Posted on Leave a comment

ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்

(சர்ச்சில் – ரூஸ்வெல்ட் – ஸ்டாலின்)

இரண்டாம் உலகப் போரின் முக்கிய பிதாமகர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் (இங்கிலாந்து), ஹிட்லர் (ஜெர்மனி), ரூஸ்வெல்ட் (அமெரிக்கா), ஸ்டாலின் (ரஷ்யா) ஆகியோர் ஆவர்.

1939லிருந்து 1945 வரை நீடித்த இந்த யுத்தத்தைப் பற்றிய கட்டுரை அல்ல இது. இந்த இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் (பல்வேறு சிறிய, அதிமுக்கியமில்லாத காரணங்கள் இருந்தாலும்) ஹிட்லர்தான் என்று தேர்ந்த சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஹிட்லரின் முக்கியக் கொள்கை Expansionism என்றழைக்கப்பட்ட ஆட்சி எல்லையை விரிவுபடுத்தும் கொள்கையே ஆகும்.

இந்தப் போரின் போது ஹிட்லருக்கு எதிராகத் திரண்ட நேச நாடுகளின் (Allied Forces) முக்கிய நோக்கம் ஹிட்லரை எப்படியாவது கட்டுப்படுத்தி, அவருடைய திட்டங்களை முறியடித்து, அவர் கைப்பற்றிய நாடுகளை அவர் பிடியிலிருந்து விடுவிப்பதே ஆகும்.

ஹிட்லரும் சும்மா இருக்கவில்லை. பல்வேறு திட்டங்களை வகுத்து இந்த நேச நாடுகளின் முக்கியத் தலைவர்களை ஒழித்துவிட பல்வேறு முயற்சிகள் செய்தார்.

அவற்றில் முக்கியமான ஒன்றுதான் ஆபரேஷன் லாங் ஜம்ப் (Operation Long Jump) என்றழைக்கப்பட்ட திட்டம். அது பற்றிய ஒரு கட்டுரைதான் இது.

1943ல் டெஹ்ரானில் (ஈரான்) உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதன் முக்கிய நாயகர்கள் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஜோசஃப் ஸ்டாலின் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில். சந்திப்பின் முக்கிய நோக்கம் – ஹிட்லரை எப்படி ஒழிப்பது? ஆனால், சந்திப்பு ஆரம்பிக்கும் முன்னரே ஹிட்லரின் நாஸி (நாஜி என்றும் சொல்லலாம்) கொலையாளிகள் அந்தக் கட்டத்திற்குள் நுழைந்து சரமாரியாகச் சுட்டு அந்த முக்கியத் தலைவர்களை கொன்று தீர்க்கிறார்கள்.

அமைதி, பதறாதீர்கள். இது கற்பனையே. இப்படி எதுவும் நடக்கவில்லை. திட்டமிட்டு, அதைச் செயல்படுத்த ஜெர்மனி காய்களை நகர்த்தியது, பின்னணி சமாசாரங்கள் எல்லாமே நிஜமாக நடந்தவைதான். கடைசி கிளைமாக்ஸ் மட்டும் நடக்கவில்லை.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில்தான் ஆபரேஷன் லாங் ஜம்ப் (Operation Long Jump) என்ற அருமையான புத்தகத்தை எழுதியுள்ளார் பில் யேன் – Bill Yenne. இதிலுள்ள நிறையச் சம்பவங்கள் உண்மையாகவே நடந்தவைதாம்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் ஒவ்வொரு (நேச) நாட்டின் தலைவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஹிட்லரும் விதிவிலக்கல்ல. இவரும் ‘போட்டுத் தள்ளப்படவேண்டிய’ லிஸ்டில் இருந்தார். அப்போதிருந்த போப் கூட ‘இவரை (ஹிட்லரை) முடித்து விடுங்கள்’ என்று சொன்னதாகத் தகவல் உண்டு.

டெஹ்ரான் ஒரு நடுநிலை (நாட்டைச் சேர்ந்த) ஊர் என்பதால் அங்கே இந்தச் சரித்திர நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் நடந்தன. ஸ்டாலினுக்கு விமானப் பயணம் அறவே பிடிக்காது. சர்ச்சிலும், ரூஸ்வெல்ட்டும் டெஹ்ரானை வெறுத்தனர். ஆனால், கடைசியில் வேறுவழி இல்லாமல் எல்லோருமே ஒப்புக் கொண்டனர்.

