Posted on 1 Comment

மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

  1. உண்மையில் மகாபாரதத்தில் கர்ணனின் இடம் என்ன? கர்ணன் வள்ளலாகவும், அன்பே உருவானவனாகவும், நீதி நேர்மை தர்மம் எல்லாம் அறிந்திருந்தும் செஞ்சோற்றுக் கடனுக்காக மட்டுமே கௌரவர்கள் பக்கம் நின்றதாகவும் இந்தியா முழுமைக்கும் நம்பப்படுகிறதே, இது சரிதானா? கர்ணன் மனமறிந்து எந்தத் தவறையும் மகாபாரதத்தில் செய்யவே இல்லையா?
  2. கர்ணன் செய்த தவறுகளாக கிருஷ்ணன் பட்டியலிடுவது என்ன?
  3. கர்ணனின் தேர்க்கால் உடைந்து போர்க்களத்தில் கர்ணன் நின்றபோது, அர்ஜுனன் எய்த அம்பு படாமல் தர்மதேவதை காத்தாள் என்பது உண்மைதானா?
  4. கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் வரிசையில், தர்மனுக்கு நிகரான தர்மத்தைத் தொடர்பவனாக கருதத் தக்கவனா?
  5. அர்ஜுனனுக்கு நிகரான வீரனாகவும் வைக்கப்படத்தக்கவன் தானா கர்ணன்?

பாண்டவர்களுக்கு உண்மையில் அரசுரிமை இருக்கிறதா? இருக்கிறது என்றால் எந்த விதத்தில் என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையாக ஆகஸ்ட் 2020 இதழ் வரையில் தொடர்ந்து எழுதி வந்தோம். அடுத்ததாக பலர் எழுப்பியிருந்த கேள்விகளை ‘வலம்’ குழுவினர் தொகுத்து ‘கர்ணனை அணுகுதல்’ என்ற தலைப்பில் பின்வரும் ஐந்து கேள்விகளாக அனுப்பியிருக்கிறார்கள்.

