Posted on Leave a comment

பாரதியாரின் கண்ணன் பாட்டு: ஒரு முழுமைப் பார்வை | ஜடாயு

“ஒரு வார்த்தை மட்டும் கூறுகின்றேன். இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன்”.

– பரலி சு. நெல்லையப்ப பிள்ளை (கண்ணன் பாட்டு முதற்பதிப்பின் முகவுரை, 1917)

பாரதியாரின் கவிதைகளில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய ‘முப்பெரும் பாடல்கள்’உண்மையான கவித்துவம் மிளிரும் படைப்புகள் என்பது பாரதியை ஆழ்ந்து பயின்ற இலக்கிய வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. இவையனைத்தும் பாரதியாரின் புதுவை வாசத்தின் போது இயற்றப் பெற்றவை.

புதுச்சேரிக்கு வந்த இரண்டாண்டுகளில் பாரதியின் பத்திரிகை முயற்சிகளெல்லாம் நின்று போயின. 1910க்குப் பிறகு பத்திரிகை விவகாரங்களை மறந்து, புத்தகமாக வெளியாகக் கூடிய விஷயங்களை எழுதவேண்டும் என்று அவர் முனைந்து ஈடுபட்டார். இதன் விளைவாகத்தான், 1912ம் ஆண்டில், மேற்கூறிய முப்பெரும் பாடல்கள் உருப்பெற்றன. ஆயினும் பல்வேறு காரணங்களால், இவை புத்தகமாக வெளிவருவதற்கு மேலும் சில ஆண்டுகள் பிடித்தன. இவற்றின் நடையும் தொனியும் பொருளாழமும் இதற்கு முந்தைய காலகட்டத்தில் பாரதி உணர்ச்சிப் பிழம்பாக எழுதிய தேசபக்தி, தெய்வபக்திப் பாடல்களின்றும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன என்பதும் பாரதி ஆய்வாளர்களால் பேசப்பட்டுள்ளது. இதில், கண்ணன் பாட்டு பாரதியின் தனித்துவமிக்க கவிதா முத்திரை சுடர்விடும் அற்புதமான படைப்பு.

கண்ணன் பாட்டுக்குத் தூண்டுகோலாக அமைந்தது எது? இதனை வ.வே.சு. ஐயர் விளக்கிறார்:

“தன்னை நெடுநாள்களாக மறந்திருந்த பாரதநாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, கீதாசாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஓட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது. பத்து வருஷங்களுக்கு முன்பு அவர் பதிப்பித்த ஜன்மபூமியிலேயே ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் என்று இரண்டு செய்யுட்கள் காணப்படுகின்றன. ஆனால் பிற்பட்டுத்தான் கண்ணனுடைய செயல்களும் திருவிளையாடல்களும் அவர் மனத்தைப் பூரணமாக ஆகருஷித்தன. இவ் ஆகருஷணத்திற்கு நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பாசுரங்களின் அனுஸந்தானம் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இக்கண்ணன் பாட்டானது *பா*வ விஷயத்தில் அப்பாசுரங்களின் வழியையே தழுவியிருக்கிறது.” (கண்ணன் பாட்டு இரண்டாம் பதிப்பின் முன்னுரை, 1919).

பாரதியாரின் தொடக்ககாலத்திய மரபான தமிழ்க் கல்வியின் போதும், அதற்குப் பின்னரும், சைவ இலக்கியங்கள், கம்பராமாயணம் போன்றவற்றில் உள்ளது போல, ஆழ்வார்களின் பாசுரங்களைப் பற்றிய பரிச்சயம் அவருக்கு இருக்கவில்லை. புதுவை வாசத்தின் போதே திருவாய்மொழியிலும், ஆண்டாள் பாசுரங்களிலும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. அத்துடன் ஸ்ரீ அரவிந்தர் தொடர்பால் உண்டான வேதாந்த, யோகமார்க்க விசாரமும், தத்துவத் தேடல்களும் இணைந்துகொள்ள, அந்தத் தருணத்தில் கண்ணன் பாட்டு வெளிப்பட்டிருக்கிறது. ஆழ்வார்களின் மொழியும், உணர்வு நிலைகளும் இதன்மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்பதை இதனைக் கற்பவர்கள் உணர முடியும்.

கண்ணன் என் தோழன், என் தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, விளையாட்டுப் பிள்ளை, காந்தன், ஆண்டான் என்ற தலைப்புகளில் தலா ஒரு பாடல்.

கண்ணன் என் காதலன் – ஐந்து பாடல்கள்.

கண்ணம்மா என் காதலி – ஆறு பாடல்கள்.

கண்ணம்மா என் குழந்தை, என் குலதெய்வம் என்று இரண்டு பாடல்கள்.

ஆக, மொத்தம் இருபத்து மூன்று பாடல்கள்.

