Posted on 2 Comments

பறை தாராய்! (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் ஒலி, நேரம் அதிகாலை என்று உணர்த்தியது. பாஸ்டன் நகரில் அஷோக் வரதன் குழாயை இடதுபுறம் திருப்பி, பன்னாட்டு நிறுவன பற்பசை கொண்டு, வெந்நீரில் பல் தேய்க்கலானான்.

*

வரதன் புழக்கடையில் சாம்பலில் பல்துலக்கிக் கொண்டிருந்தார். ஆண்டு 1920. நாடுமுழுதும் ‘சுதந்திரம்’ ஒரு மித்த குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரம்.

‘இன்று பரங்குன்றம் மலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப ஒளி தான் சமிக்ஞை. ஏற்றி ஒரு நாழிகைக்குள் நம்மை ஆச்சாரியர் நாகமலை அடிவாரத்தின் வழக்கமான கல் மண்டபத்திற்கு வரச் சொன்னார்’ என்றான் வரதனிடம் முனியன். அது கார்த்திகை பௌர்ணமிக்கு முந்தின நாள்.

‘ஓ அப்படியா? ஆச்சாரியர் என்னையும் அழைத்தாரா?’

‘ஆமாம். உங்களையும் கண்டிப்பா வரச் சொன்னாரு. இன்னும் இந்த ஏடகத்துல இருக்கற ரெண்டு மூணு பேரையும், அப்பறம் துவரிமான்ல சிலபேர் கிட்டையும் சொல்லச் சொன்னாரு.’

‘ஆச்சாரியர் வரச் சொன்னா முக்கியமான சேதியாகத்தான் இருக்கும். குறித்த நேரத்தில் அங்க இருக்கேன்.’

சற்று தூரம் போய் மீண்டும் வந்தான் முனியன்.

‘மறந்துட்டேன், அம்மா இருந்தாங்கன்னா அவங்களையும் ஆச்சாரியர் வரச் சொன்னாரு. அப்பறம் பாலைக் கறந்து திண்ணைல வச்சிருக்கேன்.’

‘சரி’ என்று வரதன் வீட்டுக்குள் வந்தார்.

வரதன் பெரிய செல்வந்தர். மதுரைக்குத் தென்மேற்கே இருக்கும் திருவேடகம் என்ற கிராமத்தில் வசிப்பவர். அவர் மனைவி கோதை. அவரும் நன்கு படித்தவர். ஒருமுறை உறவினர் மூலம் இராஜாஜி பற்றிக் கேள்விப்பட்டு சுதந்திர போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார். அவர் மனைவியும் மிகுந்த பக்தியோடு சேர்ந்து கொண்டார். இருவரும் அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று நாட்டின் நிலை பற்றிப் பேசுவார்கள். அவர்கள் பேச்சை சிறிது நேரம் கேட்டாலே மக்கள் அனைவரும் சுதந்திர போராட்டங்களில் வீதிக்கு வந்துவிடுவர். இருவரும் காந்தியின் கொள்கைகளில் பெரு மதிப்பு உடையவர்கள். அந்தப் பகுதிகளில் காந்தியின் போராட்டங்களை முன்னின்று நடத்துவார்கள். மூன்றுமுறை சிறை வாசம் அனுபவித்துவிட்டார்கள் இந்த முப்பது வயது பிராயத்திலேயே. முனியன் அருகிலிருக்கும் கீழமாத்தூர் ஊரில் இருக்கும் இருபது வயது இளைஞன். அவனின் தந்தை அண்மையில் நடந்த முதல் உலகப்போரில் உயிர் விட்டவர். பின்னர் முனியனும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினான். வீடுகளில் பால் கறந்தும், அருகிலிருக்கும் ஊர்களில் அதைத் தேவையானவர்க்கு விற்றும் வந்தான்.

உள்ளே வந்த வரதன், தன் மனைவியிடம் முனியன் சொன்ன விஷயத்தைச் சொன்னார். அவளும் ஆர்வமோடு கேட்டுவிட்டு தானும் வருவதாய் சொன்னார். வரதன் சற்று யோசித்தார். காரணம், அவர் மனைவி நான்கு மாதங்கள் கருவுற்றிந்தார்.

‘நீங்கள் யோசிக்க வேண்டாம். இது நம் நாட்டிற்காக, நமக்காக நடக்கும் யுத்தம். நம் பிள்ளையாவது ஒரு சுதந்திர தேசத்தில் வளரட்டும். நமக்கு நாடுதான் முதலில்’ என்ற கோதைக்கு வரதன் பதில் சொல்லவில்லை. அவர் மனமும் அதையே நினைத்திருந்தது.

