இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எழுச்சிமிகு தலைவர்கள் என்று மூன்று பேரைச் சொல்ல முடியும். முதலாவது, உலக அரங்கில் இந்திய கிரிக்கெட்டிற்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்த கபில் தேவ். இரண்டாவது, இந்தியாவை ஒரு வலிமையான அணியாக முன்னிறுத்திய கங்குலி. மூன்றாவது, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலப் போக்கை வடிவமைத்த மகேந்திர சிங் தோனி.
இவர்கள் மூவருமே இந்திய கிரிக்கெட்டிற்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கின்றனர். ஆகையால் இவர்களில் ஒருவரை மற்றவரோடு ஒப்பிடுதல் அறிவார்ந்த செயலாக இருக்காது. இவர்கள் மூவரில் யார் தலை சிறந்தவர் என்று விவாதம் நிகழ்த்துவதும் அறிவின்மையின் எல்லையாக அமைந்துவிடும். இம்மூவரில் மகேந்திர சிங் தோனி தனித்தன்மை வாய்ந்தவர். அவரது எழுச்சி இந்திய கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த எழுச்சியோடு இயைந்து நிகழ்ந்திருக்கிறது.
உலக அரங்கில் பேட்டிங் செய்ய தோனி மைதானத்திற்குள் நுழைந்த காட்சி, சமர் களத்தில் நுழையும் திமிரும் காளையின் நடையை ஒத்திருந்தது. ஆரம்ப காலத்தில், வலிமையாக அடித்து ஆட வல்ல பேட்ஸ்மேன் என்றுதான் பெயர் பெற்றார் தோனி. இந்திய ஆட்டக்காரர்களில் அத்துணை வலிமையான ஆட்டக்காரர் அதற்கு முன்பு இல்லை என்பது அவரைத் தனித்துக் காட்டியது. தோனி ஓய்வு பெற்ற இத்தருணத்தில் அவரைப் பற்றி சிந்திப்பவர்களிடம் தோனியைப் பற்றித் தோன்றும் முதல் நினைவு என்னவென்று கேட்டால், யாரும் அவரது பெரிய ஷாட்களை ஆடும் ஆட்டத்தைப் பற்றியோ மின்னல் வேக கீப்பிங் பற்றியோ சொல்லுவதில்லை. மாறாக, அவரது தலைமைப் பண்பு குறித்தும் அவர் எப்படி எதிர்கால இந்தியாவின் கிரிக்கெட் அணியைக் கட்டமைத்தார் என்பது பற்றியும் மணிக்கணக்கில் பேசுகிறார்கள்.
இது எதேச்சையாக அமைந்த ஒரு நிகழ்வு அன்று. தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிக நுணுக்கமாகப் படிப்படியாகக் கட்டமைத்தார் என்றே சொல்ல வேண்டும். தோனியின் திறனை நுணுக்கமாக உற்று நோக்குபவர்கள் பொதுப் பிம்பத்திற்கு எதிரான ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்வார்கள். அதாவது, தோனி ஒரு அதிரடியான ஆட்டக்காரர் என்பது பொதுப் பிம்பம். ஆனால் உண்மையில் தோனி அப்படி அதிரடியான மனிதரே கிடையாது – மிக நிதானமாக நுணுக்கமான திட்டமிடலுடன் கூடிய செயல்களுடனே எதையும் அணுகியிருக்கிறார்.
அவரது பேட்டிங் பாணியை எடுத்துக்கொள்ளலாம். இலக்கை விரட்டும் பேட்ஸ்மேன் தோனிக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஆட்டத்தின் மத்தியில் களமிறங்கும் தோனி முதல் பந்திலிருந்தே அடித்து ஆட மாட்டார். அவரது இந்த பேட்டிங் பாணிக்கு ஒப்புமையாக மைக்கேல் பெவனைச் சொல்லலாம். இந்த ஒப்பீடு சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதைக் கருத்தில் கொள்ளுங்கள் – இக்கட்டான தருணத்தில் ஆடவரும் தோனி ஆடடத்தின் மத்தியில் இருக்கும் போது பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க மாட்டார். தனது இன்னிங்சை வலிமையாகக் கட்டமைக்கும் அதே சமயத்தில், அவர் ஸ்கோர் போர்டு முன்னேறுவதை மட்டுமே கருத்தில் கொள்வார் (பெவனும் இதே செய்வார்). அவர் அரை மணிநேரம் களத்தில் இருந்திருந்தால், பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்காமல் ஓவருக்கு 4 அல்லது ஐந்து ஓட்டங்கள் சராசரியாக வரும்படி ஆடிக் கொண்டே இருப்பார். இவற்றில் பெரும்பான்மையானவை ஓடி எடுக்கப்பட்ட ஓட்டங்களாக இருக்கும். இதனால், பேட்டிங் அணியின் மீதிருக்கும் அழுத்தம் வெகுவாகக் குறைந்திருக்கும்.
போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கும் போது அவரது அடுத்த முகம் வெளிப்படும். அச்சமயங்களில் இலக்கு மூன்று ஓவர்களில் 30 அல்லது நான்கு ஓவர்களில் 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும். அந்த சமயத்தில் மிகப்பெரிய ஷாட்டுகள் ஆட ஆரம்பிப்பார். இதனால், மட்டையாளர் மீது இருக்கும் அதே அளவு அழுத்தம் பந்து வீச்ச்சாளர்களின் மீதும் இருக்கும். பெரிய ஷாட்கள் ஆடக்கூடிய வலிமை கொண்டவராக இருந்ததால், அவரால் ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட முடியும் என்பதை எதிரிகளும் அறிந்து இருந்தனர். அந்த முப்பது ஓட்டங்களை எடுக்க அவருக்குத் தேவை 5 அல்லது 6 அடிகள் மட்டுமே.
கடைசி ஓவர்களில் பத்துக்கும் மேற்பட்ட ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், அவ்வோட்டங்களை வெற்றிகரமாகப் பல ஆட்டங்களில் அவர் எடுத்து காட்டியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் இதை ஒரு பேட்டிங் வியூகமாகவும் விரிவுபடுத்தினார் அவர். இறுதி ஓவர்களில் பெரிய ஷாட்களை பிசிறில்லாமல் ஆடுவதை ஒரு கலையாக அவர் வளர்த்தார் என்றே சொல்லவேண்டும். தோனிக்கு பின்னரே, இந்த பாணியை இந்திய வீரர்கள் பலரும் நம்பிக்கையோடு பின்பற்றத் தொடங்கினர். உதாரணத்திற்கு பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் பிசிறில்லாமல் ஆடி இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் ரசிகர்களால் இன்றும் நினைவு கூறப்படுகிறது. தோனியின் இந்த பாணி ஏதோ அதிரடி ஆட்டத்தால் உருவானதன்று. மிகுந்த திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டது.
களத்திற்கு வெளியேயும் இதேபோன்ற திட்டமிடலுடனே செயல்பட்டிருக்கிறார். அவர் இந்தியாவிற்கு நுழைந்தபோது ஜாம்பவான்கள் இருந்தனர். அவர்களே இந்திய அணியின் தூணாகவும் செயல்பட்டனர். வெறும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் தனது பங்கைச் செய்துகொண்டிருந்த தோனிக்கு திருப்புமுனையாக அமைந்தது டி20 உலகக் கோப்பை போட்டி. 2007ம் ஆண்டு நடந்த அப்போட்டியின் காலத்தில், கங்குலி தன் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். தலைமைப் பொறுப்பின் அழுத்தம் டிராவிடின் திறமையைப் பாதித்துக் கொண்டிருந்தது – அதனால் அவர் குறைந்த ஓவர்கள் கொண்ட வடிவத்தில் இருந்து விலகி இருக்க விரும்பினார். டெண்டுல்கரோ தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்பாதவராக இருந்தார். ஆகவே இளைஞர்களைக் கொண்ட அவ்வணிக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்பு தோனிக்கு வந்தது. அழுத்தங்கள் நிறைந்த சவாலான பணி. ஆனால் சவாலை சாதனையாக்கினார் தோனி. அப்போது முதலே இந்திய அணியின் அடுத்த தலைவர் அவர்தான் என்பது உறுதியானது.
