நீங்கள் உங்களை / உங்கள் சுற்றுப்புறத்தை மறந்து ஒரு புத்தகத்திற்குள் தொலைந்து போவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல விஷயம் என்கிறது ஒரு விஞ்ஞானக் குறிப்பு. புத்தகத்திற்குள் தொலைதல், அதாவது அதில் ஆழ்ந்து போவது மிகவும் நல்லது, உங்களை அது மேலும் புத்திசாலியாக, ஒரு சிறந்த படைப்பாளியாக மாற்றும். அது ஒரு தப்பித்தல்தான் – உங்கள் கவலைகளிலிருந்து, உங்கள் தினசரி இயந்திரத்தனமான வாழ்விலிருந்து இப்படி தப்பித்து உங்கள் கனவுகளுக்குள் மூழ்கிப்போவது நல்லது.
அமேஸான் போன்ற வலைத்தளங்கள் மூலம் அந்தந்த மாதத்திற்குரிய அதிக விற்பனையாகும் புத்தகத்தை (best seller) உடனே வாங்கிப் படிப்பவராக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் நண்பர் குறிப்பிட்ட ஒரு புத்தகம் நன்றாக இருந்தது என்று சொல்லியிருந்ததால் அதை வாங்கிப் படிப்பவராக இருந்தாலும் சரி, புத்தகப் படிப்பில் நீங்கள் செலவிடும் நேரம் உங்கள் மன நிலைக்கு மிகவும் நல்லது என்கிறது ஒரு உளவியல் குறிப்பு.
படிப்பது என் பொழுதுபோக்கு என்று யாரேனும் சொன்னால் இன்றைய சமுதாயம் (குறிப்பாக 30 – 35 வயதுக்குக் கீழே) உங்களை ஏளனமாகப் பார்த்து, நக்கலாகச் சிரிக்கும். காரணம், நம் கையில் இருக்கும் மொபைல். பெரும்பாலான நாடுகளில் இந்தியாவில் இருக்குமளவுக்கு மொபைல் பைத்தியம் பிடித்து அலைகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ரோடில் நடக்கும் போது, ஹோட்டல்களில் நமக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருக்கும் போது, திரையரங்குகளில் அமர்ந்து படம் ஆரம்பிக்கும் வரை (பலர் திரைப்படம் திரையில் ஓடும்போதும் அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் கையிலிருக்கும் மொபைல் போனில் உரக்க பேசுவார்கள் – அவர்களை பசித்த புலி தின்னட்டும்), மருத்துவமனையில் காத்திருக்கும் போது, பள்ளி, கல்லூரி, நூலகம், சொந்தக்காரர்கள் வீடு, அலுவலகம் இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் நாம் நம் மொபைலைப் பிரிவதில்லை. அடுத்தவர்களுக்குத் தொந்தரவாயிற்றே என்று எதைப் பற்றியும் சட்டை செய்வதில்லை.
இதனால் புத்தகம் படிக்கும் வழக்கம் மிகமிகக் குறைந்துவிட்டது. மொபைலில் இப்படி மேய்பவர்களுக்காக மாக்ஸ்ட்டர் (Magzter) போன்ற செயலிகள் (apps) வந்துள்ளன. இதில் குறிப்பிட்ட சந்தா செலுத்திவிட்டு, (வெவ்வேறு மொழிகளில்) பல தினசரிகள், வார / மாத இதழ்கள் – சினிமா, மருத்துவம், விவசாயம் என்று பல்வேறு வகைகளில் கிடைக்கும் பத்திரிகைகளைப் படிக்கலாம். ஆனால், நிதர்சனத்தில் பெரும்பாலானவர்கள் வாட்ஸாப்பில் வரும் விடீயோக்களைக் கூட ஒரு நிமிடத்திற்கு மேல் பார்ப்பதில்லை. அப்புறம் எங்கிருந்து வார இதழ்களைப் படிப்பது?
“புனைவுக்கதைகளைப் படிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்கிறார் மெலானி க்ரீன் என்ற பேராசிரியர் / ஆராய்ச்சியாளர். அமெரிக்காவின் பஃபல்லோ (Buffalo) பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இவர், “புனைக்கதைகளை இவ்வாறு படிப்பது நமக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, மன அழுத்தத்திலிருந்து விடுதலையும் அளிக்கிறது” என்கிறார். இது போன்ற கதைகளைப் படிக்கும் போது நாம் அந்தக் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போக முடிகிறது.
“இதனால் நமக்குப் பொழுது போவது மட்டுமல்ல, நாமே கதைக்குள் இருக்கும், சாதனைகள் பல செய்யும் ஒரு வீரனாக மாற முடிகிறது. நம்மைப் பற்றி நாமே உயர்வாக நினைத்துக் கொள்ள படிப்பது உதவுகிறது” என்கிறார் மெலானி.
