இந்த கட்டுரை காந்தி மற்றும் அவரது பஞ்சதளபதிகளைப் பற்றியதே. இந்திய சுதந்திரம் என்பது காந்தி எனும் தனிநபர் சாதனையல்ல என்பது மறுக்க இயலாத கூற்றே. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பிற தலைவர்களின் தேசப்பற்றைக் கொச்சைப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்காக நேதாஜியின் படையைக் கண்டு அச்சமுற்ற ஆங்கிலேயன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றும், உண்மையான போராளிகள் செக்கிழுத்தும், கல்லுடைத்தும் பாடுபட்டுக் கொண்டிருந்த போது காந்தி போன்ற போலிப் போராளிகள் சிறைகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றும் சொல்லி காந்தியின் பங்களிப்பைச் சிறுமைப்படுத்துவதும் சரியல்ல. ஏனெனில் ஒவ்வொருவரின் போராட்ட முறைகளும் அதனால் ஏற்படும் அனுபவங்களும் வெவ்வேறானவை.
சுதந்திரப் போராட்டத்தைச் சரியான திசையில் வழிநடத்தியதில் மோகன்தாஸ் காந்தியின் பங்கு ஈடில்லாதது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையிலுள்ள நீதி என்ற கருத்தாக்கம் ரஷ்யப் புரட்சியிலிருந்தும், கட்டுப்பாடற்ற என்ற கருத்தாக்கம் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்தும் எடுத்தாளப்பட்டவை எனப் படிக்க நேர்ந்திருக்கலாம். ஆனால் ரஷ்யப் புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் முறையே நீதி மற்றும் கட்டுப்பாட்டின்மைக்குப் பதிலாக ஸ்டாலின் மற்றும் நெப்போலியனையே தந்தன. காரணம் அப்புரட்சியாளர்கள் அதிகார அமைப்பை வீழ்த்துவதில் குறியாயிருந்தார்களே ஒழிய, ஜனநாயக மாற்று என்பதைப் பற்றி சிந்திக்கவேயில்லை. அதுவே பின்பு அதிகாரப் போட்டிக்கும், எதேச்சதிகாரத்திற்கும் வழிவகுத்தது. காந்தியோ வன்முறையால் பெறப்படும் சுதந்திரம் வன்முறையாலேயே பறிபோகும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனாலேயே அவர் அதிகார அமைப்புக்கு மாற்று என்பதற்குப் பதிலாக அதிகாரத்திற்கு மாற்று ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவதை வலியுறுத்தினார். காந்தி நிச்சயம் இந்த கருத்தாக்கத்தின் தோற்றுவாய் அல்ல, கோகலே போன்றோர்களால் முன்பே முன்னெடுக்கப்பட்டதுதான். ஆனால் இந்தக் கருத்தாக்கத்தின் வெற்றி காந்தியின் வெற்றியே. லட்சியம், புரட்சி எனப் பெரும்கனவுகள் காணாமல் யதார்த்தத்தை ஒட்டிய முடிவுகள் காணும் காந்தியின் அணுகுமுறையே பெரும் உயிரிழப்பின்றி சுதந்திரத்தை சாத்தியமாக்கியது. அஹிம்சை மற்றும் சத்தியாகிரகம் போராட்ட வழிகளின் விதிகளை மாற்றி எழுதின.
