Posted on Leave a comment

சூரியன் எரித்த வீடு (Burnt by the Sun) | அருண் பிரபு

கம்யூனிஸ உலகில் நண்பன் என்பதும் இல்லை எதிரி என்பதும் இல்லை. கொள்கைக்கு விரோதி என்று சந்தேகம் வந்தால் பெற்ற தாயைக் கூட சிறை செய்யவோ கொல்லவோ தயங்கமாட்டார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட திரைக்கதை இது.

உண்மையில் 1930களில் சோவியத் ரஷ்யாவில் நடந்த சம்பவங்கள் பற்றி விவரம் சேகரித்து அதை அடிப்படையாக வைத்துக் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் நிகிடா மிகல்கோவ். போஷெவிக் புரட்சி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதை என்பதாலேயே இதை எடுத்ததாகச் சொல்கிறார் இயக்குநர். சூரியனால் எரிக்கப்பட்ட வீடு என்பதில் சூரியன் என்பது ஸ்டாலினைக் குறிப்பது. கட்டற்ற சர்வாதிகாரம் தன் குறிக்கோளுக்குத் தடையாக இருப்பதை மட்டுமல்ல, அழிப்பதன் மகிழ்ச்சிக்காகவே அனைத்தையும் அழிக்கும் என்கிறார் திரைக்கதையில் உதவி புரிந்த அசர்பைஜான் எழுத்தாளர் ருஸ்தம் இப்ராகிமோவிச். இது தாங்கள் கம்யூனிஸ ஆட்சியில் அனுபவித்ததுதான் என்றும் அதையே கதையில் வடித்திருப்பதாகவும் சொல்கிறார்.

மாஸ்கோவில் கதை தொடங்குகிறது. டிமிட்ரி என்பவன் ரஷ்ய உளவுப் படையில் (NKVD) பணி செய்யும் ஒரு உளவாளி. அவன் பணி முடித்து வீட்டுக்கு வரும் போது அங்கே அவனது வீட்டைக் கவனித்துக் கொண்டு உடனிருக்கும் அப்பா காலத்து விசுவாசி ஓலக் ஃப்ரெஞ்ச்சில், அவனிடம் தாமதம் பற்றிக் கேட்டு, உள்ளே அழைத்து கோட்டைக் கழற்றி உதவுகிறார். அவரிடம் ரஷ்ய மொழியில் பேசச் சொல்கிறான் டிமிட்ரி. உன் தந்தை எத்தனை உயரத்துக்குப் போனாலும் ஃப்ரெஞ்ச் மொழியை மறக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் என்கிறார் ஓலக். அப்போது ரேடியோவை ஒலிக்கவிடுகிறான் டிமிட்ரி. முகம் கழுவும் போது தொலைபேசி ஒலிக்கிறது. அவன் முகம் அச்சத்தால் மாறுகிறது. ஓலக்கும் பதற்றம் கொள்கிறார். ஆனால் காட்டிக் கொள்ளாமல் பெரியவர் பேப்பர் படிக்கிறார். ரஷ்ய மொழியில். அவரது வாசிப்பைத் திருத்திக் கொண்டே டிமிட்ரி குண்டுகளை எடுத்து வெளியே வைத்துவிட்டு வெற்றுத் துப்பாக்கியை வைத்து நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொண்டு சிரிக்கிறான்.

இதில் உள்ள நுண்விஷயம் நம்மூரில் பலருக்குப் புரியாது. தொலைபேசி ஒலிப்பது என்பது உளவுப்படை செய்யும் வேலை. சம்பந்தப்பட்ட நபர் வீட்டில்தான் உள்ளாரா, அலுவலகத்தில் இருந்து வீடு போக எவ்வளவு நேரம், அதன் பின் ஏன் தொலைபேசி எடுக்கவில்லை என்றெல்லாம் விசாரிப்பார்கள். சும்மா அரட்டை போலப் பேச்சு வளர்த்து விவரம் கறப்பார்கள். உளவாளிக்கே இப்படித்தான். அதுவும் டிமிட்ரி புரட்சிக்கு முந்தைய உயர்குல/பிரபுக்கள் குடும்பத்தில் வந்தவன். ஃப்ரெஞ்ச் என்பது உயர் குடி மக்கள் பேசும் மொழியாக இருந்தது. ரஷ்ய மொழியை அறிந்திருந்தாலும் தங்களை வேறுபடுத்திக் கொள்ள மன்னர் உள்ளிட்ட பிரபுக்கள் ஃப்ரெஞ்ச் மொழியையே கையாண்டனர். ரேடியோ போட்டது அந்தச் சத்தத்தில் தனிப்பட்ட உரையாடல்கள் வெளியில் கேட்காதிருக்க. எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் NKVD/KGB எந்த வகையிலாவது முக்கியத்துவம் பெற்றவர் என்று ஒருமுறை பதிவாகிவிட்டால் வாழ்நாள் முழுதும் உளவு பார்க்கத்தான் செய்யும். அதுதான் சோவியத் கட்டமைப்பு.