வரதன் வைகை நதிக்குப் புறப்பட்டார். வைகை, மேற்கு மலையிருந்து பல ஊர்களைக் கடந்து இந்த திருவேடகம் தாண்டி மதுரை நோக்கிப் பாய்கிறது. வைகை நோக்கிப் போகும் வழியின் இருபுறமும் தென்னந் தோப்பும், நடுநடுவே மற்றை மரங்களும் இருந்தன. பல்காள் குயிலினங்கள், பறவைகள் சப்தம் இரம்யமாய் இருந்தது. கார்த்திகை மாத சிறுபனியோடு, வெண்மணல் மேல் தெளிந்த நீரையாய் வைகை இருகரையும் ஒரு கரையாய் ஓடியது. வரதன் குளித்து தன் அனுஷ்டானங்களை முடித்துவிட்டு வந்தார். வீட்டில் பூஜைகள் எல்லாம் முடித்து, மதராஸிலிருந்து வந்திருந்த சில கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தார். அதில் ஒன்றில் ‘வந்தே மாதரம்’ என்று தொடங்கி அரசியல் நிகழ்வுகள், காங்கிரசின் நிலைப்பாடு எல்லாம் பற்றி சற்றே எழுதியிருந்தார் நண்பர் மூர்த்தி. அண்மையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அந்நிய பொருட்களைப் புறக்கணிப்பது, பிரிட்டிஷாருக்கு ஒத்துழைக்காமல் இருப்பது போன்ற திலகரின் முந்தைய யோசனைகள் எல்லாம் விவாதிக்கப்பட்டதாய் இருந்தது. பாண்டிச்சேரியிருந்து வந்திருந்த பாரதியாரின் பத்திரிகையை இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.

சாயங்காலம் நெருங்க, அவர்களிருந்த அக்ரஹாரம் விழாக் கோலம் பூண்டது. அன்று கார்த்திகை தீபத் திருநாள். ஊரிலிருக்கும் கோவிலில் சிறப்பாய்க் கொண்டாடுவர். அங்கிருக்கும் இராகவ பட்டரும் சுதந்திர போராட்டங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரைக்காண வரதனும் கோவிலுக்குச் சென்றார். பூஜை தொடங்கும் முன் ஆலயத்தில் ஓதுவாமூர்த்தி சில தேவார பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

அந்தக் குரல், பாடலின் பொருள் எல்லாம் வரதனைக் கட்டிப்போட்டது. தன்னை மறந்து அருகில் நின்று கண்களில் நீர் ததும்ப கேட்டுக் கொண்டிருந்தார். பாடல் முடியும் சமயம் இராகவ பட்டரும் வந்தார்.

‘ஓய், வரதனா கொஞ்சம் இங்க வாங்கோ’

‘பட்டரே, பாடலைக் கேட்டு அங்கேயே நின்று விட்டேன்.’

‘நீர் மட்டுமா..? இந்த ஊரின் ஈசனே இந்தப் பாட்டிற்குத்தானே வந்தார். மதுரையில் கூன் பாண்டியன் வெப்பு நோயில் இருந்த போது அவரை சமணர்களால் குணப்படுத்த முடியவில்லை. திருஞானசம்பந்தர் அதைக் குணப்படுத்தி, சமணர்களின் அனல் வாதத்தில் வென்றார். பின் வைகையில் புனல் வாதம் நடந்தது. இந்தப் பாடல் எழுதிய ஏட்டை ஞானசம்பந்தர் ஆற்றில் விட அது வைகை வெள்ளத்தை எதிர்த்துச் சென்றது. பாண்டியனின் முதன்மந்திரி குலச்சிறையார் குதிரை மீதேறி அந்த ஓலையைப் பின்தொடர்கிறார். நம் ஊரில் தங்கியது ஏடு. ‘வேந்தனும் ஓங்குக’ என்று பாடியவுடன் பாண்டியன் கூன் நீங்குகிறது. அது முதல் கூன் நீங்கி நின்றசீர் நெடுமாறனானார். ஏடு வந்து சேர்ந்தலால் நம்மூரும் திருஏடகமானது. அரசனையும், அரசையும் காக்க அப்போது நடந்த போர் போல், இப்போது நடக்கும் சுதந்திர போரிலும், திருஞானசம்பந்தர் வாக்கின் படி, ‘ஆழ்க தீயதெல்லாம்’ என்று மிகுந்த உணர்ச்சியோடு பேசினார்.

அதற்குள் அங்கு சிலர் கூடிவிட்டனர். அவர்கள் தங்களையும் அறியாது ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிட்டனர் கோவிலென்பதும் மறந்து.

‘வந்ததே மறந்துவிட்டேன்.. பரங்குன்றத்தில் எப்போது தீபம் இன்று?’ என்றார் வரதன்.

‘கொஞ்சம் சீக்கிரமாய் நடக்கும் இவ்வருடம். மாலை நான்கு மணிக்கு நல்ல நேரம். அப்போவே ஏத்திருவா. முன்னொரு காலத்தில் அந்த மலையே நம்முடையததுதான். காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பாய் தீப வழிபாடு இருக்கும். முகலாயர் படையெடுப்பில் மலையும் அவர்கள் கைக்குப் போய், தீபமே ஏற்றமுடியாமல் போனது. அந்த அந்நிய ஆட்சிக்குப் பின் இப்போது சில வருஷங்களாகத்தான் தீபம் ஏற்றுகிறார்கள். ஆனாலும் எனக்கு இன்னொரு கவலையும் இருக்கிறது. நாம் இன்னமும் சுதந்திர தீபம் ஏற்றவில்லை. அந்நியர் வேறொரு வடிவில் இருக்கிறான், அவ்வளவே.’