இந்துமத பக்தி மரபில் இஷ்டதெய்வத்தைப் பல *பா*வங்களில் வழிபடுவது என்பது நெடுங்காலமாக வரும் விஷயம். தன்னைத் தொண்டனாகப் பாவிக்கும் தாஸ்ய பக்தி, நண்பனாக பாவிக்கும் ஸக்ய பக்தி, நாயகி *பா*வம் அல்லது மதுர*பா*வம் இவை பக்தி இலக்கியங்களில் காணப்படுகின்றன. பெரியாழ்வார் யசோதையின் நிலையிலேயே கண்ணனை முழுதுமாக அனுபவித்திருக்கிறார். சுந்தர் தம்பிரான் தோழர் என்ற உரிமையோடு சிவபெருமானிடத்தில் பேசுகிறார். திருநாவுக்கரசர் தொண்டனேன் என்ற நிலையிலேயே தொழுகிறார். ஆண்டாள் கண்ணனை நாயகனாகவே காண்கிறாள். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரும் தம்மை நாயகியாகக் கருதிப் பாடிய பாசுரங்கள் மிகப்பல. பொதுவாக, இப்படி ஏதேனும் ஒரு உணர்வு நிலையில் முழுமையாக ஆழ்ந்து லயித்து மூழ்குவதையே நாம் பெரும்பாலான பக்த கவிகளிடத்தில் காண்கிறோம்.

ஆனால், பாரதியாரோ கண்ணன் விஷயத்தில் இத்தகைய மரபார்ந்த பக்தி பாவனைகள் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். சேவகன், சீடன் என்று மரபில் காணாதவற்றையும் சேர்த்திருக்கிறார். பொதுவாக, சைவ, வைணவ மரபுகளின் அனைத்து அடியார்களும் தெய்வத்தை நாயகன் என்றும் தங்களை நாயகி என்றும் கருதியே பாடியுள்ள நிலையில், பாரதியாரோ கண்ணன் என்று ஆண்தன்மையுடனும், கண்ணம்மா என்று பெண்தன்மையுடனும் இரண்டு விதமாகவும் பாடியுள்ளார். இதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும்? புதுமை, மெலிதான மரபுமீறல் என்பதைத் தாண்டி இதன்பின் ஆழ்ந்த தத்துவக் கண்ணோட்டமும் உள்ளது என்று கருத இடமிருக்கிறது. அதனை இக்கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம். இந்த ஒவ்வொரு பாவனைகளிலும் பாரதியின் தோய்தல் ஆழமாகவும், உணர்வு பூர்வமாகவும் ரசிக்கும்படியாகவும் விதவிதமாகவும் இருக்கிறது.

தோழன்:

உற்ற தோழன் என்றால் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறான் கண்ணன்.

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்

குலுங்கிடச் செய்திடுவான் – மனஸ்

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி்

தளர்த்திடச் செய்திடுவான் – பெரும்

ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று

அதனை விலக்கிடுவான் – சுடர்த்

தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்

தீமைகள் கொன்றிடுவான்.

கண்ணன் விஷயத்தில் இதெல்லாம் எப்படிப் பொருந்துகின்றது என்பதை மகாபாரதம் நெடுகிலும் காண முடியும். போர்க்களத்தில் காண்டீபத்தைக் கீழே போட்டு சோர்ந்து நிற்கும் அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் மலர்ந்த புன்னகையுடன் (ப்ரஹஸன்னிவ) பேசத் தொடங்கினான் என்கிறது கீதை. கண்ணன் விசுவரூப தரிசனத்தைக் காட்டுகையில், “தீபத்தில் விட்டில் பூச்சிகள் விழுவது போல கௌரவ சேனை முழுதும் உனது வாய்க்குள் சென்று வீழ்வதைக் காண்கிறேன்” என்கிறான் அர்ஜுனன். கீதையில் ஆழ்ந்து தோய்ந்திருந்த பாரதியிடம் தன்னிச்சையாகவே இச்சொற்கள் இவ்வாறு வெளிப்பட்டிருக்கின்றன.

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்

புறங்கொண்டு போவதற்கே – இங்கு

என்ன வழி என்று கேட்கில் உபாயம்

இருகணத்தேயுரைப்பான்.

அவனது தங்கை சுபத்திரையைக் கடத்திச் செல்வதற்கும் கண்ணனே எனக்கு வழி சொல்லுகிறான் என்று இங்கு அர்ஜுனனாகவே ஆகிவிடுகிறார் பாரதி. “கீதை உரைத்தெனை இன்புறச் செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன்” என்கிறார்.

தாய்:

தாயாகி வரும் கண்ணனைப் பாடுகையில் முற்றிலும் வேறு தளத்திற்குச் சென்று விடுகிறார் பாரதி. “உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்” ஊட்டி வளர்ப்பவள் அந்தத் தாய். தூங்க வைப்பதற்காக எல்லாத் தாய்மார்களும் சொல்லும் சுகமான கதைகளை மட்டுமா அவள் சொல்கிறாள்?

கண்ணனெனும் பெயருடையாள் – என்னைக்

கட்டி, நிறை வான் எனும் தன் கையிலணைத்து,

மண்ணெனும் தன் மடியில் வைத்தே – பல

மாயமுறும் கதைசொல்லி மனங்களிப்பாள்.