இதன் பிறகு கதை ஒரு கிராமத்துக்குச் செல்கிறது. அங்கே பெரிய விவசாயப் பண்ணை. ஒரு சிறுவன் டாங்கி வருது டாங்கி வருது என்று கத்திக் கொண்டே வருகிறான். விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமை வயல்களை அழிக்க மாஸ்கோவில் இருந்து உத்தரவாம். ஏன்? கேட்கக் கூடாது. உத்தரவு. நிறைவேற்ற வேண்டும். குறுக்கே கேள்வி கேட்டால்? அப்படி வழக்கமில்லை. கிராமத்தார் சிலர் ஓடுகிறார்கள். பெரிய பண்ணை வீட்டுக்குப் போகிறார்கள். அங்கே போய் காம்ரேட் கொடோவ் எங்கே என்று கேட்கிறார்கள். அவர் அங்கே இல்லை என்றதும், வீட்டு வளாகத்திலேயே ஒரு சிறிய மரத்தாலான இடத்துக்குப் போகிறார்கள். அங்கே மனைவி, மகளுடன் நீராவிக் குளியல் செய்கிறார் காம்ரே கொடோவ். இதற்குள் டாங்கிப் படைவீரர்களை சில கிழவிகள் கையில் கிடைத்த குச்சிகள், கொம்புகள், விளக்குமாறு என்று வைத்து அடிக்கிறார்கள்.

அவரை அழைத்து டாங்கிகள் வந்துள்ளன என்று சொல்ல, யாருடைய டாங்கிகள் என்கிறார். நம்முடையவை, NKVD வந்துள்ளது என்கிறார்கள். நல்ல உடை அணிந்து கொண்டு குதிரையில் கிளம்பி வந்து டாங்கிப் படையின் தலைவன் யார் என்று கம்பீரமாகக் கேட்கிறார். அவர் அவர் என்று கைகாட்ட ஒரு ஆள் உத்தரவை நிறுத்தச் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா என்கிறான். ‘யாரிடம் சொல்வாய்? போய்ச் சொல் செர்கெய் பெட்ரோவிச் தடுத்தான் என்று சொல். முடிந்தால் தண்டனை வாங்கித் தா’ என்று கர்ஜிக்கிறார். விமானங்கள் பறக்கின்றன. ‘ஐயையோ! கண்காணிப்பு விமானங்கள். உங்களால் நாங்கள் மாட்டிக் கொண்டோம்’ என்று படைத் தலைவன் பதறுகிறான். வாக்கி டாக்கியில் சொல்கிறான். ‘எஸ் ஸார். காம்டிவ் கொடோவ் வந்து நிறுத்தச் சொல்கிறார். நாங்கள் பேசுகிறோம் ஸார்.’

வாக்கி டாக்கியை வாங்கி கொடோவ் பேசுகிறார். செர்கெய் பெட்ரோவிச் என்று அவர் தன் பெயரைச் சொன்னதுமே எதிர்முனை அடங்கி உங்கள் உத்தரவுக்குக் கட்டுப்படுகிறோம் ஐயா என்று சொல்லிவிடுகிறது. வாக்கி டாக்கியை கொடுத்துவிட்டு மனைவி மகளை அழைத்துக் கொண்டு வீடு போகிறார். இந்த கொடோவ் யாரென்று பார்த்தால் ரஷ்ய போல்ஷெவிக் புரட்சியில் மிக முக்கியத் தளபதி. புரட்சி ராணுவத்தின் ஒரு டிவிஷனுக்குத் தலைமை தாங்கியவர். ஸ்டாலினுடன் அப்படி ஒரு நெருக்கம். அவர் பெயரைச் சொன்னால் சோவியத் யூனியன் முழுவதிலும் அப்படி ஒரு மரியாதை.

