Posted on 1 Comment

என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்

எழுத்து என்பது நிலத்தடியில் உள்ள நீரூற்று போல. நீரூற்றுள்ள நிலம் சில்லென்றிருக்கும். எறும்புப் புற்றைப்போல் அங்கே வடிவமற்ற கற்பனைகள் உருவாகிக் கொண்டிருக்கும். இதை ஆழ்ந்து கவனிப்பவர், உள்ளுக்குள் இருக்கும் நீரோட்டத்தைத் துளையிட்டு வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபடுவர். அம்புலிமாமா வாசிக்கும் காலத்திலேயே அடிமனசில் ஒளிந்திருந்த இந்த நீரூற்றை நானும் அறிந்தேன்.

‘வெனிஸ் ரேடியோ’ என்ற ஒரு துப்பறியும் சிறுவர் கதை எழுதும்போது எனக்குப் பத்தோ பன்னிரண்டோ வயசிருக்கலாம். இளங்கன்று பயமறியாது என்பதுபோல் துப்பறிதல் பற்றிய அடிப்படை அறிவு ஏதுமின்றி, மாயாஜாலக் கதைபோல என் இஷ்டத்திற்கு அதில் நிறைய புருடா விட்டிருப்பேன். துப்பறியும் படை சார்ந்த சிறுவர்கள் ஆங்காங்கு கையில் ஒரு சிகரெட் பெட்டியளவுள்ள ஒரு கருவியைக் காதில் வைத்து ஒருவரோடொருவர் பேசுவார்கள். குற்றவாளியைக் கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைப்பார்கள். என்ன குற்றம் என்பதெல்லாம் நினைவில்லை. அவர்கள் பேசும் அந்தக் கருவியின் பெயர், வெனிஸ் ரேடியோ.

காலவெள்ளம், வெனிஸ் ரேடியோ என்று தலைப்பிட்டு நான் எழுதிய அந்த, ரூல்ட் நோட்புக் காகிதங்களை அடித்துச் சென்றுவிட்டாலும் மனசின் ஆழத்தில் இன்னும் அந்த ரேடியோ இசைத்துக் கொண்டிருக்கிறது. வளர வளர, ஹாம் ரேடியோ பற்றி அறிந்தபோதும், பின்னர் செல்போன் அறிமுகமாகி உபயோகிக்க ஆரம்பித்த போதும், என்னுள்ளிருந்து வெனிஸ் ரேடியோ எட்டிப் பார்க்கும். பரவாயில்லையே நான் எழுதினது புருடா எல்லாம் இல்லையென்று சிரித்துக் கொள்வேன்.

காலப்போக்கில் மனவளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் வாசிக்கும் கதைகளும், எழுத்தும் மாறியது. பதினான்கு வயதில் நான் முதலில் வாசித்த புதினம் எதுவென்றால் உமாசந்திரன் எழுதிய முழுநிலா. உப்பிலியும், மலைப்பாம்பும் ஜகடைத் தாத்தாவும், ஜமுனாவும், மைனாவும், அந்தக் காடும் என் மனசில் இன்னமும் பசுமையாயிருக்கிறது.

பதினைந்தாம் வயசில் நூலகத்தில் என் கையில் சிக்கிய ஒரு நாவலைப் புரட்டிப் பார்த்ததில், அதன் ஆரம்ப வரி பிடித்துப்போக, வீட்டுக்கு எடுத்து வந்து நான் படித்த நாவல் ‘அம்மா வந்தாள்.’

பதினைந்து வயசுக்குப் படிக்க வேண்டிய நாவலா அது என்றால் கண்டிப்பாக இல்லை. பாதி விஷயங்கள் புரியக்கூட இல்லை. ஆயினும், அந்த மண்வாசனை மிக்க எழுத்தும் வர்ணனைகளும், காவிரியின் சுழிப்பும் என்னைப் பித்து நிலைக்குத் தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்துன்னா இப்டி இருக்கணும், மனசைப் பிறாண்டணும் என்று தோன்றியது. எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் எனக்குள் தூண்டியது.

பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரிப் படிப்பு முடிக்கும்வரை நான் வாசித்த நாவல்கள் கணக்கிலடங்காதவை. கல்கி, சாண்டில்யன், அகிலன், சேவற்கொடியோன், நா.பா, ஜெயாந்தன், புதுமைப்பித்தன் என்று என் அண்ணா (அத்தை மகன்) தன் நூலகத்தில் பைண்டு செய்து பத்திரப்படுத்தி வைத்திருந்த அத்தனை நாவல்களும் படித்தேன்.

இத்தனை வாசிப்பிற்குப் பிறகு, கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் போதுதான் ஒருவழியாக என் முதல் நாவலை எழுதத் துவங்கினேன். எங்கள் வீட்டையடுத்த ஒண்டுக் குடித்தன ஸ்டோரும் அதில் வாழ்ந்த பலமனிதர்களின் குணச்சித்திரங்களும்தான் இதன் கரு. ‘மூன்று முடிச்சு’ என்ற தலைப்பிட்டு, என் முதல் முழுநீள நாவலை நான் எழுதி முடித்த சமயம், ஆனந்த விகடன் தன் பொன்விழா நாவல் போட்டியை அறிவித்தது.

என் அப்பாதான் நாவலை நேரில் சென்று விடன் ஆபீஸில் கொடுத்துவிட்டு வந்தார். நாவல் பரிசுபெறவில்லை என்றாலும் பிரசுரத்திற்கு பரிசீலனை செய்யப்படுவதாகக் கடிதம் வந்தது. ஏனோ, பின்னர் அந்த நாவல் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. திரும்பி வந்த நாவல் என் பெட்டியின் அடியில் உறங்கியது. எழுதவேண்டுமென்ற என் ஆசையும் அதோடு சேர்ந்து உறங்கியது.

இருப்பினும் அதை அவ்வப்போது தட்டியெழுப்பி ஏதேனும் சிறுகதை எழுதுவேன். எழுதியதை என் சின்ன அத்தை பிள்ளை ராகவனிடம் கொடுத்து, எப்டியிருக்குன்னு படிச்சுட்டு சொல்லு என்பேன். அவன் ஒன்றும் சொல்லமாட்டான். எனக்குக் கோபமாக வரும். ஒருநாள் சாவி பத்திரிகை ஒன்றை என்னிடம் பிரித்து நீட்டி, கதைன்னா இப்டி இருக்கணும் என்றான். அவன் காட்டிய பக்கத்தில் பாலகுமாரனின் ‘மெர்க்குரிப்பூக்கள்’ தொடர் இருந்தது. நான் என் கோபத்தை மறைத்துக் கொண்டு கிளம்பினேன்.

1981 மார்ச் மாதம் என் திருமணம் நடந்தது. கழுத்தில் போடப்பட்ட மூன்று முடிச்சோடு நான் புறப்படுகையில், நான் எழுதிய மூன்று முடிச்சும் என் பொருட்களோடு புகுந்தவீட்டிற்கு வந்தது. அதன்பிறகு ஒருவருடம் கழித்து ஏதேச்சையாய் பெட்டியிலிருந்து எதையோ எடுக்கும்போது அடியிலிருந்த இந்த நாவல் சுப்ரமணியத்தின் கண்ணில்பட, என்னம்மா இது என்றபடியே அவர் அதை எடுத்து புரட்டிப்பார்த்தார். நான் கதை எழுதியிருக்கும் விஷயமே அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது.

“ஏன் எழுதறதை நிறுத்திட்ட?” அவர் கேட்க நான் ப்ச் என்று அசுவாரசியமாய் பதிலுரைத்தேன்.

பின்னர் மங்கை என்றொரு பெண்கள் மாத இதழ் நாவல் போட்டியை அறிவிக்க, சுப்ரமணியம், மூன்று முடிச்சை அதற்கு அனுப்பினார். மங்கை என் மூன்று முடிச்சிற்கு ஆறுதல் பரிசு அறிவித்திருப்பதாகக் கடிதம் வர, எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த நீரோட்டம் மீண்டும் பொங்கி எழும்பி மேலே வந்தது.

