ஹாலில் டெலிபோன் மணி ஒலித்தது. நடேசன் எடுத்து “ஹலோ” என்றார்.
“அங்கிள், நான் பாசு பேசறேன்.” உடைந்த குரலே காட்டிக் கொடுத்து விட்டது.
“சொல்லுப்பா.”
“பத்து நிமிஷத்துக்கு மின்னே பெரியப்பா தவறிட்டார். டாக்டர் மோகன் வந்து பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணினார்.”
“ஐய்யய்ய. ஸோ ஸேட். நான் கிளம்பி வரேன்.”
ராமுவும் நடேசனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தார்கள். சம வயது. ராமு கொஞ்ச வருஷமாகவே உடம்பு சரியில்லாமல் இருந்தார். நேற்றுக் கூட நடேசன் ராமுவைப் போய்ப் பார்த்து விட்டுத்தான் வந்தார். டாக்டர் நோயின் கடுமையைத் தாங்கும் சக்தி ராமுவுக்கு மிகவும் குறைந்து போய் விட்டது என்று சிவப்புக் கொடியைக் காட்டி விட்டுப் போனார். பாசு ராமுவின் அண்ணா பையன். சென்னையில் வேலையாய் இருக்கிறான். அவர் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாயிருக்கிறது என்று பெங்களூருக்கு இரண்டு நாள்கள் முன்னால் வந்திருந்தான்.
நடேசன் வீட்டை விட்டு வெளியே வரும் போது ராகவேந்திரா கோயில் அர்ச்சகர் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தபடி கடந்து சென்று கோயிலுக்குள் நுழைந்தார். நடேசனுக்கு சாமா சாஸ்திரிகளின் ஞாபகம் வந்தது. அவருக்கும் ராமுவுக்கும் சாமாதான் குடும்ப வாத்தியார். குடும்ப டாக்டர், குடும்ப வக்கீல் என்பது போல. ராமுவின் வீட்டில் சாமா சாஸ்திரிகளுக்குச் சொல்லி அனுப்பியிருப்பார்கள்.
அவர் கையில் கட்டியிருந்த கடிகாரம் எட்டரை மணி என்றது. எட்டாவது கிராஸிலிருந்து பதினேழாம் கிராஸில் இருக்கும் ராமுவின் வீட்டுக்கு நடந்தே போய் விடலாம். இருந்தாலும் இந்த மாதிரியான சமயத்தில் உதவியாய் இருக்கக்கூடும் என்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
ராமுவின் வீட்டு வாசலிலும், எதிர்ப்புறத்திலும் கார்களும் இரு சக்கர வண்டிகளும் நின்றிருந்தன. வாசலில் நின்றிருந்த ராமுவுக்கும் அவருக்குமான நண்பர்கள் சிறு தலையசைப்புடன் அவரைப் பார்த்தார்கள். அவர் வீட்டின் உள்ளே சென்றார். ஆண்களும் பெண்களுமாய் உறவினர்கள் கூட்டம். அவர்கள் எல்லோருக்கும் அவரை ஒரு குடும்ப உறுப்பினர் போலத் தெரியும். அப்போது பாசு வெளியிலிருந்து வருவதைப் பார்த்தார். பாசு அவரைப் பார்த்ததும் நெருங்கி வந்து சடலம் வைத்திருந்த குளிர்ப் பெட்டியருகே அழைத்துச் சென்றான். தூங்குவதைப் போலத்தான் ராமுவின் உடல் காட்சியளித்தது.
அவர் கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி வந்து பெட்டியின் மேல் இருகைகளையும் வைத்துக் கண்ணை மூடிக் கொண்டார். மனது அலைக்கழிந்தது. போனவர்களுக்கும் சரி, இருப்பவர்களுக்கும் சரி, சாவு எப்போதும் நிம்மதியைத்தருவதில்லை என்று நினைத்தார். அவர் கண்ணைத் திறந்ததும் பாசு அவரை ஒரு ஓரமாக அழைத்துச் சென்றான்.
“எங்க இன்னும் சாமாவைக் காணம்?” என்று பாசுவிடம் கேட்டார்.
