இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வென்றது முற்றிலும் ஹிட்லரின் தலைக்கனம், பிடிவாதம், தற்குறித்தனம் இவற்றால் மட்டுமே; ரஷ்யர்களை விட்டிருந்தால் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு பெரிய எண்ணிக்கையில் செத்திருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் மற்றொரு படம்.
கம்யூனிசம் என்பது யாரையும் சந்தேகப்பட்டு அதனாலேயே கொல்லவும் தயங்காத தத்துவம் என்பதை நிறுவும் சம்பவங்களின் கோர்வைதான் கதை. உயிரைக் கொடுத்து உழைத்தாலும் கட்சித் தலைமைக்குப் பிடிக்காவிட்டால் உயிர் போகும் என்பது மட்டும் அல்ல, குடும்பம் உறவு, நட்பு என்று எல்லாமே பாதிப்புக்கு உள்ளாகும் என்பதைச் சொல்லுகிறது இந்தத் திரைப்படம். யார் போட்டுக் கொடுத்தாலும், விசாரணை இல்லாமலே தண்டனை நிறைவேற்றப்படும் என்பது போன்ற மறைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது.
இரண்டாம் உலகப் போர்க் காலம். ரஷ்ய எல்லையில் செம்படையின் ஒரு பிரிவின் கட்சித் தலைவர் (காமிசார்) படைப்பிரிவின் தலைவரிடம் பேசிகிறார். ஏசுகிறார் என்பதே பொருந்தும். படைப்பிரிவுக்குத் தண்டனை கொடுத்து இரவு முழுதும் குளிரில் அணிவகுத்து நிற்கச் சொல்கிறார். ஆனால் படைப் பிரிவின் ராணுவத் தலைவர் மறுக்கிறார். கீழ்ப்படிதல் இல்லை என்ற குற்றச்சாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு விசாரிக்காமலேயே தண்டிப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘என் வேலை போரிடுவது, விசாரிப்பது இல்லை’ என்கிறார் காமிசார். எல்லையில் மூன்று கிலோமீட்டர் நீளத்தைப் பாதுகாத்தது, இரண்டு முக்கியப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டது தன் படை என்கிறார் கேப்டன். நேற்று பின் வாங்கி வந்தீர்களே, அதற்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கவா என்கிறார் காமிசார். மேலும் சிறு பிள்ளைகளை அனுப்புகிறார்கள் எல்லைக்கு, அந்தப் பிள்ளைகள் இங்கே வந்து கால் சராயை நனைத்துக் கொள்வது தவிர வேறேதும் செய்வதில்லை, அதற்கு என்ன பதில் என்று எகிறுகிறார்.
ஒரு பட்டாலியனை வைத்துக் கொண்டு எல்லை முழுவதையும் பாதுகாக்க முடியாது என்கிறார் கேப்டன். உத்தரவுக்குக் கீழ்ப்படியாத புது வீரர்களைத் தண்டியுங்கள் அல்லது கீழ்ப்படிய வைக்க என்ன செய்வீர்களோ செய்யுங்கள் என்கிறார் காமிசார். இல்லாவிட்டால் விசாரணை அதிகாரி உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்கிறார். காமிசாரை அழைத்துக் கொண்டு வெளியே செல்லும் கேப்டன் அங்கே இருக்கும் சிறு பிரிவின் தலைவனை அழைத்து, நேற்று தாக்குதல் நடத்த வந்த உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கிறார். அவனோ எதிரிப்படையின் பீரங்கித் தாக்குதலை ரஷ்ய பீரங்கிப் படை எதிர்கொண்டு தாக்கும் வரை காத்திருக்கச் சொன்னதாகச் சொல்கிறான். ஆட்கள் இறங்கித் தாக்குவதற்கு முன் பீரங்கிப் படை தாக்குவதும் எதிரிகளின் படை/மனோ பலத்தைக் குறைப்பதும்தான் தாக்குதல் முறை என்கிறான். போர்க்கள நடைமுறைப் புத்தகத்தில் அப்படித்தான் உள்ளது, படித்துப் பாருங்கள் என்கிறான்.