அதன் பின்னர் எழுதிய சற்று நீண்ட சிறுகதைதான் ‘முதல்கோணல்’. சுப்ரமணியம் இதனை நேரில் எடுத்துச்சென்று மங்கையர் மலர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்தார். அடுத்த மாதமே ‘முதல்கோணல்’ நெடுங்கதையாக மங்கையர் மலரில் வெளியாயிற்று. முதலில் எழுதியது ‘மூன்று முடிச்சாக’ இருந்தாலும், முதலில் பத்திரிகையில் பிரசுரமானது ‘முதல் கோணல்’தான். என்ன இப்படி ஒரு டைட்டில் வெச்சிருக்க என்று பலரும் கேட்டார்கள். கதைக்கு அது பொருத்தமாக இருந்ததால் வைத்தேன் என்று கூறினேன்.

முதல் கதை வந்த இதழையும், ‘மங்கை’யிலிருந்து நாவலுக்கு அறுதல் பரிசு கிடைத்திருப்பதாக வந்திருந்த கடிதத்தையும் எடுத்துச்சென்று என் அத்தை பிள்ளையிடம் காட்டினேன். பெண்கள் இதழ்தானே என்று கேலியாகச் சிரித்தான். பல்லைக் கடித்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டேன்.

பின்னர், இதயம், குங்குமம், சாவி என்று பல்வேறு இதழ்களிலும் என் சிறுகதைகள் வர, ஒவ்வொன்றையும் என் அப்பாவிடம் ஆசையாகக் காட்டுவேன். என் அப்பாவுக்கு என் கதைகள் பத்திரிகைகளில் வருவதில் சந்தோஷம்தான் என்றாலும், கலைமகள், விகடன், கல்கி. அமுதசுரபி இதிலெல்லாம் எல்லாம் எழுதினாதான் நீ நல்ல எழுத்தாளர்னு சொல்லுவேன் என்றார். அது ஒரு தூண்டுதலாக இருந்தது எனக்கு.

பின்னர் அமுதசுரபியில் என் கதைகள் வர ஆரம்பித்தன. ‘அடைப்பு’ என்ற சிறுகதை அமுதசுரபி, ஸ்ரீராம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. சிறுகதை மூன்றாம் பரிசு பெற்றாலும், என் எழுத்திற்கு நான் பெற்ற முதல் பரிசு அதுதான். அதன் பரிசளிப்பு விழா மயிலை பாரதீய வித்யா பவனில் வெகு சிறப்பாக நடந்தது. விக்ரமன் சார் என்னிடம். ‘உங்களுடைய கதை மிக அருமையானது. முதல் பரிசு பெற்றிருக்க வேண்டியது. நடுவர்களின் கருத்துகள் மாறுபட்டதால் மூன்றாமிடத்திற்குச் சென்றுவிட்டது. பரவாயில்லை. பாரதியாரின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடல்கூட ஒரு போட்டியில் மூன்றாம் பரிசுதான் பெற்றது. ஆனால் இன்றுவரை நிலைத்து நிற்கிறது’ என்று என்னை உற்சாகமூட்டினார்.

பரிசு பெற்றவர்கள் எல்லாம் விழா மேடையில் அமர வைக்கப்பட்டோம். எனக்கு இரண்டாவது நாற்காலியில் அமர்ந்திருந்தவர் பாலகுமாரன். அவரைப் பார்த்ததும் நான் திகைத்தேன். என் கால்கள் பூமியிலேயே இல்லை. ‘இரும்பு குதிரைகள்’ நாவலுக்காக அவருக்குப் பரிசளிக்கப்பட்டிருந்தது.

பரிசளிப்பு விழா முடிந்ததுமே வீட்டுக்கு வந்த நான் அடுத்த நிமிடம், என் அத்தை மகன் வீட்டிற்கு ஓடினேன். “நீ பாராட்டினயே, அந்த எழுத்தாளர் பாலகுமாரன், அவரோட ஒரே மேடைல இன்னிக்கு நான் பரிசு வாங்கினேன். இப்ப என்னடா சொல்ற?” என்று கேட்டேன்.

“நா இப்டியெல்லாம் சொல்லி உசுப்பேத்தி விடவில்லை என்றால் நீ இப்டி பரிசு வாங்குமளவுக்கு எழுதியிருப்பயா?” என்று சொல்லி சிரித்தபடி என்னைப் பாராட்டினான். உண்மைதான். நான் வெறியோடு எழுதிய ஆரம்பகாலக் கதைகளுக்கு அவனும் ஒரு காரணம். அந்த விழாவிற்குப் பிறகு பாலகுமாரனும் அவரது குடும்பமும் எங்களுக்கு நெருங்கிய நட்பானார்கள்.