இவை எல்லாமே கர்ணனை மையப்படுத்தி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள். கர்ணனைப் பற்றிய இன்றைய பிம்பத்துக்குப் பல காரணங்கள் உண்டு. பாரதத்தையும் அதில் வரும் பாத்திரங்களையும் குறித்து நம்மிடையே வழங்கிவரும் எல்லாக் கதைகளுக்கும் வழக்காறுகளுக்கும் மூலமாக இருக்கும் வியாச பாரதம் கர்ணனைப் பெருங்கொடையாளியாகச் சித்திரிக்கவில்லை. ஆகஸ்ட் 2020 இதழில் நாம் குறிப்பிட்டிருந்த கோஷயாத்ரா பர்வம் எனப்படும் ஆநிரைக் கணக்கெடுப்புக்கு துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகிய நால்வரும் பெரும் சேனைகளைத் திரட்டிக்கொண்டு சென்ற சமயத்தில் அங்கே தங்கியிருந்த சித்திரசேனன் என்ற கந்தர்வர் தலைவன், அவனுடைய கந்தர்வ சேனைக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போர்; அதில் கந்தர்வர்களிடம் தோற்ற கர்ணன், துரியோதனனைக் கைவிட்டு, போர்க்களத்தைவிட்டே ஓடிப் போனது போன்ற சம்பவங்களெல்லாம் நடக்கின்றன. ‘நீ பார்த்துக்கொண்டிருக்கும்போதே, உன் கண் முன்னாலேயே நான் கந்தர்வர்களுடன் நடந்த போரில் தோற்று, களத்தை விட்டு ஓடினேன்’ என்று இதைப் பற்றி துரியோதனனிடத்தில் கர்ணனே சொல்கிறான். இதைத் தொடர்ந்து துரியோதனன் உண்ணாவிரதமிருந்து உயிரைவிடத் துணியும் பிராயோபவேச முயற்சியில் இறங்குகிறான். தங்களுடைய தலைவனான துரியோதனன் உயிரை விடுவதைப் பொறுக்கமுடியாத தைத்யர்கள் (அரக்கர்கள் என்று சொல்லலாம்) ஒரு க்ருத்தியையை (சொன்னதைச் செய்யும் ஒருவகைப் பேய்) ஏவி துரியோதனனை இரவுநேரத்தில் கடத்தி வந்து, ‘பாண்டவர்கள் தேவர்களைச் சார்ந்தவர்கள். நீயும் கௌரவ சேனையும் அரக்கர்களைச் சார்ந்தவர்கள். கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரனுடைய ஆவி, கர்ணனுக்குள் புகுந்திருக்கிறது. பீஷ்மர், துரோணர் முதலானவர்களை நாங்கள் பீடிக்கப் போகிறோம். எனவே நீ தளர்ச்சி அடையாதே. நீ உயிரை விட்டுவிட்டால் தைத்யர்களுக்கு வேறு கதியில்லாமல் போய்விடும்’ என்றெல்லாம் சொல்லி அவனைத் திடப்படுத்தி அனுப்பி வைக்கிறார்கள். அப்படித் திரும்ப வந்த துரியோதனன் ராஜசூய யாகம் செய்ய விரும்புகிறான். ‘அதை நீ செய்ய முடியாது’ என்று மறுக்கும் கர்ணன் அவனை வைஷ்ணப் பெருவேள்வி செய்யச் சொன்னான். வைஷ்ணவ யாகத்தைப் பற்றிய குறிப்புகளை ஆகஸ்ட் இதழில் பார்த்தோம். இந்த வைஷ்ணவ யாகம் முடிந்ததன் பிறகு, ‘நான் எப்போது ராஜசூய யாகத்தைச் செய்வேன்’ என்று துரியோதனன் கேட்கின்றபோது, ‘கவலைப்படாதே, நான் அர்ஜுனனைக் கொல்வேன்’ என்று கர்ணன் சபதம் செய்கிறான். அப்போது செய்யும் சபதத்தில்தான் (அர்ஜுனனைக் கொல்லும்வரையில்) ‘நான் யார் எதைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன்’ என்ற கருத்து வருகிறது. இந்த இடம் வரும்வரையில், கர்ணன் ஒரு கொடையாளி என்ற கருத்து வியாச பாரதத்தில் எங்கும் இடம்பெறவில்லை. அவன் செய்த சபதத்தைப் பார்ப்போம்:

‘அப்பொழுது கர்ணன் அந்தத் துரியோதனனைப் பார்த்து, ‘ராஜகுஞ்சர! என் சொல்லைக் கேள். அர்ஜுனன் கொல்லப்படுகிறவரையில் நான் கால்களை அலம்புகிறதில்லை; மாம்ஸத்தைப் பக்ஷிக்கிறதில்லை; மதுவில்லாமல் உண்கிற விரதத்தைக் கைக்கொள்ளுவேன். எவனால் யாசிக்கப்பட்டாலும் நான் இல்லை என்கிற சொல்லைச் சொல்லமாட்டேன்’ என்று சொன்னான்’ (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம் அத்.258, பக். 957) ‘எவனால் யாசிக்கப்பட்டாலும்’ என்பது அந்த சபதத்தில் இடம்பெற்றிருக்கிற காரணத்தால்தான் ‘இந்திரன் உன் கவச குண்டலங்களை யாசிக்க வருகிறான். கொடுக்காதே’ என்று எச்சரித்த சூரியனுடைய வார்த்தைகளைக் கர்ணனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூரியன் கர்ணனை எச்சரிக்கும் முன்னமேயே, ‘இப்படி நடக்கப்போகிறது’ என்று தைத்யர்கள் துரியோதனனிடத்தில் சொன்னதை ஆகஸ்ட் இதழில் பார்த்தோம்.

