வழக்கம் போல, இந்த மோதி தலைமையிலான மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கவேண்டும் என்கிற அடிப்படையில் விவசாய மசோதாக்களும் எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த எதிர்ப்புகள் எதையும் கண்டுகொள்ளாத மோதி அரசும் வழக்கம் போலவே இரண்டு அவைகளிலும் இவற்றை நிறைவேற்றிச் சட்டமாகக் கொண்டு வந்துவிட்டது. எப்போதும் கேட்கப்படும் கேள்விகளே இம்முறையும் எழுப்பப்படுகின்றன. ஏன் விவசாயிகளைக் கேட்கவில்லை என்பதுதான் அதில் முக்கியமானது. ஒரு காங்கிரஸ் ஆதரவாளர், இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற அளவுக்கு ஆவேசப்பட்டார்.
இந்தியா முழுக்க உள்ள விவசாயிகளில் பலருக்கும் இந்த மசோதாக்களால் என்ன நன்மை என்று எப்படி முழுக்கத் தெரியாதோ அதே போல என்ன தீமை என்றும் முழுக்கத் தெரியாது. இப்படியான விவசாயிகள் அரசு நமக்கு நிச்சயம் துரோகம் செய்யாது என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் விவசாயிகள் என்கிற பெயரில் கொழுத்துக்கொண்டு லாபம் பார்க்கும் இடைத்தரகர்களும் அரசியல்வாதிகளும் தேவையற்ற பயத்தையும் பீதியையும் விவசாயிகளிடையே பரப்பி வருகிறார்கள்.
மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல் மசோதா, Farmer’s Produce Trade and Commerce (Promotion and fecilitation) Bill 2020. இரண்டாவது மசோதா, The Farmer (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services Bill, 2020. மூன்றாவது, The Essential Commodities (Amendment) Bill, 2020. இந்த மூன்றையும் முழுக்க எத்தனை அரசியல்வாதிகள் படித்திருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. பத்திரிகைகளில் வரும் ஒரு வரிச் செய்தியைப் பிடித்துக்கொண்டு பீதியைப் பரப்புவதே இவர்களது வேலை.
முதல் மசோதா, விவசாயிகள் மண்டிகள் மூலமே மட்டுமே விற்கமுடியும் என்ற நிலையை மாற்றி, எங்குவேண்டுமானால் விற்றுக் கொள்ளலாம் என்கிற சுதந்திரத்தை விவசாயிகளுக்குத் தருகிறது. அதாவது Agricultural Produce Marketing Committee (APMC) க்கு வெளியேயும் விவசாயிகள் விற்றுக் கொள்ளலாம். மண்டிகள் என்பது விவசாயிகளின் விளைபொருள்களை வாங்கி விற்கும் ஒரு அமைப்பு என்று புரிந்துகொள்ளலாம். மாநில அரசால் அமைக்கப்பட்ட APMC அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் இன்னொரு அமைப்பு. இந்த விவசாய மசோதாவைத் தொடர்ந்து அனைவரும் வருத்தப்பட்டது மண்டியின் முக்கியத்துவம் போய்விடுமே என்பதற்காகத்தான். மோதி அரசை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே மண்டியை சொர்க்கத்துக்கு நிகராக ஆக்கிவிட்டார்கள். என்னமோ விவசாயிகள் ராஜா போல மண்டிகளுக்குப் போய், விருந்து சாப்பிட்டுவிட்டு, வலது கையில் தங்கள் விளைப் பொருள்களை விற்றுவிட்டு, இடது கையில் பணம் வாங்கி வந்ததாக நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள். APMC என்பது விவசாயிகளுக்கானது என்பது ஏட்டளவில் மட்டுமே. இங்கே கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளுமே. உழவர் சந்தை என்று ஒரு திட்டம் தமிழ்நாட்டில் வந்தது. முதலில் அது விவசாயிகள் நேரடியாக விற்கும் இடம் என்று சொல்லப்பட்டாலும், அது தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே விவசாயிகள் கையிலிருந்து விற்பனையாளர்கள் கைக்குப் போய்விட்டது. APMCஐயும் அப்படிப் புரிந்துகொள்ளலாம். உழவர் சந்தை போன்று மண்டி குறைந்த லாபம் கொழிக்கும் இடமல்ல. பெரும் லாபம் கொழிக்கும் இடம். அதுவும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து லாபம் கொழிக்கும் இடம். மண்டியின் நோக்கம் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பு அளிப்பது என்பதுதான். ஆனால் யதார்த்ததில் அது அப்படி இல்லை. இன்று இந்த மசோதோ, இனி விவசாயிகள் விருப்பப்பட்டால் APMCஐ விட்டு விலகி தாங்களாகவே வெளியில் விற்றுக் கொள்ளலாம் என்று வழி செய்திருக்கிறது. ஏன் கூச்சல் என்று இப்போது புரிந்திருக்கும்.