பண்ணைவீட்டில் உறவினர்களுடன் காலம் கழித்துக்கொண்டிருக்கிறார் கொடோவ். விவசாயம் ஒரு நன்றாக பக்கம் நடக்கிறது. ஆனந்தமான குடும்பம். இதில் ஒரு நாள் மாஸ்கோவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட டிமிட்ரி வந்து சேருகிறான். அவன் முன்னே அறிமுகமானவன். அவனை மித்யா என்று அழைத்து அவனோடு குடும்பத்தினர் அனைவரும் பேசுகிறார்கள். கொடோவின் மனைவி மரூசியா மட்டும் சற்றே தடுமாற்றம் கொள்கிறாள். காரணம் புரட்சிக்கு முன் மரூசியாவை டிமிட்ரிக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். புரட்சி காலத்தில் டிமிட்ரி குடும்பம் புரட்சிக்கு எதிரான வெள்ளை ராணுவத்தில் அங்கம் வகிக்கிறது. ஆகவே டிமிட்ரி புரட்சிப் படை வென்றதும் காணாமல் போகிறான். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்துத் திரும்பி வருகிறான். அதற்குள் மரூசியா கொடோவை மணந்து கொண்டு அவர்களுக்கு மகளும் பிறந்துவிடுகிறாள். ஆறு வயது மகள் நாடியாவுக்கு டிமிட்ரியை மாமா என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

மகளை ஆற்றில் படகில் அழைத்துச் செல்கிறார் கொடோவ். அந்த நேரத்தில் டிமிட்ரி மரூசியாவிடம் ‘என்னிடம் ஏன் பேசவில்லை? எதுவுமே கேட்கவில்லையே?’ என்று கேட்கிறான். அதற்கு மரூசியா ‘எதுவும் தெரிந்து கொள்ள விருப்பமில்லை. தன்னைக் காப்பாற்றியவர் கொடோவ், அது தெரிந்தால் போதும். கஷ்ட காலத்தில் விட்டுவிட்டு ஓடிப்போன டிமிட்ரி பற்றி ஏதும் தெரியத் தேவையில்லை’ என்று சொல்கிறாள். மகளிடம் பேசும் கொடோவ் அவர்களிருவரும் பழைய நண்பர்கள் ஆகவே பழங்கதை பேசுவார்கள். நீ கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்யாதே என்று சொல்கிறார். மகளிடம் சோவியத் பெருமைகள் பற்றி எடுத்துச் சொல்கிறார். சாலைகள், பேருந்துகள், ரயில்கள் விமானங்கள் என்று சோவியத்தில் அமர்க்களப்படும், மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள் என்று கனவு விதைக்கிறார். மித்யா மரூசியாவை அவர்கள் பழகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பழைய நினைவுகள் பற்றிச் சொல்கிறான்.

அந்த நேரம் அங்கே வரும் பாதுகாப்பு அதிகாரிகள் போர் வந்தால் தற்காத்துக் கொள்வது பற்றிப் பயிற்சி தருகிறார்கள். அதில் மித்யாவும் மரூசியாவும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். கொடோவ் மகளுடன் காட்டுப்பகுதி வழியாக வீட்டுக்கு வருகிறார். அங்கே அனைவரும் ஃப்ரெஞ்சில் பேசிக் கொண்டும் பாடிக்கொண்டும் இருக்க இவர் போய் சாப்பிட அமர்கிறார். அங்கே வரும் வேலைக்காரியிடம் நான் ஃப்ரெஞ்ச் பேசுவதில்லை, நீ போய் எல்லோரையும் சாப்பிட அழைத்து வா என்கிறார். அனைவரும் சாப்பிட வருகிறார்கள். அங்கே பேசும் போது குடும்பத்தினர் பழைய வாழ்க்கையின் சுவை போய்விட்டது என்று வருந்துகிறார்கள்.

மித்யா உணவு முடித்தவுடன் குழந்தை நாடியாவை அழைத்துச் சென்று கதை சொல்கிறான். அவளது பெயரை ஃப்ரெஞ்ச் மொழியில் நாடீன் என்று அழைக்கிறான். அவள் மறுத்து தன் பெயர் நாடியா தான் என்று ரஷ்ய மொழியில் சொல்கிறாள். அவன் சொல்வது தன் கதையை. புரட்சியில் தன் பெற்றொர் காணாமல் போனதும் பெரிய வீட்டைப் புரட்சிப் படை ஆக்கிரமித்துக் கொண்டதும் அவன் பல ஆண்டுகள் பல ஊர்களில் டாக்சி ஓட்டி, செருப்புத் தைத்து, கூலி வேலைகள் செய்து பிழைத்து ஊருக்கு வந்து சேர்ந்ததுமான கதையைச் சொல்கிறான். கொடோவின் மனைவி அதைக் கேட்டு மனம் நொந்து போய் மாடியில் இருந்து குதிப்பேன் என்று போகிறாள். கொடோவ் சமாதானம் செய்து கூட்டி வருகிறார். உண்மையில் புரட்சிக்கு ஆறு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தவனைத் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஊருக்குள் வரவிடாமல் செய்தது கொடோவ் என்கிறான் டிமிட்ரி.