 

இன்பமெனச் சிலகதைகள் – எனக்கு

ஏற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள்

துன்பமெனச் சிலகதைகள் – கெட்ட

தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சிலகதைகள்

என் பருவம் என்றன் விருப்பம் – எனும்

இவற்றினுக் கிணங்க என் உளமறிந்தே

அன்பொடவள் சொல்லிவருவாள் – அதில்

அற்புதமுண்டாய்ப் பரவசமடைவேன்.

 

உயிர்களைப் பெற்று, அந்த உயிர்களுக்காக சிருஷ்டியின் அற்புதங்களை எல்லாம் படைப்பவளாக, அவற்றோடு இன்பம் – துன்பம், மகிழ்ச்சி – கவலை என உலகின் இருமைகளனைத்தையும் அடக்கிய பேரியற்கையாக, மூல பிரகிருதியாக கண்ணன் என்னும் தாயைப் பாரதி காட்டுகிறார்.

தந்தை:

தந்தை என்றாலே குலத்தையும், பெயரையும், நன்னடத்தைகளையும் அளிப்பவர் என்பதே உலக வாழ்வின் நடைமுறை. கண்ணன் என் தந்தை என்று பெருமையோடு கூறும் பாரதி, அவரது இந்த அடையாளங்களைப் பற்றிக் கூறுவது மெய்சிலிர்ப்பூட்டுவது.

யாவருந் தெரிந்திடவே – எங்கள்

ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;

மூவகைப் பெயர்புனைந்தே – அவன்

முகமறியாதவர் சண்டைகள் செய்வார்.

தேவர் குலத்தவன் என்றே – அவன்

செய்தி தெரியாதவர் சிலருரைப்பார்.

பிரபஞ்சத்தின் அனைத்துப் பெயர்களுக்கும் உருவங்களுக்கும் (நாமரூபங்கள்) இருப்பைத் தரும் கண்ணனுக்கு பெயர்கள் ஒன்றிரண்டு மட்டுமா இருக்கும்? ஓராயிரமன்றோ இருக்கும்? அவன் பெயர்களை வைத்துச் சண்டை செய்பவர்கள் அவனது முகத்தையே பாராதவர்கள். பார்த்தவர்கள் “ஈசாவாஸ்யம் இதம் சர்வம்”, இவையனைத்தும் அவன் பெயரன்றி வேறென்ன? என்று அமைதியுற்று இருப்பார்கள்.

அவனை ஏதோ ஒரு குலத்தைச் சார்ந்தவன் என்று சொந்தம் கொண்டாடுபவர்களும் அறியாதவர்கள். குலங்களெனும் வாய்க்கால்கள் அனைத்தும் சென்று சங்கமிப்பும் பேராறு அவன்.

பிறந்தது மறக்குலத்தில் – அவன்

பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;

சிறந்தது பார்ப்பனருள்ளே- சில

செட்டிமக்களோடு மிகப் பழக்கமுண்டு.

உலகோரே, உங்கள் வேடிக்கை உலகின் நிறப்பிரிவினைகளையும், பொய்ச்சாத்திரங்களையும் கண்டு நகைக்கிறான் என் தந்தை கண்ணன்.

நிறந்தனிற் கருமைகொண்டான் – அவன்

நேயமுறக் களிப்பது பொன்னிறப்பெண்கள்

துறந்த நடைகளுடையான் – உங்கள்

சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.

சரி, அப்படியென்றால், ‘நான்கு வர்ணங்கள் படைத்தோன் நானே’ என்று கீதையில் அவன் கூறியதற்கு என்னதான் பொருள்?

நாலு குலங்கள் அமைத்தான் – அதை

நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்.

சீலம், அறிவு, கருமம் – இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்.

மேலவர் கீழவரென்றே – வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்

போலிச் சுவடியையெல்லாம் – இன்று

பொசுக்கிவிட்டா லெவர்க்கும் நன்மையுண்டென்பான்.

தனது சொந்த வாழ்வில் சாதிய வேறுபாடுகளை உதறித் தள்ளி அனைத்து தரப்பினருடனும் சரிசமமாகப் பழகி வந்தவன் பாரதி. இதற்கான நியாயம் தனது தந்தையான கண்ணனிடமிருந்தே கிடைத்தது என்று இங்கு பிரகடனம் செய்கிறார்.