இந்த மசோதாவில் தரப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான வாய்ப்பு, மாநிலங்களுக்கு உள்ளாகவும், மாநிலத்துக்கு வெளியே இன்னொரு மாநிலத்துக்கும் விவசாயிகள் விற்றுக் கொள்ளலாம் என்பதுதான். ஒரு மாநிலத்தின் எல்லையில் இருக்கும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு போய் விற்றுக் கொள்ளலாம். எல்லை தாண்டிக் கொண்டு விளைபொருள்களைக் செல்லக்கூடாது என்று இனி யாரும் கட்டுப்படுத்தமுடியாது. சில விவசாயிகள் இணைந்து, சரியான வாய்ப்பு கிடைக்குமானால், தங்கள் விளைபொருள்களை இந்தியா முழுமைக்கும் கூடச் சந்தைப்படுத்தமுடியும். இதனால் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி ஏற்படும். கூடுதலாக, ஆன்லைன் மூலமும் விளைபொருள்களை விற்கமுடியும்.
காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியாகவே APMCஐயை முற்றிலுமாக ஒழிப்போம் என்று கூறி இருந்தது. ஆனால் அதை மறந்துவிட்டு, இன்று மோதி அரசு அதே நடவடிக்கையை எடுக்கும்போது, இந்த மசோதாக்களை எதிர்க்கிறது. குறைந்த பட்ச ஆதார விலை குறித்துக் கேள்விகளை எழுப்புகிறார்கள் இவர்கள். மண்டி முறையின்போதும் குறைந்தபட்ச ஆதாரவிலை அப்படியே நியாயமாகத் தரப்பட்டது என்று இவர்களால் சொல்ல முடியுமா? முடியாது. இத்தனைக்கும் மோதி மிகத் தெளிவாக குறைந்த பட்ச ஆதாரவிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெளிவுபடுத்திவிட்டார். இந்த மசோதாக்களின் மூலம் விவசாயிகளுக்கு நிச்சயம் வருமானம் கூடுதலாக இருக்கும் என்பதால், இந்தக் குறைந்த பட்ச ஆதார விலையைப் பற்றி அதிகம் யோசித்திருக்கவில்லை போல. மசோதாவைத் தொடர்ந்து எழுந்த விவாதத்தை அடுத்து அதுவும் மிகத் தெளிவாகவே இந்த அரசால் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.
விவசாயிகள் தாங்கள் விற்கும் பொருளுக்கான பணம் மூன்றே நாளில் தரப்படும் என்பது முக்கியமான ஒன்று. மூன்று நாளா என்று எதிர்க்கட்சிகள் விவாதிக்கின்றன. இத்தனை நாள் விவசாயிகளுக்கு எத்தனை நாளில் பணம் கிடைத்தது என்பதே இவர்களுக்குத் தெரியாது. மூன்றே நாளில் பணம் தரப்படும் என்பது மிகப்பெரிய முன்னேற்றம். அதைக்கூட இவர்களால் புரிந்துகொள்ளவில்லை. ஒருவேளை அப்படிப் பணம் தரப்படாவிட்டால் என்று அடுத்த கேள்வி. மண்டி அமைப்பில் பணம் தராவிட்டால் என்ன செய்தார்களோ அதையே இப்போதும் செய்வார்கள். அதைவிட இன்னும் வெளிப்படையாக. அதற்கான வழிமுறைகளும் அமைப்புகளும் அறிவிக்கப்படும். ஆனால் இது எதையுமே புரிந்துகொள்ளும் மனநிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை.