கர்ணன் கொடையாளியான கதையை வியாசர் விவரித்திருக்கிற விதம் இது. ஆனால், வியாச பாரதத்தைத் தொடர்ந்துவந்த காலங்களில், கர்ணனுடைய கொடைச் சிறப்பு பல க்கண்ட காவியங்களில் (Khanta Kavya – காவியத் துணுக்குகளில்) சிறப்பிக்கப்பட்டது. நாற்பது நாளுக்குத் தொடர்ந்து பெய்த மழைக்குப் பின்னால், கிருஷ்ண பரமாத்மா ஒரு அந்தணன் வடிவத்தை எடுத்துக்கொண்டுவந்து, ‘உலர்ந்த விறகு வேண்டும்’ என்று யாசிப்பதும், துரியோதனன் உள்ளிட்ட ஒருவராலும் உலர்ந்த விறகைக் கொடுக்க முடியாமல் போவதும், அந்த அந்தணனை அமரச் சொல்லும் கர்ணன், அவனுக்குத் தெரியாமல் அருகிலிருந்த ஒரு மாளிகையை உடைக்கச் சொல்லி, சந்தன மரத்தால் செய்யப்பட்ட அதன் கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் எடுத்து நாற்பது வண்டி சந்தனக்கட்டைகளை உலர்ந்த விறகாகத் தந்ததாகச் சொல்லப்படும் ஒரு உபாக்யானம், ஜைமினி பாரதத்தில் சொல்லப்படுவதாக சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் சொல்லும் மஹாபாரதத்தின் சி.டி. பதிவில் குறிப்பிருக்கிறது. இந்தக் கதையால் கவரப்பட்டு ஜைமினி பாரதத்தை எல்லா இடங்களிலும் தேடி, எங்கும் கிடைக்காமல் கடைசியில் அமேஸானில், தொன்மையானதான ஹளே கன்னடாவிலிருந்து Daniel Sanderson என்ற பாதிரியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புத்தகம் கிடைத்தது. (https://www.amazon.in/s?k=jaimini+bharata+kannada&crid=BW35FY92UW2J&sprefix=Jaimini+bh%2Caps%2C290&ref=nb_sb_ss_i_1_10) ஹார்வர்ட் காலேஜில் அந்தப் பாதிரியார் செய்த மொழிபெயர்ப்பும் ஹளே கன்னடா மூலமும் இருக்கிறது. ஆர்டர் செய்தால், அதன்பிறகு அச்சிட்டுத் தருகிறார்கள். ஒரு ஆளுக்கு இரண்டு பிரதிகள் மட்டும்தான் கொடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் இது கிடைக்கிறது. ஆனால், மைசூர் போன்ற இடங்களிலிருக்கும் கன்னடர்களைக் கேட்டால், ‘ஜைமினி பாரதம்தானே! கிடைக்கிறதே! நான் வாங்கித் தருகிறேன்’ என்பார்கள். வாங்கித் தாருங்கள் என்றால், தேடிப்பார்த்துவிட்டு, ‘கிடைக்கவில்லை சாரே’ என்பார்கள். இப்படித்தான் நிலைமை இருக்கிறது.

புத்தகத்தை வாங்கினேனே தவிர, ஜைமினி பாரதத்தை இன்னும் படிக்க முடியவில்லை. எனவே மேற்சொன்ன சம்பவம் ஜைமினி பாரதத்தில் இடம்பெற்றிருப்பதற்கு சேங்காலிபுரம் அவர்களின் பாரதச் சொற்பொழிவுகள்தான் சான்று.

வலம் குழுவினர் எழுப்பிருக்கும் கேள்விகளில் மூன்றாவதாக உள்ள கேள்வியான ‘தர்மதேவதை அர்ஜுனனுடைய அம்புகளைத் தடுக்கும்’ விவரம் வில்லி பாரதத்தில் உள்ளது. இது வில்லிபுத்தூராருடைய சொந்தக் கற்பனை. வியாசர் இதைச் சொல்லவில்லைல. இது மட்டுமல்லாமல், ‘உள்ளத்தில் நல் உள்ளம்’ என்று என்டிஆர் கிருஷ்ணன் பாடிக்கொண்டே வந்து, ‘உன்னுடைய தர்மத்தின் பலனையெல்லாம் எனக்கு யாசகமாகக் கொடு’ என்று கேட்டு கர்ணன் தான் செய்த தர்மத்தின் பலனை (இந்த தர்மத்தின் பலனையும் சேர்த்து) தன் ரத்தத்தால் தாரைவார்த்து தர்மம் செய்வானே, அதுவும் வில்லிபுத்தூராரின் சொந்தக் கற்பனை. வியாச பாரதத்தில் இல்லை.