‘ஆம் பட்டரே. விரைவில் நாம் சுதந்திர காற்றைச் சுவாசிப்போம், அதிலேயே அந்த தீபமும் எரியும். கொஞ்சம் வேலையிருக்கிறது, வருகிறேன்’ என்று வரதன் வீட்டிற்கு வந்தார்.

வரதனின் மனைவி தங்கள் வீட்டில் அதற்குள் விளக்கு ஏற்றத் துவங்கிவிட்டாள். வரதன் வந்ததும் இருவரும் புறப்படத் தயாராயினர். தங்களுக்குச் சொந்தமான இரட்டை மாட்டுவண்டியில் கிளம்பினர். அவர்கள் கிளம்பி சில நிமிடங்களில் பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றப்பட்டது. ‘குன்றின் மேலிட்ட விளக்கு’ என்பது சரியாய்ப் பொருந்தியது. மலையைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் வானளாவிய உயர்ந்த வீடுகள் இல்லை, முழுதும் விவசாய நிலங்கள். இரவு நெருங்க நெருங்க மலையின் தீப ஒளி சுற்றுவட்டாரங்களில் பரவும். அதை வைத்து பக்கத்துக்குக் கிராமங்களில் பூஜை செய்வர் மக்கள். அன்றும் அப்படித்தான். அந்த தீபம் ஏற்றப்பட்டவுடன் அருகிலுள்ள நாகமலையிலும், சமணர் மலையிலும் தீபம் ஏற்றப்பட்டது. வரதனும், கோதையும் நாகமலை போகும் வழியிலிருக்கும் கல் மண்டபத்தை அடைந்தனர். அது கொஞ்சம் பாதையை விட்டு உள்ளடங்கி இருக்கும் மண்டபம். அங்கு ஏற்கனவே சிலரின் பேச்சுக்குரல் கேட்டது. பழக்கப்பட்டதுதான். புதிதாய் ஒரு சிறுவனின் குரலும் கேட்டது.

ஆச்சாரியர் நடுவில் அமர்ந்திருந்தார். அவர் அருகிலிருக்கும் புல்லூத்து என்ற கிராமத்தில் ஆஸ்ரமம் அமைத்துள்ளார். அவரும் மதுரையைப் பூர்வீகமாய்க் கொண்டவர். கல்கத்தாவில் சில காலம் படித்துவந்தார். தீவிர சுதந்திர போராட்ட வேலைகளில் இறங்கினார். சில ஆண்டுகள் சிறைவாசம். பின்னர் ஆன்மிகம் மூலம் சுதந்திரக் கருத்துக்களை விதைக்கலானார். காவி உடை பூண்டு சுதந்திரானந்தர் என்ற பெயரில் இங்கு ஒரு ஆஸ்ரமம் வைத்துக்கொண்டார். இளைஞர்களுக்கு மல்யுத்தம், யோகாசனம் கற்றுத் தந்து, பிரசங்கங்கள் எல்லாம் செய்வார். புல்லூத்து கிராமம் ஒரு மலையடிவார இடம். சுனைகள், சிற்றாறு, கிணறுகள் என்று எப்போதும் நீர்வளம் நிறைந்து, வனம் போல் இருக்கும். சுதந்திரானந்தர் தீவிர திலகர் பக்தர். சிதம்பரம் பிள்ளை, பாரதி என அனைவரிடமும் நல்ல பரிச்சயமுண்டு. இப்போது அஹிம்சையான தீவிரவாதி என்றும் கூறலாம். எப்படியாவது நமக்கு விடுதலை வரவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் ஆச்சாரியர்.

ஆச்சாரியர் கோதையைக் கண்டவுடன் ஆச்சரியப்பட்டார். ‘நீ இந்த சமயத்தில் இங்கு வந்தது மகிழ்ச்சி. உனக்குத் தொந்தரவு தந்ததற்கு மன்னிப்பாயாக.’

‘இருக்கட்டும் ஆச்சாரியரே. வீடும், தேசமும் ஒன்றுதான். வீட்டைச் சுத்தம் செய்வது போல், இந்த தேசத்தில் குப்பைகளை அகற்ற ஸ்திரீகள் இறங்கவேண்டிய நேரமிது. இதுவரையில் உள்ளிருந்தோம், இனி வீதிக்கும் வருவோம். இந்த பாரத தாயின் கை விலங்குகளை அகற்ற நாங்களும் களத்திற்கு வந்துவிட்டோம்’ என்றார் கோதை.

‘ஆஹா. நம் பாரதி இந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வேண்டும். நம் பாரத அன்னையின் சுதந்திரத்திற்கு ஸ்த்ரீ, புருஷர், ஜாதி, மதம் கடந்து போராடவேண்டிய நேரமிது’ என்றார் ஆச்சாரியார்.

அவர்களிருவரும் அமர்ந்தார்கள். அவர்களைத் தவிர முனியன், சங்கரன், வைத்தியலிங்கம், இராமசாமி, திருமலை, சிறுவன் நடேசன் எல்லாரும் இருந்தனர். அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். மிதவாதிகளும், தீவிரவாதிகளும் இருந்தனர்.