சேவகன்:

“எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்” என்ற பரவசமூட்டும் வரி 1960களின் ‘படிக்காத மேதை’ திரைப்படம் வழியாக தமிழ்நாட்டில் வெகுஜன அளவில் சென்றடைந்த ஒன்று. தெய்வத்திற்கு சேவகம் செய்வதே மனிதப்பிறவியின் பேறு என்ற சம்பிரதாயமான கருத்தைத் தலைகீழாக மாற்றி, ‘சேவகரால் பட்ட சிரமமிக உண்டு, கண்டீர்; சேவகரில்லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை” என்று நொந்து போய் உட்கார்ந்திருக்கும் கவிஞரைத் தேடி, கண்ணனே சேவகனாக வருகிறான் என்ற கற்பனை அலாதியானது. பாண்டுரங்க பக்தர்களின் சரிதங்களில், ஏகநாதரின் வீட்டில் அவரது பாடல்களைக் கேட்க விரும்பி பகவானே வேலைக்காரன் உருவில் வந்தான் என்பது போன்ற கதைகள் உண்டு. ஆனால் இந்தப் பாடலில், அப்படி தீவிர பக்தி உணர்வோ ஈடுபாடோ எதுவும் இல்லாத ஒரு சராசரி மானிடரிடத்திலும் கண்ணன் இறங்கி வருவதாக சித்தரித்திருப்பது அவனுடைய அளவற்ற கருணையை இன்னும் பல படிகள் மேலே உயர்த்துவதாக இருக்கிறது.

கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்,

ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல்

என்று நல்ல சேவகனுக்கு உண்டான பண்புகள் அனைத்தும் தோன்ற நிற்கும் கண்ணனைத் தக்கவன் என்று முடிவு செய்கிறார் கவிஞர்.

“மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;

கூலியென்ன கேட்கின்றாய்? கூறு” கென்றேன். “ஐயனே!

தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;

நானோர் தனியாள்; நரைதிரை தோன்றாவிடினும்

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்

ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள

காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை” யென்றான்.

பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே

கண்டு, மிகவும் களிப்புடனே நானவனை

ஆளாகக் கொண்டுவிட்டேன்..

இப்படி நல்ல ஏமாளி சேவகனாகக் கிடைத்தான் என்று கண்ணனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் கவிஞர், அவனது தொடர்பு நிகழ்த்தும் ரசவாதங்களைப் படிப்படியாக அழகுற விவரிக்கிறார்.

நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்

பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்

பெற்றுவரு நன்மையெலாம் பேசி முடியாது.

“வீதி பெருக்குகிறான், வீடுசுத்த மாக்குகிறான் – தாதியர்செய் குற்றமெலாம் தட்டி யடக்குகிறான்” என்று ஆரம்பித்து, “நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,

பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்” என்று போய், இறுதியில்,

இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்து விட்டேன்!

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்

எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்

செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,

கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்

ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!

என்று முடிக்கிறார் கவிஞர். “என்னையே பற்றுக் கோடாகக் கொண்டு தன் அனைத்து சிந்தனைகளையும் செயல்களையும் எனக்கே அர்ப்பணிப்பவனைக் கர்மங்கள் பற்றுவதில்லை” என்ற கீதையின் உபதேசம் “எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்” என்பதில் எதிரொலிக்கிறது.

கண்ணனைநான் ஆட்கொண்டேன்

கண்கொண்டேன் கண்கொண்டேன்

கண்ணன் எனையாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே

என்று இந்தப் பாடல் முடிவுறுகிறது.

“உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்கிறாள் ஆண்டாள். ஆட்கொள்ளுதல், ஆட்செய்தல், ஆட்படுதல் – இவை தொடர்புடைய மூன்று சொற்கள். ஒன்று நம்மை முழுமையாக ஆட்கொள்வது எப்போது? நாம் முழுமையாக அதற்கு ஆட்செய்யும் போது. அது நிகழ்வதற்கு முன் நாம் தற்செயலாகவோ, அல்லது தன்முனைப்புடனோ அதற்கு ஆட்பட்டிருக்க வேண்டும் (அந்த *ஒன்று* பரம்பொருள், கலை, அறிவுத் தேடல், செயலூக்கம் என எதுவாகவும் இருக்கலாம்). மேற்கண்ட வரிகளில், கண்ணனும் நானும் ஒருவரையொருவர் ஆட்கொண்டோம் என்று பாரதி குறிப்பிடுவது இரண்டறக் கலத்தல் என்னும் அன்னியோன்னிய பாவத்தின் உச்சநிலையை உணர்த்துகிறது.

சீடன்:

கவிஞர் ஒரு கதையைத் தானே கூறும் பாணியில் அமைந்துள்ளது ‘கண்ணன் என் சீடன்’ பாடல். கதை இப்படிப் போகிறது.

மாயக்கண்ணன், என்னைவிட அறிவில் குறைந்தவன் போலவும், என்னுடன் பழகி என்மொழி கேட்டு என்னைத் துணைகொண்டு மேம்பாடடைய விரும்புபவன் போலவும், சீடனாக வந்து என்னிடம் சேர்ந்தான். உள்ளத்தை வெல்லாமல் உலகை வெல்லவும், தனக்குள்ளே தெளிவும் மகிழ்ச்சியும் இல்லாமல் உலக மாந்தரின் துயர் அகற்றி இன்பத்தில் இருத்தும் வழி வகை கூறவும் நான் எண்ணிய பிழைக்குத் தண்டனை தருவதற்குத் திருவுளம் கொண்டு கண்ணன் வலிந்து என்னைச் சார்ந்தான்.

புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,

பலவகையால் அகப் பற்றுறச் செய்தான்;

வெறும் வாய் மெல்லும் கிழவிக்கு அவல் கிடைத்தது போல, நானும் அவனை உயர்நிலைப் படுத்துவதில் ஊக்கம் மிக்கவனாகி,

“இன்னது செய்திடேல், இவரோடு பழகேல்,

இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்,

இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய்,

இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்”

எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,

ஓய்விலாது அவனோடு உயிர்விட லானேன்.

ஆனால், அவனோ “கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம் எதிர்செயும் மனைவிபோல்” எனது அறிவுரைகளுக்கு முற்றிலும் நேர்மாறாகவே நடந்துகொண்டான். வீதியில் பெரியோர், கிழவியர் என எல்லாரும் கிறுக்கன் என்று இவனை இகழ்ச்சியோடு ஏளனம் புரியும் நிலைக்கு வந்துவிட்டான். முக்தனாக நான் ஆக்க விரும்பிய இளைஞன் பித்தனாகி விட்டானே என்று பலவகையிலும் அவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவர முயன்றேன். அதனால் ஒரு பயனும் விளையவில்லை. இதனால் எனது அகந்தையும் மமதையும் புண்பட்ட நான், கடும்கோபம் கொண்டு, எப்படியாவது இவனை ஒரு தொழிலில் ஓரிடத்தில் ஒருவழியில் வலிய நிறுத்தினால் சரியாகி விடுவான் என்று எண்ணம் கொண்டு, ஒருநாள் கண்ணனைத் தனியாக என் வீட்டிற்குக் கூட்டிச்சென்று அன்போடு பேசினேன். மகனே, நல்ல சேர்க்கையால் தான் மானிடர்க்கு நன்மை விளைகிறது. ஆதலால்,

பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்

அறிவுடை மகன் இங்கு உனையலால் அறிந்திலேன்.

ஆதலால்,

என்பயன் கருதி, எனக்கொரு துணையாய்

என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை

வேண்டிநிற் கின்றேன்; வேண்டுதல் மறுத்தே

என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,

இவ்வுரைக் கிணங்குவாய்

என்றேன். கண்ணனும், சரி, அப்படியே ஆகட்டும். ஆனால் ஒருவேலையும் செய்யாமல் உம்கூடவே உட்கார்ந்து என்ன செய்வது? என்றான். அவனது இயல்பையும் திறனையும் கருதி, “என் கவிதைகளையெல்லாம் நல்ல பிரதியில் நாள்தோறும் எழுதிக் கொண்டுவரும் பணியைச்செய்” என்றேன். நல்லது என்று கூறி, ஒரு நாழிகை உட்கார்ந்திருந்தான். பிறகு “செல்வேன்” என்றான். உடனே நான், எனது பழைய கதை ஒன்றைக் கொண்டு வந்து, “கவினுற இதனை எழுதுக” என்றேன். இணங்குபவன் போல இருந்து, பிறகு மீண்டும் “செல்வேன்” என்றான். செய்வாயா மாட்டாயா என்று நான் கடிந்து கேட்கவும், நாளை வந்து செய்கிறேனே என்றான். முடியாது, இப்போதே ஆகவேண்டும் என்று உறுமினேன். கண்ணன் உடனே “இல்லை” என்றான். நான் கண்கள் சிவந்து, உதடுகள் துடிக்க, சீசீ பேயே, என் முகத்திற்கெதிரில் நிற்காதே, போடா போ என்று கோபத்துடன் கூறினேன். கண்ணனும் உடனே எழுந்து செல்லத் தொடங்கினான். அந்தக் கணத்தில், என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அவனை நோக்கி,

“மகனே, போகுதி, வாழ்கநீ, நின்னைத்

தேவர் காத்திடுக! நின்றனைச் செம்மை

செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்.

தோற்றுவிட் டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன்.

மறித்தினி வாராய், செல்லுதி, வாழிநீ!”

எனத் துயர் நீங்கி அமைதியோடு கூறினேன். போகத்தொடங்கிய கண்ணன், உடனே எழுதுகோலுடன் திரும்பி வந்தான். நான் கொடுத்த கதைப் பிரதியை அழகாக எழுதினான்.

“ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்வேன்.

தொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும்

இனிநினக் கென்னால் எய்திடாது”

என்று பல நல்லசொற்கள் உரைத்துச் சிரித்து மறைந்து விட்டான். மறைந்த கண்ணன், மறுகணத்தில் என் நெஞ்சிலே தோன்றிப் பேசினான்.

“மகனே, ஒன்றை ஆக்குதல் மாற்றுதல்

அழித்திடல் எல்லாம் நின்செயலன்று காண்;

தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே

வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெலாம்

ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து

வாழ்க நீ”

என்றான். அவன் புகழ் வாழ்க.

