(இந்திரப்பிரஸ்தா விஷ்வ சம்வாத் கேந்திரத்தின் சி.இ.ஓ அருண் ஆனந்த், ஆர்எஸ்எஸ் பற்றிய இரண்டு நூல்களை எழுதி உள்ளார். அவர் எழுதி ‘தி ப்ரிண்ட்’ இதழில் வெளியான இக்கட்டுரையின் தமிழாக்கம் இங்கே அவரது அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.)
இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் ஜம்மு & காஷ்மீரை முழுமையாக ஒருங்கிணைக்க 1952ல் ஸ்யாமா பிரசாத் முகர்ஜீ சத்தியாகிரகம் தொடங்கினார். 1953 ஜூன் 23 அன்று ஸ்ரீ நகரில் காலமானார்.
பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜீ நினைவு நாள் நடப்பு ஆண்டில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் எந்த நோக்கத்துக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்தாரோ அது அவர் மறைந்து சற்றேறக் குறைய அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தர்க்கரீதியான முடிவைக் கண்டுள்ளது…
2019 ஆகஸ்ட் 5ம் தேதி நரேந்திர மோதி அரசு இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ஜம்மு காஷ்மீரில் இருந்து திரும்பப் பெற்றது. இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களையும் ஜம்மு & காஷ்மீருக்கும் விரிவுபடுத்த வழி வகுத்துள்ளது.
இரண்டாகப் பிரிக்கப்பட்ட இம்மாநிலத்துக்கு இனி தனியாகக் கொடி இல்லை. இது முகர்ஜீ எழுப்பிய முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாகும்.
‘ஒரு நாட்டுக்கு இரு கொடிகளையும், இரு பிரதமர்களையும், இரு அரசியல் அமைப்புச் சட்டங்களையும் ஏற்க முடியாது, ஏற்க முடியாது’ – டாக்டர் முகர்ஜீ விடுத்த உணர்ச்சி மிக்க முழக்கத்துக்கான உச்சகட்ட முடிவைத்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டோம். சுதந்திரத்துக்குப் பிந்திய காலத்தில் இவர் தொடங்கிய முதல் சத்தியாகிரகம் ஏராளமான மக்களை ஈர்த்தது.
இரு நாட்டு சிறுபான்மை இனத்தவர்களின் நலம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க 1950ல் நேரு – லியாகத் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை எதிர்த்து நேருவின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலைவரான முகர்ஜீ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து நேருவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியவர்களுள் ஜனசங்க நிறுவனரான முகர்ஜீயும் ஒருவரானார். ஜம்மு & காஷ்மீர் பிரச்சினையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுடன் அதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்தார். மர்மமான முறையில் ஜூன் 23 அன்று ஸ்ரீநகரில் முகர்ஜீ காலமானார்.
1952 ஏப்ரலில் ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த பிரஜா பரிஷத் கட்சித் தலைவர் பிரேம்நாத் தோக்ரா புது தில்லியில் முகர்ஜீயைச் சந்தித்து மாநிலத்தில் நிலவும் போராட்டத்துக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்தே அனைத்தும் ஆரம்பமானது.
மாநில அரசின் அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்தியாவுடனான ஜம்மு & காஷ்மீர் இணைப்பு முடிவு செய்யப்பட வேண்டும் என்பது பரிஷத்தின் முக்கியக் கோரிக்கை ஆகும். மேலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், குடியுரிமை, நிதி ஒருங்கிணைப்பு, உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கான அவசர நிலை அதிகாரங்கள், சுங்க வரி ரத்து, தேர்தல் நடத்துதல், இந்திய தேசியக் கொடியின் மாண்பு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளின் மீட்பு மற்றும் குடியமர்த்துதல் தொடர்பான கொள்கைகளையும் மாநில அரசு ஏற்றுக் கொள்ள இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
பிரேம் நாத் தோக்ரா மேற்கண்ட அனைத்து விவரங்களையும் நேருவிடம் தெரிவிக்க முகர்ஜீ ஆலோசனை கூறினார். நேருவைச் சந்திக்க தோக்ரா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
ஜம்மு & காஷ்மீரில் முகர்ஜீ
தில்லி நிகழ்வுகள் ஏமாற்றம் அளிக்கவே தோக்ரா திரும்பிச் சென்றார். அவரது தலைமையிலான பிரஜா பரிஷத் 1952 ஆகஸ்ட் 9-10 தேதிகளில் கட்சி ஊழியர்களின் கூட்டத்துக்கு ஜம்முவில் ஏற்பாடு செய்ய முடிவெடுத்தது. கூட்டத்தில் பங்கேற்க முகர்ஜீ உள்பட ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மூத்த அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். ஜம்முவில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்றிய ஜனசங்க நிறுவனர் ‘ஒரே அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு’ அறைகூவல் விடுத்தார்.