எதிர்க்கட்சிகள் வைக்கும் இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு, இப்படி விவசாயிகள் தங்கள் இஷ்டப்படி வேறு மாநிலங்களில் விற்க ஆரம்பித்தால், மாநிலத்துக்கான வருவாய் குறைந்துவிடும். ஏன் குறையவேண்டும்? கூடும் என்று ஏன் எந்த மாநிலமும் யோசிக்கவில்லை? தங்கள் மாநிலத்தில் விவசாயிகள் விற்பதற்கும், அவர்கள் விற்ற பொருளுக்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் எளிமையான வசதிகள் இருந்தால், ஒட்டுமொத்த விவசாயிகளும் அந்த மாநிலத்தை நோக்கிப் படையெடுக்க மாட்டார்களா? ஏன் இதை ஆகச் சிறந்த வாய்ப்பாக எந்த மாநிலமும் பார்க்கவில்லை? ஏனென்றால் இவர்களுக்குத் தங்கள் அரசின் மேலேயே நம்பிக்கை இல்லை. ஆனால் ஆளும் மத்திய பாஜக அரசுக்கு தங்கள் மேல் நம்பிக்கை உள்ளது. எனவேதான் தொடர்ந்து மிக முக்கியமான அரசியல் மாற்றங்களை உறுதியுடன் செய்து வருகிறது.
எதிர்க்கட்சிகளும் அடுத்த வருத்தம், மண்டிகளில் இருக்கும் கமிஷன் ஏஜெண்ட்டுகளின் நிலை என்ன என்பது. ஆனால் இவர்களை கமிஷன் ஏஜெண்ட்டுகள் என்று சொல்லாமல், விவசாயிகள் என்று சொல்கிறார்கள். உண்மையில் பெரும்பாலான கமிஷன் ஏஜெண்ட்டுகள் அரசியல்வாதிகளே. விவசாயிகள் அல்ல. ஏஜெண்ட்டுகள் கையில் சிக்கிச் சீரழியும் வணிகத்தை மீட்டு விவசாயிகளிடத்தில் சேர்ப்பதுதான் இந்த மசோதாவின் நோக்கமே.
விவசாயிகளின் பெரிய பிரச்சினை விளைபொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதுதான். இந்த கமிஷன் ஏஜெண்ட்டுகள் அதை திறம்படச் செய்துவிடுவார்கள். ஆனால் விவசாயிகளுக்குப் போதிய பணத்தைத் தரமாட்டார்கள். இன்று மிகப்பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளே வரும்போது, விளைபொருள்களைப் பாதுகாக்கும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு உடனே கிடைக்கும். விளைபொருள்கள் விற்பனையாகாமல் விவசாயிகள் நடுத் தெருவில் தங்கள் விளைபொருள்களைக் கொட்டி வீணாக்கும் காட்சிகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். தங்கள் விளைபொருள் எங்கேயும் விற்பனையாகாமல், பணமும் கைக்கு வராமல் தவிக்கும் நிலையில் இருந்து, இந்த நிறுவனங்கள் காப்பாற்றும்.
இரண்டாம் மசோதா, விவசாயிகள் பெரு நிறுவனங்களுடன் விளைவிக்கப் போகும் விளைபொருளுக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயித்து ஒப்பந்தம் செய்துகொள்ள வழிவகுக்கிறது. இதனால் ஏற்படப்போகும் விளைவை அந்த அந்த விவசாயிதான் யோசித்து முடிவு செய்யவேண்டும். இது இன்னும் ஒரு வழி மட்டுமே. தங்கள் விளை நிலத்தில் எது விளையும், அதன் விலை என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதைப் பெரு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்வது என்பது, கூடுதலாக ஒரு வணிக வழி. இதைச் சரியாகப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நிச்சயம் பெரிய பலன் இருக்கும். இன்னொரு வகையில், எதிர்பாரா லாபம் வந்தால் அது விவசாயிகளுக்குக் கிடைக்காது என்பதைப் போலவே, எதிர்பாரா விலை வீழ்ச்சி வந்தாலும் அது விவசாயியைப் பாதிக்காது. ஒரு கட்டத்தில் சில நிறுவனங்கள் தங்கள் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகளையும், அவர்கள் விவசாயம் தேவையான பிற உதவிகளையும் செய்ய முன்வரும். இது எத்தனை பெரிய வரவு!