மரூசியாவின் அண்ணனிடம் பேசும் போது தான் பட்ட துன்பங்களைச் சொல்லி தற்போது NKVDல் வேலை செய்வதாகச் சொல்கிறான். அண்ணன் நம்ப மறுக்கிறான். பிறகு 1923க்குப் பின் ஒரு ஆண்டு டிமிட்ரிக்காக மரூசியா காத்திருந்ததாகவும் அவன் வரவில்லை என்றதும் கையைக் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாள் என்றும், அவளைக் காப்பாற்றி வீட்டில் பராமரிக்கிற போது சோவியத் ராணுவத்தின் கர்னல் என்று கொடோவ் வந்து ஆறுதல் சொல்லி பேசிப் பழகி திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்கிறான். இது திட்டமிட்ட சதி என்கிறான் டிமிட்ரி.

அதற்குப் பழிவாங்க NKVD மூலம் அந்த ஊருக்கு வருகிறான் டிமிட்ரி என்கிற மித்யா. தன் மனைவியிடம் புரட்சிக்குப் பிந்தைய மாற்றங்கள் பற்றி விவரிக்கிறார் கொடோவ். குறைந்தகாலமே தாம் NKVDல் இருந்ததாகவும் அப்போது பலரை பல வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும் டிமிட்ரியை ஃப்ரெஞ்ச் தெரிந்த காரணத்தால் ஃப்ரெஞ்ச் பேசும் பல நாடுகளுக்கு அனுப்பியதாகவும் சொல்கிறார். அரசு உளவாளியாக அவன் போனதுதான் உண்மை, நாடோடியாக அலையவில்லை என்று சொல்கிறார். அவள் சமாதானம் ஆகிறாள். இதற்கிடையே டிமிட்ரி குழந்தைக்கு பியானோ வாசிக்கவும், Tap dance ஆடவும் கற்றுத்தருகிறான். அவன் வந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட கொடோவ் அவனிடம் விருந்தினன் போலவே நடிப்பைத் தொடர்ந்து செய், NKVD வண்டி வரும் போது போவோம், அதுவரை எந்த விவகாரமும் வேண்டாம் என்று சொல்கிறார்.

ஸ்டாலினுடனான தன் நெருக்கம் காரணமாக அப்படி வண்டி வராது என்று அவருக்கு ஒரு நம்பிக்கை. இருந்தாலும் NKVD மீது நம்பிக்கையில்லை. யாரை எப்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்வார்களோ தெரியாது. கொடோவ் டிமிட்ரியிடம் அவன் 1923லிருந்து 1929 வரை செய்து வந்த வேலைகள் பற்றி நினைவூட்டுகிறார். தான் சார்ந்திருந்த வெள்ளைப்படை (கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரானது) தளபதிகள் எட்டுப் பேரை டிமிட்ரி காட்டிக் கொடுத்ததை நினைவுபடுத்தி ‘உன்னை வேசி போல விலைக்கு வாங்கிவிட்டார்கள். நீ சார்ந்த ஆட்களையே காட்டிக் கொடுத்தவன் நீ. நானாவது எதிர்ப்பக்கத்து ஆள்’ என்கிறார். டிமிட்ரி போல்ஷெவிக் படை தன்னை ஏமாற்றிவிட்டது, காட்டிக் கொடுத்தால் வீட்டுக்குப் போக அனுமதிப்போம் என்று சொல்லி காட்டிக் கொடுக்க வைத்து பிறகு வேறு பல உளவு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறான். தன்னை முற்றும் அழித்துவிட்டார்கள் என்கிறான்.

