Posted on Leave a comment

கேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஆதி சங்கர பகவத்பாதர், நம் ஸனாதன தர்மத்தைக் காக்க வேண்டி பாரத பூமி முழுவதும் பயணம் செய்து நமது தர்மத்திற்குப் புத்துயிரூட்டினார். நம் பாரதத்தின் ஆச்சார்ய புருஷர்களில் மிக முக்கியமான ஒருவராகவே சங்கரர் விளங்குகிறார்.

அதன் அங்கமாக, இந்தியாவின் பல இடங்களில் அவருடைய சம்பந்தம் சொல்லப்படுகிறது. அவர் இந்த இடத்துக்கு விஜயம் செய்திருக்கிறார், இந்தக் கோவிலில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்திருக்கிறார், இந்த இடத்தில் அவர் தவம் செய்து இருக்கிறார் என்று பல தலங்களைச் சொல்லுவது வழக்கம். அதே போல அவருடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இந்த இடத்தில்தான் நடந்தது என்று ஒரே சம்பவத்தை இரண்டு மூன்று இடங்களில் சொல்வதும் வழக்கம் உண்டு. அந்த அளவுக்கு சங்கரரின் தாக்கம் பாரதக் கலாசாரத்தில் உண்டு.

அதேபோல சங்கர மடங்கள் என்று ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட மடங்களைப் பற்றியும், ஆதிசங்கரர் சமாதியான இடம் குறித்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் உண்டு.

இந்தியாவின் துறவற மரபுக்கும் சங்கரர் முன்னிலை வகிக்கிறார். நம் பாரதத்தில் இருக்கும் துறவிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தசநாமி என்று சொல்லக்கூடிய பத்து விதமான ஸந்யாஸ வகைகளாக அவரே வகுத்தார். தீர்த்த, ஆசிரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, ஸாகர, புரி, பாரதி, ஸரஸ்வதி எனும் பத்து பெயர்கள் கொண்ட சந்நியாசிகளாக அவர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.

பதரிநாத் முதல் ராமேச்வரம் வரை இப்படி ஆதிசங்கரரின் தாக்கம் நம் பாரதப் பண்பாட்டின் பல்வேறு தளங்களில் எதிரொலிப்பதைக் காண்கிறோம்.

ஆனால் ஆதிசங்கரர் தோன்றிய கேரளத்தில் சங்கரின் தாக்கம் குறைவு என்றும், சங்கரரின் அத்வைதக் கொள்கையை கேரளீய மக்கள் ஏற்கவில்லையென்றும் ஒரு பரவலான நம்பிக்கை இருந்து வருகிறது. அதே போல் நம்பூதிரிகள் சங்கரரின் சாபம் பெற்றவர்கள் என்றே பலர் சொல்வதுண்டு.

ஆனால் உண்மை அதுவல்ல! Fact Is Stranger Than Fiction எனும்படி, ஆச்சரியப்படும் விதமாக, கேரளத்திலும் சங்கரரின் தாக்கம் மட்டுமல்லாமல், சங்கர பரம்பரையே உண்டு! கேரளத்திலேயே நான்கு சங்கர மடங்களும் உண்டு.

சங்கரரின் சமாதித்தலம் காஞ்சிபுரம் என்றும், கேதாரம் என்றும் சொல்லப்பட்டே நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் ஆதிசங்கரரின் பூர்வீக ஊரான காலடிக்கு அருகில், குறிப்பாக திருசிவப்பேரூர் என்றழைக்கப்படும் திருச்சூரில் வடக்குநாதர் கோவிலில்தான், ஆதி சங்கரர் வடக்குநாதனிடம் (சிவபெருமானிடம்) ஒடுங்கி சமாதி அடைந்ததாக கேரளத்தில் ஒரு கருத்து உண்டு.

இந்த சிவப்பேரூரில்தான் சிவகுரு, ஆர்யாம்பாள் இருவரும் தவமிருந்து ஆதிசங்கரரை மகனாக அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலைப் பல சங்கர விஜயங்களும் சொல்லும். எங்கிருந்து தோன்றினாரோ அங்கேயே மீண்டும் லயமானார் என்று ஒரு கணக்கில் கேரளத்தில் சொல்லும் வழக்கம் உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக வடக்கு நாதர் கோவிலில் ஆதிசங்கரர் சமாதி என்று ஒரு இடம் வழிபடப்படுகிறது.