எதிர்க்கட்சிகளின் பிரச்சினை, இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களை வரவிட்டால் என்னாவது என்பது. கார்ப்பரேட் நிறுவனங்களை வரவிடுவதில் எந்தத் தவறும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு எப்படி லாபம் பார்ப்பது என்பதற்கான திட்டமிடல்தான் தேவையே ஒழிய, கார்ப்பரேட் என்கிற வார்த்தையைக் கேட்ட உடனேயே பதற வேண்டிய அவசியமில்லை. கார்ப்பரேட்டுகள் உங்களை அவர்களுடம் இணைந்து வியாபாரம் செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. உங்களால் முடிந்தால், உங்களுக்கு ஒத்து வந்தால் வியாபாரம் செய்யலாம். அல்லது உங்களது வழக்கமான முறைகளிலேயே எப்போதும் போல் விற்கலாம். அல்லது இரண்டு வழிகளிலும் விற்கலாம். எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஒரே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மோனோபோலியாக இருந்தால் மட்டுமே பிரச்சினை. நிச்சயம் அப்படி நிகழப் போவதில்லை. பெரு கார்ப்பரேட் மற்றும் மத்தியத்தர கார்ப்பரேட் நிறுவனங்கள் பல விவசாயத்துக்குள் நுழையுமானால் அது விவசாயத்தின் பொற்காலமாகவே அமையும். இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு இந்தப் பரவல் மிக அவசியம். இல்லையென்றால் ஓரிடத்தில் உருளைக் கிழங்கு அதீத விளைச்சல் கண்டு தெருவில் கொட்டப்படும். இன்னொரு இடத்தில் உருளைக்கிழங்கு தட்டுப்பாடாக இருக்கும். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்த நினைக்கும் அரசியல் ஏஜெண்ட்டுகளைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த மசோதாவின் வேலை.
மூன்றாவது மசோதா, உருளைக் கிழங்கு, எண்ணெய் வித்துகள், பருப்புகள், வெங்காயம் போன்றவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறது. பஞ்சம், எதிர்பாராத இயற்கைப் பேரழிவு வந்தால் மட்டுமே இவற்றின் விற்பனையில் மத்திய அரசு தலையிடும். சாதாரண காலங்களில் இந்தப் பொருள்களைக் குறைந்த அளவாவது இருப்பு வைத்திருக்கவேண்டும் என்பது இனி பொருந்தாது. எனவே இந்தப் பொருள்களை இனி பதுக்கி வைக்க தோன்றாது. தொடர்ச்சியாக அதை சந்தைக்குக் கொண்டு போய் விற்பனை செய்தே ஆகவேண்டும்.
விவசாய விறபனையில் ஈடுபட விரும்பும் தனியார் அமைப்புகளுக்கு அதிக கெடுபிடி இருக்காது என்றும் இந்த மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அதிக தனியார் அமைப்புகள் விவசாயப் பொருள்கள் விற்பனையில் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அப்போதுதான் விவசாயப் பொருள்களை பாதுகாப்பதற்கான பெரிய குடவுன்கள் செய்யும் வசதி, மார்க்கெடிங் செலவுக் குறைப்பு, இந்தியா முழுவதும் விற்பனையைப் பரவலாக்கத் தேவையான விற்பனைச் சங்கிலியை உருவாக்குவது எல்லாம் சாத்தியம். இதனால் விவசாயப் பொருள்களுக்கான தேவை கூடுவதோடு, விவசாயிகளுக்கு வருமானமும் கூடும். மிக முக்கியமான பயன், எங்கே விவசாயம் அதிகம் வளரவில்லையோ, அல்லது வளர சாத்தியமில்லையோ, அங்கே எளிதாக விவசாயப் பொருள்களைக் கொண்டு செல்லமுடியும்.
இதில் தனியார் அமைப்புகளுக்கு எதிராகக் கேட்கப்படும் கேள்வி, இவர்கள் விளைபொருள்களைப் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கினால் விவசாயிகளின் நிலை என்னாவது என்பது. முதலில் இப்படி நிகழாது. அப்படி நிகழ்ந்தால், இது ஒரு தடவை மட்டுமே உற்பத்தி செய்து முடிக்கும் விஷயம் அல்ல. தனியார் அமைப்புகளின் பணமும் இதில் உள்ளது. மேலும் ஒரே ஒரு தனியார் அமைப்பு மட்டுமே இருக்கப் போவதில்லை. எனவே இப்படி தட்டுப்பாடு உருவானால் கூட, அது அடுத்து விவசாயிகள் விளைவிக்கும் அதே பொருளுக்குக் கூடுதல் தேவையைத்தான் கொண்டு வரும். கொரோனா தாக்கிய உடனே முகக் கவசத்துக்கும் சானிட்டைசருக்கும் ஏற்பட்ட ஒரு தேவையைப் போல. எனவே இதனால் பெரிய பாதிப்பு என்று எதுவும் நிகழ்ந்துவிடாது. அதோடு மத்திய அரசும் இது தொடர்பாக எப்போதும் கண்காணிப்பில் இருக்கவேண்டும். இருக்கும் என்று எதிர்பாக்கலாம். ஏனென்றால் வெங்காயத்தால் ஆட்சியை இழந்த வரலாறெல்லாம் நமக்கு உண்டு.
