மேற்கு வங்கத்தில் இந்து வாழ்வுரிமைகளுக்காக தொடர்ந்து அயராது உழைத்த தபன் கோஷ் ஜூலை 12, 2020 அன்று காலமானார். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு வாரமாக மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது பள்ளிப் பருவத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் இயக்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த தபன், 1976ல், எமெர்ஜென்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் முழுவீச்சில் இருந்தபோது, சங்கம் தடைசெய்யப்பட்டிருந்த போது, முழு நேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார். குருஜி கோல்வால்கர், பாவுராவ் தேவரஸ், அசோக் சிங்கல், பாரதிய மஜ்தூர் சங்க நிறுவனர் தெங்கடி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். 1980-90களில், கம்யூனிச மாநில அரசு கோலோச்சிய மேற்கு வங்கத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை அவர் படிப்படியாகக் கல்லூரிகளில் கட்டி எழுப்பினார். ராமஜன்மபூமி இயக்கத்தின் மூலம் வங்கத்தில் இந்து எழுச்சியை ஏற்படுத்தினார். இந்தக் காலகட்டத்தில் பங்களாதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் மாபெரும் எண்ணிக்கையில் ஊடுருவி வருவதைப் பற்றிய நாடு தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
துரதிர்ஷ்டவசமாக, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பங்களாதேச இஸ்லாமியர்களின் சட்டவிரோத ஊடுருவல் அந்தந்த மாநிலங்களின் சுயலாப அரசியல் கட்சிகளால் தொடர்ந்து ஊக்குவிக்கப் பட்டது. இவ்வாறு ஊடுருவியவர்களில் கணிசமானோர் தில்லி, மும்பை, சென்னை போன்ற இந்தியாவின் பெருநகரங்களுக்கும் பெயர்ந்து சட்டவிரோதமாக இன்றுவரை வசித்து வருகின்றனர். ஆனால் மேற்குவங்கத்தில்தான் இதன் தாக்கம் மிக மோசமாக இருந்தது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பதினைந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் தடாலடியாக முஸ்லிம் பெரும்பான்மையாக மாறி விட்டிருந்தது 2001ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டில் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் நேரடி விளைவாக இந்த மாவட்டங்களில் இந்துக்களின் மீது தாக்குதல்கள், துர்கா பூஜை பண்டிகைகளைத் தடுத்து நிறுத்துதல், இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அதிகரித்த கிராமப் பகுதிகளிலிருந்து வாழ முடியாமல் இந்துக்கள் வேறு ஊர்களுக்குப் புலம் பெயர்ந்தது எல்லாம் தொடர்கதையாக நிகழத் தொடங்கியிருந்ததும் தெரிய வந்தது. இஸ்லாமிய பயங்கரவாதக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் சிலவற்றில் மேற்கு வங்கத் தொடர்புகள் இருப்பது குறித்து உளவு அமைப்புகள் எச்சரித்தன. அதே சமயம் பங்களாதேச ஊடுருவல்காரர்களும் உள்ளூர் இஸ்லாமியர்களும் இணைந்து அரசியல் கட்சிகளை மிரட்டுமளவுக்கு வாக்கு வங்கியாக வளர்ந்தனர். இந்தச் சூழலில் இடதுசாரிகளை முறியடித்து ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி இன்னும் ஒருபடி மேலே போய், இஸ்லாமிய வாக்கு வங்கியைத் தாஜா செய்யத் தொடங்கினார். இதனை எதிர்கொள்ள வழி தெரியாமல் இந்து இயக்கங்களும், பாதிக்கப் பட்ட ஏராளமான சாதாரண இந்துக்களும் தவித்தனர். அவர்களுக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிய செய்திகள் கூட வெளிவரவியலாத நிலை இருந்தது. ஒரு அரசியல் கட்சி என்ற அளவில் அப்போது மேற்கு வங்க இந்துக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளில் பாஜகவும் பெரிய அளவு ஆர்வம் காட்டவில்லை.
இந்தச் சூழலில்தான், வழக்கமான சங்க பரிவார் அமைப்புகள், அவற்றின் சம்பிரதாயமான, இயந்திரத்தனமான, மெதுமெதுவான செயல்பாடுகள் மற்றும் அதன் செயல்பாட்டு வழிகளால் இந்த மாபெரும் அபாயத்தை எதிர்கொள்வது சாத்தியமல்ல என்பதை தபன் கோஷ் உணர்ந்தார். 2008ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் ஹிந்து ஸம்ஹதி (Hindu Samhati) என்ற அமைப்பை உருவாக்கினார். ‘ஹிந்து ஒற்றுமை’ என்பது அதன் பொருள். தாய் அமைப்புடன் எந்த மோதலும் இன்றி அதே சமயம் சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் செயல்படும் என்ற அளவில் இந்த இயக்கத்தை அவர் வழிநடத்தினார். கடந்த 12 ஆண்டுகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தீவிர உறுப்பினர்களுடன் வளர்ந்திருக்கிறது என்பதே இந்த இயக்கத்தின் மாபெரும் வெற்றிக்கு ஒரு சான்று. கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களில் பாஜக மேற்கு வங்கத்தில் கணிசமான இடங்களைப் பெறும் அளவு வளர்ந்திருக்கின்றது என்பதில் ஹிந்து ஸம்ஹதி செயல்வீரர்களின் கடின உழைப்பும் தியாகங்ளும் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.