எண்பதுகளில் நான் எழுதத் துவங்கிய காலமும், அதற்கு முன்பே எழுத ஆரம்பித்தோரின் காலமும் உண்மையில் பொற்காலம்தான். சிவசங்கரி, இந்துமதி, பாலகுமாரன், அனுராதாரமணன் என்று பல சிம்மங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த எழுத்துலகில் நானே எதிர்பாராமல்தான் ஒரு சிறிய அணிலைப்போல தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தேன். பத்திரிகை ஆசிரியர்கள் யாரையும் தெரியாது. எந்தப் பின்புலமும் எனக்குக் கிடையாது. எழுத்துலகப் பிரபலங்கள் யாரையும் தெரியாது. யாரிடமும் வாய்ப்பு கேட்டுச் சென்றதில்லை. கடிதப் போக்குவரத்துகள் மட்டுமே இருந்தன. கதைகள் எல்லாமே தபால் மூலம்தான். கதைகளுடன் அது திருப்பி அனுப்பப்படுவதற்கான தபால்தலைகளும் வைத்தேதான் அனுப்புவேன். ஒன்று கதை பத்திரிகையில் வரும், அல்லது சுவற்றிலடித்த பந்தாய்த் திரும்பி வரும். அப்படித் திரும்பி வந்த கதைகளில் பல இன்னமும், நான் கடந்து வந்த பாதையின் நினைவுச் சின்னங்களாக என்னிடம் பத்திரமாக இருக்கின்றன.

1984ல் எனக்கு அரசுப்பணி கிடைத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமனம். மூக்கால் அழுதுகொண்டு பணியில் சேர்ந்தேன். பிறகு திண்டிவனம் வானூர் என்று மாற்றல். அச்சமயம் அமுதசுரபி, ஆனந்தவிகடன், சாவி என்று கதைகள் வந்தன. ஆனந்த விடனில் கதை வந்ததில் அப்பாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம். விக்கிரமன் சார் கொடுத்த ஊக்கம் அசாதாரணமானது. ஒவ்வொரு கதைக்கும் பாராட்டுக் கடிதம் வரும். வாராவாரம் வெள்ளியன்று மாலை பாண்டியிலிருந்து சென்னை பயணம். திங்களன்று வேண்டா வெறுப்பாகப் புறப்படுவேன். அப்படி வந்திருந்த ஒரு சனிக்கிழமைதான், முழுவதுமாக எழுதி வைத்திருந்த ஒரு நாவலை எடுத்துக் கொண்டு என் கணவர் எங்கோ கிளம்பினார்.

“எங்க கொண்டு போகிறீர்கள்?”

“மங்கையர் மலர் ஆபீஸ்க்கு.”

“உங்களுக்கென்ன பைத்தியமா? எடுத்த எடுப்புல தொடர்லாம் போடமாட்டார்கள். கதையை ஜெராக்ஸ்கூட எடுத்துக்கல.. வேண்டாம்” என்றேன்.

“இல்லம்மா.. நாலுநாள் முந்தி ஒரு இடத்துல மஞ்சுளா ரமேஷைப் பார்த்தேன். நல்லா பேசினாங்க. பேச்சுவாக்குல ஒரு முழுநாவல்கூட எழுதி வெச்சிருக்கா, தொடரா போட முடியுமான்னு பாக்கறீங்களான்னேன். கொண்டு வரச்சொன்னாங்க.. அதான் கொண்டு போறேன்” என்றபடி அவர் கிளம்பிச்சென்று விட்டார். எனக்கு பக்பக்கென்றிருந்தது. அவர்களுக்கென்ன வேறு வேலையே இல்லையா? இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு முதல்ல இதைத்தான் சிரத்தையா எடுத்து படிச்சுட்டு, ஆஹா போடறோம்னு சொல்லிடப் போகிறார்களாக்கும். அவ்ளோ பெரிய ஆளா என்ன நான்? முளைச்சு நாலு இலைகூட விட்டபாடில்ல. அவர்கள் பரிசீலிக்க எவ்வளவு காலமாகுமோ? அதற்குள் என் நாவல் அந்த ஆபீஸில் தொலைந்துவிட்டால்…? மறுபடியும் எழுதக்கூட முடியாதே…! என் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இரண்டு மாதம் கழிந்திருக்கும். ஒரு வெள்ளி இரவு வழக்கம்போல் நான் சென்னைக்கு வந்திருந்தேன். ஞாயிறு காலையில் சுப்ரமணியம் காய்கறியோடு ஒரு புத்தகமும் கொண்டு வந்தார். புத்தகத்தை எதுவும் சொல்லாமல் என்னிடம் கொடுத்தார்.