இவ்வாறு முடியும் இந்தப் பாடலின் மேற்கண்ட இறுதி உபதேசம் அபாரமான உணர்வெழுச்சி தருவது. “ஆதலால், எழுக நீ, புகழடைக. பகைவரை வென்று செல்வமிகும் அரசை அனுபவித்திடுக. என்னாலேயே இவர்கள் முன்பு கொல்லப் பட்டனர். இடக்கை வீரா, நீ நிமித்த மாத்திரமாக இருப்பாய்” என்று பகவான் அர்ஜுனனை நோக்கிக் கூறும் கீதை மொழிகளுடன் (11.33) இயைந்ததாக உள்ள வாசகங்கள் இவை.

குழந்தை:

இத்தொகுதியில் கண்ணம்மா என் குழந்தை என்றே பாடல் உள்ளது, குழந்தைக் கண்ணன் என்பதாக அல்ல. இந்தக் கண்ணம்மா வேறு யாருமல்ல, பெண்ணான கண்ணனே தான். இரண்டு பெண்களுக்குத் தகப்பனான பாரதியிடம் குழந்தைப்பாசம் என்றால் மகள் என்ற உணர்வே இயல்பாகக் குடிகொண்டிருந்ததுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

சின்னஞ் சிறுகிளியே – கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

என்னைக் கலிதீர்த்தே – உலகில் ஏற்றம் புரியவந்தாய்.

சற்றுன் முகம் சிவந்தால் – மனது சஞ்சலமாகுதடீ

நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ.

சொல்லும் மழலையிலே – கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்

முல்லைச் சிரிப்பாலே – எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

இந்தப் பாடலில் மனம் பறிகொடுக்காதவர் யாரேனும் உண்டா? குழந்தைகளுக்குப் பாடுகையில், தங்கள் நெஞ்சம் இந்தப் பாடலின் அந்தரங்கமான நேசத்துடன் ஒன்றுபடுவதையும் மனம் நெகிழ்வதையும் பாடுபவர்கள் கட்டாயம் உணர்ந்திருக்க முடியும்.

விளையாட்டுப்பிள்ளை:

தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்

தெருவிலேயே பெண்களுக்கோயாத தொல்லை.

கண்ணனின் பிள்ளை விளையாட்டுக்களை உற்சாகத்துடன் விவரிக்கும் இந்தப் பாடல், இசைப்பாடலாக மிகவும் பிரபலமடைந்த ஒன்று. “கவிதையழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு இந்நூலின் பண்ணழகை மறந்துவிடக் கூடாது. இதிலுள்ள பாட்டுக்களிற் பெரும்பாலவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாயிருக்கின்றன. கடற்கரையில், சாந்திமயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும் மோஹவயப்படுத்தி நீலக்கடலையும் பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தனது கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்” என்று வ.வே.சு ஐயர் தனது முன்னுரையில் குறிப்பிடுவது இந்த வகையான பாடல்களுக்கு மிகவும் பொருந்தும்.

தின்னப் பழங்கொண்டு தருவான் – பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

என்னப்பன் என்னையன் என்றால் – அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.

இது கண்ணனின் குறும்புகளில் ஒன்று. நேரடியான பொருளைத் தாண்டி, கண்ணன் கொண்டுதரும் ‘பழம்’ என்பது வாழ்க்கையின் இன்பங்கள் என்று காணவும் இடமிருக்கிறது. அதை நாம் தின்றுகொண்டிருக்கும் போது தட்டிப் பறிக்கிறான் கண்ணன். ஆனால், ஒரேயடியாக மறைத்துவிடுவதில்லை. எச்சிலாக்கித் திருப்பித் தந்து விடுகிறான். ஒருவேளை, அப்போது அது இன்னும் சுவையாக இருக்கும் என்பதற்காகத் தானோ?

காதலன்:

கண்ணனை எண்ணிப் பிரிவாற்றாமையில் ஏங்கும் நிலையிலேயே இந்த வகைமையில் உள்ள அனைத்துப் பாடல்களும் உள்ளன.

தூண்டிற் புழுவினைப்போல் – வெளியே

சுடர் விளக்கினைப்போல்,

நீண்ட பொழுதாக – எனது

நெஞ்சந் துடித்ததடீ

என்று தோழியிடம் புலம்புகிறாள் பாரதியாம் காதலி.

கண்கள் உறங்கவொரு காரணமுண்டோ,

கண்ணனை இன்றிரவு காண்பதன்முன்னே?

பெண்களெல் லோருமவர் வீடுசென்றிட்டார்;

பிரிய மிகுந்தகண்ணன் காத்திருக்கின்றான்

வெண்கல வாணிகரின் வீதிமுனையில்

வேலிப் புறத்திலெனைக் காணடியென்றான்

என உறக்கமும் விழிப்புமாகச் செல்கிறது அவள் இரவு.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;

எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்

ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் – மிகப்

பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;

பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்

பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.

இப்படித் தோழியைத் தூது விடுக்கிறாள்.

