Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு

போலிசுக்கு பதிலாக புஸ்வாணம்

தமிழகத்தில் செயல்படும் இந்து இயக்கங்களுக்குச் சவாலாக இரண்டு நிகழ்வுகள் ஏற்பட்டன. 1981 மற்றும் 1982ல். முதலில் மீனாட்சிபுரம், இரண்டாவது மண்டைக்காடு.

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி அருகில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள் எண்ணூறு பேர் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் (பிப்ரவரி 1981). இதற்கான ஏற்பாடுகளைச் செய்தது தென்னிந்திய இஷாபுல் இஸ்லாமிய சபை என்கிற அமைப்பு. பத்திரிகைச் செய்தியாக வந்தவுடன் இது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி., இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் களத்தில் இறங்கின. பேரணிகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன.

ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராமகோபாலன் ‘தெரிந்தோ தெரியாமலோ நாம் பல்லாண்டுகளாக ஹரிஜன சகோதரர்களைக் கொடுமைப்படுத்தி இருக்கிறோம். மதம் மாறாமல் இருக்கும் ஹரிஜன சகோதரர்கள் நம் வணக்கத்துக்குரிய உண்மையான தெய்வங்கள்’ என்றார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஜேப்பியார் ‘நான் ஒரு கிருஸ்துவன். இருந்தாலும் உலகம் போற்றும் இந்துப் பண்பாட்டை நான் வணங்குகிறேன். இந்து தத்துவங்களை எளியவர்களுக்கும் புரியும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார். மனித சமஉரிமைக்கழகத்தின் செயலாளர் பி.விஸ்வநாதன் ஹரிஜனங்களுக்காகப் பாடுபடும் இந்து முன்னணியைப் பாராட்டினார்.

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், துக்ளக் ஆசிரியர் சோ ஆகியோர் பேசினார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு, இந்து இயக்கங்கள் எடுத்த முயற்சியின் காரணமாக மதம் மாறியவர்களில் பெரும்பான்மையோர் தாய் மதத்திற்குத் திரும்பினார்கள்.

கன்யாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கடலோரக் கிராமம் மண்டைக்காடு. அங்கே இந்து-கிறிஸ்துவர் மோதல் வெடித்தது. (பிப்ரவரி 1982). இந்த நேரத்தில் தாணுலிங்க நாடார் தலைமையில் செயல்பட்ட இந்துக்கள் வலிமை காட்டினார்கள். கலவரத்தைப் பார்வையிட வந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் இந்துக்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றவுடன் ‘நாளை இந்த முதலமைச்சர் எங்களை வந்து சந்திப்பார்’ என்று சொல்லிவிட்டு தாணுலிங்க நாடார் எழுந்து போய்விட்டார். இந்துக்களின் வலிமையைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் பாதுகாப்பு ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்ட இந்து எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. தமிழக இந்துக்களின் அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது…

நாகப்பட்டினம் வியாபாரத்தில் புயல், மழை காரணமாக இரண்டு வார ஓய்வு கிடைத்தது. இந்த மாதிரி நேரங்களில் நான் மற்றக் கடலோர ஊர்களைச் சுற்றி வியாபாரத்திற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம்.

பட்டுக்கோட்டையில் ஏவி லாட்ஜ் என்கிற லாட்ஜில் நான் தங்கி இருந்தேன். எந்த ஊருக்குப் போனாலும், அங்கே நூலகம் இருக்கிறதா, படிப்பாளிகள் யாரவது இருக்கிறார்களா என்று விசாரிப்பது வழக்கம். லாட்ஜ் நிர்வாகியிடம் கேட்டபோது அவர் சொன்னார். ‘சார், பக்கத்து வீட்டில் தம்பி இருக்கிறார். தம்பி திருச்சிற்றம்பலம்னு பேரு. இந்தப் பகுதில திமுகவில் பெரிய புள்ளி. நல்ல படிப்பாளி. எப்பவும் அவர் வீட்ல ஒரு கூட்டம் இருக்கும். ஆனா உங்களையெல்லாம் பார்ப்பாரானு தெரியாது’ என்றார். மறுநாள் நான் தம்பி திருச்சிற்றம்பலம் வீட்டுக்குப் போனேன்.