சுதந்திரானந்தர் மேலும் தொடர்ந்தார். ‘முதல் உலக யுத்தம் முடிந்தது. நாம் சேர்ந்த அணி வென்றது என்றாலும் நம் வீரர்கள் சுமார் எழுபதாயிரம் பேர் இறந்துள்ளார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னர் கூறியது போல் நமக்கு சுயாட்சி தருவதற்கு இப்போது தயாரில்லை. மேலும் புதிதாய் சட்டங்கள் கொண்டு வருகிறார்கள் நம்மை ஒடுக்க. சென்ற வாரம் காங்கிரஸ் கூட்டத்தில் கூட இவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்வது என்று விவாதிக்கப்பட்டதாய்த் தெரிகிறது. மேலும் ஏதாவது போராட்டம் நடத்த திட்டமிடலாம் என்றே தெரிகிறது. நாம் அதற்குள் நம்மைத் தயார் செய்ய வேண்டும். முன்னைவிட வேகமாய் நாம் செயல்பட்டு மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும். அந்த யுத்திகளை இப்போது விவாதிக்கலாம்’ என்று சற்றே இடைவெளி விட்டார்.

‘நானும் காங்கிரஸ் கூட்டம் பற்றி அவ்வாறே கேள்விப்பட்டேன். மேற்கொண்டு விவரங்கள் எனக்கும் தெரியவில்லை’ என்றார் வரதன்.

‘இப்போது அடுத்த போராட்டத்தை நாம் கிராம அளவில் தொடங்கவேண்டும். மாகாண அளவில் போராட்டம் கை கொடுத்தாலும், அதற்குள் சிறு தொய்வு ஏற்பட்டுவிடும். அதற்கு நாம் இடம் தரக் கூடாது. ஒரு யோசனை இருக்கிறது.’

‘சொல்லுங்கள் ஆச்சாரியரே.’ திருமலை கேட்டார்.

‘நாம் ஏற்கனவே சில இராட்டைகள் வாங்கி, நம்மூர் பஞ்சிலிருந்து நூல் நூற்று வீடு தோறும் கொடுத்துவருகிறோம். சமயங்களில் அதில் வஸ்திரங்களையும் தைத்துத் தருகிறோம். கோதை போன்றோர் அதில் தீவிரமாய் இருக்கிறார்கள். அதை இன்னும் மேம்படுத்த, இனி ‘இல்லம் தோறும் இராட்டை’ என்று தொடங்குவோம். வீட்டில் அவரவர் நூல் நூற்று நம்மிடம் தரட்டும். முடிந்தால் துணியாய் தைத்துக் கூட. இதனால் உள்ளாட்டுப் பொருட்களின் மீது ஒரு பக்தி உண்டாகும். அந்நிய நாட்டு மில் துணிகள் உபயோகம் குறையும்.’

‘நல்ல யோசனை. நான் இப்போதே இந்த யோசனையை வீடுதோறும் எடுத்துச் செல்கிறேன்’ கோதை சொன்னார்.

‘கல்கத்தாவிலிருந்து வந்திருக்கும் தேவையான இராட்டைகளையும் எடுத்துப் போங்கள். அனைவருக்கும் கொடுங்கள்’ என்று தொடந்தார் ஆச்சாரியார்.

‘நம் கிராமத்து மக்களை இதற்குத் தயார்படுத்த வேண்டும். பெரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யவேண்டும். நம் சுற்றுவட்டார கிராமங்களில் இருப்பவர்கள் அந்நிய பொருட்களைக் கைவிட்டு இதில் ஈடுபடவேண்டும். அதற்கு முன்னோட்டமாய் தங்களிடம் இருக்கும் அந்நிய வஸ்திர வகையறாக்களைத் தீக்கிரையாக்க வேண்டும். அதை ஒரு போராட்டமாய்ச் செய்யலாம். திருவேடம் தொடங்கி, துவரிமான் வரை திரளாய்ச் சென்று முடிவில் அங்கு அந்த அந்நிய துணிகளை தீக்கிரையாக்கி நம் எதிர்ப்பைச் சொல்லுவோம். மக்களிடம் இதை கொண்டுசேர்க்க வேண்டும். இதன் மூலம் ஒரு எழுச்சி வரட்டும்.’ கர்ஜித்து முடித்தார் ஆச்சாரியர்.

‘அருமை. வேலைகளை இன்றே தொடங்குவோம்’ என்றனர் ஒருமித்த குரலில். சங்கரன், வைத்தியலிங்கம் முகம் மட்டும் கொஞ்சம் சோர்வாய் இருந்தது. ஆச்சாரியர் அதையும் கவனித்தார்.

‘சரி, இராமசாமி, வரதன், கோதை, நீங்கள் இல்லங்கள் தோறும் இதைக் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் ஊரிலுள்ள சிலரையும் கூட்டிக் கொள்ளுங்கள். முனியனும் உங்கள் கூட இருப்பான். மேலும் சில பணிகளும் அவனுக்கு இருக்கிறது. முக்கியமாய் காவலர்களுக்குத் தெரியக்கூடாது’ என்றார் ஆச்சாரியர்.

‘இன்னும் சில தினங்களில் மார்கழி மாதம் பிறக்கிறது. அனைத்து வீதிகளிலும், காவலர்களுக்குச் சந்தேகம் வராதவாறு நாங்கள் மார்கழி பஜனை, பிரசங்கங்கள் மூலம் இதைக் கொண்டு செல்கிறோம். இம்முறை இரண்டு வேளை கூட செய்கிறோம்.’ திருமலை சொன்னார்.

