Posted on Leave a comment

வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

வீர் சாவர்க்கர் நம் எல்லோருக்கும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக அறிமுகமானவர். நம்நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் அவருடைய பங்கு குறித்து நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் சாவர்க்கரின் பங்களிப்பு வெறும் தேசத்திற்கான விடுதலைப் போராட்டத்துடன் முடிந்துவிடவில்லை. அவருடைய சமுதாயப் பங்களிப்பு மிகவும் உன்னதமானது, அதே நேரம் பலருக்கும் தெரியாதது.

சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதன் காரணமாக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். 1911ம் ஆண்டு அந்தமானுக்குக் கைதியாக நாடுகடத்தப்பட்ட அவர் அங்கு சிறையில் பல ஹிந்துக் கைதிகள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டார். அத்தகைய மதமாற்றம் குறித்து ஏனைய இந்துக்களிடம் பெரிதாக எந்த ஒரு அதிர்வலையும் இல்லாமல் இருந்ததையும் பார்த்தார். உண்மையில் கிறித்துவ ஆட்சியில் அவர்களுடைய அதிகாரத்தின் கீழ் இயங்கும் ஒரு துறையில் மக்கள் மதம் மாற்றப்படுவது என்றால் கிறித்துவ மதத்திற்குத்தான் மாற்றப்பட வேண்டும். மேலும் அவர்களும் மதமாற்றத்தை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குபவர்கள் எனும்போது கிறித்துவ மதத்திற்கு மாற்றப்படுவதுதான் நடக்கக் கூடியது. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றப்படுவதை அவர் கண்டார். மதம் மாற்றுவதற்கு எந்த ஒரு போதகரையும் அந்த மதம் சிறைக்கு அனுப்பி வைக்கவில்லை. மாறாக ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு காபிரை, அதாவது ஹிந்துவை, மதம் மாற்றுவது தன்னுடைய கடமை என்று எண்ணிச் செயல்பட்டுக் கொண்டிருந்ததை அவர் கண்டார்.

இஸ்லாமியனாக மாறினால் அழகான பெண்கள் மணமுடிக்க கிடைப்பார்கள் என்றும், காஃபிர்களின் வீட்டில் திருடுவதோ,அவர்களைக் கொல்வதோ குற்றமாகாது என்றும், அவை புனிதமான காரியங்கள் என்றும் கூறி, அவர்கள் இந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்தனர். இப்படி நைச்சியமாகப் பேசி அவர்களைத் தங்களுடன் உணவு அருந்தும்படி செய்வர். ஒருமுறை இஸ்லாமியக் கைதிகளுடன் உணவருந்திய ஹிந்துக் கைதியைத் திரும்பவும் தங்கள் கூட்டத்தில் சேர்க்கவும் தங்களுடன் உணவருந்தவும் இந்துக் கைதிகள் அனுமதிக்கவில்லை. அவர்கள் மாசுபட்டு விட்டதாகக் கூறி அவர்களைப் புறக்கணித்தனர். இதனால் வேறு வழியில்லாத ஹிந்து இளைஞர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிக் கொண்டிருந்தனர்.

சாவர்க்கர் அப்படி மதம் மாறிய இளைஞர்களைத் திரும்பவும் இந்து மதத்திற்குக் கொண்டுவர பாடுபட்டார். அவருடைய இந்த முயற்சிக்கு கிறித்துவ சிறை அதிகாரிகளிடம் இருந்தும் இஸ்லாமிய வார்டன்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இது எதிர்பார்க்க கூடியதே. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் மற்ற ஹிந்துக் கைதிகளும் கூட சாவர்க்கரின் செயல்களை எதிர்த்தனர். இத்தகைய குற்றவாளிகளை இந்து மதத்தில் திரும்பச் சேர்த்து என்ன பயன் என்று அவர்கள் கேட்டனர். அவர்களை மதம் மாற்றுவதால் இஸ்லாமியர்களுக்கு என்ன பயனோ அதே பயன்தான் நமக்கும் என்று பதிலடி கொடுத்தார் சாவர்க்கர்.