இருந்தும், டெஹ்ரானில் ஏராளமான உளவாளிகள் (பல நாட்டைச் சேர்ந்தவர்கள்) இருந்தனர். அமெரிக்க உளவு ஸ்தாபனம் மிக ஆரம்ப நிலையில் இருந்தது. SAS எனப்படும் பிரிட்டிஷ் உளவு நிறுவனம் மிக நன்றாக, முதிர்ச்சியுடன் இருந்ததால் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. ரஷ்யாவில் அடக்குமுறையை / வன்முறையை வைத்தே உளவாளிகளை அடக்கி வைத்திருந்தனர். ஜெர்மானிய உளவுத்துறை அடக்குமுறையில் ரஷ்யா போலவும், சிக்கலான சம்பவங்களைக் கையாளும் நடவடிக்கையில் பிரிட்டிஷார் போலவும் நடந்து கொண்டது.

எர்ன்ஸ்ட் மெர்ஸெர் (Ernst Merser) என்ற உளவாளி ஸ்விஸ் நாட்டைச் சார்ந்தவர். பெரிய புத்திசாலி. பல ஐரோப்பிய மொழிகளை சர்வ சாதாரணமாகப் பேசுபவர். ஸ்விஸ் ஒரு நடுநிலை (neutral) நாடு என்பதால் எந்த நாட்டுக்கும் அவரால் சகஜமாச் சென்று வர முடிந்தது. பிரிட்டிஷ் உளவுத் துறை அவரைக் கண்டறிந்து உடனே தன் உளவாளியாக நியமிக்கிறது. ஜெர்மனியும் அவரை அணுக, அவர் சந்தோஷமாக இரட்டை (double spy) உளவாளியாகிறார்.

1943ல் மொரோக்கோவில் உள்ள காஸப்லாங்கா (Casablanca) என்ற ஊரில் சர்ச்சிலும், ரூஸ்வெல்ட்டும் சந்திக்கிறார்கள். இவர்கள் இதுபோல இன்னொரு முறை சந்தித்தால் அவர்களைக் கொன்று விடலாம் என்று ஜெர்மனி திட்டம் தீட்டுகிறது. ஸ்டாலின் அப்போது ஜெர்மனிக்கு மிகுந்த தொந்தரவு கொடுப்பதால் அவரையும் கொன்றுவிட நினைக்கிறார்கள். இவர்கள் மூவருமே (சர்ச்சில், ரூஸ்வெல்ட் மற்றும் ஸ்டாலின்) டெஹ்ரானில் சந்திக்கும் திட்டம் தெரிந்தவுடன் ஜெர்மனி குஷியாகிறது. இந்த மூன்று ‘பெரிய தலைகளை’யும் கொன்றுவிட இது அரிய வாய்ப்பு என்று மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்தக் கொலைபாதகத்திற்கு ‘ஓட்டோ ஸ்கோர்ஸினி’ என்ற திறமையான உளவாளியை ஹிட்லர் நியமிக்கிறார். ஈரான் நாட்டிற்குள் சத்தம் இல்லாமல் பாராசூட் மூலம் சென்று டெஹ்ரானுக்குள் ஊடுருவி இவர்களைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறார்,

உள்ளே நுழையும் கொலையாளிகளுக்கு ரஷ்ய ராணுவத்தின் சீருடையை அணிவித்து அவர்கள் அசலான ரஷ்ய ராணுவ ஆட்களுடன் கலந்து உறவாடி, பின்னர் தருணம் பார்த்து இந்த மூன்று பெரிய தலைகளையும் தீர்த்துவிட ஓட்டோ ஸ்கோர்ஸினி திட்டம் தீட்டுகிறார்.

டெஹ்ரானில் நடவிருக்கும் சந்திப்பின் விவரங்களை அழகாக அட்டவணையிட்டு ஜெர்மன் உளவாளிகளுக்குத் தருகிறான் அங்காரா நகரில் இருக்கும் (பணத்திற்கு விலை போன) ஒரு பிரிட்டிஷ் உளவாளி. இதில், இந்த மூன்று பெரிய தலைகளும் என்னென்ன பேசிக்கொண்டார்கள் என்பதை முதற்கொண்டு விவரமாக ஜெர்மனிக்கு விற்றுவிடுகிறான் அந்த உளவாளி.