ஆனால் கேப்டன் அவனைச் சுட்டுக் கொல்ல முயல்கிறார். துப்பாக்கியில் குண்டு இல்லை. அந்தப் படைத்தலைவன் மயங்கி விழுகிறான். காமிசார் உடனடியாக படைப் பிரிவிடம் “உத்தரவு என்னவோ அதைச் செய்யவேண்டும். புத்தகம் எல்லாம் வேலைக்கு ஆகாது. உங்கள் தலைவன் தேசத்துரோகம் செய்துவிட்டான். கோழைத்தனமாக களம் புகாமல் இருந்துவிட்டான். அதற்கு அவனை பணி நீக்கம் செய்வோம். அவனும் அவனது குடும்பமும் சாகும் வரை துரோகிகள் என்றும் கோழைகள் என்றுமே அழைக்கப்படுவர். உங்களுக்கு வீட்டில் பெற்றோர், மனைவி, பிள்ளைக்குட்டிகள் இருந்தால் அவர்கள் உங்கள் கோழைத்தனத்தையும் துரோகத்தையும் ஏற்பார்களா என்று யோசித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். இன்னொரு முறை உத்தரவு மீறப்பட்டால் அத்தனை பேரையும் சுட்டே கொல்வேன் என்கிறார் கேப்டன்.
முகாமில் கொட்டகையில் அமர்ந்து ஒரு உதவியாளர் நடந்தது பற்றிக் குறிப்பெழுதுகிறார். அவரையே அந்தப் படைத்தலைவனை ராணுவ கோர்ட்டுக்குக் கொண்டு செல்லச் சொல்கிறார்கள். “இந்தப் பொறுப்பைச் செய்யும் விதத்தில் கட்சியில் உனக்கு எவ்வளவு முக்கியப் பொறுப்புகள் தரலாம், என்ன விதமான பணிக்கு நீ லாயக்கு என்று முடிவு செய்வோம்” என்கிறார் காமிசார். அவனது அறிக்கையைப் படித்துவிட்டு “இப்போது அவனை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்” என்கிறார். கார் தருவீர்களா என்ற கேள்விக்கு “சாதாரண செஃப்டினண்டுக்கு கார் கிடையாது. பெரிய கமாண்டிங் ஆபீசரை அழைத்துச் செல்லத்தான் கார் வரும்” என்கிறார்.
மூன்று பேருக்கு உணவு வாங்கிக் கொள்ளப் போகுமிடத்தில் வீரர்கள் சூழ்ந்து கொண்டு விசாரணை செய்த காமிசாரின் உதவியாளாரைக் கேள்வி கேட்கிறார்கள். “நாங்கள் 14 பேர் உயிருடன் இருந்து இன்றும் போரில் சண்டையிட எங்கள் லெஃப்டினண்ட்தான் காரணம். ஆனால் அவரைத் தண்டிக்கிறீர்கள்” என்று சொல்கிறார்கள். ஒரு வயதான வீரரின் உதவியுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். லெஃப்டினண்ட் அழுதுகொண்டே செல்கிறான். தன் குடும்பத்தை என்ன செய்வார்களோ என்று அஞ்சுகிறான்.
போகிற வழியில் இவர்கள் இருவரின் வேகத்துக்கு காமிசாரின் உதவியாளனால் நடக்க முடியவில்லை. ஓய்வெடுக்கிறார்கள். அங்கே வயதான வீரரும் லெஃப்டினண்டும் பேசிக் கொள்கிறார்கள். “உன்னை ஒரு கேள்வி கேட்க மாட்டார்கள். காமிசாரின் சொல்லே வேதம். நீ செய்தது விதி மீறல் என்று அறிக்கை படித்து சுவரில் சாய்த்துச் சுட்டுவிடுவார்கள்” என்கிறார் வயதான வீரர். “அப்படியானால் நேர்மையான விசாரணை, நீதி இதெல்லாம் கிடையாதா?” என்கிறான் லெஃப்டினண்ட். “உனக்குப் புரியவில்லை. அதெல்லாம் புத்தகத்தில் இருக்கும். அப்படி நடந்ததாக குறிப்பு இருக்கும். ஆனால் காமிசார் சொல்வதே சட்டம். அவர் சொல்வதே அறிக்கை” என்கிறார் வயதான வீரர். இதை ஒட்டுக்கேட்ட காமிசாரின் உதவியாளர் துப்பாக்கியை நீட்டி ‘உங்கள் இருவரையும் கொல்வேன். ராணுவக் கோர்ட்டில் உங்களின் சட்ட விரோத நடவடிக்கை பற்றிச் சொல்வேன்” என்கிறான். துப்பாக்கியை எடுத்துக் குறி பார்க்கும் வயதான வீரர் “கைதியை ராணுவக் கோர்ட்டில் உயிருடன் ஒப்படைக்கும்படி எனக்கு உத்தரவு. அதைச் செய்யப் போகிறேன். குறுக்கே யார் வந்தாலும் சுடுவேன்” என்கிறார். அவர் துப்பாக்கியை ஓங்கியதும் தடுமாறி விழும் காமிசாரின் ஆள், அவர்களோடு ராணுவத் தலைமையகம் சென்று கோர்ட்டுக்குப் போக ஒப்புக் கொள்கிறான்.