கேரள வரலாற்றின்படி ஆதிசங்கரரின் சமாதி திருச்சூரில் ஏற்பட்டதும், சங்கரரின் பக்தனாக விளங்கிய ராஜசேகர வர்மா என்ற சேரமான் பெருமாள் அரசன், நடுவில் மடம், தெற்கே மடம், இடையில் மடம், வடக்கே மடம் என்று நான்கு மடங்கள் திருச்சிவப்பேரூரை சுற்றி அமைத்தான். ஆதி சங்கரருடைய பிரதானமான சிஷ்யர்கள் நாலு பேரையும் அழைத்து வந்து அவர்களே இந்த மடத்தின் முதல் பீடாதிபதிகளாக வீற்றிருக்கச் செய்து, பின்னர் அவர்கள் மூலமாக நான்கு நம்பூதிரிகளுக்கு ஸந்யாஸம் கொடுக்கப்பட்டு, அவர்கள் பீடாதிபத்யத்தை சுவீகரித்துக் கொண்டார்கள் என்றும் கேரளா வரலாறு கூறுகிறது.

அதன்படி சுரேஷ்வராசார்யார் நடுவில் மடத்தையும், பத்மபாதர் தெக்கே மடத்தையும், ஹஸ்தாமலகர் இடையில் மடத்தையும், தோடகர் வடக்கே மடத்தையும் தோற்றுவித்தார்கள் என்பது கேரள மக்கள் கூறும் வரலாறு.

பாரத பூமியெங்கும் ஆம்னாய பீடங்களாக சங்கர மடங்கள் இருப்பது போல கேரளத்திலும் ஆதிசங்கர குரு பரம்பரையைச் சேர்ந்த சங்கர பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேரள நம்பூதிரி பிராமணர்களே அங்கே பீடாதிபதிகளாக அமர்ந்திருக்கிறார்கள்.

பொதுவில் அவர்கள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தை ஏற்பது இல்லை. மூப்பில் ஸ்வாமியார் என்றே அவரை அழைப்பது ஸம்ப்ரதாயம். என்றாலும் வழக்குச் சொல்லாக ‘கேரள சங்கராச்சாரியார்’ அல்லது ‘நம்பூதிரி சங்கராச்சாரியார்’ என்று அவர்களைச் சொல்வது உண்டு.

ஆம்னாய மடங்களுக்கு இருப்பதைப் போலவே இவர்களுக்கும் தனிப்பட்ட வேதம், உபநிஷத், வழிபாட்டு மூர்த்தி என சதுர்தாம ஸந்யாஸ நியமம் என்றதொரு பட்டியல் வைத்திருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

 

மடம் வேதம் உபநிஷத் மூர்த்தி
தெக்கே மடம் ரிக் ஐதரேயோபநிஷத் நரஸிம்மர்
நடுவில் மடம் யஜுர் கடோபநிஷத் பார்த்தசாரதி
வடக்கே மடம் ஸாம சாந்தோக்ய உபநிஷத் தக்ஷிணாமூர்த்தி
இடையில் மடம் அதர்வ மாண்டூக்ய உபநிஷத் ஸ்ரீ ராமன்

வடக்கே மடம்

திருச்சூரின் பெரும் வேதாந்த கேந்திரமாக, பலநூறு நம்பூதிரிகளைக் கொண்டு விளங்கிய வடக்கே மடம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதிருந்த ஸ்வாமியார் சிஷ்யரைத் தேர்ந்தெடுக்காத காரணத்தால், அவர் சமாதியடைந்ததும், மடத்தின் பரம்பரை முடிவுற்றது. ஆயினும் இதன் கிளை மடமாக காஸர்கோட்டில் இருக்கும் இடநீர் மடம் கருதப்படுகிறது.

இன்று திருச்சூரில் வடக்கே மடம் இருந்த இடத்தில், அதன் பூஜா மூர்த்திகள் இருந்தாலும் அது ஒரு வேத வித்யாலயமாகச் சிறப்பாகச் செயல்படுகிறது. ப்ரம்மஸ்வம் மடம் என்று இன்று அழைக்கப்படுகிறது.

தெக்கே மடம்

தெக்கேமடம் இன்றளவும் திருச்சூரில் செயல்படுகிறது. இடையில் மடம் த்ரிச்சூரிலிருந்து மலபாருக்கு இடம் பெயர்ந்த போது, தெக்கே மடம் இடையில் மடத்தின் ஸ்தலத்தில் இடம் மாறியது. கிட்டத்தட்ட 84 பீடாதிபதிகளைக் கடந்து இன்றளவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மடம் இது. கேரள சங்கர மடங்களின் தலைமைக் கேந்திரமாக விளங்கும் வடக்குநாதன் கோவிலின் புஷ்பாஞ்சலி ஸ்வாமியாராக இன்றளவும் அதிகாரம் உள்ளவர் தெக்கே மடம் ஸ்வாமியார்களே.

ஸ்ரீ வாஸுதேவானந்த ப்ரம்மானந்த பூதி ஸ்வாமிகளே இதன் இன்றைய பீடாதிபதி.