சந்திப்பு நாள் நெருங்க நெருங்க நிறுத்தி நிதானமாகத் திட்டம் தீட்டுகிறது ஜெர்மனி. முதலில் இந்த தாக்குதலுக்குத் தேவையான உபகரணங்களை விமானம் மூலம் டெஹ்ரானுக்குள் அனுப்புகிறது ஜெர்மனி.

ஹிட்லரின் உளவாளிகள் அவர்களுடைய இரட்டை உளவாளியான எர்ன்ஸ்ட் மெர்ஸெரை அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கேட்கிறார்கள். இந்தத் தாக்குதல் எவ்வாறு நடைபெறப்போகிறது என்று துல்லியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார் எர்ன்ஸ்ட் மெர்ஸெர். இரண்டாவதாக, ஜெர்மன் உளவாளியான ஓட்டோ ஸ்கோர்ஸினி எப்படி தன்னுடைய சிறுபடையை வழிநடத்தப் போகிறான் என்பதையும் கேட்டறிகிறார் எர்ன்ஸ்ட் மெர்ஸெர். ‘எப்படியும் இந்த வேலையை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு வெற்றி வீரனாக வந்து உனக்கு பெர்ஷியன் (ஈரான் நாட்டின் அந்த நாள் பெயர்) சால்வை தருகிறேன்’ என்று மனங்கவர்ந்த லிடியா லிஸ்ஸோவ்ஸ்கியா என்ற பெண்ணிடம் வாக்குறுதி தருகிறார் ஓட்டோ ஸ்கோர்ஸினி.

இதற்கிடையே அசல் ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த உளவாளிகள் ஜெர்மனியின் உளவுத்துறைக்குள் ஊடுருவி உண்மையை முன்னதாகவே அறிந்து கொள்கிறார்கள். இருந்தாலும் இதன் மூலம் உலக அரங்குக்கு ஜெர்மனியின் சுயரூபத்தைக் காட்டும் ஒரு சான்றாக இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தலாம் என்பதால் அவர்கள் எதையும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்வதில்லை.

மிகத் துணிகரமாகத் தீட்டப்பட்ட இந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

டெஹ்ரானில் நடந்த அந்தச் சரித்திர சந்திப்பு ‘மிகவும் திருப்திகரமானது’ என்றார் சர்ச்சில். ஒரு ஜெர்மானிய உளவுப்படை இந்தத் தாக்குதலை நிறைவேற்றியிருந்தால் உலக அரங்கில் களேபரம் நடந்திருக்கும். பிரிட்டன் மற்றும் ரஷ்யாவில் சர்ச்சிலுக்குப் பின்னால், ஸ்டாலினுக்குப் பின்னால் ஆட்சிக்கு வருவது யார் என்றே முடிவு செய்யாத ஒரு தருணம் அது.

ரஷ்யாவைப் பொருத்தவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வந்தார். அவருக்கு எதிர்ப்பு காட்ட யாருக்கும் துணிவு இல்லை. சர்ச்சிலின் ராஜதந்திரம் பெயர் போனது. அவருக்குப் பதில் வேறு ஒரு தலைவரை அந்த இக்கட்டான தருணத்தில் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

ஹிட்லரின் ஆணைப்படி சில ஜெர்மன் உளவாளிகள் சிரமேற்கொண்டு செய்து முடிப்பதாக இருந்த சதித் திட்டத்தைக் கண்டுபிடித்து, ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த (இரட்டை உளவாளி) எர்ன்ஸ்ட் மெர்ஸெர் நேச நாட்டு வீரர்களுக்கு சொல்லிவிடவே இந்தக் கொலை பாதகத் திட்டம் ஈடேறவில்லை.

ஆபரேஷன் லாங் ஜம்ப் என்ற பெயரில் பெரிய அளவு திட்டம் தீட்டியிருந்தாலும் ஜெர்மனியால் அந்த நீளம் தாண்டுதலில் நினைத்த அளவு தாண்ட முடியாது போயிற்று. சரித்திரமே மாறிப் போயிருக்கும் அபாயமும் நிகழாமல் தடுக்கப்பட்டது.

Leave a Reply