எப்போதும் எதார்த்தத்தை ஒட்டி சிந்திக்கும் காந்தி செய்த பிழை பாகிஸ்தான் பிரிவினைக்கான மறுப்பு. காந்திக்கு ஹிந்து மதக் கோட்பாடுகளில் பற்றிருந்தாலும், அவர் சகல பிரிவினருக்கும் உரியவராகவே நடந்து கொள்ள விரும்பினார். ஆனால் அவர்கள் தன்னை அப்படிக் காணவில்லை என்ற உண்மையை உணரத் தவறிவிட்டார். பிரிவினை என்ற ஆசையை ஜின்னா முஸ்லிம்களிடம் வேரூன்ற வளர்த்துக் கொண்டிருந்தார். காந்தியோ பிரிவினை என்பது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி, அவர்களை வெளியேற்றுவதன்மூலம் ஹிந்து முஸ்லிம் மனவேறுபாடுகள் நீங்கி சமரசமாகி விடுவார்கள் என்றெண்ணி ஆகஸ்ட் புரட்சியைத் துவக்கினார். துரதிர்ஷ்டவசமாக அது இரண்டாம் உலகப் போர் நிகழ்த்து கொண்டிருந்த காலம். இந்தியாவின் மீது ஜப்பான் தாக்குதல் செய்து கொண்டிருந்தது. போர்ச் சூழல் இருப்பதால், உள்நாட்டுப் புரட்சியை விரும்பாது அதைத் தவிர்க்க எண்ணி ஆங்கிலேய அரசு காந்தியையும் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தது. காந்தி அஹிம்சா முறையிலேயே போராடச் சொல்லியிருந்தார். ஆயினும் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருந்ததால் போராட்டம் வன்முறைக்கு மாறியது தவிர்க்க இயலாததாயிற்று. இதுவே பிரிட்டிஷாருக்கு காந்தியின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தது. பின்னாளில் பிரிவினைக்கு காந்தி ஒப்புக்கொண்ட போதிலும், நிலைமை கைமீறிப் போய்விட்டிருந்தது. நேரடி நடவடிக்கை நாளுக்குப் பின்னர் அவரின் சகாக்களே பிரிவினையை ஏற்பதே உத்தமம் என்ற அளவிற்கு வந்துவிட்டனர் .பாகிஸ்தான் பிரிவினையும் நிகழ்ந்தது.
பாகிஸ்தான் பிரிவினையின்போது காந்தி எடுத்த யதார்த்தத்துக்கு ஒவ்வாத முடிவுகளுள் மிக முக்கியமான முடிவு நேருவைத் தம் வாரிசாக அறிவித்தது. ஜவஹர்லால் நேருவே காந்தியின் தளபதிகளுள் இளையவர். ஏனையோர்களைப் போலல்லாமல் செல்வச்செழிப்பில் வளர்ந்ததால் அவர் நெஞ்சில் லட்சியங்கள் பொங்கி வழிந்தது போல நடைமுறைச் சாத்தியம் பற்றிய அறிவு வளரவில்லை. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கண்ட கம்யூனிச, சோசியலிச, சமதர்ம சமுதாயமாக இந்தியாவை மாற்றுவதே அவர் லட்சியமாயிற்று. ஹிந்து தர்மம் போன்ற மதகோட்பாடுகளே மக்கட் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று நம்பினார். சுதந்திரச் சந்தை பேரழிவைத் தரும், அரசின் கட்டுப்பாட்டு நல்வாழ்வைப் பயக்கும் என்று வாதாடினார். காந்தி இந்தப் பிதற்றல்களைப் பொருட்படுத்தாத போதும், நேருவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் காரணம் சிறுபான்மையினர் ஆதரவு நேருவிற்கு இருந்தது என்பதால் மட்டுமே.
நேரு என்பவர் குறைகளின் உருவம் மட்டுமே எனத் தோன்றினால் அது தவறு. நிச்சயம் நேருவே அதீத லட்சியவாதி. ஜனநாயகவாதியும் கூட. சொல்லிக்கொள்ளும்படியான எதிர்ப்பேதும் இல்லாத போதும், மாநிலத் தலைவர்களின் சுயாட்சியை எப்போதும் அவர் மதித்தே நடந்து வந்திருக்கிறார். அப்படி இல்லாததன் விளைவே இன்று நாம் காணும் கட்சித் தாவல்களுக்கும், ஆட்சிக் கலைப்புகளுக்கும் காரணமாகிறது. இந்திய முன்னேற்றத்தைப் பற்றிய நேருவின் அக்கறையை யாரும் சந்தேகிக்க இயலாது. ஆனால் முன்னேற்றமும் வளர்ச்சியும் பாரம்பரியத்தின் வேர்களிலிருந்ததே துவங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள மறுத்ததால், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் லட்சியத்துடன் பாய்ச்சிய நீர் விழலுக்கே போய்ச் சேர்ந்தது.