‘நல்ல யோசனை. நானும் என் கிராமத்தில் அதுவும் செய்கிறேன்’ வரதன் சொன்னார்.

‘சரி இப்போது கிளம்புங்கள். இன்றிலிருந்து பதினைந்தாவது நாள் போராட்டம். அதற்கு முந்திய தினம் நாம் சந்திப்போம்.’ அனைவருக்கும் விடைகொடுத்தார் ஆச்சாரியர்.

அனைவரும் வீடு திரும்பும் போது பரங்குன்றத்தில் தீபம் சுடர்விட்டு எரியத் தொடங்கியிருந்தது. சிறுவன் நடேசன் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்று பாடிய படி ஓடினான்.

சங்கரன், வைத்தியலிங்கம் இருவரையும் தன்னுடைய புல்லூத்து ஆஸ்ரமத்திற்கு அழைத்திருந்தார் ஆச்சாரியர்.

மறுநாள்.

‘நீங்கள் இருவரும் நேற்றைய யோசனை பற்றி எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.’

‘ஆமாம் ஆச்சரியரே நீங்கள் எப்போது மிதவாதியானீர்கள்?’ என்றார் சங்கரன்.

‘இப்போது நமக்கு வேகமும், விவேகமும் வேண்டும். அந்தப் போராட்டம் மிதமாய்ப் போகட்டும். மற்றொன்று..’

‘வேறு என்ன?’ இருவரும் மிகுந்த ஆர்வமாய் இருக்க ஆச்சாரியர், ‘வந்தே மாதரம் என்று எழுதிய தேசியக்கொடியை வானளாவ பறக்க விட வேண்டும். நம் அன்னை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில்.’

‘இதுதான் வீரமிக்க பாரத தேசத்தின் மைந்தர் என்று பெருமை கொள்ளும் செயல். ஆணையிடுங்கள் நாளையே செய்கிறேன்’ என்று விரைந்து கூறினார் வைத்தி.

‘அது அவ்வளவு சுலபமல்ல. நாம் இரவில் செய்யக்கூடாது. அது அழகல்ல. அரசாங்க காவலை மீறி சித்திரை வீதிக்குள் நுழைய வேண்டும். அது மிக கஷ்டம் இந்த சமயத்தில். அதற்கும் ஒரு யோசனையிருக்கிறது’ என்று அருகிலிருக்கும் கிணற்றைக் காட்டினார் ஆச்சாரியார்.

‘கிணற்றில் என்ன?’ இருவரும் ஆச்சரியமடைந்தனர்.

‘இதன் வழியேதான் சித்திரை வீதி தெற்குக் கோபுரத்தை அடைய வேண்டும்.’

‘இதில் எவ்வாறு?’

‘எனக்கும் முன்னர் தெரியாது. ஒருமுறை கோபாலய்யர் வந்தபோது ஒரு குடம் தவறி கிணற்றில் விழுந்தது. அதை எடுக்க நான் உள்ளே போனபோதுதான், இரு சுரங்கப் பாதைகள் தெரிந்தன. ஒன்று வண்டியூர் தெப்பக்குளத்திற்கும், மற்றொன்று கோவிலின் பொற்றாமரைக்குளம் தெற்கு வாசல் கோபுரம் வரையிலும் செல்லும். இதுதான் நம்முடைய வழி. முனியனோடு சேர்த்து நீங்கள் மூவரும் இந்தப் பணியைச் செய்யவேண்டும்.’ அப்போது முனியனும் வர, அனைவரிடமும் மேலும் சில யோசனைகளைச் சொன்னார் ஆச்சாரியர். இதற்கும் முந்திய போராட்டத்தின் நாளே குறிக்கப்பட்டது.

கோதை தன் உடல்நிலையும் பொருட்படுத்தாமல் வீடு தோறும் பிரசாரம் செய்யத் தொடங்கினார். வசதியற்றவர்களுக்குத் தானே நூற்றுக் கைத்தறித் துணிகளைத் தரத் தொடங்கினார். வரதனும் இராகவ பட்டரும் கோவிலில் இருந்து பிரசாரம் செய்தனர். இராமசாமி துவரிமானில் தன் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். வீதி வீதியாய் போய் பிரசாரம் செய்தார். வயதானவர்கள், வேதம் படித்தவர்கள் எல்லாம் ஏற்கெனவே கைத்தறி ஆடைகள்தான் அணிந்துவந்தார்கள். அவர்களை வைத்தே கதர் ஆடையின் மேன்மையைப் பேச வைத்தார். வசதியற்றவர்களுக்குத் தானே நூலும் வாங்கிக் கொடுத்தார். சிலர் பால்ய விவாகம் செய்து கணவனையும் இழந்திருந்தனர். அவர்களுக்கு இராட்டைகள் தந்து அவர்களையும் இந்தச் சேவையில் ஈடுபடுத்தினார். சிலர் விவாஹங்களில் பட்டு துணிகளுக்குப் பதில் கதர் துணிகளை உபயோகப்படுத்தினர். அந்தப் பத்து நாட்களில் அனைத்துக் கிராமங்களிலும் மறைமுகமாய்ப் புரட்சி வெடிக்கத் தயாராயிருந்தது.