பின்பு இப்படி மதம் மாறியவர்களைத் திரும்பவும் இந்து மதத்தில் சேர்த்துக்கொள்ள ‘சுத்தி’ என்றொரு இயக்கத்தை சிறையில் ஆரம்பித்தார். இந்து சமுதாயத்திற்கு ஒரு முஸ்லிம் திருடனை விட ஒரு இந்துத் திருடனால் ஆபத்துக் குறைவு என்பதே சாவர்க்கரின் நிலைப்பாடு. சிறையில் அவர் துவக்கிய இந்த சுத்தி பணி அவர் ரத்தினகிரியில் நிபந்தனைக் காவலில் இருந்தபோதும் அதன் பிறகும் கூடத் தொடர்ந்தது. அவருடைய இந்த சுத்தி இயக்கத்தால் அதற்கு முன்பு நிராகரிக்கப்பட்ட பலர் இந்து மதத்திற்குத் திரும்ப முடிந்தது அப்படி இந்து மதத்தால் நிராகரிக்கப்பட்ட ரஜபுத்திரப் பெண்மணிக்குப் பிறந்தவன்தான் ஔரங்கசீப் என்பதை நினைத்துப் பார்க்கும்போது சாவர்க்கர் செய்த பணியின் முக்கியத்துவம் நமக்கு நன்கு புரியவரும்.

அந்தமானில் இருந்து ரத்தினகிரி நிபந்தனைக் காவலுக்கு மாற்றப்பட்ட போது சாவர்க்கர் இந்து சமுதாயத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராகப் பணி புரிய ஆரம்பித்தார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரை சமுதாயம் தாழ்த்தியும் ஒதுக்கியும் வைக்கும் நடைமுறை மிகவும் பாவகரமானது என்று அவர் கருதினார். சாதி பேதங்களும் தீண்டாமையும் ஒழிய வேண்டும் என்று அவர் தொடர்ந்து பிரசாரம் செய்தார். இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்றால், நான்கு விஷயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறினார். விவசாய பந்தி (பிறப்பின் அடிப்படையில் இன்னார் இன்ன தொழில்தான் செய்ய வேண்டும் என்ற சமூக கோட்பாடுகள்), ஸ்பர்ச பந்தி (தீண்டாமை), ரோட்டி பந்தி (பல சாதியினர் ஒன்றாக உணவருந்த இருந்த தடைகள்), பேட்டி பந்தி (சாதி இணக்க திருமணங்களுக்கு இருக்கும் தடை). இந்த நான்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் என்று அவர் கருதினார்.

பதித பாவனா மந்திர்

அந்தக் காலகட்டத்தில் பட்டியல் சமுதாயத்தினர் பல கோயில்களில் நுழையத் தடை இருந்தது. அனைத்துச் சாதியினரும் கோயிலில் நுழைந்து வழிபட சாவர்க்கர் ஆலய நுழைவு போராட்டங்களை நடத்தினார். அதுமட்டுமில்லாது அனைத்துச் சாதியினரும் வழிபடும் வகையில் அனைவருக்குமான ‘பதித பாவனா மந்திர்’ என்ற ஒரு கோவிலையும் உருவாக்கினார். அந்தக் கோயிலின் நிர்வாகத்தையும் அனைத்துச் சாதியினரும் இணைந்து செய்யும் வகையில் ஆட்களை நியமித்தார். அதேபோல அனைத்து இந்துக்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த சமபந்தி போஜன் என்ற விருந்துகளையும் ஏற்பாடு செய்தார். இவையெல்லாம் கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள். சாவர்க்கர் இவற்றைச் செய்யும்போது சமுதாயத்தில் அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் அத்தகைய எதிர்ப்புகளை மீறி அவர் இவற்றைச் செய்தார்.