நிர்வாகி சொன்னது நிதர்சனமான உண்மை. கூட்டம் இருந்தது. ஏகப்பட்ட பஞ்சாயத்து. அதெல்லாம் முடியும்வரை பொறுமையாகக் காத்திருந்தபோது, இறுதியாக நானும் தம்பியும் மட்டும் மிச்சமிருந்தோம். ஆனால் இருட்டிவிட்டது. தம்பி நல்ல உயரம், அதற்கேற்ற பருமன். அவர் அங்கிருந்தவர்களை நடத்திய விதத்தில் ஒரு அதிகார தோரணை இருந்தது. தம்பியிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தகங்கள் வேண்டும், புத்தகம் படிக்கிற ஆர்வம் உடையவரோடு பேச வேண்டும் என்று சொன்னேன். ‘இப்ப அதெல்லாம் முடியாதுங்க’ என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார்.

நான் சளைக்கவில்லை, மறுநாளும் போனேன். அதற்கு அடுத்த நாளும் போனேன். நான்காவது நாள் என்னைப் பார்த்தவுடன் ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இவங்கள்ளாம் போன பிறகு நாம் பேசலாம்’ என்றார். அதன்படியே, கூட்டத்தார் கலைந்த பிறகு என்னை வீட்டுக்குள் அழைத்துப் போனார். மாடியறைக்குப் போனோம். காபி கொடுத்தார். தம்பியிடம் விஸ்தாரமான, ஒழுங்காக வகைபடுத்தப்பட்ட நூலகம் இருந்தது. அதை எனக்குக் காண்பித்தார். பசுக்கள் பராமரிப்பு, கோ பூஜை போன்ற விஷயங்களுக்கே பத்து புத்தகங்களுக்கு மேல் இருந்தது. மதம், பூஜை, சம்பிரதாயங்கள், யோகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்கள். வாங்கியது மட்டும் இல்லை, தம்பி அவற்றைப் படித்தும் வைத்திருந்தார். அவரோடு உரையாடுவது சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. தினமும் காலையில் கோபூஜை செய்வதாகவும் தனக்கு ஒரு ஐயங்கார் சுவாமியிடம் மந்திர உபதேசம் ஆகியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு என் மனதில் தேக்கி வைத்திருந்த கேள்வியை தம்பியிடம் கேட்டுவிட்டேன். ‘இவ்வளவு ஆசாரம், அனுஷ்டானம், அறிவுத்தேடல் என்றிருக்கிற நீங்கள், கருணாநிதி கட்சியில் எப்படி இருக்கீங்க?’ என்று. அவர் சொன்னார், ‘உங்களுக்குத் தெரிந்த அரசியல் வேறு, இந்தப் பகுதியில் நாங்கள் பண்ணுகிற அரசியல் வேறு. எந்த ஊரிலும் தங்கள் ஆளுமையை, அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற சில குடும்பங்கள் இருக்கும். அந்தக் குடும்பங்கள் தங்களுக்கு வலிமை வேண்டும் என்பதற்காக அரசியலில் எதாவது ஒரு கட்சியைச் சார்ந்திருப்பார்கள், அவ்வளவுதான். இதில் கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் பார்ப்பதில்லை. இந்த ஊரில் என்னுடைய போட்டியாளர் அதிமுகவில் இருக்கிறார். அந்தக் காரணத்தினால் நான் திமுகவில் இருக்கிறேன். நான் நினைத்தால் நாளை காலை வண்டி எடுத்துக்கொண்டு சென்னைக்குப் போய் என் தலைவரைப் பார்க்க முடியும், என் காரியத்தைச் சாதிக்க முடியும். எம்ஜியாருடன் தொடர்பு கொள்ள எனக்கு வழி இல்லை. அதிமுகவில் எனக்கு அறிமுகங்கள் இல்லை. அரசியல் என்பது அதிகாரத்துக்கான ஒரு தொடர்பு, அவ்வளவுதான். நான் சாமி கும்பிடறது ரகசியமே இல்லை. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். என்கட்சியில் இருந்து இதற்கு எந்த இடையூறும் இல்லை’ என்று சொல்லி முடித்தார்.

நடப்பு அரசியலின் மற்றொரு பரிமாணத்தை தம்பி திருசிற்றம்பலத்திடம் இருந்து நான் தெரிந்துகொண்டேன். அவர் சொன்னது ஓரளவுக்குச் சரிதான் என்பது பிற்காலங்களில் கிடைத்த அனுபவங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டது.