வழியில் ஒரு ஜெர்மனியப் படைப்பிரிவு கொல்லப்பட்டுக் கிடக்கிறது. மருந்துகள் ஆயுதங்கள் என்று அங்கே இருப்பவற்றை வயதான வீரர் எடுத்துக் கொள்கிறார். அதை தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம், ஜெர்மானியர்கள் எப்படி ஆயுதங்கள், மருந்துகள் வைத்திருக்கிறார்கள் என்று அங்கே தெரிந்து கொள்வார்கள் என்கிறார். அந்த நேரத்தில் தண்டனைக் கைதி லெஃப்டினண்ட் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்பிக்கிறான். வயதான வீரரை துப்பாக்கி காட்டி மிரட்டுகிறான் காமிசாரின் உதரியாளர் (கட்சி ஆபீசர்). கோர்ட்டில் சொல்லி உன்னைத் தூக்கில் போடுவேன் என்கிறான். உன்னையும் தூக்கில் போடுவார்கள், எங்கள் இருவருக்கும் நீ பொறுப்பு என்கிறார் வயதானவர். இவனோ கையாலாகாமல் கோபத்தில் கத்திக் கூச்சலிடுகிறான்.
தப்பித்த லெஃப்டினண்டை ஒரு ஆள் அடித்துப் போட்டு, தன் மறைவிடத்துக்குக் கூட்டிப் போகிறான். அவன் ரஷ்ய ராணுவத்தில் இருந்து வெறுத்துப் போய் தனியாளாகச் சண்டை என்ற பெயரில் களவாடிக் கொண்டு திரிபவன். தப்பித்தவனைத் தேடி வரும் காமிசாரின் ஆளும் வயதான வீரரும் ஓரிடத்தில் நிற்கிறார்கள். “இங்கே ஜெர்மானியர்கள் இருப்பார்களா?” என்று கேட்கிறார் கட்சி ஆபீசர். “இருக்கலாம். நாம் பின்வாங்கினால் அவர்கள் வருவார்கள். அவர்கள் பின்வாங்கினால் நாம் வருவோம். அதுதானே யுத்தம்?” என்கிறார் வயதான வீரர். இங்கே ஒளிந்து கொண்டு இருட்டிய பிறகு போகலாம் என்கிறான் கட்சி ஆபீசர்.
அங்கே காலடித் தடம் பார்த்துப் போகிறார்கள். தப்பித்த லெஃப்டினண்டைக் கண்டுபிடிக்கிறார்கள். அங்கே ஜெர்மானியர்கள் தூக்கிலிட்ட ஒரு ஆளை அடக்கம் செய்ய உதவுகிறான் லெஃப்டினண்ட். இறந்தவரின் மனைவி பைத்தியமாகி ‘என் மகன் வருவான்’ என்று பிதற்றிக் கொண்டிருக்கிறாள். அங்கிருந்து லெஃப்டினண்ட் போகிறான். கட்சி ஆபீசர் அவனைச் சுட்டுவிட்டு “அம்மா சத்தியமாக காலுக்குக் குறி வைத்தேன் தோளில் பட்டுவிட்டது” என்கிறான். அவனுக்கு முதலுதவி செய்து அங்கிருந்து செல்கிறார்கள். பைத்தியக்காரப் பெண் இவர்களைத் தொடர்கிறாள். வழியில் ஒரு கட்டடத்தில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறி தெரிகிறது. “ஏன் வாசலில் செண்ட்ரி இல்லை? பொறுப்பற்றவரகள்” என்றபடி கட்சி ஆபீசர் சுற்றிப் பார்க்கிறான். “நேற்று வரை இருந்திருக்கிறார்கள். இப்போது எங்கே யாருமில்லையே?” என்கிறான். வயதான வீரர் போய்ப் பார்த்து அங்கே ஒரு பதுங்கிடம் இருப்பதைக் காண்கிறார். அங்கே இருக்கும் ஒரு பெண் இவரிடம் உள்ளே வந்தால் சுடுவதாகச் சொல்கிறாள். அவளிடம் இருக்கும் துப்பாக்கியைப் பிடுங்கிவிட்டு யாரவள் என்று விசாரிக்கிறார். அழுதபடியே சொல்கிறாள்.