தோனி தலைமை ஏற்றவுடன் அடுத்த உலகக் கோப்பை வெற்றிக்கான வியூகங்களை அமல்படுத்தத் துவங்கினார். முதல் கட்டமாக அணியின் ‘பெரிசு’களை மெல்லமெல்ல பின்னுக்குத் தள்ளினார். தோனியின் இந்த முடிவு அணித் தேர்வாளர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. சிறிய போராட்டத்திற்குப் பிறகு அவரால் தேர்வாளர்கள் சம்மதிக்கச் செய்ய முடிந்தது. 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மும்முனைப் போட்டித் தொடருக்கு கங்குலி, டிராவிட் மற்றும் லக்ஷ்மன் நீக்கப்பட்டனர். அந்தத் தொடரில் இந்தியா பெற்ற வெற்றி இளமையான அணிக்குப் பெரிய உத்வேகமாக இருந்ததுடன் தோனியின் திட்டத்திற்கு வலு சேர்த்தது. கங்குலி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். திராவிட் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடினார் (மிகச்சில ஒருநாள் போட்டிகளில் 2009 ஆண்டு விளையாடினார்). டெண்டுல்கரும் சேவாக்கும் சிறிது காலம் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்கள்.
ஊடகங்கள் தோனியின் முடிவைப் பலவிதமாக ஆரம்ப காலத்தில் விமர்சித்தனர். அனுபவத்திற்கு மாற்றாக இளமையைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு அல்ல என்று அவர்கள் எழுதினர். உண்மையில் அவரது முடிவு கங்குலி, திராவிட் போன்றவர்களின் ஓய்வைத் துரிதப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். கடந்த உலக கோப்பை போட்டியின்போது வர்ணனையாளராக இருந்த கங்குலி, தோனியின் ஆட்டத்தை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததைப் பார்க்கும் போது, அவர் அணியிலிருந்து விலக்கப்பட்ட நிகழ்வு, கங்குலியின் மனதில் ஆறாத ரணமாக இன்றும் இருப்பதாகவே தோன்றுகிறது. கங்குலியைப் போலவே சேவாக்கும் ஒரு கட்டத்தில் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதற்குக் காரணம் தோனியின் முன்விரோதம் அன்று. சேவாக்கும் கங்குலியும் மட்டையாளர்களாக மட்டுமே அணியில் தங்கள் பணியைச் சுருக்கி கொண்டதே காரணம். அவர்கள் இடத்தை வளரும் இளைஞன் ஒருவன் எளிதில் நிரப்பி விட முடியும் என்றே தோனி நம்பினார். அதுவே நிகழ்ந்தது.
2011ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த பிறகு தோனியைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அணி தேர்வாளர்கள் ஒருமித்த முடிவு எடுத்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் மாயக்கரமாக வந்து உதவி செய்தது கிரிக்கெட் போர்டின் அப்போதைய சேர்மனாக இருந்த என் ஸ்ரீனிவாசன். இவரே ஐபிஎல் அணியின் சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தோனியின் மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தார். இதன் காரணமாக தோனி மேலும் சில வருடங்கள் டெஸ்ட் போட்டியில் நீடித்தார். ஆனால் கேப்டனாக இருக்கும் போதே, தொடரின் நடுவில், யாரும் எதிர்பாராதபடி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் (சரியாக ஆண்டு இறுதியில்). பிறகு தொடர்ந்து டி20 போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார்.
அணித்தலைவராக பல சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். ஐசிசி நடத்தும் 3 உலகக் கோப்பைகளையும் அவர் இந்தியாவிற்காக வென்று தந்திருக்கிறார். மிகவும் அனுபவம் வாய்ந்த அணித் தலைவர் என்ற தனி இடத்தையும் அடைந்திருக்கிறார். எண்ணிக்கை சார்ந்த பல உச்சங்களை அவர் அடைந்திருக்கிறார். இந்த உச்ச நிலையை நிலைகள் குறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. தோனி ஒரு விக்கெட் கீப்பர் மட்டுமன்று; ஒரு பேட்ஸ்மேன் மட்டுமன்று; ஒரு அணித்தலைவர் மட்டுமன்று; இவை அனைத்தையும் உள்ளடக்கிய தனித்துவமான ஆளுமை. அவரைப் போன்ற இன்னொருவர் இந்திய கிரிக்கெட் சூழலில் தோன்றுவது துர்லபம்.
சூழ்நிலைகளை மிகவும் துல்லியமாகக் கணிக்கத் தெரிந்த தோனி, இனி தாம் அணியில் எவ்வாறு நடத்தப்படுவோம் என்பதை உணர்ந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. தோனியின் ஓய்வறிக்கை ஒரு வரி அறிக்கையாகத் தோன்றினாலும், தனது ஓய்வை அறிவித்த வீடியோவில் பயன்படுத்திய பாட்டும் அவர் தேர்ந்தெடுத்த படங்களும் அவர் எவ்வளவு முதிர்ச்சியான மனிதர் என்பதைக் காட்டுகிறது. அதுதான் தோனி.