
“என்ன ராமா, என்ன யோசனை?” பெருமூச்சு விட்டார் ராமன்.
எதிரே சுவரில் மெரூன் கலர் சட்டத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் சுந்தரேச கனபாடிகள் – ராமனின் அப்பா – எப்போதும் ராமனுக்கு வழிகாட்டி அவர்தான், படத்திலிருந்தாலும்!
வட்டமான முகம் – கால் இன்ச்சுக்கு முகம் முழுக்க முள்தாடி; தலையிலும் அதே அளவுக்கு நரை முடி – குடுமி என்று பிரத்தியேகமாய் ஏதும் கிடையாது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ‘சர்வாங்க சவரம்’ உண்டு. அப்போது மட்டும் சின்னதாய் உச்சந்தலையில் ஒரு குடுமி சில நாட்களுக்கு இருக்கும்! மழிக்கப்பட்ட முகத்தில் கோபக்களை கொஞ்சம் தூக்கலாய்த் தெரியும். இந்தப் படம் அவரது சதாபிஷேகத்தின் போது ஆறுமுகம் ஸ்டூடியோவில் எடுத்தது. பொக்கை வாய்ச் சிரிப்புடன், நெற்றியில் விபூதியும், கண்களில் சிரிப்பின் சுருக்கங்களும், தோளில் போர்த்திய ஆறு முழ வேஷ்டியும் – கிட்டத்தட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரை ஒத்து இருந்தன!
ராமன் அந்தக் கால எம்ஏ. யூனிவர்சிடி ப்ரொஃப்சராக சமீபத்தில்தான் ப்ரமோட் ஆனவர். எப்போதும் அப்பாவின் நினைவுகள்தான் அவருக்கு. முடிவு எடுக்கத் தடுமாறிய போதெல்லாம், அப்பாவின் போட்டோவே அவருக்குத் துணை!
ஐந்து வருடங்களுக்கு முன், பராசக்தி கல்லூரியில், அதிக சம்பளத்திற்கு வேலை வந்தபோது ராமன் கொஞ்சம் ஆசைப்பட்டார். அப்போது போட்டோவின் அறிவுரையே அவரை இருக்கும் இடத்திலேயே இருக்கச் செய்தது. அங்கு போயிருந்தால், ப்ரொஃப்சர் ஆகும் வாய்ப்பையே இழந்திருப்பார் ராமன்.
இன்று, திருமணமாகிப் பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஒரே மகன் ஹரியின் படிப்பு பற்றிய குழப்பம். படத்திலிருந்த கனபாடிகள் எதிரே நிற்கும் ராமனைப் பார்த்துச் சிரித்தார்.
“எதுக்கும் கவலைப் படாதே.. அது அது நடக்கிறபடிதான் நடக்கும். நம்மாலெ ஆகிற காரியம்னு எதுவுமில்லே. விதியின் விளையாட்டுக்கு நாமெல்லாம் ஒரு கருவி, அவ்வளவுதான்.”
“ஹரி இந்தக் காலப் பிள்ளை இல்லை. காலேஜ், படிப்பு, வேலை, இதிலெல்லாம் அவனுக்கு விருப்பம் இல்லை. கேட்டால், ‘நம்மளையெல்லாம் ஒதுக்கி வெச்சுடுவாப்பா, எதிர்காலமே இருட்டா இருக்கு. தாத்தா மாதிரி வேதம் படிக்க ஆசையாயிருக்கு. அதுக்குப் போட்டியில்லே. வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கிறது வேதம்தான்’ என்கிறான். பாகீரதிக்கோ, ஹரி மேல படிச்சு, என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆகணும்னு ஆசை. “வேதமும், அதை போஷிக்கறவாளும் இப்போ ரொம்பக் க்ஷீணத்துலெ இருக்கிற காலம் இது. எதிர்காலத்துலே ரொம்பவும் குழந்தை கஷ்டப் படுவான்” என்பது அவள் வாதம்.
“எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை – குழந்தை விருப்பத்துக்கெதிரா முடிவு எடுக்க மனசில்லே; பாகீரதி சொல்றதுலே இருக்கற உண்மையையும் ஒதுக்க முடியல்லே.”