அப்பறம் படிக்கறேன் என்றபடி நான் அதை வாங்கி ஷெல்ஃபில் வைத்துவிட்டு சமையல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். திங்களன்று விடியற்காலை ஐந்து மணிக்கு பாண்டிக்கு பஸ் பிடிக்க கிளம்பினேன். பஸ்ல முடிஞ்சா படி என்றபடி அப்புத்தகத்தை என் கைப்பையில் வைத்தார் சுப்ரமணியம்.

சீக்கிரம் எழுந்தததற்கும் அதற்கும் பஸ்ஸில் உட்கார்ந்த மறுநிமிடம் சில்லென முகத்தில் பட்ட காற்றில் தூங்கிப்போனேன். பின்னர் பாண்டியில் இறங்கி, அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து வானூரிலிருக்கும் ஆபீஸ் வந்து, அவசர வேலைகள் அனைத்தும் முடித்து, மதியம் சாப்பிடும்போது, புத்தகத்தைப் பிரித்தேன். ஒவ்வொரு பக்கமாக புரட்டியபடி ஸ்பூனால் மிளகாய்ப் பொடியில் ஊறிய இட்லியை எடுத்து விழுங்கிக் கொண்டிருந்தேன். ஒரு பக்கத்தில் ஜெயராஜின் ஓவியம் மட்டும் கண்ணில்பட, அடுத்த பக்கத்தைப் புரட்ட என் இடக்கரம் தயாரானபோது, எனக்குள் ஒரு ஜெர்க். சட்டென மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். வாயில் வைத்த இட்லியை விழுங்கக்கூட முடியாமல் திகைத்துப் போனேன். ‘துன்பம் நேர்கையில்’ என்ற என் தொடருக்கான விளம்பரம் அது. பத்திரிகையில் என் பெயரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். அடப்பாவி மனுஷா இதை அன்னிக்கே சொல்ல மாட்டயோ? நானே பார்த்து தெரிஞ்சுக்கணும்னு என்ன பிடிவாதம்? சுப்ரமணியத்தை மனசுக்குள் நொந்து கொண்டேன்.

“உஷா மேடம் உங்களுக்கு போன்” உதவியாளர் ஒருவர் அழைக்க, ஒருவேளை கலெக்டரேட்டிலிருந்து அழைப்பா என்று நினைத்தபடி, துணை தாசில்தார் டேபிள் மீது வைக்கப்பட்ட ரிஸீவரை எடுத்து காதில் வைத்தவாறு ஹலோ என்றேன்.

“என்னம்மா பாத்தயா?” சுப்ரமணியத்தின் குரல்!

“பாத்தேன். ஸ்டன்னாய்ட்டேன். அங்கயே சொல்லிர்க்கலாம் இல்ல?”

“பாருன்னேன். நீதான் பாக்கல.”

“சொல்லியிருந்தா பாத்திருப்பேன்.”

“சொல்லாம நீயா பாக்கணும்னுதான் சொல்லலை.”

நான் நெகிழ்ந்தேன். அன்றே நான் பார்த்திருந்தால் என் முகத்தில் படரும் ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் அவரும் பார்த்து ரசித்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தை அவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்ட என் அலட்சியம் என்னை உறுத்தியது.

“இதமாதிரி இன்னும் நிறைய தொடர்கள் வரும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதும்மா. வெச்சுரவா?”

இதுதான் சுப்ரமணியம். என்மீது என்னைவிட அதிக நம்பிக்கை கொண்டவர். அவரது அந்த நம்பிக்கைதான் இன்றுவரை என் முதுகெலும்பு.

