ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை குறித்து காங்கிரஸ் கட்சி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. என்றாலும், கட்சித் தலைவர்கள் அதற்குப் பல எதிர்வினைகளை வெளியிட்டு வந்தனர். பூமி பூஜை விழாவினை நிறுத்த சில தலைவர்கள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றனர், சிலர் இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் அழைக்கப்படவில்லை என்று புகார் கூறினர்.
இந்த நேரத்தில், 70 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சூழ்நிலை நிலவியதை நினைவூட்டுகின்ற கடிதம் ஒன்று கவனத்துக்கு வந்துள்ளது. குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இதேபோல் இரண்டு விதமான நிலைப்பாடுகளை கொண்டிருந்தது.
பண்டைய சோம்நாத் கோயில் கஜினி முகம்மது, அலாவுதீன் கில்ஜி, ஔரங்கசீப் மற்றும் பல முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. கோயிலின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியாவின் முதல் மத்திய உள்துறை மந்திரி வல்லபா பாய் படேல் அவர்களின் முயற்சியால், சோம்நாத் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. பண்டைய சோம்நாத் கோயிலைப் புனரமைக்கும் யோசனையை பிரதமர் ஜவாஹர்லால் நேரு விரும்பவில்லை. அதோடு அவர் அதனை ‘ஹிந்து மறுமலர்ச்சி’ என்று குறிப்பிடுவதையும் எதிர்த்தார்.
கோவில் திறப்பு விழாக் குழு இந்தியாவின் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தைக் கோவில் திறப்பு விழாவிற்குஅழைத்த போது, அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நேரு அவருக்கு அறிவுறுத்தியிருந்தார். பிரதமர் ஜனாதிபதிக்கு எழுதியிருந்ததில், ‘சோம்நாத் கோவிலின் கண்கவர் திறப்பு விழாவோடு உங்களை இணைத்துக் கொள்ளும் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. நீங்களோ அல்லது வேறு யாருமோ சாதாரணமாக ஒரு கோவிலுக்குச் செல்வது போல் அல்ல இது. மாறாக, இது போன்ற ஒரு குறிப்பிடத்தக்க விழாவில் நீங்கள் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமாகப் பல தாக்கங்களை ஏற்படுத்தும்.’ ஆனாலும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் திறப்புவிழாவில் கலந்து கொண்டார். அரசு மதச் சார்புடனோ அல்லது மத நிந்தனையுடனோ இருக்கக்கூடாது என்ற காரணம் சொல்லப்பட்டு, விழாவில் அவரது முக்கியமான உரை, நேருவின் வற்புறுத்தலின் பேரில் அதிகாரபூர்வமான சானல்களில் இருந்து மறைக்கப்பட்டது.
சீனா நாட்டிற்கான இந்தியாவின் முதல் தூதர் கே.எம். பணிக்கர் பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதம் ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்து மதம் மீதான நேருவின் வெறுப்பு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதராலும் பகிரப்பட்டது என்பதை அந்தக் கடிதம் காட்டுகிறது. கே.எம். பணிக்கர், மார்ச் 21, 1951 தேதியிட்டு நேருவிற்கு எழுதிய கடிதத்தில், சோம்நாத் கோவிலின் அறங்காவலர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த ஒரு ‘அற்புதமான கடிதத்தை’ பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் திபெத்திய ஷான் மலைகளிலிருந்து வரும் ஆறுகள் மற்றும் அதன் கிளை ஆறுகளில் இருந்தும் தண்ணீரை எடுத்து அனுப்புமாறும், அது சோம்நாத் கோவிலைப் புனரமைக்கப் பயன்படுத்தப் போவதாகும் சொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். மேலும், சோம்நாத் கோயில் விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்ள அவர் அழைக்கப்பட்டிருந்ததையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டும் யோசனையை பணிக்கர் எவ்வாறு எதிர்த்தார் என்பதனைப் பின்வருமாறு எழுதினார், ‘ஒரு அதிகாரப்பூர்வமற்ற இந்து அமைப்பு அந்தக் கோவிலை மீட்டெடுக்க விரும்பினால், யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. அப்படியே ஆட்சேபனை இருந்தாலும், அதனை நிறுத்தப் போகிறவர் யார் இருக்கிறார்கள்? கோயில்களை உடைத்து அதில் இருந்து எடுத்து வந்த கற்களால் கட்டப்பட்ட குதூப்மினாரை தரைமட்டமாக்கி மீண்டும் கோவிலை மீட்டெடுக்கப் போகிறோமா? காசியில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறை தரைமட்டமாக்கப்பட்டு காசி விஸ்வநாத் கோயிலின் உண்மையான மகிமையை மீட்டெடுக்கப் போகிறோமா? இத்தகைய பாதையில் நாம் செல்லத் தொடங்கினால், நாம் எங்கே நிறுத்த வேண்டும்? இத்தகைய மனநிலை நேரடியாக ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இட்டுச்செல்லும். இந்தியாவில் ஹிந்துபாதா பாதிஷாஹியை புதுப்பிப்பதற்கான விருப்பத்தைக் கொண்டு வரும். அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இந்தத் தெளிவற்ற மறுமலர்ச்சியின் தலைமை யஜமானாக இந்திய ஜனாதிபதி இருக்க வேண்டும் என்ற கருத்து என்னைக் கொஞ்சம் பயமுறுத்தியது என்பதனை நான் ஒப்புக்கொள்கிறேன்.’
