந்தியா பாகிஸ்தானின் இவ்வகைத் தாக்குதல்களை defensive mode (தற்காத்துக்கொள்ளும் பாணி) -லேயே இருந்து விட்டது. இனிமேல் அது நடக்காது” என்றார்.

இதைச் சொல்லி சில நாட்களிலேயே புல்வாமாவில் நடத்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் எல்லைக்குள் இந்திய விமானங்கள் சென்று, ஜெய்ஷ் தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாமை அழித்து ஒழித்தது. இந்தத் தாக்குதலில் மஸூத் அஸாரின் மைத்துனன் யூஸுஃப் அஸார் உட்பட ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தாலும், பாகிஸ்தான் அரசு எப்போதும் போல இதை மறுத்தது. இந்தியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலில் உள்ள செய்தியை நிச்சயம் புரிந்து கொண்டிருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

இந்தியா இதற்கான ஆதாரங்களை ஐ. நாவில் சமர்ப்பித்துள்ளது. இதற்குப் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து ஆதரித்து வந்த சீனாவும் தன்னுடைய போக்கில் மாற்றம் கொண்டுவந்து பாகிஸ்தானை எச்சரித்தது.

இந்த சர்வதேச எதிர்ப்புக்குப் பயந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “எங்கள் ராணுவம் என்றுமே தீவிரவாதிகளுடன் கை கோர்க்காது. எதிர்காலத்தில், இங்கு தீவிரவாதிகளே இல்லாத நிலையைக் கொண்டுவருவோம்” என்றெல்லாம் சூளுரைத்து நாடகமாடியிருக்கிறார்.

மஸூத் அஸார் சிறுநீரகக் கோளாறு வந்து அவதிப்படுவதாக பாகிஸ்தான் வட்டாரத்திலிருந்து செய்திகள் வருகின்றன.

ஆரம்பத்திலிருந்தே, பாகிஸ்தானின் ராணுவம் இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தே இயங்குகிறது. எனவே, இம்ரான் மட்டுமல்ல, இதற்கு முன் அங்கு பிரதமராக இருந்த அனைவருமே இதே பாணியில் பேசியவர்கள்தாம். இப்போது காஷ்மீரத்துக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் பாகிஸ்தானின் ராணுவத்துக்கும் அங்கு இயங்கும் பல தீவிரவாத அமைப்புகளுக்கும் பெரிய அடிதான்.

இதன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(நன்றி: நியூ யார்க் டைம்ஸ் தினசரி மற்றும் நியூ யார்க் டைம்ஸ் வெளியிடும் மாதப் பத்திரிகையின் மார்ச் 22ம் தேதி இதழில் யுத்ஜித் பட்டார்சார்ஜீ எழுதிய The Terrorist who got Away கட்டுரை.)

Leave a Reply