வில்லி, கதையை இப்படி மாற்றியதற்கு ஒரு காரணம் உண்டு. வியாசருடைய மூலத்தில் அடுக்கடுக்காக வரும் தோல்விகளைக் கண்டு மனம் சோர்ந்து கர்ணன், ‘இவ்வளவு தர்மம் செய்தேனே! தர்மம் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று மிக நீண்ட தர்ம நிந்தனை செய்கிறான். இது அந்தச் சூழலின் யதார்த்தம். இந்த கட்டத்தைச் சொல்லிக்கொண்டு வந்த வில்லிபுத்தூராருக்கு இது ‘தர்மம் தலைகாக்கும்’ என்ற ஆழமான நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கிறதே என்று தோன்றியிருக்கலாம். பார்த்தார். கிருஷ்ணனை அந்தண வேடம் கட்டச் செய்து, கர்ணனிடத்தில் வந்து அவனுடைய தர்மத்தின் பலனையெல்லாம் யாசிக்கச் செய்தார். ‘தர்மம் தலைகாக்கும்தான். ஆனால் அந்த தர்மத்தின் பலனையெல்லாம்தான் கிருஷ்ணன் யாசித்துப் பெற்றுக்கொண்டுவிட்டானே! ஆகவே தர்மத்தால் கர்ணனைக் காக்க முடியாமல் போயிற்று’ என்று ஒரு கற்பனையைப் படைத்தார். தர்மம் தலைகாத்ததோ இல்லையோ, இவருடைய லாஜிக்கின்படி அந்த தர்மத்துக்கு ஒரு இயலாமை ஏற்பட்டுவிட்டது என்று மாற்றினார். இதன் பலனாக இன்று நாமெல்லாம் கிருஷ்ணன் One sided என்று பேச ஒரு காரணத்தை ஏற்படுத்திவிட்டார். அதுமட்டுமல்லாமல், ‘கிருஷ்ணன் குறுக்கிடாவிட்டால், அர்ஜுனனால் கர்ணனை வென்றிருக்க முடியாது’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அர்ஜுனனுடைய பாத்திரப் படைப்பையே சரித்துவிட்டார். மூலத்தில் மாற்றங்கள் செய்து, அந்த மாற்றங்கள் மூலத்தை விஞ்சும் அளவுக்கு நிறைவாக நிற்கச் செய்ய, எல்லோரும் கம்பன் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டிவருகிறது! அதே சமயத்தில், பாரதத்தில் ஆழங்கால் பட்டவனான பாரதியேகூட, உவேசாவுக்கு வாழ்த்து எழுதும்போது ‘கர்ணனொடும் கொடை போயிற்று’ என்றுதான் எழுதினான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. கர்ணனுடைய கொடை அவ்வளவு தூரம் ஆழமான நம்பிக்கையாக மிகப் பன்னெடுங்காலமாக இந்தியாவெங்கும் பரவியிருக்கிறது என்பதையும் எண்ணவேண்டியிருக்கிறது.

மஹாபாரதத்தில் எந்தப் பாத்திரமும் நூறுசதம் நல்லவனும் இல்லை, நூறுசதம் அயோக்கியனும் இல்லை என்பார்கள். அதில் ஓரளவுக்கு உண்மையில்லாமல் இல்லை. ஹீரோ, வில்லன் என்பதெல்லாம் மேற்கத்திய கருத்தாக்கங்கள். நம்முடைய இதிகாசங்களின் போக்கே வேறுவிதம். இங்கே ராமனுடைய மாண்பும் பேசப்படும்; ராவணனுடைய உயர்வும் அவன் மூன்று லோகங்களையும் ஆண்ட சிறப்பும், அவனுடைய நகரம் தேவர்களுடைய பொன்னுலகத்தை விஞ்சியிருந்த தன்மையையும் விரிவாகப் பேசப்படும். ‘இரணியன் குளிக்கப் போனால் சமுத்திரம்கூட அவனுடைய முழங்கால் அளவுக்குதான் வந்தது என்பதால், மேகத்தைப் பொத்துதான் அவன் நீராடினான்’ என்று இரணியன் வதைப்படலத்தில் அவனுடைய உருவத்தைக் கொண்டு கம்பனால் திகிலேற்படுத்த முடிந்திருக்கிறது.