“நேற்று முன் தினம் இங்கே தலைமையகம் இருந்தது. ஜெர்மானியர் நெருங்கி வருகிறார்கள் என்று தெரிந்ததும் உணவு, மருந்து, ஆயுதம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தலைமையகத்தை வேறிடத்துக்கு மாற்றிக் கொண்டு போய்விட்டார்கள். காயமடைந்த 14 வீரர்களுடன் இங்கே என்னை இருக்கச் சொல்லி உத்தரவு. உதவி வரும் என்றார்கள். இரண்டாவது நாளாகக் காத்திருக்கிறேன்” என்று அழுகிறாள் அந்த ராணுவச் செவிலி. அவளுக்கு ஆறுதல் சொல்லி உயிருடன் இருக்கும் 7 வீரர்களை இடம் மாற்றுகிறார்கள். 7 பேர் இறந்துவிடுகிறார்கள்.
இருப்பவர்களை வேறிடம் மாற்ற குதிரை வண்டி ஏதாவது பக்கத்தில் இருக்குமா என்று பைத்தியக்காரப் பெண்ணிடம் கேட்கிறார்கள். பக்கத்து கிராமத்தில் இருக்கும், பெட்ருஷாவை வரச்சொல்லுங்கள், நான் வண்டி கொண்டு வருகிறேன் என்கிறாள் அவள். பெட்ருஷா காயமுற்றிருக்கிறான், வரமுடியாது என்று சொல்லி கட்சி ஆபீசரை அனுப்பி வைக்கிறார்கள். அதற்குள் காயம்பட்ட வீரர்களை இடம் மாற்றும் போது ஒரு வீரன் வயதான வீரரை “பிரிகேட் கமாண்டர்” என்று அழைக்கிறான். விவரம் கேட்கிறார்கள் லெஃப்டினண்டும் கட்சி ஆபீசரும். ஒரு குரல் கொடுத்து “போய் குதிரை வண்டி கொண்டாய்யா!” என்று அனுப்பிவிடுகிறார்.
லெஃப்டினண்டிடம் பேசுகிறார் அந்த வயதான வீரர்.
“நீங்கள் நிஜமாகவே ப்ரிகேட் கமாண்டரா?”
“ஒரு காலத்தில். 1941ல். அப்போது யுத்தம் என்றால் என்ன என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. பழைய முறைப்படியே சண்டையிட்டோம். எதிரியின் புது முறைகளைப் புரிந்து கொள்ள காலம் பிடித்தது. ஆனால் சமாளித்து நம் இடங்களைக் காத்தோம். என் பிரிகேடில் இருந்த முக்கால்வாசிப் பேரை உயிர் பிழைக்க வைக்கப் பின்வாங்கி, பிறகு எதிரிகளை அடித்துத் துரத்தி விட்ட இடங்களைப் பிடித்தோம். ஆனால் அரசியல் ஆபீசர்கள் அறிக்கையின்படி பின்வாங்கச் சொன்னது கோழைத்தனம் என்று சொல்லப்பட்டது. என்னைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்கள்.”
“தப்பித்துவிட்டீர்களா?”