இந்த ‘சோமனாத்தர்கள்’ இஸ்லாமியப் படையெடுப்புக்குப் பின்னரான இந்திய வரலாற்றை மறந்துவிட்டார்கள் என்று பணிக்கர் குற்றம் சாட்டினார். ‘இன்றைய இந்தியாவின் நிஜமான நிறுவனர்கள் இவர்கள்தான். ஆனால் ‘சோமனாத்தர்கள்’ இவர்களை வேண்டுமென்றே மறக்க விரும்புகிறார்கள். இதை உங்களிடம் சொல்ல வருத்தப்படுகிறேன் என்றாலும் நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். இந்த அபாயகரமான ‘மறுமலர்ச்சி’ மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் நெருக்கமாக இருப்பவர்களையும் பீடித்திருக்கிறது என்று நாங்கள் நினைப்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.’
சோம்நாத் கோவிலைப் புனரமைப்பதினை இந்து மறுமலர்ச்சி என பணிக்கர் பெயரிட்டு எழுதியது குறிப்பிடத் தக்கது. நேருவும் அதே போன்றதொரு குற்றச்சாட்டை சோம்நாத் கோவில் கட்டுமானப் பணிகளுக்குத் தலைமை தாங்கிய கேபினட் அமைச்சர் கே.எம்.முன்ஷியிடமும் முன்வைத்திருந்தார்.
சோம்நாத் கோவிலைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பு, கே.எம்.பணிக்கர் தனது மகள் தேவகி பணிக்கர் ஒரு கம்யூனிஸ்டாக மாறக்கூடும் என்று கவலையை அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்றிருந்தாலும் தேவகிக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. நேருவுக்கு எழுதிய கடிதத்தில் நேஷனல் ஹெரால்டில் தேவகிக்கு வேலை வழங்கப்பட்டால் அது கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து விலகிச்செல்ல வைக்கும் எனப் பரிந்துரைத்திருந்தார். தேவகி பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.என்.கோவிந்தன் நாயரை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.பணிக்கர் சோம்நாத் கோவில் புனரமைப்பதை எதிர்த்தது மட்டுமல்லாமல், சீனா திபெத்தை ஆக்கிரமிப்பதை ஆதரிக்கவும் செய்தார். ‘திபெத்தை விடுவிப்பதற்கான’ நோக்கத்தை சீனா அறிவித்த பின்னர், சீன வெளியுறவு மந்திரி சூஎன்லாயுடனான சந்திப்பின் போது, திபெத் பலவந்தமாக விடுவிக்கப்பட்டால் இந்தியா அமைதியாக இருக்கும் என்று பானிக்கர் தானாகவே உறுதியளித்தார். இந்திய அரசாங்கத்துடன் எந்தவித கலந்தாலோசனையும் செய்யாமல், திபெத் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஒரே நாளில் மாற்றினார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போது, இந்தியாவின் திபெத்தியக் கொள்கையானது, சீனா திபெத்தின் மீது ‘அதிகாரம்’ மட்டும் கொண்டதாக இருந்தது. அதாவது திபெத் ஒரு சுதந்திரமான மாநிலம், அதனுடைய வெளியுறவுக் கொள்கை மட்டும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதாவது திபெத் கூடுதல் அதிகாரம் பெற்ற ஒரு மாநிலம். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவும் இதே கொள்கையைத் தொடர்ந்தது. ஆகஸ்ட் 1950ல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், திபெத்துக்கான இந்தியாவின் கொள்கை என்பது ‘சீன இறையாண்மையின் கட்டமைப்பிற்குள்ளான சுயாட்சி’ என்று பணிக்கர் எழுதினார். இது இந்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.
