தமிழ்த் திரைப்பட வரிசையில் இயக்குநர்களைப் பற்றிப் பேசும்போது கே.சுப்ரமணியத்தை விட்டுவிட்டுப் பேசமுடியாது. அந்த அளவுக்கு முக்கியஸ்தர் அவர். தன்னுடைய புதுப்படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காகப் பிரபல கதாநாயகியின் வீட்டிற்குப் போனார். நடிகைக்கும் இயக்குநருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உரசல் ஏற்பட்டது. நடிகை விரும்பிய தொகையைக் கொடுக்க இயக்குநருக்கு விருப்பம் இல்லை. இயக்குநர் கொடுக்கும் சம்பளத்திற்கு நடிக்க நடிகைக்கு சம்மதம் இல்லை. கோபத்தில் வார்த்தைகளை வீசிய நடிகை ‘நீங்கள் கொடுக்குற காசுக்கு இவளைத்தான் நடிக்க வைக்கணும்’ என்று சொல்லி அங்கே நின்று கொண்டிருந்த வேலைக்காரியைச் சுட்டிக் காட்டினார். இயக்குநர் அவசரமாக வெளியேறினார்.
இதைத் சவாலாக எடுத்துக் கொண்ட கே.சுப்ரமணியம் அந்த வேலைக்காரியை நடிக்க வைத்துப் படம் எடுத்தார். படத்தின் பெயர் கச்ச தேவயானி. நடிகையின் பெயர் டி.ஆர்.ராஜகுமாரி. வருடம் 1941. இதைத் தொடர்ந்து டி.ஆர். ராஜகுமாரி எப்படி அந்தக்கால இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிப் போனார் என்கிற ரகசியத்தை இந்தக் காலப் பெருசுகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
யாருடைய சுழி எப்படி இருக்குமோ, தெரியாது. அவசர வேகத்தில் புகழ் உச்சிக்குப் போன டி.ஆர். ராஜகுமாரி போல ஹரன் பிரசன்னாவும் ஆகிவிடும் வாய்ப்பு உண்டு, தமிழகத்தின் சினிமா விமர்சகர்களின் சூப்பர் ஸ்டாராக ஆகும் வாய்ப்பும் உண்டு என்கிற யோசனை அவருடைய இந்த இரண்டு புத்தகங்களைப் படிக்கும்போது வந்து முட்டுகிறது.
தமிழ் சினிமா என்றவுடன் ரஜினியோடு ஆரம்பிப்பதுதான் இன்றைய சாங்கியம். நாமும் அப்படியே செய்யலாம்.
‘ரஜினி இந்துக்களுக்கு எதிராக மட்டும் நடித்து விட்டு, அது வெறும் படமென்று சொல்லும் சமாளிப்பையெல்லாம் நிறுத்திக் கொள்வது அவரது அரசியலுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஏனென்றால் நமக்கு பழக்கப்பட்ட ரஜினி இப்படிப்பட்டவர் அல்ல! ஆன்மீகவாதி! அதைத் திடீரென்று மாற்றும் தேவையற்ற விஷச் சூழலில் ரஜினி சிக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. இல்லையென்றால் அரசியலில் கமலுக்கும், ரஜினிக்கும் வித்தியாசம் நூலிழை அளவு மட்டுமே இருக்கும்.
இப்படம் வெளிப்படையாக இந்துக்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை. ஆனால் மும்பையில் போதை, மாஃபியா, ரவுடியிசம் என எல்லாவற்றையும் செய்து குவித்தது தாவூத் இப்ராஹிம். அதைச் சொல்லக்கூட தைரியமின்றி இயக்குநர் அதை ஹரிசோப்ரா என்று வைத்துக் கொண்டுவிட்டார்’. (2/66).
ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் பற்றிய விமர்சனம் இது.
தர்மபிரபு என்ற படத்தைப் பற்றி எழுதும் போது ஆரம்பத்திலேயே அரிவாளைப் போட்டு விடுகிறார்.
‘இந்தப் படத்தின் இயக்குனர் முத்துக்குமரன். இவருக்கு படமெடுக்கத் தெரியுமா என்பதையும் தாண்டி, இவர் ஒரு நல்லப் படத்தையாவது பார்த்திருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதில் பெயர் மட்டும் முத்துக்குமரன். உண்மையில் இவர் இந்துமதத்திற்குச் செய்யும் பெரிய சேவை ஒன்று இருக்குமானால், தன் பெயரை உடனே மாற்றிக் கொண்டுவிடுவது. திரை உலகத்தில் செய்யும் சேவை என்று ஒன்று இருக்குமானால், இனி படங்களையே எடுக்காமல் இருப்பது’. (2/99).