“நான் அப்படிச் செய்ய விழையவில்லை. என் பதவி பறிக்கப்பட்டு, சுவரைப் பார்த்து நிறுத்தப்பட்டேன். ஜெர்மானியர்கள் உள்ளே வருகிறார்கள் என்று தகவல் வந்ததும் ராணுவக் கோர்ட்டில் இருந்த அத்தனை கட்சி ஆபீசர்களும் ஓடிவிட்டார்கள். நாங்கள் சிலர் மட்டும் இருந்தோம். சுட்டுக் கொல்லும் கட்சிக்கார ராணுவத்தினரும் ஓடிவிட்டார்கள். நான் ஜெர்மானியர் சுட்டாவது சாவோம் என்று நின்றேன். ஆனால் எவனோ சுடத்தெரியாமல் சுட்டுவிட்டான். காயத்தோடு போனது. நடந்து நடந்து வெகு தூரம் போனேன். என் அடையாள அட்டை, என் சீருடை எல்லாம் போனது. வேறொரு இறந்த வீரனின் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு அந்த உடைகளை அணிந்து கொண்டு போனேன். ஏனென்றால் ஜெர்மானியரை விட நம்மவர்கள் (ரஷ்யர்கள்) மோசமாய் இருந்தார்கள். சொந்த மக்களையே சந்தேகம் வந்தால் கொன்றார்கள். சில ஜெர்மானிய ஆயுதங்களை அள்ளிக்கொண்டு நடந்து, கொஞ்ச தூரத்தில் மயங்கி விழுந்தேன். விழித்த போது ஆஸ்பத்திரியில் இருந்தேன். புதிய பெயர், புதிய அடையாளம். கேட்ட போது ஜெர்மானியரின் ஆயுதங்களை உயரதிகாரிகளிடம் காட்டினால் நல்லது என்று கொண்டு வந்ததாகச் சொன்னேன். அப்படியே அதே பெயரில் ப்ரைவேட் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை ராணுவத்தான் ஆகிவிட்டால் இறுதி வரை ராணுவத்தான்தான். தாய் நாட்டைக் காப்பாற்ற மீண்டும் போர் முனைக்கு வந்தேன்” என்கிறார். இறுதிவரை நிஜப் பெயர் புதுப்பெயர் எதையும் அவர் சொல்லவில்லை.
இடையே கட்சி ஆபீசர் ஓடி வருகிறான். ஜெர்மானியர் 15 பேர் வருகிறார்கள் என்கிறான். அங்கே படுத்துக் கொண்டே, சுட முடிந்த வீரர்களைக் கொண்டு பதுங்குகுழிகளில் இருந்து கொண்டு சண்டையிட ஆயத்தம் செய்கிறார் பழைய கமாண்டர். “அவசரப்பட்டுச் சுடாதே. பொறுமையாக இரு” என்று கட்சி ஆபீசரிடம் சொல்கிறார். ஆனால் அவனோ ஜெர்மானியரைக் கண்டதும் சுட்டுவிடுகிறான். அவர்கள் சூழ்ந்து கொண்டு சுட ஆரம்பிக்கிறார்கள். இரண்டு வீரர்கள் புத்திசாலித்தனமாகச் சுட்டு 5 பேரை வீழ்த்த, ஜெர்மானியர்கள் ஓடிவிடுகிறார்கள். ஆனால் சண்டையில் கட்சி ஆபீசரும், லெஃப்டினண்டும் இறந்து போகிறார்கள். அவர்களின் அடையாள அட்டைகளைப் பார்க்கிறார் கமாண்டர். இருவருக்கும் பெயர் வசிலி என்று இருக்கிறது. குடும்பப் பெயர் வேறாக உள்ளது.
செவிலியை அழைத்து அடையாள அட்டைகளை ஒப்படைத்து விட்டு அழுகிறார். இரண்டு வீரர்களைக் காப்பாற்றாமல் போனோமே என்று அருகில் உள்ள சர்ச்சைப் பார்த்துப் புலம்புகிறார். பின்னர் இரு உடல்களையும் ஒரு படகில் வைத்து ஆற்றில் செலுத்திக் கொண்டு அக்கரையில் அடக்கம் செய்யப் போகிறார்.
அதோடு படம் முடிகிறது.
ரஷ்யாவில் படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் உலக அளவில் ரிலீசாகி என்று பெரியதாக எதுவும் இல்லை. இயக்குநர் விளாடிமிர் டுமாயெவ் இன்னமும் பெர்லின் ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் கல்லூரிகளில் திரைப்படம், தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட பாடங்கள் நடத்துகிறார். கம்யூனிஸத்தின் அரசியல் செயல்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் இத்திரைப்படம் அந்த வகையில் முக்கியமான ஒரு திரைப்படம்.