(இ-வ: ராஜேந்திர பிரசாத், ஜின்னா, ராஜாஜி, xx, அபுல்கலாம் ஆசாத்)
சோசியலிசத்தைப் பொருத்தவரை அது நேருவின் தனிக்குரல் மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. நேருவிற்கு ஆதரவாக அபுல் கலாம் ஆசாத் இருந்தார். ஆசாத் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். அவர் ஒருவரே வழக்கறிஞர் அல்ல என்பதோடல்லாமல் அவர் ஒருவரே சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் ஒரு சிறந்த கல்வியாளரும் கூட. சோசியலிசத்தைப் பற்றிய அவரது கருத்தை ஒதுக்கிவிட்டுப் பார்க்கையில் ஆசாத் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான ஆதரவாளராக என்றென்றும் இருந்தார். ஒரு ஹிந்து எப்படி ஹிந்து தர்மத்தைப் பின்பற்றும் இந்தியன் எனப் பெருமை பொங்கக் கூறுகிறானோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தைப் பின்பற்றும் இந்தியன் எனப் பெருமை பொங்கக் கூற வேண்டும் என்றார். முஸ்லிம்களுக்கான தனிநாடு என்ற கோரிக்கையை எதிர்த்தார். ஜின்னாவும் முஸ்லிம் லீகும் ஹிந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் முஸ்லிம்கள் வாழ வேண்டியிருக்கும் என அச்சுறுத்தியபோது, ஆசாத் அதைத் தீர்க்கமாக மறுத்தார். ஆனால் முஸ்லிம்கள் மீதிருந்த முஸ்லிம் லீகின் அதீத செல்வாக்கு என்பது துரதிர்ஷ்டம்.
இந்தியா என்ற ஓர் நாட்டிற்குள் 500 சமஸ்தானங்களைக் கட்டி வைத்த பெருமை வல்லபபாய் படேல் அவர்களையே சாரும். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் வாழ்வின் மேடு பள்ளங்கள் அவருக்குப் பழக்கமாகின. அதுவே அவருக்கு இரும்பு போன்ற உறுதியைத் தந்தது. பிரதமர் பதவிக்கு நேருவைக் காட்டிலும் படேல் பொருத்தமானவர் என்று நன்கு தெரிந்திருப்பினும் அவர் முஸ்லிம்களைச் சமமாக நடத்த மாட்டார் என்ற புரளி அவர் பிரதமராவதைத் தடுத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியும், முதல் துணைப் பிரதமருமான படேலுக்கு நாட்டின் ஒற்றுமை என்பதே முக்கியக் கடமையாக இருந்தது. அது சமஸ்தானங்களை ஒன்றிணைத்த சாணக்கியத்தனம் மட்டுமே அல்ல, உட்கட்சிப் பூசல்களால் நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியானபோது நேருவே நம் தலைவர் என்று கூறி விட்டுக்கொடுத்த மனப்பாங்கும்தான். உண்மையில் நேருவை விட படேலே கட்சியில் அதிக செல்வாக்குடன் விளங்கினார். அவரின் அந்தச் செல்வாக்கே நேருவின் தவறான முடிவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.
கம்யூனிசம், சிறுபான்மையினர், மதச்சார்பின்மை ஆகியவற்றின் மீதான நேருவின் புரிதல்களுக்கு படேல் ஆற்றிய எதிர்வினைகள் சுவாரசியமானவை மட்டுமல்ல, ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியவையும் கூட. ஆனால் அந்த எதிர்வினைகள் நெடுநாள் நீடிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
இந்தியாவின் முதல் குடிமகனாகக் கருதப்பட வேண்டியவர் ஜனாதிபதி என்றால் இந்தியாவின் முதன்முதற் குடிமகனாகக் கருதப்பட வேண்டியவர் ராஜேந்திர பிரசாத் அவர்களே. நேருவைத் தவிர மற்ற அனைவருமே இறை நம்பிக்கை உடையவர்கள் என்றாலும், பிரசாத்தைப் போல அதீதப் பற்றாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. வாரணாசி சாதுகளுக்குப் பாதபூஜை செய்தது, சோமநாதர் ஆலய நாட்டல் போன்ற பிரசாத்தின் செயல்கள் முதல் பிரதமருக்கு எரிச்சலூட்டின. அவரது செய்கைகள் இந்தியாவின் மதச்சார்பின்மையைக் கேள்விக்குறியாக்கும் என்று முதல் பிரதமர் ஆட்சேபித்தார், அரசியலமைப்பு சகலருக்கும் தம் நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை தந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டு.