“அதைச் சொல்லத்தான் உங்களைக் கூட்டிண்டு இங்க வந்தேன். போன் பண்ணிக் கிடைக்கவே இல்லையேன்னு அவரோட ஆத்துக்கே போயிட்டுதான் இப்ப வரேன். அவர் ஊர்ல இல்லையாம். சிருங்கேரி போயிருக்காராம், மஹா சந்நிதானத்தைப் பாத்துட்டு வரதுக்கு. ஃபாமிலியோட போயிருக்கார்ன்னு ஆத்துல இருந்த அவாத்து சமையக்காரர் சொன்னார்.”
“அடக் கண்ராவியே. இப்ப என்ன பண்றது? யாரைப் போய்த் தேடறது?”
“சமையக்காரர், சாஸ்திரிகளோட போன் கெட்டுப் போயிருக்குன்னு அவர் பையனோட நம்பரைக் கொடுத்தார். அவனோட பேசினேன். அப்புறம் சாமாவே லயன்ல வந்தார். விஷயத்தைக் கேட்டதும் ரொம்ப வருத்தப்பட்டார். அவர் நாளைக்கு மத்தியானம் ஊருக்குத் திரும்பி வரார். அதனால இன்னிக்கும் நாளைக்கும் வேற வாத்யார் வச்சுண்டு பண்ணிடுன்னார்.”
அப்போது பாசுவின் அம்மா அங்கே வந்தாள். நடேசனைப் பார்த்ததும் தலையை அசைத்தாள். பாசுவிடம் ”ஹேமா அரை மணிக்கு மின்னால கிளம்பிட்டாளாம். இங்க பத்து, பத்தரைக்கு வந்துடுவேன்னு போன் பண்ணா” என்றாள்.
ஹேமா ராமுவின் ஒரே பெண். ஓசூரில் கொடுத்திருக்கிறது. பேர்தான் பெங்களூரிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரம் என்று. காரை எடுத்துக் கொண்டு வந்தாலும் பெங்களூருக்குள் நுழைந்ததும் எதிர்ப்படுகிற ராட்சச டிராஃபிக்கின் ராட்சசப் பல்லில் கடிபட்டு ஊருக்குள் வருவது புது அவதாரம் எடுத்தது போல்தான். பத்து மணிக்கு வர ஆகாது. பத்தரைக்கு வந்து விடலாம்.
பாசுவின் தாயார் சென்றதும் பாசு அவரைப் பார்த்து “சாமா ரெண்டு வாத்யாரோட நம்பர் கொடுத்திருக்கார். அவர் ஆத்து வாசல்லேர்ந்தே ஒருத்தரைக் காண்டாக்ட் பண்ணினேன். அவர் எதோ சஷ்டியப்தபூர்த்தி நடத்திக் கொடுத்திண்டிருக்கேன்னார். இன்னொருத்தர் விஷயத்தைக் கேட்டுண்டுட்டு சாரி, என் பையனுக்கு உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரில இருக்கேன்னார்” என்றான்.
நடேசன் “இப்ப வாத்யாரைத் தேடிண்டு போணுமா? எனக்கு ராகவேந்திரா கோயில் அர்ச்சகரைத் தெரியும். அவரைக் கேட்டா யாராவது வாத்யாரை சொல்லுவாரான்னு பார்ப்பம்” என்று நடேசன் தன் கைபேசியை எடுத்தார்.
“இருங்கோ, இருங்கோ. அந்த ரெண்டாவது சாஸ்திரிகள் இன்னொருத்தர் நம்பரைக் கொடுத்தார். அவர் இங்கதான் பக்கத்துல மில்க் கால்னி இருக்காராம். அவ்ருக்குப் போன் பண்ணினேன். ரிங் போயிண்டே இருந்தது. எடுக்கலை” என்றான் பாசு.