அது மட்டுமல்லாது நமது சமுதாயத்தில் இருந்த இன்னொரு தடைக்கல்லான சிந்து பந்தி (அயல் நாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை), வேதோக்த பந்தி (பிராமணரல்லாதவர் வேதம் ஓதத் தடை), சுத்தி பந்தி (மதம் மாறியவர்கள் தங்கள் தாய் மதம் திரும்பத் தடை) ஆகியவற்றையும் அவர் எதிர்த்தார். இவை இந்து சமுதாயத்தை பலகீனமாக்கும் விஷயங்கள் என்பதை உணர்ந்த அவர், இவற்றிற்கு எதிராகப் போராடினார். இவற்றிற்கு எதிர்வினையாக பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பூணூல் அணிவித்து, பிரம்மோபதேசம் செய்து, காயத்ரி மந்திர தீட்சை அளிப்பது, பிராமணர் அல்லாதோரில் விருப்பம் உள்ளவர்களுக்கு வேத மந்திரங்களை கற்றுத் தருவது போன்ற புரட்சிகரமான காரியங்களை அவர் செய்தார். 1929-30களில் அவர் செய்த இக்காரியங்கள் இந்து சமுதாயத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

தீண்டாமையை எதிர்த்து 1925ம் ஆண்டு அவர் அகில இந்திய மகளிர் மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் தடைகளை மீறிப் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரத்தில் வழக்கமாக மிக விமரிசையாக நடக்கும் விநாயக சதுர்த்தி விழாவை சாதி இணக்க விழாவாக அவர் மாற்றினார். அந்தப் பண்டிகையின் போது சமபந்தி விருந்துகளை அவர் ஏற்பாடு செய்தார். அவர் ரத்னகிரியிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் இந்த நிகழ்வுகளை மகாராஷ்டிர மாநிலத்திற்கு அப்பால் எடுத்துச் செல்ல இயலவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் ரத்னகிரி தவிர புனே, மஜ்கான், பம்பாய், சபாத், சாங்கிலி, அமராவதி, கோலாபூர், வராத், சமந்த்வாதி ஆகிய ஊர்களிலும், மகாராஷ்டிரத்தைத் தாண்டி க்வாலியர், இந்தோர் ஆகிய நகரங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்தன.

1932ம் ஆண்டு சாவர்க்கர் அகில பாரத இந்து யக்ஞா என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அவருடைய மனைவி யமுனா பாயும் உடனிருந்து அவருக்குப் பணிபுரிந்து உதவினார். ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்த வளாவல்கர் என்ற பண்டிதரைக் கொண்டு பட்டியல் இனத்தவரைப் பங்கு பெறச் செய்து இந்த யக்ஞத்தை அவர் செய்தார். ஆயிரக்கனக்கானோர் பங்கு பெற்ற இந்த யக்ஞத்தில் மகர் சமுதாயத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் என்பவரும், மொரோபந்த் தாம்ளே, சங்கர் சேத் மாலூஸ்தே என்பவர்களும் கர்த்தாக்களாகப் (யக்ஞத்தைச் செய்யும் எஜமானர்கள்) பங்கேற்றனர்.

சாவர்க்கர் என்ற தனி மனிதரால் ரத்னகிரியில் 7 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய சமுதாய மாற்றம் ஏற்பட்டது என்று மராத்திய வரலாற்று அறிஞர் விட்டல் ராவ் ஷிண்டே கூறுகிறார். ‘அவருடைய இடைவிடாத பிரசாரம் மற்றும் பணிகள் காரணமாக அங்கே சமுதாயத்தில் நிலவிய பேதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மக்கள் ஒற்றுமையாக வாழ்வதைக் காண முடிகிறது. அவர் மட்டும் நிபந்தனைக் காவலில் ரத்னகிரியில் முடங்கிக் கிடக்காமல் இருந்திருந்தால் இந்த சமுதாயப் புரட்சி நம் நாடு முழுவதும் பரவியிருக்கும் என்பது நிச்சயம். அப்படி நடக்க முடியாமல் போனது நம் துரதிர்ஷ்டம்’ என்று அவர் கூறியது சாவர்க்கர் ஆற்றிய சமுதாயப் பணிகளின் தாக்கத்தை நமக்குப் புரிய வைக்கும். இந்த மண்ணின் ஒரு மகத்தான மைந்தன் சாவர்க்கர். ஆனால் அரசியல் காரணங்களால் அவரைப் பற்றிய தகவல்கள் எல்லாம் நம்முடைய இளம் தலைமுறையினருக்குத் தெரிய விடாமல் மறைக்கப்பட்டுவிட்டது.