அதே போல் அரசியல் சாசன நிர்ணய சபை தலைவராக இருந்திருந்தார் என்றபோதிலும், முதல் ஜனாதிபதி யாருக்கு அதிக அதிகாரம் என்று பிரதமருடன் பரிட்சை நடத்தினார். ஜனாதிபதி அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர் என்ற பதில் வந்தபோது அதற்குக் கட்டுப்பட்டார். ஹிந்து சட்ட வரைவு மசோதா, பரிசுத் தொகை மீதான வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு மற்றும் மீண்டும் ஜனாதிபதி பதவிப்போட்டிக்கு நின்றது என ராஜேந்திர பிரசாத்தும் நேருவும் மோதிக் கொண்டாலும் அவை ஜனநாயக முறைப்படியும் அரசியல் சாசனப்படியும் கண்ணியத்துடனுமே நிகழ்ந்தன.
ஒரு மாநில அரசின் கலைப்புக்கான கோப்பு வெளிநாட்டு விஜயத்திலிருந்த விவி கிரிக்கு அனுப்பப்பட்டபோது இந்தியத் தூதரகம் கூட வராமல் கையொப்பமிட்டது, அவசரக் காலங்களில் அடிப்படை உரிமைகளை முடக்கலாம் என அடிப்படைப் புரிதலின்றி பக்ருதீன் அலி அகமது கையொப்பமிட்டது என ஜனாதிபதி பதவி பிரதமரின் ரப்பர் ஸ்டாம்பாகப் பிற்காலத்தில் மாறிபோனது காலக்கொடுமை. ஜனாதிபதி என்பவர் பிரதமரின் கைப்பாவையல்ல; பிரதமரின் கொள்கைகள் மீது தம் மதிப்பீடுகளை வைப்பதும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் ஜனாதிபதியின் கடமை என்று எடுத்துக்காட்டியதே ராஜேந்திர பிரசாத் காட்டிய முன்னுதாரணம்.
தனிப்பட்ட அரசியல் காழ்ப்பின் காரணமாக ஒரு வகுப்புவாதக் கட்சியை ஆட்சிக்கு வர உதவியவரை தேசப்பிதாவாகக் கொள்ள முடியுமா என்று குரல்கள் எழும்பினால் ஆச்சரியம் கொள்ள ஏதும் இல்லை. சேலம் நகரசபை தலைவரிலிருந்து இந்திய கவர்னர் ஜெனரல் வரை உயர்ந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் இப்படிப்பட்ட ஒரு பிம்பத்திற்குள் விழுந்தது வேதனைக்குரியது. அவரின் திமுக ஆதரவு என்பது காமராஜுக்கு எதிரான பகையாகப் பார்க்கப்பட்டதும் பார்க்கப்படுவதுமே இந்த தப்பர்த்தத்திற்குக் காரணம். “நான் முதல்வராகப் பதவியேற்றபோது திக, திமுக போன்ற வகுப்புவாதக் கட்சிகள் பெரும் எதிர்ப்பளித்தபோதும் அவற்றைப் பொருட்படுத்தாது கம்யூனிஸ்ட்களே என் முதல் எதிரி என்று சரியாகக் கணித்துக் கூறினேன்” என்று பின்னாளில் குறிப்பிட்ட அவரது வாதம் சப்பைக்கட்டாகத் தோன்றலாம். ஆனால் வரலாறு என்பது நம் விருப்பு வெறுப்புகளுக்கு வளைவதில்லை.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கம்யூனிச மோகம் பல நாடுகளை ஆட்கொண்டது. நேருவும் கம்யூனிஸ மோகத்தில் வீழ்ந்தபோது ராஜாஜி அதைக் கடுமையாக விமர்சித்தார். நாட்டுடைமை, பொதுவுடைமை என்ற ஆசை வார்த்தைகளுக்கு பலியாகி அதிகாரங்களை ஓரிடத்தில் குவிய விடுவது அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் வழிசெய்யுமே அன்றி நல்வாழ்விற்கு உதவாது என மக்களை எச்சரித்தார். லெனின் துவங்கி ஸ்டாலின், மா சே துங் என இப்போது ஹியூகோ சாவேஸ் வரை இதுவே நிரூபிக்கப்பட்ட உண்மையாகிவிட்ட போதிலும், ராஜாஜியின் கருத்துக்கு அப்போது ஆதரவு ஏதுமில்லை. நாடே சோசியலிச மோகத்தில் திளைத்தது. ஜனநாயகத்தின் ஜீவன் எதிர்க்கட்சிகளின் குரல்களில் இருக்கிறது என்று திடமாக நம்பிய ராஜாஜி, வலிமையான எதிர்க்கட்சியே காங்கிரஸின் எதேச்சதிகாரத்திற்கு முடிவு செய்யும் என்றுணர்ந்தார்.