சிரித்தபடியே சுந்தரேச கனபாடிகள் சொன்னார். “நாற்பது வருஷத்துக்கு முன்னாடியே யோசித்து உங்கம்மா செய்ததுதானே இது? இதிலே புதுசா உனக்கென்ன குழப்பம்?”
பின்னால் கையில் காபியுடன் வந்து நின்ற பாகீரதி, “போட்டோவோட கான்வர்சேஷன் ஆரம்பிச்சாச்சா? இதை எப்போதான் நிறுத்துவேளோ. இன்னிக்கு நாள் நன்னாயிருக்கு, காலேஜுக்குப் போய் அப்ளிகேஷன் ஃபார்ம் வாய்ண்டு வந்துடுங்கோ” என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் சமையல் அறைப் பக்கம் சென்றாள்.
போட்டோ அமைதியாய் இருந்தது. ராமனுக்குள் நினைவுகளின் மேகச் சூழல்….
சுந்தரேசன் கட்டுக் குடுமியுடன் வேத அத்யயனம் முடித்து, வைதீகத்துக்கு வந்த புதுசு. வேலை நிமித்தம் இந்த ஊருக்கு வந்து, வீடுகளுக்கு வைதிகம், ஊரின் பெரிய கோயிலில் நித்ய பாராயணம் எனத் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட நேரம். காமாட்சியுடன் கல்யாணம் ஆகி, இரண்டு வயதில் ராமன் கைக்குழந்தை. கோயில் அர்ச்சகர்களுக்கும், அவர்கள் வாரிசுகளுக்கும் மதிய வேளையில் ருத்திரம், சமகம், புருஷசுக்தம் என வேதாப்யாசம் செய்விப்பதுவும், மேலும், மேலும் தன் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளும் விதமாக, ஓலைச் சுவடிகளிலிருந்தும், தன் கையால் மணிமணியாகக் கிரந்த எழுத்துக்களில் எழுதிய வேதப் பாடங்களைப் படிப்புதுவும் சுந்தரேசனை மகிழ்வித்தன. ‘கனம்’ என்பது வேத மந்திரங்களைச் சுழற்றி சுழற்றி, சங்கிலித் தொடர்போல சொல்வது. மிகவும் கடினமான பாடம். அதனையும் கற்றுக் கொண்டு, ‘சுந்தரேச கனபாடிகள்’ ஆனார்! ‘வேதசிரோண்மணி’ என்றால் அந்த ஊரில் சுந்தரேசன்தான்! காமாட்சிக்குத் தன் கணவனின் வேத பாண்டித்யதிலும், பக்தியிலும் அசாத்திய நம்பிக்கையும், பிரேமையும் உண்டு.
‘போக்ய’ப் பத்திரத்தில் பதிந்து, நான்கு தாழ்வாரங்களுடன் ஒரு வீட்டை வாங்கினார் சுந்தரேசன். இரண்டு வருடத்துக்கொரு முறை ஓடு மாற்றுவது, வேனல் காலங்களில் வாசலிலும் முற்றத்திலும் கீத்துப் பந்தல் போடுவது, கொல்லைபுறத்தில் தென்னை, நார்த்தை, கருவேப்பிலை மரங்கள், சுண்டைக்காய், மணத்தக்காளி செடிகள், பறங்கி, பூசணிக் கொடிகள் என வளர்த்துப் பராமரிப்பது அவரது பொழுதுபோக்கு.
தானே தக்ளியில் நூல் நூற்று, அதைக் கூம்பு வடிவ சட்டகத்தில் சுற்றி, ‘ப்ளீச்’ செய்து, பூணூல் தயாரிப்பார். சிறு பனை ஓலைப் பெட்டிகளில் அவற்றை அடுக்கி வைப்பார். ‘பவித்ரமானது பூணூல்’ என்பார்!
காலங்கள் மாறும்போது, மனித மனங்களும் மாற்றமடைவது உலக இயல்பு. வேட்டிகள், பாண்ட் ஆவதும், அப்பளக் குடுமிகள், ‘கிராப்’ ஆவதும் தவிர்க்க முடியாதவை! கல்லூரிப் படிப்பு என்பது, மாறி வரும் கலாசாரத்தின் வசீகரம், எதிர்காலத்தின் அத்திவாரம் என்பது நடைமுறைக்கு வந்தது. காமாட்சிக்குத் தன் பிள்ளையும் படித்துப் பெரிய உத்யோகத்திற்கெல்லாம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. ராமனுக்கும், இள வயதில் கல்வியின் உயர்வும், பெருமையும் புரிந்தது.