சாவர்க்கர் பிராந்திய வாதம் வலுப்படுவதை எதிர்த்தார். அப்படிப்பட்ட குரல் மேலோங்கி ஒலிப்பது தேசியத்தின் வலுவைக் குறைக்கும் என்று அவர் கருதினார். மாநிலத்திற்கு மாநிலம் இருக்கும் மொழி வேறுபாட்டால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் தடைகளை நீக்க அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

அந்தமான் சிறையில் இருக்கும்போது வருடா வருடம் தன்னுடைய வீட்டிற்கு ஒரு கடிதம் எழுத மட்டும் சாவர்க்கருக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. சிறையில் இருந்த பதினோரு ஆண்டுகளில் அவர் ஒன்பது கடிதங்களை எழுதினார். அதில் ஒரு கடிதத்தில் அவர், “வங்க தேசத்தில் பிரிவினை ஏற்பட்டபோது அதற்கும் சுதேசிக்கும் இருந்த சிறிய தொடர்பே இத்தகைய எதிர்வினைகளுக்குக் காரணம். இப்போது ஒவ்வொரு மாகாணமும் அது போலப் பிரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறது. ஆனால் தேசம் என்ற பாதுகாப்பு இல்லாமல் இந்தப் பிராந்தியங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? மகாராஷ்டிரா, பெங்கால், மெட்ராஸ் எல்லாமே செழித்து ஓங்கும், ஆனால் அது இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும் வரைதான். எனவே, ஆந்திர மாதாகி ஜெய் என்று கோஷம் எழுப்புவதற்கு பதில், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்புவோம். ஆந்திரம் அதன் ஒரு பகுதிதான். அதே போல வங்க ஆபார் என்ற கோஷத்திற்கு பதில் ஹிந்த் ஆபார் என்று கோஷம் எழுப்புவோம்” என்று குறிப்பிடுகிறார். (அந்தமான் சிறையில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள்- வீர் சாவர்க்கர், தடம் பதிப்பகம், நான்காவது கடிதம்.)

அதே போல நம் மக்கள் சாதி மற்றும் பிராந்திய பேதங்களைக் கடந்து திருமண உறவுகளை வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் தன்னுடைய தம்பிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இது குறித்துக் கூறுகையில், “நம் நாட்டில் உள்ள மக்கள் ஜாதி மற்றும் பிராந்தியம் போன்ற பிரிவுகளால் பிளவுபட்டு இருக்கிறார்கள். இந்தப் பிளவுகளை மீறி அவர்கள் திருமணம் செய்து கொள்வது இந்து சமுதாயத்தில் உள்ள இதுபோன்ற செயற்கையான பிரிவுகளை இல்லாமல் செய்துவிடும். அந்த நாளைக் காண நான் ஏங்குகிறேன். இத்தகைய தடைகளை உடைத்து நம் பண்பாடு காட்டாற்று வெள்ளம் போலச் சீறி பாய்ந்து செல்ல வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். (அந்தமான் சிறையில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள்- வீர் சாவர்க்கர், தடம் பதிப்பகம், ஐந்தாவது கடிதம்).

சாவரக்கர் சிறையில் இருக்கும்போது எழுதிய இந்த ஒன்பது கடிதங்களைப் படித்தால் நமக்கு அவருடைய சமுதாயப் பார்வை குறித்து மேலும் விரிவான புரிதல் கிடைக்கும். அந்தமான் சிறையில் பெரும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் அவர் மனம் இயங்கிய விதத்தை இந்தக் கடிதங்களின் மூலம் நாம் அறியலாம். விடுதலைப் போராட்டம் ஒரு பக்கமும், சமுதாயப் பங்களிப்பின் மூலம் உன்னதமான பாரதம் என்ற கனவு ஒரு பக்கமும் எனப் போராடிய, கற்பனைக்கு எட்டாத தன்னிகரற்ற தலைவர் வீர் சாவர்க்கர் என்பதை உணர இக்கடிதங்கள் நமக்கு உதவும்.

Leave a Reply