இடியப்ப நாயக்கர் பரம்பரைக்கும் சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடக்கும் குத்துச்சண்டைகளை நேரடியாகப் பார்த்தவர்களால் ஹரன்பிரசன்னாவின் தாக்குதலை மேலும் ரசிக்க முடியும்.
ஹரன்பிரசன்னாவிற்கு கமல் என்றும் ரஜினி என்றும் பெரிய வித்யாசம் இல்லை. போகிறபோக்கில் போட்டுத் தள்ளிக்கொண்டே போகிறார். கமல் நடித்த தசாவதாரம் படத்தைப் பற்றி எழுதும்போது ‘கமல் நாத்திகம் பரப்பித் தள்ளுகிறார். ஆனால் காட்சி அமைப்பைப் பார்த்தால் ஆத்திகத்தை ஆதரிக்கும் காட்சிகளாக வருகின்றன. நாத்திகக் கருத்துகளும் ஆத்திகக் காட்சிகளும் குழப்புகின்றன. கமல் எந்தப் பாலத்திலிருந்து எப்போது குதித்தாலும் எப்படியாவது ஒரு வண்டி வந்து அவரைக் காப்பாற்றி விடுகிறது. வண்டியில் ஶ்ரீராமஜெயம் என்று எழுதப்பட்டிருக்கிறது’.
எந்த இடத்தில் எந்த வெடியை வீசுவார் என்று யூகிக்க முடியாத எழுத்து ஹரன்பிரசன்னாவுடையது. ‘படத்தின் லாஜிக் ஓட்டைகளுக்கும் சொல்ல வேண்டியதில்லை. படமே லாஜிக் ஓட்டை’ என்ற அபாரமான வார்த்தைகளை ஓரிடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார்.
விமர்சனங்களிலுள்ள கொள்கைப்பிடிப்புக்காக ஒரு முறைப் படித்தாலும் சூட்சமமான வேலைப்பாடுகளுக்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். உதாரணம் பாலாவின் ‘நான் கடவுள் பற்றிய அலசல் (1/150).
‘இந்து மதம் தொடர்பான எந்த ஒரு காட்சியையும் விமர்சனத்தோடும், கேலியோடும், கிண்டலோடும் மட்டுமே எடுக்கும் தைரியம் கொண்ட கமல்ஹாசன், பாலச்சந்தர் வகையறாக்களுக்கு மத்தியில், இந்து மதச்சார்பான குரல்கள் – அது நியாயமான ஒன்றாக இருந்தால் கூட – எங்கேயும் வெளி வந்து விடக்கூடாது என்கிற கருத்தியல்கள் வந்த சுற்றுச் சூழலில், உள்ளதை உள்ளபடி அதுவும் அதை ஒரு மாபெரும் மக்கள் ஊடகத்தில் காண்பிக்கும் தைரியம் பாலாவிற்கு இருந்து இருக்கிறது. படம் முழுக்கக் காவி நிறம். இந்த ஒரு காரணத்தினாலும், அகோரி தொடர்ந்து சம்ஸ்கிருத வசனங்கள் பேசியபடியே வருவதனாலும் இது இந்துத்துவப் படம் என்கிற கருத்து ஒலிக்கிறது.’
இந்தப் புத்தகங்களில் நான் ரசிக்காத விஷயத்தைச் சொல்கிறேன். ‘கமல் தேவர்மகனில் நேரடியாக சாதியைப் பற்றிப் பேசினாலும் அதிலிருந்த ரொமாண்டிசைசேஷனும் ஹீரோயிசமும் அதனை ஜனரஞ்சகப் படமாக்கியது என்றுதான் சொல்லவேண்டும்’ (1/134) என்று எழுதிக்கொண்டே போகிறார். இவ்வளவு சிரமம் எதற்கு? ரொமாண்டிசைசேஷனும் என்பதற்கு பதிலாக அதீத கற்பனை என்று எழுதினால் புரியாதோ?
‘கமல் கிரேனில் ஆப்ரேட் செய்யும் காட்சிகள்’ (1/174), கிரேனைச் செலுத்தும் காட்சிகள் அல்லது இயக்கும் காட்சிகள் என்று எழுதுவதற்கு எதாவது தட்டுப்பாடா. இது நீடித்தால் நல்ல ஆங்கில எழுத்தாளர் என்கிற பட்டம் ஹரன்பிரசன்னாவைத் தேடி வரும்.
(நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமாக் குறிப்புகள் – இரண்டு பாகங்கள் ஹரன்பிரசன்னா, தடம் பதிப்பகம் மே.2020 – ரூபாய் 310)