இரண்டொரு முறை சுந்தரேசன் – இப்போது கனபாடிகள் – ராமனுக்கு வேதம் சொல்லிக் கொடுக்க நினைத்தார். அவனுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லையோ என நினைத்து அவன் போக்கில் விட்டுவிட்டார்.
பள்ளிப் படிப்பு முடித்த போதுதான், மேற்படிப்புக்குப் பணம் தேவை என்று தெரிந்தது. அடுத்த டவுனில் இருந்த யூனிவர்சிடியில் இன்டர்மீடியட் சேரவே பணம் தேவைப்பட்டது. அது போக, புத்தகங்கள், சைக்கிள் என மேல் செலவு இருந்தது.
“ராமனைக் காலேஜில் சேர்க்கலாம்னு நினைக்கிறேன்” – காமாட்சி.
“ஏன், வேதம் படிச்சு, வைத்திகம், பாராயணம் என இருக்கக் கூடாதா?”
“இன்னைக்கே நம்ம வருமானம் கைக்கும், வாய்க்கும் சரியா இருக்கு. நாளைய நிலமை எப்படியோ…. நல்ல படிப்பு படிச்சா, காலேஜ்லயோ, அரசாங்கத்துலேயோ நல்ல உத்தியோகம் பார்க்கலாம். எதிர்காலம் பற்றிய கவலை வேண்டாம். இப்போ நீங்க எவ்வளவு உழைத்தாலும், போக்கியப் பத்திரப் பணம் கட்டவே முழி பிதுங்கறது.”
“நியாயம்தான். ஆனா என் வேதமும், சாத்திரமும் என்னோடயே போய்டுமோன்னு கவலையா இருக்கு.”
“உங்கப்பாவோட நிலம், மிராசுதார் பட்டம் எல்லாம் போய், இப்போ ‘கனபாடிகள்’ ஆக வந்திருக்கு. அதுபோலத்தான்… கால மாற்றத்தை ஏத்துக்கத்தான் வேணும்.”
“நிலமும், மிராசும் அழியக் கூடியவை காமாட்சி; வேதமும் சாத்திரமும் என்றும் நிலைக்கக் கூடியவை, வாழ்க்கைக்குத் தேவையானவை இல்லையா?”
“காலேஜ் படிப்பும் அப்படித்தானே… வேதம் மாதிரியே இன்னொரு வகைப் படிப்பு.”
“சம்பாத்யம் மட்டுமே வாழ்க்கைன்னா, நீ சொல்றது சரி. அதையும் மீறி ஆத்ம சுத்தம், பாரம்பரிய சாஸ்திர சம்ப்ரதாயம், லோக க்ஷேமம்ன்னு வேதத்திலே எவ்வளவோ சாரம் இருக்கே.”
“இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் உதவும்னு யோசிங்கோ. நாளைய உலகம், படிச்சவா கையிலதான்னு தோண்றது.”
“ம்… சரி. இப்போ பணத்துக்கு என்ன செய்யறது? உன் நகையெல்லாம் வித்தாக் கூட, பாதி பணம் தேறாது போல இருக்கே.”
காமாட்சி தயங்கினாள். சுந்தரேசன் சொந்தக் கிராமத்தில் மூதாதையர் சொத்து, ஒரு ஓட்டு வீடு இருக்கிறது. அன்றைய தேதிக்கு ஆயிரம் ருபாய்க்குப் போகும். சொன்னால் சுந்தரேசன் வருத்தப் படுவாரோ என நினைத்து நடுங்கினாள். ஆனாலும் ராமனின் படிப்பில் மிகவும் திடமாய் இருந்தாள்.
“சுரையூர் வீட்டை விற்று விடலாமா?”
கேள்வி முடியும் முன், கையில் சுற்றிக் கொண்டிருந்த பூணூல் ‘பட்’ டென்று அறுந்தது. முகத்தில் கோபம். ‘சட்’ டென்று எழுந்து கொல்லைப் புறம் சென்றுவிட்டார் சுந்தரேசன்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராமனின் மனதில் போராட்டம். “மேலே படிக்காட்டா என்ன? அப்பா மாதிரி வேதம் கத்துண்டா போறது” என்றான் அம்மாவிடம்.