ஹிந்து ஸம்ஹதியின் தலைவர் என்ற முறையில், தபன் கோஷ் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்குச் சென்று தீப்பொறி பறக்கும் உரைகளை ஆற்றினார். இஸ்லாமியர்களை தாஜா செய்துகொண்டிருந்த திருணாமூல், இடதுசாரி கட்சிகளுடன் நேரடியாக மோதுவதாக அவரது நடவடிக்கைகள் இருந்தன. அவரது உயிருக்கும் பாதுகாப்பும் தீவிர அபாயங்கள் இதனால் ஏற்பட்டன. ஆயினும் “இஸ்லாமியர்கள் திட்டமிட்டுத் தங்கள் மக்கள்தொகையைப் பெருக்குகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் அவர்கள் பலம் பெற்றதும் அங்கிருக்கும் இந்துக்களை அச்சுறுத்துகிறார்கள். இந்துக்கள் அரசியல், சமூக ரீதியாக ஒன்றாகத் திரண்டால் மட்டுமே இதை எதிர்க்க முடியும்” என்ற செய்தியை எந்தத் தயக்கங்களும் பயமும் இன்றி அவர் மாநிலம் முழுவதும் எடுத்துச் சென்றார்.
ஹிந்து சம்ஹதியின் நடவடிக்கைகள் பல தளங்களில் இருந்தன. வெறும் சென்சஸ் எண்ணிக்கையாக மட்டுமே இஸ்லாமிய மக்கள்தொகை அபாயம் பற்றிய தகவல் அறியப்பட்டிருந்தது. அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மக்களின் வாழ்க்கைச் சம்பவங்களை ஆவணப்படுத்தி அவற்றை ஊடகங்களிலும் இணையத்திலும் ஹிந்து ஸம்ஹதி பரவலாக்கியது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த வங்காளி இந்துக்கள், இணையத்திலும் மற்ற மாநிலங்களிலும் இயங்கிவந்த இந்துத்துவ ஆதரவுக் குழுக்கள் ஆகியோரின் உதவிகளையும் ஹிந்து ஸம்ஹதி தேடிச்சென்று பெற்றது. துர்கா பூஜை, ராம நவமி ஆகிய பண்டிகைகளின்போது மாபெரும் எண்ணிக்கையில் காவிமயமாக மக்கள் திரண்ட இந்து எழுச்சி ஊர்வலங்களை ஹிந்து ஸம்ஹதி நடத்திக் காட்டியது. ‘லவ் ஜிஹாத்’ மூலம் இந்து இளம் பெண்களை வலையில் சிக்கவைத்து இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாற்றிக் கவர்ந்து செல்வதைப் பற்றிய உண்மைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஆவணப் படுத்துவது மற்றும் அந்தப் பெண்களை மீட்கவும் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வது, இதற்கென்று செயல்பட ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட குழுவும் அந்த அமைப்பில் இயங்கி வந்தது. சில இடங்களில் இஸ்லாமியர்களாக இருப்பவர்கள் தாய்மதமாம் இந்துமதத்திற்குத் திரும்பும் நிகழ்ச்சிகளையும் ஹிந்து ஸம்ஹதி நடத்தியிருக்கிறது. பங்களாதேசத்திலிருந்து ஊடுருவியுள்ளவர்களை உள்ளூர் அளவில் அடையாளம் காண்பது, புகார் அளிப்பது ஆகியவற்றையும் அதன் உறுப்பினர்கள் செய்து வந்தனர்.
தீவிரமான பத்தாண்டு செயல்பாட்டிற்குப் பின்பு, 2018ல் தபன் கோஷ் தான் உருவாக்கிய ஹிந்து ஸம்ஹதி அமைப்பிலிருந்தும் விலகினார். அதன் செயல்பாடுகள் முழுமையாக அரசியல் தளத்திற்குள் சென்று கொண்டிருப்பதை அவர் ஏற்கவில்லை. இந்து விழிப்புணர்வு வங்கத்தில் அனைத்துத் தளங்களிலும் பரவியிருக்கிறது என்பதே அவருக்கு ஒருவித நிம்மதியை அளித்தது. வங்கத்தின் பாஜக தலைவர்கள் உட்பட அனைத்து இந்து செயல்வீரர்களுக்கும் இன்றுவரை அவர் மீது பெரும் மதிப்பு உள்ளது.
ஒற்றுமை, எதிர்ப்புணர்வு (unity and resistance) – இவையே இந்துக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களின் அடித்தளமாக இருக்கவேண்டும் என்பதே தபன் கோஷ் நமக்கு அளிக்கும் செய்தி. அமைப்புகளுக்கு உள்ளேயும், வெளியேயும், சுதந்திரமாகவும் அனைத்து விதங்களிலும் தனது இலட்சியங்களால் உந்தப்பட்டுச் செயல்படுபவராக அவர் இருந்தார் என்பதும் முக்கியமானது. வங்கத்தின் மகத்தான இந்துப் போராளிக்கு நமது கண்ணீர் அஞ்சலி. ஓம் சாந்தி.
[…] […]