இப்படி ஒரு புத்தகத்திற்குள் தொலைந்து போதல் என்பதற்கு ஒரு நல்ல எழுத்தாளர் எழுதிய சுவாரஸ்யமான நல்ல புத்தகம் தேவைப்படுகிறது. பிடித்த நடிகர்கள் போல பிடித்த எழுத்தாளர்கள் ஆளாளுக்கு மாறலாம். எனக்கு சுஜாதா பிடிக்கலாம், என் நண்பனுக்கு பி.டி. சாமி பிடிக்கலாம். ஆனால், இங்கு முக்கியம் படிப்பதுதான்.
நான், பள்ளியில் எட்டாவது வரை முத்து காமிக்ஸ் போன்ற புத்தகங்களை மிகவும் ஆர்வமாகப் படிப்பேன். இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் / டேவிட், ஜானி நீரோ என்று சாகசம் செய்யும் வீரர்கள். அப்படியே கதையில் மூழ்கிப்போய் விடுவேன்.
என் அப்பா ஒரு முறை ராஜாஜி எழுதிய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ (இராமாயணம்) வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். முதலில், இதையெல்லாம் யார் படிப்பது என்று அலட்சியமாக ஆரம்பித்த நான், ராஜாஜி அதை விவரித்து எழுதிய விதத்தில் மயங்கிப் போய் பலமுறை படித்ததோடு, என் அப்பாவை நச்சரித்து ராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்து’ (மஹாபாரதம்) புத்தகத்தை வாங்கிக்கொடுக்கச் சொல்லி அதையும் மிகவும் ரசித்துப் படித்தேன். இந்த இரண்டு புத்தகங்களும் இந்த இரண்டு இதிகாசங்கள் மேல் எனக்கு இன்றளவும் இருக்கும் காதலை உரமிட்டு வளர்த்தன.
என்னுடைய ஒன்பதாவது வகுப்பிலிருந்து சுஜாதா என்னை ஆக்கிரமித்தார். அவருடைய புத்தகங்களை தேடித் தேடி வாங்கிப் படித்து அவர் எழுத்தில் பைத்தியமானேன். அது இன்று வரை தொடர்கிறது.
கதைப் புத்தகங்கள் படிக்கும் போது பலர், பல்வேறு காரணங்களுக்காக அதில் மயங்கலாம். கதைக்களம், கதை மாந்தர்கள், எழுத்து நடை, வர்ணனை… இப்படிப் பல காரணங்கள். சிலருக்குத் துப்பறியும் கதைகள், சிலருக்கு மனதை மயக்கும் காதல் கதைகள், சிலருக்கு நகைச்சுவைக் கதைகள், வேறு சிலருக்குக் குடும்பக் கதைகள்…. இப்படிப் பட்டியல் நீளும்.
“புத்தகங்களைப் படிப்பதால் நாம் புதுப்புது வழிகளில் சிந்திக்க, நினைக்க முடியும்” என்கிறார் கனடா நாட்டின் டொரொண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கெய்த் ஓட்லி. “இப்படித் தீவிரமாக புனைவுகளில் மூழ்குவதால் நாம் நம்முடைய சில நாள்பட்ட பழக்கங்களை, எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியும். மாற்றிக்கொண்டு படிப்படியாக வேறு குணநலன்கள் உள்ள மனிதனாக மாற முடியும்” என்கிறார் அவர். “இப்படி மாறுவது என்பது வேறு எந்த முறையிலும் நடப்பது அதிசயமே” என்கிறார் பேராசிரியர் கெய்த்.
2009ம் ஆண்டில் பேராசிரியர் கெய்த் மற்றும் அவருடைய சில உதவியாளர்கள், புகழ்பெற்ற ஒரே எழுத்தாளரை வைத்து ஒரு (கற்பனை) நிகழ்வை புனைகதையாக, அதே நிகழ்வை அபுனைவாக (non-fiction) ஒரு நீண்ட கட்டுரை போல எழுதச் செய்து, அந்த இரண்டு புத்தகங்களை இரண்டு வெவ்வேறு குழுவினரிடம் கொடுத்துப் படிக்கச் செய்தார்கள்.
அந்த எழுத்தாளரின் கற்பனைப் படைப்பை ரசித்துப் படித்த குழுவினர், அந்தக் கதையோடு தங்களால் ஒன்றிப்போக முடிந்தது என்று பாராட்டினார்கள்.
இதற்கு நேர் மாறாக, அதே எழுத்தாளரின் அபுனைவு புத்தகத்தை, கட்டுரை வடிவில் படித்தவர்கள், புத்தகம் மிகவும் சுமார் என்றும், தங்களால் அதில் ஓரளவுக்கு மேல் ரசிக்க முடியவில்லை என்றும் சொன்னார்கள்.
இதில், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சமாசாரம்; படிப்பது முக்கியம், படித்துவிட்டு உணர்வு ரீதியாக அதில் தொலைந்துபோவது நன்மை பயக்கும் என்பதே. அதிலும் கடினமான ஒரு விஷயத்தை புனைவாகப் படிப்பது கொஞ்சம் எளிதுதான். அதேசமயம் இது எல்லா சமயங்களிலும் உதவாது என்பதையும் சொல்லி வைக்கிறேன்.