எதிர்க்கட்சிகளோ நேருவின் கவர்ச்சியாலும், காங்கிரஸின் செல்வாக்காலும் சிதறிக் கிடந்தன. 30% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தாலும் தனிப் பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சியின்றி காங்கிரஸ் அரசாண்டது. காங்கிரஸை எதிர்க்க வழிதெரியாது தடுமாறிய போது, சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளை ராஜாஜி ஓரணியில் திரட்டினார். கூட்டணிக் கட்சிகளின் கோட்பாடுகளுடன் ஒப்பதுல் இல்லாதபோதும் காங்கிரஸின் சோசியலிச பாணிக்கு எதிர்ப்புக் காட்டுவதே அவருக்குப் போதுமானதாக இருந்தது. அப்படி அவர் உருவாக்கிய கூட்டணிகளுள் திமுகவும் வந்தது. ஹிந்துத்துவ எதிர்ப்புக் கட்சியான திமுகவுடன் கூட்டணியிலிருந்த அதே காலகட்டத்தில் சுதந்திரா கட்சியானது ஹிந்துத்துவத்தின் முகமாகக் கருதப்பட்ட பாரதிய ஜன சங்கத்துடனும் கூட்டணி வைத்திருந்தது மறக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் எதிர்க்கட்சியாக சுதந்திரா கட்சி உருவெடுத்தது. பின்னர் திமுகவானது காங்கிரஸை ஆதரிக்கத் துவங்கியவுடன் ராஜாஜி ஸ்தாபன காங்கிரஸுக்கு ஆதரவளித்தது, கம்யூனிச எதிர்ப்பு என்று பார்க்காமல் பிராயச்சித்தம் என்று பார்ப்பது மடமை.
அவரது இந்தக் கூட்டணி முயற்சிகளால் இந்திரா காந்தியின் வங்கிகள் தேசியமயமாக்கம், ஏழ்மை ஒழிப்பு ஆகிய கவர்ச்சிக் கோஷங்களை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க இயலவில்லை. இந்திராவின் சோசியலிச வாக்குறுதிகள் அவரை அசுரபலத்துடன் ஆட்சியில் அமர்த்தின. இது கூட்டணியிலிருந்த கட்சிகளை சோசியலிச பாஷைகளால் ஆதரவு திரட்டத் தூண்டியது. ஸ்தாபன காங்கிரஸ், ஜன சங் கட்சிகளும், சுதந்திரா கட்சித் தலைவர்களும் சுதந்திரா கட்சியை விட்டு நீங்கிக் கொண்டிருந்தனர். பெரும் பலமிருந்ததால் இந்திராவின் அரசு அரசியல் சாசனங்களில் முறையின்றித் திருத்தியது. இந்திரா அரசின் எதேச்சதிகாரத்தைப் பிற கட்சிகள் தங்கள் மாச்சரியங்களை மறந்து ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று கூறிய ராஜாஜி, அந்த விருப்பம் நிறைவேறாமல் இறந்து விட்டார்.