*

திருவெறும்பூர் பாய்லர் தொழிற்சாலையில் கதிர்வேல் ஒரு தொழிலாளி. இவர், வார இறுதி நாட்களில், நாகப்பட்டினம் வந்து என்னிடம் மீன் கொள்முதல் செய்துகொண்டு போவார். திருவெறும்பூரில் அவை விற்கப்படும். அவருக்கு மீன் விற்கும் கடை ஒன்றை அந்தப் பகுதியில் ஏற்படுத்தலாம் என்ற ஆசை வந்துவிட்டது. அதற்கான யோசனையோடு என்னை அணுகினார். நானும் உதவினேன். அந்தக் கடை முதல் நாள் வியாபாரத்துக்கு நான் அவசியம் வரவேண்டும் என்று வலியுறுத்தியதால் நான் திருவெறும்பூருக்குப் போனேன்.

நானே கடையில் விற்பனை செய்தேன். காலை முதல் நல்ல வியாபாரம். அன்று ஆடி பதினெட்டு என்பதால் கடையில் ஏகப்பட்ட கூட்டம். கதிர்வேலுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. மணி பன்னிரண்டு ஆகும்போது நான் சோர்வடைந்து விட்டேன். பசியும் கூட. ஆனால் உடலெல்லாம் மீனுடைய செதில்கள். எப்படியாவது குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேறி மெயின் ரோடுக்குப் போய் திருச்சியில் உள்ள லாட்ஜில் குளித்துவிட்டு, சாப்பிட வேண்டும். ஆனால் அந்த நேரம் பார்த்துக் கதிர்வேலைக் காணவில்லை.

‘இப்படி இந்தப் பண்டிகை நாளில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது என்னை மட்டும் பசியோடும் மீனோடும் பரிதவிக்க விட்டுவிட்டாயே, இது நியாயமா?’ என்று பராசக்தியைக் கேட்டேன். அப்போது பாய்லர் தொழிற்சாலை ஊழியர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் என்னை அணுகினார். தன்னுடைய வீட்டில் சாப்பிட வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். என்னுடைய மறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தவிர்க்க முடியாமல் நான் அவர் வீட்டுக்குச் சென்றேன்.

சிறிய வீட்டில் தொழிலாளி, அவரது மனைவி, தங்கை, குழந்தை, நான். முதலில் தலைக்கு எண்ணெய் கொடுத்துக் குளிக்கச் சொன்னார்கள். டவலும் லுங்கியும் கொடுத்தார்கள். பிறகு சாப்பாடு. விருந்தாளிக்குப் போடுவதுபோல் இல்லாமல் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். சாப்பிட்டுவிட்டுக் கை கழுவிய பிறகுதான் எனக்கு ‘கதிர்வேல் எங்கே போனார்?’, ‘அவர் என்னைத் தேடுவார்’ என்ற விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அந்தத் தொழிலாளியிடம் கேட்டேன். கதிர்வேல்தான் இந்த ஏற்பாட்டைச் செய்ததாக அவர் சொன்னார். புறப்பட்டுத் திருச்சி லாட்ஜுக்கு வந்து சேர்ந்தேன். அடுத்த ஞாயிற்றுக் கிழமை கதிர்வேல் நாகப்பட்டினம் வந்தார். வந்தவுடன் என்னிடம் கோபித்துக் கொண்டார்- நான் சாப்பிடாமல் போய்விட்டதால் அவருக்குக் கோபம். அவரது நண்பர் வீட்டில் சாப்பிட்டதைச் சொன்னேன். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு, தன்வீட்டில்தான் சாப்பிட்டிருக்க வேண்டும், அதுதான் முறை என்றார் அவர். எனக்குக் குழப்பமாக இருந்தது.

என்னை அழைத்துப் போனவர் யார் என்பது மர்மமாக இருந்தது. சில வாரங்களுக்குப் பிறகு திருவெறும்பூர் போய் கதிர்வேல் மீன்கடையைப் பார்த்துவிட்டு நானும் கதிர்வேலும் நான் சொன்ன குறிப்பை வைத்துக்கொண்டு அந்தத் தொழிலாளியின் வீட்டைத் தேடினோம். அலைச்சல்தான் மிச்சம். அந்த வீடு கிடைக்கவே இல்லை.

*

நாகப்பட்டினம் வியாபாரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இருந்தாலும் அதிகமாக வேண்டும் என்ற ஆசையில் அந்த கம்பெனியை மூடிவிட்டு நாங்கள் அடுத்ததாகப் போனது அரங்கம். அரங்கத்தில் கானாங்கழுத்தியை வாங்கிக் கருவாடாக்கி கேரளாவில் விற்கும் வியாபாரம். அரங்கத்தில் நான்கு மாதங்கள் தங்கியிருந்தேன்.