இது மஹாபாரதத்திலும் உண்மை என்றாலும் பாண்டவர் பக்கத்தையும் கௌரவர் பக்கத்தையும் ஒரே அளவுகோலால் முழம்போட முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. கர்ணனைப் பற்றி வியாசர் சொல்லும் விவரங்கள் அத்தனை ஆழமானவை. திடுக்கிடச் செய்பவை. நட்ட நடுசபையிலே பாஞ்சாலியைத் துகிலுரியச் சொன்னவன் கர்ணன்தான் என்பதை மறக்க முடியவில்லையே!

யாரடா பணியாள்! வாராய்,
பாண்டவர் மார்பில் ஏந்தும்
சீரையும் களைவாய், தையல்
சேலையும் களைவாய்’ என்றான்

என்று பாரதியின் பாஞ்சாலி சபதம் பேசுகிறதே!

‘துச்சாஸனா! இந்த விகர்ணன் மிகச் சிறியவன்; தெரிந்தவன்போலப் பேசுகிறான். பாண்டவர்களின் வஸ்திரங்களையும் திரெளபதியின் வஸ்திரத்தையும் கொண்டு வா என்றான்’ (ஸபா பர்வம், த்யூத பர்வம், தொண்ணூறவது அத்தியாயம்) என்று வியாச பாரதமும் இதை உறுதிசெய்கிறதே! ‘O Dussasana, this Vikarna speaking words of (apparent) wisdom is but a boy. Take off the robes of the Pandavas as also the attire of Draupadi. Hearing these words the Pandavas, O Bharata, took of their upper garments and throwing them down sat in that assembly. Then Dussasana, O king, forcibly seizing Draupadi’s attire before the eyes of all, began to drag it off her person’ என்று இந்த இடத்தை கிஸாரி மோஹன் கங்கூலி மொழிபெயர்க்கிறாரே! வியாசரேகூட துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகிய நால்வரையும் ‘துஷ்ட சதுஷ்டயா’ என்று பல இடங்களில் குறிப்பிடுகிறாரே! பெரும் போக்கிரிகள் என்று அவர் குறிப்பிடும் நால்வரில் கர்ணனுடைய பெயர் திரும்பத் திரும்ப இடம்பெறுகிறது என்றால் அதில் காரணமில்லாமல் போகுமா?

வலம் குழுவினர் எழுப்பியிருக்கும் கேள்விகளில் இரண்டாவதாக, ‘கர்ணன் செய்த தவறுகளாக கிருஷ்ணன் பட்டியலிடுபவை எவை’ என்று கேட்டிருக்கிறார்கள். இது கர்ணனுடைய இறுதிப் போரான பதினேழாம் நாளில் நிகழ்வது. கர்ணனுடைய தேர் பூமிக்குள் அமிழத் தொடங்குகிறது. ‘உன்னுடைய தேர் அமிழத் தொடங்கிவிட்டது என்று காலன்—யமன்—கர்ணனுக்கு எதிரில் தோன்றிச் சொல்கிறான். ‘At that time, when the hour of Karna’s death had come, Kala, approaching invisibly, and alluding to the Brahmana’s curse, and desirous of informing Karna that his death was near, told him, ‘The Earth is devouring thy wheel!’’ கர்ணனுக்கோ இப்போது தன் தேரைத் தூக்கி நிறுத்தவேண்டும். ஆனால் போரோ தொடர்ந்துகொண்டிருக்கிறது. ‘அர்ஜுனா! பூமி விழுங்கிக்கொண்டிருக்கும் இந்தத் தேரை நான் தூக்கி நிறுத்தும் வரையில் என்மீது அம்பெய்யாமல் இருக்கும்படி உன்னை தர்மத்தின் பேரால் கேட்டுக்கொள்கிறேன்’ என்கிறான் கர்ணன். கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு இது:

‘O Partha, O Partha, wait for a moment, that is, till I lift this sunken wheel. Beholding, O Partha, the left wheel of my car swallowed through accident by the earth, abandon (instead of cherishing) this purpose (of striking and slaying me) that is capable of being harboured by only a coward. Brave warriors that are observant of the practices of the righteous, never shoot their weapons at persons with dishevelled hair, or at those that have turned their faces from battle, or at a Brahmana, or at him who joins his palms, or at him who yields himself up or beggeth for quarter or at one who has put up his weapon, or at one whose arrows are exhausted, or at one whose armour is displaced, or at one whose weapon has fallen off or been broken! Thou art the bravest of men in the world. Thou art also of righteous behaviour, O son of Pandu! Thou art well-acquainted with the rules of battle. For these reasons, excuse me for a moment, that is, till I extricate my wheel, O Dhananjaya, from the earth. Thyself staying on thy car and myself standing weak and languid on the earth, it behoveth thee not to slay me now. Neither Vasudeva, nor thou, O son of Pandu, inspirest me with the slightest fear. Thou art born in the Kshatriya order. Thou art the perpetuator of a high race. Recollecting the teachings of righteousness, excuse me for a moment, O son of Pandu!’ (Karna Parva. Section 90)

இதைக் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணனுக்குச் சிரிப்பு வருகிறது. ‘அடடா கர்ணா! உனக்கு இப்போதாவது தர்மத்தைப் பற்றிய எண்ணம் வந்தது நல்வினைப் பயனே! நட்ட நடு சபையில் திரெளபதியைத் துகிலுரிய ஏவினாயே, அப்போது இந்த தர்மம் எங்கே போயிற்று? பீமனுக்கு ப்ரமாணகோடியில் (Pramanakoti) விஷம்கொடுத்துக் கொல்ல முயன்றீர்களே, அப்போது இந்த தர்மம் எங்கே போயிற்று? வாரணாவதத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாண்டவர்களை அந்த அரக்கு மாளிகையைக் கொளுத்தி, உயிரோடு எரிக்க முயன்றீர்களே, அப்போது இந்த தர்மம் எங்கே போயிற்று? அபிமன்யுவை நாலாபுறமும் சூழ்ந்துகொண்டு கொன்றீர்களே, அப்போது இந்த தர்மம் எங்கே போயிற்று?’ என்று கர்ணன் நேரடியாக சம்பந்தப்பட்ட அதர்மச் செயல்களைப் பட்டியலிட்டுக்கொண்டே வருகிறான். பிரமாணகோடியில் பீமனுக்கு விஷமோதகம் கொடுத்ததில்தொடங்கி, பாண்டவர்களை அரக்கு மாளிகையில் எரித்தது உட்பட ஒவ்வொன்றிலும்—ஒவ்வொன்றிலும்—கர்ணனுடைய கை இருக்கிறது. கிருஷ்ணனுடைய இந்த ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிகழ்ந்த ஒவ்வொரு சமயத்துக்கும் போய் இவற்றில் கர்ணன் எப்படிச் சம்பந்தப்படுகிறான் என்பதைப் பார்ப்போம். கர்ணனிடம் பாராட்டத்தக்க விஷயங்கள் என்று சில அம்சங்களும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்.

1 thought on “மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்

  1. If God willing, the whole world will come out in open to support us. I understood the meaning today. I understood it today. It seems God has decided to impart me a course on Mahabharatham. In the last one week, I happen to read about BORI publication, purchased Arul Selva Perarasan’s Tamil translation in Kindle, yesterday I happened to hear a lecture of Sri Bibek Debroy on Mahabharatham and today, I subscribed for Valam magazine and the first article I read about is on Mahabharatham. Lets hope that my interest on the topic is retained and God willing, I would get a few extra drops of nectar from the sweet ocean called Mahabharatham.

Leave a Reply