இந்த வருகையின் போது ஷேக் அப்துல்லாவைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். ஆனாலும் பேச்சுவார்த்தையில் எந்த ஆக்கபூர்வ முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1952 டிசம்பர் தொடக்கத்தில் பிரஜா பரிஷத் ஜம்மு & காஷ்மீரில் அமைதியான சத்தியாகிரகத்தைத் தொடங்கியது. இந்த இயக்கத்துக்கு பாரதிய ஜனசங்கம் தனது ஆதரவை அளித்தது.
1952 டிசம்பர் 29 – 31 வரை நடைபெற்ற பாரதிய ஜனசங்கத்தின் முதல் வருடாந்திர அமர்வுக்குப் பின்னர் இந்த இயக்கத்துக்கு ஆதரவாக நேருவுக்குக் கடிதங்கள் எழுத முகர்ஜீ முடிவு செய்தார்.
இதற்கிடையே, ஜம்மு & காஷ்மீரில் நிலைமை மோசமடையத் தொடங்கவே அந்த மாநிலத்தில் நடைபெறும் அட்டூழியங்கள் குறித்து முகர்ஜீக்குப் பல கடிதங்கள் வந்தன. 1953 பிப்ரவரி 27ம் தேதி பிரஜா பரிஷத் பொதுச் செயலர் துர்கா தாஸ் வர்மா இவருக்குத் தந்தி அனுப்பினார். அதன் நகல்கள் இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட தில்லியிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
‘பரிஷத் நகரத் தலைவர் டாக்டர் ஓம்பிரகாஷ், கொள்கைப் பரப்புச் செயலர் ஸ்ரீ கோபால் தாஸ் மற்றும் நான்கு நபர்கள் மீது அதிகார வர்க்கத்தினரால் கருணையற்ற, வெட்கக்கேடான காட்டுமிராண்டித் தாக்குதல்; அவமதிக்கும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் ஸ்ரீநகருக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பு; கோபால் தாஸ் கை எலும்பு முறிவு; கடந்த ஐந்து நாள்களாகப் பட்டினிப்போர்; பொது மக்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளிப்பு; உடனடியாகத் தலையிடுமாறு வேண்டுகிறோம்’ – என்பதே அத்தந்தியின் வாகசங்களாகும்.
இந்தத் தந்தி அனுப்புவதற்கு ஒருநாள் முன்பு பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபா மற்றும் அகாலி தளத் தலைவர்களின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பிரஜா பரிஷத் கட்சி நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் 1953 மார்ச் 5ம் தேதியை ‘ஜம்மு & காஷ்மீர் தினம்’ ஆகக் கடைப்பிடிக்க முடிவெடுக்கப்பட்டது.
அன்றைய தினம் புது தில்லி கம்பெனி பாக்-இல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முகர்ஜீ, பிரஜா பரிஷத் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியிலும், பதான்கோட்டிலும், பஞ்சாபின் ஏனைய மாவட்டங்களிலும், சத்தியாகிரகத்தைத் தொடங்கக் கூட்டுக் குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மார்ச் 6ம் தேதி இதே பிரச்சினைக்காக, தில்லியில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் பங்கேற்றமைக்காக, முகர்ஜீ இபிகோ 144 பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். இருப்பினும் உச்சநீதி மன்ற உத்தரவின்படி அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
(இ-வ) ஸ்யாமா பிரசாத் முகர்ஜீ, ஜெய்ராம்தாஸ் தௌலத் ராம் மற்றும் ஜவாஹர்லால் நேரு
ஜம்மு & காஷ்மீர் சத்தியாகிரகம்
சத்தியாகிரகம் தொடங்கியவுடன் முகர்ஜீ பரவலான பயணங்களை மேற்கொண்டார். தில்லி, ஜெய்பூர், அஜ்மீர், போபால், குவாலியர், இந்தூர் உள்ளிட்ட பல நகரங்களிலும், ஊர்களிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் குவிந்த பொதுக் கூட்டங்களிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் உரையாற்றினார்.