“பைத்தியமாட்டம் பேசாதே. கால் ரூபாய்க்கும், அரை ரூபாய்க்கும் உங்கப்பா படற கஷ்டம் எனக்குத்தான் தெரியும். தினக் கூலியாட்டம் யாராவது கூப்பிட்டாதான் சோறு. இதுலே ஆயிரம் கட்டுப்பாடுகள். சாதம் சாப்பிடாதே, ராத்திரி சாப்பிடாதே, ஆயிரம் காயத்ரி ஜபம் பண்ணு, அது தப்பு, இது குத்தம் – வைதீக பிராம்மணனா வாழறது எவ்வளவு சிரமம் தெரியுமா? அவனுக்கு மட்டும் அல்ல, அவன் மனைவிக்கும் சேர்த்துக் கட்டுப்பாடுகள்.”
ராமனிடம் பதில் இல்லை. மனதில் வெள்ளை பேண்ட், சர்ட் போட்டுக் கொண்டு, எண்ணெய் தடவிப் படிய வாரிய தலையுடன், சைக்கிளில் காலேஜுக்குப் போவதாய் மனதில் குதிரை ஓடியது.
சுந்தரேசனுக்கு இரண்டு மனதாய் இருந்தது. ராமனின் படிப்பு, செலவு, தனக்கு ஒரு வேத வாரிசு இல்லாமை எல்லாவற்றையும் விட, தன் மூதாதையரின் வீட்டினை விற்பதில் மனது சங்கடப்பட்டது. ஆனாலும் ஏதோ ஒன்று விரட்ட, வீட்டை விற்று, ஆயிரம் ரூபாயைக் கொண்டு வந்து, தாழ்வாரத்தில் வீசினார்.
“உன் பிள்ளையைப் படிக்க வை. பணமும், படிப்பும், அந்தஸ்தும் வரும். ஆனால், என் வேதமும், வாழ்க்கையும் வராது.”
போட்டோவில் சுந்தரேச கனபாடிகள் சிரிக்கவில்லை.
ராமன் எழுந்தார். தன் காலத்தில் தகுதியுடையோர்க்குப் படிப்பும், பதவியும் கிடைத்தன. இன்று, எல்லாம் ‘பணம்’ என்றாகி விட்டது. பணமும், பதவியும் இருந்தால் எந்த குறுக்கு வழியிலும் படிப்பு, பதவி எல்லாம் பெறலாம் என்றாகிப் போனது. பணம் கொடுக்க வசதியில்லாத மத்திய தரக் குடும்பம், படிப்பு பதவி என்று ஆசைப் படக் கூடாது என்பது எழுதாத விதியானது இன்று.
யோசித்தார் ராமன். ஹரியின் விருப்பத்தையே ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்தார்!
“ஹரி, இங்கே பாரு. எல்லா இடத்திலேயும் என்ஜினீர், டாக்டர்ன்னு நெறைய ப்ரொஃபஷனல்ஸ். உனக்கு திறமை இருந்தாலும், இங்கே சான்ஸ் கம்மி. வெளிநாடு அனுப்பிப் படிக்க வைக்கிற அளவுக்குப் பணமோ, மனசுலெ தைரியமோ எனக்கு இல்லே. நீ என்ன நெனைக்கிறே, உனக்குன்னு ஏதாவது விருப்பம்..”
ஹரி நல்ல புத்திசாலி, படிப்பிலும் கெட்டி. அவன் முடிவு வித்தியாசமாக இருந்தது. “அப்பா, எனக்கு இந்தப் படிப்பெல்லாம் வேண்டாம். வேதம் கத்துக்கறேன். கொஞ்சம் வயசு கூட ஆயிடுத்து, பரவாயில்லை. முறையா ஏதாவது பாடசாலையிலே சேர்ந்து, வேதாப்பியாசம் பண்ணறேன். தாத்தாவோட ஆசீர்வாதம் எனக்கு எப்பொவும் இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு!”