கானாங்கழுத்தி என்பது கைக்கு அடக்கமாய் இருக்கும் மீன். வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கும். என்ன காரணமோ, இங்கே இதை அதிகம் விரும்புவதில்லை. ஆனால் இதே கானாங்கழுத்தியைத் தேவைக்கதிகமாக உப்புப் போட்டுக் காய வைத்து, கேரளாவுக்குக் கொண்டு போனால் கை மேல் காசு. ஒரு வார காலம் இதைக் காய வைக்க வேண்டும். ஏலத்தில் எடுத்த மீன்களைக் காய வைக்க ஏகப்பட்டப் பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். ஐம்பது பெண்களை நிர்வகிப்பது அவ்வளவு சுலபமல்ல. எட்ட இருந்து பார்த்தால் வேலை செய்கிறார்களா, வம்படிக்கிறார்களா என்றுத் தெரியாது. ரொம்பவும் கிட்டே போனால், விவகாரம் வேறு விதமாகப் போய் விடும். இந்தத் தொல்லை நமக்கு வேண்டாமென நினைத்து, ரங்கநாதன் என்பவனை மேஸ்திரியாக நியமித்தேன். அவன் அவர்களோடு இரண்டறக் கலந்து விட்டான். நான் ஒரு அதிகாரி இருப்பதையே மறந்து விட்டான். அவன், அவனது நெருக்கம், நெருக்கத்துக்கு உரியவருடையே போட்டி – இப்படிச் சில புதுப் பிரச்சினைகள் உண்டாயின. ரங்கநாதனை பணி நீக்கம் செய்து சென்னைக்கு அனுப்பி விட்டேன். அடுத்தக் கட்டமாக அந்தக் கூட்டத்திலேயே ஒரு பெண்ணைத் தேர்வு செய்து மேஸ்திரியாக நியமித்து விட்டேன்.

கருவாடு தயாராவதற்கு ஒரு வாரமாகும். அதற்குப் பிறகு அதைக் கோணி மூட்டையில் கட்ட வேண்டும். பிறகு கோணி மூட்டைகளைப் பத்து படகுகளில் ஏற்றி, அரங்கத்தில் இருந்து பழவேற்காட்டிற்குக் கொண்டு வர வேண்டும். பழவேற்காட்டில் இருந்து சென்னை வால்டாக்ஸ் ரோடு. வால்டாக்ஸ் ரோட்டில் கேரளாவுக்குப் போகும் லாரிகளோடு பேரம் பேசி, மொத்த சரக்கையும் அந்த லாரியில் ஏற்ற வேண்டும்.

அரங்கத்தில் ஆரம்பித்த பயணம் கேரளாவின் செங்கணாச்சேரிச் சந்தைக்குப் போவதற்கு ஒரு நாள் ஆகும். அது வரை நாம் கண் மூடாமல் இருக்க வேண்டும். கானாங்கழுத்தி வாசனை திருடாதவனைக் கூட திருட வைக்கும்.

மீன் வலை வியாபாரத்திற்காக எழுபதுகளின் துவக்கத்தில் அரங்கத்தில் வந்து தங்கி இருக்கிறேன். அரங்கத்தில் இப்போது முன்பைவிடச் சிறிது முன்னேற்றம். பழவேற்காட்டில் இருந்து தினமும் தினத்தந்தி வருகிறது. ஆனால் காலை பேப்பர் மாலையில்தான் வரும். உணவுப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருந்தது. அங்கிருந்த சாமுவேல் நாடார் கடையில் பால் உண்டு, டீ, காப்பி உண்டு. தவிர, கடையை மூடிய பிறகு அதாவது இரவு பத்து மணிக்கு மேல், கடைக் கணக்கைப் பார்த்து முடித்து விட்டு, கடைப்பையன்களுக்காகச் சமையல் செய்யப்படும். உலையிலிட ஊரடங்கும் அந்த சமையலைச் சாப்பிட்டு நான் உயிர் வாழ்ந்தேன். கடை மூடிய நாட்களில் பகல் சமையல் செய்வதும் உண்டு.

சாமுவேலுடைய தங்கையை என்னிடமிருந்து காபந்து செய்வதிலேயே அவனுடைய கவனம் எல்லாம் இருந்ததால் சமையல் சுமாராகத்தான் இருக்கும். சும்மா சொல்லக் கூடாது, அந்தப் பிரதேசத்துக்கு அவள் ஒரு அழகிதான்.

