Posted on Leave a comment

புதிய கல்வி கொள்கை ஏன் அவசியத் தேவை? | எஸ்.ஜி. சூர்யா

கடந்த 1986ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையே தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ளது. பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது 1992ல் திருத்தம் செய்யப்பட்டது. மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய தேசியக் கொள்கை அறிவிக்கப்படும் என 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

இதனையடுத்து இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக 2015ம் ஆண்டு, ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி TSR சுப்ரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பல மாற்றங்களைச் செய்யவும் மேலும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தி, 484 பக்கங்கள் உடைய, வரைவு தேசியக் கல்விக் கொள்கையைத் தயாரித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தேசியக் கல்விக் கொள்கையின் இறுதி வடிவம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வியில் உலகளாவிய அணுகுமுறை

பள்ளிக் கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல், மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.

கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள், மாணவர்களையும் அவர்களது படிப்புத் திறனையும் தொடர்ந்து கண்காணித்தல், முறைசார்ந்த மற்றும் முறைசாராக் கல்வி முறைகளை உள்ளடக்கிய பலதரப்பட்ட வழிகளை ஏற்படுத்தித் தருதல், ஆலோசகர்களின் ஒத்துழைப்பு அல்லது நன்கு பயிற்சி பெற்ற சமூகப் பணியாளர்களைப் பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தருவது, 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தேசிய திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி புகட்டுதல், 10 மற்றும் 12ம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத் திட்டங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான திட்டங்கள் போன்றவை இலக்கினை அடைவதற்கான யோசனைகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவை அடைதல்

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு ஆகியவை கல்வி பயில்வதற்கான இன்றியமையாத உடனடித் தேவையாக இருப்பதால் அவற்றை முன் தகுதியாக அங்கீகரிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால், தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு இயக்கம் ஒன்றைத் தொடங்க தேசியக் கல்விக் கொள்கை 2020ல் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சீர்திருத்தங்கள்

பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில், கற்போரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை அவர்களிடம் ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டத்தைக் குறைப்பதுடன், சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்குப் பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும். பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட மாட்டார்கள். பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டவற்றையும் கற்பதற்கும் வழிவகை செய்யப்படும். தொழிற்கல்வி மற்றும் வழக்கமான கல்வி முறைக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. பள்ளிக்கூடங்களிலேயே 6ம் நிலை முதற்கொண்டே தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படும். உள்ளுறை பயிற்சிமுறையைக் கொண்டதாகவும் பள்ளி இருக்கும்.

பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல்

குறைந்தபட்சம் 5ம் வகுப்பு வரையிலும், 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும், தாய்மொழி/உள்ளூர் மொழி/பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது. இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும்.

சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி

புதிய கல்விக் கொள்கை 2020, எந்தக் குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ, எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாலினம், சமூக-கலாசாரம், புவியியல் அடையாளங்கள், உடல் குறைபாடுகள் உள்பட சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழுக்களுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். பின்தங்கிய பகுதிகள் மற்றும் குழுக்களுக்காக பாலின உள்ளடக்க நிதி, சிறப்புக் கல்வி மண்டலங்கள் அமைப்பதும் இதில் அடங்கும். உடல் குறைபாடு உள்ள குழந்தைகள், வழக்கமான பள்ளிப்படிப்பை அடிப்படையிலிருந்து உயர் கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும்.

இறுதியாக

நீட் போன்று நாடு முழுவதுக்குமான தேர்வு நடக்கும் போது, நாடு முழுவதும் ஒரே மாதிரி கல்வி முறை இருந்தால்தானே, எல்லா மாநில மக்களும் பங்கெடுக்க முடியும் என்கிற மாதிரியான விமர்சனங்களைத் தகர்த்து, இந்திய மாணவர்களின் அறிவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கல்விக் கொள்கையாகப் பார்க்கப்படுகிறது இந்த புதிய கல்விக் கொள்கை. அனுபவம் வாய்ந்த இஸ்ரோ விஞ்ஞானி தலைமையில் உருவான கொள்கை என்பதால், உலக ரீதியிலான அறிவுசார் தரத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு, இக்கல்விக் கொள்கையின் மூலம் கற்றல் தரம் மேம்படுத்தப்படும் என்பதே நிதர்சனம்.

Leave a Reply