“சே, இந்த சமயம் பாத்து சாமா இல்லை பாரேன்” என்றார் நடேசன். “அவரே வந்து எல்லா வேலையும் ஆரமிச்சிடுவர். அரிச்சந்திரா காட்ல இருக்கறவனையெல்லாம் அவருக்குத் தெரியும். அவன் க்ரிமேஷன் டைம் குடுக்கறதுக்குப் பதிலா அவர் அவன்கிட்ட எப்ப வருவோம்னு சொல்லிட்டுப் போனைக் கீழே வச்சிடுவர். கூப்பிட்ட குரலுக்கு ஒண்ணு ரெண்டு அசிஸ்டண்டும் கை வசம் இருப்பா. எல்லாத்துக்கும் மேல நம்மாத்துல பண்றதுக்கு பணத்தைப் பத்திப் பேச மாட்டாரே. ஹூம். இப்போ முதல்ல வாத்யாரைக் கண்டு பிடிக்கணும். அவரை வச்சுண்டு மத்த ஏற்பாடெல்லாம் செய்யணும். ஹேமாவும் வந்துட்டான்னா, நல்ல வேளையா அப்புறம் வெளியூர்லேந்து வேற யாரும் வரதுக்கில்லை.”
அப்போது பாசுவின் கைபேசி ஒலித்தது. அதைப் பார்த்து விட்டு “மில்க் கால்னி வாத்யார்தான். நீங்களும் கேளுங்கோ” என்று லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு “ஹலோ” என்றான்.
“ஐ’ம்.சேஷு. தேர் வாஸ் எ மிஸ்ட் கால்” என்றது மறுமுனைக் குரல்.
“குட்மார்னிங். என் பேர் பாசு. மல்லேஸ்வரம் செவென்டீன்த் கிராஸிலிருந்து பேசுகிறேன். நான்தான் உங்களுக்குப் போன் பண்ணினேன்” என்றான் பாசு ஆங்கிலத்தில். தொடர்ந்து தமிழில் ”காலங்காத்தால உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன்” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சொல்லுங்கோ” என்றார் சேஷு.
“என் பெரியப்பா இன்னிக்கிக் கார்த்தால தவறிட்டார். உங்க நம்பரை ராமநாத வாத்யார் குடுத்தார்..”
“அவர் உங்காத்து வாத்யாரா?” என்று கேட்டார் சேஷு.
“இல்லை. சாமா வாத்யார்” என்றான் பாசு.
“எந்த சாமா வாத்யார்? மல்லேஸ்வரத்தில பதினஞ்சாவது கிராஸிலேயே ரெண்டு சாமா இருக்காளே” என்று சேஷு சிரித்தார். “கார் வச்சுண்டு இருக்கறவரா? இல்லே சைக்கிள்ல வருவாரே அவரா?” என்று கேட்டார் சேஷு.
நடேசனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அடக்கிக் கொண்டு புன்னகை புரிந்தார். பாசுவும் அதே இக்கட்டில் இருந்தான்.
“தெரியலையே. ஒரு நிமிஷம் இருங்கோ” என்ற பாசு நடேசனைப் பார்த்தான்.
அவர் “கார் வச்சிண்டிருக்கறவர்” என்றார்.
பாசு “கார் வச்சிண்டிருக்கற வாத்யார்தான்” என்றான்.
“ஓ, அப்ப அவர் பதினஞ்சாம் கிராஸ் அப்ல இருக்கறவர். சைக்கிள் வச்சிண்டிருக்கிறவர் பதினஞ்சாம் கிராஸ் டவுன்ல இருக்கார்” என்றார் சேஷு.
“சாமா வாத்யார் நாளைக்கு மத்தியானம் ஊருக்கு வந்துடறார். அதனால இன்னிக்கும் நாளைக்கும் நீங்க பண்ணி வைக்கணும். நாங்க இப்ப உங்களைப் பாக்கக் கிளம்பி வரட்டுமா?’ என்றான் பாசு.
“வாங்கோளேன்” என்றார் சேஷு. “அட்ரஸ்சை எஸ்செம்மெஸ் பண்றேன். நீங்க வர எத்தனை நாழி ஆகும்? ஒரு கால் மணியிலே வந்துடுங்கோ” என்று அவரே கேள்வி கேட்டு அவரே பதிலையும் தந்து விட்டார்.
அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
“இந்த சேஷு சீக்கிரம் வந்துடுறவர் மாதிரிதான் தோணறது. சீக்கிரம் வந்தா சீக்கிரமா காரியங்களை எல்லாம் பண்ணிடலாம்” என்றபடி காரில் ஏறி உட்கார்ந்தார். பாசு அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.
பதினேழாவது கிராஸிலிருந்து எட்டாவது மெய்ன் மேலே நேராகச் சென்று எதிர்ப்பட்ட பாலத்தின் மீது ஏறி இறங்கியதும் வலது பக்கம் தென்பட்ட சிறிய சாலையில் ஒரு போர்டில் மில்க் கால்னி என்றிருந்தது. அவர்கள் சேஷுவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அமுக்கியதும் கதவு திறந்தது. கதவைத் திறந்த இளைஞனுக்கு முப்பது வயதிருக்கும். நல்ல உயரம். பளீரென்று வெள்ளை நிறம், நெற்றியில் கைகளில் மார்பில் விபூதி பட்டைகள் வெளேரென்று மின்னின. இடுப்பில் வெள்ளைப் பஞ்சகச்சம், மார்பில் மாலையாக வெள்ளை உத்தரீயம். மிகுந்த மரியாதையை எழுப்பும் தோற்றம்.
நடேசனைப் பார்த்து “நமஸ்காரம்” என்றார். பாசுவைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். “நான் சேஷு” என்றார்.
“நீங்க இவ்வளவு யங்கா இருப்பேள்ன்னு நான் நினைக்கலை” என்றான் பாசு.
“அது உங்க தப்பு இல்லை” என்று சேஷு சிரித்தார். “என் உத்தியோகம் என் பேர் இத ரெண்டையும்தான் பழிக்கணும்.”
நடேசனும் பாசுவும் புன்னகை செய்தார்கள்.
“நானும் வெளில இன்னிக்கிப் போறதா இருந்தேன். மடத்துல ஒரு வாரமா பாராயணம் நடந்துண்டு இருக்கு. ஆனா நீங்க துக்க சமாச்சாரத்தை வச்சுண்டு கூப்பிட்டேள். மனுஷாள் துக்கத்துக்கு நிவர்த்தி கிடையாதுன்னு இல்ல. ஆனா ப்ராப்தம் இருக்கற வரைக்கும் அனுபவிச்சுண்டுதான் இருக்கணும். இல்லியா? நீங்க கேட்டப்போ என்னால முடிஞ்சதுன்னு சரீன்னுட்டேன். ஆனா நான் அவ்வளவா இந்தக் காரியத்தை எடுத்துக்கறதில்லை.”
சேஷு துக்கம் ஒலிக்கும் குரலில் சொன்னார். சற்று மனதைப் பிழிகிற குரலாயிருந்தது. அவர்கள் இருவரும் எதுவும் சொல்லத் தோன்றாதவர்களாய்த் தலையை ஆட்டினார்கள்.
“ஊர்லேந்து வரவேண்டியவா எல்லாரும் வந்தாச்சா? இல்ல யாருக்காவது காத்துண்டு இருக்கணுமா?” என்று கேட்டார் சேஷு.
“ஒரே பெண், ஒசூரிலிருந்து வந்துண்டிருக்கா. பத்தரைக்கு வந்துடுவா” என்று நடேசன் சொன்னார்.
“எங்க எடுத்துண்டு போய்க் காரியம் பண்ணறதா இருக்கேள்? எரிக்கிறேளா? இல்ல எலெக்ட்ரிக்கா?” என்று சேஷு கேட்டார்.
“அரிச்சந்திரா காட் தான பக்கத்தில இருக்கு. அங்கயே போயிடலாம்னு இருக்கோம். எலெக்ட்ரிக்தான். அங்க உங்களுக்கு தெரிஞ்சவா இருக்காளா?” என்று பாசு கேட்டான்.
“தெரிஞ்சவான்னா யாரு? பைசாதான் தெரிஞ்சவா. அது எல்லாரையும் வாங்கிண்டு வந்துடுமே” என்றார் சேஷு. “ஒரு போன் பண்ணினா ஆச்சு.”