ஏழ்மை ஒழிப்பு என்று சோசியலிசக் கவர்ச்சியால் பதவிக்கு வந்த இந்திராவின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. அவ்விளைஞர்கள் எழுப்பிய புரட்சிக் கோஷங்களும் அதனால் எதிர்க்கட்சிகள் பெற்ற ஆதரவும் இந்திராவை நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு தூண்டின. பொதுவுடைமைக்கு விருப்பப்பட்டால் அடக்குமுறையே நடைமுறையாகும் என்பது நிரூபணமானது. இந்திரா காந்தி அறிவிக்கப்படாத சர்வாதிகாரி ஆனார். நெருக்கடி காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கைதுகள், பத்திரிகை மீதான தணிக்கை, கட்டாயக் கருத்தடை சிகிச்சை என நாடே அல்லோலப்பட்டுப் போனது.
முன்னோர்கள் கொண்டிருந்த தேசப்பற்றின் எச்சமோ, சர்வாதிகாரிகளின் ‘இயற்கை’ மரணத்திற்குப் பின் அவர்களது வாரிசுகள் ‘ஜனநாயக’ முறைப்படி தலைவராவது பற்றிய அச்சமோ, எது இந்திராவை உந்தித் தள்ளியதோ தெரியாது, அதிர்ஷ்டவசமாக அவர் பொதுத் தேர்தல்களை அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஜனதா கட்சி இந்திராவை வீழ்த்தி முதல் காங்கிரஸ் அல்லாத அரசாக அமர்ந்தது. காங்கிரஸுக்கோ இந்திராவுக்கோ முடிவுரை எழுதப்படவில்லை என்பதும், ஜனதா கட்சி அதிகாரப் போட்டிகளால் உடைந்து போய் விட்டது என்பதும் உண்மையே. இருந்த போதிலும், சர்வாதிகாரம் மேலோங்கும்போது சிறு கட்சிகள் தங்கள் மாச்சரியங்களை மறந்து ஒன்றிணைந்தாலே அந்த சர்வாதிகாரத்தை வீழ்த்த முடியும் என்ற ராஜாஜி கூற்று சாஸ்திரமானது. அதை முன்னெடுத்த ஜெயபிரகாஷ் நாராயண் சாதித்து விட்டார். இன்று பெரும் பலத்துடன் அரசு புரியும் பாஜக என்றல்ல, எந்த ஒரு அரசும் தம் கொள்கைகளை மறந்து விட்டு ஒருவேளை சர்வாதிகாரத்தை நோக்கி நகருமாயின் வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமையே நம்மை மீண்டும் காக்கும். ராஜாஜியின் இந்த முயற்சியினால் தமிழகம் வகுப்புவாதத்திற்கு இரையாகி விட்டது. ஆனால் பாரதமோ கம்யூனிசம் எனும் பெரும் புதைகுழியிலிருந்து தப்பித்து விட்டது. ஜனநாயகம் மீண்டும் பிழைத்தது. பெரும் புதைகுழியிலிருந்து தப்பித்த நாம் வகுப்பு வாதம் எனும் சிறு பள்ளத்தையும் கடந்து முன்னேறுவோம்.
74வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்க போகும் நாம் எத்தனையோ முன்னேற்றங்களையும்,பிரச்சினைகளையும்,தொழிநுட்பங்களையும்,குற்றங்களையும்,பெருமிதங்களையும், இயற்கை சீற்றங்களையும் இன்ன பிறவற்றையும் கண்டுவிட்டோம். தற்போதைய நிலை சிலருக்கு மகிழ்வூட்டலாம், சிலருக்கு மகிழ்வூட்டாமலும் போகலாம்.எப்படியிருப்பினும் நம் வேறுபாடுகளை மறந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற பெருமிதத்துடன் நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும்,நல்வாழ்வுக்கும்,வல்லரசுக்கும் என நம் உழைப்பைத் தர வரும் சுதந்திர தினத்தில் உறுதியேற்று அதை செயற்படுத்த முயற்சிப்போம். நம் தேச பிதாக்களின் அறிவுரைகளும்,ஒழுக்க நெறிகளும் அதற்கு துணைபுரியட்டும்.