‘அதற்காக கொடோவைக் கைது செய்யக் கனவு காண்கிறாயா? அது நடக்காது. புரட்சியின் ஹீரோவைக் கைது செய்ய யாருக்கு துணிவு இருக்கிறது’ என்கிறார் கொடோவ். அதற்கு டிமிட்ரி ‘இன்னும் 5 -6 நாட்களில் உன்னைக் கைது செய்து, 1920ல் இருந்து ஜெர்மனிக்கும், 1923ல் இருந்து ஜப்பானுக்கும் உளவு பார்த்ததாக எழுதிக் கையெழுத்துப் போட வைப்போம். போடாவிட்டால் உனக்கு மனைவி மகள் இருக்கிறார்கள், நினைவில் வைத்துக் கொள்’ என்கிறான். அவனை அடித்து வீழ்த்துகிறார் கொடோவ். அப்போது அவரது வீட்டுக்கு லெனின் பயோனியர் என்ற குழுவினர் வருகிறார்கள். ரஷ்யப் புரட்சி பற்றியும் சோவியத் பெருமைகள் பற்றியும் பாட்டுப் பாடி கொடோவுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.

மறுநாள் டிமிட்ரி சொன்னபடி வண்டி வருகிறது. நொறுங்கிப் போகிறார் கொடோவ். ஆனால் குடும்பத்தினர் அவர்கள் ஏதோ மரியாதைக்கு வந்ததாக எண்ணி டீ அருந்த அழைக்கிறார்கள். தானும் ஸ்டாலினும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்தபடியே ராணுவ சீருடை அணிகிறார் கொடோவ். வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் மனைவி மகளுடன் விளையாடியபடி அவர்களைக் கொஞ்சிவிட்டு வண்டியேறுகிறார். போகிற வழியில் யாரோ ஒரு ஆள் சரக்கு வண்டி ஒன்றில் வழிகேட்டு மறிக்கிறான். அவனுக்கு வழி சொல்ல விழைகிறார் கொடோவ். NKVD அதிகாரிகள் தடுக்க கைகலப்பில் நான்கு அதிகாரிகள் சேர்ந்து கொடோவை அடித்து விலங்கு பூட்டிவிடுகிறார்கள்.

அப்போது ஸ்டாலின் படம் போட்ட ராட்சத பலூன் வானில் பறக்கிறது. அதிகாரிகள் டிமிட்ரி உள்பட சல்யூட் அடிக்கிறார்கள். ஆனால் கொடோவ் தன் நிலையை நினைத்தும் ஸ்டாலினுடனான நெருக்கம் கூட தன் மீதான பொய்க் குற்றச்சாட்டை நீக்க உதவவில்லை என்பதை எண்ணியும் வருந்தி அழுகிறார். டிமிட்ரி வீட்டுக்கு வந்ததும் குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டு கையை அறுத்துக் கொள்கிறான்.

இதன்பிறகு ஸ்டாலின் படம் பறக்கும் பலூன் பின்னணியில் எழுத்துக்கள் ஓடுகின்றன. அவை சொல்லும் சேதி:

கொடோவ் NKVD அலுவலகம் கொண்டு போகப்பட்டு அங்கே பல்வேறு சோவியத் விரோத குற்றச்சாட்டுகளுக்குக் கையெழுத்துப் போடக் கட்டாயப்படுத்தப்படுகிறார். மனைவி, மகள் எதிர்காலம் கருதிக் கையெழுத்திடுகிறார். அவரை சுட்டுக் கொல்கிறார்கள். 1956ல் குருஷ்சேவின் ஆட்சியில் அவரது வழக்கு தூசி தட்டப்பட்டு குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டு அவரது கௌரவத்தை மீட்கிறார்கள்.

கொடோவின் மனைவியும் மகளும் கைது செய்யப்பட்டு சைபீரிய சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களும் 1956ல் விடுவிக்கப்பட்டு பழைய நிலைக்கு மீட்கப்படுகிறார்கள். நாடியா கஜாகிஸ்தான் பிராந்தியத்தில் இசைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறார்.

புரட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், சூரியனால் எரிக்கப்பட்ட அனைவருக்கும் சமர்ப்பணம் என்று படத்தை முடிக்கிறார் இயக்குநர்.

இந்தப்படம் 1994ல் வெளியிடப்பட்டு, சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்றது. 1994 கான்ஸ் படவிழாவில் கிராண்ட் பிரி என்ற இரண்டாவது உயரிய விருதும், ஜூரி விருதும் பெற்றது. 1994ல் ரஷ்யாவின் அரசு விருதைப் பெற்றது.

மிகப்பெரிய வசூல் லாபம் இல்லை என்ற போதும் படம் திரைப்படக் கல்வி கற்றுத்தரும் பல நிறுவனங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply