Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் (பகுதி 4) | முனைவர் வ.வே.சு

‘ஏன் சார் நீங்க செருப்பு போடறதில்ல?’

1967ல் சென்னை விவேகானந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பில் பயிலும் ஒரு சிறு மாணவர் கூட்டம், அங்கே தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சி.ஜகன்னாதாச்சாரியாரிடம் இக்கேள்வியைக் கேட்டது. ஜகன்னாதாச்சாரியார் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் துறைபோகியவர். ஆன்மிகத்திலும், ஆண்டாள் பாசுரங்களிலும் ஆய்வுகள் செய்தவர். இலக்கணப் புலி. பொய்யே சொல்லத்தெரியாத புனிதர். தேசபக்தர்.

கணுக்கால் வரை ஏறியிருக்கும், துவைத்த வெள்ளைக் கதர் வேட்டி கதர் ஜிப்பா, சிவந்த மேனி; நெற்றியில் திருமண்; தலையில் சிறு குடுமி; பிரவுன் கலர் ஃப்ரேம் போட்ட தடிமனான மூக்குக் கண்ணாடி. முகத்தில் என்றும் வற்றாத புன்னகை. இளைய மாணவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே அவர் கேட்டார்.

‘ஏண்டா பசங்களா! கோவிலுக்குள்ளே யாராவது செருப்பு போடுவாளா?’

‘என்ன சார் சொல்லறீங்க! கோவிலுக்குப் போனா செருப்பு வேண்டாம்; ஆனால் திருவல்லிக்கேணியிலிருந்து நமது காலேஜுக்கு செருப்புப் போடாமல் நடந்து வருகிறீர்களே! அது ஏன் சார்?’

‘திருவல்லிக்கேணி மயிலாப்பூர் இதெல்லாம் சித்தர்கள் நடந்த இடம். நடமாடிக் கொண்டிருக்கும் இடம். இது எல்லாமே கோயில் போலத்தான். அதனாலதான் நான் செருப்பே போட்டுக் கொள்வதில்லை.’

முழுதும் புரியாமல் தலையாட்டிக் கொண்டே சென்ற கூட்டத்தில் நானும் ஒருவன்.

பல ஆண்டுகளுக்குப் பின், ‘A search in secret India’ நூலைப் படித்தவுடன்தான் பேராசிரியர் ஜகன்னாதாச்சாரியார் சொன்ன பதிலின் ஆழ அகலங்கள் புரியத் தொடங்கின. இந்தியப் பண்பாட்டின் ஓர் அங்கமான ஆன்மிகத்தின் அடிப்படைகளையும், வெளிப்பாடுகளையும், தேடித் தேடிச் சென்று கண்டறிந்து, தான் பெற்ற அனுபவங்களை மிகத் தெளிவாக இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் பால் ப்ரண்டன் என்ற புனைபெயர் கொண்ட ரஃபேல் ஹர்ஸ்ட். (Paul Brunton is the pen name of Raphael Hurst). இவை வெறும் அனுபவக் குறிப்புகள் அல்ல; ஆன்மிகப் பயணத்தின் அதிர்வுகள்.

தொட்ட இடமெல்லாம் சுநாதம் ஒலிக்கும் சுசீந்திரக் கோயிலின் ஸ்வரத் தூண்கள் போல, பாதை செல்லும் இடமெங்கும் பல சித்தர்களும் யோகியரும் நடந்த மண் நமது பாரத பூமி; சில நேரங்களில் பாதை செல்லா இடங்களிலும் தடம் பதித்த தவச் சீலர்கள் இந்நாட்டிலுண்டு. இந்தியா என்றால் பாம்பாட்டிகளும் அரையாடைப் பக்கிரிகளும் மனைவிகள் புடைசூழ்ந்த மகாராஜாக்களும்தான் என்று எண்ணிய ஆங்கிலேயரிடையே, யோகியரையும் ரிஷிகளையும் தேடி பாரத மண்ணுக்கு வந்தவர் பால் ப்ரண்டன்.

இங்கிலாந்தில் பிறந்த ப்ரண்டன் தன் இளம் வயதிலேயே இந்தியாவைப் பற்றி அறிய ஆர்வம் மிக்கவராக இருந்தவர். குறிப்பாக ‘இந்திய யோகிகள்’ பற்றி அறிய ஆவலாக இருந்தவர். யோகிகளின் அமானுஷ்ய ஆற்றல்களைப் பற்றியும், வெவ்வேறு வகையான யோக அனுபவங்கள் பற்றியும், அவை எவ்வாறு மன அமைதியையும், உலக அமைதிக்கான தீர்வுகளையும் கொடுக்கும் என்பது பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினார்; கேட்டு அறிந்து கொள்வது மட்டுமல்ல; அத்தகு அறிவுச் செல்வத்தை யார் கொடுக்கிறார்களோ அவர்களை குருவாக ஏற்று அவர் வழியில் பின்செல்வது என்ற குறிக்கோளையும் அவர் கொண்டிருந்தார்.

இந்தியாவில் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் ரயில்வேயில் பணிபுரிந்த ஆங்கிலேய நண்பர் ஒருவரிடம், ‘யோகி (YOGI) என்றால் அறிவீர்களா?’ எனக் கேட்க,  ‘அப்படியென்றால் என்ன? அது ஏதாவது விலங்கா?’ என அவர் திருப்பிக் கேட்டார். பம்பாய்த் துறைமுகத்தில் வந்திறங்கியவர் தெரிந்தவர்களிடம் கேட்பதை விடுத்துத் தெருக்களில் தேடத் தொடங்குகிறார். சில இந்திய நண்பர்கள், முற்றும் புதியவர்கள், இரயில் பயணத்தில் சந்தித்தவர்கள், தெருவில் சந்திக்கும் வித்தைக்காட்டிகள், மந்திரவாதிகள், ஜோஸியக்காரர்கள் என்று பலர் இவருக்கு யோகிகளையும் துறவிகளையும், சாதுக்களையும் அடையாளம் கண்டு தொடர்பு கொள்ள உதவி புரிகிறார்கள்.

அறிவியலின் சந்தேகப் பார்வையும், ஆன்மிகத்தை உணரும் மனப்பாங்கும் (Scientific skepticism and spiritual sensitivity) ஒருங்கே கொண்டவர். எளிய தோற்றத்தையும், தூய்மையற்ற சூழலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ‘யோகியரையும் மகான்களையும்’ வரவு வைத்துக் கொண்ட அறிவாளி. இந்தியச் சூழலையும் மரபுகளையும் இகழ்ந்து நோக்காமல், இயன்ற அளவுக்கு அவற்றைப் பின்பற்றிய எளியவர்; நிஜத்தையும் போலிகளையும் எடைபோடத் தெரிந்த சமர்த்தர். ஆம்! யோகிகளைத் தேடிக் கொண்டே ஒரு யோகியைப் போல இந்தியாவில் தன் பயணத்தை அமைத்துக் கொண்டவர்.

பம்பாயில் தொடங்கும் பயணம், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராஜமுந்திரி, பெர்ஹாம்பூர், நாஸிக், கல்கத்தா, ஜெய்ப்பூர், டெல்லி, ஆக்ரா என்று பாரத மண்ணின் பல புள்ளிகளைத் தொடுகிறது.

எடுத்தால் கீழே வைக்க முடியாமல், விரைவுப் பாய்ச்சலில் வாசகனை இழுத்துச் செல்லும் வசீகர நடை. சம்பவங்களின் தொடர்ச்சியில் மர்மக் கதைகளின் சாயல். தத்துவம் பேசும் பகுதிகளில் மறை நூல்களின் ஆழம். இடைப்படும் வருணனைகளில் கவிதையின் வாசம். யோகியரோடு நிகழும் உரையாடல்களில் அனாயாசமான தெளிவு. இப்படி ஒரு ‘பெஸ்ட் செல்லர்’க்கான அனைத்துக் கூறுகளும் அமைந்த நூல் இது.

இந்தியாவில் வசிக்கும் எகிப்திய மந்திரவாதி முகமது பாய்; இந்த உலகத்தைக் காப்பதற்கே நான் அவதாரம் செய்துள்ளேன் என்று சொல்லும் மெஹர் பாபா (Meher Baba); யோகா பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்த, சென்னை அடையாறு பகுதியில் வசிக்கும் பிரம்மா எனும் சாது; சிந்தனைகளை உள்முகமாகத் திருப்புவதே சிறந்த யோக சாதனை எனச் சொன்ன மௌனத் துறவி; கல்கத்தாவில் சந்தித்த இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடிச் சீடர்களில் ஒருவரான மஹாசயா; யோகாவின் நுட்பங்களை அறிந்துகொள்ளப் பெரிய பரிசோதனைச்சாலை கட்டிக் கொண்டிருக்கும் விஷுத்தானந்தா; ஆன்மிக, யோகப் பின்னணியில் ஆக்ரா அருகில் தயால்பாக் எனும் ஊரில் நவீனக் ‘காலனியை’ உருவாக்கிவரும் சஹாப்ஜி மகராஜ்; எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் சாந்தி தாஸ் எனப் பல மனிதர்கள். பல சுவையான நிகழ்வுகள்.