நான் அரங்கத்திலிருக்கும் போது காலரா நோய் அந்த ஊரைத் தாக்கியது. அண்டா அண்டாவாக குளுக்கோஸ், உப்பு நீர், பழைய குப்பைகளை எரித்தல், ஊரைச் சுத்தம் செய்தல் என்று பத்து நாட்கள் போராட்டம். சில பேரைப் பலி கொடுத்த பிறகு காலராவின் ஆட்டம் ஓய்ந்தது.

காலரா சிகிச்சை செய்ய ஒரு லேடி டாக்டரையும், உதவியாளரையும் சுண்ணாம்புக் குளத்தில் இருந்து வரவழைத்து வைத்திருந்தார்கள். அவர்கள் பிரசவம் பார்த்ததில் ஒரு இளம்பெண் மரணம். பச்சை உடம்பில் டிரிப் போட்டதால்தான் ஜன்னி கண்டு அந்தப் பெண் இறந்து விட்டாள் என்பது மக்களின் முடிவு. பிணம் ஒரு பக்கம், பெண்களின் ஒப்பாரி ஒரு பக்கம். டாக்டரைத் தாக்க வேண்டுமென்று ஐம்பது பேர் அவர் இருந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். அன்றிரவு முழுவதும் கண் விழித்து அந்த ஜனங்களோடு வாதாடி, தீவட்டிக் கும்பலிடமிருந்து அவர் உயிரைக் காப்பாற்றினேன்.

அரங்கத்திற்கும் பக்கத்துப் புழுஞ்சேரிக்கும் மோதல் ஏற்பட்டு பெரிய மோதல் மூண்டது. அரங்கம் தமிழ்நாட்டின் முதல் கிராமம் அல்லது குப்பம். புழுஞ்சேரி ஆந்திராவின் கடைசி கிராமம். ஆகவே இந்த மோதலில் இரண்டு மாநில போலீசாருக்கும் நல்ல வசூல். இரண்டு கிராமங்களிலும் வரி வசூலித்து போலிசாருக்குக் கப்பம் கட்டினார்கள் .திருவிழாவுக்கென்று வைத்திருந்த வெடியை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். பிறகு போலீஸ் வந்தது. நான் சில இளைஞர்களைக் கூட்டிப் பேசினேன். தகராறு வலுத்தால் போலிசுக்குத்தான் லாபம் என்று சொன்னேன். என்னுடைய முயற்சியால் இரண்டு கிராமங்களுக்கும் சமரசம் ஏற்பட்டது. போலிசுக்கென்று ஒதுக்கி வைத்திருந்த பணத்தில் பரஸ்பர விருந்து வைத்துக் கொண்டார்கள். அம்மன் திருவிழாவில் புஸ்வாணமாகக் கொளுத்தித் தீர்த்தார்கள்.

கானாங்கழுத்தி கருவாட்டை அடுக்கி வைக்கப் பெரிய கீற்றுக் கொட்டகை போட்டிருந்தோம். உள்ளங்கை, உள்ளங்கால் தவிர வேறு எந்த இடத்திலாவது கானாங்கழுத்தி உப்புச் சேர்க்கையால் வடியும் திரவம் பட்டு விட்டால் கொப்புளம்தான். கொட்டகையின் உள்ளே போகும்போதும் வரும்போதும் அமில ஆற்றைக் கடப்பது போலத்தான் கவனமாக நடக்க வேண்டும்.

மழை பெய்த காரணத்தால், ஒருநாள் இரவு வேளையில் கடற்கரையில் இருந்து கருவாட்டுக் கொட்டகைக்கு இடம் பெயர்ந்தேன். ஓரளவுக்கு மேல் கையை, காலை அசைக்க முடியாது. அசைத்தால் கருவாட்டில் இருந்து வழியும் நீர் நம் மீது பட்டுப் புண்ணாகி விடும். கொட்டகையின் மூலையில் குந்தி உட்கார்ந்தபடி தூங்கி விட்டேன்.

நள்ளிரவில் ஏதோ அசௌகரியம் ஏற்பட்டுக் கண் விழித்தேன். விழித்தால் ஒரு நாய். அந்த நாய் எப்படியோ கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து விட்டது. என் கால்களுக்கு இடையே உள்ள பகுதியை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. அசைந்தால் ஆபத்து. அசையா விட்டால் அதை விட ஆபத்து என்கிற நிலைமை.

இது இப்படியே நீடிக்க, கொஞ்ச நேரத்தில் நாய்க்கு நல்ல புத்தி வந்து வெளியேறி விட்டது.

தொடரும்…

Leave a Reply