உண்மையில், நேரு அரசு பணிக்கரின் கூற்றுடன் உடன்படவில்லை. பணிக்கர் தனது ‘தவறை’ சரிசெய்ய முயன்றார். ஆனால் அவரது கருத்துக்கள் இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக சீனாவால் எடுத்துக் கொள்ளப்பட்டது. தாங்கள் திபெத்தை ஆக்கிரமித்தால் இந்திய அரசு கவலைப்படாது என சீனா நம்பியது.
பணிக்கரின் கடிதம்
சீன இந்தியத் தூதரகம்
பீஜிங், 21 மார்ச், 1951.
என் அன்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு,
கடந்த பிப்ரவரி 2ம் தேதி நீங்கள் அனுப்பிய கடிதங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவியின் உடல்நலம் தேறுவதற்கு பீஜிங்கில் உள்ள சில சோவியத் மருத்துவ நிபுணர்களின் சேவைகளைப் பெற உதவிய சோவியத் தூதருக்கு மரியாதை கலந்த நன்றியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அவளது உடல்நிலை நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளது. பீஜிங்கில் எதிர்வரும் குளிர் மோசமானதாக இருக்கும் என்று அவளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில் இந்த மூன்று மாதக் கடுமையான சைபீரிய குளிரில் இருந்து தப்பிக்க, அவளை வேறு எங்கும் அனுப்பி வைக்க ஏற்ற இடம் இங்கே எதுவும் இல்லை.
என்னைப் பொருத்தவரை, நீங்கள் அவசியம் என்று நினைக்கும் வரை, நான் இங்கு தங்க தயாராக இருக்கிறேன். இங்குள்ள வேலையையும் சீன மக்களையும் நான் விரும்புகிறேன். எனக்கு சமூக வாழ்க்கை இங்கு அதிகளவில் இல்லை என்பதால், சீன வரலாற்றைப் பற்றி தீவிரமாக ஆய்வு செய்ய முன்பு திட்டமிட்டிருந்ததை, தற்போது சுதந்திரமாகச் செய்து வருகிறேன். இப்போது வானிலை நன்றாக இருப்பதால் எந்த அவசரமும் இல்லை. ஒருவேளை மாற்றம் ஏதேனும் இருப்பின் அது அக்டோபர் 15ம் தேதி வாக்கில் இருந்தால் மிகவும் திருப்தியாக இருக்கும்.
சீனா குறித்து கட்டுரைகள் எழுதிய எனது மகள் தேவகியைப் பற்றி, சில தவறான புரிதல்கள் இருந்ததாகத் தெரிகிறது. அக்டோபரில் என் மகள் என்னை விட்டுப் பிரிந்து சென்று பின்னர் தனியாக இருந்து வருகிறாள். அவள் எனக்குக் கடிதங்கள் எதுவும் எழுதுவதில்லை; அவள் எனது பராமரிப்பிலும் இல்லை. தற்போதைய புதிய தலைமுறையினர் விசித்திரமாக நடந்து கொள்ளும் விதங்களில் ஒன்றாகவே அவளது இந்தப் போக்கு இருக்கிறது என்பதனை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
தேவகி கல்வியில் மிகச்சிறந்து விளங்கியள். தில்லி பல்கலைக்கழகத்தில் தத்துவவியலில் இரண்டாவது இடம் பெற்று இருந்தாள். அதன் பிறகு ஆக்ஸ்போர்டுக்குச் சென்று மாடர்ன் கிரேட்ஸ் (தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் அடங்கிய ஆக்ஸ்போர்டு பட்டப்படிப்பு) பட்டப்படிப்பினைத் தொடர்ந்தாள். ரஷ்ய, பிரஞ்சு மற்றும் வங்காளத்தைப் படிக்கவும் எழுதவும் அவளுக்குத் தெரியும், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியிலும் சிறப்பாக இருந்தாள். அவள் 18 மாதங்களுக்கு முன்பு ஆக்ஸ்போர்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினாள். இந்தியாவில் எந்தவிதமான வேலையையும் அவளால் பெற முடியவில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
அகில இந்திய வானொலியில் அவள் அறிவிப்பாளராக ஆக அவர் முன்வந்தாள் என்பதை அறிந்தேன். தன் தந்தையின் பணத்தில் வாழக்கூடாது என்று உறுதியுடன் அவள் இருந்தாள். நான் டெல்லியில் இருந்த பெரும்பாலான நேரம் அவள் ஒய்.எம்.சி.ஏ – வில் இருந்த மலிவான அறைகளில்தான் வசித்து வந்தாள். ‘லாபகரமான’ வேலையைச் செய்ய வேண்டும் என்று அவள் விரும்பியதில்லை. ஆனால் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் எனத் தீவிரமாக விரும்பினாள்.