அன்று மார்கழி முதல் நாள். திருப்பாவை நோன்பின் தொடக்கம். ஆண்டாள் சொன்னது போல் ‘வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து’, அவரவர் வீட்டின் முன் மார்கழிக் கோலம் போட்டிருந்தனர். தேச பக்தர்கள் பாரத மாதவிற்காக, அவளையே ஆண்டாளாய், கண்ணனாய் எண்ணி நோன்பைத் தொடங்கினர். அன்று கோவிலில் திருப்பள்ளியெழுச்சி நடந்தது. ஆம் அது எழுச்சியாகவே இருந்தது. ‘இறைவா நீ தாராய் பறை…’ என்று ஒருமித்த குரலில் அனைவரும் அந்த ஊர் அரங்கனிடம் வேண்டினர். சிறிதுநேரத்தில் மார்கழி பஜனை தொடங்கியது. திருமலை, நடேசன் மற்றும் சிலரும் பாடினர். பஜனை எல்லாத் தெருவிலும் செல்லும். எப்போதும் ஆன்மிகப் பாடல்கள் மட்டுமே பாடுவார்கள். ஆண்டாள் தன் திருப்பாவையில் கண்ணனிடம் ‘பறை’ என்று கேட்டதால் இம்முறை திருமலை, பாரதியின் ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!’ என்பதை உச்சஸ்தாயில் பாடத் தொடங்கினார்.

அனைவரின் ‘ஆஹா ஆஹா..’ கோஷம் விண்ணை எட்டியது. அன்று முதல் தொடர்ந்து தேச பக்திப் பாடல்கள் மட்டுமே இருந்தது. பல இடங்களில் மக்களும் வந்து சேர்ந்து பாடினர்.

ஒவ்வொரு நாளும் அன்றைய திருப்பாவை பற்றி ஒரு பிரசங்கம் செய்வார் திருமலை. அதற்கே பெரிய கூட்டம் வரும். அவர் மதுரை தமிழ்ச் சங்கத்தில் வாசித்தவர். பல்வேறு தமிழ்ப் பிரபந்தங்கள், இலக்கியங்களோடு பொருத்தி அவர் கொடுக்கும் விளக்கம் சிறப்பாய் இருக்கும். அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாய்ச் சொல்லுவார். நடேசனும் அவ்வப்போது பேசுவான். அவர் தன் பிள்ளையையும் தயார் செய்திருந்தார். இவ்வாறு செய்த பிரசாரங்கள் நல்ல பலனைத் தந்தன. மக்கள் போராட்டத்திற்கு ஆர்வமாய் இருந்தனர்.

போராட்டத்திற்கான நாள் வந்தது. காலை பஜனை தொடங்கியது. திருமலையும் மற்றும் சிலரும் வந்திருந்தனர். நடேசன் பாடலின் நடுவே வீடு வீடாய்ப் போய் ஏதோ சொல்லி வந்தான். அரசாங்கத்திற்கு எந்த சந்தேகமும் வரவில்லை. இருந்தாலும் சில காவலர்கள் நடமாட்டம் அங்கு இருந்தது. அன்றைய பிரசங்கம் சுவாரஸ்யமாய் இருந்தது.

அது மார்கழி ஐந்தாம் நாள். ‘மாயனை மன்னு’ என்ற திருப்பாவைப் பாடலைப் பாடினர்.

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்*
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்**

‘இந்த பாசுரம் தொடங்கி பத்து பாசுரங்கள் பாகவதர்களாகிய ஆய்ச்சியர், தோழிகளை எழுப்புவதாய்ப் பாடுகிறார் ஆண்டாள். அந்த வழியில் நம்மையும், தேசத்தையும் இப்போது எழுப்புவதாய்க் கொள்ளலாம். குறிப்பாக இந்தப் பாசுரம் ஆச்சாரியன் பெருமை பற்றிச் சொல்கிறது. அதாவது நாம் ஆச்சாரியர் சொல்வதைக் கேட்கவேண்டும். அந்த ஆச்சாரியர் பெருமை எப்படிபட்டது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. துஷ்டர்களோடு வாதம் செய்ய நேரிடும் போது வரும் பாபங்கள் எல்லாம் தங்களுடைய ஆச்சார்யன் திருநாமம் சொன்னால் போகும் என்கிறது. சீதை இருந்த திசை நோக்கி அனுமன் தொழுதது போல், ‘தொழும் அத்திசை உற்று நோக்கியே..’ என்று திருதொலைவில்லிமங்கலம் பற்றி நம்மாழ்வார் சொல்வது போல் ஆண்டாளும் இங்கு, ‘வட மதுரை’ என்ற சொல்லால் தென்மதுரையிலிருந்து, அத்திசை நோக்கி ‘தொழுது’ என்கிறார். எந்த நதி, கண்ணன் ‘ஓரிரவில் ஒளித்து வளர’ வசுதேவனுக்கு தன்னுடைய பெரிய பிரவாகம் பின்திசை நோக்கிச் செலுத்தி வழி விட்டதோ அந்த ‘தூய பெருநீர்’ யமுனையில் எப்போதும் வசிக்கும் கண்ணனை, உள்ளும், புறமும் தூயோமாய் வந்து, தூமலர் தூவித் தொழுது, பாடினால், பாபங்கள் எல்லாம் தீயில் இட்ட பஞ்சாய்ப் போகும், ‘தீயில் இட்ட பஞ்சாய்ப் போகும்’. அதாவது நாம் இருப்பதும் அது போன்ற புண்ணிய வைகை நதி கரையில்தான். நமக்குத் தேவையில்லாததை எல்லாம் தீயிலிட்டது போலாகும். ஆனால் நாம் என்றும் முன் பாசுரங்களில் சொன்னது போல் ‘செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்.’ அஹிம்சை வழியில் இருந்து ஆச்சாரியன் நாமத்தை உச்சரிப்போம்’ என்று அன்று நடக்கவிருக்கும் போராட்டத்தையும் சூசகமாக சொல்லி அன்றைய பாசுரத்தை மக்களுக்கு விளக்கினார். கூட்டம் புரிந்து கொண்டது போல், வந்தே மாதரம் என்று கோஷமிட்டது.