உலகம் முழுமைக்கான வணிகக் காலத்தில் உட்கார்ந்துகொண்டு, இந்தியா முழுமைக்குமான வணிக சாத்தியத்தை உருவாக்கும் திட்டத்தை எதிர்ப்பதில் பயனே இல்லை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மிக முக்கியமான திட்டம் இது. இது சரியாகச் செயல்படுத்தப்படுமானால், 1991ல் எப்படி இந்தியா பொருளாதார தாராளமயமாக்கலில் முக்கியமான அடியை எடுத்து வைத்ததோ, அதற்கு இணையான ஒரு முக்கியமான அடியை இந்தியா எடுத்து வைக்கும். மண்டிகளில் நிகழ்ந்த அதே அரசியல் புள்ளிகளின் ஆட்டத்தை இங்கேயும் நிகழ அரசு விடுமானால், இத்திட்டம் எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்காது. இதைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் கைகளிலும் உள்ளது. அதேபோல் தங்களுக்கு வரவேண்டிய பணம் தாமதமானால் விவசாயிகள் அது குறித்து எழுப்பும் புகார்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் இந்தச் சட்டங்கள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம்.
மற்றபடி, இங்கே எதிர்க்கட்சிகள் என்கிற பெயரில் இருக்கும் காங்கிரஸும் பிறகட்சிகளும் செய்பவை மலிவான அரசியல் மட்டுமே அன்றி, விவாதம் அல்ல. தமிழ்நாட்டைப் பற்றிக் கேட்கவேண்டியதே இல்லை. ஊடகம் முழுக்க பாஜக வெறுப்பு பரவி இருக்கிறது. அவர்களின் ஒரே வேலை, எல்லா விதத்திலும் பாஜகவை எதிர்ப்பது மட்டுமே. பாஜகவின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அகாலி தள இணையமைச்சர் ஹர்சிம்ராத் கௌர் பாதலே ராஜினாமா செய்துவிட்டார் என்று இவர்கள் கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்பதாக நினைத்துக்கொண்டு கேட்கிறார்கள். அவர் செய்ததும் அரசியலே. தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மற்ற அரசியல்வாதிகளின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் இதைச் செய்திருக்கிறார். இதே கௌர் பாதல் மிகத் தெளிவாகச் சொல்கிறார், இந்த ஆறு ஆண்டுக் காலத்தில் மோதி அரசு பஞ்சாப்பின் விவசாயிகளுக்குச் செய்ததைப் போல, அறுபது ஆண்டுகளுக்குமாகச் சேர்த்து காங்கிரஸ் செய்ததில்லை என்று! நம் ஊடகங்கள் இதைக் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. விவசாயிகளிடம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற அளவுக்குத்தான் இவர்களது அறிவு வேலை செய்கிறது.
பாஜக அரசு தான் நம்புவதை, எது மக்களுக்கு நல்லது என்று நினைக்கிறதோ அதைச் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. பதவிக்கு வந்தோம், காலத்தை ஓட்டினோம் என்று செயல்படும் கட்சி அல்ல பாஜக. மோதியும் அப்படிப்பட்டவர் அல்ல. தங்கள் கொள்கைகளைச் சட்டமாக்குவதே ஒரு அரசின் வேலை. அதைச் சொல்லித்தான் மக்களிடம் வாக்கு கேட்டு வென்றிருக்கிறது இந்த அரசு. மோதி அரசு இதையெல்லாம் செய்யாவிட்டால்தான் ஆச்சரியம். மிகத் துணிவுடன், இந்தியாவைப் பீடித்திருந்த பல்லாண்டுப் பிரச்சினைகளையெல்லாம் ஒவ்வொன்றாகத் தீர்த்துக் கொண்டிருக்கும் மோதியின் இந்த மத்திய அரசை எத்தனை பாராட்டினாலும் தகும்.