ஆசை முகமறந்து போச்சே – இதை ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில் நினைவு முகமறக்க லாமோ?

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் – இந்தக் கண்களிருந்தும் பயனுண்டோ?

கண்ணன் முகமே எனக்கு மறந்துவிட்டதோ, அதெப்படி என்று கலங்கி பிரமையடைகிறாள்.

இவ்வாறு, காதல் கொண்ட பெண்ணின் ஆதுரத்தின் பல வண்ணங்களை வெளிப்படுத்துவதாக இப்பாடல்கள் உள்ளன.

காதலி:

கண்ணம்மாவை முன்னிட்ட இந்த வகைமையில் உள்ள பாடல்கள் காதலன் என்பதில் உள்ளவற்றைவிட சிருங்கார ரசத்தின் சுவையிலும் கவிதையழகிலும் மேம்பட்டதாக இருக்கின்றன.

சுட்டும்விழிச் சுடர்தான் – கண்ணம்மா!

சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி – கண்ணம்மா!

வானக் கருமைகொல்லோ?

இப்படி, கண்ணம்மாவின் காட்சியை வியக்கிறான் பாரதியாம் காதலன். எங்கும் அவள் முகமே அவனுக்குத் தெரிகிறது.

நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;

சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.

முகத்திரை களைதல், நாணிக்கண்புதைத்தல் என்று அந்தக் காலத்திய காதல் சம்பிரதாயங்களின் படி அமைந்த பாடல்களிலும் பாரதியின் கவித்துவம் சுடர்விடுகிறது.

நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ – மிக

நெடும்பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்…

முன்னை மிகப்பழமை இரணியனாம் – எந்தை

மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ,

பின்னையொர் புத்தனென நான்வளர்ந்திட்டேன் – ஒளிப்

பெண்மை அசோதரையென் றுன்னையெய்தினேன்..

இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம் -இதில்

ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?

காதலன் கொள்ளும் தனிமையின் வெறுமையைக் கூறும் “தீர்த்தக் கரையினிலே” (குறிப்பிடம் தவறியது) என்ற உணர்ச்சிகரமான பாடல் வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் வந்து மிகவும் பிரபலமடைந்த ஒன்று.

மோனத் திருக்குதடீ – இந்த வையகம்

மூழ்கித் துயிலினிலே

நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்

நரகத் துழலுவதோ?

யோகம் என்று பாரதியே உபதலைப்புக் கொடுத்திருக்கும் கீழ்க்கண்ட பாடல், காதலின் அந்தரங்கமான ஆன்மீகத்தை இசைக்கும் அற்புதக் கவிதை. உபநிஷதங்களின் மொழிக்கு ஈடான உன்னதமும் கம்பீரமும் கொண்டு திகழும் பாடல் இது.

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;

தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

 

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;

பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;

ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;

ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

*

இறுதிப் பாடலில் மிளிரும் இந்த உன்னதமே கண்ணன் பாட்டின் தத்துவத்தளம், அதன் ஆன்மீக உச்சம். அன்றாட வாழ்க்கையில் மானுட பந்தங்களாக இருக்கும் தாய், தந்தை, காதலி முதலான *உறவு* நிலைகள், பக்தி என்ற தளத்தில் *உணர்வு* நிலைகளாக ரசவாதம் பெற்று உன்னதமடைதல் என்பதே அதன் உட்பொருள். கண்ணன் என்ற பரிபூரணத்தில் (Absolute) சார்பு நிலைகள் கொண்ட அனைத்து உறவுகளும் (relativistic relationships) சங்கமிக்கின்றன. அதில் கரைந்து சமன்வயமாகின்றன. எஞ்சி நிற்பது கண்ணன் என்ற பரிபூரணம் ஒன்றே. கண்ணன் கடல். இந்த அத்தனை உணர்வு நிலைகளும் அலைகளாக அக்கடலில் தோன்றி அதில் வாழ்ந்து பின்பு அதிலேயே லயமடைகின்றன. அந்த அத்வைத சத்தியமே கண்ணன் பாட்டு ஒட்டுமொத்தமாக அளிக்கும் தரிசனம்.

“அடி மைத்ரேயி, மனைவி கணவனை விரும்புவதனால் கணவன் அன்பிற்குரியவனாவதில்லை. தன்னை (ஆத்மாவை) விரும்புவதாலேயே கணவன் அன்பிற்குரியவனாகிறான். கணவன் மனைவியை விரும்புவதனால் மனைவி அன்புக்குரியவளாவதில்லை. தன்னை விரும்புவதாலேயே மனைவி அன்பிற்குரியவளாகிறாள். மகன்களை விரும்புவதனால் மகன்கள் அன்புக்குரியோர் ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே மகன்கள் அன்பிற்குரியோர் ஆகிறார்கள். செல்வத்தை விரும்புவதனால் செல்வம் அன்புக்குரியது ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே செல்வம் அன்பிற்குரியது ஆகிறது… உலகங்களை விரும்புவதனால் உலகங்கள் அன்புக்குரியவை ஆவதில்லை. தன்னை விரும்புவதாலேயே உலகங்கள் அன்பிற்குரியவை ஆகின்றன..”