கூட்டத்தின் ஒரு பகுதி அங்கிருந்து கிளம்பியது. வீடுகளில் இருந்த அந்நிய நாட்டுத் துணிகளைக் கொண்டு வந்து சேர்த்தது. இராமசாமியும், திருமலையும் போராட்டத்திற்குத் தலைமைதாங்கி அங்கிருந்து கிளம்பினர். சிறுவன் நடேசன் நாட்டின் கொடியோடு முன்னணியில் நடந்தான். அனைவரும் பாரதியின் பாடல்களைப் பாடிக்கொண்டு சென்றனர். அதற்குள் சர்க்காருக்குத் தகவல் தெரிந்தது. சில சிப்பாய்களும் அங்கு வந்தனர். ஆனால் அஹிம்சை வழியென்பதால் கலவரம் எதுவும் நடக்காது என்பது தெரியும். அதற்குள் திருவேடகத்திலிருந்தும், கீழமாத்தூரிலிருந்தும் மக்கள் வரத்தொடங்கினர். வரதனும் கோதையும் வழிநடத்தி வந்தனர்.

மறுபுறம், ஆச்சாரியர் உதவியுடன் மற்றை மூவரும் நாயக்க மன்னரால் கட்டப்பட்ட சுரங்கத்திற்குள் கொடியும், தீப்பந்தங்களோடும் இறங்கினர். அது நீண்ட நாட்களாய் உபயோகப்படுத்தப்படாத சுரங்கப்பாதை. ஊற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால் போல் பூமிக்கடியில் இருந்தது பத்து மைல் தூரம். திடீர் போர் வந்தால் தப்பிக்க நாயக்க மன்னரால் இது போன்று பல சுரங்கப் பாதைகள் மதுரையைச் சுற்றி கட்டப்பட்டிருந்தன. சில பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்டுவிட்டன. ஒரு இடத்தில் இரு பாதைகள் பிரிந்தது. ஆச்சாரியர் சொன்னபடி மீனாக்ஷி கோவிலுக்குச் செல்லும் வழியில் சென்றனர். சில நிமிஷங்களில் பொற்றாமரை குளத்தை அடைந்தனர். முதலில் முனியன் வெளியே சென்றான். அங்கும் சிப்பாய்கள் இருந்தனர்.

மற்றவர்களுக்குத் தகவல் தந்து மூவரும் அங்கிருக்கும் சித்தர் சிலை பின்புறம் சென்றனர். அங்கிருக்கும் ஒரு இரகசிய வாயில் வழியே கோபுரத்தின் அடித்தளத்தை அடைந்தனர். அங்கிருந்து மற்றொரு பாதையின் மூலம் மேல்தள வழியை அடைந்தனர். இரண்டாம் தளம் அடையும் போதே சிப்பாய்களுக்குக் தெரிந்துவிட்டது. அவர்களும் விரைவில் மேலே ஏறினர். மக்கள் கூடிவிட்டனர். அவர்கள் நான்காம் தளத்திற்கு மேல் ஏற முடியாத சூழல் வந்தவுடன், நம் தேசியக் கொடியை அங்கேயே ஏற்றினர். ஆம். அந்த நான்காம் தளத்தில் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் எதிரிகளை அழிப்பதைப் போன்று ஓங்கிய வாளோடு சிலையாய் இருந்தார். அந்த வாளில்தான் மூவரும் கொடியை ஏற்றினர். அவர்கள் உச்சிவரை ஏற முடியாவிட்டாலும், வந்தேமாதரம் என்ற கோஷம் விண்ணை எட்டியது. மூவரையும் அங்கிருந்த காவலர்கள் கைது செய்தனர். மக்கள் கிளர்ச்சி செய்தனர்.