சத்தியாகிரகத்துக்கு அதிக அளவில் கூட்டம் கூடியது என உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைகள் தெரிவித்தன. (தில்லியில் நடைபெற்ற பிரஜா பரிஷத் ஆர்பாட்டம் தொடர்பான டிஐபி அறிக்கைகள், இந்திய ஆவணங்கள் காப்பகம், புது தில்லி; மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டேட்ஸ் f.no. 8,(20)-k/53.)
ஜம்மு & காஷ்மீருக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை முகர்ஜீ நிறைவாக உணர்ந்து கொண்டார். 1953 மே 8ம் தேதி தொடர்வண்டியில் தில்லியை விட்டுப் புறப்பட்டார். பயணத்தில் நடுவே அம்பாலாவில் (இன்றைய ஹரியானா மாநிலம்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். ஜம்மு & காஷ்மீருக்கு வர விருப்பம் தெரிவித்து அங்கிருந்து ஷேக் அப்துல்லாவுக்குத் தந்தியும் அனுப்பினார்.
அடுத்த நாள் முகர்ஜீ அனுப்பிய கீழ்க்காணும் தந்தியை ஷேக் அப்துல்லா தில்லியிலுள்ள பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் அனுப்பினார்.
‘ஜம்முவில் நிலவும் தற்போதைய சூழலை நானே நேரடியாகக் காண்பதுடன் அங்குள்ள மக்களையும் சந்திப்பதே எனது நோக்கமாகும். அமைதியான தீர்வை உருவாக்க, சம்மந்தப்பட்ட அனைவரின் நல்லுணர்வுகளை மீட்டெடுப்பதுடன், புரிதலையும் ஏற்படுத்தத் தேவையான எல்லா வழிவகைகளையும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். ஜம்முவில் நிலவும் சூழலை ஆய்வு செய்த பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பையும் வரவேற்கிறேன்.’
ஜம்மு & காஷ்மீருக்குச் செல்லும் வழியில் ஷாஹாபாத்திலும், நிலோகேரியிலும் (இரண்டுமே இன்றைய ஹரியானாவில் உள்ளன) பொதுக் கூட்டங்களில் உரையாற்ற அம்பாலாவிலிருந்து கர்னலுக்குச் சென்றார். அமிர்தசரஸுக்குப் பயணிப்பதற்கு முன் ஜலந்தருக்குச் செல்ல மே 9ம் தேதி பானிப்பட்டை அடைந்தார்.
மே 10ம் தேதி அமிர்தசரஸில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும், பத்திரிக்கையாளர் சந்திப்புகளிலும் உரையாற்றிய பின்னர் அன்றைய இரவை அங்கேயே கழித்தார். மே11ம் தேதி பதான்கோட்டை அடைந்தார். ஷேக் அப்துல்லா அவர் அனுப்பிய தந்திக்கு ‘சந்தர்ப்பத்துக்கு ஒவ்வாத பயணம்’ என்று பதில் அனுப்பி இருந்தார்
பதான்கோட்டில் இருந்து ஜம்மு & காஷ்மீரைச் சென்றடைந்தார் முகர்ஜீ. அவர் உள்ளே நுழைந்த அடுத்த வினாடி ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலர் மௌலானா முசூடி முன்னிலையில், அப்போதைய ஜம்மு & காஷ்மீர் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கைது செய்தார்.
ஜம்முவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜனசங்கத் தலைவர் அங்கிருந்து ஸ்ரீநகர் மத்தியச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து பின்னர் நிஷத் பாக்-இல் உள்ள சிறு குடிலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
ஸ்ரீநகரில் ஒரு மாதத்துக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் முகர்ஜீ. ஸ்ரீநகர் தடுப்புக் காவலில் இருக்கும்போதே 1953 ஜூம் 23 அன்று மர்மமான முறையில் மரணத்தைத் தழுவினார்.