பாகீரதிக்கு ‘பகீர்’ என்றது. “ஹரி, சும்மா உளறாதே. வேதம் உனக்கு சோறு போடாது. நல்லா படி. கலெக்டர், டாக்டர் ன்னு பெரிய நிலைக்கு வந்தாத்தான் நல்லது. தர்பைக் கட்டுக்கும், சாஸ்திர சம்ப்ரதாயங்களுக்கும் மதிப்போ, மரியாதையோ இப்போ இல்லே.”
“இல்லேம்மா. வெளி நாட்டிலே எல்லாம் கூட நம்ம வேதங்களுக்கும், கலாச்சாரத்திற்கும் நிறைய மதிப்பு இருக்கு. ஏராளமா ரிஸர்ச் பண்ணிண்டு இருக்கா. இங்கே இந்த எலிப் பந்தயத்திலே ஓட எனக்கு இஷ்டமில்லே. நம்ம ஆன்மாவே கிராமங்களில்தான் இருக்குன்னு பெரியவா எல்லாம் சொல்லியிருக்கா. நம்ம கிராமங்கள் எல்லாம் அழியறதுக்குக் காரணமே, நாம் வேதத்தையும், கலாச்சாரத்தையும் மறந்து, வேலைன்னு நகரங்களுக்கும், மேல் நாடுகளுக்கும் போயிடறதுதான். என் முடிவை ஏளனமாப் பார்த்து, பரிகாசம் பண்ணப் பல பேர் வருவா; எல்லாத்தையும் மீறி, எனக்குன்னு ஒரு விருப்பம், தீர்மானம் இருக்கு.”
ஹரியின் பிடிவாதம் பாகீரதிக்குத் தெரியும். தாத்தாவின் குணம். மனசு பாரமாகிக் கண்ணீர் விட்டாள்.
ராமனும் தன் பங்குக்கு, “ஹரி அதெல்லாம் சரியா வராது. அரசு வேலை, ப்ரொஃபஷனல் கோர்ஸ் இதெல்லாம்தான் கஷ்டம். கிடைத்ததைப் படி, மேலே அக்கவுண்ட்ஸ், காஸ்டிங் ஏதாவது செய்து, ப்ரைவேட்ல வேலை பாத்துக்கலாம்” என்றார்.
ஹரி தீர்மானமாகச் சொல்லிவிட்டான். “வேதம்தான் படிக்கப் போறேன். நிறைய பாடசாலைகள் நல்லபடியா நடந்துண்டு இருக்கு. நம்மளோட மூன்று கடன்களை- தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் – வாழ்க்கையிலே கழிச்சே ஆகணும். அதுக்கு வழி காட்டற வேதங்களைத் தெரிஞ்சுக்கறேன் பா.”
ராமன் கை கட்டி, வாய் மூடி மெளனியாய் நின்றார். ஹரியின் எதிர்காலம் கேள்விக்குறியாய் அவர் முன் நின்றது.
போட்டோவிலிருந்து சுந்தரேச கனபாடிகள் பேசினார்.
“ராமா என்ன குழப்பம் இதுலே உனக்கு? வாழ்க்கை அதன் போக்கிலே போறதுதான் இயற்கை. உன் அம்மா எடுத்த முடிவில் நீ படிச்சு, வேலை பார்த்ததெல்லாம் அப்போ சாத்தியமாயிருந்தது. என் காலத்துக்கு வேத அத்யயனம் மட்டுமே போதுமாயிருந்தது. எதிர்பார்ப்புகள் குறைவு. ஒரு மரியாதையும் இருந்தது. இப்போ வேகமான வாழ்க்கை. எல்லாத்துக்கும் பணம், சிபாரிசு, ஜாதி வேண்டியிருக்கு. இந்த ஓட்டத்துலேதான் நாமும் ஓடியாகணும். ஹரிய ஒரு காலேஜ்லெ சேர்ந்து படிக்கச் சொல்லு. லெளகீக வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் வரும் வேலை கிடைக்காம போகாது. ஆத்ம சாந்திக்கும், அமைதிக்கும் வேதம் படிக்கச் சொல்லு. வேதம் மட்டுமே போதாது! ஹரி புரிஞ்சுப்பான்.”
ஆடிய போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார் சுந்தரேச கனபாடிகள்!
ஹரி புரிந்துகொள்வானா?