நான் சீனாவில் இருப்பதாலும், கடந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான அனுபவத்தின் காரணமாகவும் என்னால் அவளுக்காக அதிகம் ஏதும் செய்ய முடியவில்லை. மேலும் பி.என்.ராவ் மூலம் ஐ.நாவில் எவ்வாறாயினும் அவளை ஏதேனும் ஒரு பணியில் அமர்த்திவிடலாம் என முயற்சி செய்தேன். இந்த விஷயத்தில் ராவ் அவர்கள் உதவ ஆர்வம் காட்டியும் எதுவும் நடைபெறவில்லை. இறுதியாக அவள்தான் தனியாக எதனையும் தைரியமாக எதிர்கொள்ளவேண்டும் என முடிவு செய்தேன். என்னிடம் இருந்து ஒரு பைசா பணம் பெற்றுக் கொள்ளக் கூட அவள் மறுத்துவிட்டாள்.
அவள் இப்போது பம்பாயில் இருக்கிறாள் என நான் நினைக்கிறேன். என் பயம் என்னவென்றால், இன்னும் ஒரு வருடத்தில் கம்யூனிஸ்ட்டுகள் அவளது நட்பினைப் பெற்றுவிடுவார்கள். இதுவரை, அவளது கருத்துக்கள் பொதுவான அமைதியின்மை மற்றும் ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கான விருப்பம் போன்றவற்றால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவளது இந்த 26வது வயதில், அதுவும் வேலையில்லாமல் அனைவரையும் குறித்து விமர்சிக்கும் போக்குள்ள ஒரு பெண்ணுக்கு, இது ஒரு ஆபத்தான சமிக்ஞையாகும்.
இது புத்திசாலித்தனமான இளைஞர்கள் அனைவரையும் பாதிக்கும் ஒருவிதமான நோய் என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு தூரத்திலிருந்து, எதையும் செய்வது சாத்தியமற்றது. நேஷனல் ஹெரால்ட் போன்ற ஒரு பத்திரிகையில் அவள் வேலை செய்ய முடிந்தால், அவளுடைய தற்போதைய தொடர்புகளிலிருந்து விலகி வரலாம். எவ்வாறாயினும், இத்தகைய பரிந்துரை என்னிடமிருந்து வந்தது என்பதை அவள் அறிந்திருந்தால், அவள் அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.
கடந்த வாரம் சோமனாத் கோவில் ட்ரஸ்ட்டிகளிடம் இருந்து அட்டகாசமான ஒரு கடிதம் வந்திருந்தது. இந்திய தூதரகம் ஹோயாங் கோ, தி யாங்க்ட்ஸ் மற்றும் பியர்ல் ஆறுகளில் இருந்து நீரையும், டீன் ஷான் மலையில் இருந்து சிறு குச்சிகளையும் சேகரித்து அனுப்பவேண்டுமாம். இது சோமனாத் கோவிலின் புனர்நிர்மாணத்துக்காக என்றும், இந்தியாவின் ஜனாதிபதி தலைமையில் அந்த விழா நடக்கப் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 1000 ஆண்டுகள் இந்தியாவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு வகையான கோளாறு போலவும், முஹம்மது கஜினியின் படையெடுப்பின் அடையாளங்களை அழிக்கவும், அந்தக் காலத்திலிருந்து அறுந்து போன இந்திய வரலாற்றின் நூல்களை ஒன்றாக இணைப்பது போலவும், இந்த யோசனை தெரிகிறது.