பிறகு நடேசனிடம் “இன்னிக்கி வியாழக்கிழமை. பத்தேமுக்கால்லேந்து ஒண்ணே முக்காலுக்குள்ள சாஸ்த்ரோக்தமா நேரம் நன்னா இருக்கு. அந்த சமயம் அரிச்சந்திரா காட் போய்க் காரியத்தையெல்லாம் முடிச்சிண்டுடலாம் இல்லையா?’ என்று கேட்டார் சேஷு.
நடேசன் “அதுவும் சரிதான். முடிச்சுட்டு ஆத்துக்கு வந்து எல்லாரும் ஸ்நானம் பண்ணினதுக்கப்புறம் அவாளுக்குப் பசியாற ஏதாவது தரணுமே. அதுக்கு சரியாயிருக்கும்” என்றார்.
“நாம அப்ப கிளம்பலாமா? ரெண்டு நிமிஷம் இருங்கோ. என் பையை எடுத்துண்டு வந்துடறேன்” என்று சேஷு உள்ளே போனார்.
பாசு நடேசனிடம் “ நாம இவர்ட்ட பணம் கொடுக்கறதைப் பத்திப் பேசவே இல்லையே?” என்றான்.
“இப்ப வரப்போ கேட்டுடலாம்” என்றார் நடேசன்.
சற்று நேரத்தில் கையில் பையுடனும், தலையில் ஹெல்மெட்டுடனும் சேஷு வந்தார்.
“எதுக்கு? நாங்களே உங்களை அழைச்சுண்டு போயிட்டுக் கொண்டு வந்து விட்டுடறோமே! கார் இருக்கு” என்றார் நடேசன்.
“பரவாயில்ல. மசானத்துக்குப் போறோம். அங்க முன்னே பின்னே ஆனாலும் ஆகலாம். அதுக்கப்புறம் நீங்க என்னை இவ்ளோ தூரம் கூட்டிண்டு வந்து கொண்டு விட்டுட்டுத் திரும்ப ஆத்துக்குப் போய் ஸ்நானம் எல்லாம் பண்ணறதுக்கு ரொம்ப லேட்டாயிடும். சரி, வாங்கோ. போகலாம்” என்றார் சேஷு.
பாசு எழுந்தபடி “ நாங்க உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லலியே?” என்று கேட்டான்.
“உங்க இஷ்டம்” என்று சிரித்தார் சேஷு.
“இல்லை. நீங்களே சொல்லிட்டா ஆச்சு” என்றார் நடேசன்.
“என் கூட ஒரு அசிஸ்டன்ட் மாமா வருவார். அவரை நேரா பதினேழாம் கிராசுக்கே வரச் சொல்லியிருக்கேன். அப்புறம் அரிச்சந்திரா காட்ல, க்ரிமட்டேரியம் ஆபீஸ்ல இருக்கற ஆபீஸர்லேந்து பியூன் வரைக்கும், அதுக்கப்புறம் வெட்டியான் இருப்பான் அவனுக்குன்னு எல்லாருக்கும் கொடுக்கணும் ரெண்டு நாளைக்கும். எல்லாம் சேத்து பதினைஞ்சாயிரம் கொடுங்கோ” என்றார்.
பாசு நடேசனைப் பார்த்தான். அவர் எதுவும் சொல்வதற்கு முன்பு அவன் சேஷுவிடம் “கொஞ்சம் ஜாஸ்தியா இருக்காப்ல இருக்கே” என்றான்.
“இதுக்குத்தான் நான் உங்க இஷ்டம்னேன்” என்றார் சேஷு.
“நீங்க சொல்றது சரிதான். ஆனா ரெண்டு நாளைக்கு ஜாஸ்தியா இருக்கு. அடுத்த தடவை நீங்க இந்த மாதிரி காரியத்துக்கு வரப்போ…”
பாசு முடிப்பதற்கு முன்னாலேயே சேஷு திடுக்கிட்டு “என்னது?” என்று வெலவெலத்து நின்றார்.
*