இடையில் மடம்

திருச்சூர் பகுதியில் செயல்பட்டு வந்த இடையில் மடம் பின்னர் கோழிக்கோடு ஸாமூத்ரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மலபார் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இடையில் மடம் – த்ருக்கைக்காட்டு மடம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆனால் மலபாரில் திப்புவின் ஆக்ரமிப்பு தொடங்கிய போது, வேறு வழியில்லாமல் மீண்டும் இடம் பெயர்ந்து தன் மடத்தின் வழிபாட்டு மூர்த்திகளுடன் கிளம்பியது.

தென் திசை நோக்கி வந்த ஸ்வாமியாருக்கு திருவிதாங்கூர் அரசர், தர்மராஜா என்று அழைக்கப்பட்ட கார்த்திகை திருநாள் மஹாராஜா, கன்யாகுமரி மார்த்தாண்டம் அருகே முன்சிறை (அன்றைய கேரளா- இன்று தமிழ்நாடு) என்ற கிராமத்தில் மடம் அமைத்துக் கொடுத்தார். இடையில் மடம், ‘முன்சிறை மடம்’ என்று பெயர் பெற்றது.

ஸ்ரீ பரமேச்வர ப்ரம்மானந்த தீர்த்தர் என்பவரே இன்றைய முன்சிறை மடத்து பீடாதிபதி.

தமிழகத்தில் உள்ள இவரது முன்சிறை மடத்தைச் சிலர் ஆக்ரமித்துக் கொண்டு இவரையே உள்ளே விடாமல் தடுத்ததும் இவர் மனவருத்தம் கொண்டு தெருவோரத்தில் தன் சாதுர்மாஸ்யத்தை நடத்திய அவலம் செய்தியாக வந்ததும் நினைவிருக்கலாம்.

நடுவில் மடம்

சுரேச்வரரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீ வில்வமங்களம் ஸ்வாமியாரே நடுவில் மடத்தின் பீடாதிபதி. இவரால் உருவாக்கப்பட்டதே திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயம். குருவாயூர், சோட்டானிக்கரை என பல பிரபலமான கேரள ஆலயங்களுடன் தொடர்புடையவர்கள் வில்வமங்களம் ஸ்வாமியார்கள். ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம் போன்ற க்ரந்தங்களை எழுதியவரும் இந்த மடத்தைச் சேர்ந்த ஸ்வாமிகளே.

இந்த நடுவில் மடத்து ஸ்வாமியார்களுக்கும் முன்சிறை மடத்தின் ஸ்வாமிகளுக்குமே பத்மநாப ஸ்வாமி கோவிலில் புஷ்பாஞ்சலி நடத்தும் உரிமை உண்டு.

பத்மநாப ஸ்வாமி ஆலய வழிகாட்டியாக விளங்கும் எட்டர யோகம் என்ற அமைப்பின் நிரந்தர தலைமைப் பீடத்தில் இன்றும் புஷ்பாஞ்சலி ஸ்வாமியார்களே இருக்கிறார்கள். திருவிதாங்கூரின் ராஜ குடும்பத்தில் ஒரு புதிய வாரிசை தத்து எடுப்பதானால் கூட இவர்களது அனுமதி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவில் மடம் இன்றளவும் செல்வாக்குள்ள மடமாக விளங்கி நாற்பதுக்கும் மேற்பட்ட கோவில்களை நடத்தி வருகிறது. மரவஞ்சேரி தெக்கேடத்து ஸ்ரீ நீலகண்ட பாரதி ஸ்வாமிகளே இதன் இன்றைய பீடாதிபதி.

பத்மநாபர் ஆலயத்தின் secret chamber எனப்படும் அறைகளைத் திறக்க இவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாரதீய ஞான மரபு இன்றளவும் வாழ்வதற்கு ஆதி சங்காரின் பணி மிகவும் இன்றியமையாதது. சங்கரரின் அத்வைத தத்துவமே பாரதத்தையும் தாண்டி உலகளாவிய தத்துவ தரிசனமாக இன்று ஏற்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது, கேரளத்தில் மட்டும் அது இல்லாமல் இருக்க முடியுமா?

பாரதத்தின் மற்ற பகுதிகளுக்கும் கேரளத்துக்கும் உள்ள ஒரே மாறுதல், அங்கே க்ருஹஸ்தர்களுக்கு பெரிய அளவில் வேதாந்த பாடம் கிடையாது. அவை ஸந்யாஸிகளுக்கு மட்டுமே உரியது! கேரளத்தின் சங்கர பரம்பரையில் வரும் இவர்கள் எல்லோருமே அத்வைத ஸந்யாஸிகளே!

இந்தியத் தத்துவம் என்றாலே அத்வைதம்தான் என்று கூறும் அளவிற்கு அவரது தாக்கம் இருந்தது. கடவுளர் தேசம் என்று சொல்லப்படும் கேரளத்திலும் சங்கரரின் வீச்சு இன்றளவும் கேரளத்துக்கே உரிய மரபில் உயிர்ப்புடன் இருக்கவே செய்கிறது.

Leave a Reply