‘ஒரு அதிகாரப்பூர்வமற்ற இந்து அமைப்பு அந்தக் கோவிலை மீட்டெடுக்க விரும்பினால், யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. அப்படியே ஆட்சேபனை இருந்தாலும், அதனை நிறுத்தப் போகிறவர் யார் இருக்கிறார்கள்? கோயில்களை உடைத்து அதில் இருந்து எடுத்து வந்த கற்களால் கட்டப்பட்ட குதூப்மினாரை தரைமட்டமாக்கி மீண்டும் கோவிலை மீட்டெடுக்கப் போகிறோமா? காசியில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறை தரைமட்டமாக்கப்பட்டு காசி விஸ்வநாத் கோயிலின் உண்மையான மகிமையை மீட்டெடுக்கப் போகிறோமா? இத்தகைய பாதையில் நாம் செல்லத் தொடங்கினால், நாம் எங்கே நிறுத்த வேண்டும்? இத்தகைய மனநிலை நேரடியாக ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இட்டுச்செல்லும். இந்தியாவில் ஹிந்துபாதா பாதிஷாஹியை புதுப்பிப்பதற்கான விருப்பத்தைக் கொண்டு வரும். அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இந்தத் தெளிவற்ற மறுமலர்ச்சியின் தலைமை யஜமானாக இந்திய ஜனாதிபதி இருக்க வேண்டும் என்ற கருத்து என்னைக் கொஞ்சம் பயமுறுத்தியது என்பதனை நான் ஒப்புக்கொள்கிறேன். உங்கள் எண்ணம் என்னவாக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
வரலாற்று மாணவன் என்ற முறையில், இஸ்லாமியப் படையெடுப்புகளைத் தொடர்ந்த வரலாற்றின் காலம் நாம் மறக்க முயல வேண்டிய ஒன்று – அல்லது குறைந்தபட்சம் நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்ற எண்ணம் சரியானதல்ல என்று நினைக்கிறேன். இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் இதைவிடப் பேரழிவு எதுவும் இருக்க முடியாது என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.
இந்தியாவின் இன்றைய மனிதநேயம் இடைக்காலத்திலிருந்து வந்தது; மீரா, ராமானந்த், துளசிதாசர், கபீர், நானக் மற்றும் பலர், இறந்து போன கடந்த காலத்திலிருந்து ஒரு புதிய மனதை உருவாக்கியவர்கள் என்பதை நான் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக நம்புகிறேன். இன்றைய இந்தியாவின் நிஜமான நிறுவனர்கள் இவர்கள்தான். ஆனால் ‘சோமனாத்தர்கள்’ இவர்களை வேண்டுமென்றே மறக்க விரும்புகிறார்கள். இதை உங்களிடம் சொல்ல வருத்தப்படுகிறேன் என்றாலும் நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். இந்த அபாயகரமான ‘மறுமலர்ச்சி’ மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் நெருக்கமாக இருப்பவர்களையும் பீடித்திருக்கிறது என்று நாங்கள் நினைப்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
அமைதி கவுன்சிலின் விருந்தினராக இங்கு வந்த டாக்டர் அடல் இந்தியத் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். முன்பே நான் அவரை அறிவேன். ஓரளவு குழப்பமான சிந்தனை மற்றும் சோவியத் முறைகள் மூலம் உலகை அணுகும் தன்மை இல்லாமல் இருந்தபோதிலும், அவர் நேர்மையானவர் என்பதை நான் கண்டேன்.
எனக்குத் தெரிந்தவரை, பீஜிங்கில் அவர் நடந்து கொண்ட விதத்தில் அவர் மிகவும் ‘சரியானவர்’. அவர் அரசாங்கத்திடம் நட்பற்ற மனப்பான்மையைக் கொண்டவரில்லை. அமைதி மாநாட்டிற்கு வெளிநாட்டுப் பார்வையாளர்களை அரசாங்கம் தடைசெய்தது தொடர்பாக கணிசமாக அவர் ஏமாற்றமடைந்தாலும், சீன அதிகாரிகளுக்கு நட்பான முறையில் நிலைமையை விளக்கி வருகிறார்.
சூ என்லாய்க்கு நாம் திரும்பக் கொடுக்கும் அன்பளிப்பு, இந்திய வரைபட வடிவமைப்பைக் கொண்ட காஷ்மீர் திரை பொருத்தமானதாக இருக்கலாம். மைசூரிலிருந்து ஒரு சந்தனத் திரை அல்லது நேபாளத்திலிருந்து ஒரு விளக்கு போன்ற ஒன்றைக்கூட ஏற்பாடு செய்யலாம்.
சீனப் பத்திரிகைகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பர்மா கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய குறிப்பை நான் இணைத்து இருக்கிறேன். தகவல் ஒருதலைபட்சமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
கே.எம்.பணிக்கர்
மூலக்கட்டுரை: https://www.opindia.com/