அடுத்தடுத்து பத்திரிகைகளில் சிறுகதைகளும், தொடர்களும் வர ஆரம்பித்துவிட்டது. அமுதசுரபியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறுகதைக்கு பரிசு கிடைத்தது. இனி அடுத்த கட்டம் என்றால், அது பதிப்பகம் மூலமும் என் எழுத்துகள் புத்தகமாக வரவேண்டும். ஆனால் எனக்கு யாரையும் தெரியாது. ஒருநாள் பேச்சுவாக்கில் பாலகுமாரனிடம் பதிப்பகங்கள் பற்றி விசாரிக்க, இன்னுமா உன்னுடையது புத்தகமாக வரவில்லை என்று கேட்டவர், உடனே திருமகள் நிலையத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

‘உன்னிடம் மயங்குகிறேன்’ என்ற என் புதினம் முதல் புத்தகமாக வெளியானது. அவரே அதற்கு அணிந்துரையும் எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு வேறு சில பதிப்பங்களும் என்னை அணுகின. இன்றுவரை கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் பதிப்பகங்கள் மூலம் வெளிவந்துள்ளன.

‘வனத்தில் ஒரு மான்’ என்ற என் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. பரிசு கிடைத்த விவரத்தை பொங்கலுக்கு முதல்நாள் போகியன்று நாளிதழ் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம். பொங்கலுக்கு மறுநாள் கலைவாணர் அரங்கில் பரிசளிப்பு விழா. உண்மையில் எனக்குத்தானா என்று மீண்டும் மீண்டும் நாளிதழைப் பார்த்து உறுதி செய்து கொண்டு விழாவிற்குக் கிளம்பினேன். விருது பெற்றபிறகுதான் நம்பினேன். பொங்கல் விடுமுறை என்பதால் தமிழ் வளர்ச்சித் துறை அனுப்பிய கடிதம் விருதளிப்பு விழா முடிந்து பொங்கல் விடுமுறைக்குப்பின் கிடைத்ததும் அனைவரும் சிரித்தோம்.

அப்போதெல்லாம் என் வீட்டில் தொலைபேசி இணைப்பு கிடையாது. அடுத்த வீட்டில் தெரிந்தவர் ஒருவரது எண்ணைத்தான் அவசரத்திற்குக் கொடுப்பது வழக்கம். அப்போதுதான் ஒரு சமயம் வீட்டிற்கு வந்திருந்த பாலகுமாரன் என்னிடம், ‘உன் கையில் நீ தங்க வளையல் போட்டிருப்பதைவிட மிகவும் முக்கியம், ஒரு எழுத்தாளரான உன் வீட்டில் ஒரு தொலைபேசி இருப்பது. வளையலை அடகு வைத்தாவது தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்து வை’ என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

அன்று முழுக்க நானும் என் கணவரும் யோசித்தோம். இருந்த சேமிப்பை எடுத்து தொலைபேசி இணைப்பிற்குப் பதிவு செய்தோம். இணைப்புக் கிடைப்பதற்கு குறைந்தது இரண்டு வருடமாவது ஆகலாம் என்றார்கள். அதேபோல் இரண்டு வருடம் கழித்து தொலைபேசி இணைப்பு கிடைத்ததும் நான் முதலில் அழைத்தது பாலகுமாரனைத்தான். அவர் சொன்னாற்போல் தொலைபேசியின் முக்கியம் புரிந்தது. பலரும் தொலைபேசியிலேயே சிறுகதை அனுப்பச் சொல்லிக் கேட்கத்தொடங்கினர்.

அலுவலகம் செல்வது, படிப்பது எழுதுவது, ஓவியம் வரைவது, குழந்தைகளோடு நேரம் செலவிடுவது, இதோடு, சமையல், வீட்டு வேலைகள் என நாட்கள் ஓட, திடீரென எனக்கொரு ஆசை. தி.ஜா.வுடைய எழுத்தின் சாயலில் ஒரு நாவல் எழுதவேண்டுமென்று. Affected writing என்று சொன்னாலும் கவலையில்லையென்று, நாட்டில் அப்போது நிலவிவந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை மையமாய் வைத்து ‘தென்னங்காற்று’ என்ற புதினம் எழுதினேன். அது நேரடிப் பதிப்பாக வெளிவந்தது. அந்த புதினத்திற்கு என்.சி.அனந்தாச்சாரி அறக்கட்டளையின் முதல் பரிசும் விருதும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ‘கண்ணிலே அன்பிருந்தால்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு கோவை லில்லி தேவசிகாமணி இலக்கிய விருதும் பரிசும் கிடைத்தது. பின்னர் ‘ஆகாயம் அருகில் வரும்’ என்ற நேரடிப் பதிப்பாக வந்த புதினத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியின் முதற்பரிசும் இலக்கிய விருதும் கிடைத்தது.