இது யாக்ஞவல்கியர் தனது மனைவி மைத்ரேயிக்கு உரைத்த மகத்தான உபதேசம் (பிரகதாரண்யக உபநிஷதம், 2.4). உலகில் நாம் காணும் எல்லா வகை அன்புகளுக்கும் உறவுகளுக்கும் அடிப்படையானது ஒருவர் தனது சுயம் மீது கொள்ளும் அன்பேயாகும். “ஆத்மனஸ்து காமாய” – ஆத்மாவின் மீதான காமம். இந்த சத்திய தரிசனத்தை பல வாக்கியங்களில் மீண்டும் மீண்டும் மைத்ரேயிக்கு விளக்குகிறார் ரிஷி. “மற்ற விஷயங்கள் மீது நாம் கொள்ளும் அன்பு அனைத்தும் அவை சுயத்தின், ஆத்மாவின் இன்பத்திற்குக் காரணமானவை என்ற காரணத்தினால் தான். எனவே ஆத்மா மீது கொள்ளும் அன்பே முதன்மையானது, மற்றவை அனைத்தும் அதன் இரண்டாவது பிரதிபலிப்புகள் மட்டுமே” என்று சங்கரர் இதற்கு உரையெழுதுகிறார்.

இங்கே பாரதி காணும் கண்ணன் ஆத்ம ஸ்வரூபம் அன்றி வேறில்லை. இதற்கான ஒரு குறிப்பையும் ‘கண்ணன் என் சீடன்’ பாடலில் வைத்திருக்கிறார் கவிஞர்.

யானேயாகி என்னலாற் பிறவாய்

யானும் அவையும் இரண்டினும் வேறாய்

யாதோ பொருளாம் மாயக் கண்ணன்

என்று தத்துவார்த்தமாகவே அப்பாடல் தொடங்குகிறது.

இத்திறக்கில் பாரதிக்கு முன்பே சென்ற முன்னோடியான தத்துவதரிசிகள் நமது மரபில் உண்டு.

உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்

உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்

உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்

உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்

உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்

உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?

உற்றீர்கட்கு என்சொல்லிச் சொல்லுகேன்யான்

உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றனவே.

– திருவாய்மொழி (நம்மாழ்வார்)

என்னுடைய இந்தப் பேதைப் பெண், எனக்கு உறவினர் ஒருவருமில்லையென்கிறாள். இவ்வுலகில் எனக்கு யாவரும் உறவினர் என்கிறாள். (சிலரை) எனக்கு உற்றார்களாகும்படி செய்வதும் நானேயென்கிறாள். (அற்ப பலன்களுக்காக) உறவினராகி வருபவர்களை (அந்த அற்ப பலன்களைக் கொடுத்து) அகற்றுவதும் நானேயென்கிறாள். (வேறு இலக்கின்றி என்னையே பயனாக, அனன்ய ப்ரயோஜனமாக) கொண்டவர்களுக்கு எல்லா உறவுமுறையும் நானேயென்கிறாள். இப்படி இவள் சொல்வதானது – (அனைத்து உறவுநிலைகளுக்கும், அதாவது சார்புகளுக்கும் அப்பாற்பட்டவனான) உற்றாரிலியான மாயன் வந்து இவள்மீது ஆவேசித்ததாலோ? உறவினர்களான உங்களுக்கு இதை எப்படிச் சொல்லுவேன்?

கண்ணன் மீது காதல்கொண்ட பேதைப்பெண் எங்கும் கண்ணனையே கண்டு கண்ணனாகவே தன்னையும் கருதிப் பேசுவதையெல்லாம் அவளது தாய் கூறுவதாக, “நற்றாய் புலம்பல்” என்னும் துறையில் அமைந்த பாசுரம் இது. மகத்தான அனுபூதி நிலையில் அப்பெண்ணின் கூற்றுகளை அறிவிக்கும் “கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும், கடல்ஞானம் ஆவேனும் யானே என்னும்” என்று தொடங்கும் பத்தில் இப்பாசுரம் அமைந்துள்ளது. கண்ணன் பாட்டின் ஒட்டுமொத்த தத்துவ சாரமும் இப்பாசுரம் கூறும் பொருளையே சார்ந்தது என்பதை அதனை ஆழமாகக் கற்பவர்கள் உணரமுடியும்.

“கண்ணன் பாட்டு என்பது பாரதியின் வாழ்க்கை தரிசனம். வாழ்க்கை தான் கண்ணன் என்றால், அதில் ஒன்றிப் பயின்று ஓரும் உயிருணர்வு பாரதி. பாரதி தன்னை விஞ்சிப் படைத்த படைப்பு என்று அதைச் சொல்லவேண்டும்” என்று மிகச்சரியாகவே மதிப்பிடுகிறார் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் (பாரதிக் கல்வி, பக். 27).

Leave a Reply