மறுபுறம், மற்றை ஊர்களிருந்து வந்தவர்கள் துவரிமானில் பெரும் திரளாய் கூடினர். ஆங்காங்கு திரட்டிய அந்நிய துணிகளை ஒரு இடத்தில் குவித்தனர். கோதைதான் பிரதானமாய்ப் பேசினார். கூடியிருந்த மக்கள் ஆரவாரித்தனர். ‘இல்லம் தோறும் இராட்டை’ என்ற முழக்கம்தான் முக்கியமாய் இருந்தது. அன்று முதல் நாம் சுதேசி பொருட்களையே வாங்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டனர். அரசாங்கக் காவலர்கள் வந்தனர். மதுரையிலிருந்து ஒரு ஆங்கிலப் பேரதிகாரியும் வந்திருந்தார். அவர்கள் அங்கிருந்தவர்களை எச்சரித்தனர். அதற்குள் சிறுவன் நடேசன் ஒரு பந்தத்தை எடுத்துவந்துவிட்டான். அவனே அந்தத் துணிகளையும் கொளுத்திவிட்டான். சிப்பாய்கள் அடிக்கப் பாய்ந்தனர். பலரும் கைது செய்யப்பட்டனர். கோதை கருவுற்றிருந்தாலும் கொடுமைப்படுத்தப்பட்டாள். சிறுவன் நடேசன் மட்டும் கூட்டத்திலிருந்து தப்பித்து புல்லூத்து அடைந்தான்.

கோதையும் முனியன் மனைவி நாகம்மாவும் மற்றும் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சில தினங்களுக்குப் பின்தான் தெரிந்தது முனியன், வைத்தி, சங்கரன் அனைவரும் அதே சிறையிலிருப்பது. வரதன், இராமசாமி, திருமலை மற்றும் சிலரும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். சில மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை தண்டனை தரப்பட்டது. சிறையில் கோதைக்கு ஆகார வசதி சரியாய் தரப்படவில்லை. நாகம்மாதான் தன்னுடைய உணவைக் கொடுப்பாள். சில மாதங்களில் கோதைக்கு சிறையிலேயே குழந்தை பிறந்தது. அரசாங்கம் அவள் மீதும் வரதன் மீதும் மேலும் பல வழக்குகளைப் போட்டது.

சில தினங்களில் தண்டனைக் காலம் முடிந்து நாகம்மா மற்றும் முனியன் மட்டும் விடுதலை ஆகினர். கோதையின் குழந்தையைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தனர். ஆச்சாரியர் அறிவுரையின் படி அவர்கள் மதராஸ் சென்றனர். முனியன் போராட்டத்தை விடவில்லை. இதனால் முனியனும் நாகம்மாளும் அந்தமான் உட்பட பல சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர். உறவினர் மூலம் குழந்தையையும் அவர்களே வளர்த்தனர். வரதனும் கோதையும் சிறையிலிருந்து சில ஆண்டுகள் கழித்துதான் வெளியில் வந்தனர். ஆனால் அவர்கள் அன்று இட்ட தீ, ஆங்கொரு காட்டிலிட்ட அக்னிக்குஞ்சாய் நின்று எரிந்தது. அதை ஆச்சாரியர் மேலும் எடுத்துச் சென்றிருந்தார். அவரும் சிறைப்பட்டார்.

அந்தக் கிராமங்களில் மக்கள் முழுதும் சுதேசிப் பொருட்களுக்கு மாறியிருந்தனர். வீடுதோறும் தினமும் சில மணி நேரமாவது மக்கள் இராட்டை சுற்றினர். மற்றொரு புறம் தீவிரமாய் ஒரு குழுவும் போராடியது. கோதையும் வரதனும் கடைசிவரை தங்கள் குழந்தையைப் பார்க்க முடியவில்லை. தன் சொத்துக்களை எல்லாம் நாட்டிற்குக் கொடுத்தனர் அவர்கள். தீவிர சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தேசம் சுதந்திரம் அடைந்தது, ஆனால் அவர்களிருவரும் அப்போது இல்லை. முனியனும் நாகம்மாவும் சுதந்திரக் காற்றை சில காலமே சுவாதித்தனர். அஹிம்ஸை வழியில் வளர்ந்த நடேசன் பின்னாளில் நேர்மையான அரசாங்க அதிகாரியானார்.

*

எண்பது வயதைக் கடந்த பத்மா, கண்களில் நீர் கோத்துக் கொண்டிருக்க இவற்றை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார். அருகிருந்த ஸ்மார்ட் போனில் ‘அசோக் வரதன் பாஸ்டன் காலிங்’ என்ற வாட்ஸாப் ஒலித்தது, பாஸ்டன், அமெரிக்காவிலிருந்து.

‘என்ன பாட்டி இவ்வளவு நேரம் போன் எடுக்க. நான் இப்போதான் ஆபீஸ் போயிண்டு இருக்கேன். கிராமத்துல தனியா இருக்கியேன்னு கால் பண்ணின்டே இருக்கேன். நீ என்ன, வழக்கம் போல் கொள்ளுத் தாத்தா, பாட்டி பத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டாயா? அவா தியாகங்களை நிறையா சொல்லிருக்கயே. கடைசிவரை பாக்க முடியாம போயிருத்தேன்னு எனக்கே வருத்தமா இருக்கு. ஆனா அந்த தியாகங்களை நினைச்சா பெருமையா இருக்கு எனக்கு.’

‘ம்…’ என்றாள். ‘பெருமை’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அதுவரை இருந்த வருத்தம் மறந்து அவளது குரலில் ஆனந்தம் கலந்திருந்தது.

2 thoughts on “பறை தாராய்! (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

  1. Very nicely written.

  2. Very nice written and best of luck for more writings 😊

Leave a Reply