என்னுடைய கதைகள், சிறுகதையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும் அவை ஏதொவொரு ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து தங்கத்தில் செப்பு கலப்பதுபோல கற்பனையும் கலந்து எழுதப்பட்டதாகவே இருக்கும். அந்த வகையில் எனது ஒவ்வொரு கதைக்கும், ஒரு கதையின் கதை என்னிடமுண்டு. முழுக்க முழுக்க கற்பனையாக இட்டுக்கட்டி கதை எழுதுவதோ, காதல் கதைகள் என்ற பெயரில் ‘உனக்கும் ஒரு ராஜகுமாரன் கிடைப்பான்’ என்று வாசகருக்குக் கற்பனைச் சுகமும் பொய்யான நம்பிக்கையும் அளிப்பதோ எனக்கு விருப்பமானதல்ல. வாழ்வின் யதார்த்தத்தை முகத்திலறைவது போல் சொல்லவே விரும்பினேன்.

தவிர எதிர்மறையான எண்ணங்களை ஒருபோதும் என் கதைகளின் மூலம் எவருக்கும் ஏற்படுத்தியதில்லை. என் உறவுப்பெண் ஒருத்தி புகுந்த வீட்டின் கொடுமைகள் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதை ஒரு புதினமாக எழுதியபோது கூட, தற்கொலை முடிவோடு அவள் அலுவலகத்தின் ஒவ்வொரு மாடியாக ஏறிச்செல்லும்போது, அதுவரை நடந்த சம்பவங்களை எல்லாம் விவரித்து, பத்தாவது மாடியில் நின்றவாறு வெளியில் எட்டிப்பார்க்கும் நிலையில் சட்டென அவள் மனதில், எத்தவறும் செய்யாத நிலையில் தான் எதற்கு மரணத்தைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று தோன்ற, அவள் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் கீழே இறங்கி வருவதாக பாஸிடிவாகவே அக்கதையை முடித்திருந்தேன்.

ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொருவிதமாக என்னைச் செதுக்கி உருவாக்கியது என்றுதான் கூறுவேன். அதில் முதலிடத்தில் இருப்பவர் மறைந்த விக்கிரமன் சார்தான். அவர் எனக்குக் கொடுத்த ஊக்கம் மறக்க இயலாதது. அமுதசுரபிக்கு நான் எழுதும் ஒவ்வொரு கதைக்கும் அவரிடமிருந்து பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கடிதம் வராமல் இருந்ததில்லை. ஒருசமயம் அவர் தமிழரசி வார இதழில் பணியாற்றிய சமயம் எனது சிறுகதை ஒன்று திருப்பி அனுப்பப்படுவதற்காக உதவி ஆசிரியர் குழு எடுத்து வைத்திருக்க, தேர்வான சிறுகதைகள் அவரது டேபிளுக்குச் சென்றிருக்கின்றன. உடனே விக்கிரமன் சார், திருப்பி அனுப்புவதற்கு வைத்திருக்கும் கதைகளையும் கொண்டுவாருங்கள் என்று கொண்டுவரச் செய்திருக்கிறார். அதிலிருந்த எனது ‘உப்பிட்டவர், உடல் வளர்த்தவர்’ என்ற சிறுகதையைப் படித்துப் பார்த்துவிட்டு, இதைப் போயா திருப்பி அனுப்புகிறீர்கள் என்று கேட்டுவிட்டு அடுத்த இதழிலேயே அதைப் பிரசுரிக்க அனுப்பிவிட்டு, என்னை நேரில் வரச்சொல்லி ஒரு கடிதமும் அனுப்பினார். நேரில் சென்ற என்னிடம் நடந்தவற்றைக் கூறிச் சிரித்தவர், ‘மிக நல்ல கதை அது’ என்று பாராட்டினார். அடுத்த வாரத்தில், மற்றொரு கடிதமும் வந்தது. அச்சிறுகதை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக எழுத்தாளர் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக. இவர் போன்ற மா மனிதர்களால்தான் நான் உருவானேன் எனலாம்.