இந்நூலின் தேடலுக்கும் தெளிவிற்கும் காரணமாக இருந்தவை இரண்டு மிக முக்கியமான சந்திப்புகள். ஒன்று காமகோடி சங்கரமட பீடாதிபதி மகாபெரியவாளோடு நிகழ்ந்தது; இன்னொன்று பகவான் ஸ்ரீ இரமண மகரிஷியோடு நிகழ்ந்தது.

அக்காலத்தில் ஆங்கிலத்தில் கதைகள் எழுதிய தமிழருள் ஒருவரான வெங்கடரமணி மூலம் செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி மகாசுவாமிகளைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு ப்ரண்டனுக்குக் கிட்டுகின்றது. பல கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கிறார் மகாசுவாமிகள்.

‘தேடி அலைந்தும் சரியான ஆன்மிக குரு கிடைக்கவில்லையென்றால் தங்களிடம் வரலாமா?’

மகாசுவாமிகள் புன்னகையோடு தனக்கே உரிய பாணியில் விடையளிக்கிறார்.

‘எனக்கு மடத்து வேலைகளே நிறைய உள்ளன. நேரம் கிடைப்பதே அரிது. உங்களுக்கு சரியான பாதையைக் காட்டக் கூடியவர்கள் இருவரே. ஒருவர் பனாரஸில் இருக்கிறார். அவரைப் பார்ப்பதே கடினம். அதுவும் ஐரோப்பியர் ஒருவரைச் சீடராக ஏற்பதற்கு அவர் சம்மதிப்பார் என நான் நினைக்கவில்லை.’

‘அந்த இன்னொருவர்?’ என்னுடையா ஆர்வம் அதிகரிக்கின்றது.

‘அவர்தான் மகரிஷி என அழைக்கப்படும் மகான். அருகேயுள்ள திருவண்ணாமலையில் இருக்கிறார். நான் ஒருமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். மிகப் பெரிய குரு. அந்த இடம் வட ஆற்காடு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. போக வழி தெரியுமா?’

(ப்ரண்டனின் மனத்தில், முந்தியநாள் காலை சென்னையில், மஞ்சள் ஆடை அணிந்த துறவி ஒருவர் திருவண்ணாமலையில் இருக்கும் அவருடைய குருவைக் காண வாருங்கள் என வற்புறுத்தியது நினைவில் வந்து செல்கிறது.)

‘என்னோடு ஒரு வழிகாட்டி வந்துள்ளார். அவருக்குத் தெரிந்திருக்கும்.’

‘அப்போது உடனே செல்வீர்கள் அல்லவா?’

‘இல்லை. நான் நாளையே தென்னிந்தியாவை விட்டுக் கிளம்ப எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன்.’ தயங்கிக்கொண்டே சொல்கிறார்.

‘நீங்கள் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கவேண்டும்..!’

‘அப்படியே செய்கிறேன்.’ பணிவுடன் சொல்கிறார்.

‘மகரிஷியை சந்திக்காமல் நீங்கள் தென்னாட்டை விட்டுச் செல்லக்கூடாது.’

ப்ரண்டன் சொல்கிறார், ‘உறுதி கொடுத்த பிறகு சங்கராச்சாரியார் என்னை ஆழமாகப் பார்த்துக் கொண்டே மெல்லிய புன்னகையோடு ‘கவலை வேண்டாம். நீங்கள் தேடுவதைக் கண்டு கொள்வீர்கள்’ என்று அருளோடு ஆசி தந்தார்கள்.’

மகாசுவாமிகள் சொன்னது போலவே ப்ரண்டன் திருவண்ணாமலை செல்கிறார். அகிலத்துக்கே வழிகாட்டும் அருணாசலேஸ்வரன், இந்த ஆங்கிலேயருக்கு வழிகாட்டமாட்டானா?

மகரிஷியின் அருகே அமர்ந்து தன் பணியை, அதாவது கேள்விகள் கேட்பதைத் தொடங்குகிறார் ப்ரண்டன். எவ்வளவு தேடி அலைந்தும் வாழ்க்கையின் இரகசியத்தைத் தன்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கமாகத் தன் தேடல்களைச் சொல்கிறார்.

‘மகரிஷி! நான் பல இடங்களில் தேடிவிட்டேன். குழப்பந்தான் அடைந்தேன். தெளிவு பெற உங்களால் எனக்கு உதவ இயலுமா? அல்லது இந்தத் தேடல்கள் எல்லாம் வெற்றுக் கனவுகளா?’ கேட்டுவிட்டு ப்ரண்டன் மகான் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பத்து நிமிடங்களுக்கும் மேலாக ப்ரண்டனைக் கூர்ந்து பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருக்கும் மகரிஷி, மெல்ல வாய் திறக்கிறார்.

‘நான் என்று சொன்னாயே அந்த ‘நான்’ ‘யார்’ என்று சொல்!’

‘கேள்வியே புரியவில்லை..’ குழப்பத்துடன் பதில் சொல்கிறார் ப்ரண்டன்.

‘புரியவில்லையா? மீண்டும் நன்றாக யோசித்துப் பார்.’

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன்னையே சுட்டிக் காட்டி தனது பெயரைச் சொல்கிறார் ப்ரண்டன்.

‘அவரை நீ அறிவாயா?’

‘என் வாழ்நாள் முழுதும் அறிந்திருக்கிறேன்.’ சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்.

‘ஆனால் அது உனது உடல். நீ யார் என்று சொல். அது தெரிந்தால்தான் தெளிவு பிறக்கும்.’

ப்ரண்டன் சிந்திக்கத் தொடங்குகிறார். அவரது உண்மையான ஆன்மிக யாத்திரையின் முதல் அத்தியாயம் இங்குதான் எழுதப்படுகிறது.

திருவண்ணாமலையை விடுத்து இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று, பல அனுபவங்களைப் பெற்றும், தேடியது கிடைக்கவில்லை என்ற மனச்சோர்வுடன் இங்கிலாந்து திரும்ப, பம்பாய்த் துறைமுகத்தில் பயணச்சீட்டு எடுத்துவிடுகிறார் ப்ரண்டன்.

அன்றிரவு உறங்க முடியவில்லை. உள்மனம் உரத்துக் கூவுகிறது இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் சந்தித்த யோகியரின் முகங்களெல்லாம் அவர் கண்களின் முன் பவனி வருகின்றன. ‘இத்தனை முகங்களைப் பார்த்தாயே, அவற்றில் ஏதேனும் ஒன்று உன்னை வழிநடத்தும் என்ற நம்பிக்கை உனக்கில்லையா?’ என்று கேட்டு நெஞ்சு விம்முகின்றது. அத்தனை முகங்களுள்ளும் ‘மகரிஷியின்’ முகம் மறையாமல் அப்படியே நிற்கின்றது. மீண்டும் திரும்ப வா என அழைக்கின்றது.

பிறகு ப்ரண்டன் கப்பல் பயணச்சீட்டை ‘கான்ஸல்’ செய்ததும், திருவண்ணாமலை அடைந்து மகரிஷியையே குருவாக ஏற்றதும், அவரது அருளாசியினாலே அவர் புகழ் பரப்பியதும், இந்திய ஆன்மிக வரலாற்றின் சுவையான பக்கங்கள்.

ப்ரண்டனின் ஆங்கில நடை அற்புதமானது. மெஹர் பாபாவுக்கு ஆசி வழங்கிய தொண்ணூறு வயதான ஹஸரத் பாபாஜான் என்ற மூதாட்டியை சந்திக்கிறார் ப்ரண்டன். அந்த முதிய வயதிலும் அவரது ஆன்ம சக்தி அளவற்றதாக விளங்குகின்றது. அதைச் சொற்களில் வடிக்க இயலவில்லை. It is not always easy to read the pages of the soul by the letters of the body என்று எழுதுகிறார்.

ப்ரண்டன் மூலமாக மகரிஷி ரமணரையும், மகரிஷி மூலமாக ப்ரண்டனையும் உலகம் அறிந்து கொள்ள உதவிய நூல் இது. அருணாசலேஸ்வரருக்கும் இதில் நிறையப் பங்கு உண்டென நான் நம்புகின்றேன்.

Leave a Reply