அதேபோல தேவியில் என்னிடம் ஒரு தொடர் கேட்டிருந்தார்கள். இரண்டு மூன்று கதைச்சுருக்கங்கள் அனுப்ப, அதில் ஒன்று பிடித்துப்போக, அதுபற்றி விவாதிக்க, மாலைமுரசு அலுவலகத்திற்கு என்னை நேரில் வரச்சொன்னார் திரு. இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள். நானும் சென்றிருந்தேன். கதை பற்றி விவாதித்தவரிடம் நான் கதையின் போக்கை விவரித்துவிட்டு அவரிடம் ஒரேயொரு வேண்டுகோள் வைத்தேன். இத்தொடர் ஆன்மிகம் கலந்ததாக, பிராமணக் குடும்பத்தில் நிகழ்வதாக இருக்கும், எனவே வசனங்களில் பிராமண தொனி இருக்கும், உங்களுக்கு ஆட்சேபணை ஏதுமிருக்காதே என்றேன். ‘தாராளமாக எழுதுங்கள். உங்கள் சுதந்திரத்தில் குறுக்கிடமாட்டேன்’ என்றார். ‘ஆசை முகம் மறந்தாயோ?’ என்ற அத்தொடர் தேவியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்தொடரின் இரண்டாம் பகுதியை ராணியில் எழுதினேன். ராணியில் பொதுவாக பிராமணப் பின்புலத்தில் கதைகள் வந்து நான் பார்த்ததில்லை. அதனால் ராணி ஆசிரியரிடமும் நான் இதே வேண்டுகோளை வைக்க, அங்கேயும் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இன்றி எழுதச்சொன்னதும் நான் நெகிழ்ந்துதான் போனேன். ‘அவள் முகம் காண…’ என்ற தொடரை ராணியில் எழுதினேன்.

எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அடிக்கடி எல்லோரையும் தன் அலுவலகத்திற்கு அழைத்து பரிசுகள் கொடுப்பது திரு இராமச்சந்திர ஆதித்தன் அவர்களது வழக்கம். அவர் பரிசாக அளித்தவற்றை இன்றளவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நம் எழுத்துக்கு கிடைக்கும் விருதென்பது பணமாகவோ, உயரிய இலக்கிய விருதாகவோ மட்டும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதைவிடச் சிறந்த அங்கீகாரமாக எனக்குக் கிடைத்த சிலவற்றை மறக்கவே முடியாது. தற்கொலை எண்ணம் தோன்றிய ஒருசில பெண்கள் என் கதைகள் படித்த பிறகு தங்கள் எண்ணத்தைக் கைவிட்டதாகக் கூறியது, அதேபோல், எதிர்பாராத தீ விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு பெண் ஐ.சி.யூவில் தன் வலியை மறக்க என் நாவல்களைத் தருவித்து படித்ததாகவும், தன் மனவலிமையை வளர்த்துக்கொண்டு, போராடி புனர்ஜென்மம் எடுத்ததாகவும் சொன்னது, விவாகரத்து பெற முடிவு செய்திருந்த ஒரு தம்பதியர் ‘ஆகாசத்தூது’ என்ற நாவல் படித்தபிறகு தங்கள் முடிவை மாற்றிக்கொண்டது, வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் பின்புலத்தில் நான் எழுதிய புதினமான ‘உப்புக்கணக்கு’ நாவலை வாசித்துவிட்டு என்னைக் கட்டியணைத்து என் அம்மா என் கன்னத்தில் தந்த முத்தம் என்று மனநிறைவுகள் பல. என் எழுத்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்து, யாருக்கும் தீங்கின்றி நல்ல பயன்களைத் தருகிறது என்பதைவிட வேறென்ன அங்கீகாரமும் சந்தோஷமும் வேண்டும் எனக்கு?

1 thought on “என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்

  1. Fantastic. A beautiful journey.

Leave a Reply